“ஈழத்தமிழர் விடுதலையை எல்லா இந்தியரும் ஆதரிப்போம் - ஏன்?” என்ற பொருள் பற்றிப் புதுதில்லியில் நார்த் அவின்யூ எம்.பி.எஸ். கிளப்பில் நாள் 11-03-2012இல் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம்-1

இலங்கை அரசின் போர்க் குற்றம்: இந்திய அரசின் போக்குக்குக் கண்டனம்

இலங்கை அரசு, அய்.நா. அவையின் இலங்கை அரசின் போர்க்குற்றம் பற்றிய அறிக்கைக்குப் பொறுப் பான விளக்கம் தருவதை விட்டுவிட்டு, “இலங்கையின் போர் படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணையம்” என ஒன்றைத் தானே அமைத்துக் கொண்டது. அந்த ஆணையம் இலங்கை அரசு போர்க் குற்றம் புரியவில்லை என்று சாதிக்கவே முயன்றுள்ளது.

மேலும் இலங்கையில் 2005 முதல் 2009 வரை நடத்தப்பட்ட போரில் வன்னி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு முதலான வடக்குப் பகுதிகளில் கொல்லப்பட்டவர்கள் 22,329 பேர் என, 25.02.2012ல் இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஆனால் அய்.நா. அவை ஏற்கெனவே அளித்த அறிக் கையில் அக்காலகட்டத்தில் பொதுமக்கள் 40,000 பேர் கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளது. எனவே போர்க் குற்றத்தின் கடுமையையும் அளவையும் குறைத்துக் காட்டவே இப்போது இலங்கை அரசு முயற்சிக்கிறது.

மேலும் 2009 இறுதிக்கட்டப் போரில் கொல்லப் பட்டவர்கள் 7934 பேர் என்றும், அந்தக் கால கட்டத்தில் இயற்கையாக இறந்தவர்கள் 2523 என்றும் 25.2.2012இல் இலங்கை அரசு அறிவித்துள்ளது.

27.02.2012 முதல் ஜெனிவாவில் நடைபெற்று வரும் அய்.நா. மனித உரிமைகள் காப்பு மாநாட்டின் முன், இத்தகைய பொய்யான அறிக்கையை வைத்திட வேண்டியே, ஏழு அமைச்சர்கள் கொண்ட குழு ஒன்றை இலங்கை அரசு 10-02-2012இல் அமைத்துள்ளது.

ஜெனிவாவில் நடைபெறும் அய்.நா. மனித உரிமை கள் ஆணையத்தின் (ரு.சூ. ழரஅயn சுiபாவள ஊடிரnஉடை) கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிரான நிலையை எடுக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது பற்றிக் கவலைப்படாமல், இலங்கை அரசு, “அமெரிக்கா புரிந்துள்ள போர்க் குற்றங்களை யார் விசாரிப்பது” என எதிர்வினா எழுப்பியுள்ளது.

இந்நிலையில், இந்திய அரசு, ஒரு நாட்டின் மீது மட்டும் போர்க்குற்றம் சுமத்த முடியாது என்று கூறிவிட்டு, இலங்கைக்கு எதிரான போர்க்குற்றம் சாட்டுவதிலிருந்து ஒதுங்கிக்கொள்ள முயற்சிக்கிறது. மனித உரிமைகள் காப்புப் பற்றிய நடவடிக்கைகள் நன்மையை விடத் தீமையையே விளைவிப்பதாக இந்திய அரசு கருதுகிறது என இந்திய அரசின் உயர் அதிகாரவர்க்கம் கருத்தறிவித்துள்ளது.

இந்திய அரசின் இப்போக்கை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம்-2

ஈழத் தமிழர் அழிப்பு: அய்.நா. மற்றும் இந்திய அரசின் கடமை தவறலுக்குக் கண்டனம்

2005 இறுதியிலிருந்து விடுதலைப்புலிகளை அழிக்கும் முயற்சியில் இலங்கை அதிபர் இராஜபக்சா அரசு ஈடுபட்டது. தன்னாட்டுக் குடிமக்களான ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டி, அய்.நா. பொது அவையும் பாதுகாப்புக் குழாமும் அய்.நா.வின் பொதுப்படையை இலங்கைக்கு அனுப்பி அத்துமீறலைத் தடுத்திருக்க வேண்டும். அய்.நா. இந்தத் தார்மீகக் கடமையை ஆற்றத் தவறிவிட்டது.

