காங்கிரசுக் கட்சி கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து நடுவண் அரசில் 2004இலிருந்து ஆட்சிப் பொறுப் பேற்றுப் பல திட்டங்களை நிறைவேற்றி வந்தாலும் உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளின் முழு விருப்பப்படியே முழுமையாகச் செயல்பட்டு வருகிறது. கூட்டணிக் கட்சிகளைக்கூட மதிக்காமல் தன்னிச்சை யாகப் பொருளாதாரத் திட்டங்களை அறிவிப்பது கடந்த 8 ஆண்டுகளாகத் தொடர்கிறது.

1991இல் பிரதமராக நரசிம்மராவ் பொறுப்பேற்ற போது இன்றைய பிரதமர் மன்மோகன் சிங் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். 1991இல் இந்தியப் பொருளாதாரம் பெருமளவில் நலிவடைந்துவிட்டிருந்தது. சிக்கலில் இருந்து பொருளாதாரத்தை மீட்க வேண்டுமென்றால் தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று ஒரு பெரும் கொள்கை மாற்றத்தைக் காங்கிரசுக் கட்சியின் தலைவர்கள் எல்லோரும் ஒருமித்தக் குரலில் கூறினர். கடந்த 21 ஆண்டுகளாக இதே கொள்கை தான் இந்திய அரசின் கொள்கையாகக் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.

இடைக்காலங்களில் வாஜ்பாய் தலைமையில் 1996 மே 16 முதல் 1996 சூன் 1 வரை பா.ஜ.க. தலைமையில் சில கட்சிகளின் ஆதரவோடு சில நாள்கள் ஆட்சி இருந்தது. 1996 சூன் முதல் 1998 மார்ச் வரை இரண்டாண்டுகள் தேவகௌடா, ஐ.கே. குஜ்ரால் ஆகியோர் பிரதமர்களாகப் பொறுப்பேற்ற ஐக்கிய முன்னணி ஆட்சி பா.ஜ.க. இல்லாத காங்கிரசு ஆதரவோடு நடைபெற்றது. இந்த இரு ஆட்சிகளிலும் பெருமளவில் பொருளாதாரக் கொள்கைகளில் மாற் றங்கள் செய்யப்படவில்லை. இருப்பினும், இந்தியாவி னுடைய பொதுத்துறை நிறுவனங்களின் உரிமை களும், பொருளாதாரத் தன்னுரிமைகளும் போற்றப் படும் என்று உறுதியளிக்கப்பட்டது. மேலும், முதன் முதலாக இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் நடுவண் அரசில் இந்திரஜித் குப்தா உள்துறை அமைச் சராகப் பணிபுரிந்தார். நரசிம்மராவ் கொண்டு வந்த கொள்கைகளில் பெரும் மாற்றங்கள் செய்யப்படா விட்டாலும் கொள்கை அளவில் மாநிலங்களுக்கான உரிமைகள் போற்றப்படும்; நதிநீர்ச் சிக்கல்கள் தீர்க் கப்படும்; வேளாண் துறைக்கு முன்னுரிமை அளிக்கப் படும்; தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப் படும் என்று பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

1947 தொடங்கி காங்கிரசுக் கட்சி இந்திய அர சியலில் தனது மேலாதிக்கத்தை நிறுவுவதற்காக எவ்வித வஞ்சகச் செயலையும், நாட்டு விரோத நடவடிக்கை களையும் மேற்கொள்ளும் என்பதற்குப் பல எடுத்துக் காட்டுகள் உள்ளன.

