இந்திய அரசியல் தலைவர்களில் எவருக்குமில்லாத தனித்தன்மைகள் வாய்ந்தவர் டாக்டர் அம்பேத்கர். மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று எப்படியாவது பதவிக்கு வந்துவிட வேண்டுமென எண்ணியவரல்லர் அவர். தம்மின மக்களின் உரிமைக்காகவும், அவர்கள் மீது படிந்திருக்கும் சமூக இழிவுகளைப் போக்கவும், கொண்ட பதவியைக் கூடத் தூக்கி எறிந்து துறவு நிலைக்கும் துணிந்தவர். அறிவு நாணயமும், அரசியல் நாணயமும் மிக்க கண்ணியமான மனிதர். ‘தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் தலைவன்’ என்ற ஒரே காரணத்திற்காகவே போதுமான வெளிச்சமின்றிப் புறக்கணிக்கப்பட்டவர்; புண்படுத்தப்பட்டவர்.

அண்மையில் அவரது வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் “டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்” என்னும் திரைப்படம் தமிழில் வெளிவந்து ஓடியது. ஓடி விட்டது.

1998ஆம் ஆண்டு தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் உருவாக்கிய இப்படம் இந்தியாவில் ஒரு சில மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 2000-இல் வெளிவந்தது. ஆனாலும் தமிழில் வரவில்லை. 2002இல் தான் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. பத்தாண்டுகளுக்குள் எல்லா மொழிகளிலும் வெளியிடும் உரிமையை “பாக்யஸ்ரீ பிக்சர்ஸ்” என்ற மும்பை நிறுவனம் பெற்றிருந்தது. ஆனாலும் அது தமிழில் வெளியிடப்படவில்லை. அந் நிறுவனத்திடமிருந்து ‘விஸ்வாஸ் புரொடக்ஷன்’ என்ற நிறுவனம் 2006இல் வெளியிடும் உரிமையைப் பெற்றது. அதுவும் இப்படத்தைத் தமிழில் வெளியிடவில்லை. 2010 ஆம் ஆண்டோடு அவர்களது உரிமை முடிந்து விடவே, மீண்டும் இப் படத்தை வெளியிடும் உரிமை தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்திற்கே சென்றுவிட்டது. பிறகு தமிழ்நாட்டின் திரைப்படத் தொகுப்பாளர் லெனின் அவர்களின் தீவிர முயற்சியாலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் ஆதரவாலும்தான் இப்படம் முப்பது திரையரங்குகளில் திரையிடப்பட்டு ஓடியது.

ஓர் ஒப்பற்ற தலைவரின் வாழ்க்கை வரலாற்றை எந்த அளவு நேர்த்தியாகச் செய்ய முடியுமோ அந்த அளவுக்குச் செய்திருக்கிறார் இப்படத்தை இயக்கிய ஜாபர் பட்டீல். ஒரு ஆவணப் படம்போல் அல்லாமல் மிகச்சிறந்த ஒரு கலைப்படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. 1998ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் இப்படம் பெற்றுள்ளது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களுள் ஒருவரான மம்முட்டி இதில் அம்பேத்கராகவே வாழ்ந்து காட்டியுள்ளார். ஒவ்வொரு காட்சி அமைப்பும் மிகுந்த கலை நுணுக்கத்துடன் கையாளப்பட்டுள்ளது. திரைக்கதை, வசனம், மொழி மாற்றம், கலை அமைப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என எல்லாக் கூறுகளுமே சரிநிகராகக் கைகோத்துப் படத்தின் மேன்மைக்கு மெருகேற்றியுள்ளது. காந்தி, நேரு, பட்டேல், ஜின்னா போன்ற பல்வேறு தலைவர்களின் கதைப் பாத்திரங்களும் நடிகர் தேர்வும் நேர்த்தியாகச் செய்யப்பட்டுள்ளன. இந்தியத் திரைப்படத் துறையில் ஈடுபட்டிருக்கும் எல்லாத் துறைகளைச் சார்ந்த கலைஞர்களுக்கும் இப்படத்தை ஒரு பாடமாகவே வைக்கலாம். அந்த அளவிற்கு இதில் அமைந்துள்ள சிறப்புகள் ஏராளம்.

