மானிடவியல் எனும் அறிவியல் ஒரு தனித்த மனிதக் கூட்டத்தில் மனிதர்களிடையேயான உறவுகளை விளங்கிக் கொள்ளவும், வெவ்வேறு மனிதக் கூட்டங் களிடையேயான உறவுகளைப் புரிந்துகொள்ளவும் உதவும் என்று கருதினால் அக்கூட்டங்களில் பெண் களின் சமூக இயல்பு என்ன என்பதனை அறிய இவ்வறிவியல் உதவும்.  இவ்வுறவு, சில நம்பிக்கைகளாலும், பழக்க வழக்கங்களினாலும், சில எழுதப்படாத சட்டத்தாலும், சமய நம்பிக்கைகள் போன்றவற்றாலும் விளக்கப்படுகின்றன.

மனித இனக்கூட்டத்தில் பெண் மட்டுமே மனிதனைப் படைக்கிறாள் என்பதால் பெண்ணின் இருப்பு மிக முக்கியமானது.  தொடக்கத்தில் பெண் ஆண்குலத்தினை அடக்கி வைத்தாள் என்பதனை தாய் குழந்தையைவிட பலசாலி என்பதால் சாத்தியப் பட்டிருக்கலாம். தொடர்ந்து இதுவே பழக்கமாகி யிருக்கலாம். இது விலங்கினங்களுக்கும் பொருந்தும்.  

ஈன்றவுடன் குட்டிகளைத் தின்னும் நாய், பன்றி, பாம்பு போன்ற விலங்குகளின் பழக்கத்தினின்றும் இதனைப் புரிந்துகொள்ளலாம். இவை முதுகெலும்புள்ள விலங்குகள்; பாம்பினைத் தவிர பிற பாலூட்டிகள்.   நீர் விலங்குகள் இப்படிச் செய்வது இல்லை.  இது போன்று மனிதச் சமூகத்திலும் நிகழ்ந்திருக்கலாம்.  தமிழ் இலக்கியத்தில் பேய் மகளிர் பற்றிய குறிப்புகள் உண்டு.  எனவே, தலைப்பிள்ளையினைக் கொல்லும் பழக்கத் தினை ஒரு சடங்காகக் கொண்டிருக்கலாம். 

தலைச்சன் பிள்ளை

தலைச்ச ஆண்பிள்ளையினை இந்தியச் சமூகத்தில் பலியிடுவது, கொல்வது போன்ற பழக்கம் பண்டைக் காலத்தினின்றும் வந்திருக்க வேண்டும்.  புராண, இதிகாசப் பனுவல்களில் இதனைக் காணலாம்.   புராணச் சம்பவங்கள் கட்டுக்கதைகள் என்றாலும் அது போன்ற சம்பவங்கள் ஏன் எழுதப்படவேண்டும் என்று கருத வேண்டும். உண்மை சொன்னாலும் அதில் அரசியல் உண்டு; பொய் சொன்னாலும் அரசியல் உண்டு.  மகாபாரதப்போரில் கொல்லப்பட்ட கர்ணன் குந்தியின் தலைப்பிள்ளை. 

அபிமன்யு, அர்ச்சுனனின் தலைப்பிள்ளை.  போரில் கொல்லப்பட்ட துரியோ தனன், இராவணன், இந்திரஜித் அனைவருமே தலைப்பிள்ளைகள்.    வாலியும் தலைப் பிள்ளையாவான்.   தலை வெட்டப்பட்ட விநாயகனும் ஒருவகையில் தலைப் பிள்ளையாவான். இவர்கள் அனைவரையும் கொன்றவர் ஆண்களே. தலைப்பிள்ளையினைக் கொன்றவர் ஆண்கள் என்றால் தின்றவர் பெண்கள் என்று கருதவேண்டியுள்ளது. கொலை செய்யப்பட்ட கோவலன் தலைப்பிள்ளையே; தற்கொலை செய்து மாண்ட பாண்டிய நெடுஞ்செழியனும் தலைப் பிள்ளையே.  இப்படி அதிகார வர்க்கத்தில் இருந்த தலைப் பிள்ளைகள் கொல்லப்பட்டுள்ளனர்.    இவர் களில் விநாயகர் ஒருவகையில் தந்தையால் கொல்லப் பட்டார்.  

இங்கு, ஒரு கருத்தினைக் கொள்ளவேண்டும்.   தன் மனைவி தானே உருவாக்கிய மகனை பார்வதியின் கணவன் ஏன் கொள்ளவேண்டும். இயல்பாகவே, மகனின் மேல் ஒரு பொறாமை அரும்பத் துடிக்கிறது. தான் அனுபவித்தப் பெண்ணைத் தானும் அனுபவிக்கத் துடிக்கிறானே என்பதே இங்கு காரணமாகும். சில பழங்குடியில், கணவன் இறந்தபிறகு மூத்தமகனை மணக்கும் முறை இருந்துள்ளது.   மேற்சொன்ன பொறாமையினை இக்கருத்தோடு நோக்கவேண்டும்.  

