தந்தை பெரியார், அவருடைய சொற்பொழிவுகளிலும் உரையாடல்களிலும் அடிக்கடி பயன்படுத்திய சொல் வெங்காயம் ஆகும். பெரியாரின் பேச்சில் மலிந்து கிடந்த வெங்காயத்தின் விலை இன்று சந்தையில் கிலோ ரூ.60/- அளவுக்கு உயர்ந்துவிட்டது. வெங்காய விலை உயர்வு இந்திய அளவில் அரசியலில் கருப் பொருளாகிக் காரசாரமான விவாதத்தைக் கிளப்பி யுள்ளது. அத்துடன் அயலுறவுக் கொள்கையிலும் வெங்காய விலை உயர்வு ஊடுருவியுள்ளது. பாகிஸ்தானிலிருந்து 300 சரக்குந்துகளில் இந்தியாவுக்குள் வருவ தற்காகப் புறப்பட்ட வாகனங்களை, பாகிஸ்தான் அரசு தன் எல்லையில் தடுத்து நிறுத்திவிட்டது. இந்தியா, பாகிஸ்தானுக்குப் பருத்தி ஏற்றுமதி செய்வதற்கு விதித்துள்ள தடையை நீக்கக் கோரியது.

வெங்காயம் மட்டுமின்றி எல்லாவகையான காய் கறிகள், முட்டை, மீன், இறைச்சி, பால் என மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களின் விலை ஏழை, எளிய மக்களால் மட்டுமின்றி, நடுத் தரக் குடும்பத்தினராலும் வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. உணவகங்களில் சிற்றுண்டி, உணவு, தேநீர், காபி முதலானவற்றின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

பொதுவாகக் காய்கறிகள் விலை ஓராண்டில் ஓரிரு மாதங்களில் உயர்வதுண்டு. ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் காய்கறிகள் விலை குறையாமல் உயர்ந்து கொண்டேயிருக்கிறது. அறுவடைக்குப்பின் விலைகள் வீழ்ச்சியடையும் என்று ஆளும் அரசியல் வாதிகள் கூறிவந்த ஆரூடங்கள் பொய்த்துவிட்டன. காய்கறிகள், முட்டை, மீன், இறைச்சி, பால் தவிர, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், சக்கரை, அரிசி, கோதுமை முதலான உணவுப் பொருள்களின் விலை உயர்ந்து கொண்டேயிருக்கிறது. உணவுப் பொருள்களின் விலை உயர்வு 2010 திசம்பர் 25-உடன் முடிந்த வாரத்திற்கு 18.32 விழுக்காடாக இருந்தது. 2011 சனவரி 8இல் 15.52 விழுக்காடாக இருந்தது. விலை உயர்வு விழுக்காட்டின் இக்குறைவு ஆறுதலளிக்கிறது என்று அகமகிழ்கின்றனர் ஆளும் வர்க்கத்தினர். ஆனால் அடிவயிற்றில் புளியைக் கரைத்தது போல் உணவுப் பொருள்களை வாங்கக் கடைக்குச் செல்வதற்கே ‘அஞ்சி அஞ்சிச் சாகும்’ நிலையில் உள்ளனர் பொதுமக்கள். பலர், காய்கறிகள் வாங்குவதைக் குறைத்துக் கொண்டனர் அல்லது நிறுத்திக் கொண்டனர்.

உணவுப் பொருள்கள் மட்டுமின்றி, அனைத்துப் பொருள்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறது. 2010ஆம் ஆண்டில் பண வீக்கம் தொடர்ந்து அய்ந்து மாதங்கள் 10 விழுக் காட்டிற்கு மேல் உயர்ந்திருந்தது. ஆகசுட்டு மாதம் இது 8.8 விழுக்காடாகக் குறைந்தது. பணவீக்கம் 2011 மார்ச்சு மாதத்திற்குள் 5.5 விழுக்காடாகக் குறைந்து விடும் என்று இந்திய ரிசர்வ் வங்கியும் நடுவண் அரசும் கூறிவந்தன. ஆனால் 2011 சனவரியிலும் இது 8.5 விழுக்காடாக நீடிக்கிறது. கடந்த ஓராண்டில் பெட்ரோல், டீசல் விலை 9 தடவைகள் உயர்த்தப்பட் டிருப்பதும் இந்நிலைக்கு ஒரு காரணமாகும்.

