அக்டோபர் 4 அன்று நடுவண் அரசின் அமைச் சரவை அந்நிய நேரடி முதலீட்டைக் காப்பீட்டுத் துறையில் 26 விழுக்காட்டிலிருந்து 49 விழுக்காடாக உயர்த்துவது, ஓய்வூதியத் துறையில் முதன்முறையாக 49 விழுக்காடு அனுமதிப்பது என்று முடிவு செய்தது. இதற்கு இருபது நாள்களுக்கு முன் செப்டம்பர் மாதத் தில் நடுவண் அரசு, பல்பொருள் சில்லறை வணிகத் தில் 51 விழுக்காடு அந்நிய முதலீட்டை அனுமதித்தது; டீசல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியது; சமையல் எரிவளி உருளை ஓராண்டில் ஒரு குடும்பத்திற்கு மானிய விலையில் ஆறு மட்டுமே வழங்கப்படும்; மீதியை அதன் சந்தை விலையில்தான் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவித்தது.

“1991ஆம் ஆண்டில் அடுத்தடுத்து உறுதிப்பாட்டுடன் புதிய பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப் படுத்தியதால் தான், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 விழுக்காடு என்பதிலிருந்து 9 விழுக்காடு என்ற அளவுக்கு உயர்ந்தது; அந்நியச் செலாவணிக்கை யிருப்புப் பெருகியது; உலகில் மிகவேகமான பொருளா தார வளர்ச்சி காணும் நாடாக இந்தியா உயர்ந்தது. 2008 முதல் அமெரிக்காவிலும் அய்ரோப்பிய நாடுகளி லும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியப் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. இதிலிருந்து விடுபட்டு, மீண்டும் விரைவான பொருளாதார வளர்ச் சியை ஏற்படுத்துவதற்காகத்தான், இப்போது அடுத் தடுத்துப் புதிய பொருளாதாரச் சீர்திருத்தங்களை அரசு மேற்கொள்ள வேண்டியிருக்கிறது” என்று தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் விளக்கமளித்துள்ளார்.

1980 முதல் புதிய பொருளாதாரக் கொள்கையைச் செயல்படுத்தியதன் விளைவாகத்தான் வளர்ச்சி பெற்ற நாடுகளான அமெரிக்காவும் அய்ரோப்பிய நாடுகளும் புதை மணலில் சிக்கிய யானை போல் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. 2012ஆம் ஆண்டில் அமெரிக் காவின் பொருளாதார வளர்ச்சி 2 விழுக்காட்டுக்கும் குறைவாக இருக்கும்; அய்ரோப்பிய நாடுகளில் இது 0.3 விழுக்காடாக இருக்கும் என்று பன்னாட்டு நிதியமே (IMF) கூறுகிறது. எனவே இரண்டாம் கட்டப் பொருளாதாரச் சீர்திருத்தத்தின் மூலம் இந்தியாவை இமயம் போல் உயர்த்திக் காட்டுவேன் என்று மன்மோகன் சிங் கூறுவது மாபெரும் மோசடியாகும்.

காப்பீடு :

காப்பீடு என்பது ஓர் ஒப்பந்தம். விபத்து, திருட்டு, உடல் நலக்குறைவு, இறப்பு முதலான சூழல்களில் பொருளாதார நிலையில் தங்களைக் காத்துக் கொள்வதற்காகக் காப்பீட்டு நிறுவனத்துடன் செய்து கொள்ளும் ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் நம்பிக் கைக்குரியதாகவும், திட்டவட்டமான முறையில் செயல் படுத்தப்படக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இந்த அடிப்படையில்தான் காப்பீடு செய்து கொள்வோர் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குத் தவணைத் தொகை யைச் (பீரிமியம்) செலுத்துகின்றனர்.