இப்படி தலைப்பிள்ளைக் கொல்லப்படுவதால் அதிகாரம் தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது. அதனைத் தக்க வைத்துக்கொண்டு, தலைப்பிள்ளையினை விரட்டி யடிக்கும் வழக்கமும் இருந்துள்ளது. இதனை, இவ் வரசியலின் இரண்டாம் கட்டம் எனலாம்.   கர்ணன் அநாதையாக்கப்பட்டதனையும், இராமன் காட்டிற்கு விரட்டப்பட்டதனையும் இவ்வாறு காணலாம்.    ஆண்பிள்ளைகளால் அரசதிகாரத்திற்கு ஆபத்து வரும் என்று எண்ணி திரவுபதியின் மூலம் பிறந்த  பாண்டவர் களின் அனைத்து தலைப்பிள்ளைகளும் கவுரவர்களால் கொல்லப்பட்டனர்.

அரிச்சந்திரன் தலைப்பிள்ளை யினைப் பலியிடுதற்கு வேண்டிக்கொண்டான்.   நரசிம்மனால் கொல்லப்பட்ட இரணியன் தலைப் பிள்ளையே.  ஆட்சியின் பேராபத்தில் தலைபோய் விடும் என்பதால் மழித்தத் தலையோடு இளங் கோவடிகள் அண்ணனுக்கு  இடம் விட்டு நகர்ந்தார்.   துறவியானவரின் கதையுள்ளம் தலைப்பிள்ளைகள் எவரையும் வாழவைக்கவில்லை.  கோவலன் ஊழுற்றான்; கண்ணகி தீயுற்றாள்; மாதவி துயருற்றாள்; மணி மேகலை துறவுற்றாள். இவர் எவரும் இன்புறவில்லை.  இயேசு கிறிஸ்து ஒரு தலைப்பிள்ளை. 

யரோது மன்னன்  இரண்டு வயதுக்கு உட்பட்ட அனைத்து ஆண்குழந்தை களையும் கொல்வதற்கு உத்தரவிட்டான்.   உலக வரலாற்றில் இளையோரின் கிளர்ச்சி ஒரு வகையில் இப்படித் தடுக்கப்பட்டிருக்கலாம்.  இந்தி-எதிர்ப்புப் போராட்டத்தில் இறந்தோர் பலர் இளைஞரே.  போர் களை முடுக்குவோர் கிழவர்களே. இனப்போர்களில் இளைஞர்கள் கொத்து கொத்தாக கொல்லப்படு கின்றனர். அரசியலில் இளவல்களுக்கு இடம் விட்டு விலகிய அண்ணன்மார்கள் உண்டு. முதலாம் ராஜ ராஜனுக்கு இடம் விட்டு ஆதித்தகரிகாலன் மாண்டான்.  

தூக்கிலிடப்பட்ட கட்டபொம்மன் தலைப்பிள்ளையே.   மாறுகால், மாறுகை வாங்கப்பட்ட மதுரைவீரனும், கழுவில் ஏற்றிக்கொல்லப்பட்ட காத்தவராயனும் தலைப்பிள்ளைகளே.  இவர்கள் இருவரும் இரண்டாம் காதலால் துயருற்றனர்.  இளைஞர்களுக்கு வழிவிட்டு கட்சிப்பணியாற்ற மூத்தவர்கள் முன்வரவேண்டுமென்று காங்கிரஸ் தலைவர் கு.காமராஜ் வலியுறுத்தினார்.  திமுக தலைவர் சி.என்.அண்ணாதுரை தலைமைக்கு இடம் விட்டு தம்பி வா, தலைமையேற்க வா என்று வீ.ஆர்.நெடுஞ்செழியனுக்கு அழைப்பு விடுத்தார். 

கனியும் பெண்ணும்

ஈனும் தன்மையும், ஈயும் தன்மையும் பெண்ணுக் குண்டு. சமயப்பனுவல்கள் இதனை விளக்குகின்றன.   ஏவாள் அறிவுக்கனியான ஆப்பிளை ஆதாமுக்குக் கொடுத்தாள்.  இந்திய இதிகாசத்தில், சபரி என்ற பெண் இராமனுக்கு இலந்தைப்பழம் தந்தாள்.  இவ்விரண் டினையும் இந்தோ-ஆரியப் பண்பாட்டுக் கூறுகளாகக் காணலாம்.   அவற்றில் ஆப்பிள் பொய்க்கனி.   தமிழர் மரபில் அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி தந்தான்; முருகன் நாவல் பழம் தந்தான்.  

