தந்தை பெரியார் தமிழ்நாடு முழுவதையும் வலம் வந்தார்; தென்னாட்டின் பல பகுதிகளுக்கும் சென்றார்; இந்தியாவின் சில பகுதிகளில் பயணித்தார்; இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் பயணம் மேற்கொண்டார். இங்கெல்லாம் தமிழரிடையே பேசினார்; திhவிட மொழிகளைப் பேசும் மக்களிடையே பேசினார்; இந்தி மொழி பேசும் பார்ப்பனரல்லாதாரிடையே பேசினார்.

1914 முதல் 1925 வரை இந்தியத் தேசியம் பற்றியே பேசினார். 1919 முதல் பார்ப்பனரல்லாதார் - திராவிடர் நலன் பற்றிப் பேசினார்.

தாம் முழு மூச்சாகப் பாடுபட்டும் அவருடைய உழைப்பைப் பெற்றுக்கொண்ட காங்கிரசுக் கட்சியும் காந்தியாரும் பார்ப்பன மத நலன் - பார்ப்பன இன நலன் இவற்றைக் காப்பதிலேயே கண்ணுங்கருத்துமாக இருப்பதை உணர்ந்தார். இதை அனுமானமாக உணராமல், செயல் முறையிலேயே கண்டார். அதன் வழி இரண்டு உண்மைகளைப் புரிந்து கொண்டார்.

1.     வெள்ளையர் காலத்துக்கு முன்னரும், வெள் ளையர் காலத்திலும் கல்வியிலும் அரசு வேலையிலும் இந்துக்கள் - இந்தியர்கள் என்கிற பேரால் பார்ப்பனர்களே பெரிய ஆதிக்கம் செலுத்துவதைக் கண்டார்; இதை மாற்ற விரும்பினார். இதை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை 1919 முதல் 1925 வரை காங்கிரசில் முன்வைத்தார்.

காங்கிரசு அவருடைய கோரிக்கையைப் புறக்கணித்தது. எனவே 22.11.1925இல் காங்கிரசிலிருந்து வெளியேறினர். அவருடன் சில தலைவர்களும் வெளியேறினர்.

2.     இதேபோன்ற கோரிக்கையையே கொள்கையாகக் கொண்ட தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம், 17-12-1920இல் சென்னை மாகாணத்தில் அமைச்சரவையை அமைத்தது.

அக்கட்சியின் நிறுவனத் தலைவர்களும், முதலாவது அமைச்சர்களுள் பலரும் கற்றறிந்த மேதைகள்; பெருஞ்செல்வர்கள்; பார்ப்பனர் அல்லாதார் நலனில் பேரார்வம் கொண்டவர்கள்; அதற்காகத் தத்தம் சொத்தை இழந்தவர்கள்.

அவர்கள் முதல் கட்டத்தில் 1920-1923இலேயே அரசு வேலைகளில் உள்ள 100 விழுக்காட்டு இடங் களையும் எல்லா மக்களுக்கும் அல்லது வகுப்பாருக் கும் பங்கீடு செய்து ஆணையிட்டனர். அது நடை முறைக்கு வரவிடாமல் பார்ப்பனர் எதிர்த்தனர்; 1927 இல் அது நடைமுறைக்கு வந்தது. அது சிறுபான்மை வகுப்பினர்களான இசுலாமியர், கிறித்தவர், பார்ப்பனர் ஆகியோர்க்கு அவரவர் எண்ணிக்கையைப் போல் 3, 4, 5 மடங்கு இடங்களை அளித்தது.

இந்த முதலாவது சாதனையைப் பெற்றுத்தந்த அவர்கள் பார்ப்பனரின் மத ஆதிக்கத்தைத் தகர்க்கவும் முயன்றனர். இந்தக் காலத்தில்தான் காங்கிரசிலிருந்து ஈ.வெ.ரா. வெளியேறினார்.

1926 தேர்தலில் பார்ப்பனர் அல்லாதார் கட்சி தோற்றது. அப்போதைய தேர்தலில் அவர் அக் கட்சியை ஆதரித்தார். தேர்தல் தோல்வியினால் அக் கட்சி கலகலத்தது.

