2012 நவம்பர் 23 அன்று நடுவண் அரசின் அமைச்சரவை, “இன்றியமையா மருந்துகளின் தேசியப் பட்டியலில்” (National List of Essential Medicines - NLEM) மொத்தம் 348 மருந்துகள் இடம்பெறுவதற்கு ஒப்புதல் வழங்கியது. இதற்குமுன் 74 மருந்துகள் மட்டுமே இப்பட்டியலில் இடம்பெற்றிருந்தன. 2011ஆம் ஆண்டு தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) உருவாக்கிய அறிக்கையின் அடிப்படையில், அமைச்சரவை இம்முடிவை எடுத்தது. இது எந்த அளவுக்கு மக்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் என்பதே நம்முன் உள்ள வினாவாகும்!

தாராளமயச் சந்தைப் பொருளாதாரம் நடை முறைக்கு வந்தபின், கடந்த முப்பது ஆண்டுகளில் உணவுப் பொருள்களைவிட குடும்பத்தின் வருவாயில் அதிகமான பகுதியைக் கல்விச் செலவும், மருத்துவச் செலவும் விழுங்கி வருகின்றன. இவ்விரண்டும் எண் ணற்ற குடும்பங்களைக் கடனாளியாக்கியுள்ளன. கல்வியும் மருத்துவமும் பெருமளவில் தனியார் மயமாகிவிட்டதே இதற்குக் காரணமாகும்.

இந்தியாவில் 25 கோடி குடும்பங்கள் இருக்கின்றன. நோயுற்றால் 80 விழுக்காடு குடும்பங்கள் தனியார் மருத்துவரிடம்தான் செல்கின்றனர். இவர்களின் மொத்த மருத்துவச் செலவில் 74 விழுக்காட்டை மருந்து, மாத்திரைகள் வாங்குவதற்காகச் செலவிடுகின்றனர். எனவே மருந்துகளின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப் படுகிறது; எவ்வாறு அது செயல்படுத்தப்படுகிறது என்பன ஒவ்வொரு குடிமகனும் அறிய வேண்டிய செய்தி களாகும்.

1970களுக்குமுன் பன்னாட்டு மருந்து நிறுவனங் களின் வேட்டைக்காடாக இருந்தது இந்தியா. நடுத்தர வகுப்பு மக்கள்கூட வாங்க முடியாத அளவில் மருந்து களின் விலை இருந்தது. ஆட்சியிலும் கட்சியிலும் தன் தலைமையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, மக்களுக்குப் பயன்தரக்கூடிய சில நல்ல திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய நெருக்கடியான நிலையில் இருந்த இந்திராகாந்தி 1973இல் புதிய காப்புரிமைச் சட்டத்தை இயற்றினார். இது மருந்துகளின் விலை யைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும் வழிகோலியது. 1975ஆம் ஆண்டு ஜெய்சுக்லால் ஹாத்தி குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மருந்துகள் விலைக் கட்டுப்பாட்டு ஆணையம் (Drug Price Control Order - DPCO) அமைக்கப்பட்டது. 1979இல் 347 மருந்துகளின் (Active Pharmaceutical Imgredience) விலை நிர்ணயம் இந்த ஆணையத்தின் கீழ் கொண்டுவரப் பட்டது. இதன்விளைவாக மருந்துகள் விலைப் படிப் படியாகக் குறைந்தது. உலகிலேயே மலிவான விலை யில் மருந்துகள் கிடைக்கும் நாடு என்ற புகழை இந்தியா எய்தியது.

ஆனால் இந் நன்னிலை நீண்டகாலம் நீடிக்க வில்லை. இராசிவ்காந்தி ஆட்சியில் 1987இல் இப் பட்டியலில் இருந்த மருந்துகள் எண்ணிக்கை 142 ஆகக் குறைக்கப்பட்டது. 1995 சனவரி முதல் காட் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியிருப்பதைக் காரணமாகக் காட்டி, விலைக்கட்டுப்பாட்டில் இருந்த மருந்துகளின் எண்ணிக்கை 76ஆகக் குறைக்கப்பட்டது.

