amarvathi book 350தமிழக வரலாற்றாய்வுக்கு சிறப்பான பங்களிப்பைச் செய்து வரும் நம் கால வரலாற்றறிஞர்களுள் ஒருவர் பேராசிரியர் ப.சண்முகம். 1944 ஆம் ஆண்டில் கோயமுத்தூர் நகரில் பிறந்த இவர் தம் உயர்நிலைப் பள்ளிப் படிப்பையும் இளங்கலைப் பட்டப்படிப்பையும் கோவையில் பயின்றார். பண்டைய வரலாறு, தொல்லியலில் முதுகலைப் படிப்பை சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்றுவிட்டு சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பணியில் 1972இல் சேர்ந்தார்.

1977 இல் முனைவர் பட்டம் பெற்றுவிட்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு, தொல்லியல் துறையில் பேராசிரியராகவும், பின்னர் அத்துறையின் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

ஆங்கிலத்திலும் தமிழிலும் தமிழக வரலாறு குறித்த ஆய்வுக்கட்டுரைகளையும் நூல்களையும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். பல்கலைக்கழகங்களிலும், ஆய்வு நிறுவனங்களிலும் ஆய்வுச் சொற்பொழிவுகளை ஆற்றி வருகிறார்.

‘சங்ககாலக் காசு இயல்’, ‘தமிழக மண் உருவங்கள்’ என்ற இவரது நூல்கள், தம் வரலாற்று அறிவைத் தமிழிலும் வெளிப்படுத்த விழையும் இவரது ஆர்வத்தின் வெளிப்பாட்டிற்குச் சான்றுகளாகும். தமிழ்நாட்டு வரலாறு குறித்த நூல் வரிசையை, தமிழக அரசு வெளி யிட்டபோது, அதில் இவரது பங்களிப்பும் இடம்பெற்று உள்ளது.

இந்தோனிஷியா, மலேசியா, மியான்மர், வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து, கம்பூச்சியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று இந்திய, தமிழ்ப் பண்பாடும் சிற்பக்கலையும் அங்கு பரவியது குறித்து ஆய்வு செய்துள்ளார்.

ஜப்பான் நாட்டின் டோக்கியா பல்கலைக்கழகத்தில், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பண்பாட்டு உறவு, வாணிபக் குழுக்களின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுகளில், இணைந்து பணியாற்றியுள்ளார். இது தவிர பெரிய ஆய்வுத்

திட்டங்களையும் மேற்கொண்டு அவற்றை நிறைவு செய்துள்ளார்.

இவரது தொடர்ச்சியான, ஆழமான ஆய்வுப் பணியைப் பாராட்டும் முகத்தான் இவரது மாணவர் களும், வரலாற்றறிஞர்களும் இணைந்து ‘அமராவதி’ என்ற தலைப்பில் சிறப்பு மலர் ஒன்றை வெளிக் கொணர்ந்துள்ளார்கள்.

தமிழ்நாட்டின் அறிவுச்சூழலில் இத்தகைய மலர்கள் பெரும்பாலும் தனிமனிதத் துதிபாடும் தன்மை கொண்ட கட்டுரைகளைக் கொண்டதாய், சிற்றிலக்கிய காலப் பாட்டுடைத் தலைவனை நினைவூட்டும் வகையில் அமைகின்றன. நீலகண்ட சாஸ்திரியார், கே.கே.பிள்ளை, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், நா.வானமாமலை, ஏ.சுப்பராயலு ஆகியோரைப் பாராட்டும் வகையில் வெளியான மலர்கள் விதி விலக்கானவை. (இப்பட்டியலில் இடம்பெறத் தவறிய மலர்கள் ஒன்றிரண்டு இருக்கலாம்).

அமராவதி என்ற பெயரைத் தாங்கிய இந்நூல் ஆழமான கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்துள்ளது. அளவான முறையில் அவரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளுடன் தொடங்கும் இந்நூலின் முதற்பகுதியில் பேராசிரியர் ப.சண்முகத்தின் ஒன்பது ஆங்கிலக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் பகுதியில் வரலாற்றறிஞர்கள் எழுதியுள்ள 36 ஆங்கிலக் கட்டுரை களும் எட்டு தமிழ்க் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

இக்காரணத்தால் இத்தொகுப்பானது வரலாற்றுக் கருவூலமாக அமைந்துள்ளது.

