நிறைவுற வில்லை
நிறவெறிக் கெதிரான போர்
நிறைகிறது நெஞ்சில்
நெல்சன் மண்டேலாவின் பேர்!
இனவெறிப் போர்
ஈழத்தில்!
இறுகித் தடித்த சாதியப் போர்
‘இந்தியத்தில்!’
மானுடத்தை வருத்தும்
மறுகாலனியப் போர்
மாத் தொலைவில்லை
கை எட்டும்தூரத்தில்!
மண்டேலா எனும்
மாபெரும் போராளியின்
மறைவால்
விண்டுறைக்க முடியாத
வேதனை!
கருப்பிடித்து வளர்ந்த
விடுதலையின் கனவைத்
துருப்பிடித்த,
சிறைக் கம்பிகளின் நடுவே
இருபத்தே ழாண்டுகள்
இமை கொட்டாது நோக்கியோன்
எல்லாப் போராட்டங்களையும்
வெற்றியாய் ஆக்கியோன்
ஆயுத வழிப்போரைத்
தொடக்கத்தில் அணைத்தாலும்
அமைதி வழிப்போரே
இணக்கமென ஏற்றார்
முகத்தில் எப்போதும்
வெள்ளைச் சிரிப்பு
முகப்படாம் விரித்த
நடைவேழ மதர்ப்பு
தனிக்குடியிருப்பு
தனித்தனி ஊர்திகள்
தனித்தனி உணவகங்கள்
இந்தியச் சேரிகளைப்
பற்றிய தொழுநோய்
தென்னாப் பிரிக்காவையும்
தின்று கொண்டிருந்தது.
அண்ணல் அம்பேத்கராய்
அங்கொருர மண்டேலா!
கருப்பின மக்களை
வழிநடத்தினார்; அவர்
கண்களில் விடுதலைச்
சுடர்கொளுத்தினார்!
நம்பிக்கை விதைகளை
நெஞ்சிலே நட்டார்
குடியரசுத் தலைவராய்க்
கொடுமுடி தொட்டார்
ஒரேமுறைதான்
ஆட்சிக் கட்டில்!
உறங்கப் போனாரே
கல்லறைத் தொட்டில்!
இன்று -
கருப்பர் வெள்ளையர்
ஒரே தட்டில்!
அவர் -
கட்டாயம் வாழ்வார்
புவிவாழும் மட்டில்!

Pin It