மருத்துவர் சந்திரன் அந்தப் பகுதியில் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, நடுநிலை அளவில் ஒரு மருத்துவமனையை நடத்தி வருகிறார். அந்தப் பகுதி மிகவும் ஏழைகள் வாழும் பகுதி. மருத்துவர் சந்திரன் பணத்தின் மீது அதிக ஆசை கொள்ளாமல், அப்பகுதி மக்களுக்கு மருத்துவ சேவையைச் செய்து வந்தார். அப்பகுதி மக்களும் “ஐயர் தங்கமான மனுஷன்” என்றுமிகுந்த மரியாதையுடன் இருந்தனர். அப்படிப் பட்ட தங்கமான மனிதருக்குத்தான் அன்று தலைகால் புரியாமல் கோபம் வந்தது.

முப்பது ஆண்டுகளுக்குமுன் விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் வீட்டோடு கொண்டாடுவார்கள். இதனால் யாரையும் வம்புச் சண்டைக்கு இழுக்க முடியவில்லை என்று அலுத்துப் போன சில அமைப்பு கள் பெரிய பிள்ளையார் சிலையைச் செய்து, போக்கு வரத்துக்கு இடையூறாக, சாலையில் வைத்து, பத்து நாள்கள் ஒலிபெருக்கியில் பாடல்களைப் போட்டு, பக்கத்தில் உள்ள மக்களின் காதுகளைச் செவிடாக்க முயலும் பழக்கத்தை ஏற்படுத்தின. இதனால் நன்றாகப் பொழுது போவதுடன், அவ்வப்பகுதிகளில் உள்ள கடைகளில் நன்கொடைகள் (!?) வசூலிக்கவும் முடிந்தது. அப்படி வசூலிக்கப்பட்ட பணத்தில் பிள்ளையாருக்காகச் செலவு செய்தது போக, தங்கள் விருப்பப்படிச் செலவு செய்யவும் ஆங்காங்கே சிறுசிறு குழுக்கள் உருவாயின.

அதேபோல்தான் மருத்துவர் சந்திரனின் மருத்துவ மனை இருந்த பகுதியிலும் ஒரு குழு உருவாகி இருந்தது. இக்குழு இதுவரை இருபத்தி நான்கு விநாயகர் சதுர்த்தி விழாவை வெற்றிகரமாகக் கொண்டாடிவிட்டது. மருத்துவர் சந்திரனும் இவ்விழாவிற்கான நன்கொடை யாக ரூ.100 முதல் ரூ.200 வரை கொடுப்பது வழக்கம்.

இந்த ஆண்டு இருபத்தி அய்ந்தாவது பிள்ளையார் சதுர்த்தி விழா. அக்குழுவில் உள்ள ஒருவருக்கு இவ் வாண்டு இவ்விழாவை மிகச் சிறப்பாகக் (?) கொண்டாட வேண்டும் என்று யோசனை உதித்துவிட்டது. இது வெள்ளி விழா ஆண்டு ஆதலால் வெள்ளியில் பிள்ளை யாரைச் செய்யலாம் என்று அவர் வைத்த யோசனை, ஒரு சில விவாதங்களுக்குப் பிறகு அக்குழுவினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. அதற்குத் தேவையான பணத்தையும் விழாச் செலவுக்கான பணத்தையும் கணக்கிட்டுப் பார்த்து சுமார் ரூ.20 லட்சம் தேவை என்று முடிவு செய்யப்பட்டது. உடனே தங்கள் திட்டத் தைச் சுவரொட்டிகள் மூலமாகவும், துண்டுப் பிரசுரங் கள் மூலமாகவும் தெரிவித்து, மக்கள் தாராளமாக இதற்கு நன்கொடைகளைத் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தார்கள். அதன் தொடர்ச்சி யாக ஒவ்வொரு கடையாகச் சென்று நன்கொடை களை வசூலித்த திருவிழாக் குழுவினர், மருத்துவர் சந்திரனிடம் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்ட போதுதான், அவருக்குத் தலைகால் புரியாமல் கோபம் வந்தது. மருத்துவர் சந்திரன் அதிர்ந்து பேசி அறியாதவர்.

