சுற்றம் சூழ வாழ்தலே செல்வம்

     பெற்றதன் பயனாம்!

உற்ற நட்பே வாழ்வினில் எவர்க்கும்

     உயிர்காக்கும் துணையாம்!

நல்லோர் நட்பு வளர்பிறை போல

     நாளும் வளர்ந்திடுமாம்!

பொல்லார் நட்பு தேய்பிறை போலத்

     தேய்ந்து மறைந்திடுமாம்!

உடுக்கை நெகிழ்ந்தவன் கைபோல் நட்பு

     இடுக்கண் களைந்திடுமாம்!

இடித்துத் திருத்தித் தோழமை காக்க

     நட்பே விரைந்திடுமாம்!

அழிவைத் தடுத்து நன்னெறி காட்டி

     ஆக்கம் தரல்நட்பு!

விழியால் பார்த்தும் உதட்டால் சிரித்தும்

     மறைவது அல்லநட்பு!

நற்குடிப் பிறந்தார் பழிச்செயல் விரும்பார்

     நட்புக் கொளல்வேண்டும்!

உப்பாய் உலகிற்கு அமைந்தார் உறவை

     உவந்து போற்றவேண்டும்! 

- இரணியன், ‘தமிழ் அகம், கோவை

Pin It