மக்களின் உயிரையும் நலத்தையும் காக்கின்ற பொறுப்பை அரசு தட்டிக்கழித்துவிட்டு, இலாபத்தை மட்டுமே குறியாகக் கொண்ட தனியார் முதலாளிய நிறுவனங்களிடம் காப்பீட்டை ஒப்படைப்பது எந்த வகையில் நியாயம்? இப்போது, மக்கள் செலுத்தும் காப்பீட்டுத் தொகை அரசின் மக்கள் நலத் திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது. தனியார் காப்பீட்டு நிறு வனங்கள் இத்தொகையைத் தங்கள் இலாப வேட் டைக்காகவே பயன்படுத்தும் என்பது உறுதி. கொழுத்த இலாபத்திற்காகத் தனியார் காப்பீடு நிறுவனங்கள் முறைகேடான வழிகளில் சந்தைச் சூதாட்டத்தில் ஈடுபடும். உலகிலேயே முதல் நிலைக் காப்பீட்டு நிறு வனமாக இருந்த அமெரிக்கக் காப்பீட்டு நிறுவனமான ஏ.அய்.ஜி. (American International Group - AIG) தாராளமயச் சந்தைச் சூதாட்டத்தில் 2008ஆம் ஆண்டு திவாலாகிவிட்டது. இந்நிறுவனத்தை மீட்பதற் காக அமெரிக்க அரசு 17,000 கோடி டாலர் பணத்தைக் கொடுத்தது. ஏ.அய்.ஜி. போலவே தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், காப்பீடு செய்தவர்களின் பணத்தை இலாப வெறிகொண்டு, ஊசலாட்டமான - உறுதிப் பாடற்ற மூலதனச் சூதாட்டச் சந்தையில் போட்டு மக்களை மொட்டையடிப்பதற்கான வாய்ப்புகள் மிகுதி யாக உள்ளன.

1956ஆம் ஆண்டு இந்திய அரசு ஆயுள் காப்பீட்டுத் துறையை நாட்டுடமையாக்கியது. அப்போது ஆயுள் காப்பீட்டில் 245 தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தன. அயல்நாட்டு நிறுவனங்களும் இவற்றுள் அடங்கும். இவற்றுக்குப் பதிலாக இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனமாக இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) என்கிற ஒரே நிறுவனம் உருவாக்கப்பட்டது.

ஆயுள் காப்பீடு அல்லாத - பொதுக் காப்பீட்டு நிறு வனங்கள் 1972ஆம் ஆண்டு தேசியமயமாக்கப் பட்டன. அப்போது பொதுக் காப்பீட்டில் 107 தனியார் நிறுவனங்கள் இருந்தன. பொதுக் காப்பீடு நான்கு பொதுத்துறை நிறுவனங்களாக அமைக்கப்பட்டது. அவை, தேசியக் காப்பீட்டு நிறுவனம், நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனம், ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனம், யுனைட்டெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் என்பன வாகும். இந்நான்கு நிறுவனங்களையும் மேலாண்மை செய்வதற்காக 1973இல் இந்தியப் பொதுக் காப்பீட்டுக் கழகம் என்பது ஏற்படுத்தப்பட்டது.

1991ஆம் ஆண்டில் இந்திய அரசு, தாராளமயம், தனியார்மயம், உலகமயம் எனும் கொள்கையைத் தீவிரமாகச் செயல்படுத்தத் தொடங்கியது. அதன்படி, காப்பீட்டுத் துறையையும் தனியார் மயமாக்குவதற் காக ரிசர்வ் வங்கியின் தலைவராக இருந்த ஆர்.என். மல்கோத்ரா என்பவர் தலைமையில் 1993ஆம் ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு 1994இல் அதன் அறிக்கையை அளித்தது. காப்பீட்டுத் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கலாம்; அயல்நாட்டு நிறுவனங்களை இந்திய நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்த்து காப்பீட்டுத் துறையில் செயல்பட அனுமதிக் கலாம்; ஒட்டுமொத்தக் காப்பீட்டுத் துறையையும் கண் காணிக்க, ‘காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி ஆணையம்’ (Insurance Regulatory and Development Authority - IRDA) என்பதை அமைக்க வேண்டும் என்று மல்கோத்ரா குழுவின் அறிக்கை பரிந்துரைத் தது. இத்தகைய அமைப்பு 1999இல் ஏற்படுத்தப் பட்டது. 2000ஆம் ஆண்டு முதல் அந்நிய மூலதனம் 26 விழுக்காடு என்ற அளவில் காப்பீட்டில் அனுமதிக்கப்பட்டது. 

இதன் அடிப்படையில், கடந்த பத்து ஆண்டுகளில் ஆயுள் காப்பீட்டில் 23 தனியார் நிறுவனங்களும் பொதுக் காப்பீட்டில் 24 தனியார்கள் நிறுவனங்களும் ஏற்பட்டன. ஆயுள் காப்பீட்டில், ரிலையன்சு ஆயுள் காப்பீடு, சகாரா இந்தியா ஆயுள் காப்பீடு ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டும் முழுவதும் இந்திய முதலாளி களுக்குச் சொந்தமானவை. மற்ற 21 நிறுவனங்கள், செருமனி, கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, தென் அமெரிக்கா, இத்தாலி, சப்பான் முதலான நாடுகளின் தனியார் நிறுவனங்களின் 26 விழுக்காடு முதலீட்டு டன் இயங்கி வருகின்றன. பஜாஜ், டாடா, மாருதி, மகேந்திரா, ஸ்ரீராம், தாபர் போன்ற இந்தியப் பெரு முத லாளிகளும், பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, யூனியன் பேங்க் போன்றவைகளும் இதில் ஈடுபட்டுள்ளன. அந்நிய முதலீட்டின் அளவை இப்போது 49 விழுக்காடாக உயர்த்தியிருப்பதை, மிக விரைவில் 51 விழுக்காடாக உயர்த்தி, காப்பீடு செய்யும் மக்களின் உயிரைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் பணையம் வைக்கப் போகிறது இந்திய அரசு.

