மணிமாறன் சிறுவயதிலிருந்தே நன்றாகப் படிப்பான்.பள்ளிப் படிப்பை முடித்த பிறகு என்ன படிக்கலாம் என்று யோசித்த போது,பலர் பலவிதமாக அறிவுரை கூறினர்.அவனுடைய புத்திசாலித்தனத்திற்கு அவன் மருத்துவம் பயின்றால், மக்கள் நல்ல பயனை அடை வார்கள் என்று அவனுடைய தந்தையின் நண்பர் ஒருவர் கூறினார். ஆனால் மருத்துவம் வணிகமய மாகிவிட்டதால் தன்னால் அதில் சிறப்பாகப் பணியாற்ற முடியாது என்று மணிமாறன் கூறிவிட்டான். பொறியி யல் படிக்கலாம் என்றால் அதுவும் தன் மக்கள் நலனைப் பற்றிய அக்கறையில் இருந்து தொலைவில் வைத்துவிடும் என்று மறுத்து விட்டான்.

இறுதியில் சட்டப்படிப்பு ஒன்றுதான் யாராலும் விலக்க முடியாத,எல்லோரும் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய ஒன்று என்றும்,அதைப் படித்தால் மக்களோடு மக்களாக உலாவி அனைவருக்கும் தொண்டு செய்ய முடியும் என்றும் கூறி,சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்தான்.வழக்கறிஞர்கள் என்றால் தன் கட்சிக்காரனுக்காகப் பொய் சொல்ல வேண்டி வருமே என்று சிலர் கேட்ட போது, தான் உண்மைக்காக வாதாடப் போவதால் அப்படிப்பட்ட நிலைமை ஏற்படாது என்றும் கூறினான்.

மணிமாறன் வெற்றிகரமாகச் சட்டப்படிப்பை முடித்து விட்டான். வழக்கறிஞர்கள் குழுவிலும் (Bar Council) தன் பெயரைப் பதிவு செய்து கொண்டான். படிப்பு மட்டுமே போதாது என்பதையும் முதலில் ஒரு மூத்த வழக்கறிஞரிடம் இளையவராக வேலைக்குச் சென்று, பின் அனுபவம் பெற்ற பின்தான் மக்கள் தன்னை நாடி வருவார்கள் என்று தெரிந்திருந்ததால் முதலில் ஒரு மூத்த வழக்கறிஞரிடம் வேலைக்குச் சேர்ந்தான். மணிமாறன் மிக வேகமாக மேல்நிலைக்கு வந்து தனித்து நின்று வழக்குகளை ஏற்றுக்கொண்டு செயல் பட வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

ஆனால் அந்த மூத்த வழக்கறிஞரோ அவனுடைய வேகத்திற்கு ஈடுகொடுக்காமல் மெதுவாகவே கற்றுக் கொடுத்தார்.இதனால் வெறுப்படைந்த மணிமாறன் வேறு ஒருவரி டம் வேலைக்குச் சேரலாமா என்று விசாரித்த போது மற்றவர்களும் அப்படித்தான் இருப்பதாகப் புரிந்து கொண்டான். இப்படி வெறுப்புடனேயே காலந்தள்ளிக் கொண்டு இருந்த பொழுது,ஒருநாள் புத்தகக் கடை ஒன்றிற்குப் போனான்.அது ஒரு பிரபலமான பெரிய புத்தகக் கடை. அங்கு நூற்றுக்கும் மேலானோர் பணி புரிந்து கொண்டு இருந்தனர்.

மணிமாறன் தனக்கு வேண்டிய புத்தகத்தை எடுத்துக் கொண்டான். அதன் விலை ரூ.250 என அச்சிடப்பட்டு இருந்தது.ஆனால் அதன் பக்கத்தில் ரூ.300என முத்திரை இடப்பட்டும் இருந்தது.மணி மாறன் பணம் செலுத்தும் இடத்திற்குச் சென்று புத்தகத் தின் விலையைக் கேட்க,கடை ஊழியர் முத்திரை இடப்பட்டதைச் சுட்டிக்காட்டி “முந்நூறு ரூபாய்”எனக் கூறினார்.

