தென்னாட்டு மக்களில் பெரும்பான்மையினர் 3000, 4000 ஆண்டுகளுக்கு முந்தைய மொகஞ்சதாரோ, அரப்பா, ஆதிச்சநல்லூர், பொருந்தல் நகர நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்கள் ஆவர். இனவியல்(Ethnic) வரலாற் றின்படி இவர்கள் திராவிடர்கள்; மொழியியல் பண்பாட்டின் படி தமிழகத்தில் வாழ்வோர் - தமிழர்கள்.

தமிழகத்தை ஆண்டவர்களுள், பாண்டியர்களே மூத்த வர்கள். பாண்டியர் கி.மு.540 முதல் கி.பி.1310 வரை தமிழகத்தின் பல பகுதிகளை ஆண்டனர். முற்காலச் சோழர்கள் கி.மு.320 முதல் கி.பி.300 வரையிலும்; பிற்காலச் சோழர்கள் கி.பி.880 முதல் கி.பி.1347 வரையிலும் தமிழகத்தின் பல பகுதிகளை ஆண்டனர்.

இனவியல் அடிப்படையில் இன்று தூய திராவிடர், தூய ஆரியர் என்று எவரும் இல்லை.

மொழி இயல் அடிப்படையில் நாம் இன்று தமிழர்களாக இருக்கிறோம். ஆனால் நம்மில் எந்தச் சாதிப் பிரிவைச் சார்ந்தவரும் தனியான தமிழ்ப் பண்பாடு - வாழ்க்கை முறை உள்ளவர்களாக இல்லை.

பழம்பெருந் திராவிட இயக்கத்தார், தேசியக் கட்சியினர், பொதுவுடைமைக் கட்சியினர் ஆகியோரும்; மெத்தப் படித்தவர்களும், போதிய படிப்பில்லாதவர்களும்; உலகஞ் சுற்றியவர்களும், ஊரோடு இருப்பவர்களும்; மிகப்பெருஞ் செல்வந்தர்களும், பாதி நாள் பட்டினி கிடக்கும் ஏழைகளும் இன்று இந்துக்களாக - பார்ப்பன - வேத,ஸ்மிருதி, ஆகமக் கொள்கைகளை நம்பியும் ஏற்றும் வாழ்கிறவர்களாக மட்டுமே 2013இலும் வாழ்கிறோம். வீட்டு வாழ்க்கை, தெரு வாழ்க்கை, ஊர் வாழ்க்கை, சமுதாய வாழ்க்கை, சமய வாழ்க்கை என்னும் எல்லாத் துறைகளிலும் பார்ப்பனியப் பண்பாட்டில் ஊறியவர் களாகவே வாழ்கிறோம்.

வடநாட்டில் இந்தப் பார்ப்பனியப் பண்பாடு கெட்டியாக அமைக்கப்பட்ட காலம் கி.மு.185 - 152 ஆகும். அப்போது, பார்ப்பான் புஷ்யமித்ர சுங்கன் அரசனாக விளங்கினான். அவனுடைய வழியினர் 117 ஆண்டுகள் ஆட்சி செலுத்தினர்.

அவர்களுக்கு முன்னர் கி.மு.272 முதல் ஆட்சி செய்த அசோகன் வழியினர், அசோகனின் கொள்ளுப்பேரன் பிருகத்ரதன் காலத்தில், (கி.மு.191 - 185) புஷ்யமித்ர சுங்கனால் தோற்கடிக்கப்பட்டனர். அங்கு கி.மு.152க்குள் பௌத்தம் வேரோடும் வேரடி மண் ணோடும் அழிக்கப்பட்டது.

அதுவரையில் செவி வழியாக வழங்கிய இராமாயணம் அப்போதுதான் தொகுக்கப் பட்டது. இன்றும் தமிழர்தம் வீட்டு வாழ்க்கையில் ஆட்சி செலுத்தும் மனுஸ்மிருதியும் அப்போதுதான் வடிவம் பெற்றது.

சற்றேறக்குறைய அதே சமகாலத்தில் எழுதப்பட்ட தமிழரின் பழம்பெரும் இலக்கண - இலக்கியங்களான தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும் சில ஸ்மிருதி நெறிகள் படிந்தன.

சிலப்பதிகாரக் காலமான கி.பி.180இல் தொடங்கி, பிற்காலச் சோழர் ஆட்சிக்காலத் தொடக்கமான கி.பி. 880க்குள் தமிழ்நாட்டுத் தமிழர் பார்ப்பனிய - இந்துத் துவ - மிருதி - ஆகம வாழ்க்கை நெறியை மேற் கொண்டுவிட்டனர்.

இவ்வளவும் நடத்தப்பட்டது அவ்வக்கால ஆட்சியாளர் களால்தான் என்பதைத் துல்லியமாக நம் மக்களுக்கு நாம் கற்பிக்கவில்லை. அது ஒரு “பண்பாட்டுப் படை யெடுப்பு” என்று, எந்தப் பொருளும் இல்லாத ஒரு கருத்தியலைப் புகுத்தி - அந்தக் கருத்துக்கு உள்ள ஆளு மையை, செல்வாக்கை, வலிமையை, கட்டுக்கோப்பை அழித்துவிட முடியும் என்றே தமிழர் பலரும் நினைக் கிறோம். ஆனால் நம் கொள்கை எதிரிகளான பார்ப் பனர்கள் அப்போதும், இப்போதும் அப்படி நினைக்க வில்லை.

பௌத்தத்தையும், சமணத்தையும் 1200 ஆண்டு களுக்குமுன் வீழ்த்தியவர் ஆதிசங்கரர். அரசர் கள் வழியாகத்தான் அவர் அதைச் செய்தார்.

அப்போது தீவிரமாகச் செயல்பட்ட சைவ சமயப் புரட்சி இயக்கம், இந்து மதத்தின் ஓர் உட்பிரிவு ஆகி விட்டது. தமிழகத்தில் 1400க்குப்பிறகு மராட்டியர்கள், தெலுங்கு நாயக்கர்கள், இஸ்லாமிய நவாபுகள் ஆட்சி நடைபெற்றது.

அக்காலத்தில் ஆட்சிபுரிந்த எல்லா அரசர்களும் தமிழகம் எங்கும் வேதபாடசாலைகளை நிறுவினர்; அவற்றுக்குப் பல ஊர்களை - ஆயிரக்கணக்கான ஏக்கர் வரியில்லா வேளாண் நிலங்களை அளித்தனர்; கருவறையில் கடவுள் பொம்மைக்குப் பூசை செய்திடப் பார்ப்பன ரையே அமர்த்தினர்; பார்ப்பனப் புரோகிதத்தைப் பிறப்பு முதல் இறப்பு வரை நீங்காத குடும்பக் கடமைகளாக விதித்தனர். பாட்டாளி மக்களை நான்காம் சாதிச் சூத்திரர் என முத்திரை குத்தினர். ஆதித்தமிழர்களை எந்தப் பெறுமானம் உள்ள சொத்தையும் வைத்துக் கொள்ள உரிமை அற்றவர்களாக ஆக்கி, அவர்களை ஊருக்கு வெளியே தனியாகக் குடிவைத்தனர்.

இவை எல்லாமே அரசினால் - அரசர்களால் - அரசுத்துறை நிருவாகிகளால்-பழக்கம், வழக்கம், நம்பிக்கை என்கிற பேரால் இன்றும் காப்பாற்றப் பட்டு வருகின்றன.

கி.பி.1542இல் கும்பகோணத்தில், கோவிந்த தீட்சிதர் என்கிற, 110 அகவையுள்ள - மூன்று அரசர்களுக்கு அமைச்சராக இருந்த பார்ப்பனரால் “ராஜ வேத காவ்ய பாடசாலை” நிறுவப்பட்டது. இன்றும் 170 பார்ப்பன மாணவர்களுக்கு அங்கு வேதம் பயிற்றுவிக்கப்படுகிறது.

மறைந்த காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரசுவதி, வேதம் கற்ற வேத பாடசாலை, வேலூர் ஆர்க்காடு அடுத்த கலவை என்ற ஊரில் உள்ளது. இன்றும் அங்கு 30 மாணவர்களுக்கு வேதம் பயிற்று விக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 100க்கு மேற் பட்ட வேதபாடசாலைகள் உள்ளன.

இன்றும் நாம் காண்பவையல்லவா இவை?

தந்தை பெரியார் 2-5-1925இல், அவர் காங்கிரஸ் காரராக இருந்தபோதே, “குடிஅரசு” கிழமை இதழைத் தொடங்கினார். அப்போது, அவர் கடவுள் நம்பிக்கை யாளர். ஆனால், 1922 முதலே இராமாயணம், மனு° மிருதி இவைதான் சாதியும், தீண்டாமையும் இருக்கக் காரணம் என்பதை - சி. இராசகோபாலாச்சாரியாரை வைத்துக் கொண்டே உரத்துக் கூறினார்.

அவர் “குடிஅரசு” முதலாவது இதழில்,

“நமது நாடு அரசியல், பொருளியல், சமூகவியல், ஒழுக்கவியல் முதலிய எல்லாத் துறைகளிலும் மேன் மையுற்று விளங்கச் செய்ய வேண்டும்; ..... ஒவ் வொரு வகுப்பும் முன்னேற வேண்டும். இதை அறவே விடுத்து தேசம், தேசம் எனக் கூக்குரலிடுவது எமது பத்திரிகையின் நோக்கமன்று. மக்களுள் தன் மதிப் பும், சமத்துவமும் ஓங்கி வளரல் வேண்டும். மக்கள் அனைவரும் அன்பின் மயமாதல் வேண்டும்” (“குடிஅரசு”, 2.5.1925) எனத் தெளிவுபட அறிவித்தார்.

தன்மதிப்பு - தன் மரியாதை - தன்மானம் என்பது தான், “சுயமரியாதை”.

“சமத்துவம்” என்பது, மானிடரிடையே எல்லாவற்றி லும் சமத்துவ உரிமை; சமஉரிமை பேணுவது.

இன்றைய தமிழர்கள்-இந்த இரண்டிலும் எந்த இடத்தில் நிற்கிறோம்?

மகாத்மா புலே 1870 முதலும்; பண்டித அயோத்தி தாசர் 1907 முதலும்; பிறகு தந்தை பெரியார் 1925 முதலும் இவற்றைச் சொன்ன பிறகும்; மேதை அம் பேத்கர் 1927 முதலே நமக்கு இவற்றைக் கற்பித்த பிறகும் தமிழகத் தமிழர் எங்கே இருக்கிறோம்? இந்தியா முழுவதிலுமுள்ள பார்ப்பனரல்லாதார் எங்கே இருக்கின்றனர்?

இந்தியா முழுவதிலும் உள்ள இந்த ஈன நிலையை மாற்றிட - யார், யார் என்ன செய்தனர்?

“இவை எல்லாவற்றையும் கட்டிக் காக்கும் அரச மைப்புச் சட்டத்தை அடியோடு அகற்ற வேண்டும்” என, 1946 முதல் சொன்ன பெரியாரும், அப்படிச் செய்திடத் திட்டமிட்டு, அதற்கான சட்டத்திருத்தத்தை, அரசமைப்பு அவையில், 1948இலேயே முன்மொழிந்த மேதை அம்பேத்கரும் - அவர்கள் தொடங்கிய இடத்தி லேயே நின்றுவிட வைத்திருக்கிறோம்.

ஏன்?

1. முதலில், “நம் கோரிக்கை ஓர் அரசியல் கோரிக் கை - நம் குறிக்கோளை நிறைவேற்றிட ஏற்ற ஓர் அரசை நாமே அமைக்க வேண்டும்” என்பதை நாம் புரிந்துகொள்ளவில்லை; மக்களை நாம் இதற்கு ஆயத்தப்படுத்தவில்லை.