2007, 2008, 2009ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசு 1,41,000க்கும் மேற்பட்ட தமிழ் மக்களைக் குண்டு வீசியும் சுட்டும் கொன்றதற்கான ஆவணப் படங்கள் உலகம் முழுவதிலும் பரவியுள்ளன. இது பற்றிய அய்.நா.வின் ஆய்வறிக்கையில் இலங்கை அரசுப் படைகள், விடுதலைப்புலிகள் ஆகிய இரண்டு தரப்புகளினாலும் போர்க்குற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது இந்திய அரசும் இப்படிக் கூறுகிறது.

இலங்கை அரசு மனித உரிமைகளை மீறியுள்ள தாக இலங்கை அரசின் மீது போர்க்குற்றம் உள்ளதை உறுதிசெய்து, உலக நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்தவும் அய்.நா. தவறிவிட்டது. இதற்குத் தார் மீக அடிப்படையில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய இந்திய அரசும் இலங்கை அரசு விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு ஏதுவாக அவர்களுக்கு எல்லா உதவி களையும் அளித்ததை மறைப்பதற்கான முயற்சியா கவே இந்திய அரசின் இன்றைய போக்கு இருப்பதை நம்மால் உணர முடிகிறது. இது ஈழத்தமிழரைப் பழி தீர்க்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான இந்திய அரசின் போக்கே ஆகும் என இக்கூட்டம் உறுதியாகக் கருதுகிறது. எனவே அய்.நா. அவையினுடையவும் மற்றும் இந்திய அரசினுடையவும் மேலே கண்ட போக்குகளை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம்-3

போரில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்க்கு மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை

இலங்கை அரசு விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை 2005 இறுதியில் தொடங்கியது. 2009 மே பத்தொன்பதில் அப்போர் நிறைவுற்றது. போர் முடி வுற்று 33 மாதங்களுக்கு மேல் ஆன நிலையிலும், பாதுகாப்பு வளையத்திலிருந்து அவரவர் இடத்துக்கு அனுப்பப்பட்ட தமிழ்க் குடும்பங்களுக்கும், போரின் போது சொத்துக்களையும், வீடுகளையும் இழந்தவர் களுக்கும் மறுவாழ்வு அளிக்க இலங்கை அரசு இதுவரையில் எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை.

இந்திய அரசு அளித்த நிதியைக்கொண்டு கட்டப்பட வேண்டிய 50 ஆயிரம் வீடுகளில் நூறு வீடுகள் கூட இன்னும் கட்டித்தரப்படவில்லை.

இது, தமிழரின் வாழ்விடங்களில் சிங்களவர்களைக் குடியேற்றும் சூழ்ச்சியான நோக்கம் கொண்டதும், தமிழரின் வேளாண் நிலங்களைச் சிங்களவர்கள் கைப்பற்றிக் கொள்ள இலங்கை அரசு வழிவகுப்பதும் ஆகும்.

மேலும் இலங்கையிலும், இந்தியாவிலும், தொலை வான அயல்நாடுகளிலும் அகதிகளாக உள்ள தமி ழர்கள் இலங்கைக்கு அவரவர் இடத்துக்குத் திரும்பி வர ஏற்ற அமைதியான சூழ்நிலை இல்லாததால் அவர்களின் நிலங்களையும், வீடுகளையும் சிங்கள வர்கள் கைப்பற்றிக்கொள்ள இப்போக்கு இடந்தருவ தாகும்.

இவ்வாறெல்லாம் இலங்கை அரசு தமிழரின் வாழ்வுரிமையைப் பறிக்கும் செயலை மேற்கொண்டு, அதனால் ஈழம் வாழ் தமிழர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துபோகும் கேடு நேர்ந்தே போகும்.