“ஆனா 250ன்னு இல்லே பிரிண்ட் ஆயிருக்கு?” என்று மணிமாறன் கேட்க, “சார் அது பழைய விலை சார். இப்போ புதுசா பப்ளிஷ் ஆனப்போ விலையைக் கூட்டிட்டாங்க” என்று கடை ஊழியர் பதில் கூறினார். மணிமாறன் விடவில்லை “அப்படீன்னா புதுசா வந்த புத்தகத்துக்கு அந்த விலை சரிதான். இது பழைய பிரிண்ட் தானே? இதுக்கு ஏன் விலையைக் கூட்றீங்க” என்று கேட்க “சார் உங்களுக்குப் புத்தகம் வேணும்னா இந்த விலைக்கு வாங்கிக்குங்கோ, இல்லேன்னா வாங்காதீங்க.அவ்வளவு தானே.கூட்டம் நெறைய இருக்கிற நேரத்திலே ஏதாச்சும் பேசி டயத்தை வேஸ்ட் பண்ணாதீங்க சார்”என்று கூறவும் மணிமாறன் ஒன்றும் பேசாமல் புத்தகத்தை ரூ.300 விலை கொடுத்து வாங்கிக் கொண்டான். கூடவே இரசீதில் தன் பெயரையும் முகவரியையும் எழுதச் சொல்லி வாங்கிக் கொண்டான்.

கடையை விட்டு வெளியே வந்தபின் இந்நிகழ்வு தன் வாழ்க்கைப் போக்கை மாற்றி அமைக்கப் போகும் நிகழ்வு என்று அவனுக்குப்பட்டது.நுகர்வோர் பாது காப்புச் சட்டப்படி, ஒரு பொருளின் விலை அதில் அச்சிடப்பட்ட அதிகபட்சச் சில்லறை விலையை (Bar Council ) விட அதிகமாக விற்கக் கூடாது.அப்படி விற்றால் அது தண்டனைக்கு உரிய குற்றம். இப்பொழுது தான் வாங்கி இருக்கும் புத்தகத்தின் விலை அதில் அச்சிடப்பட்டபடி ரூ.250 தான்.

ஆனால் கடைக்காரர் அதன் அருகில் ரூ.300என முத்திரையிட்டு விற்பது சட்டப்படி செல்லாது.தான் இப்புத்தகத்தை இக்கடையிலேயே வாங்கியதற்கு ஆதாரமாக இரசீது இருக்கிறது. இதை வைத்துக் கொண்டு நுகர் வோர் நீதிமன்றத்திற்குச் சென்றால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.அதிகப்படியாகக் கொடுத்த பணம் ரூ.50திரும்பக் கிடைக்கும்.அது முக்கியம் அல்ல;அந்த மிகப் பிரபலமான கடைக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றால் தன்னுடைய பெயர் மிகவும் பிரபலமடைந்து விடும்.அதனால் பலர் தன்னிடம் வழக்குகளைக் கொண்டு வருவர். இப்படியாகச் சிந்தித்துக் கொண்டே அவன் வீட்டை அடைந்தான்.

மறுநாளே மணிமாறன் அந்தப் புத்தகக் கடையின் மேல் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்கைத் தொடுத்தான்.வழக்கின் விவரங்கள் அந்தப் புத்தகக் கடைக்குச் சென்றவுடன் கடையின் முதலாளி தனக்குத் தெரிந்தவர் ஒருவரை மணிமாற னிடம் அனுப்பி வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறும் அதிகப்படியாகப் பெற்றுக் கொண்ட ரூ.50-ஐத் திரும்ப அளித்து விடுவதாகவும் கேட்டுக் கொண்டார்.கடை முதலாளியின் இச்செய்கை மணி மாறனுக்கு வழக்கைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற ஊக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

வழக்கில் தோற்று விடுவோம் என்ற அச்சத்தில் தான் அவர் தூது அனுப்பி இருப்பதாக மணிமாறன் நினைத்தான்.ஆகவே தூது வந்தவரிடம்,தான் வழக்கைத் தொடர்ந்து நடத்தப் போவதாகக் கூறினார்.தூது வந்தவரோ,மணிமாறன் இளவயது என்றும்,அனுபவம் போதாமல் ஒரு பெரிய முதலாளியுடன் மோதும் சாகசச் செயலில் ஈடுபட்டு இருப்பதாகவும்,தன்,அறிவுரையைக் கேட்பது தான் மணிமாறனுக்கு நல்லது என்றும் கூறிப் பார்த்தார்.ஆனால் தன் பக்கம் வலுவான ஆதாரங்கள் இருப்ப தால்தான் முதலாளி பயந்து கொண்டு இப்படித் தூது அனுப்பி இருப்பதாகவும்,ஆனால் தான் மசியப் போவதில்லை என்றும் மணிமாறன் கூறிவிட்டான்.

