sadayan-kullam 350சடையன்குளம், தூத்துக்குடி மாவட்டத்தின் வட பகுதியில் சூரங்குடி அருகே உள்ள ஒரு சிற்றூர்.  ஒரு காலத்தில் பறையருக்கு உரிமைப் பட்ட ஊராக இருந்த அது, பிற்காலத்தில் பல ஜாதிகள் நுழைந்து அவர்கள் பறையர் மீது ஆதிக்கம் செலுத்தும் ஊராக மாறிப்போயிற்று.  இது ஒன்றும் தமிழ்நாட்டில் அதிசயமில்லை. 

புதுக்கோட்டை மாவட்டம் அத்தாணி என்னும் ஊர் பற்றி ஆய்வு செய்த போது, இதே செய்தியை என்னால் அறிய முடிந்தது. சாதிப் படிநிலை இறுக்கங்களின் கோரப் பிடியில் சிக்கி மூச்சுத் திணறிக்கொண்டிருந்த அந்த ஊரின் அடித்தளங்களின் மீது திணிக்கப் பட்டிருந்த இறுக்கங்கள் எப்படிப் படிப்படியாகத் தகர்க்கப்பட்டு, அவை விடுதலையை நோக்கி எவ்வாறு மெல்ல மெல்ல நகருகின்றன என்பதே ‘சடையன்குளம்’ நாவலின் செய்தி. 

சாதீய இறுக்கங் களையும், உடைப்புகளையும் எதார்த்தக் கலைக் குரிய நேர்த்தியுடன் நுட்பமாகவும், தெளிவாகவும் எழுதிக் காட்டுகிறார் படைப்பனுபவம் மிக்க எழுத்தாளர் ஸ்ரீதரகணேசன்.

நல்லையா என்னும் பறையர் குல மாப் பிள்ளைக்கும் தொடிச்சி என்னும் பறையர் குலப் பெண்ணுக்கும் பெற்றோரும் உறவினரும் ஏற்பாடு செய்து நடத்திய திருமணத்திலிருந்து நாவல் தொடங்குகிறது.  சாதாரணமாகத் தொடங்க வில்லை அது. 

கொடூரமான வன்முறையிலிருந்து தொடங்குகிறது.  சாதிய இறுக்கத்தில் முதல் விரிசலை ஏற்படுத்திய இந்தக் கொடூரத்துக்கான காரணம் அற்பத்தனமானது.  திருமண வீட்டில் ஒலிபெருக்கி கட்டிப் பாட்டுப் போடுகிறார்கள், அவ்வளவுதான்.

“பறக் கூதிவுள்ளைகளா, ஓங்களுக்கு ரேடி யாவா கேட்கு, ரேடியா? இது இல்லாம இவிய கல்யாணம் நடக்காதோ? இவன்கள இந்தாலவுடக் கூடாது.  தாயளிக தலைக்கு மேல ஏறி மோளு வானுக.”

ஒடுக்குமுறையிலிருந்து விடுதலைக்குரல் எழுப்ப இந்தப் பறையர் ஊர் பயன்படுத்திய சின்னஞ்சிறிய முதல் அடையாள முயற்சி ரேடியா என்னும் ஒலிபெருக்கி.  இதைக் கூடச் சகித்துக் கொள்ள இயலவில்லை ஆதிக்கச் சாதி வெறியர்களால்.  திருமண வீடு அடித்து நொறுக்கப் படுகிறது.

அடித்தளங்கள் வரை ஊடுருவி உறைந்து கிடக்கும் இந்த வர்ணாசிரமக் கொடுமையின் கோரக்குரல் கிட்டத்தட்ட நாவல் முழுமையும் வீரியம் குறையாமல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது.  எழுச்சி பெறும் தலித்துகள் முதுகுகளும் தொடர்ந்து அங்குலம் அங்குலமாக உயர்ந்து கொண்டிருக்கிறது.  இதன் இயக்கவியல் தான் நாவல்.