அம்பேத்கரைத் தன் தலைவராக ஏற்றுக் கொள்ளாத பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் கூட இப்படத்தைப் பார்ப்பார்களேயானால் அவர்கள் மனத்தில் அம்பேத்கரின் மீதான ஒரு செல்வாக்குத் தோன்றும். அவரது உழைப்பின், போராட்டத்தின் நியாயம் விளங்கும். உண்ணா நோன்புத் திரைக்குள்ளே ஒளிந்திருந்த காந்தியின் களங்கம் புரியும். இந்து மதம் தன் மக்களுள் ஒரு பகுதியை இன்று வரை வாசலுக்கு வெளியே நிறுத்தி எப்படி வல்லாண்மை செய்து வருகிறது என்பதும் புரியும். காந்தியின் கைத்தடியைப் போலவே காந்தியும் முதலாளியத்தின் கைத்தடியாக விளங்கியது விளங்கும். வருணாசிரம தர்மத்தின் ஆதரவாளராகக் காந்தி பேசும் பேச்சுகள் பார்ப்பனியத்தின்மீது வர வேண்டிய சினத்தை அவர் மீதே திருப்பிக் கொண்டு தன்னை ஒரு சனாதனக் கேடயமாக மாற்றிக் கொண்டதை உணர வைக்கும். சௌதார் குளப் போராட்டம், ஆலய நுழைவுப் போராட்டம், புத்த மதத்திற்கு மாற்றம் போன்ற நிகழ்வுகளின் நீரோட்டம் புரியும்.

ஒரு மாபெரும் தலைவரின் வாழ்க்கை வரலாற்றை மூன்று மணிநேரக் காட்சிகளுக்குள் முடித்துக் கொள்வது என்பது கடினமானதுதான் என்றாலும், ‘ஒரு திரைப்படம்’ என்ற தன்மையில் இது வெற்றிகரமான படம். ஆனாலும் திரைப்படம் வெற்றிபெற வைக்கப்படவில்லை. இப்படத்தை இளைஞர்களோ, கல்லூரி மாணவர்களோ திரண்டு சென்று பார்க்கவில்லை. அரசியல்வாதிகளோ, வழக்கறிஞர்களோ, பொதுமக்களோ குடும்பம் குடும்பமாகச் சென்று பார்க்கவில்லை. ஓரளவு இயக்கம் சார்ந்த உணர்வாளர்கள் மட்டுமே சென்று பார்த்தனர். கல்வியிலும் வேலையிலும் வாய்ப்புப் பெற்று ஆயிரக்கணக்கில் சம்பளம் பெறும் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கூட இப்படத்தைப் பார்க்க முன்வராதது இட ஒதுக்கீட்டின் மீது விழுந்த பேரிடியாகும்.

ஒரு நாடு எவ்வளவு இழிவான பாதைக்குச் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு அந்நாட்டின் கலை, இலக்கியப் போக்கே போதுமான சான்றாகும். நம் நாட்டில் ‘திருக்குறளை’ விட, ‘அர்த்தமுள்ள இந்து மதத்திற்கே’ அதிக விற்பனை உள்ளது. அது போலவே நல்ல திரைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டுப் பெட்டிக்குள் அடைபட்டுக் கிடப்பதும், குடி, குத்துப்பாட்டு, கொள்ளை, கொலைப் படங்கள் வசூலை வாரிக் குவிப்பதும் எல்லோரும் அறிந்த ஒன்று. அதனால்தான் டாஸ்மாக் கடைகளுக்கும் அய்யப்ப சாமிக்கும் கிடைத்த வரவேற்பு அம்பேத்கருக்குக் கிடைக்கவில்லை. மக்களின் இரசனையைக் கெடுத்து அவர்களை மாக்களாகவும், வாக்கு மந்தைகளாகவும் மாற்றி அவர்களுக்கு முதல்வராகவும், பிரதமராகவும் இருப்பவர்களையும், அவர்களது கட்சிகளையும் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

2006 இல் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்த காரணத்தால், அவர்களின் நெருக்குதலுக்கு உட்பட்டோ அல்லது காங்கிரசிடம் நல்லெண்ணத்தைத் தேடும் பொருட்டோ தி.மு.க. அரசு காமராசர் பிறந்த நாளைக் ‘கல்வி வளர்ச்சி நாளாக’ அறிவித்து அந்த ஆண்டு எல்லாப் பள்ளிகளிலும் ‘காமராசர் திரைப்படத்தைக்’ காட்ட அனுமதியும் ஆணையும் பிறப்பித்தது. இப்போது அம்பேத்கர் திரைப்பட வெளியீட்டாளருக்கு முதல்வர் கருணாநிதி ரூபாய் பத்து இலட்சத்தை அளித்துப் பெருமை ஏற்படுத்திக் கொண்டார். ஆனால், அது போதாது. காமராசர் திரைப்படத்தைக் காட்டியதுபோலவே தமிழகத்தின் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் இத்திரைப்படம் இலவசமாக, கட்டாயமாகக் காண்பிக்கப்பட வேண்டும். இதை நடுவண் அரசும் மற்ற மாநில அரசுகளும் கூடச் செய்ய வேண்டும்.

தொடர்புடைய இயக்கங்களும், அரசியல் கட்சிகளும், உணர்வாளர்களும் இதற்குத் தீவிரமாகப் போராட வேண்டும்.

Pin It