அதன்பின், மருந்து தயாரிப்பு முதலாளிகள் அளித்த நெருக்குதலால், 2002இல் இந்த எண்ணிக்கை 35 ஆகக் குறைக்கப்பட்டது. இக்குறைப்புக்குச் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த ஆணைக்குத் தடைவிதித்தது. இவ்வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இவ்வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம், உயிர்காக்கும் மருந்துகள் அனைத்தையும் விலைக் கட்டுப்பாட்டுப் பட்டியலின்கீழ் நடுவண் அரசு கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இறுதியாக 2012 நவம்பர் 27க்குள் இன்றியமையா மருந்துகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்தது. அதனால்தான் நடுவண் அரசின் அமைச்சரவை 23.11.12 அன்று இன்றியமையா மருந்துகள் பட்டியலில் 348 மருந்து களைச் சேர்ப்பதற்கு ஒப்புதல் அளித்தது. மக்களையும் உச்சநீதிமன்றத்தையும் ஏமாற்றுவதற்கான ஒரு கண் துடைப்பு நடவடிக்கையே இது!

1995இல் நடுவண் அரசு, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மேலும் கொள்ளையடிப்பதற்கான புதிய வழியை வகுத்தது. 1979இல் மருந்துகள் விலைக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (DPCO) கீழ் 347 மருந்துகளைக் கொண்டுவந்தபோது, மருந்தின் உற்பத்திச் செலவுடன் உற்பத்திக்குப்பின் நேரிடும் பிற செலவுகளையும் சேர்த்து (Cost-plus based pricing - CBP) மருந்தின் அதிகபட்ச விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டது. பிற செலவுகள் என்பது 40 விழுக்காடு முதல் 70 விழுக்காடு வரை இருந்தது. ஆனால் 1995இல் உற்பத்திச் செலவைப் போல் 100 விழுக்காடு அளவுக்குப் பிற செலவினங்கள் இருக்கலாம் என்று நடுவண் அரசு அறிவித்தது. மேலும் விலைக் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த மருந்துகளின் எண்ணிக்கையை 76ஆகக் குறைத்தது. இதனால் 1995க்குப்பின் மருந்துகள் விலை மளமளவென உயர்ந்தது.

ஆனால் தற்போது நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள 348 இன்றியமையா மருந்து களின் விலை, உற்பத்திச் செலவு மற்றும் பிற செலவு கள் என்ற அடிப்படையில் அல்லாமல், சந்தையில் மருந்துகளின் சராசரி விலையை அடிப்படையாகக் கொண்டு (Market Based Pricing - MBP) நிர்ணயிக்கப் போவதாக அரசு அறிவித்துள்ளது. உற்பத்திச் செலவை அடிப்படையாகக் கொண்டே மருந்துகளின் விலையை நிர்ணயம் செய்ய வேண்டுமென்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளதை நடுவண் அரசு புறக்கணித்துவிட்டது.

ஒரே மூலக்கூiற்ற அடிப்படையாகக் கொண்ட மருந்தினைப் பல நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இவற்றைப் பல்வேறு பெயர்களில், பல்வேறுபட்ட விலைகளில் விற்கின்றன. ஒரு குறிப்பிட்ட மருந்தை 50 நிறுவனங்கள் தயாரிக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். இம்மருந்தின் விலை ரூ.20 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது என்றால், இந்த 50 நிறுவனங்களில் 1 விழுக்காட்டுக்கு அதிகமான சந்தை பெற்றுள்ள நிறுவனங்களை மட்டும் கணக்கில் கொண்டு, அத்தனை நிறுவனங்களின் விலையைக் கூட்டி, நிறு வனகளின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைக்கும் விலைதான் அதிகபட்ச விலையாக நிர்ணயிக்கப்படும். 348 இன்றியமையா மருந்துகளுக்கு நடுவண் அரசு நிர்ணயிக்கப் போகும் விலை நடைமுறை இதுதான் (தினமணி, 24.11.12). ஏழை, எளிய மக்களுக்குத் தற்போது குறைந்த விலையில் மருந்துகள் கிடைத்து வருவதை ஒழிப்பதற்கான சூழ்ச்சியே - இப்புதிய விலை நிர்ணய முறை.

