பண்டைய இந்தியாவில் கல்வி கி.மு. 2000 முதல் கி.பி. 1200 வரை பரவியுள்ளது.  இக்கால கட்டத்தில் பண்டைய இந்தியா முழுவதிலும் சமூக அமைப்பும் கல்வி முறையும் ஒரே சீராக இருக்க வில்லை.  எனவே கி.மு. 2000 முதல் கி.பி. 1200 வரையிலான காலகட்டத்தைக் கீழ்க்கண்டவாறு நாம் பிரிக்கலாம்.

(1) கி.மு. 2000 முதல் கி.மு. 1000 வரை- வேதகாலம் (2) கி.மு. 1000 முதல் கி.மு. 200 வரை - உபநிஷத்துகள் காலம் (3) கி.மு. 200 முதல் கி.பி. 500 வரை - தர்ம சாஸ்திரகாலம் (4) கி.பி. 500 முதல் கி.பி. 1200 வரை - புராண காலம்.

வேதகாலத்தில் சமூக அமைப்பு மிகச் சிறிய தாக இருந்தது.  விக்கிரக ஆராதனை நடை முறைக்கு வரவில்லை.  சமூகத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமைகள் இருந்தன.  சாதி அமைப்பு உருப்பெறவில்லை.  ஒவ்வொருவரும் தாமே விவசாய நிலங்களில் பயிர்த்தொழில் செய் பவராக விளங்கினர்.  உபநிஷத்துகள் காலத்தில் சமூகம் படிப்படியாகச் சிறுசிறு குழுக்களாகப் பிரியத் தொடங்கியது.  இக்குழுக்கள் வேதங்களை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டன. 

தர்மசாஸ்திர காலத்தில் கலை, இலக்கியம், கணிதம், நாடகவியல் துறைகளில் கணிசமான முன்னேற்றமும் செயல்பாடுகளும் காணப்பட்டன.  இக்காலத்தில் சமஸ்கிருதம் வழக்கில் பெருமளவில் இருந்தது.  பிராகிருதம் தகவல் பரிமாற்றத்துக்கு உதவியது.  சாதி அமைப்பு மிகவும் கட்டுப்பாடாகக் கடைப்பிடிக்கப்பட்டது. 

முற்காலத்தில் அனுபவித்த அளவில் பெண்கள் சமூகத்தில் சுதந்திரத்தை அனுபவிக்க இயலவில்லை.  புராண காலத்தில் கல்வியைப் பொறுத்தவரையில் புத்த மதத்தினரின் காலம் என்றே கூறலாம். நாளந்தா, விக்கிரமசீலா ஆகியவிடங்களில் இயங்கிய பல்கலைக்கழகங்கள் புத்த மதத்தினர் நிறுவிய கல்விக்கழகங்கள் ஆகும்.  பாலி மொழியில் தான் கல்வி கற்பிக்கப்பட்டது. 

முதன்முதலாகப் புராணகாலத்தில்தான் கல்வி, நிறுவனங்கள் மூல மாகத் தொடங்கப்பட்டது எனலாம்.  பண்டைய இந்தியாவில் கல்வி கற்க முன்வந்த மாணவர் யாவரும் ஏமாற்றம் அடையாமல் பள்ளிகளில் கல்விகற்க முடிந்தது.  ஆசிரியர்கள் தமக்குத் தெரிந் திருந்த தொழில்நுட்பங்களை மாணவருக்கு மறைக் காமல் கற்பித்தனர். 

சுக்ராச்சாரியார் அவரது எதிரியின் மகனாகிய கச்சாவுக்கு இறந்தவரை உயிர்ப்பிக்கும் கலையைக் கற்றுத் தந்துள்ளார்.  மகாபாரதத்தில் துரோணாச்சாரியார் தமக்குத் தெரிந்த வில்வித்தைக் கலையை யாவருக்கும் கற்றுத்தந்தார்.  அவருடைய சீடன் ஒருநாள் தன்னை எப்படியும் கொல்லப் போகிறான் என்று தெரிந்திருந்தும் அவனுக்கும் வில்வித்தையைக் கற்றுத்தந்தார்.  பண்டைய இந்தியாவில் குருவும், சீடர்களும் சேர்ந்து வாழ்ந்தனர்.  அவர்கள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தினர்.  குருவும் மாணவனும் அன்பு செலுத்தியது தந்தையும் மகனும் அன்பு செலுத்தியது போன்று இருந்தது.  ஆசிரியரின் இல்லத்திலேயே மாணவர்கள் தங்கி இருந்து கல்வி கற்றனர்.  இம்முறை குருகுலம் என்று அழைக்கப்பட்டது.