பொதுவான பணவீக்கமும் - அதாவது உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விலையும், கடந்த ஒன்றரை ஆண்டுக்காலமாக ஏறுமுகத் திலேயே இருப்பதால் பொதுமக்கள் இன்றியமையாப் பொருள்களை வாங்க முடியாமல் திண்டாடுகின்றனர். சிமெண்ட், மணல், செங்கல், இரும்பு முதலான வீடுகட்டு வதற்கான பொருள்களின் விலை உயர்வால், பல பேர் வீடு கட்டுவதை இடையிலேயே நிறுத்திவிட்டனர். இத்தகைய மூலப் பொருள்களின் விலை உயர்வு 2009 சனவரியில் 18.88 விழுக் காடாக இருந்தது. 2011 சனவரியில் 17.03 விழுக்காடாக இருந்தது (தி இந்து 24.1.2011).

மொத்த விற்பனை விலை அடிப்படையில் பணவீக்கம் - விலை உயர்வு கணக்கிடப்படுகிறது. கடந்த ஆண்டு இதே வாரத்தில் இருந்த விலையையும் இந்த வாரத்தில் உள்ள விலையையும் ஒப்பிட்டுப் பணவீக்க விழுக்காடு கணக்கிடப்படுகிறது. ஆறு மாதங்களுக்கு முன்வரை 364 பொருள்களின் விலை இக்கணக்கீட்டிற்கு அடிப் படையாகக் கொள்ளப்பட்டது. இப்போது இப்பட்டியலில் 600க்கும் மேற்பட்ட பொருள்கள் இடம்பெற்றுள்ளன. ரிசர்வ் வங்கி, இப்பட்டியலில் பொருள்களின் எண்ணிக் கையை உயர்த்திய பிறகுகூட பணவீக்கத்தைக் குறைக்க முடியவில்லை.

மொத்த விற்பனை விலைக்கும் கடைகளில் விற்கப்படும் சில்லறை விலைக்கும் பெரிய அளவில் வேறுபாடு உள்ளது. மொத்த விற்பனை விலையை விடச் சில்லறை விலை 50 விழுக்காடு வரை அதிகமாக இருக்கிறது. எனவே மொத்த விற்பனை விலையின் அடிப்படையில் விலை உயர்வைக் கணக்கிடுவது உண்மையான நிலையைக் காட்டாது. பல நாடுகளில் சில்லறை விற்பனை விலை அல்லது உற்பத்தியாளர் விலை அடிப்படையில் பணவீக்கம் மதிப்பிடப்படுகிறது. ஆனால் இந்திய ஆளும் வர்க்கம் வஞ்சகமாக உண்மை நிலையை மறைப்பதற்காகவே மொத்த விற்பனை விலையைப் பின்பற்றுகிறது. இது பல அடுக்குகளாக உள்ள இடைத்தரகர்கள் கொள் ளையடிப்பதற்கு வழியமைத்துத் தருகிறது.

முதலாளியப் பொருளியலில், ஒரு பொருளின் விலை அதன் தேவை அல்லது கேட்பு, அளிப்பு நிலைகளால் நிர்ணயிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. இதில் ஒரு பகுதி மட்டுமே உண்மையாகும். மனித சமூக வரலாற்றில் வணிக வர்க்கம் உருவானது முதல், சந்தையில் ஒரு பொருளின் விலை நிர்ணயிக்கப்படுவதில், வணிக வர்க்கத்தின் நலனும் ஆதிக்கமுமே பெரும் பங்காற்றி வருகின்றன. முதலாளியப் பொருளியல் வளர்ச்சியின் வரலாற்றில் மக்கள் நலன் கருதித் தேச அரசுகள் அவ்வப்போது சந்தையில் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த முயன்றன. ஆனால் 1980 முதல் உலக நாடுகளிலும், 1990 முதல் இந்தியாவிலும் உலகமயம், தாராளமயம், தனியார் மயம் எனும் வேட்டுகளால், அரசுகளின் கட்டுப்பாடுகள் படிப்படியாக உடைத்தெறியப்பட்டன.

