கேரளத்திலுள்ள கொடுங்கல்லூரைத் தலை நகரமாகக் கொண்டு, சேர மன்னரான சேரமான் பெருமாள் நாட்டை ஆட்சி செய்துகொண்டிருந்தார். அரபிக் கடலை ஒட்டியுள்ள இந்த இடம் (இன்றைய கொடுங்கல்லூர்) கடல் வழியாக நடைபெறும் வாணிபத்திற்கு வசதியாக இருந்ததால் பினிசியர், கிரேக்கர்கள், ரோம் நாட்டவர், அரேபியர்கள், பெர்சியாவைச் சேர்ந்தவர்கள், சீனர்கள் போன்ற வெளிநாட்டவர் இதன் வழியாக இந்தியாவுடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார்கள். அப் போது இந்த இடத்தின் பெயர் ‘முசிறி’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக பிரபல புராதன வரலாற்றாசிரியரான பிளீனி குறிப்பிடுகிறார். இவர், இதை அக்காலத்திலுள்ள மிக முக்கியமான துறைமுகம் (Primum Emorium Indiae) என, அடையாளப் படுத்துகிறார். கிட்டத்தட்ட கி.மு.400 ஆம் ஆண்டு வரை இந்தத் துறைமுகத்தின் வழியே தான் கடல் வாணிபம் நடைபெற்று வந்ததாகக் குறிப்பிடப் படுகிறது.

திடீரென்று ஏற்பட்ட பிரளயத்தினால் கொடுங்கல்லூர் துறைமுகம் மண்ணடைந்து போகவே, அதையொட்டியிருந்த சிறு துறை முகமான கொச்சியின் பக்கமாக அனைவரின் கவனமும் திரும்பிற்று.

குறிப்பாக, கொடுங்கல்லூரை மையமாகக் கொண்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த அரேபி யர்கள், காலப் போக்கில் கொடுங்கல்லூர் மக்க ளோடும், சேர மன்னர்களோடும் நல்ல உறவை ஏற்படுத்திக் கொண்டதோடு, அங்கேயே தற்காலிக மாகத் தங்கள் குடியிருப்புகளையும் அமைத்துக் கொண்டார்கள்.

கொடுங்கல்லூரைப்பற்றிச் சொல்லவேண்டு மானால் நாட்டின் பிற இடங்களைப் போன்று, இங்கேயும் சாதி அமைப்பு மிக இறுகிப் போய்க் கிடந்தது. நம்பூதிரி பிராமணர்கள், (முதல் அடுக்கு), நாயர்கள் (இரண்டாம் அடுக்கு), ஈழவர்கள், புலையர்கள், பறையர்கள், மன்னார்கள் (பஞ்சமர்கள்) என்ற வகையில் சாதி அமைப்பு இங்கே கட்ட மைக்கப்பட்டிருந்தது.

பஞ்சமர்களைப் பொறுத்தமட்டில் நம்பூதிரி குலத்தவர்களுக்கும், நாயர் குலத்தவர்களுக்கும் சொந்தமான காடு கரைகளிலும், வயல்களிலும் வேலை செய்துகொண்டு, அங்கேயே குடிசை கட்டி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார்கள். இவர்களுடைய முக்கியத் தொழில் ஆதிக்கச்  சாதியினரின் காடு கரைகளை வெட்டித் திருத்தி விவசாயம் செய்வது. அறுவடையின் போது அதற்கான கூலியாக ஆழாக்கோ அல்லது உழக்கோ தானியம் வழங்கப்படும்; இதை வைத்து, அவர்கள் தங்கள் குடும்பத்தையும், குழந்தை குட்டிகளையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இங்கு, பஞ்சமர்களைப் பொறுத்தமட்டில் பெண்ணாக இருந்தால் ஆதிக்கச் சாதியினருக்கு முன்னால் மேலாடை அணியக்கூடாது; ஆணாக இருந்தால் முழங்கால் வரையில் வேட்டி உடுத்தக் கூடாது; தலைப்பாகை அணியக் கூடாது. இது போக, இவர்கள் ஆதிக்கச் சாதியினரைப் போல விலை உயர்ந்த ஆபரணங்கள் அணியக் கூடாது. ஏன், ஆடுமாடுகள் நடமாடும் பொது வழியைக் கூட இவர்கள் பயன்படுத்தக்கூடாது! கல்வி கற்கும் உரிமை கிடையாது. சொத்து வைத்துக் கொள்ளக் கூடாது.