குறிப்பாக, சனநாயகக் காவலர் என்று போற்றப் பட்ட பண்டித நேரு காலத்தில் அரசமைப்புச் சட்டத்தின் 356ஆம் விதி 6 முறை பயன்படுத்தப்பட்டு மாநில அரசுகள் கலைக்கப்பட்டன.இதில் வியப்புக்குரிய ஒரு நிகழ்வும் நடந்துள்ளது. 1950இல் பாட்டியாலா, கிழக்குப் பஞ்சாப் மாநிலங்களில் காங்கிரசுக் கட்சியின் முதல் வராக இருந்தது சி.ஜி. பார்கவாவை, மாநில அமைச் சரவையைத் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி யமைக்குமாறு தில்லி காங்கிரசுத் தலைமை கட்டளை யிட்டது. ஆனால் இக்கட்டளையை முதல்வர் பார்கவா ஏற்க மறுத்தார். 1951ஆம் ஆண்டு மே மாதத்தில் 356ஆம் விதியைப் பயன்படுத்தி முதன்முதலாகக் காங்கிரசு ஆட்சிதான் கலைக்கப்பட்டது என்பது வர லாற்றுச் சான்றாகும். உலகிலேயே மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட முதல் பொதுவுடைமைக் கட்சி அரசு கேரள மாநிலத்தில் திரு. இ.எம்.எஸ். தலைமையில் 1957இல் அமைந்தது. 1959இல் இ.எம்.எஸ். அமைச் சரவையும் 356ஆம் விதிக்குத் தப்பவில்லை. நேரு வின் மகள் இந்திரா காந்தி மாநிலங்களில் நிலையான ஆட்சி நடைபெறுவதை என்றுமே விரும்பியதில்லை. இந்திரா காந்தி அம்மையார் காலத்தில் (1966 முதல் 1984 வரை) 50 முறை மாநில அரசுகள் கலைக்கப் பட்டன. 1984இல் இராஜிவ்காந்தி பிரதமராகப் பொறுப் பேற்ற பிறகு 1989 வரை 6 முறை மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. 1991 முதல் 1996 வரை நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த காங்கிரசு ஆட்சி காலத்தில் 11 முறை மாநில அரசுகள் கலைக்கப்பட்டன.

இத்தகைய சனநாயகப் படுகொலைகளை மேற் கொண்டு இந்திய அரசியலில் நிலையற்ற தன்மை யையும், வீண் தேர்தல் செலவுகளையும் மாநிலங் களின் பொருளாதாரத்தில் சரிவுகளையும் ஏற்படுத்திய வஞ்சக நெஞ்சமும், சர்வாதிகார வெறியையும் உடை யதுதான் காங்கிரசுக் கட்சி என்பது மேற்கூறிய நிகழ் வுகள் சான்று பகர்கின்றன. எனவேதான், பா.ச.க. இல்லாத நடுவண் அரசு வலிமை பெற்றுவிடக் கூடாது என்ற தீயநோக்கோடு ஜெயின் குழு அறிக்கையைத் திட்டமிட்டுக் கசியவிட்டுத் தி.மு.க. அமைச்சர்கள் அய்க்கிய முன்னணி அரசில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று பிரதமர் குஜ்ராலை மிரட்டினர். இந்த மிரட்டலுக்குக் குஜ்ரால் பணியாத காரணத்தினால், நடுவண் அரசிற்கு அளித்துவந்த ஆதரவைக் காங்கிரசு திரும்பப் பெற்றது. இதன் காரணமாகத்தான் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. காங்கிரசை விட அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றது. தேசிய சனநாயகக் கூட்டணி வாஜ்பாய் தலை மையில் 1999 முதல் 2004 வரை 5 ஆண்டுகள் ஆட்சி புரிய வழிவகுத்தது. இந்திய அரசியலில் பா.ச.க. கால் ஊன்றுவதற்கு வழிவகுத்ததே காங்கிரசு என்பதைப் பல ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர்.