அடித்தளத்தில் நசுங்குவோர் தங்கள் அடிமை சங்கிலியினுடைய ஒவ்வொரு கண்ணியாக உடைத்து நிமிரத் தொடங்குகிறார்கள்.  ஒவ் வொரு கண்ணியின் உடைவின் போதும் ஒவ் வொரு அங்குலம் முன்னேறி, வன்முறை மூலம் பழைய நிலைக்கு நசுக்க முயன்று, முடியாமல் ஒவ்வொரு அங்குலமாகப் பின் வாங்குகிறது சாதி ஆதிக்கம்.

“இவனுகள இந்தால உடக்கூடாது” என்று எழுப்பப்படும் கோரக்குரலின் வீரியம் மட்டுமே நாவலின் இறுதிவரை குறையவில்லை.  20ம் நூற்றாண்டு முழுக்கத் தமிழகத்தில் நடந்து வந்த இன்றும் அதன் தொடர்ச்சி கிராமங்களை விட்டு மறையாத காட்சித் தொடரையே நாவலாசிரியர் ஸ்ரீதரகணேசன் நுட்பமாக வரைந்து காட்டுகிறார்.

மனச்சாட்சியுள்ள வாசகர்கள் மூச்சுத் திணற லோடு வாசிக்கிறார்கள். தலித்துக்களை அடக்குவோராக முதலில் உத்திரபாண்டித்தேவர் வருகிறார்.  அவருக்கு பின்புலமாக நாட்டாமை ராமசாமி நாயக்கர், பால் பண்ணை சிவன் கோனார், பஞ்சாயத்துத் தலைவர் மூலபடச் செட்டியார், தலையாரி விபிஷனரெட்டி என வரிசை வரிசையாக சாதி அடுக்குகள்

அணிவகுத்து நிற்கின்றன.  இந்திய கிராமத்தின் கட்டமைப்பை இந்தப் பெருமக்களின் காட்சி அடுக்குகளின் வழியே உடைத்துக் காட்டுகிறார் ஸ்ரீதரகணேசன்.

திருமணத்துக்குப் பின்னும் தொடிச்சிக்குப் பிரச்சனை தொடர்கிறது.  குடி தண்ணீருக்கான கிணறு பெரும் பிரச்சனைக்கான ஊற்றுக் கண்ணாகத் திறக்கிறது.

தொடிச்சியின் விலையுயர்ந்த தங்கப் பாம் படங்கள், உயர் சாதியினர் போலச் சுருக்கு வைத்து அவள் சேலை கட்டும் பாணி, அவள் போட்ட ரவிக்கை எல்லாமே ஊரில் பெரும் பிரச்சனையைக் கிளப்பின.  பிற உயர் சாதியினர் போல தொடிச்சியும் வாளியைக் கழுவி குடத்தைக் கழுவி, நேர்த்தி யாகக் கிணற்றில் தண்ணீர் பிடிப்பதைக்கூடப் பொறுத்துக் கொள்ள இயலாமல் ஒரு நாயக்கப் பெண் சொல்லுகிறாள்.

“ஊர் பறச்சிகளுக்கு நல்ல ஏத்தம் ஏறிப் போச்சு.  இல்லாட்டா இந்த நொட்டு நொட்டு வாளுவளா?” பறச்சி சுத்தமாக இருப்பதே உயர் சாதியிடம் இத்தகைய கசப்பை ஏற்படுத்துகிறது.  அவர்கள் அழுக்காக வாழ்ந்து இழிவாக மதிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் உயர் சாதியினர்.

இதனாலேயே மோதல் ஏற்பட்டு, கேஸ் போலீஸ் வரை போகிறது.  பறப்பயல்கள் போலீஸ் போய் விட்டானுகளே என்கிற பொருமல் உயர் சாதிக்காரர்களைக் கொந்தளிக்க வைக்கிறது.  அதன் தொடர் சம்பவங்கள் ஊரைக் கலக்கு கின்றன.  பிளக்கின்றன.

கிணற்றுப் பிரச்சினை தீர பஞ்சாயத்துத் தலைவர் உயர் சாதியினருக்குத் தனிக் கிணறு வெட்டிக் கொடுக்கிறார்.  இனியாவது நிம்மதி யாகத் தண்ணீர் குடிக்கலாம் என நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள் பறையர்கள்.  ஆனால் உயர்சாதி வெறியோ அந்த கிணற்றில் மலத்தை அள்ளிப் போட்டு அசிங்கப்படுத்தி விடுகிறது.  பகை முற்றிப் பறையர்கள் மற்றவர்கள் என்னும் பிளவு மேலும் வலுக்கிறது.  இந்தப் பிளவு விவசாயத்தைப் பாதிக்கும் அளவுக்கு வளர்கிறது.

