‘அண்ணா!’ என அன்பொழுக அழைத்தவரை இழந்தேன்!

“ஏண்ணே! நான் வந்த பிறகு தலைமை உரையைப் பேசியிருந்தா நானுங் கேட்டி ருப்பேன்ல...” என, ஆதங்கத்தோடும் உரிமை யோடும் என்னிடம் 11.5.2012 அன்று, விழுப்புரம் வேணுகோபாலசாமி நூற்றாண்டு விழாவில் உசாவினார், மறைந்த தன்மான மறவர் சேலம் வீரபாண்டி ஆறுமுகம்! ஏழே மாத இடைவெளியில் அவரை இழந்தோம்.

நானும் அவரும் கட்சி வேறுபாடு பாராமல், சில திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றினோம்.

நான், சேலம் அயோத்தியா பட்டணம், என் அக்காள் பெருமாயி வீட்டுக்கு ஆண்டுதோறும் செல்வேன். மாலை நேரத்தில் நடைப்பயிற்சி போவது சேலம் மாவட்டக் கூட்டுறவு வங்கிக்குத்தான். அதன் இயக்குனர்களாக விளங்கிய ‘சேலத்துப் பெரியார்’ பேளுக் குறிச்சி ஜி.பி. சோமசுந்தரம், நீர்முள்ளிக்குட்டை சாமி யப்பக் கவுண்டர் இருவரும் என் சுறுசுறுப்பால் கவரப் பட்டவர்கள்.

1973-1976இல் அதே சேலம் மாவட்டக் கூட்டுறவு வங்கித் தலைவராக விளங்கினார், வீரபாண்டி ஆறுமுகம். அப்போது முதல் அவரை நன்கு அறிவேன்.

அவர் 1962இல் பூலாவாரி ஊராட்சித் தலைவ ராகவும், வீரபாண்டி ஒன்றியத் தலைவராகவும், தமிழகச் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். தொடர்ந்து ஆறு தடவை சட்டமன்ற உறுப்பினர்; ஒரு தடவை மேலவை உறுப்பினர்; மூன்று முறை தமிழக அமைச்சர்.

பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளின் முதன்மை பற்றி, அவர் பங்கேற்கும் ஒவ்வொரு திருமணத்திலும் ஆணித்தரமாக உரையாற்றுவார். செஞ்சி ந. இராமச்சந்திரன் வீட்டுத் திருமணத்தில் அவர் ஆற்றிய உரை அவருடைய கொள்கைப் பிடிப்பை நன்கு விளங்கியது. அவர் அமைச்சராக இருந்தபோதும், இல்லாத போதும், மருத்துவமனையிலிருந்தபோதும் அவரைக் கண்டு அளவளாவுவதை நான் வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

அவர் 1973-76இல் மாவட்ட வங்கியில், எல்லாச் சமூகங்களையும் சேர்ந்த 300 பேருக்கு வேலைகளை அளித்தார். அவர் அரசியலில் மிளிர அதுவே அடித்தள மாக விளங்கியது. மாவட்ட வங்கிச் செயலாளர் திருவாரூர் இராமலிங்கம் 1973இல் திடுமென மறைந்தபோது, அவருடைய குடும்பத்துக்கு இவரே முன்னின்று நிதி திரட்டி அளித்தார்.

தோழர்கள் சேலம் எம். இராஜூ, சங்கமித்ரா, சேலம் செ. ஆனையப்பன் ஆகியோரும் நானும் அவரிடம் இடஒதுக்கீடு பற்றிக் கலந்துரையாடுவதைப் பழக்க மாகக் கொண்டோம்.

சேலம் கல்வியில் பின்தங்கிய பகுதி. அங்கு, ‘பெரியார் பல்கலைக்கழகம்’ நிறுவப் பட அவரே காரணம். அதுபற்றி அவர் எங்களிடம் பல தடவைகள் கலந்துரையாடினார்.

அண்மையில், இடையில், தீயவர்கள் சிலரின் முரட்டுத்தன நடவடிக்கைகளால், இவர் பேரில் பல பொய்யான வழக்குகள் தொடுக்கப்பட்டன. உடல்நலம் கெட்டிருந்த இவர் சிறைப்படுத்தப்பட்டதால், மேலும் உடல்நொந்து 24.11.2012 அன்று சென்னையில் மறைவுற்றார் என்பதை, உடன என் துணைவியார் தான் எனக்கு அறிவித்தார்.