இந்தியாவில் சிறிய மற்றும் நடுத்தர மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் 5000க்குமேல் இருக்கின்றன. இவை குறைந்த விலையில் மருந்துகளை மக்களுக் குக் கிடைக்கச் செய்கின்றன. உள்நாட்டில் உற்பத்தி யாகும் மருந்தில் 50 விழுக்காட்டை இவை உற்பத்தி செய்கின்றன். இவற்றில் பத்து இலட்சம் பேர் வேலை செய்கின்றனர். பெரும்பாலான பெரிய மருந்து நிறு வனங்கள், சிறிய மற்றும் நடுத்தர மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் மருந்துகளை வாங்கித் தங்கள் வணிகப் பெயரில் (Brand Name) விற்பனை செய்கின்றன. எனவே புதிய மருந்து விலை நிர்ணய முறையால் சிறிய - நடுத்தர நிறுவனங்கள் பையப் பைய நலி வுற்று அழியும். அதனால் ஏழை மக்களுக்குக் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்காமல் போய்விடும்.

எந்தவொரு பொருளையும் அதிக அளவில் உற் பத்தி செய்யும் போது, அதன் உற்பத்திச் செலவு குறை யும்; அதனால் விலையும் குறையும் என்பது முதலா ளித்துவ உற்பத்தியின் - சந்தையின் கோட்பாடாகக் கூறப்படுகிறது. ஆனால் மருந்து தயாரிப்பிலோ இது எதிர்மறையாக உள்ளது. உற்பத்தியிலும் சந்தையிலும் முன்னணியில் உள்ள பெரிய மருந்து நிறுவனங்களின் மருந்துகளின் விலை மிக அதிகமாக உள்ளது.

தமிழ்நாட்டு அரசின் மருத்துவ சேவைகள் கழகம் (Tamilnadu Medical Services Corporation - TNMSC) கொள்முதல் செய்யும் மருந்துகளின் விலையைப் போல் வெளிச்சந்தையில் இருபது - முப்பது மடங்கு அதிகமான விலையில் இம்மருந்துகள் விற்கப்படுகின்றன என்பதை இப்பட்டியலில் காணலாம். ஒரே நோய்க் கான ஒரே அளவு கொண்ட மருந்தின் விலையில் 50 மடங்கு ஏற்றத்தாழ்வு இருக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலேயே, தமிழ்நாடு அரசு தான், மருந்துகளை மிகக் குறைந்த விலையில் கொள் முதல் செய்து, தன்கீழ் உள்ள மருத்துவமனைகள் மூலம் மக்களுக்கு வழங்குகிறது; மற்ற மாநில அரசுகளும் தமிழ்நாட்டை முன்னோடியாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆயினும் தமிழ்நாட்டிலும் நோயாளிகளில் 80 விழுக்காட்டினர் தனியார் மருந்துக் கடைகளில் அதிக விலையில் மருந்துகளை வாங்கும் அவல நிலைதான் இருக்கிறது.

கட்டுப்பாடற்ற - தாராளமயச் சந்தையில் நுகர்வோர் தம் விருப்பம்போல் பொருள்களைத் தேர்வு செய்து வாங்குவதற்கான பரந்துபட்ட வாய்ப்புகள் உள்ளன என்று உலகமய ஆதாரவாளர்கள் உரத்துக் கூறுகின்றனர். ஆனால் எந்த நோய்க்கு எந்த மருந்தை வாங்குவது என்பதை மருந்து தயாரிப்பாளரும் தனியார் மருத்துவர்களும் தான் முடிவு செய்கின்றனர். மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும் மருத்துவர்களுக்கும் இடையே பெரிய கள்ளக்கூட்டு இருக்கிறது. அதனால் தான், விலை அதிகமான மருந்துகளையும் நோய்க்குத் தொடர்பே இல்லாத மருந்துகளையும் நோயாளிகள் மீது இவர்கள் திணிக்கின்றனர்.