2.  இன்று “அரசு” என்பது, இந்திய அரசு - இந்திய ஆட்சி மட்டுமே.

இந்துத்துவம் பேசும் - இந்தியத் தேசியம் பேசும் - பார்ப்பனருக்கும், பனியாவுக்கும், இந்தியத் தரகு முத லாளிகளுக்கும், பன்னாட்டு முதலாளிகளுக்கும் இது புரிந்திருக்கிறது.

ஆனால் இந்தப் பொறியில் சிக்கிக் கொண்ட 122 கோடி மக்களுள், பலருக்கும் இதைப் புரிய வைத்திட எவரும் முயலவில்லை.

இம்மக்களை அடிமைப்படுத்தி - 1946 முதல் 1977 வரையிலும்; பிறகு 1980 முதல் 1996 வரையிலும் இந்தியாவை ஆண்ட காங்கிரசு இதுபற்றிக் கவலைப் படவில்லை.

1996 முதல் வெறும் 6 ஆண்டுகளே இந்தியாவை ஆண்ட பார்ப்பன - பனியா - இந்துத்துவக் கட்சியான பாரதிய சனதாக் கட்சி இதை நன்றாகப் புரிந்து கொண் டிருக்கிறது.

“சேதுப்பாலம் இராமர் கட்டியதுதான். பாபர் மசூதி யின் கூம்புக்கு நேர் கீழே உள்ள இடத்தில் தான் இராமர் பிறந்தார். இது இந்துக்களின் நம்பிக்கை.”

“இராமாயணமும், பகவத்கீதையும், புரோகிதமும், சோதிடமும் இந்துத்துவத்தின் உயிர் மூச்சு.”

“இவற்றைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் இந்திய ஆட்சியை நடத்திட வாய்ப்புத் தாருங்கள்” என்று எல்லாப் பார்ப்பனரும், இன்றும் இவர்களை நம்பும் சூத்திர, ஆதிசூத்திரத் தலைவர்களும் ஒரே குரலில் இன்று ஒலிக்கிறார்கள்.

2014 தேர்தலுக்கான பாரதிய சனதாக் கட்சியின் தேர்தல் அறிக்கைக்குழுவின் தலைவரான முரளி மனோகர் ஜோஷி, 18-10-13 வெள்ளியன்று இவற்றைப் பற்றித் தெளிவாக அறிவித்துள்ளார் :

1. அயோத்தியில் இராமர் கோயில் கட்டியே தீருவோம்.

2. சேதுப்பாலம் இராமர் கட்டியதுதான்; அதைக் காப்போம்.

3. ஜம்மு-காஷ்மீருக்குத் தனி உரிமை அளிக்கும் விதி 370 என்பதை அரசமைப்புச் சட்டத்திலிருந்து நீக்கு வோம்.

4. பொது உரிமைஇயல் சட்டத்தை நிறைவேற்று வோம்.

5. பசுக்களின் புனிதத் தன்மையைக் காப்போம்.

6. புனித கங்கையைத் தூய்மைப்படுத்துவோம்.

“அதாவது, இந்தியாவில், “ராமராஜ்யம்” என்கிற இந்துப் பார்ப்பன ஆட்சியை நிறுவுவதுதான், பாரதிய சனதாக் கட்சியின் கொள்கை. அதற்கா கவே அவர்கள் அரசை-ஆட்சியைக் கைப்பற்றத் திட்டமிடுகிறார்கள்.

இவற்றுக்கு,

1. இந்திய அரசமைப்புச் சட்டம் கெட்டியான பாது காப்புத் தருகின்றது;

2. 21 உயர்நீதிமன்றங்களும், இந்திய உச்சநீதிமன்ற மும் முழுப் பாதுகாப்புத் தருகின்றன.

3. எல்லா ஊடகங்களும் இவற்றைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு கூக்குரலிடுகின்றன.

வரும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 543 இடங் களில் 272 இடங்களைக் கைப்பற்றியே தீரவேண்டும் என, ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கம் வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்கிறது.

இந்தியா முழுவதிலும் 2,500 முழுநேரப் பிரசாரகர் கள் இதற்குப் பணியாற்றுகிறார்கள்; இந்தியா முழு வதிலும் இன்று 39,000 இளைஞர்கள் நாள்தோறும் உடற்பயிற்சி (Shaka) மேற்கொண்டுள்ளனர்; தில்லி யில் மட்டும், ஒரு கிழமையில் ஒரு நாள் 5,000 பேர் உடற்பயிற்சி பெறுகிறார்கள் (‘தி இந்து’, சென்னை, 16.10.2013).

இவ்வளவு பெரிய ஏற்பாடுகளுக்கும் இந்திய முத லாளிகளும், பன்னாட்டு முதலாளிகளும் மூட்டை மூட் டையாகப் பணம் தர ஆயத்தமாகக் காத்திருக்கிறார்கள்.

பெரியார் வழியில்-அம்பேத்கர் நெறியில்-மார்க்சிய -லெனினிய நெறியில் இயங்குவதாக நம்புகிற ஒவ்வொருவரும் இவற்றை நடுநிலைக் கருத்தோடு நோக்குங்கள் என வேண்டுகிறேன்.

அப்போதுதான், நாம் நடக்க வேண்டிய தொலைவு நெடுந்தொலைவு என்பதையும்-நாம் தூக்க வேண்டிய சுமை கழுத்தை முறிக்கக் கூடியது என்பதையும் - நாம் தரவேண்டிய விலை மிக மிக அதிகம் என்பதையும் நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முடியும். நம் மக்களை - உழைப்பாளிகளை, அப்போதுதான் நாம் நம் பாதைக்குக் கொண்டு வரமுடியும். முயலுவோம், வாருங்கள்!

Pin It

தந்தை பெரியாரின் தன்மான இயக்கத்தில் தோய்ந் தவர்கள் சிதம்பரம், வல்லம் படுகை, வடக்கு மாங்குடி, பூந்தோட்டம் முதலான ஊர்களில் அதிகம் பேர்.

1946ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கச் சென்ற என் போன்றவர்களுக்குத் தோன்றாத் துணையாக விளங்கியவர்கள் வடக்கு மாங்குடி அ. பாலகிருட்டிணன். பழைய நல்லூர் பாலகுருசாமி - பின்னாளில் புதுப்பூலாமேடு புது. ஏக. தாமோதரன் ஆகியோர் ஆவர்.

சிதம்பரத்தில், ‘வன்னியர் வளர்ச்சிக் கழகம்’ என்னும் மாணவர் தங்கும் விடுதிதான், 1946-1949ஆம் ஆண்டுகளில் தந்தைபெரியாரும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும், நடிகவேள் எம்.ஆர். இராதா வும் தங்கும் இடம். இப்பெருமக்கள் வரும் போதெல் லாம் இவர்களுக்குத் தொண்டு செய்யவும் துணை நிற்கவும் ஆசிரியர் ந.வை. இராமசாமி, பழையநல் லூர் பாலகுருசாமி, வடக்கு மாங்குடி அ. பாலகிருட்டி ணன், சாலியந்தோப்பு கு. கிருஷ்ணசாமி, புவனகிரி பெருமாத்தூர் நமசிவாயம் ஆகிய தன்மானச் செயல் வீரர்கள் அவ்விடுதிக்கு வந்துவிடுவர். பம்பரமாகச் சுழன்று பணியாற்றுவர்; நீட்டிய விரல் காட்டும் பணிகளை அட்டியின்றிச் செய்து முடிப்பர். அத்தகைய ஈடுஇணையற்ற களப்பணியாளர்களுள் - களப்பணி யாளர்களின் காவலர்களாகவும் - பார்ப்பனக் கொள்கைக் கோட்டையை நடுங்கச் செய்தவர்களாகவும் விளங்கிய மேலேகண்ட மூத்த பெரியார் தொண்டார்களுள்

21-10-2013 வரை நம்மிடையே எஞ்சி இருந்தவர் வடக்கு மாங்குடி அ. பாலகிருட்டிணன் அவர்களே ஆவார். அப்பெருமகனார் தம் 97ஆம் அகவையில் 21-10-2013 திங்கள்கிழமை காலை மறைந்தார் என்ற செய்தியை இரா. காந்தி, பா. மோகன் இருவரும் காலை 9.30 மணிக்கு எனக்கு அறிவித்தனர்.

ஆறு மாதங்களுக்கு முன்னர் வரையில் எப்போது அப்பகுதிக்கு நானும் தோழர்களும் சென்றாலும் அ. பாலகிருட்டிணன் அவர்களைப் பார்த்து நலம் உசாவத் தவறியது இல்லை. கடந்த இரண்டாண்டுகளாக நடமாட்டம் குறைந்து வீட்டோடு இருந்த அவர் இறுதி வரை நல்ல உணர்வோடு திகழ்ந்தார்.

1976இல் என் போன்ற பழைய தோழர்கள் ‘பெரியார் சமஉரிமைக் கழகம்’ என்ற தனி அமைப் பைக் கண்டு செயல்பட முனைந்த போது, 1977 முதலே கடலூர் மாவட்டத்தில் பெ.ச.க. காலூன்றத் துணை நின்றவர்கள் வடக்கு மாங்குடி அ. பால கிருட்டிணன், கொள்ளிடம் வணிகர் பெரியசாமி, சிதம்பரம் வீ. இராசாப்பிள்ளை ஆகியோரே ஆவர்.

இந்த இயக்க வரலாற்றில், 1977இல் முதலாவது கொள்கைப் பயிற்சி வகுப்பினை, வல்லம் படுகையில், கொள்ளிடக்கரையில் உள்ள பயணர் விடுதியில் 8 நாள்கள் நடத்தினோம். அ. பாலகிருட்டிணன், கொள்ளிடம் பெரியசாமி, வல்லம்படுகை திருநாராயணன், சீர்காழி மா. முத்துச்சாமி ஆகியோர் எல்லா ஏந்துகளையும் தயக்கமின்றி - இயக்க வேறுபாடு பாராமல் செய்து தந்தனர்.

தோழர் அ. பாலகிருட்டிணனின் மூத்த மகன் பா. மோகன் அப்போது முதல் மா.பெ.பொ.க. உணர்வு பெற்றார். அவர், 1979 மார்ச்சில், புதுதில்லியில் முதன் முதலாக நடந்த பெரியார் நூற்றாண்டு விழாப் பேரணி யில் பங்கேற்றார்; என் துணைவியாரும் இவரும் பதாகையை ஏந்தி அந்த மாபெரும் ஊர்வலத்தில் 8 கிலோ மீட்டர் நடந்தனர். இன்று கடலூர் மாவட்ட மா.பெ.பொ.க. செயலாளராக இவர் விளங்குகிறார்.

இப்படித் தம் குடும்பத்தினர் அனைவரையும் பெரியார் கொள்கைப் பரப்பலுக்கு ஆளாக்கிய மறைந்த நம் பாலகிருட்டிணன் இளமையில், மயிலாடுதுறை யில், செல்வாக்கான குடும்பத்தில் வளர்ந்தவர்; பின்னர் வடமாங்குடியில் தம் குடும்பத்து வேளாண்மைத் தொழிலில் முழு மூச்சாக ஈடுபட்டவர்; உழவுப் பணி களை ஆர்வத்துடன் 2000 ஆண்டு வரையில் மேற் கொண்டவர்; அத்தொழிலைச் செய்வதைப் பெருமை யாகக் கருதியவர்.