25.11.2012 காலை 9.30 மணிக்கு, நானும் சேலம் செ. ஆனையப்பன் மற்றும் இரு தோழர்களும் பூலாவாரி அவர்தம் இல்லத்தில் அன்னாரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினோம்.

சேலம் மாவட்ட அரசியலில், வீரபாண்டி ஆறுமுகம் பெற்றிருந்த செல்வாக்குக்கு இணையாக இன்னொரு வர் வருவது அரிது. அவர் பழைய சுயமரியாதைத் தலைமுறையைச் சார்ந்தவர்; வீரம் மிக்கவர்; கொள்கையாளர்.

அன்னாரின் குடும்பத்தார்க்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர்க்கும் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறேன்.

வளர்க வீரபாண்டியார் புகழ்!

உழைப்பே உருவானவர், ஊரார்க்கு உற்றுழி உதவியவர் வேலூர் கு. சிவபாதம்! வாழ்க அவர் புகழ்!

வேலூர் காட்பாடியில் பெயர் பெற்ற சித்த வைத்தியராக விளங்கி யவர் குப்புசாமி முதலியார்.
 
அன்னாரின் இரண்டாவது மகன் கு. சிவபாதம் 20.11.2012 அன்று மறைவுற்றார் என்ற செய்தியை வேலூர் தோழர்கள் அறிவித்ததைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

கடந்த ஓராண்டுக்கு மேலாக உடல்நலக் குறை வுக்கு ஆளான அன்னாரை, நானும் வேலூர் தோழர் களும் 2.5.2012 அன்று நேரில் பார்த்து நலம் உசாவி னோம். “இப்போது 84 வயது நடக்கிறது; நான் 90 வயது வரை இருப்பேன்” எனத் தன்னம்பிக்கையோடு, மகிழ்ச்சி பொங்கக் கூறினார். அந்தோ! இன்று அன்னார் இல்லை.

நான் 1989 முதல் 23 ஆண்டுகளாக அன்னாரை நன்றாக அறிவேன்.

அவர், தந்தை பெரியாரின் தன்மானக் கொள்கை களில் பெரும் பற்றுக்கொண்டவர்; அக்கொள்கையைப் பரப்புகிற எல்லோருக்கும் உதவியவர்; எந்தக் கட்சி யிலும் இயக்கத்திலும் தம்மை இணைத்துக் கொள்ளாதவர்; விருந்தோம்பலில் அவரும் அவர்தம் துணை வியார் இராஜேசுவரி அம்மையாரும் எல்லோருக்கும் எடுத்துக்காட்டானவர்கள்.

தம் வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கு இலவசமாக நல்ல தேனும், நெல்லிக் காய்த்தூளும், தேவைப்பட்ட சித்தமருந்துகளும் இலவசமாக அளிப்பவர்.

தமக்குச் சொந்தமான நெல் அரைவை ஆலையில் தவிடு, தூசு இவற்றுக்கிடையே தாமே ஒரு வேலை யாளாக இருந்து, கடமையாற்றி, அதனால் தான் நோய்வாய்ப்பட்டார்.

வேலூரைச் சுற்றியுள்ள 80 ஊர்களுக்கு, ஊர்த் தகராறுகளைத் தீர்த்து வைக்கிற பெரிய நாட்டாண்மைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர்.

ஒரு பத்துப் பதினைந்து ஊர்களில், தம்மைப் போல், நெல் அரைவை ஆலை உரிமையாளர்களாகத் தம் நண்பர்களை உருவாக்கியவர்; அவர்களுக்கு வேண்டிய முதலீடு தந்து, வட்டியின்றிச் சிறிது சிறிதாகப் பெற்றவர்.

என்பால் பெருமதிப்பும் பேரன்பும் கொண்டவர். சென்னைக்கு வரும்போதெல்லாம், நேரில் வந்து, “சிந்தனையாளன்” இதழுக்கு நிதி அளிப்பவர்.