ப.சண்முகத்தின் கட்டுரைகள்

ஆய்விதழ்களில் பேராசிரியர் எழுதிய கட்டுரைகள் அவரது கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் என மொத்தம் ஒன்பது கட்டுரைகள் இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகளை அவற்றின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1)            பண்டைய ஊர்கள் நகரங்கள் குறித்தவை (கட்டுரை எண்:1,2)

2)            இடைக்காலத் தமிழகத்தின் நாணயமுறை குறித்தவை (கட்டுரை எண்: 3)

3)            வாணிபம் கைத்தொழில் குறித்தவை (கட்டுரை எண்: 4,5,6)

4)            கடல்சார் வாணிபம் குறித்தவை (கட்டுரை எண்: 7,8,9)

இக்கட்டுரைகள் அனைத்தும் கல்வெட்டுச் சான்று களையே முக்கிய ஆதாரமாகக் கொண்டுள்ளன. மேற் கூறிய நான்கு வகையான கட்டுரைகளில் மூன்றாவது வகை சார்ந்த இரண்டு கட்டுரைகளின் மையச் செய்திகள் மட்டும் இங்கு அறிமுகமாகின்றன.

வாணிபமும் கைத்தொழிலும்

ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் நாகரிகம், பொருளியல் வளர்ச்சியின் அடையாளங்களுள் ஒன்று அச்சமூகத்தில் நிகழ்ந்த வாணிப நடவடிக்கைகளும் வாணிபம் செய்யப் பட்ட பொருள்களும் இவை ஆய்வுக்குரியன. தனித் தனியான வணிகர்களின் வாணிபமானது, வளர்ச்சி பெறும்போது, அது பல வணிகர்கள் இணைந்த வணிகக் குழு (கில்ட்) ஆக மாறி ஓர் அமைப்பாக நிலைபெறுகிறது. தமிழ்நாட்டில் வாணிபக் குழுக்களின் தோற்றம் சங்க காலத்திலேயே உருப்பெற்றுவிட்டது. வாணிகச் சாத்து என்ற பெயரால் வணிகக் குழுவை சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

சங்க காலத்திற்குப் பின்னால் தோன்றிய தமிழ்க் கல்வெட்டுகளில் ‘சித்திரமேழி நாட்டார்’, ‘அய்நூற்றுவர்’. வாணியநகரம் எனப் பல்வேறு பெயர்களில் வணிகக் குழுக்கள் குறிப்பிடப்படுகின்றன. இக்குழுக்கள், ‘மகமை’, ‘மகன்மை’ என்ற பெயரில் தம் ஆதாயத்தில் ஒரு குறிப் பிட்ட விகிதாச்சாரத்தை அறச்செயல்களுக்காகத் தாமே முன்வந்து வழங்கியுள்ளன. இதை லெவி, செஸ் என்று இன்றைய வழக்கில் கூறலாம்.

கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் இருந்து 15ஆவது நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளில் இம் மகமையானது ‘பட்டணப்பாகுடி’ என்று குறிப்பிடப் படுகிறது. இச்சொல்லில் பாகுடி என்பது ‘பங்கு’ என்ற பொருளைத் தருகிறது. இதன் அடிப்படையில் பட்டணப்பாகுடி என்பதை நகரத்தின் பங்கு என்று கூறலாம்.

கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில் பார்க்கும் போது, ‘பட்டினப்பாகுடி’ மகமை விதிப்பில் மன்னர்களுக்கோ, தல நிர்வாகத்திற்கோ எவ்விதத் தொடர்பும் இல்லை. மன்னர்களின் ஆணையினால் இவை விதிக்கப்படவில்லை. வழக்கமாகக் கல்வெட்டு களின் தொடக்கத்தில் இடம்பெறும் மெய்கீர்த்திகள் பட்டினப்பாகுடி தொடர்பான கல்வெட்டுக்களில் காணப்படவில்லை. ஆட்சி புரியும் மன்னனைக் குறித்த பதிவுகள் இடம்பெறவில்லை. அரசு அதிகாரிகளின் பெயர்களும் பதிவாகவில்லை.

இதன் அடிப்படையில் பார்க்கும் போது இம் மகமையானது வணிகக்குழுவின் உறுப்பினர்களாலேயே முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. இம்மகமையை வாங்குவதிலும் அரசு ஊழியர்களுக்குப் பங்கில்லை. வணிகக் குழுவின் நிர்வாகிகளோ அவர் களால் நியமிக்கப்பட்டவர்களோ இதை வணிகர்களிடம் இருந்து வாங்கினர்.