பார்ப்பனர் ஆதிக்கத்தைப் பதவித் துறையில் தகர்க்க முனைந்த அவர்கள் - பார்ப்பனிய மத ஆதிக்கத்தை - பார்ப்பனியத்தை வெறுப்பவர்களாக, மறுப்பவர்களாக, ஒதுக்குகிறவர்களாக இல்லை. அதாவது பார்ப்பனர் குருத்துவத்தை - புரோகிதத்தை - இந்து புராணச் சடங்குகளைப் புறக்கணிக்கிறவர்களாக அவர்கள் இல்லை.

12-12-1926இல் ஈ.வெ.ரா. அதுபற்றிக் கவலைப்பட்டார். தென்மாவட்டங்களிலுள்ள பல பார்ப்பனரல்லாத தலைவர்களைக் கண்டு இது பற்றிப் பேசினார். மெத்தப் படித்த பனகல் அரசர், ஏ. இராமசாமி முதலியார், பி.டி. இராசன் போன்றோரிடம் கலந்துபேசினார். அவர் களை உடனழைத்துக் கொண்டு, “பார்ப்பனரல்லா தாருக்கு - மனித சமத்துவ உணர்ச்சி - தன்மான உணர்ச்சி - சுயமரியாதை உணர்ச்சி இல்லை என்பதைப் பார்ப்பனரல்லாதார் கண்டு கொள்ள வேண்டும்” என முயன்றார்.

“பார்ப்பனர் அல்லாதார் சுயமரியாதை இயக்கம்” நிறுவப்பட வேண்டும் என அறிக்கை விடுத்தார்.

பார்ப்பனரைப் பார்ப்பனரல்லாதார் வீட்டு நிகழ்ச்சி களுக்கு அழைப்பதும் அவர்களை வணங்குவதும் பார்ப்பனிய மதச் சடங்குகளைச் செய்வதும் பார்ப் பனரின் மத - சமூக ஆதிக்கத்தை ஒழிக்காது என்பதை எடுத்த எடுப்பில் 26-12-1926இலேயே அறிவித்தார். “பார்ப்பனர் அல்லாதார் சுயமரியாதை இயக்கம்” 26-12-1926இல் நிறுவப்பட்டது.

திருமணத்திற்குப் பார்ப்பனப் புரோகிதரை அழைக்கக் கூடாது. அது தம் சுயமரியாதையை இழக்கும் இடம் என்பதை ஊர் ஊராகச் சென்று உரைத்தார்; 47 ஆண்டுகள் - 1973 வரையில் இடைவிடாமல் இக்கொள் கையைப் பரப்பினார்.

தன்மான உணர்வைக் காக்க விரும்பிய பல ஆயிரம் பேர் பார்ப்பானை விலக்கிவிட்டு - வடமொழி யை ஒதுக்கிவிட்டு அவரவர் வீட்டுத் திருமணங்களை நடத்தினர்.

அப்படித் திருமணம் நடத்துவது சட்டப்படி செல்லு படியாகாது என்று பலரும் கூறினர். அதையும் மீறியே சூத்திர வகுப்புகளில் சில உள் சாதியார் பெரிய எண்ணிக்கையில் பார்ப்பனப் புரோகித விலக்கத் திருமணத்தை மனம் விரும்பி ஏற்றனர்.

அது பெரிய வெற்றி போல் நமக்குத் தோன்றியது.

1950க்குப் பிறகு, “பார்ப்பனப் புரோகிதத்தை விலக்கிய திருமணம் சட்டப்படி செல்லாது” என நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியது. அது கண்டும் அச்சப்படாமல் ஆயிரக் கணக்கானோர் ஈ.வெ.ராவையும், அவருடைய தொண்டர்களையும், தமிழறிந்த புலவர்களையும் அழைத்துத் தத்தம் வீடுகளில் திருமணங்களை நடத்தினர்.

அப்படிப்பட்ட திருமணம் செல்லுபடியாகாது என்றால் என்ன பொருள்?

1.     சுயமரியாதைத் திருமணத்தால் வாழ்க்கைத் துணைவர்கள் ஆனவர்கள் - கணவன், மனைவி என்கிற உரிமையைப் பெற முடியாது. இணையர் களுள் “மனைவி” என்பவர் சட்டப்படி - இந்துச் சட்டப்படி “மனைவி” ஆகமாட்டார்; “வைப்பாட்டி”யே ஆவார்.

2.     சுயமரியாதைத் திருமணத் துணைவர்களுக்குப் பிறந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ பொதுக் குடும்பச் சொத்தில் பங்குபெறும் உரிமை இல்லை.

