1967 முதல் திராவிட அரசியல் கட்சிகள் எனப்படும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சிசெய்து கொண்டிருக்கின்றன. எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தவரையில் தி.மு.க. - அ.தி.மு.க. இடையிலான அரசியல் போட்டி, பங்காளிச் சண்டையாக இருந்தது. செயலலிதா அ.தி.மு.க.வின் தலைமையைக் கைப்பற்றியபின், இது சக்களத்திச் சண்டையாகச் சந்தி சிரிக்கிறது. இதனால் தமிழக மக்களும், மாணவர்களும் சீரழிந்து கொண்டிருக்கின்றனர்.

கடந்த மே மாதம் மூன்றாவது தடவையாக செயலலிதா அறுதிப் பெரும்பான்மையுடன் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். உடனே, கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது மேற்கொண்ட திட்டங்கள் பலவற்றை, ‘எடுத்தேன் - கவிழ்த்தேன்’ என்ற தனக்கே உரிய ஆணவப்போக்கில், தலைகீழாகப் புரட்டிப் போட்டார்.

இவற்றுள் முதன்மையானது, சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கைவிட்டதாகும். இதனால் சூன், சூலை இரண்டு மாதங்கள் மாணவர்களின் கல்வி பாழாயிற்று. அரசியல் காழ்ப்புணர்ச்சியால், மாணவர்களின் எதிர்காலம் பந்தாடப்படுகிறது. பெற்றோர்கள் பெரும் குழப்பத்திற்கும், மனஉளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். நாள்தோறும் செய்தி ஊடகங்களில் சமச்சீர் கல்வி பெரும் விவாதப் பொருளாகிவிட்டது.

இம்மாபெரும் விவாதத்திற்கிடையில், 11.07.2011 அன்று முதலமைச்சர் செயலலிதா, முன்னைய தி.மு.க. அரசின் கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைக் கைவிடுவதாகவும், அதற்கு மாற்றாக புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்தார். ஆனால் இது ‘புதிய மொந்தையில் பழைய கள்ளாகவே’ இருக்கிறது.

தி.மு.க. அரசின்  காப்பீட்டுத் திட்டம்

1.     ஒரு குடும்பத்துக்கு 4 ஆண்டுகளுக்கு ரூ.1 இலட்சம்

2.     642 வகையான  சிகிச்சைகளுக்கு அனுமதி   

3.     மருத்துவ ஆய்வுகளுக்கான செலவுத்   தொகை காப்பீட்டுத்    திட்டத்தில் அடங்காது

4.     சிகிச்சை முடிந்த பிறகு   மருத்துவ ஆய்வு, பிற செலவுகள்  வழங்கப்படாது

அ.தி.மு.க. அரசின் புதிய காப்பீட்டுத் திட்டம்   

1. ஒரு குடும்பத்துக்கு 4 ஆண்டுகளுக்கு  ரூ.4 இலட்சம்

2. 950 வகையான சிகிச்சை முறைகளுக்கு அனுமதி

3. மருத்துவ ஆய்வுக்கான செலவுத் தொகை காப்பீட்டுத் திட்டத்தில் அடங்கும்

4. மருத்துவ ஆய்வு மற்றும்   மற்றும் பிற செலவுகள் காப்பீட்டில் அடங்கும்

மேலே குறிப்பிட்டுள்ள வேறுபாடுகள் தவிர, தனியார் மயத்தை - கார்ப்பரேட் தனியார் மருத்துவத்தை ஊக்குவிப்பது என்ற அரசின் அடிப்படைக் கொள்கை யில் மாற்றம் ஏதுமில்லை.

11.07.2011 அன்று செயலலிதா வெளியிட்ட அறிக் கையில், “இப்போதுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (தி.மு.க. அரசின்) மக்களின் சுகாதாரத் தேவைகளை முழுமையாக நிறைவு செய்வதாக இல்லை. மேலும் இந்தக் காப்பீட்டுத் திட்டம், தனியார் காப்பீட்டு நிறு வனங்களும், தனியார் மருத்துவ மனைகளும் வளர்ச்சி அடையவே வழிவகுத்தது. சிகிச்சைக்காக வரையறுக் கப்பட்ட தொகையைத் தனியார் மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படுவது போன்று அரசு மருத்துவமனை களுக்கும் முழுமையாக வழங்கப்படும். இதனால் புதிய காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை பெற மக்கள், அரசு மருத்துவமனைகளை அதிக அளவில் நாடி வருவார்கள்” என்று கூறியுள்ளார்.

