‘உச்ச நீதிமன்றம் என்பது உச்சிக்குடுமி மன்றம்’ என்றார் பெரியார். சில வேளைகளில் சில நீதிபதிகள் சமூகக் கண்ணோட்டத்தோடு தீர்ப்பு எழுதுகிறார்கள். இந்த மாதிரியான தீர்ப்புகள் அரசால் நடைமுறைப் படுத்தப்படுகிறதோ இல்லையோ, பகுத்தறிவாளர்களால் கவனிக்கப்பட வேண்டியிருக்கிறது. சமூக மாற் றத்திற்கான மனப்பான்மை கொண்டவர்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். சரி! நாம் தீர்ப்புக்கு வருவோம்.

“சாலைகள் எந்த ஒரு நபரின் சொத்துமல்ல, சாலைகளில் இடையூறு இல்லாமல் சுதந்தரமாகச் செல்ல, ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமையுள்ளது. அதனால் சாலைகளில் சிலைகள், கோயில்கள், மசூதி கள் மற்றும் தேவாலயங்கள் அமைத்துக் குடிமக்களின் உரிமையைப் பறிக்கக்கூடாது. இதுபோன்ற நடை முறைகள் ஓரங்கட்டப்பட வேண்டும். சிலரைப் பெருமைப் படுத்துவதற்காக நிதியைச் செலவிடுவதற்குப் பதிலாக, அந்த நிதியை ஏழைகளின் மேம்பாட்டுக்காக அரசுகள் செலவிட வேண்டும். அதே நேரத்தில் சாலைகளின் போக்குவரத்துக்குப் பயன்படும் வகையில் தெருவிளக்கு கள் அமைப்பது போன்றவற்றுக்கு எவ்விதத் தடையும் இல்லை” என்று அண்மையில் தம் தீர்ப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம். லோதா மற்றும் எ°.கே. முகோபாத்யா ஆகியோர் கூறியுள்ளனர்.

புத்தர் காலம் தொடங்கி, சித்தர் காலத்தில் வளர்ந்து பெரியார் காலம் வரையிலும் உருவ வழிபாடுகளை யும் சிலை வணக்கங்களையும் எதிர்த்துப் பரப்புரை கள் நடந்த வண்ணமேயுள்ளன. பல்வேறு இயக்கங் களும், மத நிறுவனங்களும் இதற்கென்றே இயங்கிக் கொண்டு தானிருக்கின்றன. ஆனால் நடப்பு என்பது “சாண் ஏறினால் முழம் சறுக்குகிற” அளவிலேயே இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்திய அள விலும் உலக அளவிலும் போக்குகள் இப்படித்தானிருக் கின்றன. இதை ஆய்வு செய்யும் மாணவர்கள்தான் அலச வேண்டுமென்பதில்லை. முற்போக்காளர் ஒவ் வொருவருமே சிலைகள் பற்றியும், சிலை வழிபாடுகள் பற்றியும் அதிலுள்ள அரசியலையும் சிந்திக்க வேண்டும்.

தற்போது சிலைகள் எந்தெந்த வடிவில் இருக்கின் றன? கோயில்களில் கடவுள், கடவுளச்சிகளாகவும், வரலாற்று மரபுகளைச் சித்திரிக்கின்ற பொம்மைகளா கவும், ஆண்ட மன்னர்களின் அடையாளச் சின்னங் களாகவும், போர் வீரர்களாகவும், மத போதகர்களா கவும், சமூகப் போராளிகளாகவும், சாதித் தலைவர் களாகவும், அரசியல் தலைவர்களாகவும், செல்வச் செழிப்புள்ளவர்களாகவும், அரசுக்கட்டுப்பாட்டுக்குட்பட்ட, தனியார் அதிகாரத்திற்குட்பட்ட அனைத்து இடங்களி லும், மேற்குறிப்பிட்டபடி சிலைகள் இருப்பதைப் பார்த் துக் கொண்டிருக்கிறோம்.

