நீண்டகால வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களான ஒவ்வொரு மொழி இனத்தாரும், மரபினத்தாரும்; மதத்தினரும், பிராந்தியத்தினரும் அல்லது நாட்டினரும் தங்கள் தங்களின் பெருமைக்குரிய பழைய வரலாற்றினை அறிவதும்; அவற்றிலுள்ள சிறப்பான கூறுகளைக் காப்பாற்றிடவும், தூக்கிப் பிடிக்கவும், நிலைநாட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுவதும் இயல்பானவை.

பழங்குடிகளும், நாடோடிகளும் கூட இவ்வழிப்பட்ட அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்ளப் பாடுபடு கிறார்கள்.

மொழியால் தமிழராகவும், மரபினத்தால் திராவிடராகவும், நாட்டினத்தால் தமிழ் நாட்டினராகவும் உள்ள நம் தமிழ்ப் பெருங்கூட்டத்தார் - மதத்தால் தமிழர்களாகவும் இல்லை; திராவிடர்களாகவும் இல்லை. நாம் எல்லோரும் மதத்தால் - சமுதாய வாழ்க்கையிலும், வீட்டு வாழ்க்கையிலும், சமய வாழ்க்கையிலும் கி.பி.3ஆம் நூற் றாண்டுக்குப் பிறகும், 8ஆம் நூற்றாண்டுக்குப் பிறகும் நல்ல இந்துக்களாக - பிராமண மதத்தினராக - வருண சாதியையும், உள்சாதிகளையும் ஏற்றுக்கொண்ட வர்களாக வாழ்ந்து வருகிறோம்.

கி.பி.200 முதல் 1300 வரை நம் தமிழரசர்கள் இந்தச் சாதியக் கட்டமைப்பை நன்றாகவே காப்பாற்றினார்கள். எனவே தமிழகத்திலும் கேரளத்திலும் சாதியப் பண்பாடு கெட்டியாகிவிட்டது.

வடநாட்டில் கி.பி.710க்குப்பிறகு, ஏதோ ஒரு வடிவில் முகலாயர் ஆட்சியே இருந்தது. அங்கும் பார்ப்பனர்கள் பெருஞ்செல்வாக்கோடும், இரசபுத்திரர்கள் இஸ்லாமியருக்கு நன்றியோடும் இருந்து, கி.பி.1750 வரை இஸ்லாமியருக்கு அடங்கிக் கிடந்தனர். பார்ப்பன மதம் அங்கும் எப்போதும் பாதுகாப்பாகவே இருந்தது.

தென்னாட்டில் தெலுங்கு நாயக்கர்கள், மராட்டியர்கள், நவாபுகள் ஆட்சிகள் கி.பி.1800 வரையில் நீடித்தன. அவ்வாட்சிகளிலும் பார்ப்பன மதம் கெட்டியாகவே இருந்தது.

கி.பி.1801 முதல் ஒற்றை ஆட்சியாக பிரிட்டிஷாரின் கிழக்கிந்தியக் குழும ஆட்சியும், 1857க்குப் பிறகு பிரிட்டானியப் பேரரசின் அடக்குமுறை ஆட்சியும் தென்னாட்டில் நிலை பெற்றன. பார்ப்பன மதத்துக்கும், இஸ்லாமிய மதத்துக்கும், பழைய பழக்க வழக்கங்களுக்கும் பிரிட்டிஷ் பேரரசு முழுப் பாதுகாப்புத் தந்தது.

எனவே தான் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் மொழிவழி நாட்டின உணர்வு, இனவழி நாட்டின உணர்வு, பண்பாட்டு வழி நாட்டு உணர்வு வீறுகொண்டு எழ முடியாமல் சாதியம் தடுத்துக் கொண்டிருந்தது. இன்றும் தடுத்துக் கொண்டுள்ளது.

இந்த நிலைமைகளுக்கு ஊடே, சமயக் கோட்பாட்டில் ஊறிய வடலூர் வள்ளலார், 1865க்குப் பிறகு வேத, ஆகம, சாத்திர, கோத்திரச் சூதுகளை முதன்முதலாக எதிர்த்தார். 1873-1890ஆம் ஆண்டுகளில் புனேவில் மகாத்மா புலேவும், தமிழ கத்தில் அத்திப்பாக்கம் அ. வெங்கடாசல நாயகரும் இந்து வருணாசிரம - மவுடீக - மூட - பெண்ணடி மைத்தனங்கள் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் ஒரு சேர வன்மையாக எதிர்த்தார்கள்.

இவர்களை அடுத்து 1907 முதல், பிராமண மதத்தைத் தோலுரித்தவர் பண்டிதர் அயோத்திதாசர்.

