சரியாக நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு உலகப் பாட்டாளி வர்க்கம் முக்கியமான வரலாற்று நிகழ்வொன்றைக் கண்டது. 1864ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் நாளன்று மத்திய இலண்டனிலுள்ள புனித மார்ட்டின் மண்டபத்தில் தொழிலாளர்கள் நடத்திய கூட்டத்தில்தான், ‘முதல் அகிலம்' (First International) எனப் பரவலாக அறியப்படும் ‘அனைத்துலகத் தொழிலாளர் சங்கம்' (International Working Men's Association) நிறுவப்பட்டது. அங்கு மேடையில் அமர்ந்திருந்தவர்களிலொருவர் கார்ல் மார்க்ஸ். ஆனால் அவர் உரை எதனையும் நிகழ்த்தவில்லை. 1848ஆம் ஆண்டில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட புரட்சி சந்தித்த தோல்விகளால் பின்னடைவுகளை அனுபவித்துக் கொண்டிருந்த அய்ரோப்பியப் பாட்டாளி வர்க்கம் தன்னை மீண்டும் ஒழுங்கமைத்துக் கொண்டு, தன்னம்பிக்கையை மீட்டெடுத்துக் கொண்டு வருவதை மார்க்ஸ் உன்னிப்பாகக் கவனித்து வந்தார். சிதறுண்டு கிடந்த ஜெர்மானியப் பகுதிகளை ஒன்று சேர்த்து ஒன்றுபட்ட ஜெர்மனியை உருவாக்கவும் ஜெர்மானிய நிலப்பிரபுத்துவ சக்திகளை முறியடித்து பூர்ஷ்வா ஜனநாயகக் குடியரசை உருவாக்கவும் நடந்த புரட்சியில் மார்க்ஸும் எங்கெல்ஸும் கம்யூனிஸ்ட் கழக உறுப்பினர்கள் சிலருடன் நேரடியாகப் பங்கேற்றனர். அந்தப் புரட்சியில் நேரடியாகப் பங்கேற்றதில் கிடைத்த அனுபவம்தான் விவசாயி வர்க்கம், குட்டிபூர்ஷ்வா வர்க்கம் ஆகியவற்றுடன் பாட்டாளி வர்க்கம், பரந்துபட்ட நேச அணியை உருவாக்கி, பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியைத் தனது தலைமையின் கீழ் நடத்தி முடித்த கையோடு பாட்டாளிவர்க்கப் புரட்சியையும் நடத்த வேண்டும் (இதை அவரும் எங்கெல்ஸும் ‘இடைவிடாப் புரட்சி [permanent revolution] என்று வரையறுத்தனர்) என்னும் முடிவுக்கு வந்த மார்க்ஸ், ‘ஜெர்மானியப் புரட்சி தற்போது முடிவுக்கு வந்து விட்டது' என்பதை உணர்ந்து இலண்டனுக்குத் திரும்பி வந்து, பொருளாதார, அரசியல், தத்துவ ஆய்வுப் பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டு வந்தார். அவரும் எங்கெல்ஸும் எழுதிய ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை'யை வெளியிட்டதும், கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த பல்வேறு ‘கம்யூனிஸ்டுகளை' உள்ளடக்கியிருந்ததுமான ‘கம்யூனிஸ்ட் கழக'மும் உடைந்து போயிருந்தது. ‘மூலதனம்' நூலை எழுதுவதற்காக அவர் பிரிட்டிஷ் அருங்காட்சியக நூலகத்தில், பல்வேறு ஆவணங்களையும் நூல்களையும் படிப்பதில் நேரத்தைச் செலவிட்டு வந்த அதேவேளை, உலக நிகழ்வுகளையும் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டங்களையும் கூர்மையாகக் கவனித்து வந்தார்.

marx‘பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை, அதனுடையை சொந்தச் செயல்பாடாகவே இருக்க வேண்டும்' என்னும் கருத்தை எங்கெல்ஸுடன் எப்போதும் பகிர்ந்து கொண்டிருந்த மார்க்ஸ், பாட்டாளி வர்க்கப் போராட்டங் களிலிருந்து கற்றுக் கொள்ளும் அடக்க உணர்வை ஒருபோதும் கைவிட்டதில்லை. அவரும் எங்கெல்ஸும் முன்பு கொண்டிருந்த புரிதலுக்கு மாறாக, 1860 களிலிருந்து ஜெர்மானியப் பாட்டாளி வர்க்கம் அல்ல, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கங்கள்தாம் சோசலிசத்திற்கான புதிய வாய்ப்புகளை, புதிய பாதைகளை உருவாக்கிக் கொண்டிருப்பதை அவர் கவனித்து வந்தார். இங்கி லாந்தில் பாட்டாளி வர்க்கம் ஒருபுறம் தொழிற்சங்க இயக்கத்தை வளர்ப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வந்தது. முதலாளி வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு மிடையே நடந்த போராட்டங்கள் பல வேளை உள்நாட்டுப் போர் எனச் சொல்லத்தக்க வகையில் நடந்து வந்தன. அவற்றில் மிக முக்கியமானது, 1859-62ஆம் ஆண்டுகளில் நடந்த கட்டடத் தொழிலாளர் களின் போராட்டமாகும். மறுபுறம், அந்தப் பாட்டாளி வர்க்கம் பண்பாட்டு, அரசியல், அனைத்துலகப் பிரச்சினைகளிலும் மிகுந்த அக்கறை காட்டி வந்தது.

‘மரண தண்டனை முறையை ஒழிப்பதற்கான தென் இலண்டன் தொழிலாளர் குழுவொன்று' அன்று இங்கிலாந்திலிருந்த முக்கியத் தொழிற்சங்கத் தலைவரான இராபர்ட் ஆப்பிள்கார்த் என்பவரின் தலைமையில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. ‘அரசியைக் கடவுள் காப்பாற்றுவாராக' என்னும் தொடக்க வரியைக் கொண்டிருந்த அதிகாரப் பூர்வமான தேசியப் பாடலைப் பாட மறுத்த அந்தத் தொழிலாளிகள், இறை வாழ்த்து மட்டுமே பாடினர். ஷேக்ஸ்பியரின் முன்னூறாவது பிறந்த நாளையட்டிய நிகழ்ச்சிகளை பூர்ஷ்வா வர்க்கமும் மேற்குடியினரும் தமது முற்றுரிமை யாக்கிக் கொண்டதை எதிர்த்துப் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதுடன். ‘ஷேக்ஸ்பியர் முன்னூறாவது பிறந்த நாள் விழா மற்றும் மாபெரும் தேசியத் திருவிழாவுக்கான குழு’ என்னும் அமைப்பை உருவாக்கி, 1864 ஏப்ரல் 23ஆம் நாளன்று இலண்டனிலுள்ள ரஸ்ஸல் சதுக்கத்திலிருந்து பிரிம் ரோஸ் மண்டபம் வரை ஊர்வலமாகச் சென்று அங்கு அந்த மகத்தான கலைஞரின் நினைவாக ஓக் மரக் கன்றை நட்டுவைத்தனர்.

