இந்தியா ஒரே நாடு - இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என்பதை இந்திய தேசிய காங்கிரசு,இந்தியப் பொதுவுடைமைக் கட்சிகள், இந்துமகா சபை - இன்றைய பாரதிய ஜனதா கட்சி முதலான அனைத்திந்தியக் கட்சிகள் ஏற்றுக்கொண்டன.

தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலான மாநிலக் கட்சிகளும் இவற்றை ஏற்றுக்கொண்டன.

திராவிட முன்னேற்றக்கழகம் கொள்கை அளவில் இந்திய மொழிகள் என்ற பட்டியலில் அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள எல்லா மொழிகளும் இந்தியாவின் ஆட்சி மொழிகளாக ஆக்கப்பட வேண்டும் என்றும்; முதலில் நம் தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக ஏற்கப்பட வேண்டும் என்றும் கோருகிறது. ஆனால் இதற்கான இணக்கமான முயற்சி எதையும் இன்றுவரையில் தி.மு.க. மேற்கொள்ளவில்லை. தனிநாடு கேட்கும் வடகிழக்கு மாநிலங்களில் நாகாலாந்து, அசாம், மிசோரம் போராட்டங்களை இந்திய அரசு 30 ஆண்டுகளாக இழுத்தடிப்புச் செய்து அயர வைத்து, பேச்சுவார்த்தை மூலம் அக்கோரிக்கையைத் தோற்கடிக்க முயற்சிக்கிறது.

இந்தச் சூழலில் , இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பகுதி 17இல் உள்பகுதி I, உள்பகுதி II இவற்றில் உள்ள விதிகள் 343, 344, 345, 346, 347 இவற்றில் திருத்தம் செய்யப்படாமலே, இந்திய இரயில்வே துறைப் பணிகளுக்கான இடங்களுக்கு உரியவர்களைத் தேர்வு செய்திட வேண்டி, இரயில்வே வாரியங்கள் நடத்தும் தேர்வுகளை முதன்முதலாக இந்திய அரசமைப்பில் பட்டியலிடப்பட்ட 22 மொழிகளிலும் எழுத வழிசெய்து - தெற்கு இரயில்வே நிலையங்களில் நிலைய உதவித் தலைவர் பதவிகளுக்கான தேர்வுகளை தென் மண்டல மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு 13.06.2010 அன்று அவரவர் தாய்

மொழியில் வினாத்தாள்கள் வழங்கப்பட்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. தேர்வில் பங்கேற்ற அனைவரும் மகிழ்ச்சியுடன் தேர்வுகளை எழுதியுள்ளனர்.

தென்மண்டலத்திலும் மற்ற மண்டலங்களிலும் கடந்த 62 ஆண்டுகளாக ஆங்கிலம், இந்தி இரண்டு மொழிகளில் மட்டுமே வினாத்தாள்கள் வழங்கப்பட்டன.

எல்லா மொழிமாணவர்களுக்கும் ஆங்கிலம், அந்நிய மொழி, எனவே, அது ஒரு தடையாக இருந்தது. ஆனால் இந்தியா முழுவதிலும் தேர்வு இந்தியிலும் நடத்தப்பட்டதால் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே எளிதில் தேர்வுகளில் வெற்றிபெற்றனர்.

அய்க்கிய முற்போக்கு அணி ஆட்சியில் இரயில்வே துறை அமைச்சராக பீகாரைச் சேர்ந்தவர்களே இதுகாறும் இருந்தார்கள். அவர்கள் இந்திக்காரர்களுக்கே வேலையில் வாய்ப்புத் தர எல்லாம் செய்தார்கள்.

பள்ளிகளில் இந்தியைப் படித்த மகாராட்டிரம், கருநாடகம் போன்ற மாநிலங்களில் இரயில்வே துறைத் தேர்வு மய்யங்களில் பதிவு செய்து கொண்டு தேர்வு எழுதிட வந்த வடநாட்டு இந்தி மொழி மாணவர்களை எதிர்த்து அந்தந்த மற்ற மொழி மாநில மாணவர்கள் போராடினார்கள்.

இப்போது 2009க்குப் பிறகு இரயில்வே துறை அமைச்சராக வந்த மேற்கு வங்கத்தைச் சார்ந்த மம்தா பானர்ஜி அவர்கள் இரயில்வே வாரியங்கள் இதுவரையில் நடத்தியதுபோல் ஆங்கிலம் இந்தி இருமொழிகளில் மட்டும் தேர்வுகள் நடத்துவதை மாற்றி, எல்லா இந்திய மொழிகளிலும் தேர்வு எழுதும் ஏற்பாட்டை உறுதி செய்துள்ளார். முதலில் இது இப்படியே நீடிக்க வேண்டும்.

அடுத்து, இரயில்வே துறையைப்போன்றே அஞ்சல், தந்தி, தொலைபேசி, தொலைத் தொடர்பு, வங்கித் துறை, ஆயுள் காப்பீட்டுத் துறை, வருமானவரித்துறை எல்லாவற்றிலும் ஆள்களைத் தேர்வு செய்ய நடத்தப்படும் எல்லாநிலைத் தேர்வுகளும், நேர்காணல்களும் அரசமைப்பில் ஏற்கப்பட்ட 22 மொழிகளில் - அந்தந்தப் பகுதியில் அவரவர் தாய்மொழியிலேயே நடத்தப்பட வகை செய்திட வேண்டும் என வற்புறுத்திட எல்லாக் கட்சிகளும் முன் வரவேண்டும்.

