இருளினில் கிடந்த நாடு
 இருபதாம் நூற்றாண் டில்தான்
கருதிய சுதந்த ரத்தைக்
 காந்தியால் பெற்ற தைப்போல்
மணிப்பிர வாளச் சேற்றில்
 மயங்கிய தமிழின் போக்கைத்
தனித்தமிழ் மறைம லைபோல்
 தடுத்தவர் தமிழர் மு.வ.!
ஆங்கில மோகம் ஏறி
 அரைகுறை தெரிந்து கொண்டு
தீங்குடை ‘இசங்கள்’ பேசித்
 திண்ணையில் முற்றந் தன்னில்
தான்எனும் அகந்தை யோடு
 தருக்குவோர் நடுவே நல்ல
தேன்தமிழ் நடையில் யாவும்
 தெளிவுறக் கொடுத்தார் மு.வ.!
கட்டுரை கவிதை நாவல்
 கவினுரை பயணம் கூத்து
மட்டிலா இலக்கி யங்கள்
 மனங்கவர் கடிதம் ஆய்வு
அத்தனை துறைகள் தோறும்
 அளவிலா நூல்கள் தந்தார்
இத்தனை செயல்கள் செய்தும்
 எளிமையாய் அடங்கி நின்றார்!
தம்பிக்கு தங்கைக்கு மற்றும்
 நண்பர்க்கு அன்னைக் கென்று
நம்பிக்கை வைத்து அன்னார்
 தீட்டிய மடல்கள் தம்மை
நம்மக்கள் படிக்கச் செய்தால்
 நற்பண்பு வளரும் நாளும்
நம்குறள் நெறியின் மாண்பு
 நம்மிடம் பெருகும் மேலும்.
‘யான்கண்ட இலங்கை’ என்னும்
 எழில்மிகு பயண நூலை
‘ஏன்அன்று செய்தோம்!’ என்று
 இன்றவர் இருந்தால் நோவார்
போரிலே மக்களைக் கொன்ற
 பொல்லாத இலங்கை தன்னைக்
காறியே துப்பித் துப்பிக்
 கண்டனம் செய்வார்! ஆமாம்.

Pin It