இன்றைய அரசமைப்பின்படி, இந்திய நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் இவற்றுக்கு அய்ந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது.

இன்றைய அரசமைப்புச் சட்டத்தில் என்னென்ன உரிமைகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்ப தைப் பற்றி எந்த வாக்கு வேட்டைக் கட்சியும் மக்களுக்கு எடுத்துச் சொல்லுவது இல்லை. அவரவருடைய கட்சி ஆட்சிக்கு வந்தால், இன்னின்ன திட்டங்களை நிறை வேற்றுவோம் என்று வாக்குறுதி தருகிறார்கள்; வாக்குக் கேட்கிறார்கள்.

1952இல் 21 வயது வந்தோருக்கு வாக்குரிமை தரப்பட்டு, சுதந்தர இந்தியாவில், முதலாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. இப்போது 18 வயது நிரம்பியவர்கள் வாக்குப் போடுகிறார்கள்.

வாக்குப் போடுகிறவர்களுள் தென்னாட்டில் ‘பிராமணர்கள்’ இருக்கிறார்கள்; ‘சூத்திரர்கள்’ இருக்கிறார்கள்; வடநாட்டில் ‘பிராமணர்’, ‘சத்திரியர்’, ‘வைசியர்’, ‘சூத்திரர்’ இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் பிறவியில் சம உரிமை உடையவர்கள் அல்லர் என்று இந்துச் சட்டம் கூறுகிறது; இக்கொள்கையை, அரசமைப்புச் சட்டம் 2011இலும் பாதுகாக்கிறது. இதை எந்த ஒரு மாநிலச் சட்டமன்றமும், நீக்க முடியாது. அதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உண்டு. தமிழ்நாடு மாநிலம் உள்ளிட்ட எல்லா மாநிலங்களிலும் உள்ள எல்லாக் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் அங்கம் பெறுகின்றன. ஆனால் கடந்த 59 ஆண்டுகளில், எந்த ஒரு கட்சியும் பிறவி காரணமாக உள்ள வருண வேறுபாட்டை ஒழிப்பதற்கு நாடாளுமன்றத்தில் எந்த முயற்சியையும் செய்யவில்லை.

மகாத்மா புலேயும், தந்தை பெரியாரும், மேதை அம்பேத்கரும் வருண வேறு பாட்டை ஒழிப்பதைத் தலையான கொள்கையாகக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அடியோடு புறக்கணிக்கப்பட்டுவிட்டார்கள். சட்டம் செய்கிற இடத்தில் மேல் சாதியினரும், சமூகத்தின் மேல் தட்டில் உள்ளவர்களும், பெருமுதலாளிகளும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

இந்நாட்டில் கல்லாமையும், இல்லாமையும் ஒழிய வேண்டும் என்பது இன்றைய அரசமைப்பின் குறிக்கோளாக இல்லை.

அதனால்தான், 59 ஆண்டுகள் ஆண்டபிறகு, இந்தியரில் 100க்கு 30 பேருக்கு எழுத்தறிவு இல்லை; தமிழ்நாட்டில் 100க்கு 20 பேருக்கு எழுத்தறிவு இல்லை. இப்போது ‘கல்வி பெறுவது’ குடிமக்களின் அடிப்படை உரிமை என்று சட்டம் வந்திருக்கிறது. ஆனால் ‘எல்லோருக்கும் கல்வியைத் ‘தருவதற்கு’ ஏற்ற நிதி ஒதுக்கீடு, ஆசிரியர் அமர்த்தம், பள்ளிக்கான கட்டடங்கள் இல்லை.

இந்தியா ஒரு சுதந்தர நாடு என்று ஆன பிறகு இரண்டு தலைமுறைக்காலம் - 60 ஆண்டுகள் கல்லாமையை ஒழிக்காதவர்களுக்கு - மீண்டும் மீண்டும் ஏன் வாக்களிக்க வேண்டும்? எழுத்தறிவு மறுக்கப்பட்டவர்களில் 100க்கு 90 பேர் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களே ஆவர். இவர்களும் மற்றவர்களும் சாதி பார்த்து - பணம் பார்த்து - சாராயம் பார்த்தது - இலவசங்களை எதிர்பார்த்து வாக்களிப்பது எதற்காக?

பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியிலும் வேலையிலும் விகிதாசார இடஒதுக்கீடு தரப்படவில்லை. பட்டியல் வகுப்பினர், பழங்குடியினருக்கு ஏட்டில் விகிதாசார இடஒதுக்கீடு இருக்கிறது; ஆனால் அது நடைமுறை யில் இல்லை. இவர்கள் மூன்று பிரிவினரும் - மக்கள் தொகையில் 85 விழுக்காட்டினர். இவர்கள் எதற்காக வாக்குப் போட வேண்டும்?

18 வயது நிரம்பிய ஆணும் பெண்ணும் உடலுழைப்பு வேலை, அரசு வேலை, தனியார் துறை வேலை என ஏதேனும் ஒரு வேலை தரப்பட்டுக் - குறைந்த அளவு ஊதியம் பெறு வதற்கான உறுதி மொழி இந்திய அரசமைப்பில் இல்லை. அதனால் தான் மக்கள் இலவசங்களுக்கு ஏங்குகிறார்கள்.

இவர்களுக்கு உரிய நலத்திட்டங்களாக எல்லோருக்கும் எல்லாக் கல்வியும் இலவசம், எல்லோருக்கும் எல்லா மருத்து வமும் இலவசம், எல்லோருக்கும் உறுதிப்பாடான - உத்தரவாத மான குறைந்த அளவு ஊதியம் உண்டு என்கிற கோட்பாட்டை இந்திய அரசமைப்பு ஏற்றுக் கொண்டிருக்கவில்லை.

அதற்கு மாறாகப் படித்த - படிக்காத ஏழைகளை மேலும் மேலும் பணக்காரர்களுக்கு அடிமை வேலை செய்யப் போகும் வகையில் தனியார் மயம் - தாராளமயம் - உலக மயம் என விதந்து பேசி, ஒரு சிறு கும்பலைக் கோடானுபதிகளாக ஆக்கி, அவர்களின் பணத்தைக் கொண்டு தேர்தலை நடத்தி, சுரண்டுகிற வர்களின் ஆதிக்கம் நீடித்து நிலைத்திருக்கவே இன்றைய அரசமைப்புச் சட்டம் துணைபோகிறது; அதன்படியே தேர்தல்களும் நடைபெறுகின்றன. இது நீடிப்பதற்காக நாம் ஏன் வாக்குப் போட வேண்டும்?

சுயமரியாதை இயக்கத்தையும் நீதிக் கட்சியையும் இணைத்தே ‘திராவிடர் கழகம்’ எனப் பெரியார் உருவாக்கினார்.

‘சட்டம் செய்கிற அவைக்கு நாம் போகக் கூடாது’ என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அப்படிப் போக விரும்புகிறவர்களைக் ‘கழகத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள்’ எனக் கண்டிப்புடன் கூறினார்.

கழகத்தின் பேரால் இல்லாமல், அவரவர் சொந்தப் பொறுப்பில், உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் ஈடுபட மட்டும் விலக்கு அளித்தார்; கழகத்தினர் சிலர் அப்படி ஈடுபட்டனர்.

ஒடுக்கப்பட்டோருக்கான வகுப்புவாரி உரிமையைக் காப்பாற்றிட வேண்டி மட்டுமே, 1954இல் காங்கிரசையும், 1967இல் தி.மு.க.வையும் பெரியார் ஆதரித்தார். அப்போதும், எப்போதும் ‘திராவிடர் கழகம்’ தேர்தலைப் புறக்கணித்தே வந்தது.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி, 8.8.1976இல் தொடங்கப்பட்டது. 1977 முதலே, மா.பெ.பொ.க. தேர்தலைப் புறக்கணித்து வருகிறது. இன்றைய தேர்தலைப் புறக்கணியுங்கள் - வாக்குப் போடாதீர்கள் என்று மா.பெ.பொ.க. கேட்டுக் கொள்கிறது. 2011 ஏப்பிரல் 13இல் நடக்கும் தேர்தலைப் புறக்கணியுங்கள் எனத் தமிழ்ப் பெருமக்களை மா.பெ.பொ.க. அன்புடன் வேண்டிக் கொள்கிறது.