2010-11ஆம் ஆண்டின் அறிக்கையின்படி (IRDA) இந்திய அரசின் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (LIC) உள்ள மொத்த தவணைத் தொகை ரூ.2,03,473 கோடி. 23 தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் இருந்த தொகை ரூ.88,131 கோடி. அரசின் ஆயுள் காப்பீட்டுத் தொகையின் பெரும் பகுதி நாட்டு மக்களுக் கான அடிப்படைக் கட்டமைப்புத் திட்டப் பணிகளில் முதலீடு செய்யப்படுகிறது. ஆனால் தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் தொகையில் 4 விழுக்காடு மட்டுமே அரசின் திட்டங்களில் முதலீடு செய்யப்பட் டுள்ளது. அதே ஆண்டில் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ரூ.1,138 கோடிப் பணத்தை உரிமப் பங்குத் தொகை யாக (டிவிடன்ட்) இந்திய அரசுக்குக் கொடுத்துள்ளது.

பரந்துபட்ட மக்களுக்குக் காப்பீட்டின் பயன்களைக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே அந்நிய மூலதனத்தை அனுமதிப்பதின் நோக்கம் என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறுகிறார். ஆனால் எந்த வொரு தனிமுதலாளியின் முதலீட்டின் - தொழிலின் நோக்கம் இலாபமே என்பது பொருளாதாரத்தில் உறுதிப் படுத்தப்பட்ட உண்மையாகும். ஆனால் காப்பீட்டுத் துறையைத்தனியார் மயமாகுவதால் பொதுமக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்று சிதம்பரம் கதையளக் கிறார்.

அரசின் ஆயுள் காப்பீட்டுத் துறையில் 1.5 இலட்சம் பேர் பணிபுரிகின்றனர். 13.5 இலட்சம் முகவர்கள் உள்ளனர். 30 கோடிப் பேர் காப்பீடு செய்துள்ளனர். இது, இத்தன்மையில் உலகிலேயே மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமாக இருக்கிறது. ஆயுள் காப்பீட்டின் மொத்தத் தொகையில் அரசின் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திடம் 76 விழுக்காடு இருக்கிறது. காப்பீட்டுத் தொகையைக் கோரி விண்ணப்பித்தவர்களில் 97 விழுக்காட்டினருக்கு உரிய காலத்திற்குள் அவர்களின் தொகையை அளித்துள்ளது அரசின் ஆயுள் காப்பீட்டுக் கழகம். தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் இந்த வகையில் 86 விழுக்காடு அளவிற்கே அளித்துள்ளன. எனவே எல்லா வகையிலும் சிறப்பாகச் செயல்படும் இந்திய அரசின் ஆயுள் காப்பீட்டுத் துறையை மேலும் சீர்செய்து இன்னும் சிறந்த முறையில் செயல்பட வைக்க வேண்டியது உண்மையான மக்கள் அரசின் கடமையல்லவா? இதைவிடுத்து, குரங்காட்டியின் குரங்கு போல் அமெரிக்காவின் ஆணைகளுக்கு அடிபணிந்து ஆடுகின்ற மன்மோகன் அரசு, மக்கள் விரோத அரசேயாகும்.

ஆயுள் காப்பீடு அல்லாத பொதுக் காப்பீட்டில், மகிழுந்து, சரக்குந்து போன்ற தானியங்கி ஊர்திகளி லும் மருத்துவக் காப்பீட்டிலும் தான் தனியார் காப்பீட்டு நிறுவங்கள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றன. பொதுவாக, தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பணக் காரர்களை மட்டுமே சார்ந்து இயங்குகின்றன. இவற் றின் தவணைத் தொகை உயர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பொதுக் காப்பீட்டில் அரசு நிறுவனங்களின் பங்கு 58 விழுக்காடாகவும், தனியார் நிறுவனங்களின் பங்கு 42 விழுக்காடாகவும் தற்போது உள்ளது.