எனவே இவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டிய ஏற்ற நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சார்ந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 59 பேர்களும் தமிழக முதலமைச்சர் மற்றும் அந்தந்தக் கட்சிகளின் தலைவர்களுடன் - இந்தியக் குடியரசுத் தலைவர், இந்தியத் தலைமை அமைச்சர், இந்திய அயலுறவு அமைச்சர் ஆகியோரை உடனடியாக நேரில் கண்டு வற்புறுத்த வேண்டும் என்று மேலே கண்ட அனைவரையும் இக்கூட்டம் வேண்டிக் கொள்கிறது.

தீர்மானம்-4

மூவரின் தூக்குத் தண்டனையை விலக்கிடு! எழு பேர்களையும் விடுதலை செய்!

தூக்குத் தண்டனைக் கைதிகளாக உள்ளவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று இந்தியக் குடியரசுத் தலைவருக்குக் கருணை விண்ணப்பம் அளித்த பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும்கூட அவ்விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இராசீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பத்தொன்பது ஆண்டுகளாகத் தூக்குக் கைதிகளின் கொட்டடியில் நைந்து கிடக்கும் பேரறி வாளன், மதி (எ) சின்ன சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை கோரும் விண்ணப்பங்கள் குடியரசுத் தலை வரால் தள்ளுபடிச் செய்யப்பட்டன. இவற்றை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் போடப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. அவ்வழக்கை வெளி மாநில உயர் நீதிமன்றத்திற்கோ அல்லது உச்சநீதிமன்றத்துக்கோ மாற்ற வேண்டும் என்று கோரி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வழக்கு 22.02.2012இல் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய அரசுக்குக் கருணை கோரி வரும் விண்ணப் பங்களைப் பற்றி நீண்டகாலம் இந்திய அரசு முடி வெடுக்காமலிருப்பதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இந்நிலையில் இந்திய அரசும், இந்திய உயர் அதிகார வர்க்கமும், இவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவருக்கு இந்திய அரசும் தமிழக அரசும், பரிந்துரைத்துப் போதிய அழுத்தமும் தர வேண்டும் என்றும் இக்கூட்டம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வழக்கில் சிறைப்படுத்தப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி இரவிச்சந்திரன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேர்களும் பத் தொன்பது ஆண்டுகள் சிறைப்படுத்தப்பட்டிருந்ததால், அவர்கள் தத்தம் வாழ்நாள் தண்டனையை அனு பவித்து விட்டதாகக் கருதி இவர்கள் ஏழு பேர்களையும் விடுதலை செய்ய இந்திய அரசும் தமிழக அரசும் எல்லாம் செய்ய வேண்டும் என்று இக்கூட்டம் வேண்டிக் கொள்கிறது.

இதற்குரிய ஏற்பாடுகளைத் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 59 பேர்களும் கூட்டாக மேற்கொள்ள வேண்டும் என்றும் இக்கூட்டம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்-5

ஈழ விடுதலை கோருவோரைப் பற்றிய உண்மையை இந்திய மக்கள் அறிந்திட வேண்டுகோள் :

பரந்த துணைக்கண்டமான இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகளைப் பேசும் பெருமக்களும், மக்கள் தலைவர்களும், “தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குப் பிழைப்புக்காகப் போன தமிழர்கள் தனிநாடு கோரு கிறார்கள்; அது தவறாகும்” என்கின்ற பிழைபட்ட கருத் தில் இருக்கிறார்கள் என்பது ஒரு பெரிய உண்மை.

தமிழகத்திலிருந்து பிழைப்பின் நிமித்தமாகக் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் 1828க்கும் 1940க்கும் இடையில் இலங்கைக்குச் சென்றனர். அவர்கள் அன்றும் இன்றும் தோட்டத் தொழிலாளத் தமிழர்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் ஈழத்தமிழர்கள் என்று அழைக்கப்படுவதில்லை.

ஈழத்தமிழர்கள் யார்?

