நான் ஹுகோ சாவேசை 2002ஆம் ஆண்டு முதன்முதலாகச் சந்தித்தேன்.அமெரிக்காவின் திட்ட மிட்ட சூழ்ச்சியால் சாவேசுக்கு எதிராக இராணுவத்தின் ஒரு பகுதியினர் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்திருந்த நேரம் அது. அதன்பிறகு நான் சாவேசைப் பல முறை சந்தித்தேன். பிரேசில் நாட்டில் போர்ட் அல்ஜீர் நகரில் நடைபெற்ற உலக சமூக மாமன்றக் கூட்டத்திற்கு வருமாறு சாவேசு என்னை அழைத்தார். அதுசமயம், “நீங்கள் ஏன் வெனிசுலா வுக்கு இதுவரை வந்து பார்க்கவில்லை? விரைவில் வாருங்கள்” என்று என்னிடம் சொன்னார்.

நான் வெனிசுலாவுக்குச் சென்றேன். எதையும் சுற்றி வளைத்துப் பேசாமல், தன் மனதிற்குச் சரி யென்று பட்டதைத் துணிவுடன் சொல்லுகின்ற அவருடைய குணம் என்னை ஈர்த்தது. எளிதில் வீழ்த்த முடியாத அடலேறு போல் அவர் காட்சியளித்தார். மிகச் சிறந்த நாவன்மை படைத்தவர். தன் நாட்டு மக் களிடம், கேட்டார் பிணிக்கும் தகைமையில், தொடர்ந்து பல மணி நேரம் சொற்பொழிவாற்றுவதில் ஈடு இணை யற்றவராகத் திகழ்ந்தார்.தன்னுடைய பேருரை களில், வெனிசுலா, தென்அமெரிக்கா, உலகின் பிற நாடுகளின் நடப்புச் செய்திகள் குறித்து விளக்குவார்.

19ஆம் நூற்றாண்டில் மாபெரும் புரட்சியாளராகவும் வெனிசுலாவின் அதிபருமாக இருந்த சைமன் பொலிவரின் கருத்துகளை மேற்கோளாகக் கூறுவார்.பல சமயங்களில் பாடல்களைப் பாடுவார்.“பொது மேடைகளில் நான் பாடுவது பற்றி முதலாளிய வர்க் கத்தினர் குறை கூறுகின்றனர்; நான் உங்களிடம் பாடலாமா?” என்று சாவேசு கேட்க, மக்கள் ‘பாடுங்கள்’ என்று ஆர்ப்பரிப்பர். உடனே சாவேசு பாடுவார். மக்களும் அவருடன் சேர்ந்து பாடுமாறு செய்வார்.

ஒருமுறை ஒரு பேரணிக் கூட்டத்தில் அவருடன் இருந்தேன்.அப்போது சாவேசு என்னை நோக்கி, “இன்று நீங்கள் சோர்வாக இருப்பதாகத் தெரிகிறீர்கள்? மாலை வரையில் உங்களால் இருக்க முடியுமா?” என்று கேட்டார். அதற்கு நான், “அது இன்று நீங்கள் எவ்வளவு நேரம் பேசப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்தது” என்று பதில் சொன்னேன். “இன்று நான் குறைந்த நேரம்தான் பேசப் போகிறேன்” என்றார் சாவேசு. ஆனால் மூன்று மணிநேரம் சொற்பொழி வாற்றினார். அவரைப் பொறுத்த அளவில் அது குறைந்த நேரம் பேசுவதாகும்.

சாவேசின் ஆதரவாளர்கள் பொலிவேரியர் என்று  அழைக்கப்பட்டனர் - சைமன் பொலிவரின் நினைவைப் போற்றும் தன்மையில்! அவர்கள் வாஷிங்டன் உடன் பாடு என்று கூறப்படும் புதிய பொருளாதாரக் கொள்கை யைக் கடுமையாக எதிர்த்தனர்.அதனால் முதலாளிய ஊடகங்கள் சாவேசைப் பழிதூற்றின. அவர் இறந்த பின்னும் இது தொடரும்.