செயலலிதா, தேர்தலுக்கு முன்பும், தேர்தல் பரப்பு ரையின் போதும், “கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தால் மக்கள் பயனடையவில்லை; மாறாக தனி யார் காப்பீட்டு நிறுவனங்களும், தனியார் மருத்துவ மனைகளும் பயனடைந்து வருகின்றன” என்று கடுமையாகச் சாடி வந்தார். ஆனால் ஆட்சிக்கு வந்த பின் வெளியிட்ட அறிக்கையில் “புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், தனியார் காப்பீட்டு நிறுவனங் களுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் இட மில்லை” என்று ஏன் அறிவிக்கவில்லை? மாறாக புதிய காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்று செயலலிதா அறிவித்துள்ளார்.

செயலலிதாவை மீண்டும் முதலமைச்சராக அமர்த்த வேண்டும் என்பதையே சூளுரையாகக் கொண்டு, ஊடகவியல் அறத்தையே குழிதோண்டிப் புதைத்து விட்டுச் செயல்பட்டுவரும் தினமணி 14.7.11 அன்று எழுதிய தலையங்கத்தில், “இந்தப் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஊழல் இருக்காது என்று தமிழக முதல்வர் நிரூபிக்க விரும்பினால், அவர் இத்திட்டத் தை முழுமையாக நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் போன்ற அரசுக் காப்பீட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இத்திட்டத் தைத் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அளித்தால், அந்நிறுவனங்கள் ஊழலுக்கு இடம் அளிப்பது ஒருபுறம் இருக்க, தனியார் மருத்துவமனைகள் கொழிக்கத்தான் வழிவகுக்கும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஒரு வியாபாரம். அதில் இலாபம் இல்லையென்றால் தனியார் யாரும் கடைவிரிக்க வரமாட்டார்கள்” என்று எழுதி யுள்ளது.

மேலும், “இத்திட்டத்தில் சிகிச்சைகளின் எண்ணிக் கையை 642இலிருந்து 950ஆக உயர்த்தியிருப்பது, இத்திட்டத்தை மக்கள் பயன்படுத்திக் கொள்ளும் பரப்பை விரிவு செய்கிறதா அல்லது காப்பீட்டு நிறு வனங்களின் பிரீமியத் தொகையை அதிகரிக்க உதவி செய்கிறதா என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது” என்று நியாயமான வினாவை தினமணி தொடுத்துள்ளது.

செயலலிதா அரசின் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், தனியார் காப்பீட்டு நிறுவனங்களையும், தனியார் ம்ருத்துவமனைகளையும் மேலும் கொழுக்கச் செய்வ தையே உள்நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது தெளிவாகப் புலனாகிறது. ஆயினும் புண்ணுக்குப் புனுகு பூசுவதுபோல் அரசு மருத்துவமனைகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்பது அறிவிக்கப் பட்டுள்ளது.

மக்கள் நலவாழ்வு ஏந்துகள் நோய் - மருத்துவர் - மருந்து தொடர்பானவை என்பதாகவே கருதப்படுகிறது. ஆனால் நலவாழ்வு என்பது மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு வாழ்நிலைகளோடும் பின்னிப் பிணைந்துள்ளது.

பொதுநலவாழ்வுத் திட்டம் என்பது உலகில் 1870இல் இங்கிலாந்தில் முதன்முதலாக அரசால் தொடங்கப்பட்டது. ஏனெனில் தொழில் புரட்சி எனப்படும் முதலாளிய உற்பத்தி முறையிலான தொழில் கள் இங்கிலாந்தில் மிகவும் வளர்ச்சி பெற்றிருந்தன. அதனால் 1850களிலேயே இங்கிலாந்தில் 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட மக்கள் நகரங்களில் வாழ்ந்தனர். அப்போது ரஷ்யாவில் 7% மக்களே நகரங்களில் வாழ்ந்தனர்.

1850இல் உலக அளவில் மக்களின் சராசரி வாழ்நாள் 26 ஆண்டுகளாக இருந்தது. ஆனால் இங்கிலாந்தில் 40 ஆண்டுகளாக இருந்தது. முதலாளிகளின் தொழிற்சாலைகளில் வேலை செய்ய, நோயற்ற, நல்ல உடல் நலமும் வலிமையும் நீண்ட ஆயுளும் கொண்ட தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். இத் தேவையின் காரணமாக 1870இல் பொதுநல வாழ்வுத் திட்டம் தொடங்கப்பட்டது.