இவர்களை அடுத்து 1912 முதல் சி. நடேச முதலியார், டாக்டர் டி.எம்.நாயகர், சர்.பி. தியாகராயர் போன்றோர் மத - சாதி ஆதிக்கத்தை அதிகம் கண்டு கொள்ளாமல் - அரசு தரும் கல்வி, அரசு தரும் வேலை கள், பதவிகள் இத்துறைகளில் பார்ப்பனர் பெற்றிருந்த பேராதிக்கத்தை எதிர்த்து - பார்ப்பனரைத் தவிர்த்த எல்லா வகுப்பு மக்களுக்கும் இத்துறைகளில் ஓரளவு பங்கு கிடைத்திடத் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டனர். தங்கள் தங்கள் குடும்பச் சொத்துக் களையும் நேரத்தையும் உழைப்பையும் அறிவுத் திறமையையும் தென்னிந்தியரின் - திராவிடரின் நலனுக்கு முழுவதுமாக ஈந்தனர். பார்ப்பனரின் ஆதிக்கம், இந்தியாவில், முதன்முதலாக இவர்கள் காலத்தில்தான் அடிவாங்கியது. திராவிடர் இயக்கத்தின் பெரிய சாதனை இது.

ஆயினும் இவ்வியக்கத்தார் பார்ப்பன மதத்தை - புரோகிதத்தை - சமஸ்கிருத ஆதிக்கத்தை சமுதாய - சமயத்துறைகளிலிருந்து அகற்றிடத் திட்டமிடவில்லை.

இவர்கள் விட்டுவிட்ட அந்த இன்றியமையாத பணி யைத்தான் - அந்த ஒரு பணியை முன்வைத்துத்தான் - ஈ.வெ.ரா, “பார்ப்பனர் அல்லாதார் சுயமரியாதை இயக்கம்” என்பதை, மேலே கண்ட அதே இயக்கத் தலைவர் களின் பேராதரவுடன், 26.12.1926இல், மதுரையில் நிறுவினார்.

1927 வரையில் ஈ.வெ.ரா. காந்தியக் கொள்கையாளர்; அவரைப் போற்றியவர்; கதரைப் போற்றி வளர்த்தவர்.

காங்கிரசில் இருந்த காலத்தில், 1922இல், ஈரோட்டில், தானே முன்னின்று, இந்திமொழி கற்பிக்கும் வகுப்பை, மோதிலால் நேருவைக் கொண்டு தொடங்கியவர்.

காங்கிரசுக்காரரான சி. இராசகோபாலாச்சாரியார் 1937இல் சென்னை மாகாண முதலமைச்சராக வந்த வுடனே, மற்ற எந்த மாகாணத்திலும் செய்யப்படாத தீய செயலை - இந்தியை 6ஆம் வகுப்பு முதல் கட்டாயப் பாடமாக ஆக்கினார். அதை எதிர்த்து, 1938இல் வீறு கொண்டு எழுந்த “இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில்” தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர், ஈ.வெ.ரா.

1947இல் வெள்ளையன் வெளியேறுவதற்கு முன் னரே, 9.12.1946 முதலே இந்திய அரசமைப்புச் சட்டத்தை எழுதுவதை, நேரு அரசு தொடங்கியது. அதை அன்று முதலே கண்டனம் செய்தவர், பெரியார் ஈ.வெ.ரா. மட்டுமே.

அந்தச் சட்டத்தின், 343 விதியில், பிரிவு (1)இல் என்ன எழுதப்பட்டது?

“இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழியாக, தேவ நாகரி வரி வடிவிலான இந்தி மொழியே இருக்கும்” என எழுதப்பட்டது.

விதி 343(2)இல், “மேலே பிரிவு (1)இல் எது சொல் லப்பட்டிருந்தாலும், இந்தச் சட்டம் நடப்புக்கு வந்ததி லிருந்து 15 ஆண்டுக்காலத்துக்கு இந்திய ஒன்றியத்தின் அலுவல் பணிகள் எல்லாவற்றுக்கும் ஆங்கிலம் அலுவல் மொழியாகத் தொடர்ந்து இருக்கும்” எனக் கூறியது.

இவ்விதிகளின் நோக்கம் என்ன?

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கண்டபடி, 1965க்குப் பிறகு, இந்தி மொழி மட்டுமே இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழியாக இருக்கும் என்பதை உறுதி செய்வதே இவ்விதிகளின் நோக்கம்.

இவ்விதிகள் எழுதப்பட்டுக் கொண்டிருந்தபோதே - கேடு வருமுன் தடுக்கிற நோக்கத்துடன், 1948இல், சென்னையில், மறைமலை அடிகள் தலைமையில், “இந்தி எதிர்ப்பு மாநாட்டை”க் கூட்டினார், பெரியார்.