வணிகக் குழுக்களால் வாங்கப்பட்ட பட்டணப் பாகுடி, பணவடிவிலோ, பொருள்வடிவிலோ, பெரும் பாலும் கோவில்களுக்கே வழங்கப்பட்டு, திருவிழாக் களுக்கும் நாள்வழிபாட்டிற்கும் பயன்பட்டுள்ளன. சில நேரங்களில் கோவிலுக்கு நந்தவனம் உருவாக்கவும் கோவிலைப் பழுதுபார்க்கவும், மண்டபம் கட்டவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பட்டினப்பாகுடி மகமையானது அன்றாடம் பயன் படுத்தும் பொருட்கள் மீதும் ஆடம்பரப் பொருட்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது. பயறு வகைகள், நெல், அரிசி, சாமை, வரகு, கேழ்வரகு, கம்பு, தேங்காய், ஆமணக்கு, எள், கடுகு, வெற்றிலை, இஞ்சி, சுக்கு, வெள்ளைப்பூண்டு, கருப்புக்கட்டி, உப்பு, காய்கறி, புளி, தேன், மெழுகு, பருத்திநூல் புடவை வகைகள், துணிகள் குதிரை, யானை, ஒட்டகம், பசு, எருது, எருமை, அகில், கஸ்தூரி, சந்தனம், கற்பூரம், மூலிகை வேர்கள், யானைத் தந்தம், பவளம், முத்து, தங்கம், செம்பு, பித்தளை, இரும்பு என்பன முக்கிய வாணிபப் பொருட்களாக விளங்கியுள்ளன.

பேராசிரியரது கணிப்பின்படி, கர்நாடகப் பகுதியில் கிடைத்துள்ள கல்வெட்டுகளிலும், தமிழ்நாட்டில் கிடைத்துள்ள கல்வெட்டுகளிலும், பாக்கு, மிளகு என்ற இரண்டும் இவ்விரு பகுதிகளிலும் சந்தைப்படுத்தப் பட்டுள்ளன. பலவகையான பருத்தி வகைகள், பட்டு கம்பள ஆடைகள் என்பன தமிழ்நாட்டில் விற்கப்பட குறைந்த வகையிலேயே இவை கர்நாடகத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

விலங்குகள், மாடுகள் ஆகியன விற்பனைப் பொருளாகத் தமிழ்நாட்டுச் சந்தைகளில் விளங்க, கர்நாடகச் சந்தைகளில் இவை விற்பனைப் பொருளாக இல்லை. மதிப்பு மிக்க விற்பனைப் பொருளாகத் தங்கம் கர்நாடகத்தில் விளங்கியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இந்நிலை இல்லை.

பட்டடையும் தொழிலும்

தமிழ்க் கல்வெட்டுகளில் ‘பட்டடை’ என்ற கலைச் சொல் இடம்பெறுகிறது. இச்சொல் தொழிற்கூடங்களைக் குறிப்பதாகவுள்ளது. இச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு ‘பட்டடைச் சிற்றாயம்’, ‘பட்டடைச்சுங்கம்’, ‘பட்டடைத் தண்டல்’, ‘பட்டடை வரி’, ‘பட்டடை ஆயம்’ என்ற வரிகளின் பெயர்களும் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. இந்நூலில் இடம்பெற்றுள்ள, பேராசிரியர் சண்முகத்தின் கட்டுரை ஒன்று விஜயநகரப் பேரரசின் ஆளுகையின் போது பல கிராமப்புறங்களில் உற்பத்தியான வாணிபப் பொருட்களையும் அவற்றை உற்பத்தி செய்த கைவினைஞர்களையும் அறிமுகம் செய்கிறது. துணிகள், அணிகலன்கள், மட்பாண்டங்கள், சுடுமண் உருவங்கள், உலோகப்பொருட்கள், இரும்பு செம்புக் கருவிகள் என்பன உள்நாட்டுத் தேவைக்கும் அயல்நாட்டு ஏற்றுமதிக்கும் பட்டடைகளில் உற்பத்தியாகி உள்ளன.

பட்டடைகள் குறித்த இக்கட்டுரையில் விஜயநகர் ஆட்சிக்காலத்தைய 250 தமிழ்க் கல்வெட்டுகளைச் சான்றுகளாகப் பயன்படுத்தி உள்ளார். இவற்றுள் பெரும்பாலானவை கல்வெட்டுத் தொகுப்புகளில் இடம்பெறாதவை. படி எடுக்கப்பட்ட நிலையிலேயே பாதுகாக்கப்பட்டு வருபவை.