அப்போது பல நோய்களுக்கான மருந்துகள் கண்டு பிடிக்கப்படவில்லை. ஆனால் நோய்கள் எவ்வாறு தொற்றிப் பரவுகின்றன என்பதை அறிந்திருந்தனர். எனவே இங்கிலாந்தில், பொது நல வாழ்வின் முதல் திட்டமாகத் துப்புரவு இயக்கம் தொடங்கப்பட்டது. நகரங்களில் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டன (சென்னைப்புறநகர்ப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வீடுகளுக்கு இன்னும் கழிவுநீர் கால்வாய் இணைப்பு இல்லை). நல்ல குடிநீர், மேம்பட்ட வீட்டு வசதிகள், தூய்மையான உணவு முதலானவை அனைவருக்கும் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால் இறப்பு விகிதம் வேகமாகக் குறைந்தது. 1880இல் பிரித்தானிய அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டு வந்தது. அதற்கு முதலாளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

1930களுக்குப் பிறகுதான் நோய் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. 1935இல் கந்தகத்தை அடிப்படை யாகக் கொண்ட மருந்துகள் கிடைக்கத் தொடங்கின. 1941இல் பென்சிலின் மருந்து முதன் முதலாக விற்பனைக்கு வந்தது. 1947 முதல் பல நோய் களுக்கான எதிர் உயிரி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.

1945இல் முடிவுற்ற இரண்டாம் உலகப் போருக்குப் பின், வடஅமெரிக்காவும், சோவியத் நாடும் உலகின் மாபெரும் வல்லரசுகளாக உருவெடுத்தன. தொழில் வளர்ச்சி பெற்ற அய்ரோப்பிய முதலாளிய நாடுகளை விட, சோவியத் நாட்டில் மக்களின் நலவாழ்வு பல மடங்கு மேம்பட்டதாக இருந்தது. அதேசமயம், அய் ரோப்பாவிலும் அமெரிக்காவிலும் 50 ஆண்டுகளுக் கும் மேலாகத் தொழிற்சங்க இயக்கங்கள் வலிமை யுடன் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டி ருந்தன. எனவே தொழிலாளர்களுடன் சமரசம் செய்து கொள்ளவும், பொது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறை வேற்றவும், அதன்மூலம் பொதுவுடைமைத் தத்துவம் பரவுவதைத் தடுக்கவும் முதலாளிய அரசுகள் முடிவு செய்தன. அதனால் 1936இல் இங்கிலாந்தின் பொருளியல் வல்லுநர் ஜான் மெனார்டு கீன்ஸ் என்பவர் வகுத்தளித்த மக்கள் நல அரசுக் கோட்பாட்டை நடைமுறைப் படுத்தின. மக்கள் அனைவருக்கும் கல்வி, மருத்துவம், குடிநீர், குடியிருப்பு, மின்சாரம், தூய்மையான சுற்றுச் சூழல் முதலானவற்றை அளிக்கும் பொறுப்பை அரசுகள் ஏற்றுச் செயல்படுத்தின.

இரண்டாம் உலகப் போருக்குப்பின் 1960க்குள், இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றன. இந்நாடுகளில் போதிய நிதி ஆதாரம் இல்லாவிடினும் பொதுநல வாழ்வுக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்த முயன்றன. 1948இல் அய்க்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமை ஆவணத்தின் விதி 25இல், பொதுநல வாழ்வு மனித உரிமையாகச் சேர்க்கப்பட்டது.

இந்தியாவில் பெரியம்மை முற்றிலுமாக ஒழிக்கப் பட்டுவிட்டது. தொழுநோய் கிட்டத்தட்ட ஒழிந்துவிட்டது. போலியோ சொட்டு மருந்து மூலம் இளம்பிள்ளை வாதம் பெருமளவில் குறைந்துவிட்டது. ஆனால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட மலேரியாவும், காச நோயும் மீண்டும் வீறுகொண்டு பரவிவருகின்றன. மலேரியா, கொசுக்கள் மூலம் பரவுகிறது. 1960-70 களில் கொசுக்களைக் கொல்ல மருந்து தெளித்தனர். மலேரியா காய்ச்சல் கண்டவர்களுக்கு வீடு வீடாக மருந்து கொடுத்தனர். ஆனால் கொசுக்கள் பல்கிப் பெருகு வதற்கான சூழலை ஒழிக்கவில்லை.