இந்தக் குருகுல வாழ்க்கையில் மாணவர்கள் தம் வசதிகளைப் புறக்கணித்து வாழ்ந்தனர்.  குரு தூங்கச் சென்ற பின்னரே மாணவச் சீடர்கள் தூங்கச் சென்றனர்.  சில நேரங்களில் குருவின் இல்லத்திற்கு வேண்டிய குற்றேவல் வேலை களையும் கூடச் செய்தனர். 

குருகுல வாழ்க்கை முறையானது மிகவும் கட்டுப்பாட்டுடன் விளங் கியது.  சில நேரங்களில் மாணவச் சீடர்கட்குக் கடினமாகவும் இருந்தது.  மொத்தத்தில் ஆசிரி யருக்கும், மாணவச் சீடர்களுக்கும் அவர்களது தேவைகள் திருப்தியான முறையில் நிறைவேறின.  ஆசிரியர் மிகவும் ஆடம்பர வாழ்வில் திளைக்க வில்லை.  நிறைய விருப்பங்களையும் ஆசிரியர் இக்குருகுல முறையில் கொண்டிருக்கவில்லை.

குருகுல வாழ்க்கை முறையில் கட்டுப் பாட்டின்மை என்பதே எழவில்லை.  இதனால் தண்டனை அளிப்பது என்பதும் இருக்கவில்லை.  எல்லாவிதமான நிகழ்வுகளும் வரைமுறைப் படுத்தப்பட்டுச் செயல்படுத்தப்பட்டன.  தட்ச சீலம், நாளந்தா, காஞ்சிபுரம், ஸ்ரீதன்யகடகா, விக்கிரமசீலா, வாரணாசி போன்ற இடங்களில் இயங்கிய பல்கலைக்கழகங்களில் கல்வி, சாமான்யர்களும் பெறும் வண்ணம் திட்டமிடப்பட்டு வழங்கப் பட்டது. 

மேற்கண்ட பல்கலைக்கழகங்களில் படித்துவந்த மாணவர்கட்குத் தங்குமிடம், உணவு, உடைகள் முதலியன இலவசமாக வழங்கப்பட்டன.  பண்டைய இந்தியாவில் கிராம மக்களிடையே தன் கிராமப்பள்ளிக்கு வேண்டிய வசதிகளைச் செய்து தருவதில் போட்டி மனப் பான்மையும், அளவுகடந்த ஆர்வமும் நிலவியது.  மேலும் கிராம மக்கள் கல்வி வளர்ச்சிக்காகத் திருமணம், உபநயனம் போன்ற விழாக்களில் நன்கொடையைத் தாராளமாக முன்வந்து வழங்கினர்.

ஆசிரியர்கள் மாணவருக்கு அறிவையும், கல்வியையும் கற்பித்ததோடு மட்டுமல்லாது மாணவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்வதற்கு வேண்டிய நிதியைக் கிராம மக்களிடம் இருந்தே திரட்டினர்.  சில நேரங்களில் குருகுலத் தலைவரான குரு, அரசர்களை அண்டியும் குரு குலத் தேவைக்கான நிதியைப் பெற்றார். 

மேலும் குருகுலத்தில் எல்லா மாணவர்களுக்கும் வேறு பாடின்றிக் கல்வி கற்பிக்கப்பட்டது.  குருகுலக் கல்வி வாய்மொழிக் கல்வியாகவே இருந்தது.  சில நேரங்களில் மாணவனை அழைத்துத் தனியாகவும் கல்வி கற்பிக்கப்பட்டது.  செவி வழியாகக் கேட்டல், செய்முறைப் பயிற்சி, ஆய்வு - இவை கற்பித்தலின் முறைகளாக விளங்கின. 

சில சுவடிகள் மட்டுமே நடைமுறையில் இருந்தன.  வேதங்கள் எழுதப்படவில்லை.  சுழற்சி முறையில் குருகுலக்கல்வியில் கல்வி கற்பிக்கப்பட்டது.  இக் குருகுலக் கல்வியில் சுவடி முக்கியத்துவம் பெற வில்லை.  இக்கல்வி முறையில் 15 முதல் 20 மாண வர்கள் வரை கல்வி கற்றனர்.  ஒரே நேரத்தில் நிறைய பாடங்கள்கூடக் கற்பிக்கப்பட்டன.  முதலில் கற்பிக்கப்பட்ட பாடங்கள் மாணவர்களுக்கு நன்கு புரிந்துகொண்ட பிறகே அடுத்த பாடங்களைக் குரு மாணவர்கட்குக் கற்பிக்கத் தொடங்குவார். 