உற்பத்திக்கான நிலங்கள், வேளாண் உற்பத்திப் பொருட்கள், தொழிற்கூடங்கள் தொழில்கள் மீதான வரிகளை இக்கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இவ்வகையில் ‘கைக்கோளர்கள்’, ‘வாணியர்’, ‘குயவர்Õ, Ôகம்மாளர்Õ, Ôவணிகர்கள்Õ, என்போர் மீது வரிவிதிக்கப் பட்டுள்ளது. வாணிபம் நிகழும் இடங்களாக, சந்தை, பேட்டை என்பன விளங்கின.

சந்தைப்படுத்தப்பட்ட பொருட்களை இக் கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிந்தாலும், மேலும் பல விரிவான செய்திகளை அறியமுடியவில்லை. சான்றாக மூலப்பொருள் விநியோகம், மூலதனம், உற்பத்திக் கருவிகள் என்பன குறித்த செய்திகள் போதாமையாகவே உள்ளன.

···

இக்கட்டுரைக்கான கல்வெட்டுச் சான்றுகள் செங்கல்பட்டு, தென்ஆற்காடு, வடஆற்காடு, திருச்சிராப் பள்ளி, சேலம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய ஊர் களிலும் அவற்றைச் சுற்றியுள்ள ஊர்களிலும் சேகரிக்கப் பட்டவை ஆகும்.

விஜயநகர ஆட்சிக்காலத் தமிழகத்தில் பொருள் உற்பத்தியாளர்கள், உழுகுடி, பட்டடைக்குடி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். நிலம் சார்ந்த வேளாண் உற்பத்தியில் ஈடுபட்டிருந்தோர் உழுகுடி என்றும், வேளாண்மையில் ஈடுபடாத கைவினைஞர்கள் பட்டடைக்குடி என்றும் அழைக்கப்பட்டனர். குடியானவர் என்ற பெயராலும் உழுகுடிகள் என்று அழைக்கப்பட்டனர். வேளாளர், கொடிகாரர் (வெற்றிலை பயிரிடுவோர்) ஆகியோர் இப்பிரிவில் அடங்குவோர்.

பட்டடைக் குடியினர் Ôகாசாயத்தார்Õ என்றும் அழைக்கப்பட்டனர். ஆயமாக (வரியாக) காசினை (உலோக நாணயத்தை) செலுத்தியமையால் இப்பெயரைப் பெற்றுள்ளனர். இப்பிரிவில், (1) கோ முட்டிகள் (தெலுங்கு பேசும் மரபில் வந்த வணிகர்கள்) (2) செட்டி, வர்த்தகர் (வணிகர்கள்) (3) கைக்கோளர் (4) சேனியர் (நெச வாளர்கள்) (5) செக்கார் (எண்ணெய் ஆட்டுவோர்) (6) எருதுக்காரர் (பொதி சுமக்கும் அல்லது வண்டி இழுக்கும் காளைமாடுகளின் உரிமையாளர்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதன் அடிப்படையில் நில உரிமையாளர்களாகவும் நிலமில்லாத சாகுபடியாளர்களாகவும் விளங்கியோர் வேளாண்மைக் குடியினராகவும், வேளாண்மை அல்லாத தொழிலை மேற்கொண்டிருந்தோர் தொழிற்குழுவின ராகவும் இருந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

உற்பத்தியாளர்களிடையே நிலவிய இப்பிரிவினைகள் 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சம்புவராயர்கள் ஆட்சியின்போது இறுதிவடிவம் பெற்றுள்ளது. இவர்களது கல்வெட்டுகள் பட்டடைக் குடிகளை, காசாயக்குடிகள் என்றே குறிப்பிடுகின்றன. சோழர் ஆட்சிக் காலத்திற்கு பிற்பகுதியில் கூட இச்சொல்லாட்சி காணப்படுகிறது.

நன்செய்நிலச் சாகுபடியாளர்கள் தாம் செலுத்த வேண்டிய வரியை விளைபொருளாகவும் சில நேரங் களில் ரொக்கமாகவும் செலுத்தியுள்ளார்கள். புன்செய் நில வேளாண்மை மேற்கொண்டோர் தாம் செலுத்த வேண்டிய வரியை ரொக்கமாகச் செலுத்தியுள்ளார்கள். கைவினைத் தொழில் செய்தோர் ரொக்கமாகவே செலுத்தி வந்தனர்.

