தஞ்சை மாவட்ட விவசாயியின் ஒட்டுமொத்த வாழ்க்கையை மிக எளிமையாகவும், யதார்த்த மாகவும் எடுத்துச் சொல்வதன் மூலம் கதையின் ஒவ்வொரு வரிகளிலும் தாமே அனுபவித்து வாழ்ந்தும், வாசிக்கும் ஒவ்வொரு மனிதரையும் தஞ்சை மண்ணில் வாழ வைத்தும் காட்டியிருக் கிறார், சி.எம். முத்து அவர்கள்.

‘அப்பா என்ற மனிதர்’ இந்தக் கதை முழுவதும் தனியே பயணிக்காமல் “சரவணன்” என்ற தனது மகனின் கதாபாத்திரத்தின் வழியாகப் பயணிக்க வைக்கப்பட்டிருப்பதும் வித்தியாசமான, புதிய முயற்சி ஆகும். அப்பா நாத்தங்காலுக்கு நாத்து பறிக்கச் சென்றாலும், நடவு நட கடன் கேட்டுச் சென்றாலும், ஈஸிச்சேரில் சாய்ந்திருந்தாலும், ஈரங்கிக்குச் செல்ல பஸ் வழியே பயணம் செய்தாலும் எங்கேயும் தனித்து விடப்படாமல் “சரவணன்” வழியே தெளிவாகப் பிரதிபலிக்கப்படுகிறார்.

agriculture 600

அப்பா என்ற ஒருவரை மட்டுமல்லாது தன் வீடு, வீட்டில் புழங்கும் பெண்கள், குழந்தைகள், ஆண்கள், அண்டை அயலார், உறவினர்கள், தன் தெரு, கிராமம் மற்றும் சமூகம் என அத்தனை களங்களிலும், கதாபாத்திரங்களின் மனங்களிலும் நிகழும் நிகழ்வுகளை “சரவணன்” வழியாக நம் கண்முன்னே கண்ணுங்கருத்துமாய்க் காட்சிப்படுத்து கிறார் கதாசிரியர்.

கதைமாந்தர் வழி விரியும் மனிதப்பண்பு

கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனுக்கு அசலும் வட்டியும் ஆளுயரம் வளர்ந்து நின்று அப்பாவை மிரட்டியபோதும், வருஷா வருஷம் வங்கி அதிகாரிகள் கார் எடுத்துக் கொண்டு வந்து ஜப்தி செய்யப் போகிறோம். என்று கடிந்து கொண்ட போதும். ராவுத்தரிடம் கடன், செட்டியாரிடம் கடன், முதலியாரிடம் கடன், சொசைட்டியில் கடன் என இனி கடன் வாங்க ஊரில் எவனும் இல்லை என்று ஆன போதும், நாத்தங்காலில் நாத்து பறி முடிந்ததும் அரிசி வாங்கவும், தவசி வாங்கவும் ஆயிரம் காரணங்களைச் சொல்லும் அன்னாடம் காய்ச்சிகளை (நடவாட்களுக்கு) அடுத்த நாள் வரச் சொல்லாமல் அன்றே சம்பளம் கொடுத்து விட வேண்டும் என்ற மனிதநேயம் நிறைந்த அப்பாவின் நெஞ்சில் உள்ள ஈரம் நம்மையும் நெகிழ வைக்கிறது. உழைத்தவன் கையில் ஈரம் காயும் முன் ஊதியும் கொடுக்கப்பட வேண்டும் என்ற நியதி நம் நெஞ்சில் நிறுத்தப்படுகிறது.

