சிறுவர் பாடல்

ஒப்பில் லாத விடுதலைக் கான

ஒளிவிளக் கானார் வ.உ.சி.

கப்பல் ஓட்டித் தமிழர் நெஞ்சில்

காவிய மானார் வ.உ.சி.

வெள்ளைக் கொக்கை விரட்டி விரட்டி

வேட்டை ஆடிய மாவீரர்

கொள்ளைக் கார ஆங்கி லேயனின்

குமட்டில் குத்திய தமிழ்த்தீரர்

செக்கை இழுத்தார் கல்லை உடைத்தார்

சிறையில் துன்பம் பலபட்டார்

மக்கள் துயரைத் தீர்ப்ப தற்கே

மாட்டைப் போல வதைபட்டார்

“எங்கள் செல்வம் சுரண்டு வாயோ

ஏடா நாயே சீ”.... என்றார்

பொங்கும் மாக்கடல் போலச் சீறிப்

“பொல்லாப் பகையே! போ” என்றார்

சிதம்ப ரத்தின் ஒவ்வொரு பேச்சும்

தேள்கடி யானது வெள்ளையர்க்கு

விதந்து கேட்ட மக்கள் எழுச்சி

வினையாய் முடிந்தது கொள்ளையர்க்கு

தனிமரம் ஆனார் இறுதியில் சொத்துகள்

தம்மை யெல்லாம் தான்விற்றார்

இனிய குடும்பம் வறுமையில் வாட

ஏதிலி போலத் தான்செத்தார்

வங்கக் கடலும் விரிந்த வானும்

வ.உ.சி.யின் பேர்வாழ்த்தும்

சிங்கத் தமிழன் சிதம்பரம் என்றே

சீற்றலை எல்லாம் தலைதாழ்த்தும்

விடுதலை வீரர் சிந்திய வியர்வை

வீணாய்ப் போகக் கூடாது

கெடுதலை எல்லாம் சாயும் வரையில்

மக்களின் போர் ஓயாது!

(செப்டம்பர் 5, வ,உ,சி. பிறந்தநாள்)
Pin It