இவை ஒருபுறம் இருக்க, கொடுங்கல்லூர்ப் பகுதியில் இன்னொரு விசித்திரமான வழக்கமும் இருந்து வந்தது.

அதாவது, ஒரு நம்பூதிரியின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசத்தில் வாழும் தாழ்த்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கும் போது, அந்தப் புதுமணத் தம்பதிகளின் முதலிரவுக்கு முன்னால், அந்தப் பிரதேசத்தின் நிலச்சுவாந்தாரரான நம்பூதிரியிடம் அழைத்துச் செல்ல வேண்டும்; நம்பூதிரியோடு அப்பெண்ணின் முதலிரவு கழிந்த பிறகே, புது மாப்பிள்ளையுடன் அவள் குடும்ப வாழ்வில், ஈடுபட முடியும். இது, ‘கட்டுக்கல்யாணம்’ என்று இந்தப் பிரதேசத்தில் அழைக்கப்பட்டது. இது, கொடுங்கல்லூர்- கொச்சி பிரதேசங்களில் மட்டுமல்ல! அக்காலத்தில் கேரளமெங்கும் இவ்வழக்கம் வியாபித்திருந்தது.

இக்காலகட்டத்தில்தான் இசுலாமியர்கள் கொடுங்கல்லூர்ப் பகுதிக்குள் நுழைந்தார்கள். இந்த வேளையில் இங்குச் சேரமன்னரான சேரமான் பெருமாள் பாஸ்கரவர்மா நாட்டை ஆண்டு கொண்டிருந்தார். இவர் தீவிரமான சிவபக்தர் என்று சொல்லப்படுகிறது. இதற்கு ஆதாரமாக, ஒட்டி, கொடுங்கல்லூரிலுள்ள (திருவஞ்சிக் குளத்தில்) மிகப்பிரபலமான சேரமன்னர்களின் குலக்கோயிலான மகாதேவர் கோயில் சாட்சியாக உள்ளது. இந்தக் கோயிலிலிருந்து 150 அடி தூரத்தில் தான் சேரமான் ஜும்மா மசூதி கட்டப்பட்டுள்ளது.

இந்தச் சேரமான் ஜும்மா மசூதி கட்டப் பட்டதின் பின்னணியாக தொன்மக் கதை ஒன்று கேரள வரலாற்று ஏடுகளில் காணப்படுகிறது.

அது பின்வருமாறு:

சேரமான் பெருமாள் மன்னர் ஒரு நாள் கனவு கண்டாராம்! அக்கனவில் நிலவு இரண்டாகப் பிளந்து காணப்பட்டிருக்கிறது.

‘நான், ஏன் இவ்வாறு கனவு கண்டேன்? இதன் அர்த்தம் என்னவாக இருக்கும்?’ என்று, அவருக்கு ஒரே குழப்பாக இருந்ததாம். உடனே, அவர் அரண்மனையிலுள்ள ஜோதிடரையும், ஆலோசகர் களையும் அழைத்து, இவற்றுக்கான காரணம் என்னவாக இருக்கும்? என்று விளக்கம் கேட்டாராம்! அதற்கு அவர்கள் அளித்த பதில் மன்னருக்கு திருப்தி அளிக்கவில்லையாம்!

இந்த வேளையில் கொடுங்கல்லூர் துறைமுகம் வழியே அரேபியாவிலிருந்து இலங்கைக்குச் செல் வதற்காக வந்த ஒரு குழு, மன்னரைத் தரிசிப் பதற்காகச் சென்றது. மன்னர், தான் கண்ட கனவைச் சொல்லி விளக்கம் கேட்க ‘இப்படி, நிலவு கனவில் தோன்றி இரண்டாகப் பிளந்து காணப்பட்டால், அது மெக்காவில் நபிகள்

நாயகம் காட்டும் அதிசயங்களில் ஒன்று; இவ்வாறு மெக்காவிலும் நிகழ்ந்திருக்கிறது’ என, அக்குழு விளக்கம் அளிக்கவே, அந்த விளக்கம் மன்னருக்குத் திருப்தியாயிற்றாம்!’

