தகவல் பரிமாற்றக் கருவியான  மொழியானது மனிதனைச் சமூகத்துடன் இணைக்கும் நுட்பமாக வினையாற்றுகிறது. மொழி என்பது முன்னர் நடைபெற்ற சம்பவங்களின் விளைவாக நினைவுகளாக விரிவதன்மூலம் சமூகத்தின் தொடர்ச்சியைச் சாத்தியப்படுத்துகிறது. ஒரு சமூகத்தின் அனைத்து விதமான செயற்பாடுகளும் மொழி வழியாகப் புலன்களுக்குள் ஊடுருவுகின்றன. மொழி என்பது தனிப்பட்ட உடலுக்குள் நினைவாகவும், இரு உடல்களுக்கிடையில் எதிரெதிர் செயலாகவும் உள்ளது. இந்நிலையில் மொழி எப்படி பொருள் கொள்ளப் படுகிறது என்பது முக்கியமான பிரச்சினை. ஒரு கவிதை வாசிப்பினில் வரையறுக்கப்பட்ட ஒற்றை அர்த்தம் தருவதில்லை. ஒவ்வொரு மனித உடலும் அனுபவங்கள்மூலம் தனக்கென்று  தனித்த மொழி அமைப்பைக் கொண்டிருப்பதே ஒரு கவிதைக்கு வேறுபட்ட அர்த்தங்கள் கற்பிக்கப்படுகின்றன. இத்தகைய மொழி அமைப்பைப் பொது அறிதலுக்குள் கொண்டுவர இலக்கண நூல்கள் பெரிதும் முயலுகின்றன.

பண்டைத் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் மொழியைத் தரப்படுத்தவும், வெளியே இருந்து வருகிறவருக்கு மொழியின் நுட்பங்களை அறிமுகப்படுத்தவும் முயலுகிறது. அதேவேளையில் ஒரு குறிப்பிட்ட பாடலைப் பொருள் கொள்வதற்கான முறையியலை உருவாக்கவும், அதனைப் பிற குழுக்களிடையே பகிர்ந்து கொள்வதற்கான வெளியை உருவாக்கிடவும் பொருளதிகாரம் பயன்பட்டுள்ளது. திணைசார் கோட்பாட்டு  வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தந்துள்ள பொருளதிகாரத்தில் செய்யுளியல்  இடம் பெற்றது ஆய்விற்குரியது. தொல்காப்பியரின் கவிதையியல் சார்ந்த விமர்சன அணுகுமுறை செய்யுளியலில் பதிவாகியுள்ளது என வரையறுக்கலாம். பண்டைக்காலத்தில் செய்யுள்கள் வழியாகவே தங்கள் கருத்தைப் புலவர்கள் பதிவு செய்தனர். எனவே செய்யுளுக்குரிய இலக்கணத்தைத் தொல்காப்பியர் தொகுத்து உரைத்துள்ளார். அவருடைய இலக்கண வரையறை செய்யுள் பற்றிய தொழில்நுட்பத்தை விளக்க முயலுகிறது.

செய்யுள் என்றும் வழக்கும் என்றும் தொல்காப்பியரால் குறிக்கப்பட்டவை எல்லாம் பேச்சு மொழியும் ஆய்விற்குட்படுத்தப்பட்டதையே குறிக்கிறது. இவ்விரண்டிலும் சுட்டப்பெறும் வேறுபாடுகள் நடையியல் பற்றிய ஆய்விற்கு அடித்தளமாக விளங்குகின்றன. தமிழ் மரபின் நடையியல் பற்றிய கருத்தியல்கள், தொல்காப்பியரின் செய்யுளியலில் இருந்து தொடங்குவதாக ஜெ.நீதிவாணன் குறிப்பிடுவது கவனத்திற்குரியது. செய்யுளுக்கும் வழக்குக்கும் இடையிலான வேறுபாடுகளுக்குக் காரணம் உருவம் - உள்ளடக்கம் ஆகிய இரண்டிற்குமிடையிலான உறவுதான்.