விமர்சனப் பார்வையில் தான் எல்லோரும் இச் சிலைகளைப் பார்க்கிறோம். ஆனால் ஒவ்வொருவருக் குள்ளேயும் மன ஒதுக்கீடு இருந்து கொண்டுதானிருக் கும். அதாவது, தங்களது மதக்கோயில்கள், தங்களது சாதி, மத, அரசியல் தலைவர்களின் சிலைகளை மட்டும் ஏற்றுக்கொண்டு மற்றவைகளை நிராகரிக்கும் மனப்பான்மை தனியுடமையைப் பாதுகாப்பதுபோல் தங்களது கடவுள்களின், தலைவர்களின் சிலைகளை உயிரைக் கொடுத்துக் காப்பாற்றுகிறார்கள். அதே அளவுக்கு மாற்றார் கடவுள், தலைவர்களின் சிலைகளின் மேல் வெறுப்பை உமிழ்கிறார்கள். அப்படியானால் இச்சிலை களைத் தனியுடமை போல் கண்துஞ்சாமல் பாதுகாத் தால்தான் அவ்விடத்தில் அச்சிலைகள் இருக்கும். இல்லையேல் கேள்விக்குறிதான். அது தனியாருக்குச் சொந்தமானாலும் அரசுக்குச் சொந்தமானாலும் நிலை ஒன்றுதான்.

கல்லிலே சிலை வைத்தால் காக்காய் கழிவதோடு நின்றுவிடும். பொன்னிலோ, வெள்ளியிலோ வைத்து விட்டால் இராணுவம் பாதுகாத்தால் கூடத் திருடுபோய் விடும். கடவுள் சிலையானாலும், தலைவர் சிலையா னாலும் திருடன் அதை ஒரு பொருளாகத்தான் பார்ப் பான். ஒரு கவிஞன் எழுதினான் “என்னிடம் வேண் டாதீர்கள், என்னையே திருடுகிறார்கள். என்னை மதிக்காதீர்கள் என்னையே உடைக்கிறார்கள்” என்று. சிலைகளுக்குக் கிடைக்கும் மரியாதை அவ்வளவுதான்.

அதுமட்டுமல்ல, இலங்கையில் போருக்குப் பின்னர் தமிழர் வாழ்ந்த பகுதிகளிலிருந்த இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டு, புத்த விகார்களாக மாறிக்கொண்டிருக் கின்றன. உத்திரப்பிரதேசத்தில் மாயாவதி தனக்கு வைத்த சிலைகளை அடுத்து வந்த ஆட்சியாளர்கள் உடைத்தெறிகின்றனர். உலகம் முழுக்க இதுதான் நிலை.

மக்கள் தொகை கூடுவது போல சிலைகளின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டுதானிருக்கிறது. அதே அளவுக்குச் சிலைகளினால் பிரச்சனைகளும், வன் முறைகளும் கூடிக்கொண்டேயிருக்கின்றன. கல்வியறி வும், பகுத்தறிவும் குறைந்த இந்நாட்டில் சிலைகளின் எண்ணிக்கைக் கூடுமே தவிரக் குறைவதற்கு வாய்ப் பில்லை. ஒவ்வொரு முச்சந்தியிலும் ஒரு சிலை இருக் கும். அதனால்தான் கண்டதை உளறும் கண்ணதாசன் கூட “மூலையில் நேரு நிற்பார், முடுக்கினில் காந்தி நிற்பார், சாலையில் யாரோ நிற்பார், சரித்திரம் எழுதப் பார்ப்பார்.... மண்ணகம் முழுதும் இன்று மனிதர் கள் சிலை ஆயிற்று” என்று கிண்டலடித்தான். தலை வர்களுக்குச் சொன்ன நய்யாண்டியைக் கடவுள் சிலைகளுக்கும் நாம் பொருத்திக் கொள்ளலாம்.

உலகில் நீளமான பெரிய கடற்கரை சென்னை யிலுள்ள மெரினா. சிற்பக்கலையின் பெருமையையும், உழைப்பாளர்களின் சிறப்பினையும் வெளிப்படுத்தும் வகையில் மெரினாவிற்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில் 1959ஆம் ஆண்டில் வைக்கப்பட்டதுதான் உழைப்பாளர் சிலை. இச்சிலை எத்தனை முறை மீண்டும் மீண்டும் பார்த்தாலும் பார்ப்போர்க்குப் புதிய புதிய பிரமிப்பு ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். இதே கடற்கரையின் சாலையின் ஓரத்தில் பல சிலைகளை வைத்துச் சிலைகளின் சாலையாக மாற்றிய பெருமை அன்றைய முதல்வர் அண்ணாவையே சேரும். பிறகு கடற்கரை சாலையைக் கல்லறைச் சாலையாக மாற்றிய பெருமை கலைஞரையே சேரும். இதன் நீட்சி, நடிப்புச் சிறப்பைத் தவிர வேறு எதுவும் இல்லாத சிவாஜிகணேசனுக்குச் சிலை வைப்பதில் கொண்டு வந்துவிட்டது.