மேற்கண்ட தொன்மக்கதை சேரமான் ஜும்மா மசூதி கட்டப்பட்ட காலத்திலிருந்தே கொடுங் கல்லூர் மக்களிடையே வழிவழியாக வழக்கத்தி லிருந்து வரும் கதை. இது கேரள வரலாற்று ஏடுகளிலும் குறிக்கப்பட்டுள்ளது, ‘The Legend of Cheraman Perumal’ என்ற பெயரில்.

இந்த நிகழ்ச்சிக்குப்பிறகு, சேரமான் பெருமாள் மன்னர் தன்னுடைய நாட்டையும், சொத்துக் களையும் பல பாகங்களாகப் பிரித்து, தன் உறவினர் களிடமும் தன் நாட்டிலுள்ள முக்கிய தலைவர் களிடமும் ஒப்படைத்துவிட்டு, தன் பரிவாரங் களோடு மெக்காவுக்குப் போய்வரத் தீர்மானித் தாராம்! இது, நடைபெற்றது கி.பி.345.

இவ்வாறு மெக்காவுக்குச் சென்ற சேரமான் மன்னர், இசுலாமியர்களின் புண்ணியத்தலமான மெக்காவை தரிசித்துவிட்டு, இசுலாம் மதத்தைத் தழுவியதோடு தன் பெயரை ‘தாஜுதின்’ என்று மாற்றிக் கொள்கிறார். பின்னர், தன் நாடுகளை யெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு, அரேபியா விலுள்ள ‘சூஃபார்’ என்ற இடத்தில் உடல்நிலை மோசமாகிவிடவே, மன்னர் தன் பயணக்குழுவின் தலைவரான மாலிக் பின் தினாரிடம் ஒரு கடிதத்தை எழுதிக் கொடுத்து, அதைக் கொடுங்கல்லூரிலுள்ள தன்னுடைய அரண் மனையில் கொண்டு ஒப்படைக்கச் சொல்லுகிறார்.

மன்னரின் ஆணையின் படி அவர், அதை அரண்மனையில் கொண்டு வந்து சேர்க்கவே, மன்னரின் குடும்பத்தினர், மன்னரின் ஆசைப் படியே கொடுங்கல்லூர்ப் பிரதேசமெங்கும் இசுலாமிய மதத்தைப் பரப்பவும், ஒரு மசூதியைக் கட்டிக் கொள்ளவும் அனுமதி வழங்குகின்றனர். மசூதி கட்டப்பட்டதும், அதைக் கவனிக்கும் பொறுப்பு ஹபீப் இப்னிமாலிக் என்பவருக்கு வழங்கப்படுகிறது.

அவருடைய மனைவியான கொமரியா பீவியும் அவருடன் சேர்ந்து மசூதியின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டார். இதன் பின்னர் கொடுங்கல்லூர் பிரதேசம் மட்டுமின்றி, மலபாரிலுள்ள பல இடங்களிலும் மசூதிகள் கட்டப்பட்டதோடு, இசுலாமிய மதத்தைப் பரப்பவும் அனுமதி வழங்கப்பட்டது.” (Mappila Muslims of Kerala: A Study in Islamic Trends. RolandE. Miller, Page- 46, Orient longman N. Delhi- 1976) நோய்வாய்ப்பட்ட சேரமான் மன்னர், சூபார் (ஷ்ரயீhயச) என்ற இடத்தில் இறந்து போகவே, அரேபியாவில் கடற்கரையோரமாக அடக்கம் செய்யப்பட்டார்.

மன்னரின் குடும்பத்தினரைப் பொறுத்தமட்டில், அவரது சகோதரியான ரூபியின் மகன் மகாபலியும் இசுலாமிய மதத்தைத் தழுவினான். அவர், அந்த வேளையில் வட கேரளத்திலுள்ள தர்மடாம் (Zuphar) என்ற இடத்தில் ‘முகமது அலி’ என்ற பெயரைச் சூட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தார்.

இப்படித்தான் கொடுங்கல்லூரில் சேரமான் ஜும்மா மசூதி கட்டி எழுப்பப்பட்டது. இதுதான், நம் நாட்டில் முதன்முதலாக கட்டி எழுப்பப்பட்ட மசூதியாகும்.