நடையியல் போக்குகள்

படைப்பின் சிறப்பினை அடையாளப்படுத்தவும் படைப்பாளியின் தனித்துவத்தைக் கண்டறியவும் நடை பெரிதும் பயன்படுகிறது. ஒவ்வொரு படைப்பாளிக்கும் சூழல் சார்ந்தும், சொற்களஞ்சியம் சார்ந்தும் தனிப்பட்ட நடை உருவாகிறது. ஒரே ஊரில் வாசிக்கின்ற ஒத்த கருத்துடைய இரு படைப்பாளர்களின் எழுத்து நடைகளும் வேறுபடுகின்றன. நடைக்கேற்றவாறு படைப்புகளும் மாறுபடுகின்றன. ஒரு படைப்பின் அழகு என்பது பெரிதும் நடை சார்ந்துள்ளது. படைப்பாளியின் மொழிப் பயன்பாடுதான் வாசகரைக் கவர்வதாக உள்ளது. படைப்பாளியை அடையாளங்கண்டு படைப்பினை ரசிப்பதற்கு மொழிநடை பயன்படுகிறது.  மொழியினால் உருவாக்கப்படும் கருத்துக்கும் நடைக்குமான நெருங்கிய உறவு எப்படி ஏற்படுகிறது என்பது ஆய்விற்குரியது.

இலக்கியப் படைப்புக் குறித்த திறனாய்வு ஒருபுறம் எனில், படைப்பு வெளிப்படும் மொழி சார்ந்த விமர்சனம் இன்னொருபுறம் நடைபெறுகின்றன. இவ்விரு விமர்சனப் போக்குகளையும் ஒருங்கிணைத்துச் செய்யப்படும் செயல் நடையியலுக்கு அடிப்படையாக உள்ளது. இலக்கியத் திறனாய்வும் மொழியியலும் ஒன்றையன்று எதிர்கொண்டபோது உருவான புதிய துறை நடையியல், மொழியியல் அணுகுமுறையில் உருவமும் திறனாய்வு அணுகுமுறையில் உள்ளடக்கமும் முதன்மையிடம் பெறுகின்றன. நடையியல் சார்ந்த ஆய்வுகள் ஒருவகையில் அறிவியல் போக்கினை முதன்மைப்படுத்துகின்றன.

தமிழ் மரபில் நடையியல்

தொல்காப்பியரின் நடையியல் கருத்துகள் செய்யுளியல் இயலில் வெளிப்பட்டுள்ளது.   பொருளதிகாரத்தில் இடம் பெற்றுள்ள செய்யுளியல் இயலின் முதல் நூற்பா நடையியல் கோட்பாட்டினை விளக்குவதாக ஜெ.நீதிவாணன் குறிப்பிடுகிறார். கருத்துகள் எவ்வாறு வடிவத்துடன் ஒருங்கிணைந்து பொருளைப் புலப்படுத்துகின்றன என்பதைச் செய்யுளை அடிப்படையாகக்கொண்டு  செய்யுளியல் விளக்குகிறது.

செய்யுளியலின் முதல் நூற்பாவில் செய்யுளுக்கு உரிய முப்பத்து நான்கு  உறுப்புகள் குறிப்பிடப் பட்டுள்ளன. அவை செய்யுளின் மொழி சார்ந்த கட்டமைப்பை விளக்க முயலுகின்றன. அவற்றுள் `ஆறுதலை யிட்ட அந்நாலைந்தும்` என அவர் குறிப்பிடும்  முன்னைய இருபத்தாறும் தனிநிலைச் செய்யுளுக்கே உரியன என்றும் பின்னைய எட்டும் தொடர்நிலைச் செய்யுளுக்கு உரியன என்றும் நச்சினார்க்கினியர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள இருபத்தாறு  உறுப்புகளும் செய்யுளின் வடிவம், உள்ளடக்கம் உருவாக்குவதற்கு அடிப்படையானவையாக உள்ளன. ஒரு குறிப்பிட்ட பொருளை எவ்வாறெல்லாம் பல்வேறு வடிவங்களில் விளக்க முடியுமென்பதை ஒவ்வொரு உறுப்பின் விளக்கங்களும் சுட்டுகின்றன. கவிஞரின் கற்பனைத் திறனுக்கேற்ப வடிவ உறுப்புகள் நெகிழ்ச்சியாக இருப்பது படைப்பினுக்கு வளம் சேர்க்கின்றன.