2011 மக்கள் தொகைக் கணக்குப்படி இந்தியாவி லேயே தமிழ்நாட்டில்தான் கிட்டத்தட்ட (49%) பாதிப் பேர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். இந்திய அளவில் 31ரூ பேர் நகரங்களில் வாழ்கின்றனர். இந்தியாவில் நகரங்களில் வாழ்வோரில் 30 முதல் 50 விழுக்காடு வரை குடிசைப் பகுதிகளில் வாழ்கின்றனர். மும்பை நகரில் 54% பேர் குடிசைப் பகுதிகளில் வாழ்கின்றனர். அடிப்படை வசதிகள் அற்ற இப்பகுதிகள் நோய்களின் புகலிடமாக உள்ளன.

இந்தியாவில் காசநோயாளிகள் 150 இலட்சம் பேர் உள்ளனர். மருந்துகளால் எளிதில் கட்டுப்படுத்த முடியாத காசநோய் வகை இந்தியாவில் அதிகமாக இருக்கிறது. இவர்களை அதிக விலை கொண்ட மருந்துகளால் மட்டுமே குணப்படுத்த முடியும். ஆண்டுதோறும் 22 இலட்சம் பேர் புதியதாக காசநோய்க்கு ஆளாகின்றனர்.

5 அகவைக்குட்பட்ட குழந்தைகளில் 47% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவாக உள்ளனர். இவர்களி டம் நோய் எதிர்ப்பாற்றல் மிகவும் குறைவாக இருக்கும். இதனால் ஆண்டுதோறும் 25 இலட்சம் குழந்தைகள் இறக்கின்றன. இக்குறைபாடுகளின் தொடர்ச்சியால் இளைஞர்களில் 25 இலட்சம் பேர் இறக்கின்றனர். மகப் பேற்றுக்குத் தகுதி உடைய வயதில் உள்ள பெண்களில் 70% பேர் இரத்தச்சோகையுடன் உள்ளனர்.

இவ்வாறு ஊட்டச்சத்துக் குறைபாடு, இரத்தச் சோகை, மலேரியா, காசநோய் முதலான நோய்களால் பாதிக்கப்படுவோரில் 90 விழுக்காட்டினர் தாழ்த்தப் பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் உழைக்கும் மக்களேயாவர்.

சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத் தில் இருந்த கசகஸ்தானில் அல்மா அட்டா என்ற நகரில் உலக சுகாதார அமைப்பும் அய்.நா. மன்றத்தின் குழந்தைகள் நலமேம்பாட்டு நிதியம் அமைப்பும் 1978ஆம் ஆண்டு ஒரு மாநாட்டை நடத்தின. உலக நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். 2000ஆவது ஆண்டிற்குள் அனைவருக்கும் நலவாழ்வு என்ற குறிக்கோளை அடைவது என்று தீர்மானம் இயற்றப் பட்டது. இது அல்மா அட்டா தீர்மானம் என்று வழங்கப் படுகிறது. இத்தீர்மானத்தின் அடிப்படையில் தான் இந்தியாவில் ஒரு வட்டாரத்திற்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்தப்பட்டது.

அதேபோன்று, 1978இல் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையம் அமைக்கப்பட்டது. 345 மருந்துகள் அரசின் விலைக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டன. காப்புரிமை பெற்ற மருந்துகளை, வேறு செயல்முறையில் தயாரித்து விற்பதற்கு அரசு அனுமதி யளித்தது. இக்காரணங்களால் மருந்துகளின் விலைகள் மிகவும் குறைந்தன. மருந்துகள் தட்டுப்பாடில்லாமல் கிடைத்தன. உலக நாடுகளிலேயே இந்தியாவில் மருந்துகள் விலை மிகவும் குறைவு என்ற நிலை ஏற்பட்டது. மாற்று செய்முறை மூலம் தயாரிக்கப்பட்ட மருந்துகள் மலிவு விலையில் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்நிலை 1991ஆம் ஆண்டு வரை நீடித்தது. ஆனால் இப்போது விலைக் கட்டுப்பாட்டில் 54 மருந்துகள் மட்டுமே உள்ளன. கடந்த 15 ஆண்டுகளில் மருந்துகள் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது.

1980களில் அமெரிக்காவில் ரொனால்டு ரீகனும், பிரிட்டனில் மார்க்ரெட் தாட்சரும் ஆட்சியில் இருந்த போது, அந்தந்த நாடுகளில், தாராளமயம், தனியார் மயம் எனும் கொள்கையைத் தீவிரமாக நடைமுறைப் படுத்தினர். பொருளாதார நடவடிக்கைகள் மீது அரசு செலுத்திவரும் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு, முழுமையாகத் தனியார் பொறுப்பில் - தடையற்ற சந்தைக்கு வழிவிட வேண்டும் என்பதே இதன் அடிப்படைக் கொள்கையாகும்.