ஆரம்பகாலத்தில் கட்டப்பட்ட பழைய மசூதி அப்படியே இருந்த போதிலும், காலப் போக்கில் அது செப்பனிடப்பட்டு, தற்போது அதன் முகப்புப் பாகம் சற்று எடுத்துக்கட்டப்பட்டு நவீன முறையில் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

பரந்து விரிந்து கிடக்கும் வளாகத்தினுள்ளே மரங்களும், பூந்தோட்டமும், பெரியதொரு குளமும் உள்ளது. இசுலாமிய கலாச்சாரத்தை நினைவுபடுத்தும் வண்ணம் அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளே அமைக்கப்பட்டுள்ளது.

மசூதியின் உள்ளே பெண்களும், ஆண்களும் (வலப்புறமும் இடப்புறமுமாக) தொழுவதற்குரிய முறையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக் கிறது. இந்தியப் பண்பாட்டின் மங்கலகரமான நிகழ்ச்சிகளின் அடையாளச் சின்னமாகப் பெரிய குத்துவிளக்கு ஒன்று அதனுள்ளே வைக்கப்பட்டிருக் கிறது. 1000 ஆண்டுகளாக இந்த விளக்கு அதனுள்ளே பாதுகாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் இந்த மசூதிக்குள் சென்று தொழுவதற்கு அனுமதிக்கப் பட்டிருப்பது, இந்த மசூதியின் விசேஷ அம்சங் களில் ஒன்றாகும். இதுவும், நேற்று இன்று தொடங்கப்பட்ட வழக்கம் இல்லை என்று சொல்லப்படுகிறது. மசூதியின் உட்பாகத்தின் கீழ்த்தளம் மெக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டிருக் கிறது.

மேலே குறிப்பிட்ட குத்துவிளக்கு எரிவதற்கான எண்ணெயைப் பல மதப்பிரிவைச் சேர்ந்த மக்களும், பல்வேறு பிரிவைச் சேர்ந்த மக்களும், பல்வேறு சாதியினரும் வந்து ஊற்றிவிட்டுச் செல்லும் வழக்கம் இருந்து வந்தது.

விஜயதசமி நாளில் கொடுங்கல்லூரிலிருந்தும், சுத்துப்பட்டிக் கிராமங்களிலிருந்தும் இந்து மதத்தைச் சார்ந்த ஏராளமான மக்கள் வந்து, தங்கள் குழந்தைகளை முதன்முதலில் ‘அ,’ன்னா, ‘ஆ’வன்னா எழுத உட்கார வைப்பதற்காக வேண்டி வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்களில் பெரும்பான்மை யினர் இசுலாமிய மதத்தைத் தழுவியதோடு அவர்களுக்கு மசூதிக்குள் நுழைந்து வழிபட உரிமை அளிக்கப்பட்டது; அதோடு, கல்வி கற்கும் உரிமையும் வழங்கப்பட்டது.

சேரமன்னரான சேரமான் பெருமாள் பெயரில் அழைக்கப்பட்டு வரும் இந்த மசூதி நம் நாட்டிலுள்ள பிற மசூதிகளைப் போல் இசுலாமியர்கள் மட்டும் வந்து தொழுதுவிட்டுச் செல்லும் வெறும் ஒரு வழிபாட்டுத்தலமோ அல்லது மத நிறுவனமாக மட்டுமோ தனக்குள் சுருங்கிக்கிடக்கவில்லை. இந்த மசூதி ஆண்-பெண் பேதம் பார்ப்பதில்லை. சாதி-மத வேறுபாடு பார்ப்பதில்லை. இது, மக்கள் நலனிலும், கல்வியிலும் அதிக அக்கறை காட்டி வருகிறது.

 வீடற்ற ஏழை- எளிய மக்களுக்கு இந்த மசூதி வீடு கட்டிக் கொடுத்து வருகிறது. கூரை வேய வசதியில்லாதவர்களுக்குக் கூரைவேய்ந்து கொடுத்து வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும் நம் நாட்டில் கல்விகற்க உரிமை மறுக்கப்பட்டிருந்த காலத்திலேயே கேரளத்தில், கொடுங்கல்லூர்ப் பகுதியில் ‘வித்தூல் பீடம்’ என்றொரு கல்வி நிறுவனத்தை அமைத்து சாதி- மதம், ஆண்-பெண் என்ற வேறுபாடின்றிக் கல்வி கற்க வசதி செய்து கொடுத்தது. ஸ்ரீதனம் கொடுக்க வழியின்றி வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கும் முதிர் கன்னியருக்குத் திருமணத்திற்காக நிதியுதவி செய்து வருகிறது.