எனவே ஆன்லைன் வணிகம் எனப்படும் முன்பேர வணிகத்தை இந்தியாவில் முழுமையாகத் தடை செய்யாத வரையில் உணவுப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியாது. அறுவடைக்காலங் களில் வேளாண் விலை பொருள்களை உழவர்களுக்கு இலாபம் தரக்கூடிய விலையில் கொள்முதல் செய் யவும், பாதுகாப்பாகச் சேமிக்கவும், வழங்கவும் தேவை யான கட்டமைப்புகளை அரசே தன் சொந்தப் பொறுப் பில் ஏற்படுத்தாத வரையில், விலை நிர்ணயம் என்பது பெருமுதலாளிகளின் ஆதிக்கத்தின்கீழ்த் தொடர்ந்து நீடிக்கும்.

நடுவண் அரசின் வேளாண்மை மற்றும் உணவு அமைச்சர் சரத்பவார், “அரிசி, கோதுமை, சக்கரை, பருப்பு முதலான உணவுப் பொருள்களுக்கு மட்டுமே நடுவண் அரசு பொறுப்பாகும். காய்கறிகள், மாநிலங் களில் அந்தந்த வட்டாரங்களின் சூழலுக்கு ஏற்ப விளைபவை” என்று கூறியிருக்கிறார். அப்படியா னால் பாகிஸ்தானிலிருந்து நடுவண் அரசு வெங் காயத்தை ஏன் இறக்குமதி செய்கிறது? மேலும் சரத்பவாரின் கூற்று, காய்கறிகள், பழங்கள் போன்ற விரைவில் அழுகும் பொருள்களின் விலையை மாநில அரசுகள் கூடக் கட்டுப்படுத்த முடியாது என்ற தொனி யில் அமைந்துள்ளது.

காய்கறிகள், பழங்கள், இறைச்சி, மீன்,முட்டை முதலான உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு மாநில அரசோ, நடுவண் அரசோ பொறுப்பு ஏற்க முடியாதென்றல், இவர்கள் ஏன் ஆட்சியில் அமர்ந் திருக்க வேண்டும்? நடுவண் அரசு அமைத்த அர்ஜூன் சென்குப்தா அறிக்கையின்படி, இந்தியாவில் 84 விழுக்காட்டினர் ஒரு நாளைக்கு ரூ.20க்கும் குறைவாகச் செலவு செய்யக்கூடிய வாழ்நிலையில் உள்ளனர். விழுக்காட்டின் அடிப்படையிலும், எண்ணிக் கையின் அடிப்படையிலும் உலகிலேயே ஊட்டச்சத்துக் குறைவானவர்கள் இந்தியாவில் அதிகம்பேர் உள்ளனர். காய்கறிகள், பழங்கள், மீன், இறைச்சி முதலானவற்றின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் 20 விழுக்காட்டினராக உள்ள பணம் படைத்த மேல்தட்டினர் மட்டுமே இவற்றை வாங்கி உண்ண முடியும். மற்றவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாடுகளின் காரணமாக ஏற்படும் நோய்களுக்குள்ளாகி நடைப் பிணமாக இருக்க வேண்டுமா?

சரத்பவார் கூற்றுப்படி, அரிசி, கோதுமை, சக்கரை, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் ஆகிய வற்றின் விலைகள் நடுவண் அரசால் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனவா? அவ்வாறு இருக்குமாயின் உணவுப் பொருள்களின் விலை உயர்வு கடந்த ஓராண்டுக்கும் மேலாக 15 விழுக்காட்டுக்கு மேல் இருப்பது ஏன்?