தன்னால் அவ்வளவு பெரிய தொகையை அளிக்க முடியாது என்று எவ்வளவு கூறியும், விழாக்குழுவினர் அவரை விடுவதாக இல்லை. சிறிது நேரப் பேச்சு வார்த்தைக்குப் பிறகு, விழாக்குழுவினர் ஒரு வாரம் கழித்து வந்து பார்ப்ப தாகவும் இவ்வளவு பெரிய மருத்துவமனையை நடத்தும் ஒருவர், அப்பகுதியில் இருந்துகொண்டு நன் கொடை தர மறுப்பது நன்றாக இல்லை என்றும், மிரட்டுவது போலக் கூறிவிட்டுச் சென்றனர்.

அதன்பின் சந்திரனுக்கு வேலையில் கவனம் செல்லவில்லை. தன்னுடைய வேலைகளை இளைய மருத்துவர்களிடம் ஒப்படைத்து விட்டு, மேல் மாடியில் உள்ள வீட்டுக்குச் சென்றுவிட்டார். எதிர்பாராதபடி வெகுமுன்னதாகவே வீட்டுக்கு வந்ததைப் பார்த்து அவருடைய மனைவி விமலா வியப்படைந்து விசாரித்தாள். அவரும் நடந்த விவரங்களைக் கூறினார்.

“என்னன்னா! இது பகல் கொள்ளையால்லே இருக்கு?” விமலா வாயைப் பிளந்தாள்.

“ட்வென்டிஃபைவ் தவ்சன் ருபீஸ். நெனைக்கவே கோபம் கோபமா வருது. ரொம்ப கூலா டொனேஷன்னு கேக்கறான்” சந்திரன் தட்டுத் தடுமாறிப் பேசினார்.

“கொடுக்க முடியாதுன்னு சொல்லிடுங்கோன்னா. அவாளாலே என்ன செஞ்சுட முடியும்?” விமலா சற்று உரக்கவே கேட்டாள்.

“சொல்லிப் பார்த்துட்டேன். திரும்பத் திரும்ப வம்பு செய்றான். ஐயரா இருந்துட்டு சாமி காரியத்துக்கு டொனேஷன் குடுக்க மாட்டேங்கிறியேன்னு, தேவை யில்லாம சாதியை இழுக்கிறான். இந்த ஏரியாவிலே நம் ஹா°பிடலச் சுத்தி இருக்கிற இடம்தான் அமைதியா இருக்காம். அந்த அளவுக்கு அவங்க நம்ம மேலே ரெ°பெக்ட் வச்சுருக்காங்களாம்” சந்திரன் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே “என்னன்னா! இது சம்பந்தா சம்பந்தமில்லாத பேச்சா இருக்கே” என்று குறுக்கிட்டுக் கேட்டார்.

“சம்பந்தமில்லாம இல்லே. டொனேஷன் குடுக்காட்டி ரகளை பண்ணுவோம்னு மெரட்றான்” என்று சந்திரன் கூறியவுடன், “அப்படீன்னா நாம போலீசுக்குப் போக வேண்டியதுதான்” என்று விமலா கூறினாள்.

“எல்லாம் செய்யலாம். ஆனா தொழில் பண்ற இடத்திலே இதெல்லாம் தேவையா?” என்று சந்திரன் கேட்டவுடன், விமலா மேற்கொண்டு பேசமுடியாமல் அமைதியாக யோசிக்க ஆரம்பித்தாள். சிறிது நேர யோசனைக்குப் பின் “ஆமா! உங்க அக்கா பையன் முரளி இருக்கானே? அவனைக் கூப்பிட்டு யோசனை கேக்கலாமா?” என்று விமலா கேட்டவுடன், “அவனே ஒரு தறுதல, அவன் உருப்படியா என்ன சொல்லப் போறான்” என்று சந்திரன் விரக்தியாகவே பதிலளித் தார்.