அரசாங்கத்திடமிருந்து பெற்ற நிலத்தில் உழவு போடக் காளைகள் இல்லாமல் நல்லையாவும் அவன் மனைவியும் தாமே காளைகளாகி நுகத்தில் தங்களைப் பூட்டிக் கொண்டு இழுக்கும் அளவுக்கு போகிறது சாதிச் சிக்கல்.

இந்த நாவலில் ஸ்ரீதரகணேசன், சாதியை தலித்துகள் என்ற விரிந்த தளத்தில் அருமையாக விசாலப்படுத்தியிருக்கிறார் என்பதற்குப் பல காட்சிகள் சாட்சியாகின்றன.  சண்முகம் பகடை வீட்டு விவகாரம் ஒரு பயங்கரமான எடுத்துக்காட்டு.  சண்முகம்பகடையின் மகள் மாடத்தியின் அழகில் மயங்கி அவளைக் கசக்கித் துப்ப சின்னராஜாத் தேவர் இரவில் வந்த போது, பறையர் இளைஞர்களும் பகடை இளைஞர்களும் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் சின்னராஜாத் தேவரை அடித்து நொறுக்கி அவரைக் காலம் முழுவதும் எழுந்து நடக்க முடியாமல் ஆக்கிவிட்ட காட்சியானது இந்த அடித்தள மக்கள் வன்முறையாளர்களே என்றும் உயர்சாதியினர் சொல்லும் வக்கிரம் பிடித்த குற்றச்சாட்டுக்குச் சரியான விடையாக அமைகிறது.  இதன் பிறகு நாவலில் தேவமார் ஆதிக்கம் முடிவடைந்து, அடுத்த சாதி அந்த இடத்தைப் பிடிப்பது சாதி அடுக்குமுறையின் கொடிய வெளிப்பாடு.

பறையர் குல மக்களின் ஒரு பகுதியினர் கத்தோலிக்க மதத்தில் சேர்ந்து சிறு சிறு உதவிகள் பெறுவதும் நாவலில் காட்சிப்படுத்தப்படுகிறது.  பறையர்களின் மதமாற்ற நிகழ்தலின் போது கத்தோலிக்கர்கள் நடந்து கொண்ட விதமும், மத மாற்றம் முடிந்த பிறகு அதே கத்தோலிக்க மதத்தினர் நடந்து கொண்ட விதமும் அருமையாக வேறுபடுத்திக் காட்டப்படுகிறது.

நெருக்கடிக்குள்ளான பறையர்கள் எப்படி யெல்லாமோ முயன்று செங்கல் சூளை அமைக்க, அதை அழிக்கவும் சாதிய பூதங்கள் கிளம்புகின்றன.

இப்படிப் படிப்படியாக அடிதடிகளால் செல்வமும் செல்வாக்கும் இழந்த தேவர்மாரின் மனைவிகள்  தேவமார் ஆண்களை எதிர்த்து நிற்கும் காட்சியும் நாவலில் நுட்பமாகப் பதிவாகி இருப்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம்.

விளாத்திக்குளம் கம்யூனிஸ்ட் கட்சியின் தேவமார்கள் நிலப் பிரச்சனையில் பறையர் களுக்கு ஆதரவாக நிற்பதும் காட்டப்படுகிறது.  கோமதி என்னும் கோனார் வீட்டுப் பெண் ஒரு அருந்ததிய இளைஞருடன் ஒடிப் போகத் தயாராவதும் அதன் தொடர்ச்சியான பிரச்சனை களும் போகிற போக்கில் காட்டப்பட்டாலும் சமூக அசைவுகளின் விரிவான சித்திரத்துக்கு அதுவும் நல்ல சாட்சி.

கடைசியாக பஞ்சாயத்துத் தேர்தல் களத்தில் தலித்துகள் உயர்சாதிச் சதிகளுக்கு எதிராக ஒற்றுமைப்படுவதும், அதன் அடிப்படையில் நிகழும் ஆதிக்கச் சாதிகள் ஒடுக்கப்பட்ட சாதிகள் போராட்டங்களும் அதன் முடிவான கலவரங் களும் காட்டப்படுகின்றன.