பிறவியிலான வேறுபாட்டை ஒழித்த - மதம் சார்ந்த கல்வியை நீக்கிய - மத நிறுவனங்கள், மடங்கள், கோவில்கள் முதலானவை, சொத்தைக் குவிக்க உரிமையில்லாத - தனி மனிதனோ ஒரு குழுமமோ பல கோடி ரூபாக்களைக் குவிக்க உரிமை தராத - எல்லா உடைமைகளையும் சமூக உடைமை களாக ஆக்குகிற - தேசிய இனங்களின் தன்னுரிமைக்கு வழிவகுக்கிற ஒரு புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிட ஒவ்வொருவரும் உறுதி பூணுங்கள்.

இருப்பதை அப்படியே நிலைக்க வைக்கிற இன்றைய அரசமைப்பை அடியோடு மாற்றிடத் துணியுங்கள்.

படித்தவர்களையும் படிக்காதவர்களையும் அரசியல்படுத் துங்கள். உழைப்பாளி - பாட்டாளி மக்களின் அரசு ஒன்றை அமைத்திட வேண்டும் எனச் சூளுரை செய்யுங்கள். அதன் அடையாள மாகத் தேர்தலைப் புறக்கணியுங்கள்!

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர்களின் கலந்துரையாடல் கூட்ட முடிவுகள்

 மா.பெ.பொ.க. மாவட்டச் செயலாளர்களின் கலந்துரை யாடல் கூட்டம், 20.03.2011 காலை 10 மணிமுதல் 4.30 மணிவரையில், சேப்பாக்கம் கட்சி அலுவலகத்தில், வே. ஆனைமுத்து தலைமையில் நடைபெற்றது.

கலந்துரையாடலுக்குப்பின், கீழ்க்கண்ட முடிவுகள் நிறைவேற்றப்பட்டன.

முடிவுகள்

1.     தமிழ் நாட்டுச் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, மே 13 வரையில் காவல் துறை கட்டுப்பாடுகள் இருப்பதை ஒட்டி, ஏப்பிரல் 14 முதல் மே 1 முடிய கூட்டங்கள் நடத்துவதை ஒத்தி வைப்பது என முடிவு செய்யப்ப்டடது.

2.     தேர்தல் புறக்கணிப்பே மா.பெ.பொ.க.வின் கோட் பாடாகும். இதுபற்றி ஓர் அறிக்கையை அச்சிட்டு மக்களி டையே பரப்புவது என முடிவு செய்யப்பட்டது.

3.     2011 மே திங்களில் மா.பெ.பொ.க. மாவட்டச் செயலாளர்கள், நகரச் செயலாளர்களுக்கு மூன்று நாள்களுக் கும்; மாணவர் அணியினர் 15 பேருக்கு அய்ந்து நாள் களுக்கும் கொள்கைப் பயிற்சி வகுப்புகள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

4.     2011 மே முதற்கொண்டு மாதந்தோறும் 6 முதல் 10 வரையில் 5 நாள்களுக்குத் தொடர்ந்து “சிந்தனை யாளன்”, “Periyar Era” ஏடுகளுக்கு வாழ்நாள் உறுப்பினர், ஆண்டு உறுப்பினர் சேர்ப்பதென்றும்; இப்பணியினை சென்னை சி. பெரியசாமி, கவிஞர் தமிழேந்தி இருவரும் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டும் தீர்மானிக்கப்பட்டது.

5.     மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி தொடங் கப்பட்டு 7.8.2011இல் 35 ஆண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி 7.8.2011 ஞாயிறு அன்று மா.பெ.பொ.க. 35ஆம் ஆண்டு நிறைவு விழா மாநாடு நடத்துவது என்றும்; மாணவர் அணியை வலுப்படுத்தும் தன்மையில் 2011 சூலை முதற்கொண்டு மாணவர் அணியினர் களப்பணியாற்றுவது என்றும்; மா.பெ.பொ.க. பொறுப்பா ளர்களும் மாணவர் அணியினரும் மாநாட்டுக்கு நன் கொடை திரட்டுவது என்றும், மாணவர் அணி மாநாட்டி னை 6.8.2011 சனி அன்று நடத்துவது என்றும், இடம் பற்றிப் பிறகு முடிவு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

6.     மருத்துவப் படிப்புக்கு இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட இருப்பதைக் கண்டித்து, சென்னை யில் 2011 சூனில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

- வே. ஆனைமுத்து, பொதுச் செயலாளர், மா.பொ.பொ.க.

Pin It