1946-1949ஆம் ஆண்டுகளில் நான் சிதம்பரத்தில் தங்கியிருந்த போது ஒரு கிழமையில் இரண்டு மூன்று நாள்கள் அ. பாலகிருட்டிணனும், பாலகுருசாமியும் - அப்போது மணமான இளம் பருவத்தினர்-அவர்கள் இருவரும் எங்களுடன் முன்னிரவு வரையில் தங்கி மணிக்கணக்கில் இயக்கம், பரப்புரை, கிளர்ச்சி பற்றி ஆர்வத்துடனும், கலகலப்பாகவும், கிண்டலாகவும் பேசி, எங்களிடம் ஓர் உந்துதலை உண்டாக்கிய களப் பணிக் காவலர்கள் ஆவர்.

இன்று அப்படிப்பட்ட உணர்வாளர்களைக் காண்பது அரிது.

பின்னாளில் பாலகுருசாமி அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்; சட்ட மேலவை உறுப்பினராகத் திகழ்ந்தார்.

இவர்களெல்லோரும், கு. கிருட்டிணசாமியும் - கருஞ்சட்டை மாணவப் படையினர் க.அ. மதியழகன், வி.வி. சாமிநாதன், பூவாளூர் இளங்கோவன், சேலம் இராசமாணிக்கம், வே. ஆனைமுத்து, நாகை கண்ணை யன் ஆகியோர் பல்கலைக்கழக விடுதி வளாகத்தில், கொடி எரிப்புக் கலவரத்தில் கடுமையாகத் தாக்கப்பட்டுக் கைதுக்கு உள்ளான போதும், அது தொடர்பான வழக்கு பறங்கிப்பேட்டையில் நடந்த போதும் நீங்காத் துணை யாக நின்றவர்கள்.

பெரியார் பெரும் படையின் களப்பணியிலும், போராட்டங்களிலும் தலைவர்களாக விளங்கியவர் களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் - நம் வடக்கு மாங்குடி அ. பாலகிருட்டிணன். இன்று தி.மு.க. செயல்வீரராக விளங்கும் “மீண்டும் கவிக்கொண்டல்” ஆசிரியர் ம. செங்குட்டுவன், தி.க. தலைவராக உள்ள கி. வீரமணி போன்ற 80 அகவை தாண்டியவர்களுக்கு, அன்று சிதம்பரம் வட்டத்தில் பரப்புரைக் களம் அமைத்துத் தந்து ஊக்கப்படுத்தியவர் பாலகிருட்டிணன்.

உள்ளும் புறமும் ஒன்றாக ஒழுகியவர்; உழைப்பைக் கண்டு அஞ்சாதவர்; பணச்செல்வாக்கு, அரசியல் செல்வாக்கு இவற்றுக்கு அறைகூவல் தந்து எதிர்த்து நின்றவர் - வென்றவர்.

அத்தகு மாண்புகளுக்கு உரியவராக விளங்கிய வடக்கு மாங்குடி அ. பாலகிருட்டிணன் அவர்களின் மறைவு, பெரியார் இயக்கத்துக்கும், மா.பெ.பொ. கட்சிக்கும் பேரிழப்பாகும்.

அன்னாரை இழந்து துயருறும் அவர்தம் ஆருயிர் துணைவியார் கனகு அம்மையார் அவர்கட்கும், அவர்தம் மகன்கள் பா. மோகன், பா. கருணாகரன், மகள் பா. உமாராணி; மருமகள்கள், மருமகன் மற்றும் குடும்பத்தினர்க்கும் மா.பெ.பொ.க. சார்பிலும், என் குடும்பத்தார் சார்பிலும் ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் உரித்தாக்குகிறேன்.

வாழ்க, அ. பாலகிருட்டிணன் புகழ்!

Pin It

பெரியார் பிறந்த திங்களான செப்டம்பரில் 22ஆம் நாளில் இந்து ஆங்கில நாளிதழில் திறந்த பக்கத்தில் (Open Page) அமைந்துள்ள இந்திய அறிவியல் கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரியும் வசந்த் நடராஜன் ‘மதமற்ற சமூகத்தை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் சிறந்த கட்டுரை ஒன்றைத் தீட்டியிருந்தார். அதே பக்கத்தில் வீரமரணம் அடைந்த பகுத்தறிவுப் போராளி தபோல்கருக்கு எஸ்.வி.வேணு கோபால் என்பவரும் கவிதாஞ்சலியைச் செலுத்தியிருந்தார்.

இக்கட்டுரையை ஒட்டி ஒரு சிகப்பு வண்ணப் பெட்டிச் செய்தியையும் வெளியிட்டு - மதக்கோட்பாடுகளில் உள்ள வேறுபாடுகளை, மூடநம்பிக்கைகளைச் சுட்டிக் காட்டினால் மனம் பொறுத்துக் கொள்ளும் பக்குவம் சரிந்து வருவதையும், இதற்குச் சான்றாக தபோல்கர் மறைவு அமைந்துள்ளது; இன்றையச் சூழலுக்கு இக்கட்டுரை மிகப் பொருத்தமாக அமைகிறது என்ப தாகîம் இந்து நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

பேராசிரியர் வசந்த் நடராஜன் தன் கட்டுரையில் அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டினின் மேற்கோளைச் சுட்டியிருந்தார். அப்துல்காதர் என்ற மற்றொரு வாசகர் ‘குழந்தைத்தனமான மூடநம்பிக்கைதான் மதம் என்று ஐன்ஸ்டின் குறிப்பிடவில்லை, என்று ‘திறந்த பகுதியில்’ அக்டோபர் 13, 2013 இதே நாளிதழில் குறிப்பிட்டிருந்தார். அக்டோபர் 20, 2013 இந்து நாளிதழில் மீண்டும் பேராசிரியர் வசந்த் நடராஜன், “ஐன்ஸ்டினின் புத்தகத்தில் இடம் பெற்ற சரியான மேற்கோளைத்தான் நான் குறிப்பிட்டி ருந்தேன். அதற்கான ஆதாரம் இதோ!” என்றும் எழுதியிருந்தார். இந்தக் கருத்து விவாதம் இத்துடன் முற்றுப் பெறுகிறது என்று, இம்மடலுக்குப் பிறகு இந்து நாளிதழ் அறிவித்துவிட்டது.

பேராசிரியர் வசந்த் நடராஜனின் முதல் கட்டுரை பகுத்தறிவு எனும் கருத்துக் களத்துக்கு நம்மை இட்டுச் செல்வதால் முதல் கட்டுரையை முழுவதும் மொழியாக்கம் செய்வது சாலப் பொருத்தமாக அமைகிறது. இத்துடன் பேரறிஞர் காரல் மார்க்சின் கருத்தையும், தந்தை பெரியாரின் கருத்தையும் ஒப்பிட்டால் பகுத்தறிவும், பொதுவுடைமை நெறியும் மேலும் விரிவடைகின்றன.

பேராசிரியர் வசந்த் நடராஜனின் கட்டுரை

 “பதிவு செய்யப்பட்ட மானுட வரலாற்றை மேலோட்டமாகப் படித்தால், மற்றக் காரணங்களை விட மதத்தின் பெயரால்தான் அதிக அளவிலான போர்கள் நடைபெற்றதைக் காணமுடியும். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், கடுமையான மத உணர்வுகளும், கோட்பாடுகளும் மேலோங்கி நின்ற காலங்களில் மிகக் கொடுமையான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. கிருத்துவத்தைத் தவிர பிற மதங்களைப் பின்பற்றிய மக்கள் மீதான ஸ்பானிய விசாரணை மன்றம் மேற்கொண்ட நடவடிக்கைகள், கொடுமைகள், சிறைத் தண்டனைகள், உயிர்ப்பலிகள் ஆகியன இதற்குச் சான்றுகளாக உள்ளன.

யூதப் பகைமையும், நாஜிகளின் எழுச்சியும் இரண்டாவது உலகப் போருக்கு வகை செய்தன. தற்போது நடைபெறும் இசுலாமிய பயங்கரவாதம்-சிலர் குறிப்பிடுவது போன்று நாகரிகங்களுக்கு இடையேயான மோதல்கள் அன்று. இசுலாமுக்கும், கிறித்துவத்திற்கும் நடைபெறும் மதமோதல்களே ஆகும். இது எங்குப் போய் முடிகிறது என்றால், இசுலாமிய மதத்தலைவர்கள் விட்டுகொடுக்காத கடுமையான முறையைக் கடைப்பிடிக்கிறார்கள். குழந்தைகளுக்குப் போடப்படும் நோய்த் தடுப்பு ஊசிகளையும், வாய் வழியாகச் செலுத்தப்படும் சொட்டு மருந்துகளையும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா ஆகிய நாடுகளில் வாழும் இசுலாமியர்களின் மக்கள் தொகையைக் குறைப்பதற்காக மேற்கத்திய நாடுகள் இரகசியமாகக் கடைபிடிக்கும் செயல் திட்டம் என்று, முல்லாக்கள் பரப்புரை செய்கிறார்கள். அண்மையில் பாகிஸ்தானில் வாதநோய் வரமாலிருப்பதற்காகச் சொட்டு மருந்தினை அளித்த மருத்துவ நலப்பணியாளர்களைத் தாலிபான் இயக்கத்தினர் கொன்றார்கள்.

இக்கருத்துகளை ஆய்வு செய்வதற்கு முன்பு, ஏன் மனிதர்கள் கடவுள் கருத்தைக் கண்டுபிடித்தார்கள் என்று குறிப்பிட்டாக வேண்டும். இன்றையச் சூழலுக்கு அது ஏதாவது ஒரு வகையில் பொருந்துவதாக உள்ளதா என்பதை முதலில் காண்போம்.

பயத்தின் மீது, அதுவும் அறிந்த கொள்ள முடியாத தன்மையால் ஏற்பட்ட பயத்தின் மீதுதான்- மதம் கட்டப்பட்டது. புதிய அறிவியல்  பெரும்பாலான இயற்கை நிகழ்வுகளை விளக்கி வருவதால், அறிந்த கொள்ள முடியாதது என்பது பெருமளவில் குறைந்து வருகிறது. இயற்கையைப் பற்றிய பயம் பெரும்பாலும் பொருத்தமற்றதாகிவிட்டது. நமக்கு சூரியக் கடவுள், காற்றுக் கடவுள் அல்லது பல்வகை இயற்கைக் கடவுள்கள் (பழங்கால இந்துக் கடவுள்கள், கிரேக்கக் கடவுள்கள் உட்பட) இப்போது தேவையற்றவையாகிவிட்டன. உண்மையைச் சொல்லப் போனால், ஒரு நொடி சிந்தனைகூட நமக்குச் சுட்டுவது என்னவெனில், கடவுள் வணக்கம் எவ்வித விளக்கமும் அற்றது என்பதாகும். ஆனால், தோள்களைச் சுருக்கி, பணிந்து நமக்கு மீறிய ஒரு பொருள் உள்ளது என்ற நம்பிக்கையை ஆதி மனிதன் பெற்றிருந்தான். அதுவும் புதிய அறிவியல் உலகத்தில் பொருத்தமற்றதாய்ப் போயிற்று.

இன்று ஆதிக்கம் செலுத்தும் - ‘ஒரு கடவுளைப் போற்றும் மதங்கள்’ (ஜுதாயிசம், கிருத்தவம், இசுலாம் ஆகிய மதங்கள் பழைய ஏற்பாட்டின் (Old Testament). இயற்கைக் கடவுள்களைப் புறந்தள்ளி, வளர்ந்து, இயற்கையை மீறிய வல்லமைமிக்க ஒரு கடவுளை இப்போதும் ஏற்றுக்கொள்கின்றன. இயற்கையை மீறிய சக்தி என்றால் என்ன? அறிவியல் சோதனைக்கு உட்படாத இயற்கையை மீறிய அற்புதம் ஒன்றும் இல்லை என்பதை நாம் முதலில் உணரவேண்டும்.