வண்ணம்

வாய்மொழி மரபு செல்வாக்குடன் விளங்கிய காலகட்டத்தில் பாடல்கள் இசையுடன் பாடப் பெற்றன. பாணர் மரபில் பாணர்கள் யாழினை மீட்டிப் பாடல்கள் பாடிய நிகழ்வுகள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. ஓலைச் சுவடிகளில் பாடல்கள் எழுதப்பெற்ற பின்னரும் செய்யுள்களை ஓசையுடன் பாடும் மரபு தொடர்ந்தது. புதிதாகச் செய்யுள் எழுதும்போது புலவரின் மனதில் தோன்றும் சந்தம் அல்லது ஓசை படைப்பாக்கத்தினுக்கு உதவியது. அகவல் பா இன்ன ஓசையுடன்தான் பாடப்பெற வேண்டும் என்ற விதி பாடலை மனனம் செய்வதற்கு அடிப்படையாக விளங்கியது. செய்யுளை ஓசையுடன் பாடும் மரபு அழிந்துவிட்ட இன்றைய சூழலில் தொல்காப்பியர் குறிப்பிடும் பல கலைச்சொற்களின் பொருள்களை முழுமையாக அறிய இயலவில்லை. செய்யுள் உறுப்பாகத் தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணம் ஓசையுடன் தொடர்புடையது. எனினும் வண்ணம் என்ற சொல்லுக்கான நேர்பொருளை வரையறுப்பது சிரமமானது.

`வண்ணந் தானே நாலைந் தென்ப’ எனச் செய்யுளியலில் குறிப்பிடும் தொல்காப்பியர், வண்ணம் என்றால் என்னவென விளக்கவில்லை. அவருடைய காலத்தில் வண்ணம் என்ற சொல் எல்லோராலும் எளிதில் விளங்கிக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். பிற்காலத்திய உரையாசிரியர்கள் வண்ணம் என்ற சொல்லுக்கு விளக்கம் அளித்துள்ளனர். பேராசிரியர் `சந்த வேறுபாடு` என்றும், நச்சினார்க்கினியர் `பாவின் கண்ணே நிகழும் ஓசை விகற்பம்` என்றும் விளக்கி யுள்ளனர். வண்ணங்களின் வகைகளை ஆராயும்போது எல்லா இடங்களிலும் வெவ்வேறு அளவுகோள்களைக் கொண்டவை என அறிய முடிகிறது.

தொல்காப்பியர் சுட்டும் வண்ணங்கள்

தொல்காப்பியர் வகைப்படுத்தும் வண்ணங்கள் பின்வருமாறு:

பாஅ வண்ணம் தாஅ வண்ணம்

வல்லிசை வண்ணம் மெல்லிசை வண்ணம்

இயைபு வண்ணம் அளபெடை வண்ணம்

நெடுஞ்சீர் வண்ணம் குறுஞ்சீர் வண்ணம்

சித்திர வண்ணம் நலிபு வண்ணம்

அகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ணம்

ஒழுகு வண்ணம் ஒரூஉ வண்ணம்

எண்ணு வண்ணம் அகைப்பு வண்ணம்

தூங்கல் வண்ணம் ஏந்தல் வண்ணம்

உருட்டு வண்ணம் முடுகு வண்ணமென்று

ஆங்கென மொழிப அறிந்திசி னோரே

(தொல்காப்பியம், செய்யுளியல். 205)

இருபது வகையான வண்ணங்களை வேறுபடுத்தும் தொல்காப்பியருடைய செயலின்மூலம் அவருடைய காலத்தில் வண்ணம் பற்றியும் செய்யுள் பற்றியும்