பிரிம்ரோஸ் மண்டபத்தில் ஷேக்ஸ்பியர் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கான தொழிலாளர் நிகழ்ச்சிகள் முடிந்தவுடன், அந்த மேடையையும் மண்டபத்தையும் ‘கரிபால்டியை வரவேற்பதற்கான தொழிலாளர் வரவேற்புக் குழு’ தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டது. இத்தாலியின் விடுதலைக்காகவும் சிதறுண்டு கிடந்த அந்த நாட்டை ஒன்றுபடுத்தி ஓர் இத்தாலிய தேச-அரசை உருவாக்குவதற்காகவும் போராடிய தலைவர்களிலொருவரான கரிபால்டி, அந்தப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டுவதற்காக இங்கிலாந்துக்கு வருகை தந்திருந்தார். அவர் இலண்டனுக்கு வந்து சேர்ந்த அன்று, அதுவரை எந்த நாட்டுத் தலைவருக்கும் இங்கிலாந்தின் பொதுமக்களோ அரசாங்கமோ தந்திராத வகையில் அவருக்குத் தொழிலாளர் வர்க்கம் தந்த வரவேற்பு - அதன் தன்மையிலும் வரவேற்பில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையிலும்- முன்னுவமையற்றதாக அமைந் திருந்தது. அவர் இங்கிலாந்திலிருந்து விரைவாகத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று விரும்பிய அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம், அதன் பொருட்டு சில சாதுரியமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அரசாங்கத்தின் நிலைபாட்டைக் கண்டனம் செய்வதற்காகத்தான் மேற்சொன்ன வரவேற்புக் குழு, ஷேக்ஸ்பியரின் பிறந்த நாளை யட்டிய தொழிலாளர் நிகழ்ச்சிகள் முடிந்தவுடனேயே, பிரிம்ரோஸ் மண்டபத்தில் ஒரு கூட்டம் நடத் தியது.

இதற்கிடையே பிரெஞ்சு, இங்கிலாந்து தொழிலாளர்களிடையே ஒற்றுமையும் ஒருமைப்பாடும் வளரத் தொடங்கியிருந்தன. அந்த நாடுகளி லுள்ள தொழிலாளர்களின் தொழிற் சங்கப் போராட்டங்களை ஒடுக்கு வதற்காக, ஜெர்மனி போன்ற பிற அய்ரோப்பிய நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வந்திருந்த தொழி லாளர்களைக் குறைந்த ஊதியத்திற்கு அமர்த்தியும் அவர்களிற் சிலரை ‘கருங்காலி’களாக்கியும் இரு நாட்டு பூர்ஷ்வா வர்க்கங்கள் செய்த முயற்சிகளை முறியடிக்க அந்த நாடுகளின் தொழிலாளிகள் ஒன்றிணைந்தனர்.

போலந்தின் விடுதலைக்கு ஆதரவு தருவதற்காக ‘போலந்து விடுதலைக்கான தேசியக் கழகம்' என்னும் அமைப்பு செயல்பட்டுக் கொண்டிருந்தது. அரசியல் உணர்வு பெற்றிருந்த அனைத்துத் தொழிலாளர் பிரிவு களும் அந்த அமைப்புக்கு ஆதரவு தந்தன. அமெரிக் காவில் அடிமை முறையை ஒழிப்பதற்காக ஆபிரஹாம் லிங்கனின் தலைமையில் நடந்த உள்நாட்டுப் போருக்கு எதிராக இங்கிலாந்தின் ஜவுளி ஆலை முதலாளிகளும் இங்கிலாந்து அரசும் செயல்பட்டுக் கொண்டிருந்த போது, இங்கிலாந்துத் தொழிலாளர் வர்க்கம் லிங்கனுக்கு ஆதரவாக வேலை நிறுத்தப் போராட்டங்களையும் நடத்தினர்.

 1863 மார்ச் 26ஆம் நாளன்று இலண்டன் தொழிற் சங்கங்களின் சார்பில் ஆபிரகாம் லிங்கனை ஆதரித்து புனித ஜேம்ஸ் மண்டபத்தில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. சில மாதங்களுக்குப் பிறகு, போலந்து மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தொழிற்சங்கங்கள் சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப் பாட்டத்தில் பிரெஞ்சுத் தொழிலாளர் வர்க்கத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அந்த ஆர்ப் பாட்டத்திற்குப் பிறகு, பிரெஞ்சு நாட்டு சகத் தொழிலாளர்களை விளித்து, இலண்டன் தொழிற்சங்கத் தலைவர்களிலொருவரான ஜார்ஜ் ஓட்கெர் எழுதிய உரையன்றை இங்கிலாந்தின் நேர்க்காட்சிவாத ஆதரவாளர்களிலொருவரான பேராசிரியர் பீஸ்லி பிரெஞ்சு மொழியாக்கம் செய்திருந்தார். நாடுகளுக் கிடையிலான உறவுகள், இராஜதந்திர உறவுகள் ஆகியவற்றிலும் தொழிலாளி வர்க்கம் அக்கறை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்தவர் பீஸ்லி. அந்த உரைக்கு பிரெஞ்சுத் தொழிலாளர் வர்க்கத் தலைவர்களிலொருவரான டோலெய்ன் என்பாரிட மிருந்து வந்த பதிலைக் கேட்பதற்காகத்தான் 1864 செப்டம்பர் 28இல் புனித மார்ட்டின் மண்டபத்தில் அந்தப் புகழ்பெற்ற கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் ‘உண்மையான சக்திகள்' சம்பந்தப்பட்டிருந்தன என்று மார்க்ஸ் பின்னர் எழுதினார். அந்த உண்மையான சக்திகளில் முக்கிய மானவை இங்கிலாந்தையும் பிரான்ஸையும் சேர்ந்தவை. அதனால்தான் ‘முதல் அகில'த்தை நிறுவுவதற்காக நடத்தப்பட்ட கூட்டத்திற்கான விளம்பரத்தில் கரிபால்டியின் பின்வரும் வாசகங்கள் சேர்க்கப் பட்டிருந்தன: “பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாட்டு மக்கள் தங்கள் கடமைகளைப் புரிந்துகொண்டு ஒன்று பட்டிருக்கும்போது, எதிர்காலத்தின் பெரும் பிரச்சினை தீர்க்கப்படும்.” ஆனால், அந்தக் கூட்டத்தில் நிறுவப்பட்ட முதல் அகிலத்தில் இங்கிலாந்தின் பிரதி நிதிகளாக இருந்தவர்கள் எவரும் அந்த நாட்டின் முக்கியத் தொழிற்சங்கங்களில் ஊதியம் வழங்கப்பட்ட முழுநேர அலுவலர்களாக இருந்தவர்கள் அல்லர். மாறாக பொதுவான தொழிற்சங்க இயக்கத்திலும் தொழிலாளர் வர்க்க இயக்கங்களிலும் செல்வாக்குச் செலுத்தி வந்தவர்கள். அகிலத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்ஜ் ஓட்கெர், காலணி தைப்பவர்களின் சிறு சங்கத்தைச் சேர்ந்தவர்; மிகச் சிறந்த சொற்பொழிவாளர்; இலண்டன் தொழிற்சங்கக் கவுன்சிலின் துணைத் தலைவர். கௌரவச் செயலாள ராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டபிள்யூ.ஆர். க்ரெனெர், தச்சுத் தொழிலாளர்களின் கூட்டமைப்பின் (Amalgamated Society) பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெறாதவர். கொத்தனார்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவியை வகிக்கும் வாய்ப்புப் பெறாத ஜார்ஜ் ஹோவெல் அகிலத்தின் பொதுக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆக, முதல் அகிலம், வெறும் தொழிற்சங்கக் கோரிக்கைகளுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டதல்ல. தொழிற்சங்கக் கோரிக்கைகளை, தொழிலாளர்களின் பொருளாதாரக் கோரிக்கைகளை அது முன்னெடுத்துச் சென்ற போதிலும். ஆனால், அகிலத்தில் பல்வேறு தரப்பினர் இருந்தனர். இராபர்ட் ஓவனின் ஆதர வாளர்கள், தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டங்களை எதிர்த்தவர்கள்; 1864ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த சாசனவாத இயக்கத்தைச் சேர்ந்த பல்வேறு பிரிவினர் அகிலத்தில் உறுப்பினர்களாக இருந்தனர். இத்தாலியப் பிரதிநிதிகள் அரசியல்ரீதியாகப் புரட்சிகர மானவர்களாக இருந்தாலும், தேசியவாதிகளாகவும் மாஜினியின் ஆதரவாளர்களாகவுமே இருந்தனர். அகிலத்தில் இடம் பெற்றிருந்த பிரெஞ்சு அராஜக வாதியான புரூதோனின் ஆதரவாளர்களைப் போலவே, மாஜினியின் ஆதரவாளர்களும் வர்க்கப் போராட்டத்தை ஆதரிக்காதவர்களாக இருந்தனர். இன்னும் சிலர் பிரெஞ்சுக் கற்பனாவாத சோசலிஸ்டுகளான ஷான் -ஸிமோன், ஃபூரியே ஆகியோரின் கருத்துகளைக் கொண்டிருந்தனர்; சதிச் செயல்களின் மூலமும் இரகசியப் பணிகளின் மூலமும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் கருத்தைக் கொண்டிருந்த பிரெஞ்சுப் புரட்சியாளர் ஒகஸ்ட் ப்ளாங்கியின் ஆதரவாளர்களும் முதல் அகிலத்தில் இருந்தனர். ‘அரசியல் அதிகாரத்தைத் தொழிலாளி வர்க்கம் வென்றெடுக்க வேண்டும்' என்னும் மார்க்ஸின் கருத்தை அவர்கள் எல்லோருமே சரியாகப் புரிந்து கொண்டிருக்கவில்லை. வயது வந்த அனை வருக்கும் வாக்குரிமையை வென்றெடுப்பதுதான் அரசியல் அதிகாரம் என்று கருதியவர்களும் அகிலத்தில் இருந்தனர்.