ஸ்hர்ட் கார்பிரிட்ஜ், ஜான் ஹேரிஸ் என்ற ஆய்வா ளர்கள் ‘இந்தியா மறு ஆய்வு’ (Reinventing India) என்ற நூலில், இந்துத்துவா கொள்கைகள் எப்படி இந்திய சனநாயகத்தில் மெல்ல மெல்ல உருவெடுத்தன என்ப தைப் பற்றி விளக்கியுள்ளனர். 1980 முதல் 1984 வரை ஜனசங்கம் என்ற பெயரில் இருந்த கட்சி பாரதிய ஜனதா என்ற மறு உருவில் அரசியலில் வளரத் தொடங்கியது. இந்து மத அரசியல் ஆயுதங்களைக் கையில் எடுத்துக் கொண்டது. இதற்கு ஆதரவாக ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம், விஷ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகள் துணை நின்றன. இக்கட்டத்தில் ஆட்சி புரிந்த காங்கிரசுக் கட்சி 1987ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கி 1989 வரை அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இராமாயணத் தொடர் இந்துத் தேசிய வாதத்தை ஊக்கப்படுத்தியது என்று இந்த ஆய்வாளர் கள் குறிப்பிடுகின்றனர். மதச்சார்பற்றது என்று கூறிக் கொள்கிற நடுவண் அரசின் தொலைகாட்சியே இராமா யணத் தொடர் ஒளிபரப்பை மேற்கொண்டு அயோத்தி இயக்கம் மக்களிடையே வலிமை பெறுவதற்குத் துணைபுரிந்தது (In the period from January 1987 to August 1989 the cause of Hindu nationalism was boosted by the division of the State-owned Television network, Doordarshan, to screen weekly instalments of a serialisation of Ramayana... The so-called secular state became the principle vehicle by which the Ayodhya movement was placed before the Indian public... p.190)..

 

பொருளாதாரக் கொள்கைகளிலும் காங்கிரசும், பா.ச.க.வும் கடந்த 21 ஆண்டுகளாக ஒரே கொள் கையைத்தான் பின்பற்றுகின்றன. முதலாளித்துவக் கொள்கைகளிலும், அந்நிய முதலீடுகளை வரவேற் பதிலும் இரு கட்சிகளும் ஒரே கொள்கையைத்தான் பின்பற்றுகின்றன என்பதைப் பா.ச.க.வின் செல்லப் பிள்ளையாக இருந்த கோவிந்தாச்சார்யா வெளிப் படையாகத் தெகல்கா இதழுக்கு (மே 31, 2008) அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் பொதுவுடைமைச் சிந்தனையாளர் மாசேதுங், ஊழல் என்பது முதலாளித்துவத்தின் தீய செயல்களில் ஒன்று (Corruption is one of the evils of capitalism) என்று ஒரு முறை குறிப்பிட்டார். இந்தத் தீய செயல்கள்தான் இன்று சந்தைப் பொருளாதார முதலாளித்துவத்துடன் சம அளவில் போட்டியிட்டு வளர்ந்து வருகின்றன. இதன் ஒரு கூறாகத்தான் இன்று வெடித்துக் கிளம்புகிற நடுவண் அரசின் ஊழல் களைப் பார்க்க வேண்டும். முதலாளித்துவத்திற்கும், ஊழல்களுக்கும் இன, மத, கட்சி, அரசியல் வேறு பாடுகள் எல்லாம் கிடையாது. முதலாளித்துவமும் ஊழலும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களே.

2012இல் கெஜ்ரிவாலின் ஊழல் எதிர்ப்பு இயக்கத் தின் சார்பில் வெளியிடப்பட்ட காங்கிரசு, தேசியவாத காங்கிரசுக் கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் மராட்டிய மாநிலத்தின் நீர்ப்பாசனத் திட்டத்தில் நடைபெற்ற 82 ஆயிரம் கோடி ஊழல், கர்நாடக பா.ச.க. எடியூரப் பாவின் பல ஆயிரம் கோடி சுரங்க ஊழல், பா.ச.க. வின் தலைவர் நிதின் கட்கரியின் நீர்ப்பாசனத் திட்ட மோசடி, தேசிய அளவிலான அலைக்கற்றை ஒதுக்கீடு, நிலக்கரி ஊழல்கள், நில அபகரிப்பு முறைகேடுகள் போன்றவை முதலாளித்துவத்தின் வெளிப்பாடுகளே ஆகும். அன்னா அசாரேவுக்கோ, கெஜ்ரிவாலுக்கோ இந்தக் கொள்ளைக் கொள்கையின் அடிப்படைகள் புரியாமல் இருக்கலாம். ஆனால் அமெரிக்காவின் பொரு ளாதாரத் தூதுவர்களாக மன்மோகன் சிங்கிற்கும், மான்டேகுசிங் அலுவாலியாவிற்கும் இது நன்கு தெரிந்தே இருக்கும்.