கலை என்றாலே சிலை. கலைஞர் என்றால் சிலைஞர் என்றால் மிகையல்ல. “கல்லெல்லாம் சிலை செய்தான் பல்லவராஜா” என்று திரைப்படப் பாடல் உண்டு. பல்லவராஜா இடத்தில் நாம் கலை ஞரை வைத்து மகிழலாம். அவர் அடிக்கடி தலைவர் களுக்குச் சிலை வைத்த பெருமையைத்தான் பேசுவார். அந்தப் பெருமைகளுக்கு மேலும் பெருமை சேர்ப்ப தற்குத்தான் அமெரிக்கக்காரன் தமது சுதந்தரத்தின் நினைவாக 305 அடி உயரத்தில் எழுப்பிய சுதந்தர தேவி சிலையைப் போல, அவர் கன்னியாகுமரியில் கடல் நடுவில் பாறை மீது திருவள்ளுவருக்கு அவரது குறட்பா அதிகாரங்களைக் குறிப்பிடும் வகையில் 133 அடி உயரத்தில் சிலை எழுப்பினார். பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை நிறுவிப் பல ஆண்டுகளாகத் திறக்கப்படாமலே இருந்தது. பண்டங்கள் கொடுக்கல் வாங்கல் போலத் தீர்வு கண்டார் சிலைகளின் கலைஞர். சென்னையில் திருவள்ளுவருக்கு நிகராகக் கன்னடக் கவிஞர் சர்வக்ஞருக்குச் சிலை திறக்கப்பட்டது. பெங் களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. அப்பொழுதே அன்றைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, காவிரி பிரச்சனையில் தமிழர்கள் கவிஞரின் சிலையை உடைக்கமாட்டார்களா? என்ற கேள்வியை எழுப்பி யிருக்கிறார்.

கலைஞருக்கு இது தெரியாததல்ல. சிலை வைத் தால் அதை ஒருவன் உடைப்பான். பெரியாரால் அறிவிக் கப்பட்டு தி.க.வினரால் வைக்கப்பட்டிருந்த அவரது சிலையை எம்.ஜி.ஆர். இறந்த போது ஒருவன் உடைத் தான். அதை நேரிலேயே பார்த்தவர்தான் கலைஞர். இன்று வரையில் அவ்விடத்தில் கலைஞர் சிலை மீண்டும் வைக்கப்படவில்லையே, அது ஏன்? என்ற கேள்வி தமிழர்களிடையே இருந்துகொண்டுதானிருக் கிறது. கலைஞருக்கு தி.க.வினர் சிலை வைப்பதற்கு முன்னதாகவே, சென்னை அண்ணாசாலையில், சிம்சன் எதிரில் அமர்ந்த நிலையில் பெரியார் உயிருடன் இருக் கும்போது சிலை வைத்துப் பெருமை கொண்டவர் கலைஞர். பெரியார் தத்துவ விளக்கத்திற்காக ஒருமுறை செய்ததைப் பின் வந்தவர்கள் தற்பெருமைக்கு ஆட் பட்டு அதையே பழக்கமாக்கிக்கொண்டார்கள். விளைவு சிலைகளை வெறுத்து, செருப்பால் அடிக்கச் சொன்ன பெரியாருக்குத் தெருத்தோறும் சிலைகள். கடவுள் பொம்மைகளுக்கு நிகராக மாலை, மரியாதை நினைவு நாள், கருமாதி விழாக்கள். காஞ்சிபுரத்தில் ஒருவன் பெரியார் சிலைக்கு சூடமேற்றி மணி அடித்துவிட்டான். அதை எல்லோரும் பார்த்தார்கள். அவனிடம் “கடவுள் இல்லை என்ற பெரியாருக்கு இப்படிச் செய்யலாமா?” என்று கேட்டதற்கு, ‘நன்றியின் வெளிப்பாடு’ என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டான். கலைஞரைவிட, வீர மணியைவிட அவன் எவ்வளவோமேல்.