ஒருமுறை நான் சாவேசிடம்,‘பொலிவேரியத் திட்டம் என்பது என்ன?அது எவ்வாறு நடைமுறைப் படுத்தப்படும்?’என்று வினவினேன். அதற்கு  அவர் தெளிவான முறையில் விடை சொன்னார் :

“மார்க்சியப் புரட்சி இப்படித்தான் நடைபெறல் வேண்டும் என்று கூறப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.நாம் பாட்டாளி வர்க்கப் புரட்சிக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நான் ஏற்கா தவன்.இக்கோட்பாடுகளில் மாற்றம் தேவை. நடைமுறை வாழ்வின் உண்மைகள் இதை ஒவ்வொரு நாளும் உணர்த்துகின்றன.

இன்றுள்ள வெனிசுலாவில்,தனிச் சொத்துடைமையை ஒழிப்பதையோ அல்லது வர்க்கங்கள் ஒழிந்த சமுதாயத்தை உருவாக்குவதையோ கொள்கையாக முன்வைக்க முடியுமா?

அவ்வாறு கூறமுடியாது என்றே நான் நினைக்கிறேன்.அதனாலேயே,இந்நாட்டின் வளத்தைப் பெருக்குவதற்காகத் தங்கள் உழைப்பை ஈந்த ஏழைகளுக்கு நன்மை எதுவும் செய்ய இயலாது என்று என்னிடம் யாரேனும் கேட்டால் அதை ஒத்துக்கொள்ளமாட்டேன். ஏனெனில் நாட்டின் செல்வத்தைச் சமூகத்தில் பிரித்தளிக்க முடி யாது என்று சொல்லப்படுவதை நான் ஏற்பதில்லை. நம் நாட்டின் பணக்கார வர்க்கம் வரி செலுத்துவதைக் கூட விரும்புவதில்லை. அதனால்தான் அவர்கள் என்னை வெறுக்கிறார்கள். ஆனால் நாங்களோ அவர்கள் கட்டாயம் வரியைச் செலுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

அப்பழுக்கற்ற தத்துவம் என்று கூறப்படும் புரட்சிகரப் பதாகையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு,செயலில் ஈடுபடாமல் இருப்பதை விட உழைக்கும் மக்களுக்கு வாழ்வளிக்க வேண்டும் என்ற போராட்டத்தில் மடிவது மேல் என்று கருது கிறோம். இவ்வாறு புரட்சிகர முழக்கங்களை உரத்து எழுப்பிக் கொண்டிருப்பது,செயலில் இறங்காமல் தப்பித்துக் கொள்வதற்கான ஒரு வழியாக இருக்குமோ என்று என்னை நினைக்கச் செய்கிறது... புரட்சி என் பதைச் செயலில் காட்ட வேண்டும்.

மோதுவதற்குத் தயாராக இருக்க வேண்டும்; முன்னேற வேண்டும். அம்முன்னேற்றம் என்பது ஒரு மில்லி மீட்டர் அள வினதேயாயினும் அது சரியான திசை வழியில் பயணிக்க வேண்டும். வெறும் கற்பனையான கனவு களில் மிதந்துக் கொண்டிருத்தல் கூடாது.”

சிறுவயதிலேயே நிறைய படிக்கும் பழக்கம் சாவேசுக்கு உண்டு. அதனால் அவர் எப்போதும் வரலாறு, புதினம், கவிதை எனப் பல நூல்களைப் படித்துக் கொண்டேயிருப்பார். ஒருநாள் சாவேசு என்னிடம்,“என்னைப் போலவே,பிடெல்காஸ்ட்ரோவுக்கும் எளிதில் தூக்கம் வருவதில்லை.சில சமயம் இரண்டு பேரும் ஒரே நேரத்தில் ஒரே நாவலைப் படித்துக் கொண்டிருப் போம்.

ஒருநாள் விடியற்காலை மூன்று மணிக்கு,காஸ்ட்ரோ தொலைப்பேசியில் என்னை அழைத்து,“நீ அந்த நூலைப் படித்து முடித்துவிட்டாயா?அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?என்று கேட்டார்.அதன்பின் அந்நூலைப் பற்றி நாங்கள் தொலைப்பேசி யிலேயே ஒரு மணிநேரம் பேசிக் கொண்டோம்” என்று சொன்னார்.

