பேரன்பிற்கினிய அய்யா அவர்களுக்கு வணக்கம்.

‘சிந்தனையாளன்’ இதழ் தொடர்ந்து வெளிவர வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்வியோடு, தாங்கள் தமிழர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளைப் படித்தபோது, எதை ஆதரிக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ளாத மூடத்தமிழர்களின் மீது வெறுப்பும், எப்படியாவது கெட்டழிந்து போகட்டும் என்ற சினமும் ஏற்பட்டது. உடனே, தந்தை பெரியாரும், அவருக்கு முன்னாலும், பின்னாலும் தோன்றிய பகுத்தறிவாளர்கள், இந்த மூடர்களை மூடத்தனத்திலேயே அமிழ்ந்து அழிந்து தொலையட்டும் என்று கருதாமல் தங்களின் உடல் உயிர் பொருள் குடும்பம் என அனைத்தையும் துறந்து கடும்பணியாற்றியதை எண்ணினேன். என் மீதே எனக்கு சினம் ஏற்பட்டது. எப்படியாவது இந்த மக்களை விழித்தெழச் செய்து பார்ப்பன வஞ்சக வலை யிலிருந்தும், நடுவண் அரசின் வஞ்சக சட்டங்களி லிருந்தும் மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தேன்.

“என் முதுமையும், என் சீரற்ற உடல் நிலையை யும் ஒவ்வொருவரும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். நான் இயக்கம் பற்றிக் கவலையடைய நீங்கள் இடம் கொடுத்தால் அதனால் எல்லாமே அடியோடு குலைந்து போகும்” என்ற வரிகளைப் படித்த போது என் கண்கள் கலங்கின.

அய்யா, நீங்கள் நூறாண்டைக் கடந்தும் நலமோடு வாழ்ந்து மூடத்தமிழர்களைக் கரையேற்ற தொடர்ந்து பாடுபட வேண்டுகிறேன்.

எளியவனாகிய என்னால் இயன்ற அளவில்,

சிந்தனையாளன் இதழுக்கு நன்கொடை                                                                       - ரூ.3000
அத்திப்பாக்கம் அ. வெங்கடாசலநாயகரின் 214வது பிறந்தநாள் விழாவிற்கு நன்கொடை - ரூ.1000
இரா. அருள்மொழி (என் மூத்தமகன்) சிந்தனையாளன் வாழ்நாள் கட்டணம்                  - ரூ.1000
கு.பிரகாஷ்-இரா.அங்கயற்கண்ணி (என் மகள்) சிந்தனையாளன் வாழ்நாள் கட்டணம்     - ரூ.1000
மொத்தம்                                                                                                                   - ரூ.6000

இம்மடலுடன் ரூ.6000/-க்கு காசோலையை இணைத்துள்ளேன். பகுத்தறிவாளர்கள் அனைவரையும் கட்சி-இயக்கம் கடந்து, தங்களுடைய தூய தொண்டிற்கு உதவும்படி வேண்டிக் கொள்கிறேன்.

- பொன். இராமசந்திரன்