ஆனால் விமலா விடவில்லை; “இப்படிப்பட்ட விஷயங்களுக்கெல்லாம் இந்த மாதிரி தறுதலெங்க தான் சரி! நீங்க உடனே போன் பண்ணி அவனை வரச்சொல்லுங்கன்னா” என்று கூற, அவரும் முரளியைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நேரில் வருமாறு அழைத்தார்.

எப்பொழுதுமே திட்டிக் கொண்டு இருக்கும் தன் தாய்மாமன், தன்னை வரச்சொல்லி அழைத்ததும் ஆச்சரியம் அடைந்து போன முரளி, மறுநாள் காலை யிலேயே வந்துவிட்டான். முரளிக்குப் படிப்பு சரியாக வரவில்லை. திட்டியும், அடித்தும், உதைத்தும் படிக்க வைத்தும் அவனால் கல்லூரியில் கால்வைக்க முடிய வில்லை. ஆனால் தரகு செய்வதில் வல்லவன். வீடு வாடகைக்கு வாங்கிக் கொடுப்பதில் இருந்து கல்யாண விருந்துக்குக் காய்கறிகள் வாங்கிக் கொடுப்பது வரை, தரகு செய்து வைப்பது வரை எதிலும் முன்னே நிற்பான்.

சந்திரன் முரளியிடம் வெள்ளிப் பிள்ளையார் வைப்ப தாகக் கூறி, அந்தப் பகுதியில் உள்ள ஒரு குழுவினர் தன்னிடம் ரூ.25,000/- நன்கொடை கேட்டு வற்புறுத்தி யதைக் கூறியவுடன் “அவ்வளவு தானே மாமா? இன்னும் ரெண்டே நாள்லே எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுண்டு வர்றேன். யார் யார் பின்னாலே இருக்கா; எங்கே தட்டினா இவங்க விழுவாங்க; எல்லாத்தையும் உங்களாண்டே வந்து சொல்லிடறேன்” என்று சொல்லிப் புறப்படப் போனான். என்றைக்கும் இல்லாத மரியா தையாக, சந்திரன் முரளியைச் சாப்பிட்டுப் போகலாம் என்று சொன்னார்.

இரண்டு நாட்களில் திரும்பி வருவதாகச் சொன்ன முரளி நான்கு நாட்கள் கழித்துத் திரும்பி வந்தான். அதுவும் அவன் சொன்ன செய்திகள் சந்திரன் மகிழ்ச்சி அடையும்படியாக இல்லை என்பது மட்டுமல்ல; அதிர்ச்சி அடையும்படியாகவும் இருந்தது. அவன் அப்பகுதிக் காவல்துறையினரிடம் இருந்து, அவ்வட்டாரப் போக்கிலி கள் வரை பலரைப் பார்த்துவிட்டு வந்திருந்தான்.

உண்மையில் அவர்கள் நன்கொடையை வசூலிக் கும் போது கூறுவது போல், வெள்ளியில் பிள்ளையாரைச் செய்யப் போவதில்லை. மண்ணிலேயே செய்து வெள்ளிவண்ணம் பூசி, பிள்ளையார் சதுர்த்தி முடிந்த பத்தாம் நாளில் கடலில் வீசிவிடப் போகிறார்கள். ஆனால் வெள்ளிப் பிள்ளையார்; செய்வதாகக் கூறி ரூபாய் 20 இலட்சத்துக்கும் மேல் நன்கொடை வசூலித்து, அதில் விழாவிற்காக ஆகும் சிறு செலவு போக மிகுதியைப் பங்கு போட்டுக் கொள்ளப் போகிறார்கள். இதில் சம்பந்தப்படும் அரசுத் துறையினருக்கும் ஒரு பங்கு கொடுக்கப்படவிருக்கிறது. இவ்விழாக்களை மேலார்ந்த வாரியாகப் பார்வையிடும் இந்து சமய அமைப்புகள் இதைக் கண்டுகொள்ளமாட்டோம் என உறுதி அளித் துள்ளன.