புதிய தாராளமயக் கொள்கையாளர்கள், மக்கள் நல அரசுக் கோட்பாட்டை, பலவாறாகக் குறைகூறினர். கல்வி, மருத்துவம் முதலான மக்கள் நலத்திட்டங் களுக்கு அரசு பெருமளவில் செலவு செய்வதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி தேக்கமடைந்துள்ளது என்று வாதிட்டனர். அரசின் உதவியும் மானியமும் மக்கள் தமக்குள் போட்டி போட்டுக் கொண்டு தம் தகுதியை, திறமையை வளர்த்துக் கொள்வதற்குத் தடையாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டினர்.

காட் அமைப்பின் சார்பில் 1986 முதல் 1994 வரை நடைபெற்ற உருகுவே வட்டப் பேச்சு வார்த்தைகள் மூலம், அமெரிக்காவும், பிற அய்ரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளும் சேர்ந்து, மற்ற நாடுகளைத் தாராளமயம், தனியார் மயம், உலகமயம் என்ற கொள்கையை ஏற்குமாறு செய்தன. இதுவே காட் ஒப்பந்தமாகும். இது 1995 சனவரி முதல் நடை முறைக்கு வந்தது.

உலக வங்கியில் உயர் அதிகாரியாகப் பணி யாற்றிய மன்மோகன்சிங், 1991இல் நரசிம்மராவ் பிரதமரானபோது, நிதியமைச்சரானார். 1991ஆம் ஆண்டு இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு, அடுத்த இரண்டு கிழமைகளுக்கு மட்டுமே போதுமானது என்ற அளவில் மிகவும் குறைவாக இருந்தது. எனவே உலக வங்கியும் பன்னாட்டு நிதியமும், தாராளமய - தனி யார்மயக் கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று விதித்த நிபந்தனையை இந்திய அரசு ஏற்று, அந்நிறுவனங்களிடம் கடன் பெற்றது. இதன் விளை வாக மக்களுக்குக் கல்வி, மருத்துவம் ஆகியவற்றை வழங்கும் பொறுப்பிலிருந்து நடுவண் அரசும், மாநில அரசுகளும் விலகிக் கொண்டன. கல்வியும், மருத்து வமும் தனியாரின் வேட்டைக்காடாகிவிட்டன.

தாராளமய - தனியார்மயக் கொள்கையை நடை முறைப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநில மாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 480 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதைப் போலவே தன் நிதி கலை அறிவியல் கல்லூரிகள், ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள் மக்களின் குருதியை அட்டைகள் போல் உறிஞ்சி கொழுத்துக் கொண்டிருக்கின்றன.

ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் 80 விழுக்காட்டினர் அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் படிக்கின்றனர். ஆனால் புறநோயாளிகளில் 83% பேர் தனியார் மருத்துவர்களிடம் செல்கின்றனர். 17% பேர் மட்டுமே அரசு மருத்துவமனைகளை நாடிச் செல்கின்றனர். மருத்துவமனைகளில் சேர்ந்து மருத்துவம் பெறுவோரில் கிராமப்புறங்களில் 60ரூ பேரும் நகரங்களில் 70% பேரும் தனியார் மருத்துவ மனைகளில் சேருகின்றனர். அந்த அளவுக்கு மருத்துவம் தனியார் மயமாகி உள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்து உலகில் தனியார் மயமாக்கப்பட்ட மருத்துவ சேவை இந்தியாவில்தான் இருக்கிறது. நாட்டில் மருத்துவத்திற்காகச் செலவிடப்படும் தொகையில் 83%யை மக்கள் தம் சொந்தப் பணத்திலிருந்து செலவிடும் அவலநிலை உள்ளது. தனியார் மருத்துவ மனைகளில் சேர்ந்து மருத்துவம் பெறுவோரில் 40% பேர் மருத்துவச் செலவுக்காகக் கடன் வாங்குகின்றனர் அல்லது தம் சொத்தை விற்கின்றனர். இதனால் 35% பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்படுகின்றனர் என்று உலக வங்கி அறிக்கையே சுட்டிக்காட்டுகிறது.