1991 முதல் புதிய பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தத் தொடங்கிய பின், வேகமான தொழில்நுட்ப வளர்ச்சியும், அதிக இலாபமும் கொண்ட சேவைத் துறைக்கே நடுவண் அரசும், மாநில அரசு களும் முன்னுரிமையும், சலுகைகளும், மானியங்களும் அளித்து ஊக்குவித்தன. அதேசமயம், வேளாண்மை, அரசுகளால் படிப்படியாகப் புறக்கணிக்கப்பட்டது. கடந்த முப்பது ஆண்டுகளில் பயிரிடும் பரப்பில் ஒரு கோடி எக்டேர் குறைந்துள்ளது. மேலும், பயிர்களின் விளைச்சல் திறன் தேக்கமும், பின்னடைவும் கண்டுள்ளது. நெல், கோதுமை கொள்முதலில் பன் னாட்டு - உள்நாட்டு முதலாளியக் குழுமங்கள் அனு மதிக்கப்பட்டன. சக்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றில் ஊகவணிகம் அனுமதிக்கப்பட்டதால் இவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. நாட்டின் மொத்தத் தேவையில் பருப்பு வகைகளில் 30 விழுக்காடும் சமையல் எண்ணெயில் 40 விழுக்காடும் இறக்குமதி செய்யப்படுகின்றன. வேளாண்மை புறக் கணிக்கப்பட்டதால் வேளாண்மைக்கு இந்த இழிநிலை ஏற்பட்டது.

நாட்டின் மொத்த உற்பத்தி 1990க்கு முன் 3 முதல் 5 விழுக்காடாக மட்டுமே இருந்தது. தாராள மய - தனியார்மயக் கொள்கையை நடைமுறைப் படுத்தியதால் இது 9 விழுக்காடு அளவுக்கு உயர்ந்தது என்று மன்மோகன் சிங் மார்தட்டிக் கொள்கிறார். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் வேளாண்மை யின் ஆண்டு வளர்ச்சி 2 விழுக்காடாக உள்ளது. 2009 - 2010ஆம் ஆண்டில் இது 0.2 விழுக்காடாகத் தேய்ந்தது. அதனால் ஒருவருக்கு ஓராண்டில் கிடைக்கும் தானிய அளவும் குறைந்து வருகிறது.

இவ்வாறு வேளாண்மை, அரசுகளால் புறக் கணிக்கப்பட்டதால் 1997 முதல் 2009 வரையிலான காலத்தில் கடன் சுமை தாங்காமல், 2,16,500 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நடுவண் அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசியக் குற்றப்பதிவு ஆணையம் அளித்துள்ள புள்ளிவிவரம் இது! 2009ஆம் ஆண்டில் மட்டும் 17,369 உழவர்கள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இந்த ஆணையம் தெரிவிக்கிறது. இது 2008இல் தற்கொலை செய்து கொண்ட உழவர்களின் எண்ணிக்கையைவிட 7 விழுக்காடு அதிகமாகும்.

2009ஆம்ஆண்டில் நடுவண் அரசு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உழவர்கள் பெற்றிருந்த கடனில் 70,000 கோடி உருபாயைத் தள்ளுபடி செய்தது. ஆயினும் அதே ஆண்டில் 17,369 உழவர்கள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டிருப்பது ஏன்? தேசிய வங்கியிலோ, கூட்டுறவுச் சங்கத்திலோ, தனியாரிடமோ கடன் வாங்கினாலும் உழவர்களின் விளை பொருளுக்குரிய - அதன் உற்பத்திச் செலவுக்கும் அதிகமான வகையில் - ஓரளவு இலாபம் என்று சொல்லிக் கொள்ளும்படியான தன்மையில் உழவர்களுக்கு வருவாய் கிடைப்பதில்லை. இதுவே ஊழவர்களின் தற்கொலைக்கான ஆணிவேர்.

