மத உருவாக்கங்கள்

நமது மதங்களை உருவாக்கியவர்கள் யார்? இது ஒரு மோசமான கேள்வி என்பது எனக்கே தெரிகிறது. நமது மதங்களை நாம்தான் சொந்தமாக உருவாக்கிக் கொண்டதாக நம்பிக் கொண்டிருக்கிறோம். கொஞ்சம் மரியாதையாகச் சொன்னால், நமது முன்னோர்கள் தாம் இந்த மதங்களை வடிவமைத்து நமக்குத் தந்ததாக நம்பிக் கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கையில், அந்த நம்பிக்கையில் கீறலை ஏற்படுத்துவது போல இந்த கேள்வி அமைகிறது. நமது மதங்கள் மிகப் பழமை யானவை. 2000-2500-3000 ஆண்டுகள் எனப் பழைய வரலாறுகளைத் தாராளமாகக் கிளரமுடியும். வெவ்வேறு வரலாற்றுக் காலக்கட்டங்களில் வெவ்வேறு அழுத்தங்களுடன், வெவ்வேறு திசைகளை நோக்கி அவை ஆடி அசைந்து அலைந்து வளர்ந்திருக்கின்றன. நமது மதங்களின் சொந்த வரலாற்றில், அவை இப்படித் தான் இருக்கவேண்டுமென்று அவற்றுக்குக் கறாரான கட்டுப்பாடுகள் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. ஒரு கூட்டம் யாகங்களை வளர்த்து மந்திரங்களை உச்சரித்துக்கொண்டிருந்த வேளையில் இன்னொரு கூட்டம் பக்திப் பரவசத்தில் ஆடிப்பாடி பூசைகளை செய்துகொண்டிருந்தது. நமது மதங்களைப் பற்றி ஒவ்வொரு இருநூறு வருடத்திற்கும் ஒவ்வொரு கதை சொல்லமுடியும்.

religion

இந்த நீண்ட நெடிய வரலாற்றின் ஊடே, காலனி ஆட்சிக் காலம் என்பது காத்திரமான மாற்றங்களை ஏற்படுத்திய காலக்கட்டம் ஆகும். கீழைநாடுகளின் வரலாறு அக்காலத்தில் சில அடிப்படையான திருப்பு முனைகளைச் சந்தித்ததாகக் கூறுவார்கள். குறிப்பிட்ட அக்காலக்கட்டத்தில், நமது மதங்களும் தீவிரமான மாற்றங்களைச் சந்தித்துள்ளன. நீங்கள் நம்புவீர்களோ நம்பமாட்டீர்களோ, குறிப்பிட்ட இக்காலத்தில் நமது மதங்கள் முன்னெப்போதுமில்லாத அளவில் மாற்ற மடைந்து முழுக்க புது வடிவங்களை ஈட்டியுள்ளன. ஐரோப்பியர்கள் நமது நாடுகளுக்கு வந்தபோது இங்கிருந்த மக்களையெல்லாம் நாகரீகப்படுத்தப் போகிறோம் என்றுதான் சொல்லிக்கொண்டார்கள். மக்கள் ஒருபுறமிருக்க, நமது மதங்களெல்லாம் நவ நாகரீக மதங்களாக மாறிவிட்டன. அந்த மாற்றங்களைத் தொகுத்தே நவீன மத உருவாக்கங்கள் என்று இங்கு குறிப்பிடுகிறோம்.