அம்மா - புருஷனை இழந்தவள் மாதிரி காதுக்கும் கழுத்துக்கும் போட்டுக் கொள்ள ஒரு கவரிங் நகைக்குக் கூட வக்கு வகை இல்லாத நிலையிலும், நாலுபேர் மதிக்கும்படி நாழி ஓடு வேண்டாம், ஒழுகுகிற வீட்டுக்கு ஒழுங்காய் கீற்று வாங்கிக்கூட போட முடியாத நிலையிலும், கரம்பத்தூர் வேம்புப் பிள்ளையிடம் கடன் வாங்கி கையில் வைத்திருக்கும் பணத்திலிருந்து, கடன் கேட்டு வரும் உடன் பங்காளிக்கு இல்லை என்ற சொல்லைச் சொல்ல மனமில்லாமல், இருப்பதை வாரி வழங்கி விட்டு, ஒரு ஜோடி உழவு மாட்டை விற்று வயலுக்கு உரம் வாங்கிப் போட்டுக் கொள்ளலாம் என நினைக்கும் மனப்பக்குவம் அப்பாவிடம் மட்டுமே தென்படுகிறது.

கறவை மாட்டை விற்று விட்டு காசு கொடுத்து பால் வாங்கி கட்டுப்படி ஆகுமா? என்ற புலம்பல், கோடையில வேற மாடு வாங்கி கொட்டுல்ல கட்டி வைக்க, கொட்டியா வைத்திருக்கிறார் பணங்காசை? என்ற குமுறல், கடனா வாங்கிட்டு வந்த பணத்தை இன்னொருத்தருக்குக் கடன் கொடுப்பாருண்டா? என்ற விரக்தி, அறுவடை நடக்கும் அந்த மாசத் திலேயே கொடுத்தது போக ஆள் மட்டுமே மிச்சமாக இருக்கும் அவலத்தை அத்தனையையும், வெளியில் சொல்ல முடியாத வேதனை என... விடிவுக் காலத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் கமலாம்பாள் கதாபாத்திரம் நம் நெஞ்சத்தைக் கனக்க வைக்கிறது.

கால் பங்கு வருமானமே ஆனாலும், அதைக் காப்பாற்றி வைத்துக்கொண்டு கணக்காய் வாழும் வித்தையையும், அனாவசியங்களை ஒதுக்கி வைத்து அவசியமானதை மட்டும் எடுத்து வைத்து கஞ்சத் தனம் இல்லாமல், கட்டு சட்டான வாழ்க்கை வாழும் தத்துவத்தையும், நாகப்பாம்பு கடிச்சி புட்டா பொளச்சிக்கலாம்ய்யா... நாணயப்பாம்பு கடிச்சிபுட்டா பொளக்க முடியுமா?... என்று கறாராகப் பேசிக் கொடுத்த கடனைத் திரும்ப வாங்கும் பக்குவத்தையும், கரம்பத்தூர் வேம்புப்பிள்ளை கதாபாத்திரத்தின் மூலம் கனகச்சிதமாய் எடுத் துரைக்கிறார். மேலும், திக்கு திசை தெரியாது அல்லல் தொல்லைகள் நேரும் போதெல்லாம் முன்னுக்கு நிற்பவராக, கஷ்டத்திற்கெல்லாம் விடிவு பிறக்கும் கடைசி நம்பிக்கையாக, பந்த பாசம் விட்டுப் போகாமல் பார்த்துக் கொள்பவராக கரம்பத்தூராரின் கதாபாத்திரம் நட்புக்கு நல் உதாரணமாய் மெருகூட்டப்பட்டிருக்கிறது.

வாழ்ந்த காலத்தில் வரக்கூடாத பழக்கங்கள் வந்ததாலும், சேர்வார் தோசம் சரியில்லாமல் போனதாலும், கால் மேல கால் போட்டு, காத் தாடிய தட்டி விட்டு, கடுந்தூக்கம் தூங்க வேண்டிய சோமுப் பிள்ளை (கதாபாத்திரம்) காணி பூமி அத்தனையையும் கண்காணாம தொலைச்சிபுட்டு, காப்பித் தண்ணீக்கும். கட்டு பீடிக்கும் நாயாக அலைவதையும், ஒரு மனிதனின் வாழ்வில் சூதும், தீதும், மதுவும், புகையும் மற்றவர்களிடம் கையேந்தும் வாழ்க்கையை வாழ வழிவகுக்கும் என்பதையும், கட்டுசட்டா வாழ முடியாதவனின் கதியை நம் கண் முன்னே நிறுத்துவதாகவும் உள்ளது.