பட்டடை என்ற சொல்லாட்சி பட்டாடை என்று தவறாகப் படிக்கப்பட்டுள்ளது. தி.நா.சுப்பிரமணியன் ‘பட்டடை-நூலாயம்’ என்ற சொல்லை பட்டாடை நூலாயம் என்று தமது கல்வெட்டுச் சொல் அகராதியில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் துணிகள் குறித்த தம் ஆய்வு நூலில் விஜயா ராமசாமி, பட்டாடை நூல்

ஆயம் என்றே குறிப்பிட்டுள்ளார். டி.வி.மகாலிங்கம் பட்டுத் துணி மீதான வரி என்றே பட்டடை ஆயம் என்ற சொல்லுக்குப் பொருள் கண்டுள்ளார். ஆயினும் பட்டடை என்ற சொல்லுக்கு, கொல்லரின் தொழிற் கூடம் என்றும் வெறொரு இடத்தில் பொருள் உரைத்துள்ளார். இது சரியான பொருள்தான்.

எ.சுப்பராயலு, பட்டடை என்ற சொல் கைவினைஞர் குழுக்களைக் குறிப்பதாகத் தம் கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

பட்டடைக்குடிகள் கிராமப்புறப் பட்டடைகளில் துணிகள், உலோகச் செய்கலங்கள், அணிகலன்கள், எண்ணெய், மட்கலங்கள், சுடுமண் உருவங்கள் ஆகியன வற்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோர் பட்டடைக் குடிகள் என்றழைக்கப்பட்டனர். இப் பட்டடைக்குடிகளால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சந்தைக்கு அனுப்பப்பட்டன.

விஜயநகர ஆட்சியின் போது பட்டடைகள் வளர்ச்சி பெற்றன. இது தொழில் மயமாதலுக்கு இட்டுச் சென்றது. பட்டடைகள் பல்வேறு கிராமங்களில் அதிகரித்தன. மற்ற தொழில்களைவிட நெசவு சார்ந்த தொழில்கள் பெரிதும் வளர்ச்சி பெற்றன. பல்வேறு கிராமங்களில் புதிதாகத் தறிகள் நிறுவப்பட்டன. அத்துடன் சந்தைகளும் பேட்டைகளும் புதிதாக உருவாக்கப்பட்டன.

கி.பி.1397 ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் கிடைத்துள்ளது. இதில் ‘பதினெண் பட்டடை’ என்ற சொல்லாட்சி இடம் பெற்றுள்ளது. ஆயினும் பதினெண் பட்டடைகளின் பெயர்கள் இக்கல்வெட்டில் இடம்பெறவில்லை. ஆனால் செட்டிகள், கைக்கோளர், எண்ணெய் வாணியர் என்போர் குறிப்பிடப்பட்டுள்ளனர். மற்றொரு கல்வெட்டில் ‘பலபட்டடை’ சில்லறைப்பட்டடை, சக்கிலிப்பட்டடை (தோல் தொழிற் கூடம்), செக்குப் பட்டடை (எண்ணெய் எடுக்கும் இடம்) என்ற பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு பட்டடை என்றழைக்கப்பட்ட தொழிற்குழுமங்கள் பல கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை மேற்கொண்ட தொழிலின் அடிப்படையில் இவற்றை ஏழு உப குழுக்களாகப் பகுக்கலாம். அவையாவன:

(1) வணிகர்கள் (2) நெசவாளர்கள் (3) கைவினைஞர்கள் (4) எண்ணெய் ஆட்டுவோர் (5) ஆயர்கள் (6) பல்வேறு தொழில்புரிவோர் (7) மீனவர்.

இவ்வாறு ஒவ்வொரு குழுவிலும் அடங்கும் சமூகங்களையும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு தொழில் புரிவோர் என்ற ஆறாவது குழுவில், கைவினைப் பறையர், நாவிதர், வண்ணார், சக்கிலியர் ஆகியோரையும் இக்குழுவில் இணைத்துக் கொள்ளலாம் என்பது ஆசிரியரின் கருத்தாகும்.