அப்படியிருந்தும், அகிலத்திற்கு வழிகாட்டும் உணர்வைக் கொண்டிருப்பவர் என, இங்கிலாந்தில் அகதியாக, புலம்பெயர்ந்து வந்தவராக இருந்த மார்க்ஸ்தாம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அகிலத்தின் தலைமைப் பொறுப்பிற்கு அல்ல, 34 உறுப்பினர்களைக் கொண்ட தற்காலிக அமைப்புக் குழுவில் (provisional organizing committee) ஜெர்மானியப் பிரிவின் பிரதிநிதி களிலொருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தாம் அவர். அய்ரோப்பிய நாடுகளில் (குறிப்பாக இங்கிலாந்திலும் பிரான்ஸிலும்) இருந்த தொழிலாளர் இயக்கங்களின் ‘உண்மையான தலைவர்கள்' (அவர்கள் மார்க்ஸின் கருத்துகளை முழுமையாக ஏற்றுக் கொண்டவர்களல்லர்) அனைத்துலக அமைப்பொன்றை நோக்கி வருவதைக் கண்ட மார்க்ஸ், மீண்டும் அரசியலில் முழுமூச்சோடு ஈடுபடத் தொடங்கினார் என்றால், அதற்கு தொழிலாளர் வர்க்க இயக்கங்களிடமிருந்து கிடைத்த அனுபவம் மட்டுமின்றி, ‘மூலதனம்' நூலை எழுதுவதற்காக அவர் மேற்கொண்ட ஆய்வுகளும் படிப்புகளும் அடிப்படை களாக அமைந்தன. அதேபோல, ‘தங்களிடம்தான் உண்மையான, சரியான, ஒரே ஒரு புரட்சிகர வேலைத் திட்டம் இருக்கிறது' என்னும் உரிமை பாராட்டிக் கொண்டிருந்த குறுங்குழுவாதிகளைவிட பரந்துபட்ட உழைக்கும் வெகுமக்களைக் கொண்டிருந்த அமைப்பு களையே மார்க்ஸும் எங்கெல்ஸும் எப்போதும் விரும்பினர்.

ஆகவேதான், அகிலத்தின் தொடக்கத்தைக் குறிப்பதற்கான உரையையும் (Inaugural Address) அதன் தற்காலிக சட்டதிட்டங்களையும் வரைவதற்கு எல்லோரையும் விடக் கூடுதலான தகுதியுடையவராக கார்ல் மார்க்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தாலிய தேசியவாதியான மாஜினி, இங்கிலாந்தின் கற்பனாவாத சோசலிஸ்டான இராபர்ட் ஓவென் ஆகியோரின் ஆதரவாளர்கள் அகிலத்தின் கோட்பாடுகளையும் தற்காலிக சட்டதிட்டங்களையும் தங்கள் கண்ணோட்டத்தி லிருந்து வகுக்க மேற்கொண்ட முயற்சி ஏற்றுக் கொள்ளப் படாமல், அவற்றை எழுதும் பொறுப்பு மார்க்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது. தம்முடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தவர்களுக்கு மிகச் சொற்ப அளவிலான விட்டுக் கொடுப்புகளை மட்டுமே கொடுத்து மார்க்ஸ் அந்தத் தொடக்க உரையையும் சட்டதிட்டங்களையும் எழுதினார். ‘கம்யூனிஸ்ட் கழக'த்தில் இருந்தவர்கள் பல்வேறு கருத்துகளையும் கருத்துச் சாயல்களையும் கொண்டிருந்த போதிலும் அவர்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும், அதேவேளை தமது கண்ணோட்டத்தில் எவ்வித சமரசம் செய்து கொள்ளாமலும் மார்க்ஸ், எங்கெல்ஸுடன் இணைந்து எவ்வாறு ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யை எழுதினாரோ, அவ்வாறே முதல் அகிலத்தின் தொடக்க உரையையும் வேலைத்திட்டத்தையும் (சட்டதிட்டங்களையும்) எழுதினார். 1864இல் அய்ரோப்பியத் தொழிலாளர் களிடையே அரசியல் விழிப்புணர்வும் சர்வதேச உணர்வும் வளர்ந்திருந்த போதிலும், 1848இல் இருந்தது போன்ற புரட்சிகரச் சூழ்நிலை இருக்கவில்லை. அதனால்தான் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யில் இருந்தது போன்ற புரட்சிகர வாசகங்கள் அகிலத்தின் தொடக்க உரையில் இடம் பெறவில்லை. எங்கெல்ஸுக்கு எழுதிய கடிதமொன்றில் மார்க்ஸ் கூறினார்: “(இந்த உரை) தொழிலாளர் இயக்கத்தில் தற்போதுள்ள கண்ணோட்டத்துக்கு ஏற்புடையதாகத் தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும்...பழைய துணிச்சலான மொழியைப் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் தொழிலாளர் இயக்கம் புத்துயிர் பெறு வதற்குச் சிறிது காலம் பிடிக்கும். எனவே நாம் செயலில் வலுவானவர்களாகவும் சொல்லில் மென்மையானவர் களாகவும் இருக்க வேண்டும்.”

