இதற்கு முன்மாதிரி இருக்கிறது! உச்சநீதிமன்றம் குடிஅரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்ய வேண்டுகோள்!

1975இல், உத்தரப்பிரதேசத்தில், பிலிபிட் (Pilibhit) பகுதியில், மோகிந்தர் சிங், கஷ்மிரா சிங், ஜீட்டா சிங், ஹர்பன்ஸ்சிங் என்கிற நான்கு பேர் - ஜிண்டிசிங், சுர்ஜீத் சிங், பிரா சிங், குர்மீத் சிங் ஆகிய நான்கு பேர்களைக் கொலை செய்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்கள்.

குற்றஞ்சாட்டப்பட்ட நால்வருள் மோகிந்தர் சிங் என்பவர் காவல் துறையினரோடு நடந்ததாகக் கூறப்பட்ட மோதலில் ஏற்கெனவே சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார்.

மீதம் இருந்த கஷ்மிரா சிங், ஜீட்டா சிங், ஹர்பன்ஸ் சிங் மூவருக்கும் - பிலிபிட் நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதியால், 1.5.1975இல் தூக்குத் தண்டனை அளிக்கப் பட்டது. அத்தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். கீழ் நீதிமன்றத் தீர்ப்பை, அலகா பாத் உயர்நீதிமன்றம் 20.10.1975இல் உறுதி செய்தது.

அதே உயர்நீதிமன்றத்தில் ஜீட்டாசிங் சிறப்பு விண்ணப் பத்தைப் பதிவு செய்தார். அது 15.4.1976இல் தள்ளுபடி செய்யப்பட்டது. அவர் 6.10.1981இல் அவர் தூக்கிலிடப்பட்டார்.

இன்னொரு குற்றவாளியான கஷ்மிரா சிங், சிறையி லிருந்தவாறே, 1976இல் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் சிறப்பு விண்ணப்பத்தைப் பதிவு செய்தார். அந்த விண்ணப் பத்தை ஏற்று விசாரித்த நீதிபதிகள் பகவதி, ஃபசல் அலி இருவரைக் கொண்ட அமர்வு, கஷ்மிரா சிங் மீதான தூக்குத் தண்டனையை விலக்கி வாழ்நாள் தண்டனையாகக் குறைத்து 1977இல் தீர்ப்பு அளித்தது.

மூன்றாவது குற்றவாளியான ஹர்பன்ஸ்சிங், 1978இல் சிறப்பு விண்ணப்பத்தைப் பதிவு செய்தார். நீதிபதிகள் சர்க்காரியா, ஷிங்ஹால் இருவரைக் கொண்ட அமர்வு 16.10.1978இல் அவ்விண்ணப்பத் தைத் தள்ளுபடி செய்தது. மீண்டும் அவர் மறு ஆய்வு செய்யக் கோரி விண்ணப் பித்தார். நீதிபதிகள் சர்க்காரியா, ஏ.பி. சென் இருவரைக் கொண்ட அமர் வும் 9.5.1980இல் அவ்விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்தது. ஏற்கெனவே கஷ்மிரா சிங் மீதான தூக்குத் தண்டனை இதே நீதிமன்றத்தால் வாழ்நாள் தண்ட னையாகக் குறைக்கப்பட்டிருந்ததை இந்த அமர்வு களின் கவனத்துக்குக் கொண்டுவர அலகாபாத் உயர்நீதி மன்றப் பதிவுத்துறை தவறிவிட்டது. அதனை அடுத்து, இந்தியக் குடிஅரசுத் தலைவருக்கு ஹர்பன்ஸ் சிங் அளித்த கருணை மனுவும் 22.8.1981இல் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஒரே குற்றத்துக்காக, ஒரே நேரத்தில், 3 குற்றவாளி களில் ஒருவர் தூக்கில் போடப்பட்டார்; இன்னொருவரின் தூக்குத் தண்டனை வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப் பட்டுவிட்டது. எனவே அதே குற்றத்துக்கு ஆளான ஹர்பன்ஸ் சிங்குக்கு, குடிஅரசுத் தலைவர் கருணை காட்ட வேண்டும் என உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது. அரசமைப்புச் சட்ட விதிகள் 32, 136, 243னு இவற்றின்படி நேர்மையான நீதி வழங்கப்பட வேண்டும்.

இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்ட னை உறுதி செய்யப்பட்ட எழுவருள் மூன்று பேருக்கு ஏற்கெனவே வாழ்நாள் தண்டனை வழங்கப்பட்டது. மீதப்பட்ட நால்வருள் ஒருவருக்கு தூக்குத் தண்டனை விலக்கப்பட்டு வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அதேபோல் எஞ்சியுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் வாழ்நாள் தண்டனையாகக் குறைக்க, உச்சநீதிமன்றம் குடிஅரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்க வேண்டுகிறோம்.

Pin It