முதலாளித்துவத்தை முன்னிறுத்தும் உலகமய மாக்கல் கொள்கை ஒரு பெரும் மோசடி என்பதை அண்மைகாலப் பல ஆய்வுகள் வெளிப்படுத்தி வரு கின்றன. அய்க்கிய நாடுகள் மன்றம் தனது பொது அவையில் 1972இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத் தின்படி ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் அமெரிக் காவில் உருவாக்கப்பட்டது. அப்பல்கலைக்கழகம் பல்வேறு கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இப்பல்கலைக்கழகத்தின் கள ஆய்வுகள் சப்பானில் இருந்து ஒருங்கிணைக்கப்படுகின்றன. ஆய்வாளர் களான ஜார்ஜ் ஈன், ரமேஷ் தாக்கூர் ஆகியோர் இணைந்து 2011இல் இப்பல்கலைக்கழகத்தின் சார்பில் உலகளவில் சிறந்த 19 ஆய்வாளர்கள் அளித்த ஆய்வுக் கட்டுரைகளை “உலகமயமாக்கலின் இருள்நிறைந்த பகுதி” (The Darkside of Globalization) என்ற தலைப் பில் தொகுத்துள்ளனர்.

நூலின் ஆய்வுக் கட்டுரைகளில் பொருளாதார வளர்ச்சியும், வீழ்ச்சியும் பற்றிப் பிற புள்ளிவிவரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, உலகமயமாக்கல் தொடங்கிய காலக்கட்டத்தில் உலகப் பொருளாதார வீழ்ச்சி எவ்வாறு அமைந்துள்ளது என்பதைச் சுட்டு கின்றன. ‘சராசரி உலக ஆண்டு வளர்ச்சி விழுக்காடு’1960களில் 3.5 விழுக்காடாக இருந்தது. 70களில் 2.1 ஆகவும், 80 களில் 1.3 ஆகவும், 90களில் 1 விழுக்காடாகவும் வீழ்ந் துள்ளது. வருமானமும், சொத்தும் சிலரிடம் குவிந் துள்ளன. கூலியின் அளவு குறைந்து, இலாபத்தின் பங்கு உயர்ந்துள்ளது. முறைசாராத் துறைகளின் வேலை வாய்ப்புகள் பெருகியிருந்தாலும், ஊதியம், ஓய்வூதியம் மற்ற காப்பீட்டுப் பாதுகாப்புகள் உள்ளடங்கிய துறைகளில் வேலை வாய்ப்புகள் பெருமளவில் குறைந்துள்ளன. இதனால் உண்மை யான கூலியின் மதிப்பு குறைக்கப் பட்டுள்ளது. சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் தொழிலாளர்கள் பெறும் ஊதியமும், ஓய்வூதியமும் குறைக்கப்படுகின்றன. பன்னாட்டு நிதி நிறுவனங்கள், வங்கிகளில் பணியாற்றும் உயர் அலுவலர்களுடைய வருமானம் பல மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. பன் னாட்டு, உள்நாட்டு முதலாளிகளின் மூலதனம், சொத்து களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. உலகளவி லான விதிகள் என்ற பெயரில் வர்த்தகம், பன்னாட்டு நிதி ஆகியவற்றுக்கு அநீதியான முறையில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதனால் பொருளாதார உள் நாட்டு உரிமையும் பண்பாட்டு ஒற்றுமையும், சமூக நிலைத்த தன்மையும் பெருமளவிற்குப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன’ (பக்.3).