சிவபெருமான் காரைக்கல் அம்மையாருக்கு மாங்கனி தந்தார்.   இங்கு கனிவுற்றோர் ஆண்கள்; கனி பெற்றோர் பெண்கள்.  இதனைத் திராவிடப்பண்பாட்டுக் கூறாகக் காணலாம்.   நெல்லி, மா, நாவல் அனைத்துமே இருவிதையிலைத் தாவரங்கள்;  விதையினை உள்ளே கொண்டிருப்பவை; மேக்ரோ நியூட்ரின்ஸ் நிறைந்தவை. 

நன்னன் வளர்த்த மாங்கனியினை உண்டதால் சிறுமி கொல்லப்பட்டாள். மாங்கனி உருவில் வந்த பட்டாபியினை அகத்தியர் செரித்துவிட்டார்.  ஆணிற்கும், பெண்ணிற்குமான நட்பினை நாவலும், நெல்லியும் ஊறுகாய் போன்று பக்குவப்படுத்தியது.   மாங்கனியோ அழுக வைத்தது.   மாங்கனியினை வைத்து நாரதர் குடும்பத்தினைப் பிரித்தார். காரைக்கால் அம்மையார் இளம் வாழ்க்கையினைத் துறந்தார். 

நெருப்பும் பெண்ணும்

ஐய்ந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. பெண்களே நெருப்பினை காத்து வந்ததாகக் கதையுண்டு. இந்தியப்பண்பாட்டில்  பெண் கடவுட் சிலையுருக்களில் தலைக்குமேல் தீ நாக்குகள் காட்டப்பட்டுள்ளன.  தமிழகத்தில், மாரியம்மன் திருவிழாக்களில் தலையிலும், கைகளிலும் தீச்சட்டி

ஏந்தி பக்தர்கள் நடனமிடுவர். அம்பிகையே நேரில் ஆடுவதாய்த் தோன்றும்.  நடராஜர் போட்டியில் அம்மனைத் தோற்கடித்துத் தீயினைக் கையில் பற்றிக் கொண்டார்.  பெண்கள் நெருப்பினை ஆக்கத்திற்குப் பயன்படுத்தினர்; ஆண்கள் அழிவிற்குப் பயன்படுத்தினர்.   தீப்பெட்டிகள், மண்ணெண்ணை அடுப்புகள் பயன் பாட்டுக்கு வரும்வரை தமிழகத்தில் ஒவ்வோர் வீட்டிலும் நெருப்புக்கரண்டி என்று ஒன்று உண்டு.  

அதனைப் பெண்ணே, குறிப்பாக மூதாட்டியே காத்து வந்தார். நெருப்பு வேண்டுவோர் அக்கம், பக்கம் வீடு களில் இக்கரண்டி கொண்டே நெருப்பினை வாங்குவர் / தருவர். ஆறு விரலுடைய கிழவி தம் ஆறாம் விரலில் நெருப்பினைக் காத்து வந்தார் என்று கதை உண்டு.   இன்றைக்கும் ஊதுலை வைத்து ஈயம்பூசும் நாடோடி களில் பெண்ணே ஊதுலையில் நெருப்பினைப் பற்ற வைப்பவராக இருக்கிறாள். தென்னகத்தில், பெண் நெருப்போடு சம்பந்தப்பட்டு இருப்பதனைத் திராவிடக் கூறு எனலாம்.

வடக்கில் அக்னிபகவான் நெருப்புக் கடவுளானார். கிரேக்கத்தில் புரொமிதியோஸ் மேலோகத்தினின்றும் நெருப்பினைக் கொணர்ந்தான் என்ற கதையுண்டு. மேற்சொன்ன இரு கூற்றுகளையும் இந்தோ-ஆர்யன், இந்தோ-அய்ரோப்பியன் கூறு எனலாம். அதனால்தான் வடக்கில் யாகத்தினை ஆண்கள் வளர்க்கின்றனர். தெற்கில் பொங்கல் விழாவிற்கு பெண்கள் அடுப்பில் தீ மூட்டுவர்.   ஆனால் நெருப்பினைக் காத்துவந்த பெண்ணையே ஆண்கள் நெருப்பில் இட்டு இரசித்தனர். திரவுபதி அக்னியின்றும் தோன்றினாள்; சீதை அக்னியால் உழன்றாள்.   தமிழகத்தில் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்

மனைவி பெருங்கோப்பெண்டு விருப்பின்றியே தீயில் இறங்கினாள். இங்கு பெருங்கோப்பெண்டு என்ற சொல் அரசனின் மூத்த மனைவியினைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.   இவள் கணவனின் சிதையில் இறங்கும் முன் ஊரவையில் பல்சான்றீரே, பல்சான்றீரே எனக்குத் தீயும் ஒன்றுதான், தாமரைக்குளமும் ஒன்றுதான் என்று கதறினாள். 