காலனி ஆட்சிக்காலத்தில் நம்மூர் மதங்களில் ஏற்படத் தொடங்கிய ஒருவகையான மாற்றங்கள், 19, 20 ஆம் நூற்றாண்டுகளைக் கடந்து, இன்று உச்சக் கட்டத்தை எட்டியுள்ளன. வெளிநாட்டு சக்திகளுக்கு எதிராக மட்டுமின்றி, உள்ளூர் சகபாடிகளுக்கு எதிராக மதப்பெரும்பான்மையைப் பயன்படுத்துவது, மதச் செல்வாக்கைப் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது, மதத்துறவிகளே அரசியல் தலைவர்களாக உருவெடுப்பது, சிறுபான்மையினர் மீது இனப் படுகொலைகளை ஏவி விடுவது என மத அரசியல் பெருகி வளர்ந்து வந்துள்ளது. இந்தியாவிலும் இலங்கையிலும் ஒருசேர மதப்பெரும்பான்மையை ஆதாரமாகக் கொண்ட கட்சிகள் ஆட்சியில் அமர்ந் துள்ளன என்பது அச்சமூட்டக்கூடிய சூழலை உருவாக்கி யுள்ளது. அறியப்பட்ட உலக வரலாற்றின் இரண்டு மிகப் பெரிய அதிகார வடிவங்களான மதமும் அரசியலும் ஒன்றுகூடி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கின்றன. பொருளாதார உடமை உணர்வே ஆகப்பெரிய ஆதிக்க சக்தி என்று கார்ல் மார்க்ஸ் கருதினார். ஆயின் மதமும் அரசியலும் இணைந்து பொருளாதாரத்தை விஞ்சி நிற்கின்றன. காலனி ஆட்சிக் காலத்திலிருந்து, நாடு விடுதலை பெற்ற நாட்களிலிருந்து, இந்தச் சூழலை நோக்கித்தான் வேகவேகமாக ஓடி வந்தோமா, என்று எண்ணத் தோன்றுகிறது! மீண்டும் அதே கேள்வி முன்னுக்கு வருகிறது, இந்த மதங்களை உண்மையில் நாமேதான் விரும்பி வடிவமைத்தோமா? இந்த மதங்களைச் செய்தவர்கள் யார்?

மேற்கத்திய அறிவாளிகள்

குறைந்தபட்சம் இரண்டு காரணங்களுக்காக காலனிய ஆட்சியாளர்கள் தெற்கு ஆசியாவின் மதங்களை மறு உருவாக்கம் செய்தார்கள். ஒன்று, அவர்களது நிர்வாகத் தேவைகளுக்காக. சாலை ஓர மரங்களின்மீது எண்களைப் பொறித்து வைத்து கணக்கெடுப்பதைப்போல இந்தியா, இலங்கை போன்ற நாடுகளின் மக்களை ஓர் “ஒழுங்கிற்குள்” கொண்டு வருவதற்கு மதக்கணக்கெடுப்பு அவர்களுக்குத் தேவைப்பட்டது. மக்கள் கூட்டங்களை ஒழுங்குபடுத்த, கட்டுப்படுத்த, அடிமைப்படுத்த, “நாகரீகப்படுத்த” எண்ணிக்கைக் கணக்கு தேவைப் பட்டது. ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்ட வேண்டுமல்லவா? மதங்கள் சமூக ஒழுக்கங்களை, கட்டுப் பாடுகளை நோகாமல் நொறுங்காமல் மக்களிடையில் வழக்குக்குக் கொண்டுவந்து விடுகின்றன. எவ்வளவோ கடினமான விடயங்களை மதங்கள் உளவியல்ரீதியாக நெகிழ்வாக ஏற்புடமை கொண்டனவாக மாற்றி விடுகின்றன. அதனால் மதங்கள் முக்கியமாகின்றன. எந்த மதம் பெரும்பான்மை மதம்? ஆட்சியாளர்கள் எந்த மதத்தவருக்கு எவ்வளவு இடம் கொடுக்க வேண்டும்? எந்த மதத்தவரை அதிகமாக அனுசரித்துக் கொள்ளவேண்டும்? என்பவையெல்லாம் இந்தக் காலத்தில்தான் முக்கியமாகின. மதப்பெரும்பான்மை என்ற விடயத்திற்கு நாம் அறிமுகமாகிக் கொண்ட காலமும் இதுதான். மதச்சார்பற்ற சனநாயக அரசியலின் கருத்தாக்கமான பெரும்பான்மையை நமது வசதிக்கேற்ப மத அரசியலோடு ரசவாதம் செய்து மதப் பெரும்பான்மை என்ற ஒன்றை உருவாக்கிவிட்டோம். காலனி ஆட்சியாளர்கள் சொல்லிக்கொடுத்ததைத் தாண்டி, மதப்பெரும்பான்மையை இன்னும் பல நோக்கங்களுக்கு லாவகமாகப் பயன்படுத்த இந்த நாட்களில் நாம் கற்றுக்கொண்டுவிட்டோம் என் பதையும் சொல்லியாக வேண்டும்.