நாம் பகுத்தறிவு உள்உணர்வோடுதான் பிறக்கிறோம். ஏன் என்றால் உலகத்தோடு ஒத்துப் போகிற இயற்கை விதிகள் சிறப்புமிக்க பரிணாம வளர்ச்சியின் பயனை உயிர் வாழ்வதற்கு அளிக்கின்றன. பேசும் பருவத்தை எட்டாத ஒரு வயது குழந்தைகள், தந்திரக் காட்சிகளைக் கண்டு மனம் பாதித்து அழுகின்றன. ஏனென்றால், இவ்விதக் காட்சிகள் உலகத்தை ஒட்டிய உணர்வோடு பொருந்திவராத வகையாக உள்ளன.

ஒரு பொருளை மேசையின் மேற்பரப்பில் நிறுத்தி இறுதி வரை தள்ளினாலும் விழாமல் இருப்பதற்குக் காரணம், நமது கண்களுக்குத் தெரியாத மெல்லிய கண்ணாடித் தடுப்பினை மேசையின் இறுதியில் தந்திரமாக அந்தத் தந்திர நிபுணர் பொருத்தியுள்ளதுதான். நான்கு வயதுக்குப் பிறகுதான் நம்மை மகிழ்விப்பதற்காக, தந்திர நிபுணர், இந்த வித்தையைச் செய்கிறார் என்று உணர்கிறோம். ஆனால் இது போன்ற தந்திரச் செயலை அற்புதம் என்று போற்றி, ஏற்றுக்கொண்டு பெற்றோர்களும், ஆசிரியர்களும் இயற்கையை மீறிய சக்தியான கடவுளை வணங்கிடுமாறு குழந்தைகளிடம் சொல்கிறோம். குழந்தைகளும், தங்களிடம் உள்ள பகுத்தறிவு உள்உணர்வை மீறி, பொற்றோரும், ஆசிரியர்களும், பெரியவர்களும் கூறிவிட்டார்கள் என்று இதை (கடவுளை) ஏற்றுக் கொள்கிறார்கள்.

நமது அறநெறிகளை மதத்திலிருந்து நாம் பெறுவதில்லை. ஆனால், மனிதனின் உள்ளார்ந்த உணர்விலிருந்து பெறுகிறோம். சக மனிதனின் வலிகளை உணர்கிறோம். இந்த உணர்வை மற்ற மிருகங்கள் பெற்றிருக்கவில்லை. சான்றாக, செப்டம்பர் 11ஆம் நாள் அமெரிக்க நாட்டின் உலக வர்த்தக அமைப்பு இயங்கி வந்த இரட்டைக் கோபுரங்களை, விமானங்களைக் கடத்தி, ஓட்டிச் சென்று முட்டித் தகர்த்தார்கள். அவர்கள் ‘தங்களின் மத எதிரிகளைக் கொன்றுவிடுகிறோம். நன்மையைத்தான் செய்கிறோம், இச்செயலுக்காக, இறந்த பின்பும் கடவுள் நமக்குப் பரிசளிப்பார்’ என்று நம்பினார்கள். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஜார்ஜ், ‘தீவிரவாதிகளோ தங்கள் மதநம்பிக்கை அடிப்படையில் இதே செயலை அறநெறியானது என்று கருதினார்கள் (ஒரு வேளை தீவிரவாதிகளுக்கு அவர்களின் குருமார்கள் மூளைச்சலவை செய்திருக்கலாம்). “மதம் மனித மாண்பிற்கு ஓர் அவமானம்” என்று நோபல் பரிசு பெற்ற இயற்பியல் அறிஞர் ஸ்டிவன் வியன்பர்க்’ (Steven Weinberg) இதன் காரணமாகத்தான் என்று குறிப்பிட்டார்.

இது (மதம்) இல்லாமல் நல்ல மனிதர்கள் நற்செயலைப் புரிவார்கள். தீய மனிதன் தீயசெயலைச் செய்வான். ஆனால் நல்ல மனிதர்கள் தீய செயலைச் செய்வதற்கு மதம் துணைபோகிறது. வியன்பர்க், பாகிஸ்தான் நாட்டின் இயற்பியல் அறிஞர் அப்துஸ் சலாமோடு (Abdus Salam) நோபல் பரிசினைப் பகிர்ந்து கொண்டார். அப்துஸ் சலாம் வளைகுடா நாடுகளுக்கு அறிவியலை எடுத்துச் சென்றவர். அந்த நாடுகளின் தலைவர்கள், அவருக்கு ஆதரவாக இல்லை என்பதைக் கண்டார். அறிவியல், மத நம்பிக்கைகளைச் சிதைத்துவிடும் என்று அந்தத் தலைவர்கள் கருதினார்கள். ஆம், அறிவியல் மதத்தைச் சிதைத்து விடும். எனவேதான், மத நம்பிக்கை இன்றைய அறிவியல் உலகத்திற்குக் கேடு விளைவிப்பதாக உள்ளது.

நம்மைச் சுற்றியுள்ள துயரம், துன்பம் ஆகியன கடவுள் நம்மைச் சோதிப்பதற்காகவும், அன்பின் ஆழத்தைக் காண்பதற்காகவும் செய்கிறார் என்று மதத்திற்காக வாதிடுபவர்கள் கூறுகிறார்கள். சரிதான். ஏதும் அறியாத ஒரு குழந்தை புற்று நோயால் அல்லல்படும்போது, அக்குழந்தையின் பெற்றோரிடம் இதைக் கூறிப்பாருங்கள்;. இயற்கையை மீறிய சக்தியைப் பெற்ற நீங்கள், இது போன்ற குழந்தையைச் சோதனை செய்தால், நான் உங்களை மிகக் கொடியவன் என்றே குறிப்பிடுவேன்.

ஐன்ஸ்டின் (Einstein) ‘கடவுள் நம்பிக்கையைக் குழந்தைத்தனம்’ என்று குறிப்பிட்டார். நாம் வளர்ச்சி அடைந்த பின்பு, அறிவு முதிர்ச்சி பெற்ற பிறகு, நாம் இந்தக் கருத்தியலைக் கைவிடுவதுதான் இயற்கையானது என்றார். நான் குறிப்பிட விரும்புவது இதைவிடப் பெரிய செய்தியாகும். நாகரிகம் பெற்ற நாம் இந்தக் குழந்தைத்தனத்திலிருந்து விடுபட்டு வளர வேண்டும் என்பதேயாகும்.

ஒரு சமூகத்தில் உள்ள மக்கள் திரும்பிப் பார்க்க வேண்டும். 21ஆம் நூற்றாண்டு வரை பின்பற்றிய கடவுள் கருத்துருவை எண்ணி நகைக்க வேண்டும். பழங்கால குகை ஓவியங்களைக் காண்பது போன்று நாம் காண வேண்டும். ஓவியப் படிநிலை வளர்ச்சியில், குழந்தைத்தனமான ஓவியங்கள் - தேவையான ஒரு வளர்ச்சி நிலையாகும். பிக்காசோ (Piccasso) ரெம்பிராண்டிட் (Rembrandt) ஆகியோரின் ஓவியங்கள் உயர்நிலை வளர்ச்சியின் கலை வடிவங்கள். நாம் குகை ஓவியங்களைப் பார்த்து நகைத்தால் யாரும் வருந்துவதில்லை. அதற்காக மதம் சார்பில் கொலை ஆணைகளை (Fatwa) யாரும் பிறப்பிப்பதில்லை.

முடிவாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நூறு ஆண்டுகளுக்கு முன்பு அறிஞர் பெட்ரன்ட் ரஸ்ஸல் எழுதிய ‘நான் ஏன் கிருத்துவன் இல்லை’ என்ற நூலிலிருந்து ஒரு கருத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். ‘நாம் நமது காலில் நின்று உலகம் உருண்டையானது, அழகானது என்று காண வேண்டும். நல்லவை, கெட்டவை, அழகு, அழகற்றவை என்பதைப் பகுத்தறிந்து உலகம் எப்படி இருக்கிறதோ அப்படியே காண வேண்டும். அதைக் கண்டு அஞ்சக் கூடாது. மதத்தினால் ஏற்படும் பயங்கரவாதத்துக்கு அடிபணிந்து இருக்கக் கூடாது, அறிவினால் உலகத்தை வென்றெடுக்க வேண்டும்.

கடவுள் பற்றிய கருத்தாக்கம் பழங்காலச் சர்வாதிகாரத்திலிருந்து பிறந்தது. சுதந்தர மனிதனுக்கு இது தேவையற்றது. அறிவு, அன்பு, வீரம் ஆகியன ஒரு நல்ல உலகுக்குத் தேவையானவையாகும். வருத்தம் அளிக்கக் கூடிய பழங்காலத் தடைகள் நமக்குத் தேவையில்லை. அறியாமையில் மூழ்கியிருந்த-நீண்ட காலத்துக்கு முன்பு வாழ்ந்த மனிதன் கூறிய கருத்து களுக்கு நமது அறிவை அடிமைப்படுத்தக் கூடாது”.

பேராசிரியர் வசந்த் நடராஜன் முன்வைத்துள்ள முத்துகளைப் போன்ற மேலே கண்ட அறிவியல் எண்ணங்கள், 19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் பூத்துக் குலுங்கத் தொடங்கின. குறிப்பாக டார்வின் கோட்பாடுகள் மானுடச் சிந்தனை வரலாற்றில் மதவாதக் கருத்துக்களைத் தூள் தூளாக்கின. இக்கருத்தாக்கத்தினை அறிஞர் காரல் மார்க்சு நன்கு அறிந்திருந்தார்.

ஜெர்மன் மொழியில் வெளி வந்த மூலதனத்தின் முதல் நூலுக்கு அவர் அளித்த முகவுரையில் (சூலை 25, 1867) “அரசியல் பொருளியல் என்ற களத்தில் கட்டற்ற அறிவியல் முறையிலான ஆய்வு, பிற அனைத்துத் துறைகளிலும் போன்றே, அதே வகையான பகைவர்களைச் சந்திப்பது மட்டுமல்லாமல், அது கருதிப் பார்க்கும் கருத்து களின் சிறப்பியல்புகள், அதன் போர்க் களத்துக்கு வன்முறை மிக்கதும், இழிவானதுமான தீய நோக்க முடைய மனித உள்ளத்தின் உணர்ச்சியைத் தனியார் நலம் பேணும் சுயநலப்பேய்களை எதிரிகளாக அழைத்து மோதுகிறது.

சட்டப்படி நிறுவப்பட்டுள்ள ஆங்கிலேய சர்ச் அமைப்பு, அதன் 39 கொள்கைக் கூறுகளில், 38இன் மீது தொடுக்கப்பட்ட தாக்கு தல்களை வேண்டுமானால் உவப்புடன் மன்னித்து அருளுமே தவிர, அதனுடைய வருவாயில் 1:39 பங்கையும் விட்டுக் கொடுக்காது. தற்போதைய சொத்துரிமை உறவுகளின் திறனாய்வுகளுடன் ஒப்பிடுகையில் இந்நாட்களில் நாத்திக வாதமே மதி நுட்பம் வாய்ந்தது” என்று குறுகிறது மார்க்சு புரட்சிக்கான அடித்தளத்தை அடையாளம் காட்டினார் (மூலதனம் - முதல் பாகம் - பக்கம் xxiv-க.ரா.ஜமதக்னி).