தீயில் இறங்கினால் சாம்பல்; தாமரைக் குளத்தில் இறங்கினாலும் சாவுதான். தாமரைக் குளத்தில் நீந்தத் தெரிந்தவரே இறங்கமுடியும். உடல் முழுக்க கொடிகள் சிக்கினால் மரணம்.  எனவே, அக்காலத்தில் குளத்தில் முக்கியும், தீயில் முக்கியும் பெண்களைக் கொன்றிருப்பர் போலும்.  தாமரைமீதமர்ந்த தேவியர் இவரை மன்னிப்பாரா?

பெண்ணும் ஆணும்

பெண்ணின் பெயரால் ஆண்கள் அடையாளப் படுத்தப்படும் மரபு உண்டு. மீனாட்சி சுந்தரேஸ்வரர்,   சீதாராமன், ஜானகி ராமன், ராதா கிருஷ்ணன், இலட்சுமி நாராயணன் என்று கடவுளர்கள் சுட்டப் பட்டனர். வள்ளி-தெய்வானை முருகன் என்றுதான் சுட்டப்படுகிறது. ராதையால் வளர்க்கப்பட்டதால் கர்ணன் ராதேயன் எனப்பட்டான். அதிதியின் புத்திரர்கள் ஆதித்யர்கள் எனப்பட்டனர். கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் ஒருவன் கார்த்திகேயன்

ஆனான். கொற்றவை சிறுவ என்றுதான் குறிப்பு உண்டு.   பார்வதியின் மகனாகத்தான் விநாயகன் அறியப் படுகிறான்.  இவர்கள் பெண்களால் பெருமையுற்றனர்.   பெண்ணால்தான் ஆணிற்கு ஊட்டமுடியும். பத்து மாதம் தன்னைச் சுமந்த பெண்ணை ஒரு நாள் முழுக்க ஒரு ஆணால் சுமக்க முடியாது.  அரசர்களுடன் அவர்கள் கொலுவீற்றிருக்கலாம்; ஆணையிடமுடியாது. பெண் படைத்தளபதி என்று எவரும் இல்லை.  சிகண்டி என்ற தளபதிகூட ஒரு திருநங்கையாவார். இதுவரை கல்வெட்டு களைப் பெண்கள் பொறித்தது இல்லை.  செப்பேடு களை எழுதியது இல்லை. 

பெண்ணும் மண்ணும்

பெண்ணிற்கும் மண்ணிற்கும் ஆன தொடர்புகள் பற்றி பல பதிவுகள் உண்டு.  நாட்டின் பெயரால் பெண்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.   காந்தாரத்தின் இளவரசி காந்தாரி, குந்திபோஜ்ஜின் இளவரசி குந்தி, மத்ராவின் இளவரசி மாத்ரி, பாஞ்சாலத்தின் இளவரசி பாஞ்சலி, கோசலையின் இளவரசி கவ்சல்யா,  கேகயாவின் இளவரசி கைகேயி, விதேதிவின் இளவரசி வைதேகி,  விதர்ப்பாவின் இளவரசி விதர்ப்பி.  புதுக்கோட்டை கல்வெட்டில் ஒரு பெண் கடவுள் கோநாட்டு நாச்சியார் என்று சுட்டப் பட்டுள்ளார்.  

இவையெல்லாம், தொடக்கத்தில் மண்ணையாண்டவர்கள் பெண்களே என்பதனைக் கோடு காட்டும்.  மண்ணில் தோன்றியவளே சீதை.  சோழ அரசிகளில் ஓரிருவர் புவனமுழுதுடையாள், அவனிமுழுதுடையாள் என்று அழைக்கப்பட்டு உள்ளனர்.  பெண்களின் கையிருந்த நாடுகள் அபகரிக்கப் பட்டு அவர்கள் குலத்தினையும், குணத்தினையும் காப்ப வராக மாற்றப்பட்டனர். 

வடக்கில் இளவரசிகள் நாட்டின் பெயரால் சுட்டப்பட்டது போல் தமிழகத்தில் அரசிகள் குலத்தின் பெயரால் சுட்டப்பட்டுள்ளனர்.   செம்பியன் மாதேவி, சோழமாதேவி, வளவன் மாதேவி போன்ற பெயர்கள் சோழ வம்சத்து அரசிகளாவர்; கோதைப்பிராட்டி, வில்லவன் மாதேவி, போன்ற பெயர்கள் சேரர் குலத்து அரசியரைக் குறிப்பன; மீனவன் மாதேவி, பஞ்சவன் மாதேவி, தென்னவன் மாதேவி போன்ற பெயர்கள் பாண்டிய அரசிகளைக் குறிக்கும்.  