மருத்துவக் காப்பீடு

அரசு மக்களுக்கு மருத்துவ வசதிகளை அளிக்கும் பொறுப்பிலிருந்து விலகுவதால், தனியார் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் வேகமாக வளர்கின்றன. மக்களின் உயிரை விலைப்பேசி கொள்ளையடிக்கின்றன. கடந்த தி.மு.க. ஆட்சியின் போது முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தால் ஸ்டார் ஹெல்த் எனும் தனியார் காப்பீட்டு நிறுவனம் கொழுத்த இலாபம் ஈட்டியது. ஒரு சிலருக்கு அறுவை மருத்துவம் செய்யப் பட்டதைத் தூண்டில் இரையாகக் காட்டி விளம்பரம் செய்யப்பட்டது. கிளை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், வட்ட, மாவட்ட மருத்துவ மனைகள் என அனைத்து மருத்துவமனை களிலும் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துகள், மருத்துவக் கருவிகள் ஆகியவை இருப்பதற்கும், இவர்கள் முறையாகச் செயல் படுவதற்கும் வழிவகை செய்வதன் மூலமே மூலை முடுக்கில் உள்ள மக்களும் அரசின் பொறுப்பில் உரிய மருத்துவச் சேவையைப் பெற முடியும். மருத்துவக் காப்பீட்டு முறை மூலம் மக்களுக்கு மருத்துவ வசதிகளை அளிப்பது இந்தியச் சூழலுக்குப் பொருந்தாது.

ஏனெனில் முதலாளியத்தின் தலைமை நாடாக உள்ள அமெரிக்காவில் மருத்துவக் காப்பீடு முறை என்பது அந்நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்காகவே - பணம் படைத்தவர்களால் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளக் கூடியதாகவே செயல்படுகிறது. பணவசதி இல்லாமையால் 2004ஆம் ஆண்டு அமெரிக்காவில் மருத்துவக் காப்பீடு செய்து கொள்ள முடியாதவர்கள் 4.13 கோடியாக இருந்தனர். 2010இல் இவர்களின் எண்ணிக்கை 5 கோடியாக அதிகமாகியுள்ளது. மேலும் அதிகச் செலவாகும் அறுவை மருத்துவம் போன்ற வற்றைப் பெற முடியாத அளவுக்கு - மிகக் குறைந்த அளவில் காப்பீடு செய்து கொண்டிருப்போர் 11 கோடிப் பேர். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை 32 கோடி. இவர்களில் 16 கோடிப் பேருக்கு உயிர் காக்கும் மருத்துவ வசதி கிடைப்பதில்லை.

1990-2010 காலத்தில் அமெரிக்காவில் மருத்துவக் காப்பீட்டிற்கான தவணைத் தொகை (பிரீமியம்) 159 விழுக்காடு உயர்ந்துள்ளது. தொழிலாளர் செலுத்தும் தவணைத் தொகை 138 விழுக்காடாக அதிகரித் துள்ளது. ஆனால் அதே காலத்தில் தொழிலாளர்களின் ஊதியம் 42 விழுக்காடு மட்டுமே உயர்ந்தது. இதில் பணவீக்கம் 31 விழுக்காடைக் கழித்தால், மக்கள் அதிக அளவில் தம் சொந்தப் பணத்தைச் செலவிடுகின்றனர் என்பது புலனாகும். எனவே ஏழைகள், நடுத்தரக் குடும்பங்களைச் சுரண்டும் மருத்துவக் காப்பீட்டை இந்தியாவில் எதிர்க்க வேண்டும். அனைத்து மருத்துவ நலச் சேவைகளையும் எல்லா மக்களுக்கும் அரசே வழங்க வேண்டும்.

2008ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட காப்பீடு சட்டத்திருத்த வரைவுச் சட்டத்தை ஆராய்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு, அந்நிய முதலீட்டு வரம்பு 26 விழுக்காடு என்றிருப்பதை மேலும் உயர்த் தக்கூடாது என்று கூறியது. 31 பேர் கொண்ட இக்குழுவில் ஆளும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் 16 பேர் - காங்கிரசுக் கட்சியின் உறுப்பினர்கள் 12 பேர் இருந்தனர். இவர்கள் ஒருமனதாக மறுத்ததை மன்மோகன் சிங் உடும்புப் பிடியாக நிறைவேற்றுவது சனநாயகப் படுகொலையல்லவா!

இந்திய மக்கள் தொகையில் 12 விழுக்காட்டினர் மட்டுமே காப்பீடு செய்துள்ளனர். இவர்களில் 90 விழுக்காட்டுக்குமேல் அரசு ஊழியர்களும், அமைப்புச் சார்ந்த துறைகளின் தொழிலாளர்களும், பணவசதி படைத்தவர்களுமேயாகும். அமைப்புசாராத் தொழிலா ளர்களுக்கென பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களைச் சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன. ஆனால் இவை அரசியல் ஆதாய விளம்பர உத்திகளாக - வெறும் ஏட்டுச்சுரைக்காயாக மட்டுமே உள்ளன.