இதை, எங்கெல்ஸ், ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யின் 1888ஆம் ஆண்டு ஆங்கிலப் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில் இன்னும் விரிவாகக் கூறுகிறார்: “ஆளும் வர்க்கங்கள் மீது மற்றொரு தாக்குதலைத் தொடுக்க ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கம் போதிய பலத்தை மீட்டெடுத்தபோதுதான் சர்வதேசத் தொழிலாளர் சங்கம் தோன்றியது. ஆனால், ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் சேர்ந்த போர்க்குணம் கொண்ட பாட்டாளி வர்க்கம் அனைத்தையும் ஒரே அமைப்பாக இணைக்க வேண்டுமென்ற வெளிப்படையான குறிக்கோளுடன் அமைக்கப்பட்ட இந்த சங்கத்தால், அறிக்கையில் வகுத்தளிக்கப்பட்டுள்ள கோட்பாடுகளை உடனடியாகப் பிரகடனம் செய்ய முடியவில்லை. ஆங்கிலேயத் தொழிற்சங்கங்களுக்கும், பிரான்ஸையும் பெல்ஜியத் தையும் இத்தாலியையும் சேர்ந்த புரூதோன் ஆதரவாளர்களுக்கும், ஜெர்மன் லஸ்ஸாலியர்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் வகையில் போதிய அளவுக்குப் பரந்ததாக உள்ள வேலைத்திட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளானது சர்வதேசத் தொழிலாளர் சங்கம். எல்லாக் கட்சிகளுக்கும் திருப்தியளிக்கக் கூடிய வகையில் இந்த வேலைத் திட்டத்தை உருவாக்கிய மார்க்ஸ், ஒன்றிணைந்த செயல்பாடு, பரஸ்பர விவாதம் ஆகியவற்றின் விளைவாக தொழிலாளி வர்க்கத்திற்கு நிச்சயமாக ஏற்படும் சிந்தனை வளர்ச்சியில் முழு நம்பிக்கை வைத்திருந்தார். மூலதனத்துக்கு எதிரான போராட்டத்தில் ஏற்படும் நிகழ்வுகளும், பலவகை மாற்றங்களும், போராட்டத்தின் வெற்றிகளையும் விட அதிகமாகத் தோல்விகளும் சமூக, அரசியல் மாற்றத்தைப் பொருத்தவரை அவரவரது அபிமானத்துக்கு உரியதாக இருந்த பலவகைப்பட்ட உத்திகள் போதுமானவை அல்ல என்பதை அவர்களுக்கு உணர்த்தி, தொழிலாளி வர்க்க விடுதலைக்கு வேண்டிய உண்மையான நிலைமைகள் பற்றிய முன்னிலும் அதிகமான முழுமையான ஞானம் பிறப்பதற்கு வழி வகுக்காமல் இல்லை. மார்க்ஸ் எதிர்பார்த்ததுதான் நடந்தது. சர்வதேசத் தொழிலாளர் சங்கம் 1864இல் பார்த்த தொழிலாளி வர்க்கத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட மனிதர்களை 1874இல் அது கலைக்கப் பட்ட போது விட்டுச் சென்றது. பிரான்ஸில் புரூதோனியமும், ஜெர்மனியில் லஸ்ஸாலியமும் மடிந்து மறைந்து கொண்டிருந்தன; பழமைபேண் ஆங்கிலேயத் தொழிற்சங்கங்களும்கூட, அவற்றில் பெரும்பாலானவை நீண்ட நாள்களுக்கு முன்பே சர்வதேசத் தொழிலாளர் சங்கத்திலிருந்து தமது தொடர்பை வெட்டிக் கொண்டுவிட்டன என்னும்போதிலும், கடந்த ஆண்டு ஸ்வான்ஸியில் அவற்றின் தலைவர் ஐரோப்பிய சோசலிசத்திடம் எங்களுக்கு இருந்த பயமெல்லாம் போய்விட்டது என்று அவற்றின் சார்பில் அறிவிக்கத் துணியும் நிலையை நோக்கிப் படிப்படியாக முன்னேறி யுள்ளன. உண்மை என்னவென்றால், அறிக்கையின் கோட்பாடுகள் எல்லா நாடுகளின் தொழிலாளர் வர்க்கங்களிடையேயும் கணிசமான செல்வாக்குப் பெற்றுவிட்டன.”

“1845ஆம் ஆண்டு தொட்டு உழைக்கும் வர்க்கங்கள் நடத்திய சாகசங்களைப் பற்றிய ஒருவகை ஆய்வு” என்று அந்த உரையை மார்க்ஸ் பின்னாளில் வர்ணித்தார். “1848 முதல் 1864 வரையிலான காலகட்டத்தில் உழைக்கும் வெகுமக்களின் அவலநிலை குறையவில்லை. எனினும் அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சி, வணிகப் பெருக்கம் ஆகியனவற்றைப் பொருத்தவரை அதற்கு ஈடிணை ஏதுமில்லை” என்று தொடங்கும் அந்த உரை, ‘மூலதனம்' நூலில் காணப்படுவது போலவே, தனது கூற்றுக்குச் சான்றாக ஏராளமான அரசாங்க அறிக்கைகளிலிருந்து புள்ளிவிவரங்களையும் தொழிலாளர் நிலைமைகள் பற்றிய விவரங்களையும் எடுத்துக் காட்டுகின்றது. அந்த அறிக்கைகளில் சில: 1.பிரிட்டிஷ் பிரதமராக இருந்த கிளாட்ஸ்டோனின் சாட்சியங்கள்; 2. நாடு கடத்தப்பட்டுக் குற்றச்செயல்கள் புரிந்தோருக்கான இடங்களில் குடியேற்றப்பட்டவர்கள் பற்றிய 1863ஆம் ஆண்டு அறிக்கை; 4. பொது சுகாதாரம் பற்றிய ஆறாவது அறிக்கை; குழந்தைகள் வேலைக்கமர்த்தப்படுதல் பற்றிய ஆணையத்தின் 1863ஆம் ஆண்டு அறிக்கை; ரொட்டி தயாரிக்கும் தொழிலாளர்களின் மனக் குறைகள், கோரிக்கைகள் பற்றி ட்ரெமென்ஹீர் தயாரித்த அறிக்கை (செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்து தலித் மக்களின் ஒரு பிரிவினரான ‘பறையர்’களின் அவல நிலை பற்றி எழுதிய ட்ரெமென்ஹீர்தானா இவர் என்று கேட்கத் தோன்றுகிறது); சொத்து மற்றும் வருமான வரி விவரங்கள் பற்றிய அறிக்கை.

ஆலைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களின் நிலையைப் பற்றி மார்க்ஸ் கூறுகிறார்: பண்டைக்காலத்திய கானான் நாட்டில் மோலாக் என்னும் கடவுளுக்குக் குழந்தைகள் பலியிடப்படுவது வழக்கம். ஆனால், அங்கு அந்த பலிக்கு ஏழைக் குழந்தைகள்தாம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நியதி இருக்கவில்லை; ஆனால், நவீன கால மோலாக்கான மூலதனத்துக்குப் பலியிடப்படு பவர்கள் ஏழைக்குழந்தைகள்தாம்.

இங்கிலாந்திலுள்ள தொழிலாளர்களில் சிறுபான்மை யினரின் பண ஊதியம், உண்மை ஊதியம் ஆகிய இரண்டும் மேற்சொன்ன காலகட்டத்தில் உயர்ந் திருந்தது உண்மையென்றாலும் அவர்களில் மிகப் பெரும்பான்மையினர் அதலபாதாளத்துக்குத் தள்ளப் பட்டிருந்தனர் என்பதை இந்த அறிக்கைகள் மூலமாகவே மெய்ப்பிக்கிறார் மார்க்ஸ். இங்கிலாந்து நிலவரங்களை மட்டுமே அவர் மேற்கோள் காட்டினாலும், அவை சில மாற்றங்களுடன் அய்ரோப்பாவிலுள்ள வளர்ச்சியடை கின்ற, தொழில்மயமாக்கப்படுகிற நாடுகளுக்கும் பொருந்தும் என்று கூறுகிறார். அவரது உரையிலுள்ள இன்னொரு அம்சமும்கூட இங்கிலாந்து அனுபவத்தைச் சார்ந்ததாக உள்ளது. 1848ஆம் ஆண்டுப் புரட்சி தோல்வியடைந்த பிறகு, தொழிலாளி வர்க்கம் பெற்ற இரு முக்கிய வெற்றிகளைச் சுட்டிக் காட்டுகிறார். ஒன்று, பூர்ஷ்வா வர்க்கத்துக்கும் மேற்குடிவர்க்கத்துக்கும் இருந்த முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொண்டு வேலை நாளைப் பத்து மணி நேரமாகக் குறைக்க பிரிட்டிஷ் நாடாளுமன்றம் சட்டம் இயற்றும்படி செய்த தொழிலாளர்கள் போராட்டம். இந்தச் சட்டம் நிறைவேற்றும்படி செய்ததன் மூலம், “தொழிலாளர்கள் அளப்பரிய உடல் சார்ந்த, தார்மிக, அறிவுசார்ந்த நன்மைகளைப் பெற்றிருக்கிறார்கள்.” மற்றொன்று, கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பொருளுற்பத்தி, விநியோகம் ஆகியவற்றைத் தொழிலாளிகளால் செய்ய முடியும் என்பது நடைமுறையில் மெய்ப்பிக்கப்பட்டு பூர்ஷ்வா அரசியல் பொருளாதாரத்தின் மீது பாட்டாளி வர்க்க அரசியல் பொருளாதாரம் அடைந்த வெற்றி. அதாவது, மார்க்ஸ், இங்கு கற்பனாவாத சோசலிஸ்டான இராபர்ட் ஓவனும் அவரது ஆதரவாளர்களும் மேற்கொண்ட பரிசோதனை முயற்சிகளைப் பாராட்டு கிறார். அதேவேளை, கூட்டுறவு உழைப்பு தேசியப் பரிமாணத்தைப் பெற வேண்டும் என்றும் தேச அளவிலான வழிமுறைகள் மூலம் அவை வளர்க்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்.