முரளி கூறிய விஷயங்களினால் சந்திரனின் இரத்தம் கொதிக்க ஆரம்பித்தது. “என்னடா சொல்றே? அந்த பாழாப் போன ரவுடிகளுக்கும் போலீ°காரங்களுக்கும் தான் விவ°தை இல்லேன்னா, இந்து தர்ம சங்கங் களுக்கு எல்லாம் அறிவு எங்கே போச்சு? பிராம்ம ணாளா இருந்துட்டு இந்த மாதிரி அயோக்கியத்தனம் பண்ணினா உலகம் உருப்பட்டாப்போலத்தான்” என்று சீற்றத்துடன் கூறிய சந்திரன் தொடர்ந்து பேச முடியாமல் மூச்சு வாங்கினார்.

“மாமா! இந்த மாதிரி பெரிய விஷயங்களெல்லாம் எனக்கு டீல் பண்ணத் தெரியாது. வேணும்னா இந்து தர்மார்த்த சங்கத் தலைவர் கிட்டே கூட்டிப் போறேன். அவர் எல்லாத்தையும் எக்°பிளெயின் பண்ணுவார்” என்று முரளி கூற, “என் வேலையை எல்லாம் விட்டுட்டு அங்கே வரணுமா?” என்று சந்திரன் கோபமாகக் கேட் டார். ஆனால் விமலாவோ இந்தப் பிரச்சினையால் வேலையில் நாட்டம் இல்லாமல் இருப்பதைச் சுட்டிக் காட்டி, முரளி சொல்லியபடி செய்யும்படிக் கூறினாள். சந்திரனும் ஒப்புக்கொண்டார்.

முரளி அந்தச் சந்திப்புக்கு அடுத்தநாளே ஏற்பாடு செய்துவிட்டான். சந்திரனும், இந்து தர்மார்த்த சங்கத் தலைவரும் “நம°காரம்” சொல்லிக் கொண்டனர். முரளி பேச ஆரம்பித்த உடன் “அதான் நீ ஏற்கனவே விவரமாச் சொல்லிட்டியே!” என்று கூறிவிட்டு, சந்திரனை நோக்கி, “ஏன் டாக்டர்! உங்களுக்கு என்ன ப்ராப்ளம்? ஒரு 25 ஆயிரம் ரூபாயைத் தூக்கி எறிஞ்சிட்டு நிம்மதியா இருக்கிறதெ விட்டுட்டு ஏன் டென்ஷனாறீங்க?” என்று சந்திரனை நோக்கிக் கேட்டார்.

சந்திரன் “எமவுண்ட் ரொம்ப ஜாஸ்தி. போதாக் குறைக்கு இது ரவுடித்தனமாப்படுது” என்று கூறவும், தலைவர் “எமவுண்ட் ஜாஸ்திங்கிறது ப்ராப்ளமா? அல்லது ரவுடித்தனம்னு சொல்றீங்களே அது ப்ராப்ளமா?” என்று கேட்டார். “ரெண்டும் தான்” என்று சந்திரன் பதில் கூறினார்.

“டாக்டர்; எமவுண்ட் ஜாஸ்திங்கிறதெ நான் ஒத் துக்க மாட்டேன். உங்களாலே அதுமுடியும். இந்த பர்பஸுக்கு இவ்வளவு குடுக்கலாமான்னு தான் நீங்க நெனைக்கிறீங்க. உங்க ஆங்கிள்லே இருந்து பார்த்தா அது சரிதான். ஆனா சொஸைட்டி ஆங்கிள்லே இருந்து பார்த்தா இதெல்லாம் அவசியம்” என்று தலைவர் கூறிய போது, சூடாக ஏதாவது பதில் சொல்ல வேண்டும் போல் சந்திரனுக்குத் தோன்றியது. ஆனால் தலைவர் உடுத்தி இருந்த காவி உடை, எதையும் அவர் பொறு மையாகப் பேசிய விதம், சந்திரனை அவ்வாறு பேச விடாமல் தடுத்தன. அவர் தலைவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