பெரிய அளவில் பேச்சுகள் நிலவின என அறிய முடிகிறது. ஒவ்வொரு வண்ணத்திற்கும் விளக்க மளித்ததுடன் எடுத்துக்காட்டுப் பாடல்களையும் உரையாசிரியர்கள் தந்துள்ளனர். அவை வண்ணம் பற்றிய புரிதலுக்கு வழிகாட்டிகளாக உள்ளன. `கவிதையின் நடையியல்பு அல்லது சொல் நிலை அழகு குறித்த சிந்தனைகளை வண்ணங்கள் விவரிக்கின்றன `என்கிறார் தமிழவன்.  `வண்ணம் எழுத்துகளின் அடிப்படையில் அதாவது வர்ணம் அடிப்படையில் இப்பெயர் பெற்றிருக்க வேண்டும்` எனச் சுந்தரமூர்த்தி குறிப்பிடுகிறார். மேலும்  `ஓரெழுத்தின் பயிற்சி மிகுதி, ஒரு குறிப்பிட்ட ஓசையின் பெருக்கம், ஒரு தொடர்புடையதாக இருக்கலாம்` சொல், எண், சீர், அல்லது தொடை பயின்று வரல். ஒரு பொருண்மையின் முடிவு, முடியாமை என்பன வண்ணத்திற்கு அடிப்படையாயின் என்று கூறுவதால் நடையியலில் அமையும் திட்டப்பாங்குகள் என்னும் கருத்தும் இதனோடு என்ற சுந்தரமூர்த்தியின் விளக்கம்,

வண்ணம் என்பது நடையியலில் அமையும் என்று குறிக்கிறது.

பாஅ வண்ணம்

பாஅ வண்ணம்

   சொற்சீர்த் தாகி நூற்பாற் பயிலும்

(தொல்காப்பியம்,செய்யுளியல்.206)            

சொற் சீரடிகளை உடையதாகி இலக்கண நூலில் பா வண்ணம்  பயின்று வரும்.

எ-கா: அ இ உ அம்மூன்றுஞ் சுட்டு

தாஅ வண்ணம்

தாஅ வண்ணம்

இடையிட்டு வந்த எதுகைத் தாகும்

(தொல்காப்பியம்,செய்யுளியல்.207)

தா வண்ணம் என்பது எதுகை இடையிட்டு அமையத் தொடுக்கப்படுவதாகும்.

எ-கா : உள்ளார் கொல்லோ தோழி  முள்ளுடை

(ஐங்குறுநூறு ப:456)

இன்னும் அதைப் பற்றியும் இதைப் பற்றியும்

பேசிக் கொண்டு நின்றோம்

(என்பதாய் இருக்கிறது,ப.76)

வல்லிசை வண்ணம்

வல்லெழுத்து மிக்குப் பயின்று வருவது வல்லிசை வண்ணம் ஆகும்.

வல்லிசை வண்ணம் வல்லெழுத்து மிகுமே                     

(தொல்காப்பியம்,செய்யுளியல்.208)

எ -கா: முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்

 (பட்டினப்பாலை : 218)

கற்க கசடறக் கற்பவை கற்றபின      

நிற்க அதற்குத் தக

(திருக்குறள்:391)

மெல்லிசை வண்ணம்

மெல்லிசை மிகுந்து வருவது மெல்லிசை வண்ணம் ஆகும்.

மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே

(தொல்காப்பியம்,செய்யுளியல்.209)

எ -கா:

பஞ்சியளிர் விஞ்சுகுளிர் பல்லவ மனுங்கச்               

செஞ்செவிய கஞ்சணிகர் சீறடி யளாகி

அஞ்சொலிள மஞ்ஞையென யன்னமென வந்தாள்

வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்

(கம்பராமாயணம், ஆரணியகாண்டம், சூர்ப்பனகைப்படலம் : 24)

நன்னுதல் ஞெகிழவுந் திருநுதல் பசப்பவும்

 (ஐங்குறுநூறு:230)

இயைபு வண்ணம்

இடையெழுத்து மிகுந்து வருவது இயைபு வண்ணம் ஆகும்.

இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே

(தொல்காப்பியம், செய்யுளியல்.210)

எ - கா:             வழியினில் இருளில்

ஒளியினுக் கேங்கும்

 (சுட்டு விரல் ,ப.124)

அளபெடை வண்ணம்

அளபெடை பயின்று வருதலால் அளபெடை வண்ணம் எனப்பட்டது.