19 ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து தெற்கு, தென்கிழக்கு ஆசியாவின் பெரிய மதங்களான பௌத்தம், இந்து மதம் ஆகியவற்றைக் கிறித்தவ மதத்தின் நோக்கிலிருந்து மறு உருவாக்கம் செய்யத் தொடங்கினார்கள். இது நவீன மத உருவாக்கங்களின் இரண்டாவது சூழலாகும். ஐரோப்பாவில் கத்தோலிக்கக் கிறித்தவத்தைத் தீவிரமாக விமர்சித்து சீர்திருத்த கிறித்தவம் தோன்றி நிலைகொண்ட காலம் அது. கத்தோலிக்கத்திற்கு சுமார் 1500 ஆண்டுகால இறையியல் உண்டு. ஆயின் சீர்திருத்த கிறித்தவம் அப்போதுதான் சுமார் 200-300 ஆண்டுகளாகத் தனது இறையியலை எழுதிக் கொண்டிருந்தது. தனது சொந்த இறையியல் உருவாக்கத்திற்காகக் கீழைநாட்டு மதங்களைச் சீர்திருத்த கிறித்தவம் அக்கறையோடு அணுகியது என்றும் கூறுவார்கள். கத்தோலிக்கத்தின் சடங்குகள், உருவ வழிபாடு ஆகியவற்றைத் தாண்டி அருவமான இறைக் கொள்கை, அற உணர்வு ஆகியவை தூக்கலாக அமைந்த சீர்திருத்த கிறித்தவம் காலனிய வாதிகளில் பலரால் (ஆங்கிலேயர்கள், செர்மானியர்கள் ஆகியோரால்) ஆதரிக்கப்பட்டது. ஐரோப்பாவில் கத்தோலிக்கத்திற்கும் சீர்திருத்த கிறித்தவர்களுக்கும் இடையில் வெளிப்பட்ட வேறுபாடுகள் தெற்காசிய சமய உருவாக்கங்களிலும் வெளிப்பட்டன. இன்னும் சரியாகச் சொல்லுவதானால், ஐரோப்பியர்களுக் கிடையில், கத்தோலிக்கர்/ சீர்திருத்த கிறித்தவர், ஆங்கிலேயர்/ செர்மானியர், ஆங்கிலேயர்/ அயர்லாந்துக் காரர்/ ஸ்காட்லாந்துக்காரர், பழமைவாதி/ தாராளவாதி/ தொழிற் கட்சியாளர் என்பது போன்ற ஒவ்வொரு வேறுபாடும் இந்து மதம், பிராமணியம், பௌத்தம், சைவ சித்தாந்தம் ஆகியவற்றின் மீட்டுருவாக்கங்களில் வேறுபாடுகளை ஏற்படுத்தியது. இருப்பினும் மேற்கத்திய சிந்தனை, கிறித்தவம், காலனிய நலன் ஆகியவற்றின் நோக்கங்கள் துலாம்பரமாக வெளிப்பட்டன.

ஒரு மதம் என்பது இறைச் செய்தியைச் சுமந்து நிற்கும் புனித நூல் ஒன்றை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பது மேற்கத்தியரின் நம்பிக்கை. எனவே இந்தியா, இலங்கை, சீனா போன்ற நாடுகளைக் காலனிப் படுத்தியிருந்த ஐரோப்பியர்கள் நமது புனித நூல்களைத் தேடினார்கள். அவை அவர்களுக்குக் கிடைத்துவிட்டன! வேதங்கள், உபநிடதங்கள், திரிபிடக நூல்கள், பகவத் கீதை, திருமுறைகள், சாத்திரங்கள் என வரிசைப் படுத்தினார்கள். நவீன மத உருவாக்கங்களில் மக்களை விட, புரோகிதர், பூசாரி, பிக்கு போன்றோரை விட புனித நூல்கள்தாம் முக்கியப்படுகின்றன என்று சொல்லுகிறார்கள். இது ஓர் ஆச்சரியம்தான். கோயில்கள், புத்த விகாரைகள் அல்லது வழிபாட்டு முறைகளுக்கு இல்லாத மரியாதை திடீரென அச்சடித்த புத்தகங்களுக்குக் கிடைத்துவிட்டன. நமது மதங்களின் வரலாற்றில் புத்தகங்களுக்கு இவ்வளவு மரியாதை எப்போதுமே இருந்தது கிடையாது. அவரவர் ஊரில் அவரவர் வசதிக்கேற்ப மதச்சடங்குகளை மனம்போல வளைத்துக் கொள்வார்கள்.