இன்னும் இந்திய நாட்டின் கோயில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கம், வைரம், மற்ற சொத்துக்களை மதவாத சக்திகள் இறுக்கிப் பிடித்து வைத்துக் கொண்டுள்ளன. வடமாநிலத்தில் சாமியாரின் கனவில், மன்னர் தோன்றி அரண்மனைக்கு அடித்தளத்தில் தங்கப் புதையல் உள்ளது என்று கூறினார். இதற்கு மத்திய அமைச்சர் அதரவு தெரிவித்ததாகக் புதைபொருள் ஆய்வாளர்கள் தங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதைக் கண்ட இந்துத்துவப் பிரதமர் வேட்பாளர், மண்ஞ¡குள் இருக்கும் தங்கத்தைத் தோண்டுவதை, விட சுவிஸ் வங்கியில் உள்ள கணக்கில் காட்டாத- திருட்டுப் பணத்தை எடுத்து வரலாம் என்று கூறி யுள்ளார். மண்ணில் தங்கம் கிடைத்தால் அரசு கைப் பற்றலாம். பிறகு கேரளாவில் உள்ள கோயிலில் உள்ள மன்னர் குடும்பம் பத்மநாபர் கோயிலில் பதுக்கியுள்ள தங்கத்தையும் கைப்பற்ற நேரிடலாம். விடுவார்களா இந்துத்துவ‌ மதவாதிகள்? அதற்காகத் தான் முன் எச்சரிக்கையாக மாற்று யோசனையை வழங்கி யுள்ளார் மோடி.

பெரியார், மதப் பிரச்சினைகளை சமுதாய - பொருளாதாரச் சிந்தனைகளோடு அணுகினார் என்பதை பால்யநாடார் சங்கத்தின் ஆண்டு விழாவில், அவர் ஆற்றிய உரை சுட்டுகிறது.

“நம்மைச் சுற்றிக் கோடிக்கணக்கான மக்கள் குடியிருக்க நிழல் கூட இல்லாமலும், இரண்டு நாளைக்கு ஒரு வேளை கூடச் சாப்பிடச் சக்தி இல்லாமலும் தரித்திரத்தில் இருக்கும் போது, சோம்பேறிகளும், விபச்சாரிகளும் தங்கும்படி மடங்களும், சத்திரங் களும் கட்டுவதும், வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு, பாயசத்துக்கு குங்குமப்பூ போதவில்லை, பொங் கலுக்குப் பாதாம் பருப்பு போதவில்லை என்று சொல்லிடும் தடியர்களுக்குப் பொங்கிப் போடுவதும், சமாராதனை செய்வதும் தர்மமாகுமா?

இவைகளை உணராமல் சுயநலக்காரர்கள் தங்கள் நன்மைக்கு எழுதி வைத்திருக்கும் ஆபாசக் களஞ்சியங்களை நம்பிக் கொண்டு நமது பொருள், நேரம், அறிவு ஆகியவைகளை வீணாக்குகிறோம்... நமது சென்னை மாகாணத்தில் மாத்திரம் இந்துமத சம்பந்தச் சடங்கு கள் எப்போதும், மதத்தின் பெயராலும், தெய் வங்களின் பெயராலும் வருடம் ஒன்றுக்கு 10 கோடி ரூபாவுக்கு அதிகமாகச் செலவாகிறது என்று சொல்வது அதிகமாகாது... இதனால் என்ன பலனை அடைகிறார்கள்? மனதில் ஏற்படும் ஒரு குருட்டு நம்பிக்கையாலும், இதனால் இலாபம் அடையும் வகுப்பார்களால் ஏமாற்றப்படுவதாலுந்தானே நமது மக்கள் இவ்விதக் கணுட, நணுட, மெனக்கேடுகளுக்குக் கட்டுப்பட வேண்டியிருக்கிறது” (பெரியர் ஈ.வெ.ரா. சிந்தனைகள், முதல் வரிசை-‘மதமும்-கடவுளும’ தொகுதி 4, பக்கம் - 1796, பதிப்பாசிரியர் வே.ஆனைமுத்து).

1926இல் மத மூடநம்பிக்கைகளின் அடிப்படைக் கூறுகளைத் தனது சொற்பொழிவில் விளக்கிய பெரியார், 23.11.1966 அன்று விடுதலை தலையங்கத்தில் “இன்று மதம் 100க்கு 97 பேரான, இந்து பாமர, பண்டித, பணக்கார மக்களை என்ன செய்திருக்கிறது? எப்படி நடத்துகிறது? என்பது பற்றி எவருக்குமே கவலை இல்லை என்பதோடு, மானமும் இல்லாமல் செய்து விட்டதே என்று சிந்திப்பது இல்லை. இன்று மதம் ஒழிந்தால் - மனித சமுதாய உயர்வு தாழ்வு ஒழிந்து ஒன்றாகிவிடும். செல்வத்தில், அறிவில், அந்தஸ்;தில், வாழ்வில் உள்ள பேதங்களும் ஒழிந்து கவலையற்ற சமநிலை ஏற்பட்டுவிடும்” (விடுதலை தலையங்கம் - 23.11.1966 - பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், முதல் வரிசை -‘மதமும்-கடவுளும்’ தொகுதி 4, பக்கம்-2098, பதிப்பாசிரியர் வே.ஆனைமுத்து). அயராத உழைப்பால், தொண் டால் பெரியார் உருவாக்கிய சமூகப் பொருளாதார - நாத்திகம் சார்ந்த பணியை நமது இளைஞர்கள் உணர்ந்து பணியாற்ற வேண்டும்.

இந்தியத் துணைக் கண்ட மண்ணில் நாத்திகச் சிந்தனை பல ஆயிரம் ஆண்டுகளாக விதைக்கப்பட்டுள்ளது. சமணமும், பௌத்தமும் வலியுறுத்திய கருத்துகள், உயர் நெறிகள், பகுத்தறிவின் வேர்களாகும். இவற்றை மனுதர்மமும், அதனை ஒட்டிய வருணாசிரமும் சூழ்ச்சியால், நயவஞ்சகத்தால் முறியடித்து, அடுக்குமுறை சாதிக் கட்டமைப்பையும், இந்து சனாதன முறைகளையும் உட்புகுத்தி, உலகில் எங்கும் காண முடியாத வேறுபாடுகளைச் சமூகத்தில் புகுத்தியது. இதில் பெரும்பான்மையான மக்கள் இன்றும் சிக்கி, அடிமைகளாக வாழ்வதினால்தான், நாட்டிற்குத் தேவையான, புரட்சிக்கான அணுகு முறைகளுக்குப் பல தடைகளை ஆதிக்கச் சக்திகள் ஏற்படுத்தி வருகின்றன. கடவுள், மதம், மூடநம்பிக்கை கள், ஜாதக அமைப்பு ஒன்றோடு ஒன்று இணைந் துள்ளன. இந்தக் கட்டமைப்பின் தலையில் கடவுள் உள்ளது. இவற்றைத் தெரிந்தோ, தெரியாமலோ பல இயக்கங்களும், அதன் தலைவர்களும், ஊடகங்களும் மத, பணப் போலிப் புகழ் போதையில் ஆழ்ந்து கிடக்கின்றனர். இதை முற்றிலும் உணர்ந்த பெரியார் தலையில் ஓங்கி அடித்தார்.

“கடவுள் இல்லை, இல்லவே இல்லை,

கடவுளை நம்புகிறவன் முட்டாள்;

வணங்குகிறவன் காட்டுமிராண்டி;

கற்பித்தவன் அயோக்கியன்.”

என்றார் பெரியார். இதை என்று மக்கள் உணர் வார்களோ, அன்றுதான், உண்மையான சமூக, பொருளாதார சமத்துவம் மலரும். பேராசிரியர் வசந்த் நடராஜன் விரும்பிய மதமற்ற சமூகம் உருவாகும்.

Pin It

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 18 பேரின் கருணை விண்ணப்பங்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுள்ளன. இவர்கள் 18 பேரும் மரண தண்டனையை மீளாய்வு செய்யுமாறு உச்சநீதிமன் றத்தில் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப் பங்கள் மீதான ஆய்வை இந்த நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் ஆய்வுக்கு மேற்கொள்ளவிருக்கிறது.

இந்த 18 பேரில் இராசிவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பாகப் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரும் இடம்பெற்றுள்ளனர். இருபது ஆண்டுகளுக் கும் மேலாக இவர்கள் சிறையில் இருக்கின்றனர். அரசமைப்புச் சட்ட விதி 61இன்படி குடியரசுத் தலை வருக்கு மன்னிப்பு அளிக்கும் அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றம் ஆய்வு செய்ய முடியாது.

ஆனால் கருணை விண்ணப்பங்கள் மீது முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தியது குறித்து ஆராயலாம். பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகி யோரின் கருணை விண்ணப்பங்கள் 11 ஆண்டுகள் குடியரசுத் தலைவரின் மாளிகையில் தூசி படிந்து கிடந்தன. பிரதீபா பாட்டீல்தான் இம்மூவரின் விண்ணப் பங்களைத் தள்ளுபடி செய்தார்.

உச்சநீதிமன்றம் அதிக நீதிபதிகள் கொண்ட ஓர் அமர்வை ஏற்படுத்தி, தூக்குத்தண்டனை குறித்த புதிய ஆய்வை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. அந்நிலையில், உரிய காரணங்களைக் கூறா மலேயே கருணை விண்ணப்பங்களை ஏற்க மறுப் பது, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பத்து, பதினைந்து ஆண்டுகள் நாள்தோறும் உயிர் ஊசலாடிய வாறு வாழுகின்ற கொடுமை முதலானவை குறித்து மனித உரிமை அமைப்புகளும், வழக்குரைஞர்களும் எடுத்துரைப்பார்கள். இத்தகைய சூழல்களில் உச்சநீதி மன்றம் மனித உரிமை அடிப்படையில் மரண தண்ட னையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட உள்ளது.

மரண தண்டனை கூடாது என்று முதன்முதலில் இத்தாலியில் 1764இல் செசரே பெக்காரியா என்ற சட்ட வல்லுநர், “குற்றங்களும் தண்டனைகளும்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் வலியுறுத்தினார். அக்கட்டுரையில், “காட்டுமிராண்டி நிலையிலிருந்து நாகரிகச் சமூகமாக மாறுவதற்கான வழிமுறைகளில் மரணதண்டனை ஒழிப்பு என்பது முதன்மையான தாகும். ஒருவருடைய உயிரைப் பறிக்க எப்படி எவருக் கும் உரிமையில்லையோ, அதேபோல, உயிரைப் பறிக்கும் உரிமை இல்லை. அரசுக்கும் மரணதண்டனை விதிப்பதாலேயே சமூகத்தில் கொலைகள் நிகழ்வதைத் தடுத்துவிட முடியாது. கொலைக்குச் சமூகச் சூழலும் பெருங்காரணம்” என்று மிகத் தெளிவாகக் குறிப் பிட்டுள்ளார்.

ஆயினும் மரணதண்டனை தேவையா? இல்லையா? என்ற விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக் கிறது. மரண தண்டனை அதிகமாக நிறைவேற்றப் படும் அமெரிக்காவில்தான், பள்ளிச் சிறுவர்கள் கூட துப்பாக்கியால், உடன்படிக்கும் மாணவர்களைச் சுடு வதும், கொலைகளும் மிகுதியாக நடக்கின்றன. இந்தியா வில் பிரித்தானிய ஆட்சியில் 1860இல் உருவாக் கப்பட்ட குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் சில குறிப்பிட்ட குற்றங்களுக்கு மரண தண்டனை என்பது ஏற்படுத்தப்பட்டது.