சேரமான் ஜும்மா மசூதியில் தற்போது கிட்டத்தட்ட 1500 குடும்பங்கள் அங்கங்களாக உள்ளன.

இது ஒருபுறம் இருக்க, சேரமான் ஜும்மா மசூதியை நிறுவிய சேரமான் பெருமாள் மன்னரைப் பற்றி நம் நாட்டில் பல கட்டுக்கதைகள் புனைந்து விடப்பட்டிருக்கிறது.

சேரமான் பெருமாள் மன்னர் சிவபக்தராக இருந்ததால், மெக்காவில் அன்றைய காலகட்டத்தில் சிவன் கோவில் ஒன்று இருந்ததாகவும், அதைச் தொழுது வருதற்காக வேண்டியே அவர், அங்கு சென்றார் என்றொரு கட்டுக் கதை. ஒரு சிவபக்தர், இசுலாமிய மதத்தைத் தழுவியதின் காழ்ப்புணர்ச்சியே இக்கட்டுக்கதைகளைப் புனைந்து விட்டிருப்பதின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.

இன்னொன்று, அவ்வாறு இருந்த சிவன் கோயிலை, சேரமான் மன்னர் இசுலாமிய மதத்தைத் தழுவியதற்குப் பின்னர் அடித்து நொறுக்கிய தாகவும் பேசப்படுகிறது. ஒரு வேளை மெக்கா விலுள்ள சிவன் கோயில் சேரமான் பெருமாள் மன்னரால் அவ்வாறு இடிக்கப்பட்டிருந்தால், கொடுங்கல்லூரிலுள்ள அவரது குலக்கோயிலான திருவஞ்சியூர்க்குளம் மகாதேவர் (சிவன்) கோயில் இன்று வரையில் மன்னர் குடும்பத்தினரால் எப்படி கேடுபாடின்றிப் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கும்? என்ற கேள்வி எழுகிறது.

ஆக, சம்பவம் அதுவல்ல! ஒரு இந்து மன்னர், இசுலாம் மதத்தைத் தழுவியதை (அது, எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற சம்பவமாக இருந்தாலும் சரி) இந்து மதக் கண்ணோட்டத்தின் படி வரலாற்றை அணுகுபவர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. பிரஜைகளாக இருந்தால், கட்டாயப்படுத்தி மதம் மாற்றியிருப்பார்கள் என்று சொல்லிவிடலாம்; இங்குச் சேரமான் பெருமாள் மன்னர் என்பதால், அது சாத்தியமில்லை.

இந்த இடத்தில் மதக்கண்ணோட்டத்தை நுழைக்க வேண்டிய அவசியமில்லை. காரணம், அந்தக் காலகட்டத்தில் இசுலாம் மதம் உலக அளவில் கைக்கொண்டிருந்த கொள்கையினை எடுத்துப் பரிசோதித்தாலே போதும்; சேரமான் பெருமாள் மன்னர் இசுலாம் மதத்தைத் தழுவிய தோடு, அது பரவுவதற்கு வழிதிறந்துவிட்டதற்கான காரணமும் புரிந்துவிடும்.

இதை, நாம் பகைமை உணர்வைத் தூக்கித்தூர எறிந்துவிட்டுப் பார்த்தால்தான் புரிந்துகொள்ள முடியும்.

உலக வரலாற்றில் இசுலாமியத்தின் பாத்திரத்தை எடுத்துக்காட்டும் விதமாக இலக்கிய பண்பாட்டு ஆய்வாளரான டாக்டர் ந.முத்துமோகன் அவர்கள் தன்னுடைய ‘மார்க்சியக் கட்டுரைகள்’ என்ற புத்தகத்தின் வழியே எடுத்துக்காட்டும் சேதி கீழ்வருமாறு:

‘ஐரோப்பாவிற்கு இருண்டகாலமாக அமைந்த அக்காலத்தில்தான் அரேபியா கண்டத்தில் இஸ்லாம் தோற்றம் பெற்றது. நூற்றுக்கணக்கான இனக் குழுக்களை ஒன்றிணைத்து, வணிகக் குடும்பங் களின் நலன்களை முன்னிறுத்தியும் ஒரு புதிய சமூகத்தை இஸ்லாம் முன்மொழிந்தது. இனக்குழு வாழ்வின் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் அப்புதிய சமூகத்தின் மதிப்புகளாக அது கொண்டது.