சோழர் கல்வெட்டுகளில் கோயில் பெண்டிர்  ஊரின் பெயரால் சுட்டப்பட்டுள்ளனர். அவை: ஆமாத்தூர், ஆருர், கோயில், பொற்கோயில், இளங் கோயில், கருவூர், கயிலாயம், நாகை, நல்லூர், ஒற்றியூர், பழுவூர், தில்லை, புலியூர், திருக்கற்குடி, திருப்புவனம், திருவாலங்குடி, திருவையாறு, திருவெண்காடு, மறைக்காடு போன்றவை.  மன்றம், அம்பலம் என்ற பெயர்களிலும் பெண்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.   மண்ணிற்கும், பெண்ணிற்கும் ஒரே மாதிரியான பெயரினை இட்டு அழைப்பது வேலி போடுவதற்கே. 

முக்கோக்கிழானடிகள், புவனமாதேவி, வானவன் மாதேவி, கேரளமாதேவி,  சேரன்மா தேவி, பராந்தகன்மா தேவி போன்றவை சோழ அரசி களின் பெயர்கள்.  இப்பெயர்களில் நீர்ப்பாசன வாய்க்கால்கள் குறிக்கப்பட்டுள்ளன. நீரும், நிலமும் வளமையானவை. வளமையினைச் சிறப்பிக்கும் பொருட்டு அல்லது பெண்மையினைச் சிறப்பிக்கும் பொருட்டு நீர்ப்பாசன வாய்க்கால்களுக்கு இப்பெயர்கள் இடப்பட்டிருக்கலாம். சந்தனுவின் மனைவியின் பெயர் கங்கை என்பதனை மனதில் கருத வேண்டும்.  நீர் கட்டுப்படுத்தப்படுவது போல் பெண்ணும் கட்டுப் படுத்தப்பட வேண்டும் என்பது காரணமாக அமைந் திருக்கலாம்.

பெண் = தெய்வம்

இந்தியப் பண்பாட்டில், பெண் பலவகையில் அவளின் உளக்கூறுகளுக்கு ஏற்ப தெய்வமாக்கப் பட்டிருக்கிறாள்.  அவை:தீ தெய்வம், வன தெய்வம் (காடு கிழாள்), நீர் தெய்வம் (அப்சரஸ், கங்கை, காவிரி, கோதாவரி, நர்மதை), மலர் தெய்வம் (அல்லி ராணி), போர் தெய்வம் (காளி, துர்க்கை) கல்வி தெய்வம் (சரஸ்வதி, பேச்சாயி).  இவையனைத்துமே ஆற்றல்மிக்க பொருள்களின் அடிப்படையில் உருவானவை.  வனமென்றும், மலரென்றும், பூவென்றும், காயென்றும் சொல்லி அவளைப் பறித்தனர். 

தீயென்று சொல்லி அவளை அணைக்கவும், நீர் என்று சொல்லி அவளில் குளிக்கவும் இப்படிப் பெயரிட்டனர்.   ஆனால், மீண்டும் மீண்டும் பெண் தீயில் சாகிறாள்; வனத்தில் பிணமாகிக் கிடக்கிறாள்; நீர் நிலைகளில் சவமாகக் கிடக்கிறாள்.  தாய் தெய்வம் இங்கு கொற்றவை என்றும், வடக்கில் கார்த்திகை என்றும் தேவகி என்றும் அன்னபூரணி என்றும் அழைக்கப்படுகிறாள். 

பெண் குணத்தினைப் பிரதிபலிக்கும் பலபெயர்களில் பெண்கடவுளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். காமத்தின் அடையாளம் யோகேஸ்வரி என்றும், கோபத்தின் அடையாளம் மகேஸ்வரி என்றும், பாசத்தின் அடையாளம் கவ்மாரி என்றும், ஆசையின் அடையாளம் வைஷ்ணவி என்றும், பெருமையின் அடையாளம் பிராமணி என்றும், பொறாமையின் அடையாளம் அய்ந்தரி என்றும், சாமுண்டாவின் அடையாளம் தனிமை என்றும், அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. 

ஆனால், இவைத் தமிழ் சொற்கள் அன்று. இவற்றுக்கு இணையான பாத்திரங்கள் தமிழ் மரபில் உருவாக்கப்படவில்லை.    கூனியான மந்தரா போன்ற பெயர்கள் தமிழ்ச் செம்மொழிப்பாக்களில் இல்லை. 

பெண்ணின் அடையாளம்

மகள் என்றும், மடந்தை என்றும், தாய் என்றும், தங்கை என்றும், பெண் என்றும், பேதை என்றும், மடவரல் என்றும், மனையோள் என்றும், இல்லாட்டி என்றும், தமிழ் மரபில் அடையாளப்படுத்தப்பட்ட பெண் மூதேவி என்றும், அபகாரி என்றும், சமஸ்க்ருத மரபில் அவமானப்படுத்தப்பட்டாள். வடமொழியில் தாயினைக் குறிக்க மாத்ரு, அம்லா, அம்பா, நானா என்ற பல சொற்கள் உள்ளன. 