இவ் ஏழு பிரிவுகளில், நெசவாளர், வணிகர், எண்ணெய் ஆட்டுவோர், கைவினைஞர்கள் ஆகியோர் நல்ல பிரதிநிதித்துவம் பெற்றிருந்தனர். இவர்களோடு ஒப்பிடுகையில் பிற சமூகத்தினர் குறைந்த அளவு பிரதி நிதித்துவமே பெற்றிருந்தனர். நெசவாளர் பிரிவில் கைக் கோளர்கள் அதிக இடத்தைப் பெற்றிருந்த நிலையில் இதே தொழில் புரிந்து வந்த சாலியர், சேனியர், கோலியர் ஆகியோர் ஒன்றிரண்டு இடங்களிலேயே பிரதிநிதித்துவம் பெற்றிருந்தனர்.

பஞ்சகம்மாளர் என்றழைக்கப்படும் கம்மாளர் பிரிவில், கொல்லர், தச்சர், தட்டார், சிற்பாசாரி, கன்னார் என்ற அய்ந்து கிளைச் சாதிகள் இருந்தன. பல குடியிருப்புகளில் சிறு குழுக்களாக இவர்கள் செயல் பட்டுள்ளனர். முற்றிலும் இவர்களே வசித்த தெருக்கள் கம்மாளத் தெரு என்று பெயர் பெற்றிருந்தன.

செட்டிகளும் வணிகர்களும் கிராமப் புறங்களில் சரக்குகளைச் சேகரித்து சந்தைகளில் விற்றனர். இவ் வகையில் உற்பத்தியாளனுக்கும் நுகர்வோருக்கும் இடையே இணைப்பாகச் செயல்பட்டனர்.

செக்கின் துணையால் எண்ணெய் எடுப்போராக வாணியர்கள் விளங்கினர். எண்ணெய் வாணியர் என்றும் இவர்கள் அழைக்கப்பட்டனர். மட்பாண்டங்களையும் சுடுமண் உருவங்களையும் செய்வோராக, குயவர்களும், கால்நடைகளைப் பராமரித்து பால், வெண்ணெய், நெய் தயாரிப்பாளராக மன்றாடிகளும் இருந்துள்ளனர். கோவிலுக்குரிய கால்நடைகளைப் பராமரித்து கோவிலில் நந்தாவிளக்கு எரிப்பதற்குத் தேவையான நெய் வழங்குவதும் மன்றாடிகளின் பணியாகும்.

பட்டடைகளின் இருப்பிடம்

பொதுவாகக் கோவிலின் அருகிலேயே பட்டடைகள் அமைந்திருந்தன. கோவிலுக்கு உரிமையான திருமடை வளாகம் பகுதியிலேயே பட்டடைக் குடிகள் வாழ்ந்தனர். சில இடங்களில் வரி செலுத்துவதில் இருந்து இவர் களுக்கு விதிவிலக்கும் அளிக்கப்பட்டது, கிராமக் குடி யிருப்புகளிலும் பட்டடைகள் செயல்பட்டன. சில ஊர்களில் கிராமக் குடியிருப்பு, கோவில்மனை என இரு இடங்களிலும் இவை செயல்பட்டன. பிராமணர் களுக்கு உரிமையான அகரப்பற்று பகுதியிலும் இவை செயல்பட்டுள்ளன.

வரிகள்

பட்டடைகள் உற்பத்தி செய்யும் பொருட்களின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது. இவ்வரிகளின் பெயர்கள் உற்பத்திப் பொருட்களுடன் இணைத்தே குறிப்பிடப் பட்டுள்ளன. சான்றாக, தறிஇறை, செக்கிறை தட்டார் இறை, செட்டிஇறை என்ற பெயர்களைக் குறிப்பிடலாம்.

தறி

நெசவுக்குப் பயன்படும் தறியைக் குறிக்க சேனியத் தறி, பறைத்தறி, சாலிகர் நிலைத்தறி என்ற பெயர்கள் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. இப் பெயர்கள் தறிகளை இயக்கும் சாதிகளின் பெயர்களுடன் இணைந்து பெயர் பெற்றுள்ளன. இத்தறிகளுக்கிடை யிலான வேறுபாடுகள் குறித்து எதுவும் தெரியவில்லை.

பறையர் தறி, சேனியர் தறி என்ற இரண்டு தறிகளுக்கும் ஆண்டுக்கு மூன்றுபணம் வரி விதிக்கப் பட்டுள்ளது. கைக்கோளர் தறிக்கான வரியை விட இது குறைவானதாகும். கைக்கோளத் தறிக்கு மாதத்திற்கு அரைப் பணம் என வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் ஆண்டுக்கு ஆறுபணம் வரியாகிறது.