வேதங்களைப் பழைய ஏற்பாடு எனக் கொண்டால் உபநிடதங்களைப் புதிய ஏற்பாடு எனச் சொல்லலாம் என்று மேற்கத்திய அறிஞர்கள் ஒப்பிட்டார்கள். வைதீக இந்துமதத்தைக் கத்தோலிக்கக் கிறித்தவம் என்று சொன்னால், அதன் சடங்காசாரங்களைக் கேள்விக் குள்ளாக்கிய பௌத்த சமயத்தைச் சீர்திருத்த கிறித்தவத் தோடு ஒப்பிடலாம் என்றார்கள். அத்வைத வேதாந்தமும் பௌத்தமும் அருவமான சீர்திருத்த கிறித்தவ இறை யியலுக்கு மிகவும் நெருங்கி வந்தன. பௌத்தத்தின் அறக் கோட்பாடுகள் சீர்திருத்த கிறித்தவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தன. இயேசுவின் வாழ்க்கையையும் புத்தரின் வாழ்க்கையையும் ஒப்பிட்டு மேற்கில் பல நூல்கள் வெளிவந்தன. புத்தரே இந்தியாவின் மார்ட்டின் லூதர் என்று மேற்கத்திய அறிஞர்கள் எழுதினார்கள். துக்கம், துயரம், துன்பத்தின் வழியாக விடுதலை என்ற கருத்து கிறித்தவத்தையும் பௌத்தத்தையும் பக்கத்தில் கொண்டு வந்தன. பௌத்தத்தின் நடைமுறை வடிவங்களிலிருந்து பெரிதும் விலகிய தூய அறவடிவம் மேற்கு நாடுகளில் பிரபலம் அடைந்தது. கடலில் கரைத்த பெருங்காயம் போல இருந்த வேதாந்தத்தை மேற்குநாட்டவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய தத்துவம் என வரைந்து காட்டினார்கள். இந்தியர்கள் ஒவ்வொருவரின் வீட்டு முற்றத்திலும் ஒரு யானை கட்டிப் போடப்பட்டிருக்கும் என்று இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பி யர்கள் நினைத்தார்களாம். அதுபோல, இந்து மதத்தவர் எல்லோருமே அத்வைத வேதாந்திகள் என்பது போன்ற கருத்தும் மேற்கில் பிரசித்தி பெற்றது. சைவம், வைணவம், சாக்தம், ஊருக்கு ஊர் வேறு வேறான அம்மன் கோவில்கள், ஆவேச தெய்வங்கள், குல தெய்வ வழிபாடுகள் ஆகியவற்றை எல்லாம் சேர்த்துத் தைத்து இந்து மதம் என்ற ஒரு புதிய மதத்தையே மேற்கத்திய அறிஞர்கள் உருவாக்கினார்கள். இந்து மதம் என்பது அறிஞர்களுக்கிடையில் மட்டும் தான், பெரும்பாலும் புத்தகப் பயன்பாட்டில் மட்டும் தான் நிலவுகிறது என்று இப்போது ஓர் அறிஞர் எழுதுகிறார்.

வெள்ளைக்காரன் தான் நம் எல்லோரையும் ஒரே மதத்திற்குள் வைத்துப் பூட்டினான் என்று காஞ்சி காமகோடி சங்கராச்சாரியார் “தெய்வத்தின் குரல்” நூலில் கூறுகிறார். பிராமணனையும் சூத்திரனையும் ஒரே மதத்தினுள் வைத்துப் பூட்டியதில் இன்று வரை அவருக்கு வருத்தம் உண்டு. கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இப்போது வேதங்களை “யார் யாரோ” படித்துப் பாடம் எடுக்கிறார்கள், ஆனால் பிரபஞ்ச வெளியில் ஒலியாக விரவிக்கிடந்த வேதங்களைக் காதால் கேட்டு நினைவில் வைத்துக்கொண்டவர்கள் பிராமணர்கள் தாம் என்பதை மறந்துவிடாதீர்கள், என்று அவர் சொல்லுகிறார். பிராமண மதம் என்பது ஒரு தனி மதம். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் என்ற பெயர்கள்தாம் பிரபலமாக இருந்தன. எல்லா மக்களையும் பிராமண மதத்திற்குள் இணைக்க வேண்டும் என்று எந்தவொரு ஆச்சாரியாரும் எப் போதுமே ஆசைப்பட்டது கிடையாது, இப்போதுகூட. 19 ஆம் நூற்றாண்டின் கடைசியில் “எண்ணிக்கைப் பெரும்பான்மை” என்ற அரசியல் சொல்லாடல் முதன்மைப்பட்ட போதுதான் “இந்து மதம்” என்ற விரிந்த சொல் அரங்கத்திற்கு வந்தது.