தலைவர் தொடர்ந்தார் “டாக்டர் உங்களப் பத்தி முரளி நெறைய சொல்லியிருந்தான். உங்கள மாதிரி நல்லவங்க நமக்கு ரொம்ப முக்கியம். உங்கள மாதிரி ஆளுங்களைக் காட்டித்தான் பிராம்மணாளெ எதிர்க்கிற வங்க வாயெ அடக்கிட்டு இருக்கோம். அதனாலே நாம உங்களுக்குப் பக்கபலமா இருப்போம். ஆனா இந்த மாதிரி டொனேஷன் விஷயங்களப் பெரிசு பண்ணா தீங்க” என்று அறிவுரை போலக் கூறியதை ஏற்கவும் முடியாமல், அதேநேரத்தில் எதிர்த்துப் பேசவும் முடியாமல் சந்திரன் திணறினார்.

சிறிது நேர மவுனத்திற்குப்பின் “என்ன இருந்தாலும் இந்த மாதிரி ரவுடித்தனம் பண்ணி, பணம் வசூலிச்சு, பங்கு போட்டுக்கிறது நியாயமாப்படலே. அதுக்கு நம்ம பிராம்மணாளே துணைக்குப் போறது என்னாலே டைஜஸ்ட் பண்ண முடியலே” என்று சந்திரன் மெல்லிய குரலில் கூறினார்.

“சரி! நீங்க ஸ்கூல்லே படிக்கிறப்போ உங்களோட படிச்சவங்கள்ளே நல்லாப் படிச்சவங்க எல்லாருமே மேல்படிப்பு படிச்சிருங்காங்களா?” என்று தலைவர் கேட்க, சிறிது நேர யோசனைக்குப்பின் “இல்லை” என்று சந்திரன் பதில் கூறினார்.

“ஏன் எல்லாராலேயும்மேலே படிக்க முடியலே?”

“அது வந்து.... அவங்களுக்கு இன்ட்ரெஸ்ட் இல்லாம இருந்திருக்கலாம்.”

“டாக்டர்! கொஞ்சம் யோசிச்சு, பதில் சொல்லுங்க. நல்லாப் படிக்கிறவங்களுக்கு எப்படி மேலே படிக்கிற துக்கு இன்ட்ரெஸ்ட் இல்லாமப் போகும்?”

“அது வந்து... அவங்களுக்கு வசதி இருந்திருக்காது”

“என்ன வசதி?”

“பண வசதி, வீட்டுப் பிரச்சனைகள்.... இன்னும் எவ்வளவோ இருக்கும்” என்று சந்திரன் இழுத்தார்.

“அப்படி உங்களுக்குத் தெரிஞ்சு நல்லாப் படிப்பு வந்தும், வேறெ ப்ராப்ளத்தாலே மேலே படிக்க முடியாமப் போனவங்க யாரு? ப்ராப்ளம் இருந்தும் மேலே படிக்க முடிஞ்சவங்க யாருன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க” என்று தலைவர் கூறவும், சந்திரன் சிறிதுநேரம் யோசித்தார். அவருடைய நண்பர்கள், அவருக்குத் தெரிந்த மற்றவர்கள் என்று யோசித்ததில் பலருடைய வாழ்நிலைகள் மனதில் நிழலாடின. ஆனால் அதிலி ருந்து அவரால் ஒன்றும் புரிந்துகொள்ள முடியவில்லை. நாம் ஏதோ கேட்க வந்தால் இவர் வேறு ஏதோ பேசுகிறாரே என்று ஒருவிதமான கோபம்தான் வந்தது.

