மிளகு நல்ல காரமாம்
மிளகாய் அதுபோல் காரமாம்
அளவாய்க் குழம்பில் சேர்த்திடில்
அமுதம் போலச் சுவைக்குமாம்
புளியம் பழம் புளிக்குமாம்
சாலை யோரம் கிடைக்குமாம்
புளி கரைத்துத் தாளித்தால்
வாசம் மூக்கைத்  துளைக்குமாம்
உப்பு நன்றாய்க் கரிக்குமாம்
கடல் நீரில் கிடைக்குமாம்
உப்பு  இட்ட பண்டத்தை
உவந்து மக்கள் உண்பராம்
வாழைப் பூவோ துவர்க்குமாம்
நோய் பலவும் நீக்குமாம்
இரும்புச்  சத்து நிறைந்ததாம்
யாரும் விரும்பி உண்பராம்
கழனிக் காட்டில் விளையுமாம்
கரும்பு தேனாய் இனிக்குமாம்
கருப்பஞ் சாற்றைக் காய்ச்சியே
கட்டி வெல்லம் செய்வராம்
பாகற் காயோ கசக்குமாம்
குடற் புழுவைப் போக்குமாம்
பந்தல் இட்டு வளர்ப்பராம்
பறித்துக்  குழம்பு வைப்பராம்
அறுசுவை உணவை உண்டிடலாம்!
அகிலம் சிறக்க வாழ்ந்திடலாம்!
Pin It