இந்தக் கருத்துதான், மேற்சொன்ன உரையின் இறுதிப் பகுதிகளுக்கு நேரடியாக இட்டுச் செல்கிறது. அந்த இறுதிப் பகுதிகளில் சொல்லப்படுவன யாவை? முதலாவதாக, அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பது தொழிலாளி வர்க்கத்தின் மிகப் பெரும் கடமையா கின்றது. அரசியல் சிறப்புரிமைகளின் மூலமாகவே முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் தங்களது பொருளாதார முற்றுரிமைகளைப் பாதுகாத்துக் கொண்டு, தொழிலாளர் களின் பொருளாதாரக் கோரிக்கைகளை நிராகரித்து வந்துள்ளனர். எனவே தொழிலாளர்கள் தங்களது அரசியல் பொருளாதாரத்தை நிலைநிறுத்த வேண்டு மானால், அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க வேண்டும். இரண்டாவதாக, அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பது மட்டும் போதாது. பாட்டாளி வர்க்கம் ஒரு சரியான வெளியுறவுக் கொள்கையையும் வகுத்துக் கொள்ள வேண்டும். தனிநபர்களுக்கிடையே உள்ள உறவுகளில் ஒழுக்கநெறிகளும் நீதியும் எப்படிக் கடைப்பிடிக்கப்பட வேண்டுமோ, அதேபோலத்தான் இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவுகளிலும் அவை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

மார்க்ஸின் உரையின் இறுதிப்பகுதி, அய்ரோப்பாவின் மிகப் பெரும் பிற்போக்குச் சக்தியாக ஜார் அரசு இருந்ததைச் சுட்டிக் காட்டியது: அய்ரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றினதும் அமைச்சரவையிலும் ஜார் அரசாங்கத்தின் கைகள் இருக்கின்றன; அந்த நிலைமை, சர்வதேச அரசியலின் இரகசியங்களை தன்வசப்படுத்து மாறும் அந்தந்த நாட்டு அரசாங்கங்களின் இராஜதந்திர நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனிக்குமாறும், தேவைப்பட்டால் தனக்கு சாத்தியமான அனைத்து வழிமுறைகளின் மூலம் அந்த நடவடிக்கைகளை எதிர்க்குமாறும் பாட்டாளிவர்க்கத்திற்குக் கற்பிக்கின்றது. பாட்டாளி வர்க்கம் வகுத்துக்கொள்ள வேண்டிய வெளியுறவுக் கொள்கை பிற நாடுகளிலுள்ள மக்களின் முழு இசைவு பெற்றதாக இருக்க வேண்டும். “இத்தகைய வெளியுறவுக் கொள்கைக்கான போராட்டம், பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான பொதுவான போராட்டத்தின் ஒரு பகுதி” என்று கூறும் மார்க்ஸ், “அனைத்து நாட்டுத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!” என்று தமது உரையை முடிக்கின்றார்.

இந்தக் கடைசிப் பகுதியில் மார்க்ஸ், அமெரிக்காவில் அடிமைமுறையை ஒழிக்க லிங்கன் தலைமையில் நடந்த போருக்கு ஆதரவாகவும் இங்கிலாந்தின் ஜவுளி ஆலை முதலாளிகளுக்கு எதிராகவும் போராடி வந்த லங்காஷயர் ஆலைத் தொழிலாளர்களைப் பாராட்டி பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச உணர்வுக்கான சிறந்த எடுத்துக்காட்டாக அது அமைந்துள்ளதாகக் கூறுகிறார். இங்கிலாந்து முதலாளி வர்க்கம் தேசியவாதத் தற்சாய்வுக் கருத்துகளைப் பயன்படுத்தி, போர்களில் மக்களின் இரத்தத்தையும் பொக்கிசத்தையும் விரயம் செய்வதைச் சுட்டிக் காட்டுகிறார்.

சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் பேராயம் 1866 செப்டம்பர் 3-8 ஆம் நாட்களில் ஜெனீவாவில் நடந்தது. அதில் அச்சங்கத்தின் ‘தற்காலிகப் பொதுப் பேரவையின் பிரதிநிதிகளுக்கான அறிவுரைகள், பல்வேறு பிரச்சினைகள்’ என்னும் தலைப்பில் மார்க்ஸ் வகுத்துத் தந்த வேலைத் திட்டம் படித்துக் காட்டப்பட்டது. அச் சங்கத்தில் மூன்றிலொரு பங்கு வாக்குகளைக் கொண்டிருந்த புரூதோனியர்கள் மார்க்ஸின் திட்டத்தை எதிர்த்து ஒரு மாற்றுத் திட்டத்தை முன்வைத்தனர். நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் மார்க்ஸின் திட்டத்திலிருந்த ஒன்பது அம்சங்களில் ஆறு அம்சங்கள் அப் பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுத் தீர்மானங்களாக நிறைவேற்றப் பட்டன. சர்வதேச சக்திகளின் ஒன்றுபட்ட நடவடிக் கைகள், எட்டு மணி நேர வேலைநாளுக்கான சட்டங் களை நாடாளுமன்றங்களில் நிறைவேற்றப் பாடுபடுதல், குழந்தை மற்றும் பெண் தொழிலாளர்கள் பிரச்சினை களைத் தீர்த்தல், கூட்டுறவு உழைப்பு, தொழிற் சங்கங்கள், ஒவ்வொரு நாட்டிலுமுள்ள நிலையான இராணுவங்களை (standing armies) ஒழித்துக்கட்டி விட்டு அந்தந்த நாட்டு மக்கள் அனைவரையுமே ஆயுத பாணிகளாக்குதல் ஆகியன பற்றிய தீர்மானங்களே அவை. சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் விதிகள், அச்சங்கத்தின் நிர்வாகத்தை ஒழுங்காற்றுவதற்கான முறைகள் ஆகியன அப் பேராயத்தில் நிறைவேற்றப் பட்டன.

அகிலத்தில் மார்க்ஸ் ஆற்றிய பணிகளும் மேற்கொண்ட கடமைகளும் ‘மூலதனம்' நூலை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றின. 1867இல் அந்த நூலின் முதல் பாகம் வெளியிடப்பட்டது. அடுத்த ஆண்டு பிரெஸ்ஸெல்ஸில் நடைபெற்ற அகிலத்தின் பேராயம் அந்த நூலைப் பாராட்டி இயற்றிய தீர்மானம் கூறியது: “மூலதனத்தை விஞ்ஞானரீதியான பகுப் பாய்வுக்கு உட்படுத்திய முதல் பொருளாதார அறிஞர் என்னும் விலைமதிக்கமுடியாத தகுதியைப் பெற்றிருப்பவர் கார்ல் மார்க்ஸ்”. அகிலத்தின் மையச் சக்தியாக, அதன் மூளையாக மார்க்ஸ் செயல்பட்டு வந்த காலகட்டத்தில் தான், முதல் அனைத்துலகப் பாட்டாளி வர்க்க அமைப்பான அதற்கு அமெரிக்காவிலிருந்தும், கிட்டத் தட்ட அனைத்து அய்ரோப்பிய நாடுகளிலிருந்தும் மட்டுமின்றி, பிரெஞ்சு நாட்டின் காலனிகளாக இருந்த அல்ஜீரியா, குவடெலோப் ஆகியவற்றிலிருந்தும் பிரதிநிதிகள் கிடைத்தனர்.