துகித்ரு, கன்னி, கன்யா, கனா என்ற சொற்கள் மகள் என்ற பொருளிலும் கன்னி என்ற பொருளிலும் ஆளப்பட்டுள்ளன. குழந்தையினைப் பெற்றுத்தருபவள் ஜெயா என்றழைக்கப்பட்டாள்.   பத்தினி என்ற சொல் மனைவியினையும், ச-பத்தினி என்ற சொல் சகக்கிழத்தியினையும் குறிப்பன. அமஜு என்ற சொல் முதிர் கன்னியினைச் சுட்டும்.  அக்ரு என்ற சொல் பிள்ளைப்பேறு இல்லாத பெண்ணைச் சுட்டும். 

அணங்கு என்ற ஆற்றல் பொதிந்திருக்கும் சக்தியாக தமிழ் மரபில் பெண் மதிக்கப்பட்டாள்.   பெண்ணிடமுள்ள அணங்கு சக்தியுறையும் மழைநீர், மலைகள், வில் போன்றவற்றிலும், அதிகாரத்தினைப் பறை சாற்றும் முரசுவிலும், உலகினை அடைகாக்கும் கடலிலும் உறைந்துள்ளது என்றும் தமிழர் நம்பினர்.   அதனை அணங்கு நெடுங்கோடு, அணங்குடை முந்நீர், அணங்கு பகழி, மழையணங்கு போன்ற தொடர்கள் விளக்குவன.  தொடக்கத்தில் சக்தியாக / ஆற்றலாக கருதப்பட்ட அணங்கு தொடர்ந்து கவர்ச்சியாகக் கருதப் பட்டது. 

அணங்கின் மீதான பயம் தெளிந்து அதன் மீதான ஆசை வந்தது. அணங்கு உறையும் இயற்கை யினை ஆண்கள் அடக்கி ஆள்தல் போல் மகளிரையும் அடக்கியாள நினைத்தனர், ஆண்டனர்.     அதற்காக உருவக்கப்பட்ட கற்பனையே கற்பு.  பெண்ணின் கற்பும் பலவாறாக அடையாளப்படுத்தப்பட்டது.  அவை: ஆறிய கற்பு, ஆன்ற கற்பு, கடவுள் கற்பு, மாசில் கற்பு, வணங்குறு கற்பு, நிலைத்த கற்பு, முல்லை சான்ற கற்பு. 

ஆணை அடக்கியாளும் சிம்மவாஹிணியாக அடையாளப்படுத்தப்பட்டவளை பல உருவங்களாக்கி அவள் கைகளில் காசுகளையும், வீணையினையும் கொடுத்து தாமரை மலர்களில் அமரவைத்தனர்.   தம்மைப் படைத்த பிரம்மாவிடமே வாயடைத்துப் போய் நின்ற சரஸ்வதியினை கல்விக்கு கடவுளாக்கினர்.   செல்வச் சீமாட்டி இலக்குமியை விஷ்ணுவின் காலடியில் குத்துக்காலிட்டு அமரவைத்தனர்.    இப்படி பெண்ணின் அடையாளம் வடக்கத்திய மரபில் மாறி மாறி காட்டப் பட்டுள்ளது. 

தமிழ் மரபில் இவளின் அடையாளம் நாடன் புதல்வன் தாய் என்றும், பரதவர் தங்கை என்றும், கானவர் தங்கை என்றும், கழனி ஊரான் மடமகள் என்றும், குறவன் மடமகள் என்றும் ஆயின.   இப்படி தாய், தங்கை, மகள் என்று மூன்று நிலைகளில் பெண் பெருமைப்படுத்தப்பட்டிருக்கிறாள். அண்ணன், தங்கை உறவு தென்னிந்திய மரபில் பலம் பொருந்திய ஒன்று. இராவணனின் தங்கை பாசம் தக்க சான்று.    அவன் தங்கையின் பேச்சினைக் கேட்டதாலும், மனைவியின் பேச்சைக் கேட்காததாலும் மாண்டான்.     

தமிழ்த் திரைகளில் அண்ணன்-தங்கை சென்டிமெண்ட் படங்கள் பெரு வெற்றி பெற்ற காலம் உண்டு; வடக்கில் இது செல்லாது.  அங்கு தாய்-மகள் செண்டிமெண்டே தடுமாறும். தாய்-மகன் செண்டிமெண்ட் ஓரளவு எடுபடும். சகோதரர், நண்பர் கதாபாத்திரங்கள் உள்ள கதைகள் வெற்றியடைந்துள்ளன.    பாண்டவர் ஒற்றுமை யால் வென்றனர்; கவுரவர் ஒற்றுமையால் தோற்றனர்.     தங்கை சுபத்ராவின் மகனாயிருந்தும் தாய்-மாமன் கிருஷ்ணன் அபிமன்யுவைக் காப்பாற்றவில்லை.  