நஞ்சை வாசமும், வழக்கும்

கொம்பேறி மூக்கன் கணக்காய் குதியாலம் போட்டுக் கொண்டு ஓடும் மாடுகளையும், கிடை போடும் கீதாரிக் குடும்பங்கள் வலசை போடு வதையும் வெங்காரி பாய்ந்த வயல்களுக்கு அண்டை போடுவதையும் கட்டிய வயல்களில் மோட்டை சரிபார்ப்பதையும், தகிக்கிற காங்களில் தானாய் வளர்ந்து கிடக்கும் கருவைக் கூட்டங்களையும், பற்றிக் கூறும் போது சொக்கங்காணி, சுந்திரிகாணி, சம்பா வட்டம் ஆகிய வயல்களின் வனப்பை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்.

தண்ணீர் பாயும் வயல்களில் கெண்டை மீன்களின் சிலுப்பையும், குரவை மீன்களின் குதியலாத்தையும், தவளைகளின் “கக்கரக்கா” சத்தத்தையும், தலக்கோழியின் “கொக்கரக்கோ” சத்தத்தையும், நினைவூட்டுவதன் மூலம் நம் அன்றாட வாழ்வில், அவசர கதியில் ரசிக்க மறந்து தொலைத்து விட்ட இயற்கை நிகழ்வுகளையும், தூரத்து வயல் பக்கமிருந்து வரும் குலவை சத்தத் தையும், மூங்கிக் குத்துப் பக்கமிருந்து வரும் குயிலின் கூவலையும், வேப்ப மர உச்சியில் இருந்து காகத்தின் கரையலையும், இரவானாலும், பகலானாலும் நம் கூடவே தொடர்ந்து வரும் ஜீவராசிகளின் நூதன ஒலிகளையும், நம் செவிகளுக்கு விருந்தாக்கி மகிழ்கிறார்.

தஞ்சை மொழியும் அடையாளமும்

“வெயில்லயும் வேணல்லயும்” நின்று படாத பாடுபடுவதையும், “ஏமத்துல சாமத்துல” வர்றவங் களுக்கு நல்லது பண்ணுவதையும், “கங்கறுத்தப்” பயலுக்கு புத்தி வராததையும், “கடக்கிழமை” வந்தா தான் கலப்பை வீடு திரும்புவதைக் கூறும் போதும், “அங்காளி பங்காளி” எல்லாம் எல்லாம் வேண்டிக்கிடப்பதையும், “அவதிபவுதியாக” ஊர் வந்து சேர்வதையும், “சாணி சவுதியை” அள்ளி சுத்தம் பண்ணுவதையும், “சவுறு கயிண்டு” போயிரும்னு சத்தம் போடுவதைக் கூறும் போதும்... வார்த்தை ஜாலங்களில் வாய்ப்பெடுத்து தஞ்சை மொழியின் தனித்த அடையாளத்தைத் தவறவிடாது தக்க வைக்கிறார்.

“கைப்பழத்தை இழந்துபுட்டு தொறட்டி பழத்திற்கு தொன்னாந்து கிடப்பாருண்டா”? என்று ஏங்கும் போதும், “வெரலுக்கு தவுந்த வீக்கம் தான வீங்கனும்” என்று நெட்டுருவம் பேசும் போதும். “எருதுப் புண்ண காக்காவா அறியப் போவுது” என்று அங்கலாய்க்கும் போதும்... பழமொழிகள் மதிப்பை, பயன்பாட்டை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.