முதல் அகிலத்திற்கு மார்க்ஸ் வகுத்த சட்ட திட்டங்கள் (40 பிரிவுகள்) பல்வேறு கருத்துகளைக் கொண்டிருந்த பரந்துபட்ட உழைக்கும் மக்களின் பிரதிநிதிகள் அனைவரையும் தழுவக்கூடிய முறையில் நெகிழ்ச்சியான தன்மையைக் கொண்டிருந்தன. புரூதோனியர்களின் எதிர்ப்பையும் மீறி மார்க்ஸ் பெண் தொழிலாளர்களையும் அவர்களது பிரதிநிதிகளையும் அகிலத்தில் சேர்ப்பதில் வெற்றி பெற்றார். 1867 ஜூன் மாதம் ஹார்ரியெட் லா என்னும் பெண்மணி அகிலத்தின் பொதுக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அன்று முதல் மார்க்ஸ், அகிலத்தின் கூட்டங் களில் தொழிலாளர்களை விளிக்கும் முறையை, ‘உழைக்கும் ஆண்களே' என்று விளிக்கும் முறையை மாற்றி ,'உழைக்கும் ஆண்களே, உழைக்கும் பெண்களே' என்று விளிக்கும் முறையைத் தொடங்கி வைத்தார்.

தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு தருதல், வேலை நிறுத்த உரிமை, எட்டுமணி நேர வேலை நாள் போன்ற பிரச்சினைகளில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்று வதுடன் அகிலத்தின் பணிகள் நிற்கவில்லை. அது பாரிஸ் நகரத்தில் பித்தளைப் பொருள்கள் உற்பத்தி செய்து வந்த தொழிலாளர்கள், ஜெனீவாவில் கட்டடத் தொழிலில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள், பெல்ஜி யத்தில் ஷார்லெரோய் என்னுமிடத்திலிருந்த நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் ஆகியோரின் போராட்டங் களுக்கு ஆக்கமும் ஊக்கமும் மிக்க ஒத்துழைப்பை வழங்கி வந்தது. 1866இல் இங்கிலாந்தில் இலண்டன், எடின்பரோ நகரங்களிலிருந்த தையல் தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தை முறியடிக்க முதலாளிகள் ஜெர்மனி முதலிய அய்ரோப்பிய நாடுகளிலிருந்து ஆள்களைக் கொண்டுவரச் செய்த முயற்சியைத் தடுத்து நிறுத்தியது.

போலந்து, இத்தாலிய நாடுகளின் விடுதலைக்காகக் குரல் கொடுத்ததையும் பல்வேறுவகை ஆதரவுகளையும் திரட்டியதுபோலவே அயர்லாந்தின் விடுதலைக்கும் உறுதியான ஆதரவு தந்தது முதல் அகிலம். அயர் லாந்தின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளின் மனித உரிமைகளுக்காகவும் போராடியது. இவற்றில் ‘மரண தண்டனை ஒழிப்பு' என்பதும் முக்கியப் பிரச்சினையாகும்.

working men ‘நியூயார்க் டெய்லி ட்ரிப்யூன்' என்னும் ஏட்டின் 1853 பிப்ரவரி 7ஆம் நாளிட்ட இதழில் வெளியான‘மரண தண்டனை- திருவாளர் கோப்டெனின் சிறு வெளியீடு- இங்கிலாந்து வங்கியை ஒழுங்குமுறைப் படுத்துதல்' (Capital Punishment-Mr.Goden's Pamphlet- Regulations of the Bank of England) என்னும் கட்டுரையில் காரல் மார்க்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடு களில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை, அவர்கள் இழைத்ததாகச் சொல்லப்படும் குற்றங்கள் ஆகியன பற்றி இலண்டலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘டைம்ஸ்' நாளேடு, திருவாளர். கோப் டென் என்பவரால் வெளியிடப்பட்ட சிறு வெளியீடு ஆகியவற்றிலிருந்த தகவல்கள், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றை ஆய்வுக்குட்படுத்தி, மரண தண்டனை முறை ஏன் இருக்கக்கூடாது என்பதற்கான காரணத்தைக் கூறினார்: “தனது நாகரிகத்தைப் பற்றித் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஒரு சமுதாயத்தில், எந்தவொரு கோட்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு மரண தண்டனை என்பது நீதியானது என்றோ, பொருத்த மானது என்றோ நிறுவுவது மிகக் கடினமானது - அது முற்றிலும் சாத்தியமற்றது எனச் சொல்ல முடியாது என்றாலும். தண்டனை என்பது அச்சுறுத்துவதற்கோ, சீர்படுத்துவதற்கோ பயன்படும் வழிமுறைகளிலொன்று எனப் பொதுவாக அதற்குச் சார்பாகப் பேசப்படுகிறது. ஆனால், மற்றவர்களைச் சீர்படுத்தவோ அச்சுறுத்தவோ என்னைத் தண்டிப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? தவிரவும், காயீன் காலத்திலிருந்து (கடவுளால் படைக்கப்பட்ட முதல் ஆணான ஆதாமுக்கும் முதல் பெண்ணான ஏவாளுக்கும் பிறந்த காயீன், தனது இளைய சகோதரன் ஆபெல் மீது பொறாமை கொண்டு அவனைக் கொலை செய்ததாக விவிலியம் கூறுகிறது -எஸ்.வி.ஆர்.), இன்றுவரை உலகம் தண்டனையின் காரணமாகச் சீர்திருத்தப்பட வில்லை, அச்சுறுத்தப்படவுமில்லை என்பதை வரலாறு- புள்ளிவிவரங்கள் எனச் சொல்லப்படும் ஒரு விடயம் - முற்றுமுடிவான சான்றுடன் மெய்ப்பிக்கின்றது... தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்குத் துக்கிலிடுப வனைத் தவிர வேறு சிறந்த கருவி எதனையும் அறிந்திராத, தனது கொடூரத்தனத்தை சாசுவதமான சட்டம் என ‘உலகின் முன்னணிப் பத்திரிகை'யின் (இலண்டனிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘டைம்ஸ்' நாளேடு - எஸ்.வி.ஆர்.) மூலம் அறிவிக்கின்ற ஒரு சமுதாயத்தின் கதிதான் என்ன...? புதிய குற்றவாளி களின் வருகைக்கான இடத்தை ஏற்பாடு செய்வதற்காக ஏராளமான குற்றவாளிகளைத் தூக்கில் போடுபவனைப் புகழ்வதற்குப் பதிலாக, இந்தக் குற்றங்களைத் தோற்று விக்கும் சமுதாய அமைப்பை மாற்றுவதைக் குறித்து ஆழ்ந்து சிந்திப்பதற்கான அவசியம் இல்லையா?”

மரண தண்டனை முறைக்கு எதிராக மேற்சொன்ன கருத்துகளை கூறுவதுடன் மார்க்ஸ் நின்று கொள்ள வில்லை. அந்தத் தண்டனைமுறைக்கு எதிரான போராட்டத்தில் தம்மையும் தமது குடும்பத்தினரையும் எங்கெல்ஸையும் மட்டுமல்லாது, முதல் அகிலத்தையும் ஈடுபடுத்தினார்.