வயதில் மூத்த மாணவர்களும் குருகுலத்திற்கு அழைக்கப்பட்டு இளம் மாணவச் சீடர்களுக்குக் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.  குருகுல ஆசிரியர் மூத்த மாணவர்கட்கு முதலில் பாடம் சொல்வார்.  பிறகே மூத்த மாணவர்கள் அதே நாளில் இளைய மாணவர்கட்குப் பாடம் சொல்வர்.  மாணவர்களின் எண்ணிக்கையும், கற்பிக்கப்பட்ட பாடங்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தமையால் இக்கற்பித்தல் முறை சாத்தியமானது.  இம்முறையான கற்பித்தல், கற்றலுக்கு முன்மாதிரியான பயிற்சியாகக் கொள்ளப் பட்டது.

Ruins-of-Nalanda 600சீனப்பயணி யுவான்சுவாங் கி.பி.673 முதல் கி.பி.687 வரை இந்தியாவில் யாத்திரை மேற் கொண்டார்.  நாளந்தாவில் அவர் பத்து ஆண்டுகள் தங்கினார்.  நாளந்தாவைப் பற்றி அறிய யுவான் சுவாங்கின் குறிப்புகளே நமக்குத் துணை நிற் கின்றன.  அவர் நாளந்தாவில் தங்கியிருந்த காலத்தில் புனிதமான புத்த நூல்களின் படிகளை ஆழ்ந்து ஆராய்ந்தார்.  அவர், நாளந்தா பல்கலைக்கழக வளாகம், ‘தர்மகஞ்ச்’ என்று அழைக்கப்பட்ட தாகக் கூறியுள்ளார். 

நாளந்தா பல்கலைக்கழகம் கீழ்க்கண்ட பெயர்களில் மூன்று கட்டடங்களில் இயங்கியதாகக் கூறியுள்ளார். 

1) ரத்னா சாகர்

2) ரத்னா தண்டி

3) ரத்னா ரஞ்சக்

இவற்றுள் ரத்னா தண்டி ஒன்பது மாடிகளைக் கொண்ட தாகவும், பெரிய நூலகத்தைக் கொண்டும் விளங் கியது.  மொத்தமாக எட்டு அரங்குகளையும், முந்நூறு அறைகளைக் கொண்டும் செயல் பட்டது.  உணவுக்கூடம் பொதுவாக இருந்தது.  அருகருகே கிணறுகள் இருந்தன.  அறைகள் ஒருவர் அல்லது இருவர் தங்கும் வசதிகளைக் கொண்டிருந்தன. 

ஒவ்வொரு விடுதி மாணவரும் உறங்குவதற்குச் சபூத்ரா என்ற பெயரில் கல்லா லான படுக்கை வழங்கப்பட்டது.  மாணவர் விடுதி அறை ஒவ்வொன்றிலும் விளக்குகளையும், சுவடி களையும் வைக்கத் தனியே வசதி செய்யப்பட்டு இருந்தது.  நாளந்தா பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெறப் பெரும்கூட்டம் இருந்தது. 

பத்து விண்ணப்பதாரர்களில் மூவர் மட்டுமே சேர்க்கை பெற முடிந்தது.  இருப்பினும் ஒரே நேரத்தில் நாளந்தா பல்கலைக்கழகத்தில் 10,000 மாணவர் களும், 1000 ஆசிரியர்களும் இருந்தனர்.  கி.பி. எட்டு அல்லது ஒன்பது நூற்றாண்டுகள் வரை இப் பல்கலைக்கழகம் தொடர்ந்து செயல்பட்டுள்ளது.  இப்பல்கலைக்கழத்திற்கு நிதி நல்கையாக நிலங்கள், அவற்றின் வருவாய் இருந்தன.  குப்த மன்னர்கள் இருநூறு கிராமங்களை இப்பல்கலைக்கழகத்தின் தொடர் செலவுக்கென ஒதுக்கித் தந்தனர்.  நாளந்தா பல்கலைக்கழகம் புத்தமத நிறுவனம் ஆனபடியால் இதன் தலைவர் பெரும் துறவியாகவும், ஆசிரி யர்கள் புத்த பிக்குகளாகவும் இருந்தனர்.  இதற் கிடையில் சமஸ்கிருதம் கற்பதும் கட்டாயமாக்கப் பட்டு இருந்தது.