இவை தவிர கொம்புத் தறி, சாட்டித் தறி என்ற பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இத்தறிகளுக்கும் ஆண்டுக்கு மூன்று பணம் வரி வாங்கப்பட்டுள்ளது. சாலியர் தறி நிலைத்தறி’ என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இத்தறிக்கு ஆண்டுக்கு ஒன்பது பணம் வரி விதிக்கப் பட்டுள்ளதால் இதில் நெய்யப்படும் துணி உயர் ரகத் துணியாக இருந்திருக்க வேண்டும்.

உரிமையாளர்கள்

தறிகள் சிலவற்றின் உரிமையாளர்களது பெயர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. தறிகளைப் போன்றே செக்கு, ஊதுலை, கரும்புச்சாறு பிழியும் எந்திரம் என்பன தனி மனித உடைமைகளாகவே இருந்துள்ளன. கோவில்களும் தறிகள் சிலவற்றிற்கு உரிமையாளர்களாக இருந்துள்ளன. ‘முதலி’ என்ற பெயரிலான சாதித் தலைவர்களும் தறிகளின் உரிமையாளர்களாக இருந்துள்ளனர்.

தறிகளில் நெய்யப்பட்ட ஆடைகளை வணிகர் களுக்கு விற்பது மட்டுமின்றி நேரடியாக நுகர் வோருக்கும் விற்றுள்ளனர். நெய்த துணிகள், தனிப்பட்ட நெசவாளர்களால் மட்டுமின்றி, கூட்டாகவும் விற்கப் பட்டுள்ளன. நெசவாளர்கள் மீதான வரியும் கூட்டாக விதிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நெசவாளர் களில் ஒரு பகுதியினர் இணைந்து ஒரு வகையான கார்ப்பரேட் அமைப்பாகச் செயல்பட்டுள்ளார்களோ என்று கருத இடமளிக்கிறது.

புடவைகள் தானியங்களுடன் பண்டமாற்று செய்யப்பட்டுள்ளன. இதனால் நெசவாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையே நேரடியான பரிமாற்றம் இருந்துள்ளது தெளிவாகிறது.

அரசின் ஆதரவு

பட்டடைகள் நிறுவ விஜயநகரப் பேரரசு ஆதரவு அளித்து வந்துள்ளது. புதிய பட்டடைகளையும் அதில் செயல்படுவோருக்கான குடியிருப்புகளையும் அமைத்தது. பட்டடைக் குடிகள் மீதான வரிகளைக் குறைத்ததுடன், சமூகச் சிறப்புரிமைகளையும் வழங்கியது. பெருமளவில் கைக்கோளர்களே புதிய குடி இருப்புகளில் நிலை பெற்றாலும் பிற பட்டடைக் குடிகளும் அனுமதிக்கப் பட்டார்கள். இவர்களுக்குச் சில வரிகளில் இருந்து விலக்களித்தார்கள். ‘சர்வ மானிய இறையிலி’ என்ற பெயரில் எல்லா வகை வரிகளிலும் இருந்து விலக்களிக்கப் பட்டு இவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. வரி விலக்கின்றி, வரிக்குறைப்பும் குறிப்பிட்ட காலம் வரை வரிவிலக்களித்தலும் நிகழ்ந்துள்ளன. சான்றாக பொன்னூர் என்ற ஊரில் கைக்கோளருக்கு ஆறு மாதங்கள் வரை வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆறுமாதங்கள் முடிந்த பின்னர் தறி ஒன்றுக்கு ஆண்டுக்கு மூன்று பணம் வரி செலுத்தியுள்ளார்கள்.

வரி எதிர்ப்பு

தொழில் புரியும் குழுக்கள் தம்மால் வரி செலுத்த இயலாதபோது வேறு ஊருக்கு இடம்பெயர்ந்துள்ளார்கள். எதிர்ப்பைத் தெரிவிக்கும் வழிமுறையாக இது அமைந்தது. இது போன்ற பதினான்கு நிகழ்வுகளை ஆசிரியர் கண்டறிந்துள்ளார்.

இடப்பெயர்ச்சியைத் தடுத்து அவர்களை மீண்டும் குடியமர்த்தும் பணியினை அரசு மேற்கொண்டது. இதற்காக வரித்தள்ளுபடி அல்லது வரிக்குறைப்பை அது மேற்கொண்டது.