இது முதலில் மனித சுயமரியாதையைப் பறிக்கிறது; அடுத்து ‘மனைவி’ ஆன பெண்ணின் சமத்துவ உரிமையைப் பறிக்கிறது.

இவ்வளவு உரிமை இழப்புகளுடன் கூட, சுயமரியாதைத் திருமணங்கள் ஆயிரக்கணக்கில் நடைபெற்றன.

இது கொண்ட கொள்கையின்பால் சில ஆயிரம் பேர் கொண்ட பற்றின் அடையாளம். ஆனால் சட்டப்படி - இந்துச் சட்டப்படி இது இழிவானது; செல்லுபடி ஆகாதது.

இந்த இழிவை ஒழித்தது தான் “சுயமரியாதைத் திருமணச் செல்லுபடிச் சட்டம்”. இச்சட்டம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், முதலமைச்சராக இருந்த அறிஞர் சி.என். அண்ணாதுரை அவர்களால் 1968இல் நிறைவேற்றப்பட்டது. இது ஈ.வெ.ரா. வாழ்ந்த காலத்திலேயே ஈட்டப்பட்ட பெரிய வெற்றி. இது தமிழர் பேரிலான இன இழிவு ஒழிப்பில் ஒரு கட்டம் - சட்டப்படி இருந்த இழிவு ஒழிக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த செயல்.

இந்துச் சட்டப்படிச் செல்லுபடியாகிற இந்தத் திருமண முறை நடப்புக்கு வந்து 42 ஆண்டுகள் ஆகிவிட்டன.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் இலக்கக் கணக்கான திருமணங்கள் “பார்ப்பனர் அல்லாதார்” வீடுகளில் நடைபெறுகின்றன. இவற்றுள் 100க்கு எத்தனைத் திருமணங்கள் இன்று இப்படி நடைபெறுகின்றன?

இது பற்றித் தமிழக அரசுக்குத் தெரியாது; பெரியார் பெயரால் இயங்கும் இயக்கங்களுக்கும் தெரியாது; சமூக ஆய்வாளர்களுக்கும் தெரியாது. அப்படித் தெரிந்து கொள்ளுவது இன்றியமையாதது என்கிற பொறுப்பும் கவலையும் உணர்வும் இவர்களுள் எவருக்கும் இல்லை. 2011இல் இன்று நடக்கிற பார்ப்பனர் அல்லாதார் வீட்டுத் திருமணங்களுள் 100க்கு 5 அல்லது 6 திருமணங்கள் சுயமரியாதைத் திருமணங்களாக நடந்தால் - அதுவே அதிகம்.

அப்படியானால், வேறு எந்த வடிவத்தில் இன்று திருமணங்கள் நடைபெறுகின்றன?

காலங்காலமாக நடத்தப்பட்டு வருகிற

1.     சாதி வழக்கப்படி (Caste custom);

2.     பகுதி சார்ந்த வழக்கப்படி (Territorial Custom);

3.     சிலைகளின் முன்னால் கோவில்களில் (In the presence of Idols);

4.     தீ வளர்த்து, மணமக்கள் அதைச்சுற்றி ஏழு தப்படிகள் நடந்து வருதல் (Saptapadi or taking out seven steps around fire);

 இவற்றைப் பார்ப்பனரை வைத்துச் செய்கிற வழக்கமே பெரும்பாலான பார்ப்பனரல்லாதாரிடம் இன்றும் நிலவுகிறது. ஏன்? இவை பழக்கப்பட்டுப் போன நடைமுறைகள் - அவ்வளவு தான். இம் முறைகள் மட்டுமே சட்டப்படி ஏற்கப்பட்டவை என்பதும் பலருக்குத் தெரியாது.

5.     இவற்றுடன் கூட, சுயமரியாதைத் திருமணமும் சட்டப்படி செல்லுபடியாகிற ஒன்று. இது மட்டுமே தமிழ்நாட்டில் செல்லுபடியாகிற திருமண வடிவம் அன்று. அப்படி ஒரு சட்டத் தை இயற்றும் அதிகாரம் தமிழ்நாட்டு அரசுக்கு இல்லை.

“இத்திருமண முறைகளுள் முதலில் கண்ட 4 வடிவங்களும் செல்லுபடியாகமாட்டா” என்று, தமிழக அரசு சட்டம் இயற்ற முடியுமா? அதுவும் முடியாது. ஏன்?