கீழைநாட்டு மதங்களின் ஆராய்ச்சியில் செர்மானியர்களின் நுழைவு வரலாற்றுச் சிறப்பு (வரலாற்றுச் சிக்கல்) மிக்கது. வாழ்க்கையில், நடை முறையில் செய்ய இயலாமல் போனதை செர்மானி யர்கள், அவர்களது தத்துவத்தில் செய்தார்கள் என்று கார்ல் மார்க்ஸ் அவரது காலத்தில் சொன்னார். கீழை நாடுகள் விடயத்திலும் அப்படித்தான் நடந்தது. ஆங்கிலேயர்கள் உலகம் முழுவதையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்கள். செர்மானியர்களால் அதனைச் செய்ய முடியவில்லை, எனவே உலக வரலாற்றுக்குத் தாமே முதல்வர்கள் என்பது போல ஒரு கோட்பாட்டை உருவாக்கினார்கள். சமஸ்கிருத மொழி குறித்த சில கண்டுபிடிப்புகள் செர்மானியர்களின் வரலாற்றுக் கொள்கைக்கு முகாந்திரமாக அமைந்தன. எப்படி? முதலில், சமஸ்கிருத மொழி கிரேக்கம், லத்தீன், யூதர்களின் ஹிப்ரூ போன்ற மொழிகளை விடப் பழமையானது என்று செர்மானிய மொழியியல் நிறுவனம் ஒன்றில் “கண்டுபிடித்தார்கள்”. இரண்டா வதாக, சமஸ்கிருத மொழி ஐரோப்பிய மொழிகள் பலவற்றின் தாய் மொழி, எனவே அது பூர்வீகத்தில் ஓர் இந்தோ-ஐரோப்பிய மொழி என்று “நிறுவினார்கள்”. மூன்றாவதாக, சமஸ்கிருத மொழி ஓர் ஆரிய மொழி என்றார்கள். இன்னும், ஐரோப்பிய மொழிகளுக் கிடையில் செர்மானிய மொழியே சமஸ்கிருதத்திற்கு மிகவும் நெருக்கமானது என்றும் “கண்டறிந்தார்கள்”.

மொழி அடிப்படையில் இதுவரை பேசப்பட்ட விடயத்தை செர்மானியர்கள் அதன்பின் வரலாற்று ரீதியாகவும், சமய வரலாற்றுரீதியாகவும் (இன அரசிய லாகவும்) பலப்படுத்தினார்கள். சமஸ்கிருத மொழியே உலகின் ஆகப் பழமையான மொழி என்று ஆகி விட்டதால், இறைச் செய்தி வரலாற்றில் முதலில் வழங்கப்பட்ட மொழி இந்த மொழியே என்று ஆகிவிடுகிறது. வேதங்களே முதல் இறைச் செய்திகளைக் கொண்ட ஆரிய நூல்களாகும். இந்த முடிவின்படி யூதர்களின் ஹிப்ரூவையோ, கத்தோலிக்கர்களின் லத்தீனையோ, கடவுளை அறியாத கிரேக்கத்தையோ இனி பற்றிப்பிடிக்க வேண்டியதில்லை. செர்மானியர் களின், இந்தோ-ஐரோப்பியர்களின் சொந்த மொழியான சமஸ்கிருதத்திலேயே இறைவன் முதலில் பேசினார். இறைவன் முதலில் பேசிய அந்த ஆரிய மொழியே உலக வரலாற்றின் மிகத் தூய்மையான புனித மொழி.