ஆனால் கோபத்தை வெளியில் காட்டாமல் அமைதி யாக அவரையே பார்த்துக் கொண்டு இருந்தார். சிறிது நேரம் கழித்து “யோசிச்சுப் பார்த்தேன். ஆனா நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலே” என்று சந்திரன் கூற, “அவாள்லே பிராம்மணாள் எத்தனை பேரு, பிராம்மணாள் அல்லாதவா எத்தனை பேருன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க” என்று தலைவர் கூறியவுடன், சந்திரனுக்குச் சட்டென்று ஒரு விஷயம் விளங்கியது. நன்றாகப் படித்தும் பணவசதி இருந்தும் பார்ப்பனர் அல்லாதவர்கள் மேல் படிப்பு படிக்கும் வாய்ப்பை இழந்து இருப்பதும், பார்ப்பனர்களில் சுமாராகப் படித்தவர்களும், பணவசதி குறைந்தவர்களும், ஆயிரம் பிரச்சினைகளில் உழல்வதாகச் சொல்லிக் கொள்பவர் களும் மேல்படிப்பு படிக்கும் வாய்ப்பைப் பெற்று இருப்பதும் அவருக்குத் துலாம்பரமாகப் புரிந்தது. அது புரிந்ததும் அவருடைய முகத்தில் ஒரு மாற்றம் தோன்றியது. தன்னைவிட நன்றாகப் படித்த, மருத்துவம் படிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் மிகுந்திருந்த, பார்ப்பன ரல்லாத மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க முடியாமல் போனதும், தனக்கு அந்த வாய்ப்புக் கிடைத்ததும் எப்படி என்று ஆச்சரியப்பட்டார்.

சந்திரன் முகத்தில் தோன்றிய மாற்றத்தைப் பார்த்தபின், தலைவர், “இப்ப ஏதாச்சும் புரியுதா?” என்று கேட்கவும், சந்திரன் முதன்முதலாகத் தலைவரைச் சுவாமி என்று விளிக்க ஆரம்பித்தார். “ஆமாம் சுவாமி! பிராம்மணாள் எல்லாம் மேலே படிக்க வந்திருக்கா, மத்தவாள்லே பல பேரு மேலே படிக்க முடியாம நின்னுட்டா” என்று கூறவும், தலைவர் “இதைத்தான் டாக்டர் நாம பார்த்துட்டு இருக்கோம். இந்த ஃபோர்ஸ் இல்லேன்னா நம்மவா யாருமே மேலே வரமுடியாது.

ஏன்? நீங்களே கூட டாக்டருக்குப் படிச்சிருக்க முடியாது” என்று சொல்லி நிறுத்தினார். பொதுப்போட்டி முறையில் எல்லாம் சரியாகத்தான் நடந்துகொண்டு இருக்கிறது என்று நம்பிக் கொண்டு இருந்த சந்திரனுக்கு இது வியப்பாக இருந்தது. பார்ப்பனர்களில் திறமைக் குறைவானவர்களையும் உயரே கொண்டு போவதற்கும், மற்றவர்களில் திறமையானவர்களும் உயரச் செல்ல முடியாமல் தடுப்பதற்குமான விசை ஒன்று இருப்ப தாகத் தலைவர் சொல்கிறாரே! அப்படி இருப்பது நியாயம் ஆகாதே என்று ஒரு கணம் சந்திரன் நினைத் தார். ஆனால் அப்படி ஒரு விசை இல்லாவிட்டால் தன்னால் மருத்துவம் படித்து இருக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டியதை நினைத்த உடன், அது நியாயமல்ல என்று நினைப்பதில் இருந்து, சற்றுப் பின்வாங்கிக் கொண்டார்.

ஆனா, சுவாமி அதுக்கும் இந்த ரவுடிங் களெ எங்கரேஜ் பண்றதுக்கும் என்ன சம்பந்தம்?” என்று சந்திரன் மெல்லிய குரலில் கேட்டார். சந்திரனின் குரல் கம்மிப் போன உடன் இதுவரைக்கும் டாக்டர் என்று விளித்துக் கொண்டு இருந்த தலைவர் ‘சந்திரன்’ என்று பெயரைச் சொல்லி விளிக்க ஆரம்பித்துவிட்டார். “சந்திரன் அதெல்லாம் காம்ப்ளிகேடட் இஸ்யூ. ஒரே நாள்ளே புரிய வைக்க முடியாது. ஒரு எக்ஸாம்பிளைச் சொல்றேன், கேளுங்க” என்று கூறிவிட்டு, வெளி நாடுகளில் இந்தியர்கள் மற்றும் இந்திய வமிசாவழியி னரின் பிள்ளைகள் இந்தியாவில் வந்து படிப்பதற்கு இந்திய அரசு உதவித் தொகை அளிக்கும் திட்டத்தை விளக்கினார்.