சந்தைகள்

விஜயநகரப் பேரரசின் பொருளாதாரத்தில் சந்தைகள், பேட்டைகள் முக்கிய பங்கு வகித்தன. வணிகர்களும் நுகர்வோரும் உற்பத்தியாளருடன் நெருக்கமாக, இவை உதவின. இவை ஒவ்வொரு ஊர்களிலும் ஒரு குறிப்பிட்ட கிழமைகளில் நிகழ்ந்தன. இப்பேட்டைகளை விஜயநகர மன்னர்கள் நிறுவினர். புறம், பட்டினம் போன்ற நகரப்பகுதிகளில் பேட்டைகள் அமைந்தன. பேட்டைகளின் காரணமாக அவை உருவான பகுதிகள் சிறப்படைந்தன.

வாணிபப் பொருட்கள்

சந்தைகளின் பெயர்கள் கல்வெட்டுகளில் இடம் பெற்றிருந்தாலும் அங்கு சந்தைப்படுத்தப்பட்ட பொருட் களின் பெயர்கள் இடம்பெறவில்லை. ஆயினும் சில குறிப்பிட்ட ஊர்களில் இருந்த சந்தைகளில் சிறப்பாக விற்பனையான பொருட்கள் குறித்த செய்திகளை அறிய முடிகிறது. இவ்வரிசையில், பருத்தி-பஞ்சு-பருத்திநூல்-பஞ்சைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பொருட்கள் சிறப்பிடம் பெறுகின்றன.

இவை தவிர, மெழுகு, உலோகப் பொருட்கள், பட்டுநூல், செம்பு, இரும்பு, இரும்பால் செய்த பொருட்கள், சாயங்கள், சந்தனம், மிளகு, தேன், தானியங்கள் என்பனவும் சந்தைகளில் விற்கப்பட்டன.

ஆசிரியரின் மதிப்பீடு

தமிழகத்தில் விஜயநகர ஆட்சியின் போது தொழில் மயமாதல் என்பது பட்டடைகளின் வளர்ச்சியால் நிகழ்ந் துள்ளது என்பது ஆசிரியரின் கருத்தாகும். ஆயினும் தொழிற்கருவிகள், எந்திரங்கள் குறித்த சான்றுகள் கிடைக்கவில்லை, பாரம்பரியக் கருவிகள் நன்றாகப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறார்.

மேற்கொள்ளப்பட்ட தொழில்களில் துணிகள் தொடர்பான தொழில் செழித்து வளர்ந்திருந்தது. துணிகளை அடுத்து எண்ணெய்த் தொழில் வளர்ச்சி பெற்றிருந்தது.

உற்பத்தியாளர்களுக்கு விஜயநகரப்பேரரசும், நாயக்கர் ஆட்சியும் கோவில்களும் உதவி உள்ளன. பட்டடைகள் அமைக்க இடம் வழங்கல், நெருக்கடிக் காலங்களில் ஆதரவு தருதல் என்பன, உதவிகளுள் முக்கியமானவை. சில நேரங்களில் சமூகம் சமயம் சார்ந்த சிறப்புச் சலுகைகளைப் பெற்றார்கள். இதிலும் நெசவாளர்களே முன்னணியில் இருந்தனர்.

···

தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் குறிப்பாக திருச்சி, சேலம், திருவாரூர், புதுக்கோட்டை, பழைய செங்கல்பட்டு, வடஆற்காடு, தென் ஆற்காடு, மாவட்டங்களில் கிடைத்துள்ள 250 தமிழ்க் கல்வெட்டுக் களை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரையை ஆசிரியர் எழுதியுள்ளார். இதுபோன்று தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளை மையமாகக் கொண்டு ஆய்வு மேற் கொண்டால் வேளாண் சமூகமாக விளங்கிய தமிழ்ச் சமூகத்தில் நிகழ்ந்த தொழில் வளர்ச்சி குறித்த முழுமையான சித்திரம் கிடைக்கும்.

···

அடுத்த இதழில் பேராசிரியர் ப.சண்முகத்தின் சிறப்பு மலரில் இடம்பெற்றுள்ள வரலாற்றறிஞர்களின் கட்டுரைகள் சிலவற்றைக் காண்போம்.

தொடரும்...

அமராவதி

AMARAVATI

 (வரலாறு, தொல்லியல், கல்வெட்டு, நாணயவியல் குறித்த கட்டுரைகள்)

பதிப்பாசிரியர்கள்:

ந.அதியமான், எஸ்.ராஜவேலு, ஜி.செல்வகுமார்