இந்திமொழி, ஆங்கிலமொழி இரண்டு மட்டுமே ஆட்சி மொழிகள் என்பதை ஒழித்திட இதை ஒரு தொடக்கக் கண்ணியாகக் - கரணையாகக் கொள்வோம்.

இரயில்வே, அஞ்சல், வங்கி உள்ளிட்ட எல்லா மத்திய அரசுத் துறைகளிள்கீழ் எல்லா மாநிலங்களிலும் உள்ள அலுவலகங்களிலும் அன்றாட அலுவல்களை நடத்தும் நிருவாக மொழியாகத் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராட்டி, குசராத்தி, பஞ்சாபி, பங்களா, அசாமி, என அந்தந்த மாநில மொழியே அலுவல் மொழியாக வந்துசேர இணக்கமான நடவடிக்கையை மேற்கொள்வோம்.

இத்துடன் இந்தியநாடாளுமன்றத்தில் அவரவர் தாய்மொழியில் பேசிடவும், வினாக்கள் எழுப்பவும் உரிமை வேண்டும். உச்சநீதி மன்றத்தில் அவரவர் தாய்மொழியில் முறையீடு செய்ய உரிமை வேண்டும். மய்ய அரசுக்கு மாநில அரசு விடுக்கும் மடல்கள் அவரவர் மாநில மொழியில் விடுக்கப்படஉரிமை வேண்டும். கணினியிலும் இணையத் தளத்திலும் இப்போது மொழிபெயர்ப்புப் பணிகள் திறமையாக நடைபெறுகின்றன. மய்ய அரசு சீர்மை கருதி ஒரே நேரத்தில் எந்த இந்திய மொழியில் உள்ள செய்தியையும் இந்தியிலோ ஆங்கிலத்திலோ மொழிபெயர்த்துக்கொள்ள முடியும்.

இவ்வளவும் வெற்றியாக நடைபெற்றிட உறுதியாக, இந்திய ஆட்சிமொழிபற்றிய எல்லா அரசமைப்பு விதிகளையும் திருத்தியாக வேண்டும்.

இக்கோரிக்கைகளை விளக்கி இந்திய மொழிகள் பலவற்றிலும் அறிக்கைகளை அச்சிட்டுக் கொண்டு எல்லா மாநிலங்களுக்கும் ஒரு குழுவினர் சென்று, ஆங்காங்குத் தங்கிப் பேசி எல்லாத் தரப்பினரிடமும் விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடசிகளின் தலைவர்கள், பொறுப்புள்ள செய்தி ஊடகத்தினர், மொழிவழித் தேசிய இன விடுதலையில் ஈடுபாடுஉள்ளவர்கள்ஆகிய எல்லாத் தரப்புக்கும் இது பற்றிப் புரிய வைக்கவேண்டும்.

இவை இடைவிடாமல் பல ஆண்டுகள் செய்யப்பட வேண்டிய சுமையான பணிகள் ஆகும்.

இதற்கு உடனடித் தேவையாகத் தமிழ்நாட்டில் தலைமைச் செயலகம் தொடங்கி 32 மாவட்டங்களிலும் எல்லாத் துறைகளிலும் தமிழில் மட்டுமே ஆவணங்கள்,கோப்புகள், ஆணைகள், மடல்கள் எழுதப்பட எல்லாம் செய்வோம். இதற்கு எதிராக உள்ள உயர் அதிகார வர்க்கத்தினர், உயர்கல்விபெற்ற ஆதிக்கச் சாதியினர், செய்தி ஊடகத்தினர், தமிழின எதிரிகள், இவர்களின் மக்கள் நலனுக்கு எதிரான சிந்தனைகள், செயல்கள், சூழ்ச்சிகள்இவற்றை மக்களிடையே அம்பலப்படுத்தி, தமிழ் மக்களை விழிப்படையச் செய்வோம்.

‘மாநிலத்தில் சுய ஆட்சி; மத்தியில் கூட்டாட்சி, என்னும் அரசியல் முழக்கத்தை அதன் வெற்றி முகட்டுக்கு எடுத்துச் செல்ல, திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழக அரசும் தாமே முன்வரும்படிச் செய்வோம். தமிழ்நாட்டில் போலவே எல்லா மொழி மாநிலங்களிலும் இதைச் செய்திட நாமும் மற்றும் மொழிவழித் தன்னாட்சி கோரும் எல்லா அமைப்பினரும் இணைந்து இப்பணியை இன்றே, இப்போதே மேற்கொள்வோம், வாருங்கள்! ஒன்று சேருங்கள்! இந்தியாவைத் தன்னுரிமைபெற்ற மொழிவழி மாநிங்களின் உண்மையான கூட்டாட்சியாக அமைத்திட எல்லாம் செய்யுங்கள்!

- வே.ஆனைமுத்து

Pin It