பண்டைய இந்தியாவில் இயங்கிய பல்கலைக் கழகங்களில் கல்வி கற்கச் சீனம், திபெத், ஜாவா, சுமத்ரா, கொரியா, ஈரான், கிரீஸ், அரேபியா போன்ற தூரத்து நாடுகளில் இருந்தும் மாண வர்கள் முன்வந்தனர்.  அத்தகைய வெளிநாட்டு மாணவர்கள் பத்து ஆண்டுகட்கும் மேலாகத் தங்கியிருந்து மருத்துவம், வானியல், தர்க்கம் ஆகிய துறைகளில் ஆழ்ந்து கல்வி கற்றனர். 

தூர நாடுகளுக்குப் பிரயாணம் செய்வது என்பது கடினமாக இருந்த அக்காலத்தில், மாணவர்கள் இவ்வாறு நாடி வந்து பண்டைய இந்தியப் பல்கலைக் கழகங்களில் கல்வி கற்க முன் வந்தமைக்கு முதற் காரணம், இப்பல்கலைக் கழகங்களில் வழங்கப் பட்ட கல்வியின் உயர்ந்த தரமும், அங்கு நிலவியே சூழ்நிலையுமே.

அந்நாளைய புகழ்பெற்ற மருத்துவர் ‘ஜீவகர்’ என்பவர் பல பேரரசர்கட்கு மருத்துவம் பார்த்தவர்.  அதற்குக் கட்டணமாக எட்டு இலக்கத்தில் பணம் பெற்றவர்.  அத்தகையவரே தட்சசீலத்தில் இருந்த பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் உயர் கல்வியை எட்டு ஆண்டுகள் தங்கிப் பயின்றுள்ளார் என்பது பல்கலைக்கழகத்தின் சிறப்பைப் பறைசாற்றுவ தாகும். 

மருத்துவர் ‘ஜீவகர்’ தட்சசீலத்தில் தங்கித் தனது படிப்பை முடித்த பின்னரும் திருப்தி யடையாமல் இருந்தார்.  அறுவை சிகிச்சை முறை யிலும், மருந்துகள் பற்றிய துறையிலும் செய் முறைப் பயிற்சி அக்காலத்தில் வலியுறுத்தப் பட்டது.  அத்தகையவர்களே மருத்துவராகப் பணி யாற்ற அனுமதிக்கப்பட்டனர்.  ஸ்டிராபோ என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர் ‘இந்தியர்கள் சிறந்த மருத்துவர்கள் என்றும் பாம்புக்கடிக்குச் சிகிச்சை அளித்துக் குணப்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள்’ என்றும் தனது குறிப்புகளில் தெரிவித்துள்ளார்.

செய்முறைப் பயிற்சி பெறாத மருத்துவர் களுக்கு அறுவை சிகிச்சை முறையில் கைதேர்ந்த அனுபவமிக்க மருத்துவர்களால் செய்முறைப் பயிற்சி அளிக்கப்பட்டது.  சிறந்த அனுபவமிக்க மருத்துவர்களே குடல் சிகிச்சை, கண்புரை சிகிச்சை, மகப்பேறு பார்த்தல், சிறுநீரகச் சிகிச்சை போன்றவற்றைச் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.  நோயாளிகட்கு வலி தெரியாமல் இருக்கக் குறிப் பிட்ட அளவில் மது கொடுக்கப்பட்டது.  மனிதர் கட்கு மட்டுமின்றி மிருகங்களுக்கும் அக்காலத்தில் மருத்துவம் பார்க்கப்பட்டது. 

உலக வரலாற்றி லேயே மாமன்னர் அசோகர் கால்நடை மருத்துவத்திற்கு எனத் தனியே மருந்துகளுடன் கூடிய மருத்துவமனைகளைக் கட்டினார்.  மேலும் அக் காலத்தில் போர்க்களத்தில் காயமுற்ற போர் வீரர்களைக் கொண்டு செல்ல, அவசர சிகிச்சை ஊர்திகள் பயன்பாட்டில் இருந்தன.  ஐரோப்பிய வரலாற்றில் கூட கிரீமியன் போருக்கு முன்னதாக இத்தகைய அவசர சிகிச்சை ஊர்திகள் பயன் பாட்டில் இருந்ததாகத் தெரியவில்லை.  அரேபிய மருத்துவர்கள் தம்மைக் குணப்படுத்தும் நம்பிக் கையை இழந்த நிலையில், பாக்தாத் மன்னர் காலிபா ஹரூண் அல்ரஷீத் புகழ்பெற்ற இந்திய மருத்துவர் மனேகா மற்றும் சில மருத்துவர்களை அழைத்துச் சிகிச்சை பெற்றுள்ளார். 