உலகில் போர்ச்சுகல் நாடுதான் 1976இல் முதன் முதலாகச் சட்டப்படி மரண தண்டனையை ஒழித்தது. அதன்பின் மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகள் மரண தண்டனை ஒழிப்பில் முன்னோடியாக விளங்கின. ஆனால் கியூபாவில் மரண தண்டனைச் சட்டம் நீடிக் கிறது. ஆயினும் 2003ஆம் ஆண்டுக்குப் பின் கியூபாவில் எவரும் தூக்கிலிடப்படவில்லை. அய்ரோப் பாவில் பெலாரஸ் நாடு தவிர, மற்ற நாடுகளில் மரணதண்டனை இல்லை. ஆப்பிரிக்க நாடுகளில் கூட சிலவற்றில் ஏட்டளவில் இச்சட்டம் நீடித்தாலும், பல ஆண்டுகளாக மரணதண்டனை நிறைவேற்றப்பட வில்லை. ஆனால் அகிம்சையை உலகிற்கே அளித்த புத்தர் முதல் காந்தியார் வரையில் பல சான்றோர்கள் வாழ்ந்த இந்தியாவில் மட்டும் மரண தண்டனைச் சட்டம் நீடிப்பது அவலமல்லவா?

உலக அளவில் கடந்த இருபது ஆண்டுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவு பெருகிவருகிறது. அய்க்கிய நாடுகள் மன்றத்தில் 193 நாடுகள் உள்ளன. 2007ஆம் ஆண்டு மரணதண்டனைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை 104 நாடுகள் ஆதரித்தன. 54 நாடுகள் எதிர்த்தன. 29 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள வில்லை. 2012இல் இத்தீர்மானத்தை 111 நாடுகள் ஆதரித்தன. 41 நாடுகள் எதிர்த்தன. 34 நாடுகள் வாக் கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இந்தியாவில் 2012 திசம்பர் 16 அன்று இரவு தில்லியில், ஓடும் பேருந்தில் ‘நிர்பயா’ என்று ஊடகங் களால் பெயரிடப்பட்டுள்ள, 23 அகவை மருத்துவ மாணவி கொடூரமான முறையில் கூட்டாக வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, நிர்வாணமாக ஓடும் பேருந்திலிருந்து வீசி எறியப்பட்ட நிகழ்ச்சி எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று மகாராட்டிர மாநிலம் கயர்லாஞ்சில் தாழ்த் தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பய்யாலால் போட் மாங்கே வின் மனைவியும் 19 அகவை மகளும் நிர்வாண மாகத் தெருவில் இழுத்துச் செல்லப்பட்டு, கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். நிர்பயா மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இந்தியாவே கொதித்தெழுந்ததுபோல கயர் லாஞ்சின் தலித் பெண்களுக்காக ஏன் குரல் கொடுக்க வில்லை?

நிர்பயாவுக்கு மிகச்சிறந்த மருத்துவம் அளிக்கப்பட்டது. அவரும் தீரமுடன் வாழ்ந்து காட்ட வேண்டுமென்று போராடினார். ஆயினும் இறந்துவிட்டார். அவரை இந்நிலைக்கு ஆளாக்கிய ஆறு குற்றவாளிகளையும் தூக்கில் போட வேண்டும் என்ற சீற்றம் இந்தியா முழுவதும் கடலலை போல் ஆர்ப்பரித்தது. அதனால் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து ஆராய நீதிபதி வர்மா தலைமையில் ஒரு குழு அமைக் கப்பட்டது. அதுவரையில், கற்பழிப்புக் குற்றத்துக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்பதாக இருந்தது.

இதற்கிடையில் நடுவண் அரசு அரசியல் ஆதாயத் துக்காக, பாலியல் வல்லுறவு குற்றத்திற்கு மரண தண்டனை என்கிற அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. நீதிபதி வர்மா குழு அளித்த அறிக்கையில், “கற்பழிப்பு வழக்குகளில் விரைவில் நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும். குற்றவாளிக்கு அதிகபட்சமாக வாழ்நாள் தண்டனை அளிக்கலாம். அத்தண்டனை, குற்றவாளி இறக்கும் வரையில் சிறையில் இருப்பது என்பதாகவும் இருக்கலாம். மேலும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் சிறப்புக் காவல் படையினருக்கும் இதே தண் டனை வழங்கப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் நடுவண் அரசு, பாலியல் வல்லுறவுக் குற்றத்துக்கு மரண தண்டனை வேண்டாம் என்கிற வர்மாவின் கருத்தை ஏற்கவில்லை. கற்பழிப்புக் குற்றத் துக்கு மரண தண்டனை என்ற சட்டத்தை நாடாளு மன்றத்தில் பா.ச.க. உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றியது.

சிறப்பு ஆயுதப்படையினருக்கும் இச்சட்டம் பொருந்த வேண்டும் என்கிற வர்மா குழுவின் பரிந்துரையை யும் நடுவண் அரசு புறக்கணித்துவிட்டது. ஆயுதப்படை யினரின் சிறப்பு அதிகாரச் சட்டம் என்பது 1958-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. ஜம்மு-காஷ்மீரிலும், வட கிழக்கு மாநிலங்களிலும் இது நடப்பில் உள்ளது. இந்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மக்களை ஆயுதப் படையினர் கொல்கின்றனர்; பெண்களைக் கற்பழிக்கின்றனர். 1979 முதல் மணிப்பூரில் ஆயுதப் படையினரால் கொல்லப்பட்ட 1,528 பேரின் பட்டியல் 2012 செப்டம்பரில் உச்சநீதிமன்றத்தில் தரப்பட்டது.

அதன் அடிப்படையில் நீதிபதி சந்தோஷ் எக்டே தலைமையில் மூவர் கொண்ட குழுவை உச்சநீதி மன்றம் அமைத்தது. இக்குழு அளித்த அறிக்கை, ஆயுதப் படையினர் தமக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி எண்ணற்ற மனித உரிமை மீறல்களை யும், பாலியல் கொடுமைகளையும், படுகொலைகளையும் செய்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

2004ஆம் ஆண்டு மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள ஆயுதப்படை முகாமில் தங்கஜம் மனோரமா தேவி என்ற இளம்பெண் கொடிய முறை யில் துன்புறுத்தப்பட்டு, வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இதைக் கண்டித்து ஆயுதப் படை தலைமை அலுவலகத்தின் முன், மணிப்பூர் மகளிர் சிலர் ஆடையின்றி ‘எங்களைக் கற்பழியுங்கள்’ என்ற பதாகையுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். இச்செய்தி அதிர்ச்சி அலைகளை எழுப்பியது. இக்கொடிய ஆயுதப் படையின் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று இளம்பெண் இரோன் ஷர்மிளா 2000 நவம்பர் 4 முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கட்டாயப்படுத்தப்பட்டு மூக்கின் வழியாக அவருக்கு உணவு செலுத்தப்படுகிறது. தில்லி மருத்துவ மாணவி நிர்பயாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு ஒப்பாரி வைக்கும் அரசியல் கட்சிகள், ஆயுதப் படையின் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்குவதற்கு ஏன் முன் வரவில்லை? நிர்பயா போன்ற எண்ணற்ற பெண்கள் காவல்துறையினராலும், இராணுவத்தினராலும் சொல் லொணா பாலியல் அளவில் கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனரே!

நிர்பயா மீது பாலியல் வன்கொடுமை நிகழ்த்திய ஆறு பேரில் அகவையில் மூத்த இராம்சிங் (34) சிறையிலேயே தூக்குப் போட்டுக் கொண்டான். முகேஷ் சிங் (26), அக்ஷய தாக்கூர் (28), குப்தா (19) வினய் சர்மா (20) ஆகிய நால்வருக்கும் தில்லி விசாரணை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. மற் றொரு குற்றவாளி முன்னாவுக்கு 17 அகவை என்பதால் சிறுவன் என்ற பிரிவின் கீழ் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. இந்த ஆறு பேரும் இராஜஸ் தான், உ.பி., பீகார் மாநிலங்களிலிருந்து பிழைப்புத் தேடி தில்லிக்கு வந்த ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்தவர்கள். பொதுவாக நீதி வழங்கப்படுவதில்-தண்டனை விதிக்கப்படுவதில் வர்க்கச்சார்பும், சாதியப் பின்னணியும் காரணிகளாக உள்ளன. சிறைகளில் இருப்போரில் 90 விழுக்காட்டினர் கீழ்த்தட்டுச் சாதிக ளைச் சார்ந்த ஏழை எளிய மக்களாகவே இருக்கின்ற னர். அமெரிக்காவிலும் இதேநிலைதான். கறுப்பின மக்களே மிகப்பெருமளவில் சிறைகளில் இருக்கின்றனர்.

ஒன்பது மாதங்களுக்குள் நிர்பயா வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டமை அனைவராலும் வரவேற்கப்பட்டது. வர்மா அறிக்கையிலும் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் விரைந்து நீதி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் கற்பழிப்பு வழக்குகள் விசாரணைக்கு வருவதற்கே ஆறு முதல் எட்டு ஆண்டுகளாகின்றன. தற்போது இதுபோன்று 90,000 வழக்குகள் நிலு வையில் உள்ளன. மேலும் சாதாரண மக்களின் உரிமைகளைப் பற்றிக் கவலைப்படாத மாநில அரசு களும், நிர்வாகமும் காவல்துறையும் நீதித்துறையும் இந்தியாவில் இருப்பதற்கான ஒரு சான்று-பெரும் எண்ணிக்கையில் உள்ள விசாரணைக் கைதி களாவர். இந்தியாவில் மொத்தமுள்ள சிறைகளில் 3,32,782 பேரை மட்டுமே கைதிகளாக வைக்க முடியும். ஆனால் தற்போது 2,04,480 பேர் விசாரணைக் கைதிகளாக உள்ளனர். பல விசாரணைக் கைதிகள் அவர்கள் செய்த குற்றத்துக்குரிய தண்டனைக் காலத்தைவிட அதிகமான ஆண்டுகளாகச் சிறையில் இருக்கின்றனர். அண்மையில் நடுவண் அரசின் சட்ட அமைச்சர் நாடாளுமன்றத்தில், “வழக்குப் பதிவு செய்யப்படுவோரில் ஆறு விழுக்காட்டினர் மட்டுமே தண்டனை பெறுகின்றனர்” என்று கூறியிருக்கிறார் (தினமணி, 23-10-13). காவல்துறையும், வழக்கு ரைஞர்களும், நீதித்துறையும் அப்பாவி ஏழை, எளிய மக்களை எப்படியெல்லாம் அலைக்கழித்துத் துன் புறுத்துகின்றனர் என்பதையே இது காட்டுகிறது. எனவே இத்துறைகள் உடனடியாகச் சீர்திருத்தம் செய் யப்பட வேண்டும்.

1982இல் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, பச்சன்சிங் எதிர் பஞ்சாப் அரசு வழக்கில், அரிதி னும் அரிதான வழக்குகளில் (Rarest of rare cases) மட்டுமே மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று கூறியது. இந்தியாவில் மரண தண்டனை வழங்கப்படும் எல்லா வழக்குகளி லும் ‘அரிதினும் அரிதான’ என்ற சொலவடை பயன்படுத்தப்படுகிறது.

2013 செப்டம்பரில் நிர்பயா வழக்கில் நான்கு பேருக்குத் தூக்குத் தண்டனை அளித்த தீர்ப்பில், ‘சமூகத்தின் ஒட்டுமொத்த உணர் வுக்கு - எதிர்பார்ப்புக்கு’ (Collective conscience of the community) மதிப்பளித்து இம்மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இது மிகவும் ஆபத்தான சொற்கோவையாகும். செப்டம்பர் மாதம் உத்தரப்பிரதேசத்தில் ஜாட் சாதி இளம் பெண்ணை முசுலீம் இளைஞன் ஒருவன் கேலி செய்தான் என்ற தீக்குச்சியால் மூண்ட ஜாட் சாதியினர் - முசுலீம்கள் மோதலில் 54 பேர் கொல்லப்பட்டனர்.