இந்தியாவில் இருக்கும் பார்ப்பனர்களில் திறமைக் குறைவானவர்களை உயர்நிலைகளுக்குக் கொண்டு செல்ல அரசு எந்திரத்தில் கேந்திரமான இடங்களில் எல்லாம் தேவையை விட அதிகமாகப் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். ஆனால் வெளிநாடுகளில் அப்படிப்பட்ட வசதி இல்லை.

ஆகவே வெளிநாடுகளில் வாழும் பார்ப்பனர்களின் பிள்ளைகள் அனைவருக்கும் அங் குள்ள உயர்கல்வி நிலையங்களில் படிக்க இடம் கிடைப்பதில்லை. ஆகவே அவர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் உயர்கல்வி கற்க முடியாமல் போய் விடுகிறது.

இதை அப்படியே விட்டுவிட முடியுமா? நன்றாக யோசித்துப் பார்த்த இந்திய அரசு அவர் களுக்கு என ஒரு திட்டத்தைத் தீட்டி உள்ளது. இதன்படி வெளிநாடு வாழ் இந்தியர்களின் பிள்ளைகள் இந்திய உயர்கல்வி நிலையங்களில் வந்து படிப்பதற்கு, இட ஒதுக்கீடு செய்யும்; தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இந்தியா விற்கு வந்து படித்துவிட்டுச் செல்வதற்கான செலவு முழுவதையும் இந்திய அரசே ஏற்றுக்கொள்ளும்.

இதைக் கேட்டு வியப்படைந்த சந்திரன் இதைப் பற்றித் தனக்குத் தெரியாது என்றும், ஆனால் இதற்கும் தாம் பேசவந்த விஷயத்திற்கும் என்ன தொடர்பு என்று விளங்கவில்லை என்றும் கூறினார். சந்திரன் விளங்க வில்லை என்று கூறியதும் “இப்படிப்பட்டவர்களும் பிராம்மணர்களில் இருக்கிறார்களே” என்று நினைத்த தலைவர், “இந்த மாதிரி ஸ்கீம் இல்லேன்னா நம்மவா மேலே படிக்க முடியாம போயிடும் இல்லே?” என்று கேட்டார். சந்திரனும் “ஆமா! அதனாலே என்ன?” என்று கேட்டவுடன், “நீங்க டாக்டருக்குப் படிக்க முடியாமப் போயிருந்தா எப்படி இருக்கும்?” என்று தலைவர் எதிர்வினாத் தொடுத்தார். சந்திரன் பதிலளிக்காமல் மவுனமாக அவரையே பார்த்துக் கொண்டு இருந்தார். தலைவரும் “நம்மவாள்லே திறமை இல்லேன்னாலும் மேலே வர வழி இங்கே இருக்கு, ஃபாரின் போனா அது இல்லாமப் போயிடக்கூடாதுன்னு நாம நெனைக் கிறோம்.

இந்த மாதிரி எல்லாம் நாம வேலெ பார்க்க லேன்னா மத்தவா மேலே போயிடுவா. நம்மவா அவாளுக்குக் கீழே வேலை பார்க்க வேண்டி இருக்கும்” என்று கூறிக்கொண்டு இருக்கும் போது “அது கூடாது” என்பது போல், சந்திரன் முகபாவனையைக் காட்டினார். தலைவர் தொடர்ந்தார், “இப்படி எல்லாம் நாம அண்டர்கிரவுண்ட் வொர்க் பண்ணலேன்னா நீங்க டாக்டர் ஆயிருக்கமாட்டீங்க. ஒரு சூத்திரன் டாக்டரா ஆகியிருப்பான். அவனுக்குக் கீழே நீங்க கம்பவுண்டரா வேலெ பார்த்துட்டு இருப்பீங்க”.

