நாட்டில் விரைந்து பெருகிவரும் தகவல் தொழில் நுட்பத்துறை பல விந்தையான மாற்றங்களை நாளும் கொண்டுவந்து சேர்க்கிறது. உள்ளத்து உணர்வுகளை எழுத்தாக்கும் மடல் இலக்கியம் பற்றி இன்றைய இளந்தலைமுறையினர் அறிய எந்த வாய்ப்பும் இல்லை. தொடர்வண்டியா, பேருந்தா, பொது இடமா - கைப் பேசியில் மணிக்கணக்கில் பேசும் கலை (?) வளர்ந்து விட்டது. அன்னம் விடுதூது, புறா விடுதூது, முகில் விடுதூது, தமிழ் விடுதூது என்பன பற்றியெல்லாம் இன்றுள்ளோர் எத்தனை பேர் அறிவர்?

வரலாற்றில் மடல் இலக்கியங்கள் சாகா வரம் பெற்றவை. நேரு தன் மகள் இந்திரா பிரியதர்சினிக்கு (இந்திராகாந்திக்கு) மடல்கள் வழியாகத்தான் உலக வரலாற்றையே ஊட்டினார். அண்ணாவின் தம்பிக்கு மடல்கள்; மு.வ.வின் அன்னைக்கு / தங்கைக்கு / தம்பிக்கு / நண்பர்க்கு / மடல்கள் இன்றும் புகழ் பெற்றவை.

நம் நெஞ்சு நேரிய அன்பினரின் எழுத்துக்களை இருவிழியாலும் பருகி மகிழும் இன்பம் எல்லையற்ற தாகும். ஆனால் அந்த நிலை இன்று அருகிப் போயுள்ளது. அதுபோலவே அஞ்சல் துறையும் நாளும் நாளும் நலிந்துவரும் துறையாக மாறி வருகிறது.

21.6.2011 “தி நியூ இந்தியன் எக்சுபிரசு” நாளேட்டில் (சென்னை பதிப்பு : பக்கம் 2) வந்துள்ள ஒரு செய்திப் படி இந்தியா முழுவதிலும் உள்ள அஞ்சல் துறை ஊழியர்கள், 5.7.2011 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவிருக்கிறார்கள்.

உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் தொடர் வண்டித் துறைக்கு அடுத்து நாடு முழுவதும் பரவியுள்ள மிகப் பெரும் மக்கள் தொடர்புத்துறை அஞ்சல் துறை ஆகும். அத ஒரு பொதுத்துறை நிறுவனம். ஆனால் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டுள்ள ஆட்சியாளர்கள் இந்திய அஞ்சல் துறையின் கழுத் தையும் நெரித்து வருகிறார்கள்.

வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள பல்வேறு அஞ்சல்துறை தொழிற்சங்கங் களைச் சார்ந்த கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தெரி வித்துள்ள கருத்துக்கள் அதிர்ச்சியூட்டத் தக்கவையாய் உள்ளன.

கடைக்கோடியில் வாழும் ஏழை இந்தியர்களைக் குறித்துக் கசிந்துருகி முதலைக் கண்ணீர் வடிக்கும் ஆட்சிக் கயவர்கள், நாடு முழுவதிலும் இயங்கிவரும் 9,797 நகர்ப்புற அஞ்சலகங்களையும் மற்றும் சிற் றூர்ப்புற அஞ்சலகங்களையும் ஊற்றி மூடிவிட முடி வெடுத்திருக்கிறார்கள்.

வங்கி, காப்பீடு, தொடர்வண்டித் துறை போன்ற வற்றைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதிலேயே குறியாய் உள்ள ஆட்சியாளர்கள், ஏழை வெகுமக் களின் தொடர்புச் ச்hதனமான அஞ்சல் துறையையும் மெக்கன்சி குழுமம் (ஆநமiளேநல & ஊடி.) என்கிற அந்நிய நிறுவனத்திடம் விற்றுவிடத் தீர்மானித்துள்ளனர். இந்த முடிவைக் கைவிட வேண்டுமெனப் போராட்டக் குழுவினர் அஞ்சல் வாரியத்திடம் கடந்த 6, 7 தேதகளில் நடத்திய பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறவில்லை.

நாட்டில் இன்று 50 காசுக்கு எந்த ஒரு பொருளுமே கிடைப்பதில்லை. குழந்தைகள் விரும்பு உண்ணும் மிட்டாய் கூட ஒரு ரூபாயாய் விலை உயர்ந்துவிட்டது. ஆனால் கன்னியாகுமரியில் வாழும் ஒரு தாய் பல ஆயிரம் கல் தொலைவில் - காஷ்மீரில் வாழ நேர்ந்த தன் மகனுக்கு 50 காசு மட்டுமே விலையுள்ள ஓர் அஞ்சலட்டையில் தன் அன்பையும் வாழ்த்தையும் வெளிப்படுத்தி, எழுதி அனுப்பும் விந்தை அஞ்சல் துறையானது அரசின் கையில் இருப்பதால்தான் சாத்திய மாகிறது. ஆனால் அந்நிய நிறுவனங்களை அஞ்சல் துறையில் புகுத்தி, நாட்டு மக்களின் மிச்சமிருக்கும் நல்வாழ்வு வசதியையும் சூறையாட நினைக்கிறது நடுவண் அரசு.

