சங்க காலத்தில் வரி வசூலிக்கும் முறை சிறப்பாக இருந்துள்ளது. ஒரு பேரரசுக்கு வேண்டிய வருவாய்களுள் முக்கியமானதாக வரி வசூலித்தல் முறை இருந்துள்ளது. பொதுவாக ஒரு அரசுக்கு மூன்று நிலைகளில் வருவாய் ஈட்டப்பட்டுள்ளன. ஒன்று, குடிமக்களிடத்திலிருந்து பெறப்படும் வரி, மற்றொன்று வாணிபப் பொருள் களுக்குரிய சுங்கம், இன்னொன்று சிற்றரசர்களிடமிருந்து கிடைக்கும் திறை. வள்ளுவர் அரசனுக்குரிய பொருட் களைக் கூறுமிடத்து மேற்சுட்டிய மூன்றில் பின்னைய இரண்டையும் கூறுகிறார். அதாவது,

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள் (756)

இதற்கு ‘உருபொருள் - உடையாரின்மையான் தானே வந்துற்ற பொருள் உல்கு பொருள் - சுங்கமாகிய பொருள்; தெறுபொருள் - தன் பகைவரைத் திறையாகக் கொள்ளும் பொருள்’ என உரை எழுதுகிறார் பரிமேலழகர். மேலும் இவற்றுள்ள ‘உல்கு பொருள்’ என்பதற்குச் ‘சுங்கப் பொருள்’ என்றும் அது ‘கலத்தினும் காலினும் வரும் பண்டங்கட்கு இறையாயது’ என்கிறார் அவர்.

பண்டைக் காலத்தில் அரசுக்குரிய வருவாய் வரி, சுங்கம், திறை, உடையார் இன்மையால் வரும் பொருள்கள் ஆகியனவற்றால் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் ‘சுங்கப் பொருள்’ குறித்துச் சில குறிப்புகள் பழந்தமிழ் இலக்கியங்களில் ஆங்காங்கு காணப் படுகின்றன. அந்தச் சுங்கப் பொருளே ‘உல்கு பொருள்’ என்று சுட்டப்பட்டுள்ளது.

குடிகளிடமிருந்து வரி பெரும் முறைகளைப் பற்றிய பிசிராந்தையார் பாடல் ஒன்று புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பாடலில் சங்க காலத்தில் வரி வசூல் நடைபெற்ற முறையைத் தெளிவாகக் குறிக்கிறது. ஒரு பெரிய நிலப்பகுதியை ஆட்சி செய்யும் அரசன் எப்படி இருக்க வேண்டும் என்பனவற்றை விளக்கும் வகையில் அமைந்துள்ள அப்பாடல் அரசன் வரி வசூல் செய்யும் முறையையும் தெளிவுபடுத்துகிறது. அப்பாடலின் சாரம் இவைதான்:

“அரசன் அறிவுள்ளவனாக இருக்க வேண்டும்; அவன் புதிய புதிய வழிகளால் குடிமக்களுக்கு வாழ்க்கைச் செழிப்பை உண்டாக்க வேண்டும். அதனால் குடிமக்கள் நிறைந்த வாழ்க்கை யுடையராய் வருவாய் பெருகித் தாமே அரசனைத் தேடி வந்து தமது வரிப் பணத்தை எளிதாக விரும்பிக் கொடுக்கும்படி அமைய வேண்டும். அந்நிலையிலும் அவர்கள் மொத்தமாக அன்றி, அதனைப் பகுதி பகுதியாகக் கொடுக்கவும் இடமிருக்க வேண்டும்” (புறம். 184).

குடிமக்களிடமிருந்து பெறப்படும் ‘வரி’ பண்டைக் காலத்தில் எப்படி பெறப்பட்டது என்பதை இந்தச் சங்கப் பாடலால் அறியவருகிறது. அதுபோல வாணிபச் சுங்கமும் பண்டைக் காலத்தில் செழிப்புற்றிருந்த நிலையைச் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது. கடல் வழி, தரைவழி வாணிபத்தால் பெறப்படும் சுங்கப் பொருள் ‘உல்கு’ என்று பழங்காலத்தில் சுட்டியுள்ளனர். ஆனால் கடல்வழி ஏற்றுமதி இறக்குமதிப் பொருள் களால் இச்சுங்கம் மிகுதியாகக் கிடைத்துள்ளது.

கரிகாற் பெருவளச் சோழனுக்கு அவனது கடற்கரை இடமாகிய காவிரிப் பூம்பட்டினத்தில் இந்தச் சுங்கம் மிகுதியாகக் கிடைத்துள்ள குறிப்பைப் பட்டினப் பாலை வழி அறியமுடிகிறது. சுங்கம் வாங்கும் இடம் ‘சுங்கச் சாலை’ என்று சுட்டும் வழக்கமிருந்ததையும் அந்நூல் வழி அறியவருகிறது.