சந்திரனால் மேற்கொண்டு விவாதம் செய்ய முடியவில்லை. “அதில்லீங்க, அதுக்கும் இந்த மாதிரி வெள்ளிப்பிள்ளையார்னு ஏமாத்துற ரவுடிகளெ எங்கரேஜ் பண்ணணுமா?” என்று மெல்லிய குரலில் கேட்டார். “நாங்க அவங்களெ எங்கரேஜ் பண்ணலை. அவா செய்றத டிஸ்கரேஜ் பண்ணாம இருக்கோம். அவா இந்த மாதிரி எல்லாம் நடந்துக்கலேன்னா, நாம ஏதாச்சும் பண்ணி இந்த மாதிரி எல்லாம் பண்ண வைப்போம்” என்று தலைவர் கூறியதைக் கேட்ட சந்திரன், சற்று அதிர்ச்சி அடைந்து வாயைப் பிளந்தார்.

தலைவர் தொடர்ந்தார் “ஏன்னு கேக்குறீங்களா? ஃபாரின்லே இருக்கிற நம்மவாளுக்கு கவர்மெண்டு ஸ்காலர்ஷிப் கொடுக்குற மாதிரி, நம்மவா மட்டுமே அனுபவிக்க முடியற மாதிரி எக்கச்சக்கமான திட்டங்கள் இருக்கு. மத்தவாளுக்கு அதெல்லாம் தெரியாது. நம்மவாள்லே கூட தேவைப்படறவங்களுக்கு மட்டுமே தெரியுற மாதிரி வச்சுருக்கோம். இந்து தர்மார்த்த சங்கம் மாதிரி உள்ள நம்மவா மடங்கள்லே எல்லாம் தெரியும். அங்கே வந்தா நம்மவாளுக்குத் தேவையானதைச் செய்வோம்.

“நம்மளெ எதிர்க்குற மத்தவாள் நெறைய பேருக்கு இந்த மாதிரி ஸ்கீம் இருக்குன்னே தெரிஞ்சுக்க முடியாது. நீங்க சொல்றீங்களே ரவுடித்தனம்னு, இந்த மாதிரி ரவுடிங்க மத்தவாள்லே இருந்தாத்தான்; ஜனங்க அதையே பார்த்துட்டு அது சரியில்லேன்னு சொல்லிட்டே இருப்பாங்க. நம்மவா மட்டும் அனுபவிக்கிற திட்டங்கள் வெளியே தெரியாது. மத்தவாளோட ரவுடித்தனம் எல்லாம் நின்னு போச்சுன்னா நம்மவா திட்டம் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துடும்.

அப்புறம் நம்மவாளாலே எதுவுமே என்ஜாய் பண்ண முடியாமப் போயிடும். இதையெல்லாம் வெளிப்படையாப் பேசறதில்லே. நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கீங்க. இந்த மாதிரி இருக்கக் கூடாது. ஏதோ நீங்க முரளியோட மாமாவா இருக்கிறதாலே இவ்வளவு தூரம் சொல்றேன்” என்று தலைவர் பெரிய சொற்பொழிவையே ஆற்றி முடித்தார்.

தான் தறுதலை என்று நினைத்த தன் அக்காவின் மகனுக்கு இவ்வளவு மரியாதையா? அவனுக்காகத் தான் தன்னிடம் இவ்வளவு விவரமாக இந்தத் தலைவர் பேசினாரா? சந்திரன் வியப்படைந்தார். அவருக்கு எது புரிந்ததோ இல்லையோ இந்து மத அமைப்புகள், மடங்கள் எல்லாமே பார்ப்பனர்களின் நலன்களுக்காகச் செயல்படுகின்றன. நமக்கு அநியாயம் என்று தோன்றினாலும், அதில் பார்ப்பன இன நலன் உள்ளது என்பதால்தான் அவற்றை ஊக்குவிக்கிறார் கள் என்றும் அவர் புரிந்துகொண்டார்.

நியாயம் பார்த்தால் பார்ப்பன இன நலன்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதைப் புரிந்துகொண்ட மருத்துவர் சந்திரன் “வெள்ளிப் பிள்ளையார் செய்ய நான் டொனேஷனைக் குடுத்துடறேன்” என்று தலை வரிடம் கூறினார்.

Pin It