‘உலகமயமாக்கலில் குறிப்பாக, உலக நீதி, வணிகம், வர்த்தகம் ஆகியன மூலதனம் விரைந்து வளரு வதற்கும், மாறுவதற்கும் வழிவகுக்கிற நேரத்தில் தொழிலாளர்கள் மீது பெரும் சுமையைச் சுமத்துகிறார்கள். இராணுவ ஆதிக்கமும், ஏகாதிபத்தியமும் இணைந்து செயல்படுகின்றன. ஏகாதிபத்தியம் ஆழமாகவும், அகலமாகவும் உலகில் வேரூன்றுவதற்குத் தேவை யான பொருளாதாரப் பண்பாட்டு அடிப்படை அமைப் புகள் உருவாகி வருகின்றன.

இதுபோன்ற சிந்தனையைத் தூண்டும் பல ஆய்வுகள், கருத்துகள் இடம்பெற்றிருந்தாலும் இந்த நூலிலும் ஒரு கறுப்புப் பகுதி உள்ளது. அந்தக் கறுப்புக் கட்டுரையைத் தீட்டியவர் தில்லியைச் சேர்ந்த எஸ்.டி. முனி என்கிற ஆய்வாளர். விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், தமிழர்களுக்கு எதிராகவும், இந்திய, இலங்கை ஆதிக்கச் சக்திகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டுள்ளார் என்பதை அவரது கட்டுரையே அடையாளம் காட்டுகிறது. மேலும், அவரைப் பற்றிய குறிப்புகளில், தில்லி ஏகாதிபத்தியத்தின் துணையோடு பெற்ற பல பதவிகளும், பன்னாட்டு நிறுவனங்களில் பெற்ற உயர் பொறுப்புகளும் சுட்டப்பட்டுள்ளன. 2005 ஆம் ஆண்டில் இலங்கை அதிபர் இவருக்கு “இலங்கை ரத்னா” என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளார் என் பதும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு உலகமயமாக்கல் கொள்கை பற்றிப் புதிய புதிய ஆய்வுகள் வெளிவந்தவண்ணமே உள்ளன. நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஜோசப் ஸ்டிக்லிஷ் எழுதி 2012இல் வெளிவந்துள்ள, “ஏற்றத்தாழ்வின் விலை” (The Price of Inequality) என்ற நூலில், சந்தைப் பொருளாதாரம் உருவாக்கி வருகிற முரண்பாடுகள் பற்றியும், விலைவாசி உயர்ந்து வருவதும், உண்மையான வருமானம் பெரும்பான் மையோர்க்குக் குறைந்து வருவதும், ஏற்றத்தாழ்வுகள் பெருகி வருவதும், சனநாயகத்திற்கு ஏற்பட்டு வருகிற அறைகூவல்கள் பற்றியும் பல ஆணித்தரமான கருத்துகளை முன்மொழிந்துள்ளார். நூலின் இறுதிப் பகுதியில் (பக்.287) “நம்பலாமா” என்ற தலைப்பில் “சந்தைச் சக்திகள்தான் அமெரிக்காவின் தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகளுக்குப் பங்களிப்பை அளித்துள்ளன.... நமது சனநாயகம் இவ்வகையில்தான் சீர்திருத்தம் நடைபெறும் என்று இரு வழிப் பாதை வழியில் சாய்ந்துள்ளது. 99 விழுக்காட்டு மக்கள் ஒரு விழுக் காட்டு மக்களால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த ஒரு விழுக்காட்டினரும் இவ்வகை செயல்களைத் தங்களுடைய நலனுக்காகச் செய்யவில்லை என்பதையும் உணர வேண்டும். இந்த ஒரு விழுக்காட்டினர் கடுமையான முறையில் செயல்பட்டு மற்ற 99 விழுக்காட்டினர்க்கு மாற்றுப் பாதை இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள வைத்துள் ளனர். எவ்வகை மாற்றத்தையும் விரும்பாத இந்த ஒரு விழுக்காட்டினரின் செயல்பாடுகள், 99 விழுக் காட்டினர் பாதிப்புக்கு உள்ளாவதைத் தடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நூலின் பெரும்பகுதி இவ்வகை மாயையைதான் உடைத்தெறிய முற்பட் டுள்ளது. செயல்திறன்மிக்க, துடிப்புமிக்க பொருளா தாரத்தையும், நீதிசார்ந்த ஒரு சமூகத்தையும் உரு வாக்க முடியும் என்ற கருத்தையும் முன்வைத் துள்ளது.

