பெரியார்-அம்பேத்கர் தொண்டு நிறுவனத் தோழர்களின் பேரார்வம்

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில், புதுதில்லியில், “ஈழத் தமிழர் விடுதலையை எல்லா இந்தியரும் ஆதரிப்போம் : ஏன்” என்கிற சிறப்பு நிகழ்ச்சியையும்; “எல்லா வகுப்பினர்க்கும் - கல்வியிலும் வேலையிலும் விகிதாசார வகுப்புவாரிப் பங்கீடு கோரி மாநாடு” என்னும் நிகழ்ச்சியையும் நடத்துவதற்காகத், தோழர்கள் வே. ஆனைமுத்து, கவிஞர் காவிரிநாடன் இருவரும் 29.2.2012இல் புதுதில்லிக்குச் சென்றடைந்தனர். 

4.3.2012இல் கலந்துரையாடல் கூட்டம்

மேற்கண்ட இரண்டு நிகழ்ச்சிகளையும் சிறப்புற நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது பற்றிய கலந்துரையாடல் கூட்டம், 4.3.2012 ஞாயிறு 6 மணிக்கு, புதுதில்லியில் லோதி காலனியில் (டுடினாi ஊடிடடிலே)யில் உள்ள “இந்திய சமூக நிறுவனத்தில்” நடைபெற்றது. தோழர் ஜான்சுந்தர் தலைமையேற்றார். வே. ஆனைமுத்து முன்னிலை வகித்தார்.

பெரியார்-அம்பேத்கர் தொண்டு நிறுவனத் தோழர்களும், புதுதில்லி வாழ் தமிழ் அமைப்பினரும், ஆதரவாளர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

11.3.2012, சிறப்புக் கூட்டம், 25.3.2012 வகுப்பு வாரி உரிமை மாநாடு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இவற்றுக்கான ஏற்பாடுகளைக் குறித்து, இரா. ஜான்சுந்தர், மா. அண்ணாதுரை, ஃபிராங்ளின், ஞான ஜெரிதா ஃபிளவர், இ. குப்புசாமி, ச. தமிழரசு, இரா. சிதம்பரநாதன், பி. இராமமூர்த்தி, புதேரி. தானப்பன், ஜெ. மேரி அக்சிலியா ஆகியோர் கருத் துரைத்தனர். வே. ஆனைமுத்துவின் வேண்டுகோ ளுடன், இரவு 9 மணிக்குக் கலந்தாய்வுக் கூட்டம் முடிவுற்றது.

11.03.2012 ஞாயிறு ஈழத் தமிழர் ஆதரவு சிறப்புக் கூட்டம்

மேற்படிக் கூட்டத்தில் தமிழரும் வட இந்தியரும் பங்கேற்க வேண்டும் என்று திட்டமிட்டு, அவரவர் இடத்துக்குச் சென்று கூட்ட அறிக்கைகளையும், சுவரொட்டிகளையும் ஆதரவு திரட்டும் பணியை வே. ஆனைமுத்து, புதுதில்லி மாநிலச் செயலாளர் ச. தமிழரசு, கவிஞர் காவிரிநாடன், ஆசிரியர் ஆர்.வி. முத்து, இராமலிங்கம், புதேரி. தானப்பன் ஆகியோர் உந்து மூலம் சென்று தொடர்ந்து பணியாற்றினர்.

புதுதில்லி அலுவலகங்கள், தோழர்களின் வீடுகள் மற்றும் இந்திரபுரி, திருலோகபுரி, கல்யாண்புரி ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று எல்லோரையும் அழைத் தனர். புதுதில்லித் தமிழ்ச் சங்கத்தினரும் பேராதரவு நல்கினர். டில்லி மற்றும் நேரு பல்கலைக்கழக மாண வர்கள் ஆதரவளித்தனர்.

ஈழத்தமிழர் ஆதரவுக் கூட்டம்

“ஈழத் தமிழர் விடுதலையை, எல்லா இந்தியரும் ஆதரிப்போம் : ஏன்” என்ற பொருள் பற்றிய சிறப்புக் கூட்டம், 11.3.2012, ஞாயிறு மாலை 5 மணிக்கு, புது தில்லியில், நார்த் அவின்யூவில் உள்ள “நாடாளு மன்ற உறுப்பினர்கள் உணவு விடுதி” மாடியில், வே. ஆனைமுத்து தலைமையில் தொடங்கியது.

முதலில், முள்ளிவாய்க்கால் போரில் ஈழத் தமிழர் பதைக்கப் பதைக்கக் கொல்லப்பட்டது பற்றிய ஆவணப் படம் திரையிடப்பட்டது. கூட்டத்தில் பங் கேற்ற அனைவரும் காணப் பொறுக்காத அக்காட்சி களைக் கண்டு உணர்ச்சி வடிவாயினர்.

இக்கூட்டத்துக்கு வே. ஆனைமுத்து தலைமை ஏற்க வேண்டுமென கவிஞர் காவிரிநாடன் முன்மொழிந்தார்; பொன்மலை பொன்னுசாமி வழிமொழிந்தார். மா.பெ.பொ.க. புதுதில்லி மாநிலச் செயலாளர் ச. தமிழரசு அனை வரையும் வரவேற்று உரையாற்றினார்.

உச்சநீதிமன்ற வழக்குரைஞரும், மனித உரிமைகள் காப்பரணின் தலைவரும், தில்லித் தமிழ்ச் சங்கத் தலைவருமான தோழர்எம்.என். கிருஷ்ணமணி தொடக்கவுரையாற்றினார். தொடர்ந்து புதுதில்லி நேரு பல்கலைக்கழகப் பன்னாட்டு அரசியல் துறைப் பேராசிரியர் முனைவர் பி. சகாதேவன், உச்சநீதிமன்ற வழக்குரைஞர் எஸ். நந்தகுமார் ஆகியோர் உரை யாற்றினார்.

மீண்டும், படுகொலை ஆவணப்படம் திரையிடப் பட்டது.

அடுத்துத் தீர்மானங்களை முன்மொழிந்து வே. ஆனைமுத்து உரையாற்றினார். இறுதியாக, விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலை வரும், மக்களவை உறுப்பினருமான தோழர் தொல். திருமாவளவன் விரிவான சிறப்புரை நிகழ்த்தினார். சென்னை புரட்சிக் கவிஞர் கலை இலக்கிய மன்றத் தோழர் கவிஞர் காவிரிநாடன் நன்றி கூறிட, இரவு 9.20 மணிக்குச் சிறப்புக் கூட்டம் முடிவுற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற அனைவர்க்கும் தில்லித் தமிழ்ச் சங்கச் செயலாளர் தோழர் இரா. முகுந்தன் சிறப்பான விருந்து அளித்தார்.

Pin It