திராவிடர் கழகம் பெரியாருக்குச் சிலை வைப்ப தையும், சில்லரை எண்ணுவதையும் மட்டுமே வேலைத் திட்டமாகக் கொண்டுள்ளது. அண்மையில் ஸ்ரீரங்கம் பெரியார் சிலை உடைப்புக்குப் பிறகு தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கோயில்களுக்கு அருகிலேயே 128 பெரியார் சிலைகளை நிறுவ உள்ளதாக தி.க. அறிவித்திருக் கிறது. அந்த அமைப்பின் இரட்டைக் குழல் துப்பாக் கியின் இன்னொரு குழலான தி.மு.க.வின் தலைவர் கலைஞர் ஒரு பேட்டியில், “கோயிலுக்கு உள்ளே யிருக்கும் உடையற்ற சிலைகளைக் காட்டிலும் வெளியே உள்ள பெரியார் சிலை கண்ணியமான தோற்றத்தில் தானே காட்சியளிக்கிறது. கோயில் அர்ச்சகர்களே சற்றுத் தயக்கத்துடன் அச்சிலைகளுக்கு உடை உடுத்த வேண்டியுள்ளது” என எதையும் நேரடியாகப் பேசிப் பழக்கப்படாத அவர் சொல்லியிருக்கிறார். “நிறைய சிலைகள் இருந்தா நிறைய விபத்துகளும் நடக்கும்; கலவரங்களும் நடக்கும்”னு பெரியார் சொன்னது வீரமணிக்குத் தெரியாதா? இவர்களின் சிலை விளக் கத்திற்கும், மதவாதிகளின் சிலை வழிபாட்டிற்கும் என்ன பெரிய வேறுபாடு இருக்கிறது?

மதம் என்றாலே மயக்கம் தானே! மக்களை மயக்குவதற்கு மதவாதிகள் கண்டுபிடித்த கருவிதான் சிலை. ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்றாவது கை கொடுக்காதா? என்ற கேள்வியினால் தான், எண் ணற்ற கடவுள் சிலைகளை ஒவ்வொரு காலக்கட்டத் திலும் உருவாக்கிக் கொண்டேயிருக்கின்றனர். “கார்கில் பிள்ளையார்” ஒரு எடுத்துக்காட்டு. ஈராயிரம் ஆண்டு களுக்கு முன்னால் இந்து மதத்தினரைப் போலவே மற்ற மதத்தினரும் எண்ணற்ற கடவுள் சிலைகளை உருவாக்கி வழிபட்டுக் கொண்டிருந்தனர்.

நூற்றுக்கணக்கான உருவப் பொம்மைகளை வழி பட்டுக் கொண்டிருந்தவர்கள்தான் முகமதியர்கள். ஏறக் குறைய 1500 ஆண்டுகளுக்கு முன்னால் முகமது நபி செய்த புரட்சியால் உருவப் பொம்மைகளை ஒழித்துக் கட்டி, “எங்கும் நிறைந்திருப்பவனே இறைவன். உருவமற்ற ஒரு கடவுளை உருவாக்கினார். அவர் தான் அல்லா. நபிகள் தன்னை ஒரு இறைத்தூதர் என்று மட்டுமே அறிவித்துக் கொண்டார். மேலும், மக்கள் சமுதாயத்துக்கு ஒரே கடவுள், ஒரே குலம் வேண்டும். உருவ வழிபாட்டுக்கு மக்கள் ஆளாகக் கூடாது. நான் என்ன சொல்லியிருந்தாலும், அவற்றை உங்கள் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பாருங்கள்” என்று சொல்லி மக்களை அறிவுப் பாதைக்கு அழைத் துச் சென்றவர் நபி.

2000 ஆண்டுகளுக்கு முன்னால் ஏசு கிருஸ்து, நபி போலவே ஆயிரக்கணக்கான உருவப் பொம்மை களை ஒழித்துக்கட்டி கண்ணுக்குத் தெரியாதிருக்கும் கர்த்தர்தான் கடவுள். தான் ஒரு இறைத்தூதன் என்று அறிவித்துக் கொண்டார். பிரேசிலில் ஏசுவுக்கு 700 டன் எடையில் 130 அடி உயரத்தில் தரையிலிருந்து 2296 அடி உயரத்தில் கொர்கோவாடோ (Corcovado) எனும் மலையின் மேலே இரண்டு கைகளையும் விரித்தபடி, எட்டு மீட்டர் உயரமுள்ள பீடத்தின் மீது சிலை வைத்திருக்கிறார்கள். இந்தச் சிலையின் இரண்டு கைகளின் விரல்களுக்கு இடையே உள்ள தூரம் 28 மீட்டர். இந்தப் பிரம்மாண்டமான சிலையின் சிறப்பே, இது ஒரு மலையின் உச்சியில் இருக்கிறது என்பதுதான். ஏசுவுக்கு ஏற்பட்ட நிலையைப் பாருங்கள்!