அளபெடை வண்ணம் அளபெடை பயிலும்

(தொல்காப்பியம், செய்யுளியல்.211)

எ -கா: மராஅ மலரொடு விராஅய்ப் பராஅம்

(அகநானூறு:99)

சட்டையுடன் பார்த்தால்

என்னடா என்பார்கள்

(இவர்கள் வாழ்ந்தது, ப.18)

நெடுஞ்சீர் வண்ணம்

நெட்டெழுத்துப் பயின்று வருதல் நெடுஞ்சீர் வண்ணம் எனப்படும்

நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும்

(தொல்காப்பியம், செய்யுளியல். 212)

எ-கா: மாவா ராதே மாவா ராதே

(புறநானூறு.273)

மானாட மழுவாட

மயிலாட மயிராட (ஒரு முக்கிய அறிவிப்பு, ப.78 )

குறுஞ்சீர் வண்ணம்

குற்றெழுத்து மிகுந்து வருதல் குறுஞ்சீர் வண்ணம் ஆகும்.

குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும்

  (தொல்காப்பியம்,செய்யுளியல். 213)

எ.கா: குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி                 

(அக்நானூறு: 4)

சித்திர வண்ணம்

நெட்டெழுத்தும் குற்றெழுத்தும் ஒப்ப விரவி வருவது சித்திர வண்ணம் ஆகும். பல வண்ணங்கள் கலந்துவரும் தன்மையுடையது.

நெடியவுங் குறியவும் நேர்ந்துடன் வருமே

 (தொல்காப்பியம்,செய்யுளியல்.214)

எ-கா:  ஓரூர் வாழினுஞ் சேரி வாரார்

 சேரி வரினும் ஆர முயங்கார்

(குறுந்தொகை:231)

நலிபு வண்ணம்

நலிபு வண்ணத்தில் ஆய்தம் பயின்று வரும். ஆய்தம் நலிந்து கூறும் ஓசையாதலால் ஆய்தம் இடம் பெற்ற செய்யுள் நலிபு வண்ணத்திற்குச் சான்றானது.

நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும்

(தொல்காப்பியம்,செய்யுளியல்.215)

எ - கா:

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை

வேண்டும் பிறன்கைப் பொருள்  (திருக்குறள்:178)

அகப்பாட்டு வண்ணம்

அகப்பாட்டு வண்ணம் என்பது பாட்டின் முடிபினை விளக்க வரும் ஈற்றசை ஏகாரத்தால் முடியாது, இடையடிகள் போன்று முடியாத தன்மையினால் முடிந்து நிற்பதாகும்.

அகப்பாட்டு வண்ணம் முடியாத்தன்மையின்

முடிந்ததன் மேற்றே

(தொல்காப்பியம்,செய்யுளியல்.216)

எ-கா: உண்கண் சிவப்ப தெவன்கொ லன்னாய்

(ஐங்குறுநுறு:21)

சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ         

(அகநானூறு. 46)

புத்தனுக்காகப்

பொன்னிழல் விரிக்கும்

போதிகள் ஒரு பக்கம்

சித்தன் ஏசுவின்

செம்புனல் குடிக்கும்

சிலுவைகள் ஒருபுறம்  (சுட்டு விரல்.ப.125)

புறப்பாட்டு வண்ணம்

புறப்பாட்டு வண்ணம் முடிந்தது போன்று முடியாதாகி வரும். அதாவது பாட்டின்

முடிபினை உணர்த்தும் இறுதியடி புறத்தே நிற்கவும் அதற்கு முன் உள்ள இடையடி முடிந்தது போன்று  நிற்பதாகும்.

புறப்பாட்டு வண்ணம் முடிந்தது போன்று முடியா தாகும்

(தொல்காப்பியம்,செய்யுளியல்.217)

எ-கா: இன்னா வைகல் வாரா முன்னே

 செய்ந்நீ முன்னிய வினையே

முந்நீர் வரைப்பக முழுதுடன் றுறந்தே

(புறநானூறு: 363)

எல்லா நாய்களுக்கும்

வாலாட்டத் தெரியும்

எல்லா நாய்களுக்கும்

குரைக்கவும் தெரியும்          (கூக்குரல்.ப.27)

இக்கவிதையில் முதலிரு அடிகள் முடிந்தது போன்று உள்ளன.