நட்சத்திர தகுதி பெற்ற தங்கும்-உணவு விடுதிகள் போல், கார்ப்பரேட் மருத்துவமனைகள் பெரு நகரங் களில் ஏற்பட்டுள்ளன. இம்மருத்துவமனைகளுக்குச் சுண்டைக்காய் விலையில் அரசு நிலங்களை அளிக்கிறது. (எ.கா. சென்னை போரூரில் உள்ள இராமச் சந்திரா மருத்துவமனை) தடையற்ற மின்வசதி தரப் படுகிறது. இறக்குமதி செய்யப்படும் கருவிகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. இவைதவிர, நோய் களைக் கண்டறிய உயர் தொழில்நுட்ப ஆய்வு மையங்கள் என்பவை ஏற்பட்டுள்ளன. தனியார் மருத்துவர்கள் இம்மையங்களுக்குத் தரகர்களாக வேலை செய்து பணம் பெறுகின்றனர். தனியார் மருத்துவமனைகள் அரசின் கட்டுப்பாடு ஏதுமின்றி, தம் விருப்பம் போல் நோயாளிகளிடம் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன.

அய்ரோப்பாவில் பெரும்பாலான நாடுகளில் நேரடி யாக அரசின் நிதி உதவி, அல்லது இலாப நோக்கமற்ற காபீட்டு நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது. இங்கிலாந்தில் தேசிய நலவாழ்வு சேவையின் கீழ் இருந்த புறநோயாளி களில் 64% பேர்களைத் தனியார் மருத்துவமனைக்கு அரசு மாற்றியது. தனியார் மருத்துவமனைகளில் இவர்கள் பெறும் மருத்துவத்துக்கான செலவை அரசு ஏற்கிறது. ஆயினும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவ சேவையைச் சந்தைச்சரக்காக மாற்றிவரு கின்றன. அமெரிக்காவின் மக்கள் தொகை 32 கோடி. இவர்களில் 5 கோடிப் பேருக்கு மருத்துவக் காப்பீடு இல்லை. மேலும் பல கோடிப் பேர் வருவாய் பற்றாக் குறையால், குறைவான தொகைக்கே காப்பீடு செய் துள்ளனர்.

அமெரிக்காவில் தனியார் காப்பீட்டு நிறுவனங் களும், மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் பெரு மளவில் மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் வகையில் மருத்துவ சேவை என்பது இருக்கிறது. கலைஞர் மருத்துவக் காப்பீடாயினும், செயலலிதாவின் புதிய மருத்துவக் காப்பீடாயினும் அமெரிக்காவில் இருப்பது போன்ற நிலையை இங்கு ஏற்படுத்துவதற்கு வழிவகுப்பனவேயாகும்.

கிராமப்புறங்களில் உள்ள துணை சுகாதார மையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றை மேலும் நவீனப்படுத்தி, தேவையான மருத்துவர்கள், செவிலி யர்கள், மற்ற அலுவலர்களை அமர்த்தி, போதிய அளவில் தரமான மருந்துகளை அளித்து, இவை முறையாகச் செயல்படச் செய்வதன் மூலமே நடுத்தர, ஏழை, எளிய மக்கள் நல்ல மருத்துவ சேவையைப் பெற முடியும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரியுடன் செயல்படும் அரசு மருத்துவமனைகளை ஏற்படுத்தி, அவற்றில் எல்லாவகையான அறுவை மருத்துவமும் செய்யப்படக் கூடிய நிலையை உருவாக்க வேண்டும். இவற்றைச் செய்யாமல் ‘முதலமைச்சர் மருத்துவ முகாம்கள்’ நடத்துவது, 108 மருத்துவ ஊர்தி, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், தேசிய ஊரக நலவாழ்வு இயக்கம் என்கிற திட்டங்கள் மக்களைத் திசைத்திருப்பவும், ஏமாற்றவும் செய்கிற அரசின் செயல்களேயாகும்.

சந்தையில் தேவை-அளிப்பு என்பதாக மருத்துவ சேவையைக் கருத முடியாது. சந்தைக்கு சமூகநலன் பற்றிய அக்கறை கிடையாது. இலாபம் மட்டுமே அதன் குறிக்கோள். அதனால் சமூகச் சிக்கல்களைச் சந்தையால் தீர்க்க முடியாது. எனவே அனைத்துப் பிரிவு மக்களும் நலவாழ்வு பெறுவதற்கான சூழலையும், மருத்துவ சேவையையும் அரசு தான் அளிக்க வேண்டும்.

Pin It