நடுவண் அரசின் 2009-10ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் உழவர்களுக்கு ரூ.3,25,000 கோடிக் கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இக்கடனில் பெரும்பகுதி ஏழை, எளிய ஊழ வர்களுக்குக் கிடைப்பதில்லை. தேசிய வங்கிகளில் வேளாண் கடனுக்கான வரம்பு கோடிகளில் உயர்த் தப்பட்டுவிட்டது. அதனால் வேளாண் கருவிகளை உற்பத்தி செய்யும் முதலாளிய நிறுவனங்கள் பெரு நிலக்கிழார்கள் கோடிக்கணக்கில் ‘வேளாளர் கடன்’ பெறுகின்றனர். 2008ஆம் ஆண்டு மகாராட்டிரத்தில் வேளாண் கடனில் 50 விழுக்காடு நகர்ப்புற வங்கிக் கிளைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இக்கடனில் 42 விழுக்காடு மும்பை நகரில் தரப்பட்டுள்ளது. வேளாண் கடனுக்கான வட்டி 7 விழுக்காடு ஆகும். மகிழுந்து வாங்கவும் 7 விழுக்காடு வட்டியில் கடன் தரப்படுகிறது. மகாராட்டிர மாநிலத்தில் அவுரங்காபாத்தில் ஒரு முதலாளி ரூ.65 கோடிக்கு ஆடம்பரமான மெர்சிடஸ் பென்ஸ் மகிழுந்துகள் 150 வாங்கினார்; இதற்காக பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.40 கோடிக் கடனை 7 விழுக்காட்டு வட்டிக்கு வாங்கினார். பாரத ஸ்டேட் வங்கியின் உயர் அதிகாரி, இதுபோன்ற கடன்களைத் தருவதில் பெருமைப்படுகிறோம் என்று கூறியுள்ளார் (தி இந்து 28.12.2010, பி. சாய்நாத் கட்டுரை). ஆனால் உழவர்களுக்குக் கடன் வழங்குவதில் இத்தகைய ஆர்வம் காட்டப்படுவதில்லை என்பதுடன், அவர்கள் பலவகையிலும் அலைக்கழிக்கப்பட்டு, விரட்டப்படுகின்றனர். அதனால் அதிக வட்டிக்குத் தனியாரின் கடன் வலையில் சிக்கித் தவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் 2006இல் முதலமைச்சராகப் பதவி ஏற்றதும், கலைஞர் கருணாநிதி கூட்டுறவுச் சங்கங் களில் உழவர்கள் பெற்றிருந்த கடனில் ரூ.7,000 கோடியைத் தள்ளுபடி செய்தார். நடுவண் அரசும் இவரைப் பின்பற்றி 2009இல் ரூ.70,000 கோடிக் கடனைத் தள்ளுபடி செய்தது. ஆனால் அதே ஆண்டில் பெருமுதலாளிகளுக்குப் பல்வேறு சலுகைகள் மூலம், ரூ.5,00,000 கோடிக்குமேல் நடுவண் அரசு அளித்தது என்பதும் நினைவில் கொள்ளத் தக்கதாகும். தமிழ்நாட்டில் 2009ஆம் ஆண்டு 1060 உழவர்கள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2008ஆம் ஆண்டு இத்தற்கொலைகள் எண்ணிக்கை 512ஆக இருந்தது. 2005 முதல் 2009 வரையிலான காலத்தில் தமிழ்நாட்டில் 3737 உழவர்கள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று தேசியக் குற்றப்பதிவு ஆணையம் தெரிவிக் கிறது. ஆனால் தமிழ்நாட்டரசு மூன்று உழவர்கள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டதாகக் கூறுகிறது (இந்தியன் எக்ஸ்பிரஸ், 9.1.2011).