உலகின் மிகப்பழமையான மதம் வேத மதம். உலகின் மிகப் பழமையான தத்துவம் வேதாந்தம். இவை இரண்டுமே ஆன்மீகம் பேசுபவை. மதத்தையும் தத்துவத்தையும் பிரித்தறிய முடியாத ஓர் ஆன்மீகத் துவக்கத்தை உலகவரலாறு கொண்டுள்ளது. செர்மானிய அறிஞர் ஹெகலின் தத்துவம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்! அது ஆன்மாவில் தொடங்கி ஆன்மாவில் முழுமையடையும்! “பிதா, சுதன்” ஆகியோரைவிட, உயிர்த்தெழுந்த ஏசுவின் (உடலற்ற) பரிசுத்த ஆவியே சீர்திருத்த கிறித்தவர்களுக்கு அதிகம் நெருக்கமானது. அதுவே எல்லாம். அந்த தூய ஆவியின் செயல்பாடுகளைப் பற்றிப் பேசுவதுதான் ஆன்மீகம். கீழை நாடுகளில் அத்வைத வேதாந்தமும் பௌத்தமும் பரிசுத்த ஆவியின் இறையியல்கள் போல் தோற்ற மளிக்கும். செர்மானியர்கள் உலகையும் உலக வரலாற்றையும் கோட்பாட்டுரீதியாகக் கைப்பற்றி விட்டார்கள்! இத்தாலிய மறுமலர்ச்சி, கிரேக்கத் தத்துவம், யூதர்களின் பழைய ஏற்பாடு போன்ற வரலாற்றுத் துவக்கங்களை செர்மானியர்கள் ஒரே தாவலில் தாண்டிக் குதித்து விட்டார்கள். நவீன ஐரோப்பாவின் பகுத்தறிவு, அறிவொளி இயக்கம், விஞ்ஞான அறிவு போன்றவற்றையும் முறியடித்து விட்டார்கள். ஒரே கல்லில் எத்தனை மாங்காய்கள்!

கீழைநாட்டுத் தேசியவாதிகள்

காலனிய அறிவாளிகள், செர்மானிய கீழைத்தேய வாணர்கள் (Orientalists) ஆகியோரிடம் பாடம் படித்தவர்கள் நமது நாடுகளின் புதிய அறிவாளிகள். மரபுரீதியாக மேட்டுக்குடிகளாகவும் மேட்டிமைச் சாதியினராகவும் அமைந்து போனவர்கள். இவர்கள்தாம் நமது நாடுகளின் தேசியவாதிகளாக நமக்குக் கிடைத்த வர்கள். இந்த தேசியவாதிகளுக்கும் நமது நாடுகளின் சாதாரண விவசாயிகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று அறிஞர்கள் எழுதுகிறார்கள். நமது நாடுகளின் அடித்தள விவசாயிகளைக் கண்டு நமது தேசியவாதிகள் எப்போதுமே அச்சப்படுவார்கள் என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். மரபான மேட்டிமை அந்தஸ்தை இழக்க விரும்பாத இவர்கள் மதங்களின் அடிப்படையிலேயே தேசியங்களை உருவாக்கினார்கள்.

ஐரோப்பாவில் நீண்ட நெடிய இடைக்காலத்தில் நிலவிய (கிறித்தவ) மதத்தைப் பின்னுக்குத் தள்ளி, அந்தந்த நாடுகளின் மொழி அடிப்படையில் தேசியங் களை உருவாக்கினார்கள். அந்த தேசியங்கள் சமயச் சார்பற்ற தேசியங்களாகவும் இருக்க முடிந்தது. ஆனால் நமது நாடுகளின் தேசியவாதிகள் மொழிகளை விட மதங்களையே அடிப்படையான அடையாளமாகக் கொண்டார்கள். அடித்தள மக்களிடமிருந்து இன்னும் போதுமான ஆதரவைத் திரட்ட முடியாத (திரட்ட விரும்பாத) தேசியவாதிகள் மதங்களின் அடிப்படையில் தேசியங்களை உருவாக்கினார்கள். தேசியம் என்ற நவீன அடையாளம் உருவாகாமல் தவித்தபோது, அதன் இடைவெளிகளை இட்டு நிரப்ப மதம் தேவைப்பட்டது. தேசியம் என்பது ஒரு நவீன அரசியல் கொள்கை. ஒரே நேரத்தில் தேசிய உருவாக்கமும் நவீன மத உருவாக்கமும் இங்கே நடந்தன. அரசியலும் மதமும் இணைந்து செல்வது என ஒன்றையன்று பற்றிப் பிடித்துக் கொண்டன. இதன் விளைவுகள் பாரதூரமானவை.