இவர்களில் பெரும் பாலோர் இசுலாமியர்கள். 40000 முசுலீம்கள் தாக்குதலுக்கு அஞ்சித் தம் வீடுகளை விட்டு வெளி யேறி அகதி முகாம்களில் அடைக்கலம் புகுந்தனர். இந்த வழக்கில் சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வு என்பது எப்படி நீதிமன்றத்தால் கணிக்கப்படும்? இதேபோன்று குசராத்தில் மோடி ஆட்சியில் 2002 ஆம் ஆண்டு இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட முசுலீம்கள் கொல்லப்பட்டனரே - அதை ஒட்டுமொத்த இந்து சமூகத்தின் உளவியல் என்று ஏற்றுக் கொள்ள முடியுமா?  

மரணதண்டனை, பெண்கள் மீதான வன்கொடுமைகள் இழைக்கப்படுவதைத் தடுக்கும் என்பது ஒரு மாயை. மேற்குவங்காளத்தில் 14 அகவை பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தனஞ்செய் சட்டர்ஜி என்ற இளைஞன் 2004 ஆகத்து 14 அன்று தூக்கிலிடப்பட்டான். அதனால் மேற்குவங்காளத்தில் பாலியல் குற்றங்கள் குறைய வில்லை. இந்தியக் குற்றப்பதிவு ஆணையத்தின் அறிக்கையின்படி, மேற்குவங்காளத்தில் 2012இல் 2,046 கற்பழிப்புகள், 4,168 பெண்கள் கடத்தல், 593 வரதட்சணைச் சாவுகள் பதிவாகியுள்ளன. எனவே எத்தகைய கடுமையான சட்டமும் குற்றங்கள் நிகழ்வதைத் தடுப்பதில்லை என்பது உலக அளவில் ஆராய்ந்து அறியப்பட்ட முடிவாகும்.

எனவே பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு - இளைஞர்களின், ஆண்களின் பாலியல் குறித்த இழிவான மனநிலைக்கு, நம் சமூகத்தில் மதஇதிகாசங்களில் உள்ள கதைகள், சாதிய மரபுகள், மேல்சாதி, கீழ்ச்சாதி அடிப்படையிலான பழக்கவழக் கங்கள் என்ற பெயரால் பெண்களைப் பற்றிய தவறான-இழிவான கருத்துகளும் கண்ணோட்டங்களும் காரணங்களாகும்.

நவீன ஊடகங்களும் ஆண்களின் வக்கிர பாலுணர்வுக்குத் தீனி போடுகின்றன. எல்லா நிலை களிலும் உள்ள ஆணாதிக்க மனப்போக்கை நீக்கவும், ஆணும் பெண்ணும் எல்லா வகையிலும் சமம் என்ற எண்ணத்தையும் நடைமுறையையும் வளர்ப்பதே வீடுகளிலும், வீதிகளிலும், சமூகத்திலும் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளை மட்டுமின்றி, பிற வகையான அடக்குமுறைகளையும் ஒழிப்பதற்கான வழிகளாகும். எனவே மரண தண்டனை எவ்வகையிலும் தீர்வாகாது. எல்லா வகையான குற்றங்களுக்கான மரண தண்டனைச் சட்டங்களுக்கும் இது பொருந்தும்! எனவே மரணதண்டனை உடனடியாக ஒழிக்கப்படவேண்டும்.

Pin It

கொள்கைப் பிடிப்பிற்கும் கட்டுப்பாட்டிற்கும், தியாகத்திற்கும் உலக அளவில் பொதுவுடைமைக் கட்சிகள் பெயர் பெற்றவை.

ஆனால், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி இத்தனைப் பண்புநலன்களையும் பெற்றிருந்தாலும், உருவாகி சுமார் 90 ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும், இன்னும் தானாக எழுந்து நடமாட முடியாத நிலையில், தவழ்ந்துகொண்டே காலம் கடத்துவதாகவே உள்ளது. இந்த நிலையை எண்ணி, நீண்ட நாட்களாகவே மனத்தில் ஓர் அன்பு கலந்த ஆற்றாமையும், பரிவும் பீடித்தும் நீடித்தும் வருவதை உணர்ந்ததன் விளைவே இந்தத் திறனாய்வுக் கண்ணோட்டம் ஆகும்.

1947ஆம் ஆண்டு, இந்தியா அரசியல் விடுதலை அடைந்தபோது, பொதுவுடைமை இயக்கம் வலிமை வாய்ந்த எதிர்க்கட்சியாக விளங்கியது. 1952 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, அன்றைய சென்னை மாகாணத் தில், 64 இடங்களில் வெற்றிபெற்று, இது முதலாவது எதிர்க்கட்சியாகத் திகழ்ந்து, ஒரு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தியது. ஆனால், அதற்குப் பிறகு பொதுவுடைமை இயக்கம் சரிவை நோக்கித்தான் பயணித்தது. 1957ஆம் ஆண்டுத் தேர்தலில் சென்னை மாகாணத்தில் எட்டு இடங்களையும், 1962ஆம் ஆண்டில் நான்கு இடங்களையும், 1967ஆம் ஆண்டில் இரண்டு இடங் களையும் பெற்றுக் கடைநிலையில் தள்ளப்பட்டது.

ஈடு இணையற்ற தியாக வரலாறு படைத்த பொதுவுடைமை இயக்கம் மெலிவடைந்து சிதைந்து போனது ஏன்? இதன் காரணங்கள் யாவை?

பொதுவுடைமை இயக்கம் பிளவுபட்டு, ஒன்றுக்கு மேற்பட்ட இயக்கங்களாக இப்போது இந்தியாவில் உள்ளன. இந்நிலையில், இந்தியாவில் பொதுவுடைமை இயக்கத்தின் தொடக்கத்தையும், வரலாற்றில் ஏற்பட்ட தடங்கல்கள், சறுக்கல்கள், சரிவுகள், தோல்விகள் இவற்றின் பின்புலங்கள் முதலியனவற்றையும் ஆராய்வது பொருத்தமாக இருக்கும்.

இந்தியாவில் பொதுவுடைமை இயக்கத் தோற்றம்

1871ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15இல், பொதுவுடைமை அகிலத்தின் பேரவைக் கூட்டம் கார்ல்மார்க்ஸ், தலை மையில் நடைபெற்றது. ஏங்கல்சும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டார். கல்கத்தா வாழ்நர் ஒருவர் அக்கூட்டத்திற்குக் கடிதம் எழுதியிருந்தார். பொதுவுடைமை அகிலத்தின்கிளை ஒன்றை இந்தியாவில் நிறுவும்படி அதில் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு உடனே ஒப்புதல் கொடுத்த அகிலம், இந்திய நிலைமைகள் பற்றித் தெளிவாக உணர்ந்தும் இருந்துள்ளது. பொதுவுடைமை அகிலத்தின் கிளை அமைக்க வேண்டும் என்பது கடிதம் எழுதியவரின் விருப்பமாக இருந்திருக்கிறதே தவிர, இந்தியாவில் தொழிலாளி வர்க்கம் அப்போது அதற்குத் தயாராகியிருக்கவில்லை என்பது உண்மை. இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சி உருவாக மேலும் ஓர் அரை நூற்றாண்டுக்காலம் காத்திருக்க வேண்டியிருந்தது.

இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சி அமைக்கப் பட்ட தகவல் குறித்து இந்தியப் பொதுவுடைமை இயக்கத்திற்குள்ளாகவே மாறுபட்ட கருத்துகள் இருந்து வருகின்றன.

1925ஆம் ஆண்டு டிசம்பரில் கான்பூரில் பொது வுடைமைக் கட்சி உருவானது என்பது இந்தியப் பொது வுடைமைக் கட்சியின் கருத்தாகும்.

ஆனால் மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியோ, 1920 அக்டோபரில் தாஷ்கண்ட் நகரில் இந்தியாவுக்கான பொதுவுடைமைக் கட்சி அமைக்கப்பட்டது என்று கூறுகிறது.

இதில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், தாஷ்கண்டில் அல்லது கான்பூரில் அமைக்கப்பட்ட பொதுவுடைமைக் கட்சியானது ஒரு முழுமையான திட்டத்தை மேற்கொண்டிருக்கவில்லை என்பதுதான்.

பொதுவுடைமைக் கட்சி என்பது, தான் நடத்தப் போகும் புரட்சியின் கட்டம், தன்மை, அதற்கான போர்த் தந்திரம் ஆகியன பற்றித் தெளிவான இலட்சி யத் திட்டத்தோடு செயல்பட வேண்டிய கட்சியாகும்.

1930ஆம் ஆண்டு ‘செயல்மேடை’ என்னும் தலைப்பில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சிக்கு முழுமையான திட்டம் அறிவிக்கப்பட்டு, 1933 டிசம்பரில் மீரட் சதிவழக்குக் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட பிறகுதான், உண்மையான, மையப்படுத்தப்பட்ட கட்சி உருவானது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இக்கட்சி தனது திட்டத்தை உருவாக்கி, 1934இல் பொதுவுடைமை அகிலத்துடன் முறையாக இணைக்கப்பட்டது.

1943இல் முதல் மாநாடு மே 23 முதல் ஜூன் 9 வரை பம்பாயில் நடைபெற்றது. கட்சித் திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான தீவிர முயற்சிகள் அப்போதும் நிகழவில்லை. முற்றாளுமை (ஏகாதிபத்திய) எதிர்ப்பு, தேச விடுதலை என்பதில் பொதுவுடைமைக் கட்சி மிகத் தெளிவாக இருந்தது. அதேநேரத்தில், இரண்டாம் உலகப்போர், சோவியத் மீது இட்லர் தாக்குதல், இந்தியாவை ஜப்பானியப் படை நெருங்கியது என்னும் இக்கட்டான நிலைகளில், இந்தியப் புரட்சியின் கட்டம், தன்மைபற்றி ஆழமான ஆய்வு செய்து ஒரு கட்சித் திட்டத்தை உருவாக்கும் பணியில் கட்சி ஈடுபடவில்லை; கட்சியினால் ஈடுபட முடியவில்லை. இந்த நிலையில் விடுதலை கிட்டியதும் அதைப்பற்றிச் சரியான கணிப்பிற்கு வருவதிலேயே சிக்கல் ஏற்பட்டது. வளரும் குழந்தை தடுக்கி விழுவதுபோல, இளம் பொதுவுடைமைக் கட்சியும் சில சறுக்கல்களுக்கு ஆளாகியது.

1920 அக்டோபர் 17ஆம் நாள், சோவியத் நாட்டின் தாஷ்கண்ட் நகரில் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்ட இந்தியாவுக்கான பொதுவுடைமைக் கட்சியில், தொடக் கத்தில், 10க்கும் மேற்படாத உறுப்பினர்களே இருந்தனர். ஆனால், 1921ஆம் ஆண்டுவாக்கில், முகாஜிகர்கள் வந்ததோடு அதன் அணி பெருகியது.

இந்த முகாஜிகர்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லீம்களின் புனித அரசாகக் கருதப்பட்ட துருக்கி சுல்தான் கலீபாவை, ஆங்கிலேய ஏகாதிபத்தியம் ஆட்சியைவிட்டு இறக்கியது. இதனால், உலகம் முழுவது முள்ள முஸ்லீம்கள் கொதித்தெழுந்தனர். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கெதிராக, முஸ்லீம் மக்களின் கிலாபாத் (எதிர்ப்பு) இயக்கம் உருவானது. முஸ்லீம்கள் பலர் இந்தியாவிலிருந்து தாங்களாகவே வெளியேறித் துருக்கியை அடைய முயன்றனர். இவர்களே ‘முகாஜிகர்கள்’ என அழைக்கப்பட்டனர்.