புத்தன், ஏசு, நபி ஆகியோரின் கொள்கைகள் உலகம் முழுக்க வணிகப் பொருளாகிவிட்டன. இந்த வரிசையில் பெரியாரையும் சேர்த்துக் கொள்ளலாம். உலகம் முழுக்க இசுலாமியர்கள் பெண்களுக்கு ‘பர்தா’ போடுவதிலும், ஆண்கள் தலையில் தொப்பியணிந்து, மசூதிக்குப் போனால் மட்டும் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் முகமதியர்கள். அதேபோல் கிருத்து வர்கள் வாரத்திற்கு ஒரு நாள் தேவாலயத்திற்குச் சென்று செய்த பாவத்திற்கு மன்னிப்பு வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். மற்றபடி எல்லாமே அவர்களுக்கு வணிகம்தான். சிலை வணக்கம், வழிபாடு கூடாது என்றார் ஏசு. ஆனால் மிக உயர்ந்த மலைகளின் மேல் உயரமாக ஏசுவுக்கும் அவரது கன்னித்தாய் மாதாவுக்கும் சிலை வைத்து வழிபாடு செய்வதில் பெருமையும் புனிதமும் காண்கிறார்கள். அன்பு, கருணை என்பதெல்லாம் கண்களில்தான் தெரியும்; உள்ளத்தில் இருக்காது.

பவுத்தத்தை எடுத்துக்கொண்டால் எல்லாமே தலைகீழ். உலகத்திலேயே பவுத்த நாடுகளில் மிகப் பெரிய நாடு சீனா. மக்கள் தொகையில், முதலிடத்தில் இருக்கிறது. ஆசியாவின் பழைய பொதுவுடைமை நாடு. இவ்வளவு பெருமைகளைவிட, வேறொன்றி லும் பெருமை கொண்டது இந்நாடு. இங்குதான் 233 அடி உயரமும், 92 அடி அகலமும் கொண்ட மிகப் பெரிய புத்தர் சிலை இருக்கிறது. இதைவிடப் பெரிய கொடுமை உலகிலேயே அதிகமான சிலைகள் புத்தருக் குத்தான் இருக்கிறது. மேற்கத்திய முகவெட்டைக் கொண்ட ஏசுவை அப்படியே ஏற்றுக்கொண்டவர்கள் இந்திய கிருத்துவ மக்கள். ஆனால் புத்தர் ஆசியக் கண்டம் முழுக்க ஒரே மாதிரியான உருவில் இல்லை. பெரும்பான்மையான ஆசிய மக்கள் அவரை சீனர் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அம்மாநிலத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 182 மீட்டர் உயரத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் ஏறக்குறைய 2 ஆயிரத்து 75 கோடி செலவில் நருமதை ஆற்றின் நடுவில் உள்ள சாதுபெட் என்ற குட்டித்தீவில் சிலை நிறுவத் திட்டமிட்டுள்ளார். இவைகளை சிலை அரசி யல் என்று பார்க்காமல் வேறு எப்படிப் பார்ப்பது?

மத நிறுவனங்களை உருவாக்கிய புத்தர், ஏசு, நபி இவர்களுக்குத்தான் இந்த நிலை என்றால், பகுத்தறிவையும், நாட்டு விடுதலையையும், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பையும், கடவுள் மறுப்பையும் கொள்கை களாகக் கொண்டு, அதற்காகத் தன் வாழ்நாளையே ஒப்படைத்துக் கொண்ட பெரியாருக்கு ஏற்பட்ட நிலை கொடுமையிலும் கொடுமை.

புத்தருக்கு ஏற்பட்ட நிலை எங்கே தனக்கும் ஏற்பட்டுவிடுமோ! எனப் பயந்த பெரியார், தன் வாரிசு களாக தனது எழுத்துக்களையே குறிப்பிட்டார். ஆனால் பெரியார் எதற்குப் பயந்தாரோ அந்த வேலை யை அவரது சீடர்கள் எப்போதோ தொடங்கிவிட்டார் கள். சாலையோரம் நிற்கும் ஆஞ்சநேயர் சிலைக்குப் போட்டியாக பெரியாரைக் கொண்டு வந்துவிட்டார்கள். அண்மையில், பெரியாருக்கு 95 அடி உயரத்தில் வெண் கல சிலை அமைப்பதற்கான வசூல் வேட்டையை தி.க.வினர் தொடங்கிவிட்டனர். புத்த மார்க்கம் மதமா னது போல் பெரியார் இயக்கமும் மதமாகி விடுமோ?