இந்தியாவில் மட்டுமின்றி, கல்வியறிவும், விழிப் புணர்வும் மிக்க மேலை நாடுகளிலும் இக்கள்ளக் கூட்டு, நோயாளிகளைச் சுரண்டிக் கொள்ளையடிக்கிறது. அண்மையில் பிரான்சு நாட்டின் குடியரசுத் தலை வராக இருந்த நிக்கோலசு சர்க்கோசி, மருந்துகளை விற்பதற்காக மேற்கொள்ளப்படும் தரகு வேலைகள் (Lobbying) குறித்து ஆராய இரண்டு மருத்துவ வல்லு நர்கள் கொண்ட குழுவை அமைத்தார். இவ்விருவல் லுநர்கள் இணைந்து எழுதிய 900 பக்கங்கள் கொண்ட நூல் (Guide to 4000 useful, useless, or Dangerous Medicines) இப்போது வெளிவந்துள்ளது.

இந்நூலில், “பிரான்சில் மருத்துவர்கள் பரிந்து ரைக்கும் மருந்துகளில் கிட்டத்தட்ட பாதி மருந்துகள் பயனற்றவைகளாக உள்ளன. மேலும் இவற்றில் பல மருந்துகள் ஆபத்தானவைகளாக இருக்கின்றன. செல்வாக்குமிக்க மருந்து நிறுவனங்களே இக்கேடான நிலைக்குக் காரணமாகும். மருந்து தயாரிப்புத் தொழில் அதிக இலாபம் தரும் தொழிலாக மட்டுமல்லாமல், அதிகமான தன்னலமும், முறைகேடுகளும் நிறைந்த தாக இருக்கிறது. ஆக்டோபஸ் போல உலக சுகாதார அமைப்பு, நாடாளுமன்றம், உயர் நிர்வாகம், மருத்துவ மனைகள், மருத்துவர்கள் என எல்லா நிலைகளிலும் தன் கொடிய கால்களைப் பரப்பியுள்ளது. மருத்துவத் தொழில் எந்த அளவுக்கு இழிந்திருக்கிறது என்றால், நோய்களை உண்டாக்கும் மருந்துகளைக் கொடுத்து, அவற்றைத் தீர்ப்பதற்கான மருந்துகளையும் தருகின்ற மருத்துவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்” என்று பிரான்சு நாட்டு மருத்துவ வல்லுநர்கள் எழுதியிருக் கிறார்கள் (தி இந்து, 9.12.12).

பிரான்சு நாட்டிலேயே இந்த நிலையெனில், இந்தி யாவில் உள்ள நிலையை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது. ஏனெனில் மேலை நாடுகளில் மருந்துகள் அதன் மூலக்கூறின் பெயரில்தான் விற் பனை செய்யப்படுகின்றன. இந்தியாவிலோ ‘கண்ட கண்ட’ பெயர்களில் பலவகையான கலவை மருந்துகள் (Combinations) விற்பனை செய்யப்படுகின்றன. மக்களை ஏமாற்றவும் சுரண்டவும் இது மிகவும் வசதியாக இருக்கிறது. எந்த அளவுக்கு விலை அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அது நல்ல மருந்து என்ற மாயையை மருந்து நிறுவனங்களும் மருத்துவர்களும் சேர்ந்து உருவாக்கி இருக்கின்றனர்.

குறிப்பிட்ட மூலக்கூறுகளைக் கொண்ட மருந்துகள் மட்டுமே விலை நிர்ணயக் கட்டுப்பாட்டின்கீழ் வரும். ஆனால் நீரழிவு நோய், இதயநோய் போன்ற - நாள்தோறும் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய நோய்களுக்கான மருந்துகளில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு மருந்துகள் கலவை மருந்துகளாக (Mixed Dosage Combinations) உள்ளன. இம்மருந்துகள் விலைக் கட்டுப்பாட்டின்கீழ் வாரா.