முதலில், இது “உரிமை இயல்” பற்றியது; இரண் டாவதாக இது “பழக்கவழக்கம்” பற்றியது.

இவ்விரண்டைப் பற்றியும் சட்டம் இயற்றும் அதிகாரம் இந்திய அரசுக்கு - நடுவண் அரசுக்கு மட்டுமே உண்டு. தமிழ்நாட்டு மாநில அரசுக்கோ, வேறு எந்த மாநில அரசுக்கோ இந்த உரிமை இல்லை.

திருமண வடிவம் பற்றிப் பெரியாரின் முடிவான கருத்து என்ன?

1.     எல்லாத் திருமணங்களும் பதிவு செய்யப்பட வேண்டும்; இது கட்டாயம்.

2.     பதிவு செய்யப்படுவதற்கு இரண்டு சான்றினர் வேண்டும்; இது கட்டாயம்.

3.     அந்தந்த ஊர் அலுவலரிடமோ (V.A.O.), சார்பதிவாளரிடமோ பதிவு செய்து கொள்ள உரிமை வேண்டும்.

4.     மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ளுவதோ, மோதிரங்கள் அணிவதோ அவரவர் விருப்பம். இவற்றை நினைவில் பதியுங்கள்.

இப்படியெல்லாம் எண்ணுகிற இயக்கம் இந்தியத் துணைக்கண்டத்தில் சில மாநிலங்களில் (உ.பி., பீகார்) இருந்தாலும் பெரியார் ஈ.வெ.ரா. தொடர்ந்து பரப்புரை செய்தது போல், 47 ஆண்டுகள் அளவுக்கு அங்கெல்லாம் பேசப்படவில்லை. அங்கெல்லாம், அப்படியே பேசினாலும் “பழக்கவழக்கச் சட்டம்” நேற்றும், இன்றும், நாளைக்கும் செல்லும் - அதை இந்திய அரசு தான் மாற்ற வேண்டும் என்கிற அரச மைப்புச் சட்ட இருப்பு நிலை கெட்டியாக இருக்கிறது.

அரசமைப்பு சட்ட விதிகள் 13, 25, 372 முதலானவை உள்ளவரையில் தமிழகப் பார்ப் பனரல்லாதாரோ, இந்தியாவிலுள்ள பார்ப்பன ரல்லாதாரோ இவற்றிலிருந்து மீள மாட்டார்கள்.

மேலே கண்டவாறு ஒரு சமூக-பண்பாட்டு இழி நிலை இருப்பது பற்றி இந்தியத் தேசியக் காங்கிரசு, இந்தியப் பொதுவுடைமைக் கட்சிகள், பாரதிய சனதா கட்சி, மற்ற மாநிலக் கட்சிகள்; இக்கட்சிகளின் தலை வர்கள் ஆகியோருக்குக் கவலை இல்லை. மேலும், இதுபற்றி இந்திய நாடாளுமன்ற உறுப் பினர்கள் 790 பேர்களுள் பலருக்கும் தெரியாது.

சமூக விடுதலைப் போராளிகள், பேராசிரியர்கள், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள் இவர்களுள் பலரும் இது பற்றிக் கவலைப்படுகிறார்களா என்பது வினாக் குறி. மாறாக, இவர்களுள் பலர் இவற்றை விரும்பி ஏற்றவர்கள்.

வானொலி, தொலைக்காட்சி, இணையம், செய்தி இதழ்கள், திரைப்படங்கள் என்கிற வலிமை வாய்ந்த எல்லா ஊடகங்களும் இந்தப் பழைமையைப் பாது காத்திட என்றே வரிந்து கட்டிக்கொண்டு இயங்குகிற பார்ப்பன - பனியா - மார்வாரி - இந்திய முதலாளித்துவ - அந்நிய முதலாளித்துவத்தின் ஏவலர்களாகச் செயல் படுகிறவர்கள்.

மேலும் இந்தியா முழுவதிலும் தமிழகத்திலும் 6ஆம் வகுப்புக்கு மேல் படிக்கிற கோடிக்கணக்கான மாணவ - மாணவிகளுக்கு எந்தக் கட்டத்திலும் எந்தத் துறைப் பாடத் திட்டத்திலும் இது பற்றிய பாடங்கள் கற்பிக்கப்படவில்லை. அயல்நாடுகளில் 12ஆம் வகுப்பை முடிப்பதற்குள் அந்தந்த நாட்டு அடிப்படைச் சட்டங்கள் கற்பிக்கப்படுகின்றன.