இவ்வாறு அடித்தள மக்கள் தங்கள் அடை யாளங்களிலிருந்து விடுதலை முயற்சிகளைத் தொடங்கி, படிப்படியாக அடையாள வேறுபாடு களை மீறி அடித்தளங்களில் மொத்த உரிமைக் காக அணி திரள்வது ‘சடையன்குளம்’ நாவலின் சிறப்புக்குரிய அடையாளமாக அமையும் ஒரு அருமையான அம்சம்.

நாவலின் வெற்றிக்கு ஆசிரியர் கையாண் டிருக்கும் மொழி பெரும் உதவி செய்கிறது.  அவருடைய உரையாடல்கள் வலிமையும் ஆழமும் மிக்கவை.  அவருடைய காட்சிப்படுத்தும் முறையும் சிறப்பானது.

“ஏலேய், சம்முகம்படைக்கு இப்படியொரு கொமரு இருக்கா? மொட்டு மாதிரி எவ்வளவு அழகா இருக்கா!”

இம்மாதிரியான அபூர்வச் சிக்கனமான அழகிய காட்சிப்படுத்தும் வரிகள் நாவலின் பக்கத்துக்கு பக்கம் நிறைந்து கிடக்கின்றன.

ஜமீன்தார் வீட்டின் சிறப்பைச் சுட்டிக்காட்ட “கல்வீட்டுத் தார்சாவுல், தச்சன் நுணிக்கிச் செஞ்ச தேக்கு நாற்காலியில ஜமீன் உட்கார்ந்திருந்தார்” என்று மிகச் சுருக்கமாகச் சொல்கிறார்.

ஒரு ஜமீன்தார் மாளிகையின் கலை மேன் மையை இப்படி இரண்டு வரிகளில் வரைந்து காட்டுவது ஆசிரியரின் சித்திரிப்புத் தேர்ச்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

ஏராளமான பாத்திரங்கள் நாவலில் அறிமுக மாகின.  ஒவ்வொரு பாத்திரமும் தனித்துவமான வடிவமும் தனித்துவமான பண்பும் கொண்டதாக அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இவை அனைத்தும் சம்பவங்களின் இறுக்க மான அடுக்குமுறையால் வாசகரைக் கவர்ந்து கடைசிவரை விடாமல் கவ்விப் பிடிக்கின்றது.

இந்த நாவலை வாசிக்கும் போது குறையாக ஒன்றிரண்டைக் குறிப்பிடத் தோன்றுகிறது.  முக்கியமாக, நாவலின் காலத்தை ஏதாவது ஒரு வகையில் வாசகர் உணரும்படி ஆசிரியர் செய் திருக்க வேண்டியது அவசியம்.  நேரடியாகச் சொல்ல வேண்டியதில்லை.  ஜோ டி குரூசைப் போல ஆங்காங்கே சில சம்பவங்களை அடை யாளப்படுத்தினால் போதும்.  வாசகர் புரிந்து கொள்ள முடியும்.  இம்மாதிரியான காலக் குறிப்பு களை நாவல் வாசிப்பின் போது என்னால் கண்டு கொள்ள இயலவில்லை.  காலத்தில் பொருந்தும் போதுதான் நாவலின் காட்சிகளும் செய்திகளும் விரிவான முறையில் ஒளிபெற முடியும்.

இந்த நாவலை எதார்த்தப் பாணியில் எழுதப் பட்ட அருமையான தலித் நாவல் எனச் சொல்லத் தோன்றுகிறது.  ஸ்ரீதரகணேசன் தொடர்ந்து பயன் படுத்தி வரும் இந்தப் பாணி, இந்த நாவலில் எப் போதையும் விட மெருகேறி இருக்கிறது.

சடையன் குளம் (நாவல்)

ஆசிரியர்: ஸ்ரீதரகணேசன்

வெளியீடு:

கருப்புப் பிரதிகள்

பி.55, பப்புமஸ்தான் தர்கா வாயிட்ஸ் சாலை,

திருவல்லிக்கேணி, சென்னை - 600 005