ஆனால் அடுத்த இரு அடிகளில் கவிதை மீண்டும் தொடர்கின்றது.

ஒழுகு வண்ணம்

ஓசையால் ஒழுகிக்கிடப்பது ஒழுகு வண்ணம் ஆகும்.

ஒழுகு வண்ணம் ஓசையி னொழுகும்

(தொல்காப்பியம்,செய்யுளியல்.218)

எ-கா:  யாதும் ஊரே யாவரும் கேளிர்

 தீதும் நன்றும் பிறர் தர வாரா    

(புறநானூறு)

ஒரூஉ வண்ணம்

நீங்கின தொடையாகி அமைந்தது ஒரூஉ வண்ணம் ஆகும் ஆற்றொழுக்குப் போலச் சொல்லிய பொருள் பிறிதொன்றனை அவாவாமை அறுத்துச் செய்வது ஒரூஉ வண்ணம் எனப் பேராசிரியர் விளக்கம் தந்துள்ளார்.

ஒரூஉ வண்ணம் ஒரூஉத்தொடை தொடுக்கும்

(தொல்காப்பியம்,செய்யுளியல்.219)

எ -கா: சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே

 பெரியகட் பெறினே

(புறநானூறு.235)

யானே யீண்டை யேனே யென்னலனே

யானா நோயடு கான லஃதே 

துறைவன் றம்மூ ரானே

மறையல ராகி மன்றத் தஃதே (புறநானூறு.235)

எண்ணு வண்ணம்

எண்ணுப் பயின்று வருவது எண்ணு வண்ணமாகும். எண்ணுதற் பொருளில் வரும் ஓசைத்திறமாகும் என உரையாசிரியர் விளக்குகின்றனர். எண் என்னும் ணகர வீற்றுப் பெயர், உகரச் சாரியை பெற்று எண்ணு என வழங்கப்பெற்றது.

எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும்

(தொல்காப்பியம்,செய்யுளியல்.220)

எ-கா: நுதலுந் தோளும் திதலை அல்குலும்

(அகநானூறு:119)

நிலம்நீர் வளிவிசும் பென்ற நான்கின்

அளப்பரியையே

நாள்கோள் திங்கள் ஞாயிறு கனையழல்

ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை

(பதிற்றுப்பத்து.14)

அகைப்பு எண்ணம்

அகைப்பு வண்ணமாவது விட்டுவிட்டுச் சொல்லும் ஓசையுடையது. ஒரு வழி நெடில் பயின்றும் ஒரு வழிக் குறில் பயின்றும் வரும்.

அகைப்பு வண்ணம் அறுத்தறுத் தொழுகும்

(தொல்காப்பியம்,செய்யுளியல்.221)

எ.கா.  வாரா ராயினும் வரினு மவர்நமக்

 கியாரா கியரோ தோழி

(குறுந்தொகை.110)

நரசிம்மர் இலை மேல் கொஞ்சம்

வராகர் மேல் கொஞ்சம்

இராமர் மேல் வாமனன் மேல்

வெண்புறா பறந்திறங்கி.                                                               

 (மீண்டும் அவர்கள்.ப.110)

தூங்கல் வண்ணம்

தூங்கல் வண்ணம் தூங்கலோசைத்தாகி வரும். இதில் வஞ்சிப்பாவிற்குரிய வஞ்சியுரிச்சீர் பயின்று வரும்.

தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும்

(தொல்காப்பியம்,செய்யுளியல்.222)

எ -கா : வசையில்புகழ் வயங்குவெண்மீன்

திசைதிரிந்து தெற்கேகினும்

(பட்டினப்பாலை.1)

ஏந்தல் வண்ணம்

ஏந்தல் வண்ணமாவது சொல்லிய சொல்லின் சொல்லினாலே சொல்லப்படும் பொருள் சிறப்பதாகும். ஏந்தல் என்பது மிகுதல் எனப் பொருள்படும். ஒரு சொல்லே அடுத்தடுத்து மிகுந்து அடுக்கி வருதலின் ஏந்தல் என்னும் பெயர் பெற்றது.