 ஆனால், தாய்மாமன் கம்சனிடமிருந்து தன்னைக் காத்துக்கொண்டான். திராவிடப்பண்பாட்டில் மாமன்-மைத்துனன் சண்டைகளில் நாதியற்றுப் போனவர்கள் தங்கைகளே.

சோழர் காலத் தமிழ் கல்வெட்டுகளில் பெண்கள் பற்றி பலவற்றை அறியலாம்.   அவர்கள் பெரும்பாலும் அரச மகளிராகவும், கோயில் பெண்டிராகவும் உள்ளனர்.   பெண்கடவுளர்கள் கூட பலவாறாக அறியப்பட்டு உள்ளனர். ஆளுடையா நாச்சியார், ஊருடைய நாச்சி யார், ஊருடைய பெருமாள் நங்கை, பள்ளியறை நாச்சியார் என்பன கடவுளைக் குறிப்பன. பெரிய நாச்சி என்பது பழையோள் என்ற செம்மொழிப்பதிவினையும் யக்ஷி என்ற வடக்கத்திய மரபினையும் சுட்டும்.   

உலகுடையா நாச்சி, உலகுடைய நாச்சியார், ஆட்சி வல்லி போன்ற சொற்கள் பெண்ணின் பெருமையினை விரிந்த தளத்தில் எடுத்துச் செல்லும். வடக்கில் பெண் கடவுளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் கடவுளர் களோடு இணைத்துப் பேசப்பட்டுள்ளனர். லக்ஷ்மி, பத்மா, கமலா என்ற பெயரில் முறையே தருமனுக்கு மனைவியாகவும், குபேரனுக்கு மனைவியாகவும் வாசுகி என்ற பெயரில் விஷ்ணுவுடனும் இணைக்கப்பட்டு உள்ளார். பார்வதியின் மாற்றுருவங்களாக அம்பிகா, துர்க்கா, ருத்ராணி, உமா ஹைமாவதி என்றானார்.  

 காளி மாற்றுருவங்களாக சவ்டி, சாமுண்டி என்றெல்லாம் வருணிக்கப்பட்டுள்ளார்.  வட இந்திய மரபில் பெண் தெய்வத்திற்கு 29 குணங்கள் அமைந்திருப்பதாக அறியப்பட்டுள்ளன. 

வட இந்திய மரபில் பொதுமகளிர் வேசியஸ், விலாசினிஸ், கணிகா என்று வருணிக்கப்பட்டனர்.   கோயில் பெண்டிர் தேவ கணிகையர் எனப்பட்டனர்.   மணிமேகலையில் கடவுள் கணிகை என்றொரு பதிவுண்டு. கோயில் பெண்டிர்கள் பதியிலார், தளி யிலார், தெளிச்சேரிப் பெண்டுகள் என்று கல்வெட்டு களில் சுட்டப்பட்டுள்ளனர். 

தேவரடியார் பெண்டுகள் என்றும் சுட்டப்பட்டுள்ளனர். அப்பர் தம் தேவாரத்தில்  உமையினை நங்கை, மங்கை, மடந்தை, மடமங்கை, மடமொழி மங்கை, தையலோர் மடமங்கை, வடிவுடை மங்கை, மதுரவாய் மொழிமங்கை, அணங்கு, அணங் குமை, நேரிழை, ஏந்திழை, மென் மொழியாள், பாலின் மொழியாள், பாலொத்த மென்மொழியாள், பண்ணின் நேர்மொழியாள், பாலை யாழ்மொழியாள், பணி மொழியாள், வான்மகள், அரிவை, காரிகை என்று பலவாறாக சிறப்பிக்கிறார். இந்து மரபில் பெண்ணை சக்தி என்றும், மாயா என்றும் வணங்கியவர் தேவதாசி என்றும் வருணித்தனர். 

சோழர் கல்வெட்டு அவர்களை உடையார்த் தேவனார் மகள், ஊர்த்தேவனார் மகள் என்று சுட்டும். எம்பெருமானடியாள் என்றும், மகா தேவரடியார் என்றும் சுட்டப்படுகிறாள். இவர்களில் அரசிகளின் பெயர்களில் அமைந்த தலைக்கோலி பட்டம் பெற்றோரும் உண்டு. அரசிகள் கோயில் மகளிரையும், ஆடல் மகளிரையும் போற்றியுள்ளனர்.   பட்டங்கள் தந்து பெருமைப்படுத்தியுள்ளனர்.   இடைக் காலத்திய தென்னக வரலாற்றில் கல்லிலும், உலோகத் திலும் பெண்ணுருவங்களே மிகுதியாக வடிக்கப் பட்டுள்ளன.