‘மூலதனம்' நூலின் முதல் பாகம் ஏற்கெனவே ஹாம்பர்க் நகரில் அச்சடிக்கப்பட்டிருந்தது. அதை வெளியிடுவது பற்றி எங்கெல்ஸுடன் கலந்து பேசு வதற்காக மார்க்ஸ், தனது மருமகன் பால் லஃபார்க்குடன் மான்செஸ்டெர் நகருக்குச் சென்றிருந்தார். அந்த சமயத்தில்தான், ‘பெனியன்கள்' என்னும் அயர்லாந்து விடுதலைப் போராளி அமைப்பைச் சேர்ந்த தாமஸ் கெல்லி, திமோத்தி டீஸி என்னும் முக்கியத் தலைவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் சிறைச்சாலை மோட்டர் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டபோது, ஆயுதமேந்திய ஃபெனியன்கள் சிலர் திடீர்த் தாக்குதல் தொடுத்து, அந்த இரு தலைவர்களையும் விடுவித்தனர். விடுவிக்கப்பட்ட இருவரும் அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றுவிட்டனர். அந்த மோட்டர் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு பிரிட்டிஷ் போலிஸ் சார்ஜெண்ட் துப்பாக்கிக் காயமடைந்து அதன் காரணமாக சிறிது நாள்களுக்குப் பிறகு இறந்துவிட்டார்.

அந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் யாரும் பிடிபடவில்லை. ஆனால், மான்செஸ்டர் நகரிலிருந்த அய்ரிஷ் மக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து ஏராளமான அய்ரிஷ் ஆண்களைக் கைது செய்த பிரிட்டிஷ் காவல் துறை, அய்ந்து பேர் மீது கொலைக் குற்றம் சாட்டியது. அந்தக் குற்றத்தைச் செய்தார்கள் என்பதற்கான வலுவான சான்று ஏதும் இல்லாத போதிலும், அவர்கள் மீது குற்றத்தீர்ப்பு வழங்கிய பிரிட்டிஷ் நீதிமன்றம் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. 'மான்செஸ்டர் தியாகிகள்' என அய்ரிஷ் மக்களால் அழைக்கப்பட்ட அவர்களில் வில்லியம் அல்லென், மைக்கேல் ஒப்ரியன், மைக்கேல் லார்கின் ஆகிய இருவர் அன்றைய இங்கிலாந்தில் இருந்த வழக்கத்தின்படி பகிரங்கமாகத் தூக்கிலிடப் பட்டனர். பிரிட்டிஷ் ஆளும் வர்க்கங்களும் விக்டோரி யாப் பேரரசியும் அந்தத் தண்டனை நிறைவேறிய தற்காக மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

அயர்லாந்தின் விடுதலைப் போராட்டத்திற்கு உறுதியான ஆதரவைத் தெரிவித்து வந்த மார்க்ஸும் ஏங்கெல்ஸும், கைது செய்யப்பட்ட ஃபெனியன்களை அரசியல் கைதிகளாக நடத்துவதற்குப் பதிலாக, கொடிய குற்றவாளிகளைப் போல நடத்துவதைக் கண்டனம் செய்து வந்தனர். அந்தக் கைதிகளுக்குள்ள மனித உரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சியில் முதல் அகிலத்தை ஈடுபடுத்தினர். அயர்லாந்துப் போராட்டத் தையும் போராளிகளின் இலட்சியத்தையும் ஆதரித்த அவர்கள், சிறு குழுக்கள் சதிச்செயல்கள் மூலம் வன்முறைகளில் ஈடுபடுவதையும் தனிநபர்களை அழித்தொழிப்பதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அத்தகைய செயல்கள், சுரண்டப்படும் ஆங்கிலேயத் தொழிலாளிகளின் அனுதாபத்தைக் கொலையுண்டவர்கள் மீது திருப்பிவிட்டுவிடும் என்று கருதினர். இதை அவர்கள் வெளிப்படையாக எழுதவில்லை. ஒருவருக் கொருவர் எழுதி அனுப்பிய கடிதங்களிலேயே இந்தக் கருத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

ஒரு ஆங்கிலேய போலிஸ் அதிகாரி இறந்ததைச் சாக்கிட்டு ஆங்கிலேய தேசிய உணர்வை பிரிட்டிஷ் ஆளும் வர்க்கமும் முதன்மை ஊடகங்களும் தூண்டி விட்டுக் கொண்டிருந்த வேளையில் மார்க்ஸ், முதல் அகிலத்தின் பொதுப் பேரவையைக் கூட்டி, ஃபெனியன் களுக்கு ஆதரவான தீர்மானத்தை நிறைவேறச் செய்தார். அந்தப் பேரவையின் உறுப்பினர்களிலொருவரான ஹெர்மன் யுங் என்பவர் (அவர் அகிலத்தின் ஸ்விட்ஸர் லாந்து விவகாரத்துக்குப் பொறுப்பேற்றிருந்த ஜெர்மானியர்) கூறினார்: “இந்த நாட்டின் உழைக்கும் மக்களின் கவனத்தை ஃபெனியன்களிடமிருந்து திசைதிருப்ப சில முயற்சிகள் மேற்கொண்டு வரப்படுகின்றன. அவர்களைக் கொலைகாரர்கள் என்று கண்டனம் செய்யும் அதே வேளையில் கரிபால்டி ஏன் மாபெரும் தேசப்பற்றாளர் எனப் போற்றப்படுகிறார்? கரிபால்டியின் இயக்கத்தால் ஒரு உயிர்கூட தியாகம் செய்யப்படவில்லையா...? தங்கள் சொந்தநாட்டிலிருந்தே தங்களை விரட்டி அடிப்பவர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் உரிமை அயர்லாந்து மக்களுக்கு உண்டு; அதைப் போலவே, ஏதேனுமொரு அந்நிய நாடு இங்கிலாந்து மக்களை ஒடுக்குமேயானால் அதற்கு எதிராக அயர்லாந்து மக்களைப் போலவே இங்கிலாந்து மக்களும் செயல்படுவர்.”

எனினும், ஃபெனியன்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்க்கும் தீர்மானத்தை அகிலத்தின் பொதுப் பேரவையிலிருந்த ஆங்கிலேய உறுப்பினர்களே கொண்டு வருவதை ஊக்குவித்தார் மார்க்ஸ். அந்த உறுப்பினர்களிலொருவரான ஜான் வாட்ஸன் கூறினார்: “ஃபெனியன் கைதிகளை விடுவிக்கச் செய்யப்பட்ட முயற்சியில் எதிர்பாராதவிதமாக ஒரு மனிதர் கொல்லப் பட்டதைவிட மிக மிகப் பெரிய குற்றமே அயர்லாந்து மக்களைப் பட்டினியால் வாடச் செய்யும் குற்றம்.” மார்க்ஸ் அந்தக் கூட்டத்தில் சொற்பொழிவாற்ற வில்லையென்றாலும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரைவதில் முக்கியப் பங்கேற்றார். “அந்தத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டால், அது நீதியின் முத்திரை அல்ல, வஞ்சம் தீர்த்தலின் முத்திரையே அதில் பொறிக்கப்பட்டிருக்கும்” என்னும் வாசகங்கள் அடங்கிய கருணை மனுவுடன், இருபதாயிரம் தொழிலாளிகள் இலண்டன் நகரில் திரண்டனர். உள்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்ட அந்தக் கருணை மனுவின் காரணமாக, கடைசி நேரத்தில் இருவரது மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது; ஆனால் அல்லென், லார்கின், ஓப்ரியன் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். அந்த மூவர் தூக்கிலிடப்பட்டதன் காரணமாக, அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்ற இரு ஃபெனியன் தலைவர்கள் பெரும் தீரர்களாகக் கருதப்பட்டு அய்ரிஷ் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பாடும் தாலாட்டுப் பாடல்களில் இடம் பெறுவர் என்றும், அந்த மரண தண்டனையின் காரணமாக, அயர்லாந்து மக்களின் விடுதலைப் போராட்டம் உக்கிரமடையும் என்றும் எங்கெல்ஸ் எழுதினார்.