அந்தத் தூதரோ இந்த முதலாளி இரக்க குணம் உள்ளவர் என்றும்,அதனால் தான் மணிமாறனின் இளவயதை மனதில் கொண்டு,அவன் தேவையில்லாத சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று தன்னைத் தூதாக அனுப்பியதாகவும்,வேறொருவராக இருந்தால் அவர்களுடைய அணுகுமுறையே வேறாக இருந்திருக்கும் என்றும் எச்சரித்து விட்டுத் திரும்பிவிட்டார்.

மணிமாறனின் வழக்கு நுகர்வோர் மன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சிறிது காலம் பிடித்தது.அதற்குள் அவனுடைய மூத்த வழக்கறிஞர் இதைப் பற்றித் தெரிந்துகொண்டு,மணிமாறனை அழைத்து விசாரித்தார்.மணிமாறனும் நடந்தவை அனைத்தையும் விளக்கினான்.எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட மூத்த வழக்கறிஞர், இந்த வழக்கு நிச்சயமாகத் தோற்றுவிடும் என்றும்,தோற்று அவமானப்படுவதைவிட, வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்வதுதான் நல்லது என்றும் அறிவுரை கூறினார்.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி,அச்சிட்ட விலையை விட அதிக விலையில் விற்பது குற்றம் என்று இருக்கும்போது அப்படி விற் றார்கள் என்பதற்கான இரசீதும், புத்தகமும் தன் கையில் இருக்கும்போது, இவ்வழக்கு, தோற்றுவிடும் என்று எடுத்த எடுப்பிலேயே தன் மூத்த வழக்கறிஞர் கூறியதை நம்ப முடியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். அதைக் கண்ட மூத்த வழக்கறிஞர் “மணிமாறன்! உனக்கு அனுபவம் பத்தாது. சொல்ற தைக் கேட்டு கேஸை வாபஸ்வாங்கிக்க.

எனக்கு ஜூனியரா இருந்துகிட்டு நீ தோத்துப் போனா அது என்னையும் பாதிக்கும். சொன்னாக் கேளு”என்று கூறினார்.தன்னுடைய நம்பிக்கைக்கும் மூத்த வழக் கறிஞரின் அறிவுரைக்கும் இடையில் எந்த முடிவுக்கும் வரமுடியாமல்,மணிமாறன் தத்தளித்துக் கொண்டு இருந்தான்.அதைக் கண்ட அவர் தன்னிடம் வேலை பார்க்கும் அனுபவம் வாய்ந்த இன்னொரு வழக்கறிஞர் மோகனை அழைத்து,விவரங்களைக் கூறி,மணி மாறனுக்குப் புரியும்படி விளக்குமாறு சொன்னார்.மேலும் மணிமாறன் யதார்த்த நிலவரங்களைப் புரிந்து கொள்ள மறுத்தால் தன்னிடம் இளைய வழக்கறிஞராக வேலை செய்யத் தேவை இல்லை என்பதையும் உணர்ந்திடுமாறு கூறிவிட்டார்.

மோகன்,மணிமாறனை வெளியில் அழைத்துச் சென்று,அவனுடைய வாயால் எல்லா விவரங்களையும் கேட்டார்.மணிமாறனும் எல்லா விவரங்களையும் கூறினான். எல்லாவற்றையும் கேட்ட பின் மோகன்,“நீ அந்தக் கடையில் தான் புத்தகத்தை வாங்கினேங் கறதுக்கு எவிடென்ஸ் இருக்கா?” என்று கேட்டார். உடனே தன்னிடம் உள்ள இரசீதைக் காட்டினான். இப்படி ஒரு வழக்கு தொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இரசீதில் தன் பெயர் முகவரி குறித்த விவரங்களையும் இரசீதில் பதிய வைத்திருக்கும் தன் முன்யோசனை பற்றியும் பெருமையாகக் கூறினான்.எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட மோகன் “சரி! அந்தப் புத்தகம் எங்கே?” என்று கேட்டார்.