பத்தாயிரம் ஆண்டுகளுக்குமுன் இலமூரியா கண்டம் பல துண்டுகளாக உடைபட்ட போது, தெற்கில் ஒதுங்கிய தீவான இலங்கையில் வாழ்ந்த பழங்காலத் தமிழர்களே ஈழத்தமிழர் ஆவர். இடையில் சோழர் ஆட்சிக்காலத்தில் படைவீரர்களாகவும், தலைவர்களா கவும், வன்னி, கண்டி முதலான பகுதிகளுக்குச் சென்றவர்கள் ஈழத்தமிழர்களுடன் இரண்டறக்கலந்து விட்டனர். இவர்களே 1981 முதல் தனித்தமிழ் ஈழம் கோரிப் போராடுகின்ற ஈழத்தமிழர் ஆவர்.

தோட்டத் தொழிலாளத் தமிழர் எல்லோரும், 1948இல் விடுதலை பெற்ற இலங்கையில், 1949இல் நாடற்றவர்கள் என்று இலங்கைப் பாராளு மன்றத்திலேயே சிங்களவர்களால் சட்டம் நிறைவேற்றப் பட்டது. 1965இல் தோட்டத் தொழிலாளர் தமிழர்களில் பாதிப்பேர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். இன்றும் ஐந்து இலட்சம் தோட்டத் தொழிலாளர்கள், இலங்கையில் சொத்து வாங்கும் உரிமை இல்லாதவர்களாக வாழ் கின்றனர்.

மேலே கண்ட விவரங்களை இந்தியா முழுவதும் உள்ள தமிழர் அல்லாத இந்தியப் பெருமக்கள், மனதில் கொள்ள வேண்டும் என்றும் ஈழத்தமிழர் விடுதலைக்கு இவர்கள் எல்லோரும் மனமுவந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் இக்கூட்டம் அன்போடு வேண்டிக்கொள்கிறது.

தீர்மானம்-6

உடனடியாகத் தன்னுரிமைத் தமிழீழம் காண எல்லாம் செய்வோம்!

முற்றுரிமைப் பெற்ற தனித்தமிழ் ஈழம் அமைக் கப்படுவது ஒன்றே ஈழத்தமிழரின் நல்வாழ்வுக்கும் தோட்டத் தொழிலாளத் தமிழரின் நலனுக்கும் ஆன ஒரே தீர்வாகும். இது இன்னும் நீண்ட காலம் போராடிப் பெற வேண்டிய இறுதிக் குறிக்கோள் ஆகும்.

இன்றைய நிலையில் நீண்டகாலப் போராட்டத் துக்கு ஈழத்தமிழர்கள் ஆயத்தம் ஆகக் கூடிய சூழ்நிலை இல்லை.

ஆனால்,

1.     இராசீவ் காந்தி - செயவர்த்தனா இடையே 1987இல் ஏற்பட்ட ஒப்பந்தப்படியான 13ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தத்தை இலங்கை அரசு நிறைவேற்றுவதனாலோ (அல்லது)

2.     13ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை விடக் கூடுதலான அதிகாரத்தை இலங்கை அரசு வழங்குவதனாலோ ஈழத்தமிழர் களுக்கு உரிய உரிமைகள் வந்து சேரமாட்டா.

எனவே,

தமிழீழத் தமிழர்களும், தமிழீழத் தமிழர் தலைவர்களும்; தமிழ்நாட்டுப் பெருமக்களும், தமிழ்நாட்டுத் தமிழர் தலைவர்களும்; உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் அவர்களின் தலைவர்களும் - உடனடி யாக, ஈழத்தமிழரின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து தன்னாட்சி அதிகாரம் உடைய தமிழீழத்தை அமைத்துத் தீரவேண்டிய அளவுக்கு இலங்கை அரசுக்கு நெருக்கடியை உண்டாக்கிட வேண்டும் என்றும்; இதற்காகத் தமிழ் மக்களின் ஆதரவையும், இந்திய மக்களின் ஆதரவையும், உலக நாடுகள் சிலவற்றின் ஆதரவையும் திரட்டிட ஈழத்தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் முழுமூச்சாக முயற்சிக்க வேண்டும் என்றும் இக்கூட்டம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.

Pin It