கதிரவனுடைய குதிரைகளுக்கு நாள் முழுவதும் ஓய்வில்லாததுபோலக் கரிகால்வளவனது சுங்கச் சாலையில் வேலை சேய்வோருக்கு நாள் முழுதும் ஓய்வே இருக்காதாம். ஏற்றுமதி இறக்குமதிப் பண்டங்கள் அவ்வளவு மிகுதியாக இருக்குமாம். ‘குதிரைகள் தமது ஓய்வில்லாத ஓட்டத்தால் எந்நேரமும் கதிரவனது தேரைச் செலுத்திக் கொண்டிருப்பது போல, சுங்கக் காவலரும் தமது ஓய்வில்லாத சுங்கத் தொகுப்பால் எந்நாளும் கரிகாலனது ஆட்சித் தேரை நடத்திக் கொண்டிருக்கின்றனர்’ என்று கூறும் பாடலடிகள் பட்டினப்பாலையில் காணப்படுகின்றன.

“நல்லிறைவன் பொருள் காக்கும்
தொல்லிசைத் தொழின் மாக்கள்
காய்சினத்த கதிர்ச் செல்வன்
தேர்பூண்ட மாசு போல
வைகல் தொறும் அசைவின்றி
உல்கு செயக் குறைபடாது” (பட்டினப், 120 - 125)

ஒரு பேரரசுக்கு வேண்டிய அளவு முதன்மையான வருவாயாகச் சுங்கப் பொருள் கிடைந்துவந்த வரலாற்றுக் குறிப்பை இப்பாடலடிகள் வழிப் பெறமுடிகின்றது.

பண்டைக் காலத்தில் உள்நாட்டு வாணிகங்களிலும் சுங்கம் கிடைத்திருக்கின்றது. உள்நாட்டு வணிகர்கள் பலர் ஒன்றாகச் சேர்ந்து கூட்டமாகச் செல்லும் வழக்கம் பழங்காலத்தில் இருந்துள்ளது. அப்படிக் கூட்டமாகச் சேர்ந்து செல்வோரை ‘வாணிகச் சாத்து’ என்று குறித் துள்ளனர் (பெரும். 80). இந்தச் சாத்துக்கள் செல்லும் வழிகளிலும் சுங்கச் சாலைகள் அமைத்துச் சுங்கம் பெறப்பட்டுள்ளது. வாணிபச் சாத்துக்கள் கூட்டம் கூட்டமாக வரும்பொழுது அவரவர் கொண்டுவரும் வணிகப் பொருள்களுக்கு ஏற்றபடிச் சுங்கம் திரட்டப் பட்டுள்ளது. இது குறித்து,

“...............சாத்தொடு வழங்கும்
உல்குடைப் பெருவழி (பெரும். 80-81)
என வரும் பெரும்பாணாற்றுப்படையில் வரும் குறிப் பால் அறிய முடிகிறது.

வணிகப் பொருள்கள் மீது விதிக்கப்படும் சுங்க வரி உல்கு என்று சுட்டும் வழக்கம் சங்க காலத்தில் இருந்துள்ளது. மேலும் இந்த ‘உல்கு’ என்ற சொல் வழக்கு, பண்டைக்காலச் ‘சுங்க வரி’ வசூலிக்கும் முறையை அறிந்துகொள்ளவும் துணை செய்கின்றது.

உல்கு என்ற சொல் பத்துப்பாட்டு தொகுப்பில் உள்ள பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படை நூல்களிலும் திருக்குறளிலும் பயின்றுவந்துள்ளது.

இந்த மூன்று இடங்களிலும் ஆயம், சுங்கம் என்ற பொருளிலேயே பயின்றுவந்துள்ளன. பட்டினப் பாலையில் கடல் வழிப் பொருட்களுக்கும், பெரும் பாணாற்றுப்படையில் தரை வழிப் பொருட்களுக்கும் இச்சுங்கம் வசூலிக்கப்பட்ட குறிப்பைக் காணமுடிகிறது. பரிமேலழகர் இவ்விரண்டு முறைகளையும் ஒன்றாக இணைத்துத் திருக்குறள் உரையில் பதிவுசெய்துள்ளமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

கடல் வழியாகவும், தரைவழியாகவும் கொண்டு வரப்படும் பொருட்களுக்குச் சுங்கச் சாலைகள் அமைத்துச் சுங்கம் வசூல் செய்யும் வழக்கம் பண்டைக் காலத்தில் இருந்துள்ளன என்ற வரலாற்றுக் குறிப்பு இச்சொல் வழிப் பெறப்படுகின்றது. பண்டைத் தமிழர்கள் பல நாடுகளோடு கொண்டிருந்த வாணிபத் தொடர்பு குறித்த செய்திகளையும், ஒரு முறைப்படுத்தப் பட்ட அரசு அமைப்பையும், அந்த அரசு எவ்வாறு வருவாய் ஈட்டியுள்ளது என்பது பற்றிய குறிப்பையும் இச்சொல் வழக்கு வழி அறிந்துகொள்ள முடிகிறது.

துணைநின்ற நூல்கள்

1.சாமிநாதையர், உ.வே. (ப.ஆ.). 1889. பத்துப் பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், சென்னை: திராவிட ரத்னாகர அச்சுக்கூடம்.
2.பரிமணம், அ.மா. பரிமணம் & கு.வே. பால சுப்பிரமணியன் (த.ப.ஆ.). 2011 (நான்காம் பதிப்பு). புறநானூறு மூலமும் உரையும் (தொகுதி-1), சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
3.புலியூர் கேசிகன் (உரையும், பதிப்பும்). 2011 (பதினோறாம் பதிப்பு). திருக்குறள் பரிமேலழகர் உரை, சென்னை: பூம்புகார் பதிப்பகம்.

Pin It