‘முதல் அகிலம்'தோற்றுவிக்கப்பட்டதற்கான முதன்மைக் காரணமாக இருந்தவை, தொழிலாளர்களின் பொருளாதாரப் பிரச்சனைகள் மட்டும் அல்ல, தேசிய இன ஒடுக்குமுறை போன்ற அரசியல் பிரச்சனைகளு மாகும் என்பதற்கான சான்றுகளே இவை.

“உழைக்கும் வர்க்கங்களின் விடுதலை, உழைக்கும் வர்க்கங்களால் மட்டுமே வென்றெடுக்கப்பட வேண்டும்” என்னும் கருத்து, அன்று அகிலத்தில் இருந்த வேறுபல சோசலிச நீரோட்டங்களுக்கு நேர்எதிரானதாக இருந்தது. அந்த நீரோட்டங்களைப் பிரதிநிதித்துவம் செய்தவர்களில் சிலர், அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் கிளாட்ஸ்டோனின் வேலைத்திட்டத்தை (அதாவது பூர்ஷ்வா தாராளவாதிகளையும் தொழிலாளர் பிரதி நிதிகளையும் ஒன்றிணைக்கும் வேலைத் திட்டத்தை) பின்பற்றி நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பை விரும்பியவர்கள்; வேறு சிலரோ, 1840 முதல் பாரிஸ் தொழிலாளி வர்க்கம் பெற்று வந்த அனுபவங் களிலிருந்து கற்றுக்கொள்ள மறுத்து, 1789ஆம் ஆண்டுப் பிரெஞ்சுப் புரட்சியில் பங்கேற்ற ஜாகோபின்களின் மரபைப் பின்பற்றி சதிச் செயல்களின் மூலம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க முடியும் என்று கருதிய வர்கள்.

 “உழைக்கும் வர்க்கங்களின் விடுதலை, உழைக்கும் வர்க்கங்களால் மட்டுமே வென்றெடுக்கப்பட வேண்டும்” என்னும் கருத்து, 1871ஆம் ஆண்டில் பாரிஸ் கம்யூனில் தான் முதன் முதலில் செயல்வடிவம் பெற்றது. காலங் கனிவதற்கு முன் தொழிலாளர்கள் அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க முயற்சி செய்வது தவறு என்று கருதிவந்த மார்க்ஸ், பாரிஸ் கம்யூன் தோன்றியவுடனேயே அதனுடன் தம்மையும் அகிலத்தையும் முழுமூச்சாக ஈடுபடுத்தினார். இரண்டுமாத காலமே நீடித்த அந்த முதல் பாட்டாளி வர்க்க அரசு, பிரெஞ்சுப் பிற்போக்கு வாதிகளால் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. பாட்டாளிவர்க்கம் முதன்முதலில் அரசியல் அதிகாரத்தை வகித்திருந்தது பாரிஸ் கம்யூனில்தான் என்றும், தொழிலாளர்களின் பொருளாதார விடுதலையை உருவாக்குவதற்காக கண்டறியப்பட்ட அரசியல் வடிவமே அந்தக் கம்யூன் என்றும் அகிலத்தின் கூட்ட மொன்றில் ஆற்றிய உரையில் கூறினார். அந்த உரைதான், 'பிரான்ஸில் உள்நாட்டுப் போர்' என்னும் தலைப்பில் பின்னர் நூல் வடிவில் வெளியிடப்பட்டது. ஒரு முக்கியமான விசயத்தையும் பாரிஸ் கம்யூன் எடுத்துக்காட்டியதாக அந்த உரை கூறியது. அதாவது, “ஏற்கெனவே உள்ள அரசு இயந்திரத்தைத் தொழிலாளி வர்க்கம் அப்படியே எடுத்துக்கொண்டு அதைத் தனது சொந்த செயல் நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியாது.”

பாரிஸ் கம்யூனை முழுமையாக ஆதரிக்க மார்க்ஸ் மேற்கொண்ட துணிச்சலான நிலைப்பாட்டைக் கண்டு அஞ்சியவர்கள் - அகிலத்திலிருந்த ஆங்கிலேயப் பிரதி நிதிகளில் மிகப் பெரும்பாலானோர் - ஆதிக்க வர்க்கங் களின் தாக்குதல்களிலிருந்து தங்கள் தோல்களைப் பாதுகாப்பதற்காக அதிலிருந்து விலகியது மட்டுமின்றி, அவர் மீது ஏராளமான அவதூறுகளையும் தொடுக்கத் தொடங்கினர். அகிலம் பலகீனப்படத் தொடங்கியது அப்போதுதான். பின்னர் பகூனினின் தலைமையிலிருந்த அராஜகவாதிகளின் சீர்குலைவு நடவடிக்கைகளின் காரணமாகவும் அது 1874இல் தகர்ந்து விழத் தொடங்கியது. எனினும், ‘செயல்களில் வலுவாகவும் சொல்லில் மென்மையானதாகவும்’ இருந்த மார்க்ஸின் புரட்சிகர அரசியல் மிகச் சரியானதே என்பதைக் குறுகிய காலமே நீடித்த பாரிஸ் கம்யூன் பாட்டாளி வர்க்கத்திற்கான மிக முக்கிய செய்தியாக வரலாற்றில் பதிவு செய்துவிட்டது.

1864ஆம் ஆண்டு நிலவரத்தை 2014ஆண்டு நிலவரத்துடன் ஒப்பிட முடியாதுதான். எனினும், பல்வேறு கருத்துகளையும் நிலைப்பாடுகளையும் கொண்டுள்ள முதலாளிய- எதிர்ப்புச் சக்திகளை ஒன்றிணைத்து, அவர்கள் எல்லோரும் ஒப்புக்கொள்ளக் கூடிய ஒரு வேலைத் திட்டத்தை உருவாக்கி, ஒன்றிணைந்த போராட்டத்தின் மூலம், முதலாளியத்துக்கு மாற்றான ஒரு சமூக அமைப்பை உருவாக்குவதற்கு முதல் அகிலத்தில் மார்க்ஸ் கடைப்பிடித்த தந்திர உத்தி, அணுகுமுறை, தேசிய இனப் பிரச்சினை, மனித உரிமைப் பிரச்சினை, பெண் விடுதலைப் பிரச்சினை ஆகியவற்றை அவர் கையாண்ட விதம் ஆகியவற்றுடன் சமரசத்துக்கிடமில்லாத அவரது புரட்சிகர அரசியலும் இன்றும் நமக்கு வழிகாட்டிகளாக அமைகின்றன.

தரவுகள்

1.   Karl Marx, Capital Punishment.- Mr. Gobden’s Pamphlet. of the Bank of England, Mark- Engels, Collected Works, Works, Vol 11 (1851-1853), Progress Publishers, Moscow, 1979.

2.   Karl Marx, Inaugural Address of the International Working Men’s Associlation (First International), Marxist Internet Archive (accessed on September 23, 2014).

      Karl Marx, Mr. George Howell’s of the International Working Men’s Association Marxist Internet Archive (accessed on September, 23, 2014).

3.   Karl Marx and Frederick Engels, The Manifesto of the Communist Party, Foreign Languages Press,
Peking, 1970

4.   Engels, Preface to the 1888 English of the Manifesto of the Communist Party in The Communist Manifesto, A Modern Edition (Edited by Eric Hobsbawm) Verso, London, 1998.

5.   Kevin Anderson, Marx at the Margins: On Nationalism, Ethnicity, And Non- Western Societies, The University of Cambridge Press, Chicago.

6.   Christian Hgsbjerg, Karl Marx and the First Interational, Socialist Review, September 2014, London.

7.             Royden Harrison, The British Labour Movement and the International in 1864, Socialist Register 1984, Merlin Press, London, 1984.