இந்தியத்திரையுலகில், கதாநாயக நடிகர் களைவிட கதாநாயகி நடிகர்களே மிகுதி. தாய்மார் களைச் சுற்றிக் குழந்தைகள் போன்று குத்தாட்டத்தில் ஒரு பெண்ணை மையத்தில் வைத்து பல தடியர்கள் கும்மியடிக்கும் காட்சிகள் பலவுண்டு.   புட்டமும், தொப்பையும் பெருத்து, தலையும் மொட்டையான கிழட்டு நடிகர்கள் பேத்திகளுடன் ஜோடி சேர்ந்து ஆடுவது வக்கிரத்தின் உச்சம். எம்.ஜி.ஆருக்கு வயது ஏற ஏற, நாயகிகளின் வயது குறைந்துகொண்டே வந்தது.   இது, இளம் வயதில் மேடைகளில் பெண்வேடமிட்டு நடித்ததால், தம் ஆண்மையினைக் காட்டும் உளவியல் எழுச்சியாகும். இளம் வயதில் ஸ்டண்ட் மாஸ்டர் களைத் தூக்கியும், வயதான காலத்தில் கதாநாயகிகளைத் தூக்கியும் தம் பலத்தினைக் காட்டினார். 

சந்தானலஷ்மி, கண்ணாம்பா, எம்.வி.ராஜம்மா, ஜி.வரலட்சுமி, பி.பானுமதி அனைவரும் திருமணமாகி, தாயான பின்பு கதாநாயகிகளாக நடித்தனர். இவரில், பி.பானுமதி இருபது ஆண்டுகள் நாயகியாக நடித்தார்.   அது, அம்மாக்கள் மதிக்கப்பட்ட காலம். சவ்கார் ஜானகி, சாவித்திரி இருவரும் நடுவயதினைக் கடந்த பிறகு முறையே ஸ்ரீகாந்த், ரவிச்சந்திரன் போன்ற இளம் வயது நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்தனர். இதற் காகவே, சொந்தத்தில் படம் எடுத்தனர், இயக்கினர். அப்படங்கள் வெற்றி பெறவில்லை. 

இளம் வயதில் கிழவர்களுடன் நடித்ததால், முதிர்ந்த பின்பு  இளைஞரைத் தேடினர். எம்.ஜி.ஆர், மு.கருணாநிதி இருவருமே சத்யா மூவீஸ், அஞ்சுகம் பிக்சர்ஸ் என்று தாய்மார்களின் பெயரில்தான் படக் கம்பெனிகளை நிறுவினர். அவர்கள் தயாரித்த பெரும்பாலான திரைப் படங்களில் நாயகனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நாயகியர் உண்டு. அவர்களில் ஒருவர் இறப்பர் (நாடோடி மன்னன், அடிமைப்பெண், பூம்புகார், பூக்காரி).   நாயகிகள், கதைகளில் இப்படி கடவுளாக்கப்படுவர்.

பயன் பட்ட நூல்கள்

சாந்தி சச்சிதானந்தம், பெண்களின் சுவடுகளில், தமிழியல், சென்னை,1989.

சிவசுப்ரமணியன், ஆ, அடித்தள மக்கள் வரலாறு, மக்கள் வெளியீடு, சென்னை,2002.

...........................,கிறித்தவமும் தமிழும், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில்,2006.

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், திருப்பனந்தாள், 1995.

ராஜ் கௌதமன், தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு, கௌரி பதிப்பகம், பாண்டிச்சேரி, 1994.

ராஜம் கிருஷ்ணன், இந்திய சமுதாய வரலாற்றில் பெண்கள், தாகம்,சென்னை,1995.

SII.Vols. Inscriptions of Pudukkottai State

Kinsley, David, Hindu Goddesses: Vision of of the Divine Feminine in the Religious Traditions, Motilal Banarsidas, Newdelhi, 1987.

Karve, Iravati, Kinship Organization in India, Munshiram Manoharlal Publishers Pvt.Ltd, Newdelhi, 1990.

Kalaiccelvi, R, Women Names in Chola Inscriptions (in Tamil), Unpublished M.PhiL., Dissertation submitted to Tamil University, Thanjavur, 1996.

Orr C. Leslie, Donors, Devotees, and Daughter of God: Temple Women in Medieval Tamilnadu, OUP, 2000.

05/08/2014 அன்று, வரலாற்றுத்துறை, (ஏ.டி.எம். பெண்கள் கல்லூரி (தன்னாட்சி), நாகப்பட்டினம்) ஒழுங்கு செய்திருந்த வரலாற்றுக் கழகத்தில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.