சாவேசுக்கு இலக்கியத்தில் இருந்த ஈடுபாடு எல்லையற்றது.அதை அவருக்கே உரிய தனித்தன்மையில் ஒருமுறை வெளிப்படுத்தினார்.செர்வென்ட் என்கிற எழுத்தாளனின் 400ஆவது பிறந்த நாளைப் போற்றும் வகையில், அவருடைய மிகச் சிறந்த நாவலை 2005 ஆம் ஆண்டு, 10 இலட்சம் படிகள் அச்சிட்டு ஏழைகளுக்கு இலவயமாகக் கொடுத்தார்.

காஸ்ட்ரோவுக்கும் சாவேசுக்கும் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் இருப்பதுபோன்ற உறவு இருந்தது.கடந்த ஆண்டு,வெனிசுலாவின் தலைநகரான காரகாசில்,சாவேசு புற்றுநோய்த் தாக்குதலி லிருந்து குணமாகிவருகிறார் என்ற செய்தி வெளியில் கசிந்ததும், ஆயிரக்கணக்கான மக்கள் அவர் இருந்த மருத்துவமனையின் முன் திரண்டனர். சாவேசை வாழ்த்தி விண்ணதிர முழக்கமிட்டனர். இதை அறிந்த சாவேசு, மருத்துவமனையின் மாடியில் உடனே ஒலிபெருக்கி வைத்திட ஆணையிட்டார்.விரைந்து மாடிக்குச் சென்று மக்களிடம் உரையாற்றினார்.கியூபா வின் தலைநகர் ஹவானாவில் தொலைக்காட்சியில் சாவேசு உரையாற்றுவதைக் கண்ட காஸ்ட்ரோ அதிர்ச்சி அடைந்தார்.உடனே காஸ்ட்ரோ அம்மருத் துவமனையின் இயக்குநருடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு,“நான் காஸ்ட்ரோ பேசுகிறேன்.

அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது?சாவேசை உடனே அழைத்துச் சென்று படுக்கையில் கிடத்துங்கள்.இவ்வாறு நான் சொன்னதாகச் சாவேசிடம் கூறுங்கள். உடனடியாக இதை நீங்கள் செய்யாவிட்டால் உங் களைத் தொலைத்துவிடுவேன்” என்று சினத்துடன் சீறினார்.

எத்தகைய நாட்டை சாவேசு உருவாக்கிச் சென்றி ருக்கிறார்?அது சொர்க்க பூமியா? உறுதியாக இல்லை.ஏனெனில் அந்த அளவுக்கு அங்கே “சிக்கல்கள் மண்டிக்கிடந்தன. ஆனால் சாவேசு வெனிசுலா”வில் ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்கிச் சென்றுள்ளார் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.ஏழை எளிய மக்களிடம் இது நமக்கான அரசு என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றி உள்ளது.இதுவே மக்களிடம் சாவேசுக்குள்ள புகழுக்கான முதன்மை யான காரணமாகும்.

வெனிசுலா இரண்டு முகாம்களாகப் பிரிந்துள்ளது.சாவேசின் கொள்கைகளை ஆதரிப்பவர் ஒரு பிரிவி னர். மற்றொரு பிரிவினர் இதை எதிர்ப்போர். சாவேசு இறந்துவிட்ட போதிலும் அவருடைய கொள்கைகள் உயிர்ப்புடன் உள்ளன. மக்களை அணிதிரட்டி அவர் உருவாக்கிய சமூக சனநயாக முறையை மேலும் முன்னோக்கிச் செலுத்த வேண்டியுள்ளது. சாவேசுக்குப் பின் ஆட்சிக்குப் வருவோரால் இதைச் செய்ய முடியுமா?சாவேசு தூக்கிப்பிடித்த பொலிவேரியப் புரட்சியின் எதிர்காலம் இந்த வினாவுக்கான விடையில் அடங்கி இருக்கிறது.

(தாரிக் அலி உலகளவில் அறியப்பட்ட எழுத்தாளர். வியத்நாமில் அமெரிக்கா நடத்திய ஏகாதிபத்தியப் போரை எதிர்த்ததில் பெட்ரண்ட் ரசலுடன் இணைந்து செயல்பட்டவர். நன்றி : பிரண்ட்லைன், ஏப்பிரல் 5, 2012. தமிழாக்கம் : க. முகிலன்)

Pin It