ஓய்வூதியம் :

ஓய்வூதியம் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே என்ற நிலையே நீண்டகாலமாக இருந்தது. பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கும் குறைந்த அளவில் இது விரிவுபடுத்தப்பட் டுள்ளது.

2004 சனவரி 1 முதல் புதிய ஓய்வூதியத் திட்டத்தை நடுவண் அரசு செயல்படுத்தி வருகிறது. அரசு ஊழி யர்கள் பணிஓய்வு பெறும்போது ஒரு திட்டவட்டமான கணக்கீட்டின்படி ஓய்வூதியம் பெற்று வந்தார்கள். இத்தொகையை அரசே அளித்தது. ஆனால் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்கள் தம் எதிர்கால ஓய்வூதியத்திற்காக மாதந்தோறும் தங்கள் அடிப்படை ஊதியத்தில் 10 விழுக்காடு தொகையைச் செலுத்த வேண்டும். இது மாதச் சம்பளத்தில் பிடித்தம் செய்யப் படும். இத்துடன் அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குகிறது. இவ்விரண்டும் சேர்ந்து, பங்குச்சந்தை யில் முதலீடு செய்யப்படுகிறது. அரசு ஊழியர் ஓய்வு பெறும் போது பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களில் அடிபட்டு எஞ்சிய தொகையை மட்டுமே ஓய்வூதியமாகப் பெறுவார். 2009ஆம் ஆண்டு நடுவண் அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தைச் சுயதொழில் செய் வோருக்கும், அமைப்புசாரா நிலையில் உள்ள தொழி லாளர்களுக்கும் விரிவுபடுத்தியது.

2011 மார்ச்சு 24 அன்று நடுவண் அரசு ஓய்வூ தியச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தது. 4.10.2012 அன்று ஓய்வூதியத்தில் 49 விழுக்காடு அந்நிய மூலனதத்துக்கு அனுமதி அளித்துள்ளது. மாநில அரசுகளும் 2004 முதல் புதிய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

அரசு ஊழியர்களும், தொழிலாளர்களும் தங்கள் பணிக்காலம் முடிந்தபின், திட்டவட்டமாக மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு ஓய்வூதியம் பெறுவோம் என்ற நம்பிக்கையான நிலையைப் புதிய ஓய்வூதித் திட்டமும், இதில் 49 விழுக்காடு அந்நிய முதலீட்டுக்கான அனு மதியும் தகர்க்கின்றன. பங்குச் சந்தைச் சூதாட்டத்தின் சூறைக்காற்றுச் சூழலில் இவர்களின் இறுதிக்கால வாழ்நாள் சிக்க வைக்கப்படுகிறது. ‘சந்தையே எதையும் தீர்மானிக்கும் தெய்வம்’ என்கிற முதலாளித்துவ முழக்கம் உழைப்பாளர் மீது திணிக்கப்படுகிறது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஓய்வூதியம் பெறு வோர் இறந்தால் அவரைச் சார்ந்து வாழும் மனை விக்கோ அல்லது கணவனுக்கோ அல்லது இளம் வாரிசுக்கோ குடும்ப ஓய்வூதியம் என்பது தரப்படாது. தற்போது பணவீக்கத்தின் உயர்வுக்கு ஏற்ப ஓய்வூதியத்தின் அகவிலைப்படியும் உயர்த்தப்படுகிறது. இதுவும் இனி இல்லை.

2008ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட காப்பீடுச் சட்டமும், 2011இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதியச் சட்டமும் நவம்பர் மாதம் 22ஆம் நாள் கூடும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளன. உழைக்கும் மக்களுக்கு எதிரான - பெரு முதலாளிக்கு ஆதரவான இவ்விரு சட்டங்களையும் நிறைவேற்ற முடியாதவாறு மக்கள் போராட்டங்கள் மூலம் தடுக்க வேண்டும். காப்பீட்டுத் துறையிலும் ஓய்வூதியத் துறையிலும் 49 விழுக்காடு அந்நிய முதலீட்டை அரசு கைவிடும் வரையில் தொடர்ந்து எதிர்த் துப் போராடுவோம்.

(குறிப்பு : 2012 நவம்பர் 2 நாளிட்ட ஃபிரண்ட் லைன் இதழ் இக்கட்டுரை எழுத உதவியாக அமைந்தது)

Pin It