அம்மாநாட்டுத் தீர்மானப்படி, 1948இல், குடந்தை மாநகரில், அறிஞர் சி.என். அண்ணாதுரை தலைமை யில், மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கினார். அப்போராட்டத்தில் ஈடுபட்ட ஆடவரும் மகளிரும் காவல்துறையால் துவைத்தெடுக்கப்பட்டனர்.

1952, 1953, 1954ஆம் ஆண்டுகளில், தொடர் வண்டி நிலையப் பெயர்ப் பலகைகளிலிருந்த இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தை நடத்தினார், பெரியார்.

1955இல் இந்தியை எதிர்த்து, இந்தியத் தேசியக் கொடியை எரிக்கும் போராட்டத்தை அறிவித்தார். இப்போராட்டத்தின் பயன் என்ன? தமிழ்நாட்டு உயர் நிலைப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடம் என்பது ஒழிந்தது; விருப்பப்பாடம் என ஆனது. இது காமராசரால் நிறைவேறியது.

இப்போராட்டங்களில் நானும் பங்கேற்றேன்.

ஆனால், “இந்தியே, இந்தியாவின் அலுவல் மொழி” என்பதை இவை தடுத்தனவா? இல்லை.

இதற்கிடையில், 1957இல், தி.மு.க. தேர்தலில் ஈடு பட்டது. ஈ.வெ.கி. சம்பத், தருமலிங்கம் ஆகிய இருவர் மக்களவை உறுப்பினர்கள் ஆயினர்.

இவர்களின் முயற்சியால், இந்திய அலுவல் மொழிச் சட்டம் என்று ஒன்றை நிறைவேற்றி, “இந்திமொழி பேசாத மக்கள் விரும்புகிற வரையில், ஆங்கிலம் இணை அலுவல் மொழியாக நீடிக்கும்” என்று உறுதி கூறும் சட்டத்தை நேரு நிறைவேற்றி னார்.

ஆனால், விதிகள் 343(1), (2) இவற்றில் சொல்லப் பட்டிருக்கிறபடி “இந்தி மொழியே இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழி” என்பதை இந்தச் சட்டமும் தடுத்து நிறுத்த முடியாது. இது இன்றும் உண்மை.

எனவேதான், “இந்தி மொழிதான் இந்தியாவின் ஆட்சி மொழி” என்கிற சட்ட ஏற்பாட்டை எதிர்த்துத் தமிழ் நாட்டு மாணவர் உலகம், வரலாறு காணாத மாபெரும் போராட்டத்தைத் தமிழகமெங்கும் 1965இல் நடத்தியது. தி.மு.க. அப்போராட்டத்துக்குப் பெரும் பங்கு அளித்தது; முன்னின்று நடத்தியது. தமிழகமே கொந்தளித்தது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் இராசேந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டார்; அவர் இன்று சிலையாக நிற்கிறார். எண்ணற்ற மாணவர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர்.

அன்று மாணவர்களாக விளங்கிய எஸ்.டி. சோம சுந்தரம், செஞ்சி ந. இராமச்சந்திரன், உரத்த நாடு ம. நடராசன், எல். கணேசன்; வை. கோபாலசாமி (வைகோ) இரவிச்சந்திரன், நாவளவன், பெ.சீனிவாசன், நா.காம ராசன், கா.காளிமுத்து போன்ற நூற்றுக்கணக்கானோர் மாணவப் பட்டாளத்தை வழிநடத்தினர்.

1965இலேயே இந்தி மட்டுமே இந்தியாவின் அலுவல் மொழி ஆவதை மாணவர்கள் தடுத்து நிறுத்தினர்.

அத்தகைய வெற்றியை ஈட்டிய - மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத்தான், “காலித் தனமான போராட்டம் - கல்லெறிகிற போராட்டம் - ஆங்கிலம் பேசத் தெரியாதவர்கள் நடத்திய போராட்டம் என, ஒரு கேலிச் சித்திரப் படத்தில் குறிப்பிட்டு, அது சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தின் கீழ், “அரசியல் அறிவியல்” என்கிற பாடப் பகுதியில் 8ஆவது (ருnவை ஏஐஐஐ) உட்பிரிவில், பக்கம் 153இல் இந்திய அரசினரால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் கேலிப்படம் என்ன சொல்லுகிறது?

உறுதிமொழிகள்

“இந்தி இல்லை; ஆங்கிலம் தொடரும்.

