வனம்! வனம்!
வளமான வாழ்வுக்கோர்
தில்லை வனம்!
வனமின்றேல் வாழ்வுண்டோ
மண்ணில்
எவ்வுயிர்க்கும்!
தில்லைவனமின்றேல்
வாழ்வுண்டோ
எவர்க்கும்!
படிப்பினில்
வேளாண்மைப் பாதை
கண்டாய்!
வாழ்வினில்
பகுத்தறிவுப் பாதை
கண்டாய்!
உன்தன் வியர்வையினில்
விளைந்த
பயிர்கள்தான் எத்தனையெத்தனை!
தமிழேஉன்தன் உயிர்மூச்சு
தம்பியே உன் சொல்
பேச்சு!
பிள்ளைகள் தமக்கு
அழகுத் தமிழில்
பெயரிட்டாய்!
அவர்தம்
பிஞ்சுகள் தமக்கும்
வழியானாய்! விழியானாய்!
முத்தின் ஒளியில் கோ
மலரின் மணத்தில் பழம்
நிலவின் குளிரில் அறம்!
புத்தனையும் உன்தன்
புதல்வன் பெயரில்கண்டு
புரட்சி செய்தாய்!
வியந்து போகிறோம் உனை
விழியினில்
வழிந்தோடும் கண்ணிரோடு!
துதியாகிய
நீர் வற்றா
நதியானாய்!
உன் கரையினில்
உயர்ந்திட்ட
உயிர்கள் ஒரு கோடி!
புயலும்
தென்றலாகும்
உன்தன் பார்வையில்!
ஆனையின்
ஆணைக்கே
அடிபணிந்தாய் நீ!
சரியெனில்
அவருக்கே
ஆணையிட்டாய்!
எதிரிகளே
ஏற்றிடுவர் உன்தன்
தத்துவம்!
எதிரிகளில்லா
ஏற்றமிகு வாழ்வு
உன்தன் வாழ்வு!
பகுத்தறிவுப் பாதை
கண்டாய்! என்தன்
பாதங்கள் பயணிப்பதற்கு!
நீ செழித்தாய்
செம்மையானது
எம் வாழ்வு!
உன்னில் தாகமெனில்
அது
தமிழீழத் தாயகம்!
நீர்வாழ்ந்திட்ட பகுதிதனில்
அவன் பெயரில்
பாதை கண்டாய்!
அவன் தோன்றிய நாளில்
பெற்ற பிள்ளைக்கே
வாழ்வி(ணை)னைக் கண்டாய்!
அவன் தோற்றானென
நாங்கள் துவண்ட நாளில்
தோற்றது! அவனல்ல மனிதமென்றாய்!
நாளை மலரும்
தமிழீழம் காணவே
விழிகளிரண்டை ஈந்துசென்றாய்!
உறுதியாய் உன்தன்
இலட்சிய கனவினைக்
காணும் உன்தன் விழிகள்!
விழுதுகள் நாங்கள்
உம்மை தாங்கி
வீரவணக்கம் செய்கின்றோம்!
வாழ்க வனம்
ஆம்
தில்லை வனம்!

- ப.ம.அதியமான், திட்டக்குடி.

Pin It