கோவை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் பாருக், பெரியார் கொள்கையை ஏற்று, கடவுள்- மத மறுப்பாளராக வாழ்ந்ததோடு தனது முகநூலிலும் தனது மதத்தின் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகக் கருத்துகளைப் பதிவிட்டு வந்தார். இறை மறுப்பாளராக இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக இஸ்லாமிய அடிப்படைவாத வெறியில் ஊறிப்போன ஒரு கும்பல் அவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது.

கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி இரவு கோவை உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே இந்தக் கொடூரச் சம்பவம் இரவு 11.15 மணியளவில் நடந்தது. பழைய இரும்புப் பொருள்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார் பாரூக். தொழில் தொடர்பாகப் பேச விரும்புவதாகத் தனக்கு வந்த தொலைபேசி அழைப்பை ஏற்று, பேசிய நபர் வரச் சொன்ன இடத்துக்குத் தனது மோட்டார் பைக்கில் புறப்பட்டார். சுத்திகரிப்பு நிலையம் அருகே பின்னாலிருந்து வந்த ஒரு கும்பல் தாக்கிக் கொடூரமாக வெட்டிவிட்டுத் தப்பி ஓடியது. வழியில் சென்றவர்கள் அலறல் சத்தம் கேட்டு உதவிக்கு ஓடிவரும் நிலையிலே பாரூக் உயிரிழந்து விட்டார். மதவெறி கொலைக் கூட்டமும் தப்பி ஓடியது. இது தனிப்பட்ட பிரச்சினையில் நடந்தது அல்ல. கடவுள் மறுப்பாளராக அவர் கருத்துகளை வெளியிட்டு வந்ததால் மதவெறியில் நடந்த கொலை யாகும்.

தமிழ்நாட்டில் பெரியார் இயக்கத்தைச் சார்ந்த ஒருவரை இஸ்லாமிய அடிப்படைவாதம் கொலை செய்தது இதுவே முதல் முறையாகும்.

பாரூக்கின் இஸ்லாமிய  நண்பார்களே இக்கொலைக் குக் காரணமாக இருந்துள்ளனர்.

கொலை நடந்த மறுநாள் இரண்டுபேர் சரணடைந் தனர். பிறகு மேலும் மூன்று பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இவருடைய மனைவி ரஷீதா (31) தங்கள் பிள்ளைகள் அப்ரித்(13), அனபா (8) ஆகியோர் அரபிக் பள்ளியில் தான் படித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

இவருடைய தாய் நதிஷா தந்தை அமீது ஆகியோர் இஸ்லாமிய நம்பிக்கை உடையவர்கள்தாம். ஆயினும் பாரூக்கின் தீவிர நாத்திகப் பரப்புரையை சகிக்க முடியாத இஸ்லாமியத் தீவிரவாதிகளால் படுகொலைச் செய்யப் பட்டது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

பாரூக்கின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.