காங்கிரசுக் கட்சி நேரு காலம் வரை தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக உள்நாட்டு சனநாயகத்தை மெல்ல மெல்லச் சிதைத்து வந்தது. ஆனால் இன்றைய காங்கிரசோ இந்திய விடுதலைப் போராட்டத்தில் தாதாபாய் நௌரோஜி தொடங்கி காந்தி வரை, நேரு முதல் நேதாஜி வரை பின்பற்றிய பொரு ளாதாரத் தன்னுரிமைகளை வெளிநாட்டுச் சக்திகளுக்கு வெளிப்படையாக அடகு வைக்க முற்பட்டுள்ளது.

பல உலகச் சிந்தனையாளர்கள் சந்தைப் பொரு ளாதாரத்தைப் பற்றியும், உலகமயமாதலின் தீய விளை வுகள் பற்றியும் கூறுகிற கருத்துகளை இன்றைய காங்கிரசு புறந்தள்ளி வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதியமைச்சர் சிதம்பரமும் இவ்வகை ஆய்வு களை, நூல்களை, கட்டுரைகளைப் படிக்கிறார்களா? அல்லது தெரிந்து கொள்ள விரும்புகிறார்களா? இவற் றைத் தெரிந்தால் திருந்துவார்களா? போன்ற கேள்வி கள் எழுகின்றன.

சந்தைப் பொருளாதாரத்தின் இன்றைய தந்தை நாடாக (!) உள்ள அமெரிக்காவிலேயே ஒரு விழுக் காட்டு மக்கள்தான் எல்லாப் பயன்களையும், இந்தப் பொருளாதாரக் கொள்கையால் பெற்று வருகின்றனர் என்பதை அறிஞர் ஸ்டிக்லிஷ் ஆணித்தரமாகக் கூறிய பிறகும், வால்மார்ட் நிறுவனத்தை இந்தியாவிற்குள் அழைப்பதும், அந்நிய நேரடி முதலீட்டிற்குப் புதுப்புதுச் சலுகைகளை வழங்குவதும், சிறப்பாகச் செயல்பட்டு வரும் பொதுத் துறை நிறுவனங்களைச் சிதைப்பதும், இலாபம் ஈட்டி இந்தியப் பொருளாதாரத்திற்குப் பல நன்மைகளை அளிக்கும் பொதுத் துறையைச் சார்ந்த காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய முதலீடுகளை அனுமதிப்பதும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை ஊக வணிகத்தின் அடிப்படையில் செயல்படும் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்ய துடிப்பதும் யாருக் காக? இந்திய மக்கள் தொகையில் ஒரு விழுக்காட் டிற்குக் குறைவாக உள்ள செல்வந்தர்கள் நலனிற்கா? சந்தைப் பொருளாதாரத்தின் சாகசங்களை, மாயையை அறியாமல் நுகர்வுக் கலாச்சாரத்தில் மூழ்கி வருகிற 9 விழுக்காடு நடுத்தர வருமானப் பிரிவினருக்கா? 6 இலட்சத்திற்கு மேற்பட்ட சிற்றூர்களில் வாழ்கின்ற 90 விழுக்காட்டு ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கா? என்பதை இத்தாலிய சோனியாவின் இன்றைய சந்தைப் பொருளாதார காங்கிரசுதான் விளக்க வேண்டும்.

Pin It