புராதனப் பொதுவுடைமைச் சமூகத்தைச் சேர்ந்த மனித இனம் எப்படி மதத்துக்கும், சாதிக்கும், கடவு ளுக்கும், உருவ வழிபாட்டுக்கும் இவ்வளவு முக்கியத் துவம் கொடுத்திருக்கக் கூடும்? என்ற கேள்வி எல் லோரிடமும் இருக்கிறது.

தொடக்கக்கால சமூகத்தில் பெண்தான் தலைமைப் பொறுப்பேற்றிருக்கிறாள். அதுவரையில் பொதுவுடமை சமூகமாகத்தான் இருந்திருக்கிறது. அவளைக் கீழே தள்ளிவிட்டு ஆண் தலைமையேற்ற போதிலிருந்து தான் அத்தனை அயோக்கியத்தனங்களும் ஆரம்பமா கின்றன. அவள் கலகக்காரியாக மாறிவிடக்கூடாது என்ற எண்ணத்திலேயே இயற்கை வளங்களுக்கெல் லாம் பெண்ணின் பெயரைச் சூட்டியிருக்கிறான். சிலை களில் கூட, ஆண் சிலைகளை விடப் பெண் சிலைகளே அதிகம்.

நிலங்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அய்ந்தாகப் பிரித்தார்கள். அந்தந்த இயற் கைச் சூழலில் வாழ்ந்த மனிதன். அந்தக் குழுத்தலை வன் வேட்டையிலோ, சண்டையிலோ இறந்துவிடும் போது அவன் நினைவாக நட்டகல்தான் நடுகல். நாளடைவில் இதுவே நடுகல் வழிபாடானது. தொடக்கக் காலத்தில் மலைகளில் கையில் குச்சியை வைத்துக் கொண்டு நிர்வாணமாக நிற்கும் முருகனை வழிபட்டனர். அச்சிலைக்கு முதலில் யானையைத்தான் ஊர்தியாக்கி னர். பின்னர் அதை மயிலாக்கிவிட்டனர். மலையில் கிடைத்த தேனையும், தினை மாவையும் முருகனுக்கு உணவாக்கினர். பின்னர் கையில் வைத்திருந்த குச்சி யைப் பிடுங்கிப் போட்டுவிட்டு வேலைச் செருகினார்கள். யானையை எடுத்துவிட்டு மயிலை ஊர்தியாக்கினர். சிவன் வழிபாடு என்பது அடுத்தக்கட்டம். நீண்ட மயிர் வளர்த்த கறுப்பு உருவம் புலித்தோல் இடுப்பில் அணிந்தபடி புலித்தோல் மீது அமர்ந்திருக்கும். ஒரு கையில் விலங்குகளை விரட்டும் உடுக்கையும், மறு கையில் வேட்டைக்குப் பயன்படும் ஆயுதமும் ஏந்திய படி இருப்பதுதான் சிவன். நடுகல் வழிபாடு உருவ வழிபாடாகவும், சிலை வழிபாடாகவும் வளர்ந்துவிட்டது. அரசு, அரசர்கள் அமைப்புகள் ஏற்பட்டவுடன் ஆள்பவர் கள் கடவுளுக்கு நிகராகத் தங்களுக்குச் சிலைகள் எழுப்பி அதிகாரத்தைத் தக்க வைக்கும் வகையில் வழி பாட்டுக்குரியவர்களாகத் தங்களை மாற்றிக் கொண்டனர். போலித்தனமான ஜனநாயகம் மலர்கிறது. மக்கள் தலைவர்களாக மாறுகிறார்கள். தலைவர்களெல்லாம் சிலைகளாக மாறிவிட்டார்கள்.

சீர்திருத்தவாதிகள், புரட்சியாளர்கள், கலகக்காரர்கள், சிந்தனையாளர்கள், மனிதநேயப் பற்றாளர்கள், மனித குல மேதைகள் எல்லாருமே தாங்கள் இறந்தவுடன், சிலைகளாக நின்று கொண்டு பொது மக்களுக்குத் துளியளவும் பயன்படாத கோயில்கள், மசூதிகள், தேவால யங்கள் போல் போக்குவரத்துக்குத் தொந்தரவாக நின்று கொண்டிருக்கிறார்களே! என்பதுதான் நமது ஒரே கவலை. மேற்குறிப்பிட்ட அனைத்துச் சிலை களையும் உடைத்தெறியும் நாள் எந்நாளோ!

சிலை அரசியலை வெறுத்திடுவோம்!

சிந்தனைகளை வளர்த்திடுவோம்!

Pin It