இவர்கள், 1921 வசந்த காலத்தில் கீழை நாடுகளுக் கான உழைப்பாளர் பொதுவுடைமைப் பல்கலைக் கழகத்தில் இந்தியக் குழு ஒன்றை அமைத்தனர். கட்சியின் முதல் செயலாளர் முகமது ஷபீக் ஆவார். தாஷ்கண்டிலும், மாஸ்கோவிலும் கல்வியை முடித்த பிறகு, முன்னாள் முகாஜிகர்களுடைய உறுப்பினர் களான முகமதுஷபீக், பெரோஸ்தீன் மன்சூர், அப்துல் மஜீத், ரபீக் அகமது, சவுகத் உஸ்மான், பஸர் இலாகி குர்பான் மற்றும் அப்துல் வாரென் உட்படப் பலர் இந்தியாவிற்குத் திரும்பி, இங்கு அமைக்கப்பட்டிருந்த பொதுவுடைமைக் குழுக்களில் பங்கெடுக்கத் தொடங்கி னர். மற்றவர்கள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்து, பொதுவுடைமை அகிலத்துடன் இணைக்கப்பட்ட பல் வேறு அமைப்புகளுக்குள்ளோ, பிற தேசிய புரட்சிகர அமைப்புகளிலோ செயல்பட்டு வந்தனர். எம்.என். ராயைத் தவிர, அயல்நாடுகளிலிருந்த இந்தியர்களுக் கிடையில் இருந்த பொதுவுடைமைக் குழுக்களில் முக்கியமாகப் பணியாற்றிய இன்னொருவர் அபானி முகர்ஜி ஆவார். அவர் பெர்லினில் இருந்த இந்திய சுதந்தரக் குழுவின் பிரதிநிதியாக இரண்டாவது பொது வுடைமை அகிலத்தின் மாநாட்டுக்கு வந்திருந்தார்.

ஏற்கெனவே அமைக்கப்பட்டுச் செயல்பட்டுக் கொண் டிருந்த பல்வேறு பொதுவுடைமைக் குழுக்களை ஒன்றுபடுத்தச் செய்யப்பட்ட முதல் முயற்சி, கான்பூர் பொதுவுடைமைக் கட்சி மாநாடாகும். கம்யூனிஸ்ட் அகிலத்தின் வழிகாட்டுதலின்படி, இந்த முயற்சிக்குப் பின்னர்தான் தொழிலாளர்கள் மற்றும் உழவர்கள் கட்சிகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1933-34ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி உருவாக்கப்பட்டு, பொதுவுடைமை அகிலத்துடன் அது இணைக்கப்பட்டது. 1943இல் முதல் மாநாடு நடத்தப்பட்டு, பொதுவுடைமை இயக்கத்தை வளர்த் தெடுப்பதற்குப் பொதுவுடைமையாளர்கள் ஆற்றிய பங்கினை நினைவுகூர்தல் வேண்டும்.

இந்திய நிலைமையும் பொதுவுடைமைக் குழுக்களும்

1920ஆம் ஆண்டு தாஷ்கண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்ட போது இந்தியாவில் நிலைமை எப்படி இருந்தது?

மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தம் 1918 சூலையில் அறிவிக்கப்பட்டது. மாபெரும் உருசியப் புரட்சியை அடுத்து, உலக நாடுகளில், குறிப்பாகக் காலனி நாடுகளில் ஏற்பட்டுவந்த விரைவான மாறுதல் களைச் சமாளிக்க ஆங்கில முற்றாளுமை அரசு, சலுகைகள் சிலவற்றை அளித்தது. 1918இல் மாண்டேகு-செம்°போர்டு சீர்திருத்தத்துடன், ரௌலட் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் விசாரணை ஏதுமின்றி மக்களைக் கைது செய்யும் முறை இந்தியா வில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ரௌலட் சட்டத்திற்குப் பிறகு, தொழிற்சங்க இயக்கப் பணிகளும், உழவர்கள் இயக்கமும் வேகமாக வளரவே செய்தன. ரௌலட் சட்டத்தை எதிர்த்து, 1919 ஏப்ரல் 6ஆம் நாளில், நாடு தழுவிய கடையடைப்புப் போராட்டத்திற்கு (ஹர்த்தால்) காந்தியடிகள் அழைப்பு விடுத்தார். கடையடைப்புப் போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றது.

பஞ்சாபில், விடுதலை இயக்கத்தின் முன்னணித் தலைவர்களை அரசு கைது செய்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமிர்தசரசின் வீதிகளில் மாபெரும் மக்கள் பேரணி நடைபெற்றது. முடிவில், நான்குபுறமும் மதிலால் சூழப்பட்டிருந்த ஜாலியன் வாலாபாக் மைதா னத்தில் விடுதலை இயக்கக் கூட்டம் நடைபெற்றது. பெருந்திரளாகக் கூடிய மக்கள், தலைவர்களின் உரைகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஆயுதப் படையுடன் உள்ளே நுழைந்த ஜெனரல் டயர், சிறிதும் மனிதப் பண்பு இல்லாதவனாக, அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த மக்களைச் சுட்டுத்தள்ள ஆணையிட்டான். மைதானமெங்கும் குண்டு மழை பொழிந்தது. ஆயிரம் பேர் குருதி வெள்ளத்தில் உயிரிழந்தனர்; இரண்டாயிரத்துக்கும் மேலானோர் படுகாயமடைந்தனர். ஜெனரல் டயர் நடத்திய இக் கொடுமையை எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழுந்தனர். கண்டனக் கூட்டங்கள் நாடு முழுவதும் நடந்தன; போராட்டங்கள் வெடித்தன.

பஞ்சாபில் உழவர்கள் இயக்கம், ஐக்கிய மாகா ணங்களில் குத்தகை உழவர்களின் போராட்டம், 1921 ஆகஸ்ட்டில் மலபார் பகுதியில் நடைபெற்ற மாப்பிள் ளைமார்கள் போராட்டம் (இந்து நிலப்பிரபுக்களை எதிர்த்து, இந்து உழவர்களையும் திரட்டிக்கொண்டு மாப்பிள்ளைமார் என்னும் முஸ்லீம் வகுப்பைச் சேர்ந்த உழவர்கள் நடத்திய போராட்டம்) எனப் பல போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டங்களை யெல்லாம் ஆங்கில ஏகாதிபத்திய அரசு கடுமையான அடக்குமுறைகளைப் பயன்படுத்தி அடக்கியது. உழவர்கள் பல்லாயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டனர். பலர் தங்கள் உயிரையே பலியாகத் தந்தனர்.

இந்தக் காலகட்டத்தில் உருசியப் புரட்சி பற்றிய புதிய விவரங்கள் இந்திய மக்களுக்குக் கிடைக்கத் தொடங்கின. இவை உருசியப் புரட்சி பற்றிய ஓரளவு சரியான கணிப்பினை முற்போக்காளர்கள் அறிந்து கொள்ள உதவின.

1920ஆம் ஆண்டு காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமைப் போராட்டம் 1921இல் உச்சநிலையை அடைந்தது. நாட்டின் பல பகுதிகளில் வேல்சு இளவரசரின் வருகைக்கு எதிராகப் பெரும் பேரணிகள் நடத்தப்பட்டன. அதனால், பெரும்பாலான காங்கிர° தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப் பட்ட தலைவர்களை விடுவிக்காவிட்டால் வரிகொடா இயக்கம் தொடங்கப் போவதாகக் காந்தியடிகள் 1922 பிப்ரவரி 1ஆம் நாள் எச்சரித்தார். இந்த நிலையில் மக்கள் திரள் போராட்டங்கள் வலுப்பெற்றன. காவல் துறையின் அடக்குமுறைகள் அதிகமாயின. பிப்ரவரி 4இல், சௌரிசௌரா என்னுமிடத்தில் ஆத்திரம் கொண்ட மக்கள் காவல் நிலையத்துக்குத் தீ வைத்தனர். தீ வைப்புக் கலவரத்தில் 21 காவலர்கள் உயிரிழந்தனர். காவலர்களின் உயிர்ச்சேதத்தைக் காந்தியடிகள் விரும்ப வில்லை. கலவரத்தையும் உயிர்ச்சேதத்தையும் காரணம் காட்டி, காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத் தையே நிறுத்திவிட்டார். இதைக்கண்டதும் காங்கிர° அணிகளே திகைத்து நின்றன.

இந்தப் பின்னணியில்தான் இந்தியாவில் முதல் பொதுவுடைமைக் குழுக்கள் தோன்றின. இவை பம்பாய், கல்கத்தா, சென்னை, இலாகூர் என்று தொழில் நகரங்களில், 1921-1922ஆம் ஆண்டுகளில் உருவாயின.

மகாராஷ்டிர மாநிலத்தில் எஸ்.ஏ. டாங்கேயுடன், ஆர்.எஸ். நிம்கர், வி.டி. சத்தாயி போன்றோரும், பின்னர் எஸ்.வி. தேஷ்பாண்டே, ஜி.டி. மத்கோல்கர், வி.எச். குல்கர்னி, ஆர்.எல். பராட்கர், டி.பி. நவாரே, கே.என். ஜோக்லேகர், பர்வாடே ஆகியோரும், தாங்கள் அரசியல் ரீதியிலும், மெய்யியல் கோட்பாட்டு ரீதியிலும் லெனினை ஆதரிப்பவர்கள் என்று வெளிப்படையாக அறிவித்தனர். இக்குழுவின் முயற்சியால் எஸ்.ஏ. டாங்கேயை ஆசிரியராகக் கொண்டு, 1922இல், இருந்து “சோஷலிஸ்ட்” என்னும் ஆங்கில வார ஏடு பம்பாயி லிருந்து வெளிவரத் தொடங்கியது. பிறகு அது மாத இதழாக வெளிவந்தது. இந்த இதழின் மூலமாக எஸ்.வி. காட்டேயும், எஸ்.எச். மிரோஜ்கரும் பின்னாளில் பம்பாய்க் குழுவினருடன் இணைந்தனர்.

வங்காளத்தில், 1920இல் அரசியலைத் தமது முழு நேரப் பணியாகக் கொண்டு இயங்கிய முசாபர் அகமது, புரட்சிக் கவிஞர் குவாசி நஸ்ருல் இஸ்லா முடனும் மற்றும் சிலருடனும் இணைந்து “நவயுகம்” என்னும் மாலைச் செய்தி இதழைத் தொடங்கினர். தொழிலாளர் இயக்கம் பற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்பட்ட முசாபர் அகமது, ஐரோப்பாவிலிருந்து தருவிக்கப்பட்ட சில நூல்களும், லெனின் எழுதிய சில நூல்களும், மார்க்சியம் பற்றிய சில நூல்களும், பிலிப்பிரைஸ் எழுதிய “ரஷ்யப் புரட்சி பற்றிய எனது நினைவுகள்” என்ற நூலும் கிடைத்துப் படித்ததன் மூலம், கட்சி அமைப்பைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டார். ஒத்துழையாமை இயக்கம் திரும்பப் பெறப்பட்டபோது, முசாபர் அகம்மதுடன் இணைந்து, அப்துல் ஹலீம், அப்துல் ரஸாக் கான் ஆகியோர் பொதுவுடைமைக் கட்சியினைக் கட்ட முன்வந்தனர்.

(தொடரும்...)

Pin It