உடனே தன் பெட்டியில் வைத்திருந்த அந்தப் புத்தகத் தைக் காட்டினான்.அதைப் பார்த்த மோகன் “இதுவேணாம்;அந்தக் கடையில் வாங்கின புத்தகத்தைக் காட்டு”என்றார்.மணிமாறன் “அது தான் இது”என்றான்.மோகன் “அதுக்கு என்ன எவிடென்ஸ்?” என்று கேட்டவுடன் இரசீதைக் காண்பித்தான்.

உடனே மோகன் “மணிமாறன்!ஒரு அட்வகேட் மாதிரி பேசு.இந்த ரிசிப்ட் புத்தகத்தை வாங்கினதுக்குத் தான் எவி டென்ஸ்.இந்தக் குறிப்பிட்ட புத்தகத்தைக் வாங்கி னேங்குறதுக்கு எப்படி எவிடென்ஸ் ஆகும்?”என்று கேட்டபோது மணிமாறன் ஒன்றும் புரியாமல் விழித் தான்.மோகன் தொடர்ந்தார்.

“மணிமாறா! புத்தகக் கடைக்காரங்க அவங்க வித்த புத்தகத்திலே விலை முந்நூறுன்னு தான் பிரிண்ட் ஆகி இருந்துச்சின்னு சொல்லுவாங்க.இந்தப் புத்தகத்தை வேறெ எங்கேயோ இருந்து கொண்டாந்துட்டு,சீப் பப்ளிசிட்டிக்காக கேஸ்போட்டிருக்கிறதாச் சொன்னா,அது இல்லேன்னு எப்படிச் சொல்லுவே?”

மணிமாறனுக்குத் தலை சுற்றியது. அவன் பதில் சொல்ல முடியாமல் தத்தளித்தான். உடனே மோகனும் “இதப்பாரு மணிமாறன் உனக்கு அனுபவம் பத்தாது. சொன்னாக் கேளு. கேஸை வாப° வாங்கிக்க. நீ தோத்துப் போனா நம்ம சீனியருக்கும் அவமானம்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, மணிமாறன் குறுக்கிட்டு அரசு சார்பாக நுகர்வோர் பாதுகாப்புப் பற்றியும் நுகர்வோர் உரிமைகள் பற்றியும் செய்யப்படும் விளம்பரங்களைப் பற்றி எடுத்துக்காட்டினான்.

உடனே மோகன் “சீனியர் நீ அனுபவம் இல்லாமல் பேசுறதாச் சொன்னப்ப,நீ இந்த அளவுக்கு அப்பாவியா இருப்பேன்னு நினைக்கவே இல்லே.ஆமா விளம்பரத்தை இவ்வளவு தெளிவாக் கேட்டிருக்கியே, கவர்ன்மெண்ட் ஆஃப் இந்தியாவோட கன்சூமர் அஃபையர் செக்ரட்டரி பேசினதெப் படிச்சிருக்கியா?”என்று கேட்டார். மணிமாறனுக்கு அப்படி ஒரு செய்தி தெரியவே இல்லை.

உடனே மோகனும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் பற்றிய கருத்தரங்கு ஒன்று சென்னை யில் 17.9.2011அன்று நடந்ததையும் அதில் நுகர்வோர் நலத் துறையின் இந்திய அரசுச் செயலர் பேசும் போது முதலாளிகள் கோடிக்கணக்கான பணத்தை ஏப்பம் விட்டு அரசாங்கத்தை ஏமாற்றியது  ஏமாற்றி வருவது குறித்துப் பேசியதையும்,இதை நுகர்வோர் மன்றத்துக்குக் கொண்டு சென்றாலும் வழக்கில் வெற்றி பெற முடியாத நிலையே இருப்பதையும் பற்றிக் கூறியதையும் விளக்கினார்.

இதைக் கேட்டதும் மணிமாறனுக்குத் தூக்கி வாரிப்போட்டது.ஒரு சட்டத்தின் கீழ் அரசாங்கத்தா லேயே நீதியைப் பெற முடியாத நிலை என்றால் நாட்டில் என்னதான் நடக்கிறது?