1993இல் “பெரியார் ஈ.வெ. இராமசாமி - நாகம்மை கல்வி அறக்கட்டளை”யைத் தொடங்கினோம். அறக் கட்டளைக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவில், மகிழ்ச்சி யோடு ரூ.10,000 நன்கொடை அளித்தார்; 2012இல், அவர் மறைவதற்குமுன் மேற்கொண்டு ரூ.65,000 அளித்து ஊக்கம் தந்தார்.

ஊரார்க்கெல்லாம் உற்றுழி உதவிய அப்பெருமக னாரின் மறைவு வேலூர் மாவட்டத் தமிழர்க்குப் பேரிழப்பாகும். வேலூர் மாவட்டப் பெரியார் சுயமரி யாதைக் கொள்கைத் தொண்டர்கள் தங்களின் மூத்த வழிகாட்டியை இழந்துவிட்டனர்.

அம்மா இராஜேசுவரி அவர்களும், மகள்கள் சாந்தி, வாணி; மகன்கள் குமரன், அகிலன்; தம்பியர் மோகன், சொக்கலிங்கம், உடன்பிறந்த விட்டோபாய், அனுசுயா ஆகியோரும் தம் குடும்பத் தலைவரை இழந்து துயருறுகின்றனர். இவர்கள் அனைவர்க்கும் மனங் கசிந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.

நானும், என் குடும்பத்தினரும், கட்சித் தோழர் களும் ஈடு இணையற்ற கொள்கைக் குன்றத்தை - பண்பும் அன்பும் நிறைந்த தோழர் சிவபாதம் அவர் களை இழந்து மனம் கவலுகிறோம்.

வாழ்க கு. சிவபாதம் புகழ்!

தென்மொழி ஆசிரியர், திருக்குறள் மணி புலவர். இறைக்குருவனார் மறைந்தார்

தனித்தமிழ் இயக்கத்தின் தகைசான்ற புலவர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் குடும்பத்தின் மூத்த மருமகனார், அன்னரின் பைந்தமிழ்க் கொள்கை களைத் தாங்கி நடந்த திருமகனார் திருக்குறள் மணி இறைக்குருவனார் 23.11.2012 அன்று தம் 70ஆம் அகவையில், திடுமென நேரிட்ட நெஞ்சுவலியால் மறைவுற்றார். 2.4.1942இல் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த கீவாமங்கலத்தில் பிறந்த இறைக்குருவனார் அண்ணாமலைப் பல்கலைக்கழ கத்தில் புலவர் பட்டம் முடித்தார். கல்வி பயிலுங் காலத்திலேயே கட்டாய இந்தி நுழைவை எதிர்த்துப் போராட்டக்களங் கண்டார். அன்று தொடங்கிய அவ ரின் தமிழின மீட்புப் போராட்ட வாழ்வு அன்னாரின் இறுதிக்காலம் வரை தொடர்ந்தது.

திருக்குறளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். மாணவப் பருவத்தி லேயே முழுநூலையும் மனப்பாடம் செய்தவர். கழகப் புலவராய் விளங்கிய பெருந்தகை. தமிழ்வழிக் கல்விப் பரப்புரைக்காகப் புலவர் கி.த.பச்சையப்பனார் போன்றவர்களோடு இணைந்து தமிழகம் முழுவதும் சோர்வின்றிச் சுழன்றவர். பாவலரேறு மறைவுக்குப் பின் தென்மொழி இதழாசிரியர் பொறுப்பேற்றுச் செம் மையாய் நடத்திவந்தவர். செந்தமிழ்ச் சொற்பிறப் பியல் அகரமுதலி நூலாக்கப் பணியில் பாவாணருடன் இணைந்து பணியாற்றியவர். பன்னூல் ஆசிரியர். அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டவுடன் தமிழன வுணர்வாளர்கள் திரண்டு வந்து மேடவாக்கம் தமிழ்க் களத்தில் இறுதி அஞ்சலி செலுத்தினர். மா.பெ.பொ.க. சார்பில் இரா.பச்சமலை, தமிழேந்தி, கோவிராமலிங்கம், வாலாசா வல்லவன், வடிவேலு பங்கேற்றனர். ஈடு செய்ய இயலாத அன்னாரின் இழப்புக்கு வருந்து வதுடன் அவர்தம் அன்புத் துணைவியார் இறைப் பொற்கொடி மற்றும் மக்கட்கு மா.பெ.பொ.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.

- வே.ஆனைமுத்து

Pin It