சிகிச்சை பெற்றுத் தாம் குணமானவுடன், மருத்துவர் மனேகாவைத் தன்னுடன் தங்கவைத்துக் கொண்டு ஆயுர்வேத மருத்துவம் பற்றிய செய்திகளை அரபு மொழியில் மொழியாக்கம் செய்ய வேண்டி யுள்ளார்.  மேலும் இம்மன்னர் இந்தியப் பெண் மருத்துவர்களையும், செவிலியர்களையும் அழைத்து மன்னர் நடத்திவந்த மருத்துவக் கல்லூரிகளுக் கான பாடநூல்களை எழுதுமாறும் கேட்டுக் கொண்டார்.

கிறிஸ்துவ சகாப்தத்தின் தொடக்கத்திலேயே தட்சசீலப் பல்கலைக்கழகம் மருத்துவக் கல்வியை வழங்குவதில் புகழின் உச்சியை அடைந்திருந்தது.  அதுபோன்றே உஜ்ஜய்னியில் இருந்த பல்கலைக் கழகத்தில் கணிதப்பாட வல்லுநர்களும், வானவியல் அறிஞர்களும் தொலைநோக்கி ஒன்றினை அமைத்துப் பெரும்புகழ் பெற்று விளங்கினர். 

தென்னிந்தியாவில் காஞ்சிபுரத்தில் புகழ்வாய்ந்த கல்வி மையம், பல்கலைக்கழகத்தில் விளங்கியது.  நாளந்தாவில் வாழ்நாள் முழுவதும் பிரம்மச் சரியத்தைக் கடைப்பிடிப்பது பெருமளவில் நிலவியது.  மெகஸ்தனிஸ் தனது குறிப்புகளில் நாளந்தாவில் பிராமண மாணவர்கள் சிலர் 48 வயது வரைகூடத் தொடர்ந்து கல்வி கற்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.  அவர்கள் தர்க்கவியல், இலக்கணம், தத்துவம் இவற்றைக் கற்றனர்.  பல்கலைக்கழகங்களில் ஏழை பணக்காரர் பாகு பாடு காட்டப்படவில்லை. 

ஒரே குருவின் கீழ் இளவரசனும், ஏழைக் குடியானவனும் குரு குலத்தில் கல்வி கற்றனர்.  மகாபாரதத்தில் துரோணரும், துருபதனும் குருகுலத்தில் கல்வி கற்றதே இதற்குச் சான்று.  ஒவ்வொரு பல்கலைக் கழக மாணவரும் சமுதாயத்திற்குத் தொண்டு செய்யப் பணிக்கப்பட்டனர். 

இதில் சாதியோ, நிறமோ, பிறப்போ பாகுபாடு காட்டப்படவில்லை.  மருத்துவர், தாம் மருத்துவம் செய்யும்போது தொற்றுநோய் என்றும், தனக்குக் கட்டணம் கிடைக்குமோ, கிடைக்காதோ என்றும் பார்க்கக் கூடாது என்ற நடைமுறை நிலவியது.  பல்கலைக் கழகப் பட்டமளிப்பு உரைகளில், சிறந்த குறிக் கோள்கள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வலியுறுத்தப்பட்டன.  தம் மாணவர்கள் புகழ்பெற வேண்டுமென்று ஆசிரியர்கள் வழிபாடு செய்தனர். இதனால் சென்ற இடமெல்லாம் மாணவர்களும், அவர்களின் ஆசிரியர்களும் நற்பெயரையும் புகழையும் பெறுவது இயல்பானது. 

டஸ்கா என்னும் அறிஞர் கல்விக்கடவுளான கலைமகள் கூறுவதாகக் கூறுவார், ‘என்னைப் பாதுகாத்துக் கொள்க; நான் உங்களின் மிக உயர்ந்த செல்வமாக என்றும் இருப்பேன்.’ பண்டைய இந்தியாவில் கல்வியை யாதொரு அதிகார மையமும் கட்டுப் படுத்தவில்லை.  அரசும் கல்வித்துறையில் தலை யிட்டுக் கட்டுப்படுத்தவில்லை.  ஆசிரியர்கள் தமக்குச் சிறந்தது எனத் தோன்றியவற்றைச் சுதந்திரமாக மாணவர்கட்குக் கற்பித்தனர்.