மோகன் கூறிய செய்திகளை உள்வாங்கிக் கொண்டாலும் செரிக்க முடியாமல் திணறினான்.குழப்பத்துடன் ஒன்றும் பேசாமல் இடிந்து உட்கார்ந்து விட்டதைப் பார்த்த மோகனுக்கு அவன் வழக்கைத் திரும்பப் பெற்றுவிடு வான் என்ற நம்பிக்கை பிறந்தது. இருந்தாலும் மணி மாறனுடைய குழப்பத்தைத் தெளிவித்து,யதார்த்த உலகைப் புரிய வைக்க முயன்றார்.

நுகர்வோர் உரிமை மற்றும் பாதுகாப்புச் சட்டத்தின் ஒவ்வொரு விதியும்,நுகர்வோர் முதலாளிகளுக்குச் செலுத்த வேண்டிய பணம் முதலியன தவறாது இருந்தால்தான் நுகர்வோர் மன்றத்தை அணுகமுடியும் என்று இருப் பதையும்,அதேசமயம் ஒரு நுகர்வோர், முதலாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக ஆதாரத் தைத் திரட்ட ஆரம்பித்தால்,நுகர்வோருக்கு எந்த ஆதாரமும் கிடைக்காத நிலையிலேயே விற்பவர் வாங்குபவர் உறவை முறித்துவிடும் வசதி இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

“அப்படீன்னா நாம எதுக்குத்தான் இருக்கோம்?” மணிமாறன் வெடித்தான். மோகன் மெதுவாக “இது கேபிடலி°ட் சொசைட்டி. இது இப்படித்தான் இருக்கும். நீ சொல்றபடி நியாயம் கெடக்கணும்னா சோஷியலி°ட் சொசைட்டி வந்தாத்தான் முடியும்” என்று கூறினார். மீண்டும் “அதெல்லாம் பெரிய விவகாரம். அந்த சப்ஜெக்டை நல்லாப் படிச்சாத்தான் புரியும்.

நான் படிச்சிருக்கேன்.ஆனா நான் மட்டும் என்ன செய்ய முடியும்?ஜனங்க ஒண்ணு சேராம எதுவும் செய்ய முடியாது.எனக்கு வயிறு இருக்கு;வயிறு மட்டுமில்லே உடம்பு பூரா இருக்கு; அது அதுக்குத் தேவை இருக்கு;ஜனங்க ஒண்ணு சேராம தனியாளா நின்னு ஒண் ணும் செய்ய முடியாதுங்கறதாலே இப்ப வேலை செஞ்சிட்டு இருக்கேன்.அப்பப்ப முடியறப்ப ஏதாவது செய்றது.ஆனால் அது பத்தவே பத்தாது”என்று கூறிய மோகன் “இந்த இருட்பிழம்பிலிருந்து விடுதலை அடையும் வழி;இந்தப் பெரிய அக்கினியாற்றிற்குப் பாலம் ஒரு தலைமுறையிலே உண்டாக்கிவிட முடியாது.ஏனெனில் இதைச் செய்யக் கூடிய கைகள் மிகக் குறைவாய் இருக்கின்றன.அறியாமை இருளின் பலமோ மிக அதிகமாக இருக்கிறது”என்ற இராகுல சாங்கிருத்தியாயனின் சொற்களை மேற்கோளாகக் காட்டினார்.

மணிமாறனால் இவற்றையெல்லாம் கேட்டு உள் வாங்க முடிந்ததே ஒழிய, முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் தன்னுடன் வேலை பார்க்கும் மோகனுக்கு நிறைய விவரங்கள் தெரிந்து இருக்கின்றன என்று புரிந்து கொண்டான்.தான் பள்ளி யிலும் கல்லூரியிலும் கற்றதைவிட,சமூகத்தில் கற்க வேண்டியது மிக அதிகமாக இருப்பதை உணர்ந்து கொண்டான்.

மணிமாறன் யோசித்துக் கொண்டே இருப்பதைப் பார்த்த மோகன்,அவன் தன் வழியில் சிந்திக்கட்டும் என்று அமைதியாக இருந்தார்.மணிமாறனுக்கு மோகன் கூறிய அனைத்தும் கேட்டதோ இல்லையோ இராகுல சாங்கிருத்யாயனின் சொற்கள் மீண்டும் மீண்டும் அவன் காதுகளில் ஒலித்தன.சிறிது நேர அமைதிக்குப் பின் “நான் கேஸை வாபஸ் வாங்கிக்குறேன்” என்றான்.

Pin It