ஏந்தல் வண்ணம் சொல்லிய சொல்லிற்

சொல்லியது சிறக்கும்

(தொல்காப்பியம், செய்யுளியல்.223)

எ-கா: நன்றி மறப்பது நன்றுஅன்று நன்றுஅல்லது

 அன்றே மறப்பது நன்று    (திருக்குறள்.108)

உருட்டு வண்ணம்

உருட்டிச் சொல்லப்படுவது அராகமாகலின் அராகத் தொடுப்பது உருட்டு வண்ணமாகுமென விளக்கியுள்ளார் பேராசிரியர். நெகிழாது உருண்ட ஓசையாகலின் அது உருட்டு வண்ணம் எனப்

பட்டது.

உருட்டு வண்ணம் அராகந் தொடுக்கும்

(தொல்காப்பியம்,செய்யுளியல்.224)

எ -கா : உருமுரறு கருவிய பெருமழை தலைஇய

(அகநானூறு.158)

முடுகு வண்ணம்

நாற்சீரடியின்மிக்கு ஓடி உருட்டு வண்ணத்தை யத்து அராகந் தொடுத்து வருவது முடுகு வண்ணம் எனப்படும்.

முடுகு வண்ண முடிவறி யாமல்

அடியிறந் தொழுகி அதனோர் அற்றே

(தொல்காப்பியம், செய்யுளியல்.225)

எ-கா; நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇ

செய்யுள் இயற்றும் புலவர்கள் பின்பற்றிய நடையியல் நெறிமுறைகள் குறித்த தொல்காப்பியரின் விளக்கங்கள், ஒருநிலையில் செய்யுளைப் புரிந்து கொள்ளவும் பயன்படுகின்றன. அவருடைய காலத்தில் வழக்கில் இருந்த வண்ணங்கள் பற்றி இன்னும் ஆராய வேண்டியுள்ளது. கலைச்சொல் அளவில் புரிதல் ஏற்படும்போதுதான் நடையியல் குறித்துத் தெளிவான பார்வை ஏற்படும். எனினும் பண்டைத்தமிழரின் நடையியல் பற்றிய சிந்தனைப் போக்கினுக்குச் சான்றாக வண்ணங்கள் விளங்குகின்றன.

உதவிய நூல்கள்

  1. வெள்ளைவாரணன்,க(உ-ஆ).தொல்காப்பியம்: செய்யுளியல் உரைவளம். மதுரை:ம.கா.பல்கலைக்கழகப் பதிப்புத்துறை,1989.
  2. நீதிவாணன்,ஜெ.நடையியல்,மதுரை: தெ.பொ.மீ.அறக்கட்டளை, 2001.
  3. பூந்துறயான். தொல்காப்பிய நோக்கில் புதுக்கவிதை. கள்ளிப்பட்டி: தமிழியல் ஆய்வு அறக்கட்டளை, 2000.
  4. சுந்தரமூர்த்தி,கு. வண்ணத்தியல்பு
  5. இன்குலாப்.கூக்குரல்.சிவகங்கை: அன்னம்,1994.
  6. அப்துல் ரகுமான்.சுட்டுவிரல்.சிவகங்கை: அன்னம்,1992.
  7. புவியரசு. ஒரு முக்கிய அறிவிப்பு. கோவை : விஜயா பதிப்பகம்,1988.
  8. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம். என்பதாய் இருக்கிறது. சென்னை: சிந்து பதிப்பகம்,1994.
  9. பழமலய். இவர்கள் வாழ்ந்தது. சென்னை : தாமரைச்செல்வி பதிப்பகம்,1994.
  10. பத்துப்பாட்டு
  11. குறுந்தொகை
  12. அகநானூறு
  13. புறநானூறு
  14. ஐங்குறுநூறு
  15. பதிற்றுப்பத்து
  16. திருக்குறள்
  17. கம்பராமாயணம்