இந்தியாவில் தயாரிக்கப்படும் மொத்த மருந்து களில் 40 விழுக்காடு மருந்துகள் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இம்மருந்துகள் விலைக் கட்டுப்பாட்டின்கீழ் வருவதில்லை. டாக்டர் ரெட்டியின் மருந்து நிறுவனம் 82.1 விழுக்காடு, பையோகான் 85.1 விழுக்காடு, ரான்பாக்சி 75.6 விழுக்காடு, லுப்பின் 69.8 விழுக்காடு மருந்தை ஏற்றுமதி செய்கின்றன.

நவம்பர் மாதம் 22ஆம் நாள் தொடங்கிய நாடாளு மன்றத்தின் குளிர்காலத் தொடர் முழுவதும் அமெரிக் காவின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனமான வால் மார்ட்டை இந்தியாவில் அனுமதிப்பது குறித்த விவாதங்களிலேயே மூழ்கியது. தி.மு.க., சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி முதலான மாநிலக் கட்சி களின் பலவீனங்களையும் ‘சோரம்’ போகும் போக்கு களையும் பயன்படுத்தி மன்மோகன் சிங் தலைமை யிலான அரசு, நாடாளுமன்றம், மாநிலங்கள் அவை ஆகிய இரண்டிலும் ‘சனநாயக நெறிப்படி’ வாக் கெடுப்பில் வெற்றி பெற்றது. ஆயினும் அதன்பிறகு, இந்தியாவில் கடைகளைத் திறப்பதற்காக வால்மார்ட் ரூ.125 கோடி செலவிட்டதாக, (கையூட்டு) வால்மார்ட் அமெரிக்காவின் மேலவையில் (செனட்) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறித்து - ரூ.125 கோடியைப் பெற்றவர்கள் யார் என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

வால்மார்ட் பல பொருள்களை விற்பனை செய்கிறது. ஆனால் அதிக இலாபம் தருவது மருந்து விற்பனை தான். இதில் கடந்த ஆண்டு 20 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. உலகில் தகவல் தொழில் நுட்பத் தொழிலைவிட அதிக இலாபம் தருவது மருந்துத் தொழிலே யாகும். அதனால்தான், சீழ்வடியுமளவுக்கான ஊழல் இதில் இருக்கிறது. பிரெஞ்சு நூலாசிரியர்கள் குறிப் பிட்டதுபோல் மருந்துத் தொழில் ஆக்டோபஸ் போன்றது. ஆட்சி அதிகார மய்யங்களை ஆட்டிப்படைக்க வல்லது. 2003ஆம் ஆண்டு அமெரிக்காவில் புஷ் ஆட்சியில், அரசின் ‘மருத்துவ நலத் திட்டத்திற்காக’ (Medicare) அமெரிக்க அரசு, மருந்து கொள்முதல் விலையில் பேரம் பேச வேண்டியதில்லை என்ற நிலையை மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உருவாக்கின. அதனால் அந்நிறுவனங்களின் இலாபம் ஆண்டிற்கு 50,000 கோடி டாலராக உயர்ந்தது (நூல் : The price of Inequality - நூலாசிரியர் : ஜோசப் ஸ்டிக்லிட்ஸ்).

எனவே சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டும் 348 மருந்துகளை, தேசிய இன்றியமையா மருந்துகள் பட்டியலில் சேர்த்திருப்பதால், மக்களுக்கு எள்ளளவும் பயன் கிடைக்காது. 1979இல் கொண்டுவரப்பட்ட மூலக்கூறின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யும் முறையே பயன்தரும். மருந்துகளின் மூலக் கூறின் பெயரிலேயே மருந்துகள் விற்கப்பட வேண்டும். கலவை மருந்துகள் தடை செய்யப்பட வேண்டும். மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும் மருத்துவர் களுக்கும் இடையில் உள்ள கள்ளக்கூட்டை ஒழிக்க வேண்டும். மருந்துகளின் விலையில் உள்ள ஏற்றத் தாழ்வை நீக்கவேண்டும். இவற்றைச் செயல்படுத்து மாறு அரசுகளுக்கு அழுத்தம் தந்து மக்கள் போராட வேண்டும்.

Pin It