கடந்த 15.6.2011 அன்று தினமணி நாளிதழ் அஞ்சல் துறை ஊழியர்களின் பொறுப்பற்ற ஒரு செயலை எடுத்துக்காட்டி ‘ஆசிரியவுரை’ தீட்டி இருந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆலங்குடியை அடுத்த கொத்தமங்கலம் என்ற சிற்றூரில் அப்பகுதி மக்கள் கேட்பாரற்றுக் கிடந்த மூன்று சரக்கு மூட்டைகளைக் கண்டெடுத்தார்களாம். அவற்றைப் பிரித்துப் பார்த்த போது ஏராளமான அஞ்சல் ஆணைகள், ஏ.டி.எம். அட்டைகள், காப்பீட்டுப் பத்திரங்கள், மருந்து பார்சல்கள், பள்ளி, கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர் பான தகவல் பரிமாற்றங்கள், நீதிமன்ற ஆணைகள், அரசு ஆவணங்கள் எனப் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அஞ்சல் வழி மடல்கள் அவற்றில் அடங்கி இருந்தனவாம்.

அஞ்சல்துறை ஊழியர்களின் பொறுப்பற்ற தன்மையைக் கண்டித்துத் தீயுமிழும் வார்த்தைகளால் தினமணி தலையங்கம் தீட்டியுள்ளது. இச்செயலை மக்கள் நலனின் அக்கறையுள்ள அனைவரும் கட்டாயம் கண்டிக்க வேண்டியது தலையானதாகும்.

ஆனால் பத்துப்பேர் பணியாற்றக் கூடிய அஞ்சலகங்களில் இரண்டு பேர்கூட இருப்பதில்லை. பணி ஓய்வு பெற்றவர்களின் இடத்துக்குப் புதிய நியமனங்களே இல்லை. மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப, அஞ்சல் வழி மடல் போக்குவரத்தும் பெருகி விட்டது.மேலும் சிற்றூர்ப்புற மக்களுக்கு வங்கிகளைவிட அஞ்சலகங்கள்தான் பணம் அனுப்புவது, சேமிப்பு வங்கி தொடங்குவது போன்ற பணிகளுக்கு எளிதில் அணுகத்தக்கதாய் உள்ளது.

அஞ்சலக ஊழியர்களின் தலையில் தனியார் தொலைபேசிக் கட்டணங்கள் வசூலிக்கும் பணி, வேலைக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி, தொடர்வண்டிப் பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொடுக்கும் பணி, கடவுச்சீட்டு பெற்றுத்தரும் பணி என மேலும் மேலும் பணிச்சுமையை அதிகமாக்கி வருகிறார்கள். இன்றளவும் இந்திய அஞ்சல் துறையில் பார்ப்பன - உயர்சாதிக்காரர்கள் பெரிய பெரிய அதிகாரப் பொறுப்பு களில் இருந்துகொண்டு அந்தத் துறையையே ஆட்டி வைக்கிறார்கள். கீழ்நிலைப் பணியிடங்களுக்குப் புதிய ஆள்களை நியமிப்பது முற்றிலுமாய் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த அவலம் மிகுந்த சூழல்களை நாம் எல் லோரும் கணக்கில் கொள்ள வேண்டும். எப்பாடுபட்டே னும் பொதுத்துறை நிறுவனங்களைச் சீரழிந்துபோக வழிசெய்துவிட்டு, அந்த இடத்தில் தனியாரை உட்கார வைத்து, அதே தனியார் நிறுவனத்தில் தானே உயர் அதிகாரியாய்ப் போய் அமர்ந்து கொள்ள வேண்டு மென்பதுதான் ஆரியப் பார்ப்பனர்களின் - அவர்தம் அடிவருடிகளின் சூது நிறைந்த திட்டமாகும்.

மற்ற துறைகளைப் போலவே அஞ்சல் துறையை அவர்கள் அழிக்கத் திட்டமிட்டு தெளிவோடு இயங்கி வருகிறார்கள். ஒடுக்கப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த உழைப்பாளித் தோழர்களே! பொதுமக்களே! உண்மை யை உணருங்கள்! பொதுத்துறைகளை மீட்கப் போராட முன்வாருங்கள்! அஞ்சல் துறை அனைத்து மக்களின் எளிய விலை தொலைத் தொடர்புச் சாதனம் என்பதை உணருங்கள்! ஊர்தோறும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துங்கள் என அன்புடன் வேண்டு கிறோம்.

Pin It