இந்தியைப் படிப்பது கட்டாயமன்று”

- முதலமைச்சர் பக்தவத்சலம்

“இந்தி ஒரு போதும் வேண்டாம்;

ஆங்கிலம் எப்போதும் வேண்டும்”

- சி. இராசகோபாலாச்சாரியார்

இதில் மாணவர்களையோ, போராட்டத்தையோ இழிவுபடுத்துவது எங்கே இருக்கிறது? இல்லை. ஆனால் வேறு வடிவத்தில், இழிவு இருக்கிறது. அது என்ன?

இதோ பாருங்கள்!

மாணவனின் முதுகில், “மாணவர் போராட்டம்” என்று எழுதப்பட்டுள்ளது.

மாணவன் வலது கையால் கற்களையும் ஆயுதங் களையும் எடுக்கக் குனிவது போலவும்; இடது கையில் எறிகுண்டு வைத்திருப்பது போலவும் சித்திரிக்கப் பட்டுள்ளது.

இது எதைக்காட்டுகின்றது? தமிழக மாணவர்கள் காலித்தனம் - கல்லெறி - குண்டெறி செய்தார்கள் - அதுதான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தன்மை என்று படம் பிடித்துக் காட்டுகிறது. இது பொய்; முழுப் பொய். எனவே, அன்றைய தமிழக மாணவர்களைக் காலிகள் - கலவரக்காரர்கள் என்று இன்றைக்குப் படிக்கும் எல்லா மாணவர்களும் நம்பிவிட, இது வழிகோலி விட்டது.

அதைவிடப் பெருங்கேடாக இருப்பது என்ன?

“இந்தியை எதிர்க்கிற மாணவனுக்கு ஆங்கிலத்திலும் பேசத் தெரியாது” என்று இப்படத்தின் மேல் பகுதியில் வரையப்பட்டுள்ளது.

அதாவது, தமிழக மாணவன் இந்தியையும் எதிர்க் கிறான்; ஆனால் அவனுக்கு ஆங்கிலமும் பேசத் தெரியாது என்று 1965இல் கேலிச்சித்திரம் எழுதியவன், தமிழ் நாட்டு மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசத் தெரியாத முட்டாள்கள் என்று 1965-ஆம் ஆண்டில் சித்திரித்து இருக்கிறான். இது, வேண்டுமென்றே, தமிழ்நாட்டு மாணவர்கள் மடயர்கள் என்று சொல்லப்படுகிற செய்தி அல்லவா?

1965-க்கு முன்னும், 1965-லும், 1965-க்குப் பிறகும் நீரோட்டமான நடையில் ஆங்கிலம் பேசத் தெரிந்த வர்கள் - இலக்கணப்படி ஆங்கிலத்தில் எழுதத் தெரிந்த வர்கள் தமிழர்களும், மலையாளிகளும், வங்காளத் தவர்களுமேயாவர்.

இந்த இழிவுத்தன்மையை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இந்தியும் அலுவல் மொழியாக இருக்கக் கூடாது; ஆங்கிலமும் அலுவல் மொழியாக இருக்கக் கூடாது; தமிழ்நாட்டில் உள்ள எல்லா நடுவண் அரசு அலுவலகங்களிலும் தமிழ் மட்டுமே அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டுத் தமிழர் களின் குறிக்கோளாகும். இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலத்தின் ஆட்சிமொழியே, அந்தந்த மாநில எல்லைக்குள் இருக்கிற நடுவண் அரசு அலுவலகங்களில் எப்போதும் அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்பது மிக மிக இன்றியமையாதது.

தமிழக மாணவத் தோழர்களே! மாணவத் தோழி யர்களே! பேராசிரியர்களே! ஆசிரியப் பெருமக்களே! தமிழ்ப் பெருமக்களே! தமிழகத்திலும் உலக நாடு களிலும் உள்ள தமிழர்களே!

இந்தி அலுவல் மொழியாக வருவதை எதிர்த்து இனியேனும் தமிழர்கள் ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என உறுதிகொள்ளுங்கள்!

இந்தியா முழுவதும் உள்ள இந்தி பேசாத எல்லா மாநிலங்களுக்கும் தமிழர்கள் சென்று, இந்திக்கு எதிர்ப்பான, இந்தி அலுவல் மொழியாவதற்கு எதிர்ப்பான உணர்வுகளைத் தட்டி எழுப்புவோம் வாருங்கள்!

இதற்கு முன்னோடியான நடவடிக்கையை முதன் மையான வேலைத் திட்டமாக வைத்து, 2012 மார்ச்சு 11 முதல் வடநாட்டில் இதைத் தொடங்கி வைத்திருக்கிற மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சிக்குத் துணைநிற்க முன்வாருங்கள் என அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

- வே.ஆனைமுத்து

Pin It