எத்தனைக்கும் அம்மா அஞ்சுவ தில்லை
        எவர்பின் னாலும்போய்க் கெஞ்சுவதில்லை
சித்திரை மீண்டும் புத்தாண் டானது
       திருவள்ளு வராண்டு குப்பைக்குப் போனது

நாரதக் கதைஓர் ஆபாசக் கூத்து
       நம்தலையில் பார்ப்பான் எழுதினான் சேர்த்து
ஆரியப் படையின் தலைவிதான் அம்மா
       அதிகாரம் கையில் விடுவாரா சும்மா?

தைமுதல் நாளே தமிழ்ப்புத் தாண்டு
       தமிழறிஞர் கூடிக் குறித்தனர் ஈண்டு
பொய்முதலே கொண்ட ஆரியம் மீதில்
       புதிய ஆட்சிக்குத் தீராத காதல்

இனப்பற்றில் முதல்வர் ஈடிணை யற்றவர்
      இதிகாச இராமன்மேல் மிகப்பற்று வைத்தவர்
குணக்குன் றாக மோடியை மதிப்பார்
      குசராத் பாடத்தை விரும்பிப் படிப்பார்

கரசேவை செய்யவும் தொண்டர்கள் போவர்
      கண்மூடி மண்சோறு தின்றுமே சாவர்
அறிஞர் அண்ணா கொடியிலே மட்டும்
       அத்தனையும் மொட்டைச் சோவின் திட்டம்

வெட்கமில் லாதது கலைஞரின் ஓலம்
       வீசித் தெருவிலே எறிந்தால்தான் நீளும்
உட்கார்ந் திருந்தாரே உடன்செய் தாரா?
       உரிமைப் போருக்குத் தலைவைத் தாரா?

சாக்காடு வரைக்கும் போனபின் னாலே
      தப்பிப் பிழைத்தது சமச்சீர் கல்வி
நோக்காடு கொண்ட சூத்திரர் துன்பம்
      நுனிநாக்கு ஆங்கிலக் கும்பலுக் கின்பம்

தடவித் தடவித் தமிழனைச் சுரண்டுவர்
      சாதி மதஞ்சொல்லிச் சக்கையாய் உறிஞ்சுவர்
புடவை கட்டிய இராசாசி ஆட்சி
     புதுப்பிக்கப் படலாம் நமக்கேது மீட்சி?

Pin It