வணிகக் குடும்பங்களின் உலகியல் செயல்பாட்டுத் தன்மையையும் வாழ்வியல் வெற்றிகளையும் அது, தனது இலக்குகளாகக் கொண்டது. இசுலாமின் ஓரிறைக் கொள்கை சகல மக்கள் பகுதியினரையும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைப்பதற்கான உற்சாக மான தத்துவமாகக் காட்சியளித்தது. இஸ்லாம் ஒரு சமயமாகவும், சட்டமாகவும் சமூகக் கொள்கை யாகவும் ஒன்றிணைந்த வடிவில் தோன்றியது.

.....கிருத்தவ அரசுகளுக்கு அடிமையாகிக் கிடந்த பல இனங்களை இஸ்லாம் விடுதலை செய்தது. உலக வாழ்வை விருப்புடன் நோக்கும் புதிய பண்பாட்டை இஸ்லாம் பரப்பியது. புவியியல், வானியல், கணிதம், பௌதீகம், உயிரியல், மருத்துவம், கட்டடக்கலை, தருக்கவியல், தத்துவம் மானுடவியல், இசை, கவிதை, காப்பியங்கள் எனப் பல்வேறு துறைகளில் சாதனைகளைப் படைக்க அது, அறிஞர்களை அழைத்தது. பரபரப்பான அறிவுத் தேடல்களுக்கும், நெஞ்சை உருக்கும் ஆன்மீகத் தேடல்களுக்கும் அது தாராளமாகவே இடமளித்தது.

..... இடைக்கால கத்தோலிக்கக் கிருஸ்தவம் ஒரு சந்நியாசி (துறவியர்) சமயம் என்பதை இங்கு ஒப்புநோக்க வேண்டும். வாழ்வியல் தேவைகளுக்குக் குறிப்பிட்ட எந்தவொரு தொழிலையும் (விவசாயம், வணிகம், கைத் தொழில்கள், கால்நடை வளர்ப்பு) அது பாராட்டியதோ உற்சாகப்படுத்தியதோ கிடை யாது. இஸ்லாம் ஒரு துறவியர் மதம் அல்ல என் பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. நகரமயமாக்கமும் தொழில் வணிக வளர்ச்சியும் இஸ்லாமியக் கலாச் சாரத்தில் முக்கிய இடம் பெற்றன.

.....மத்தியகால இஸ்லாம் அறிவுக்கு முதன்மை யான இடத்தை வழங்கியது.’ ‘மார்க்சீயக் கட்டுரைகள்’ ந. முத்துமோகன், காவ்யா வெளியீடு, பக்கம் - 264, டிசம்பர் 2007.)

ஆக, தொடக்ககால இஸ்லாம் மனிதர்களை, மனிதர்களாக நேசிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறது. கலைக்கும், கல்விக்கும் மருத்துவத்திற்கும் வணிகத் தொழிலுக்கும் முக்கியத்துவம் அளித்திருக்கிறது. ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்திருக் கிறது. தன்னிடம் வரும் மக்களுக்கெல்லாம் சரி நிகர் சமானமாகத் தொழுவதற்கு அனுமதி வழங்கி யிருக்கிறது.

இதன் காரணமாகவே சேரநாட்டு மன்னரான சேரமான் பெருமாள் மன்னர் இஸ்லாம் மதத்தை தம் நாட்டிற்குள் பரப்ப அனுமதி வழங்கியதோடு தொழுவதற்காக வேண்டி மசூதி கட்டவும் அனுமதி கொடுத்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

இதன் பின்னணியில்தான் நாம் சேரமான் பெருமாள் மன்னர் இஸ்லாம் மதத்தைத் தழுவிய தையும், அவர் தன் நாட்டில் இஸ்லாம் மதத்தைப் பரப்புவதற்கு அனுமதி வழங்கியதையும் காண வேண்டும்.

வருடந்தோறும் வரும் இஸ்லாம்களின் பண்டிகை நாட்களை ஒட்டி, இந்துக்களையும், கிருத்தவர்களையும் மசூதிக்குள் அழைத்து வைத்து மத நல்லிணக்கத்தை நோக்கமாகக் கொண்டு கலந்துரை யாடலும் நடைபெற்று வருகிறது.

Pin It