அத்துடன் பெரும்பாலான நாடுகளில் பொதுக் கல்வித் திட்டத்திலிருந்தும், அரசு நடத்தும் பொது நிகழ்ச்சிகளிலிருந்தும் மதம் பற்றிய பாடங்கள் அல்லது நடப்புகள் இடம்பெறக் கூடாது என்பதை “மதச் சார்பற்ற கொள்கை” என 200 ஆண்டுகளாகப் பின்பற்றுகிறார் கள். அங்கெல்லாம் அரசியல் கட்சிகள் என்பவையும், கல்வியாளர்களும், நீதித்துறையும், நிருவாகத் துறையும், அறிஞர்களும் இதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இவற்றைப் பற்றியெல்லாம் சுயமரியாதைக்காரர் களும், தமிழ்நாட்டுத் திராவிடக் கட்சிகளும் - குறிப் பாகத் திராவிட முன்னேற்றக் கழக அரசும் திறந்த மனத்துடன் சிந்திக்க வேண்டும்.

மொத்த இந்துக்களில் 15 விழுக்காட்டினர் பார்ப்பனர், சத்திரியர், வைசியர் மற்றும் மேல்சாதிச் சூத்திரர் ஆவர். கீழ்ச்சாதிச் சூத்திரர், ஆதி சூத்திரர் 85 விழுக் காட்டினர் ஆவர்.

இவர்களுள் 5 விழுக்காடு உள்ள பார்ப்பனர் தவிர்த்த, மற்ற பார்ப்பனப் புரோகிதத்தைத் தவிர்த்த சாதிகள், தவிர்க்காத சாதிகளைச் சார்ந்தோர் ஆகிய எல்லோரும் “பார்ப்பனியம்” என்கிற “சாதியத்துக்கு” இரையானவர்கள்; பார்ப்பனரை விடத் தாழ்ந்தவர்கள். இவர்கள் இந்தியா முழுவதிலும் உள்ளனர்; தமிழ்நாட்டிலும் உள்ளனர்.

தமிழ்நாட்டிலேயே - தந்தை பெரியார் 47 ஆண்டுகள் பரப்புரை செய்த தமிழ்நாட்டிலேயே - பார்ப்பனிய விலக்கலில் இன்றுள்ள நம் நிலை இரங்கத்தக்கது; இந்தியா முழுவதிலும் உள்ள நிலை கழிவிரக்கம் உள்ளது.

இந்தியா முழுவதிலும் உள்ள இம்மக்களோடு தமிழர்கள் இறுக்கிப் பிணைக்கப்பட்டிருக்கிறோம். பார்ப்பனியமும் - முதலாளித்துவமும் இவர்களை இறுக்கிப் பிணைத்துள்ள இரும்பு வடக் கயிறுகள். படை வலிமை என்பது அடக்கி ஒடுக்கி ஆளும் கருவி. இவற்றை அறுத்துக் கொண்டு தான் நாம் - தமிழர்கள் வெளியே வரமுடியும்; விடுதலை பெறமுடியும். நாம் நம் கொள்கையை நிறைவேற்றுகிற அதிகாரம் படைத்த ஓர் அரசை நிறுவ முடியும். அப்படிப்பட்ட அரசைத் தனி அரசாகப் பெற்றிட இன்றைய பன்னாட்டு ஏகாதிபத்திய அரசுகளும், அவர்களின் கையாளான இந்தியாவும் இடந்தரமாட்டா.

இந்த வெளிச்சத்தில் மதச்சார்பற்ற - தத்தம் மொழி உரிமையை முழுவதுமாக நிலை நாட்டக் கூடிய தன்னுரிமை பெற்ற மாநிலங்கள் இணைந்த ஒரு கூட்டாட்சியாக இந்தியாவை மாற்றிட - அதன்வழி தன்னுரிமை பெற்ற தமிழகம் மலரச் செய்திட இந்தியா முழுவதிலும் சென்று நாம் எல்லோரும் பணியாற்று வோம்; இனியொரு புதிய அரசியல் வரலாறு படைப் போம், வாருங்கள்!