உணவும், விளையாட்டும்

அடுப்பு பொடையில இருக்கும் காப்பித் தண்ணியும், அம்மா கும்பா நிறையப் போடும் பழையதும் வறுத்த மிளகாயும், மதியம் மணக்கும் புளிக் குழம்பு சோற்றுக்கு முட்டைப் பொரியலும் சுட்ட அப்பளமும், பாபாநாசம் ஓட்டலின் பரோட்டாவும், டீயும் படிக்கும் ஒவ்வொருவரின் பசியைத் தூண்டிச் சுவைக்கவும் தூண்டுகிறது.

மின்சாரமில்லா ராப்பொழுதில், நிறைந்த நிலாக் காலத்தில் தெருவில் விளையாடிக் கொண் டிருக்கிற குழந்தைகளின் குதூகலக் குரல்கள் வழியாக கள்ளான் கள்ளான் தாப்பட்டியையும், பளிஞ் சடுகுடு. சில்லு க்கோட்டையும், கொலகொலக்காக... முந்திரிக்காயையும், ஒரு கொடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்ததையும், நம் இதயத் தடாகங்களிலும் பூக்க வைத்து, நம்மை பிரமிக்கச் செய்கிறார்.

மொத்தத்தில் பஞ்சாயத்து போர்டு தலைவரின் நெல் கிட்டங்கியில் கணக்கெழுதி மாதம் நாப்பது ரூபாய் சம்பளம் வாங்கும் சாமானியனின் (துரை சாமி சோழகர்) வாழ்க்கையை விட வருஷத்துக்கு நாற்பது கோட்டை விதை நெல் கட்டும் விவசாயி, வாங்கிய கடனுக்கு வட்டிக் கட்டக் கூட போறாத நிலையையும், அம்பாரம் அம்பாரமாய் பட்டரை போட்டாலும் பண்டம் பாத்திரங்களை அடகு வைக்கும் அன்றாட அவல நிலையையும் அவருக்கே உரிய பாணியில் அழகாய்ப் பதியன் போட்டிருக் கிறார்.

இந்த அப்பா, காவிரி டெல்டா மாவட்டத்தில் வாழும், ஆயிரமாயிரம் விவசாயிகளின் யதார்த்த மான அவல வாழ்க்கையினையும்.கண்ணில்பட்டவர்கள் அனைவரிடமும் கடன்பட்டு, கையில் வைத் திருப்பது அனைத்தையும் மண்ணில் போட்டு, இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்று பெருங் கடனாளியாக நிற்கும், அத்துணை ஏழை விவசாயி களையும், நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி நம்மையும் கலங்க வைக்கிறார்.

சி.எம். முத்துவின் படைப்புலகம் வெள்ளந்தி யானது. மேலத் தஞ்சைப் பகுதியின் மக்கள் வாழ்க்கைப் பதிவுகளாகவே அவை அமைகின்றன. உலகமயச் சூழலில் வாழ்ந்து கெட்ட விவசாயியின் கதைதான் அப்பா என்றொரு மனிதர். இது சென்ற தலை முறையின் எச்சம். தமிழ் மரபில் தாய்மை முதன்மை பெறும். தந்தையைப் பற்றி அவ்வளவாகக் கவனம் இருப்பதில்லை. தற்போது திரைப்படங்களில் அப்பா அழுத்தம் பெறுகின்றது. சி.எம். முத்துவும் தன்பங்குக்கு அப்பாவைப் பந்தி வைத்துள்ளார்.

இன்றைய விவசாய வாழ்வின் குறுக்கு வெட்டுச் சித்திரம் இந்நாவல். அலங்கோலமாகிக் கிடக்கும் தஞ்சை விவசாய வாழ்வின் எளிய சான்றாக இந்நாவல் அமைகின்றது. உறவுகள் பொருளாதாரத்தால் துலக்கம் பெறும் இக்காலத்தில் அன்பினால் பிணைந்த உறவின் மேன்மையை, அதன் இழப்பை அதனால் உண்டாகும் தவிப்பை நாவலுக்குள் காணலாம். மனித முகம், அடை யாளம் ஆகியன குறித்த பண்பாட்டுப் பதிவு இந் நாவல் என்றால் மிகை இல்லை.

Pin It