ஒரு உருபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டமும், இந்திய அளவில் செயல்படுத்தப்படும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டமும் நடைமுறையில், வேளாண் தொழிலுக்கு ஆட்கள் கிடைக்காத நிலைக்கும், வேளாண் கூலி உயர்வுக்கும் பெரும் காரணங்களாக இருப்பதாக உழவர்கள் கூறுகின்றனர். வேளாண் மைக்கு இலவச மின்சாரம் என்பது உழவர்களுக்குப் பேருதவியாக அமைந்துள்ளது. ஆனால் விதை, உரம், பூச்சி மருந்து போன்ற இடுபொருள்கள் விலை அதிகமாகி வருவதுடன் இவை தனியார் ஆதிக்கத்தின் கீழ்ச்சென்றுவிட்டன. எனவே எந்தக் கட்சி தமிழ் நாட்டில் ஆட்சியில் இருந்தாலும் கடன்சுமையால் உழவர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடரும். நடுவண் அரசின் தாராளமயக் கொள்கையே உழவர்கள் தற்கொலையின் ஊற்றுக்கண்.

14.1.11 அன்று தலைமைச் செயலகத்தில் முதல மைச்சர் தலைமையில், அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த 9 அம்சத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது இயங்கும் 154 உழவர் சந்தைகளை வலுப்படுத்தவும், மேலும் 25 இடங் களில் புதிய உழவர் சந்தைகளைத் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. உழவர் சந்தைகளின் செயல்பாடு தாராளமயச் சந்தை எனும் கடலில் கரைத்த பெருங்காயமாகவே உள்ளது. வருங்காலங் களில் வேளாண் பொருள்களின் விற்பனை நடுவங் களை நவீனமயமாக்குதல், ஒருங்கிணைத்தல், போதிய குளிர்சாதனக் கிடங்கு வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த சிறப்புத் திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்த வேண்டும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றை யார் செய்வது? தமிழக அரசா? தனியாரா? அல்லது தமிழக அரசும் தனியாரும் இணைந்தா? (public private partnership - PPP என்பது தாராளமயத்தின் நவீன ஆய்தம்).

இந்த வினாவின் விடைக்காக எவரும் மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்ள வேண்டாம் என்பதற்காக மன்மோகன் சிங்கே விடையைக் கூறி விட்டார். காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த சிறந்த ஒரே வழி, சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களைக் கட்டுப்பாடின்றி அனுமதிப்பதேயாகும் என்று நடுவண் அரசு முடிவு செய்துள்ளது. சேமிப்புக் கிடங்குகள், தொடர் சங்கிலி அமைப்புப் போன்ற குளிரூட்டி நிலையங்கள் முதலான கட்டமைப்புகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் அமைத்துவிட்டால், விளை பொருள்கள் களத்துமேட்டு விலைக்கும், நுகர்வோர் தரும் விலைக்கும் இடையிலான பெரும் ஏற்றத்தாழ்வு நீங்கிவிடும்; இதனால் உழவர்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று நடுவண் அரசு கூறுகிறது. பா.ச.க. ஆளும் மாநிலங்களான குசராத்தும், பஞ்சாபும் இதற்கு ஒப்புதல் அளித்துவிட்டதால் - மற்ற மாநிலங்களும் இசைந்துள்ளதால், இதை விரைவில் நடைமுறைப்படுத்த நடுவண் அரசு திட்டமிட்டுள்ளது (தி இந்து 19.1.2011).

முதலாளியத்தின் மணிமுடியான அமெரிக்காவி லேயே பல மாநிலங்களில், சில்லறை வணிகத்தில் உலகில் முதன்நிலை நிறுவனமான வால்மார்ட்டைக் கடைவிரிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் மன்மோகன்சிங் அரசு இந்தியாவை வேகமாக பன்னாட்டு நிறுவனங்களின் மறு குடியேற்ற நாடாக்கி (காலனியாக்கி) வருகிறது. பா.ச.க.வுக்கும் இதே கொள்கைதான் என்பதை மறந்துவிட முடியாது.

உணவுப் பொருள்களின் சந்தையை முன்பேர வணிகத்திலிருந்தும், கார்ப்பரேட்டுகள் ஆதிக்கத்தி லிருந்தும் விடுவிப்பதே இப்பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான வழியாகும். மக்கள் வீதியில் திரண்டு போராடுவதன் மூலமே இந் நிலையைச் சாதிக்க முடியும்.

Pin It