திருநெல்வேலி பாளையங்கோட்டை ‘தமிழ் வளர்ச்சி - பண்பாட்டு மைய’ அரங்கில் 2010 சனவரி 22, 23, 24 ஆகிய நாள்களில் “தமிழ்நாட்டுத் தொல் லியல் ஆய்வுகள் - ஆதிச்சநல்லூர் சிறப்பும் எதிர்காலத் திட்டங்களும்” என்ற தலைப்பில் தேசியக் கருத்த ரங்கம் நடைபெற்றது. தமிழறிஞர்கள், இயக்கத் தோழர்கள், ஆய்வறிஞர்கள் என 350 பேர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ‘சென்னை செம்மொழித் தமிழாய்வு மய்ய நிறுவன’மும் ‘பெரியார் ஈ.வெ. இராமசாமி-நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்ட ளையும், இணைந்து இக்கருத்தரங்கிற்குச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் பாளை யங்கோட்டையிலிருந்து 11.6 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் உள்ளது-3000 ஆண்டுகளுக்கு முன்பான தமிழரின் நாகரிகத் தொட்டிலாகக் கருதப்படும் ஆதிச்சநல்லூர்.

இங்கு சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பாக ‘ஜாகோர்’ என்பவரால் அகழ்வாய்வு செய்யப்பட்ட போது கிடைத்த பொருள்கள் ‘பெர்லின்’ நகரில் ‘ஆதிச்சநல்லூர்’ புதை பொருள் கள் என்ற பெயரிலேயே கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.

பின்னர் பாரீசிலிருந்து வந்த ‘எம். லூயி லாபிக்’ என்பவர் அகழ்வாய்வில் கண்டுபிடித்த பொருள்களைப் ‘பாரீசு’ நகர அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் சென்று விட்டார்.

1903 முதல் 1904 வரை ‘அலெக்சாண்டர் ரியா’ என்பவர் தலைமையில் நடைபெற்ற அகழ்வாய்வில் கிடைத்த இரும்பு, செம்பு, வெண்கலம் ஆகியவற்றால் கலை உணர் வோடு செய்யப்பட்ட சுமார் 591 ஆயுதங்களும் வீட்டுக் கலைப் பொருள்களும் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

2004ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூர் ‘பறம்பில்’ மேற் கொண்ட அகழ்வாய்வில் 157 தாழிகள் கண்டு பிடிக்கப் பட்டன. இரும்பு, செம்பு, வெண்கலத்தாலான பூந்தட்டுகள் பூக்கிண்ணங்கள் தமிழர்களின் நாகரிக உயர்வையும் இறந்தவர்களை அவர்கள் பயன்படுத்திய பொருள்களோடு இடுகுழிகளில் இட்டு வந்தமையும், இது சிந்துவெளி நாகரிகத்தையும்விட முந்திய பெருமைக்குரிய தமிழக நாகரிகம் எனவும் ஆய்வறிஞர்கள் 2010 சனவரி ஆய்வரங்கில் நிறுவினார்கள்.

‘பறம்பின்’ களப்பரப்பைக் காணக் கருத்தரங்கிற்கு வந்திருந்தோர் அனைவரையும் நேரில் அழைத்துச் சென்று காட்டியது மறக்க முடியாத அனுபவமாகும்.

22.1.2010 கருத்தரங்கத் தொடக்க விழாவில் உரையாற்றும் போது தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் இரு கருத்துகளை முன்வைத்தார்.

1.            தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங் களிலும் தொல்லியல் கல்வி பெறுவதற்கான வாய்ப்பு கள் உருவாக்கப்பட வேண்டும்.

2.            ஆதிச்சநல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருள் கள் அனைத்தையும் திரட்டி ஆதிச்சநல்லூரி லேயே பாது காப்பான, சிறப்பான அருங்காட் சியகத்தை உருவாக்க வேண்டும்” என்பவையே அவை.

இவற்றில் இரண்டாவது வேண்டுகோள் இப்போது ஏற்கப்பட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளரால் அறிவிப்புச் செய்துள்ளதை 26.4.2012 ‘தீக்கதிர்’ நாளேடும், 23.4.2012 ‘தினமணி’ நாளேடும் செய்தியாக வெளியிட்டுள்ளன.

“ஆதிச்சநல்லூரில் 10 சென்ட் நிலத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது என்றும், ஆய்வுக்குத் தேவையான இடங்களில் பாதுகாப்பான முள்வேலி அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்” எனவும் மாவட்ட ஆட்சியர் அறி விப்புச் செய்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஆயினும் 10 சென்ட் நிலத்தை ஒதுக்குவது என்பது ஆதிச்சநல்லூரின் தொண்டையும், பெருமையையும் அறியாததன் வெளிப்பா டேயாகும். அருங்காட்சியம் குறைந்தது 10 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட வேண்டும்.

மொழி இழந்து, நாடிழந்து, பண்பாட்டுக் கலைச் செல்வங்களையெல்லாம் இழந்து கொண்டிருக்கும் தமிழி னத்திற்கு இது ஒரு ஆறுதலான செய்தி.

மீண்டும் ஆதிச்சநல்லூர் சென்று அகழ்வாய்வுப் பொருள் களையும் தொன்மை வரலாற்றுச் சுவடுகளையும் பறம்பு மண் பரப்பையும் பாதுகாக்க உருவாக்கப்படும் அருங்காட்சியகத்தையும் எப்போது பார்ப்போம்?

Pin It