தேசியத்தை நமது காலத்தின் மதமாக மாற்று வோம் என சில தேசபக்தர்கள் கூறியதுண்டு. ஆனால் நடந்ததென்னவோ, மதங்களே தேசியங்களாக மாற்றப் பட்டன. இந்து தேசியம், பௌத்த தேசியம், நாட்டின் மொழி, நிலப்பரப்பு, தேசியம், மதம் இன்னும் கூடுதலாக அரசாங்கம் ஆகியவை பரஸ்பரம் ஒன்று படுத்தப்பட்டுள்ளன; ஒன்றுக்கொன்று ஒத்தாசையாக உள்ளன. விலகுபவர்கள் வெளியேறவேண்டும். காலனி ஆட்சிக்காலத்திய எண்ணிக்கை அரசியல் போல தேசியத்திற்கும் எண்ணிக்கை அரசியல் தேவைப் படுகிறது. தேசியம் ஓர் ஒருமைவாதம், ஓரிறைக் கொள்கை போல. அதற்கு வேறுபாடுகளைப் பிடிக்காது. அது வேறுபாடுகளைச் சகிக்காது. அது வேறுபாடுகளைக் கொன்றுவிடவே செய்யும்.

கிறித்தவ மதத்தைப் பார்த்துப் பாவனை செய்து இந்து மதத்தையும் பௌத்த மதத்தையும் நாம் உண்டாக்கிக் கொண்டது போல ஐரோப்பியரைப் பார்த்துப் பாவனையாக நமது தேசியங்களையும் உருவாக்கிக் கொண்டோம். பாவிக்கப்பட்ட மதங்கள், பாவிக்கப்பட்ட தேசியங்கள். நமது மதங்களும் தேசியங்களும் உள்ளுக்குள்ளிருந்து வரவில்லை.

அவை முழுக்க நமக்கே சொந்தமானவை அல்ல. அவை வருவிக்கப்பட்டவை ((Derivative Religions and Derivative Nationalisms), கைமாறி வந்தவை, போலச் செய்யப் பட்டவை, கலப்பு (Mimicry, Hybrid) என்று ஓர் அறிஞர் எழுதுகிறார்.

மதங்கள் இறைவனுக்கு எதிராக ஒரு சாத்தானைக் காட்டுவதைப்போல, தேசியங்களும் தேசவிரோதிகளை உற்பத்தி செய்து காட்டுகின்றன. ஆனால் கால ஓட்டத்தில் எதிரிகள் மாற்றப்பட்ட கதைகளெல்லாம் உண்டு. காலனி ஆட்சியாளர்களையும் கிறித்தவ மதத்தையும் நம்மூர் மதங்கள் ஒரு காலத்தில் எதிரிகளாகச் சித்தரித்ததுண்டு. ஆனால் கிறித்தவ எதிரிகள் மறைந்து போய், இந்தியா போன்ற நாடுகளில் முஸ்லீம்கள் இந்துத்துவத்தின் முதல் எதிரிகளாக மாற்றப்பட்டு விட்டார்கள். எப்போதுமே கிறித்தவர்கள் தாம் எதிரிகளாக இருக்க வேண்டுமென்று நான் கருத வில்லை. ஆனால், உலக அரசியலில் மேற்கு நாடுகளின் எதிரிகள் என்ற முத்திரையைப் பெற்ற முஸ்லீம்களே எப்படி கீழை நாட்டவருக்கும் (முஸ்லீம்களும் கீழை நாட்டவர்தான்) எதிரிகளானார்கள்? என்பது ஓர் அரசியல் விசித்திரம். காலனி ஆட்சியாளரை நோக்கி வெளிமுகமாக உருவான எதிர்ப்பு, எப்போது, ஏன் உள்முகமாகத் திரும்பியது? என்பது ஒரு சிக்கலான கேள்வி. வெவ்வேறு நாடுகளில் தொழில்பட்ட வெளிமுகமான எதிர்ப்புகள் மிக விரைவில் உள்முகமாக மாற்றப்பட்டு நாம் உள்ளுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் கொன்றழிப்பவர்களாக மாற்றப்பட்டிருக்கிறோம். இது எப்படி? சாமுவேல் ஹன்டிங்டன் முன்வைத்த நாகரிகங் களின் மோதல் (மதங்களின் மோதல்) என்ற வேலைத் திட்டத்தை நோக்கி உலக நாடுகள் வேகவேகமாக வழிநடத்தப்படுவது போன்ற தோற்றம் கிடைக்கிறது. மதங்களின் மோதல் என்ற வேலைத்திட்டம் நடை முறைக்கு வரும்போது மூன்றாம் உலக நாடுகள் ஒவ்வொன்றுமே போர்க்களமாக மாறும் நிலையைச் சந்திக்க வேண்டி வரும்.

கடைசியாக, சில கேள்விகளை முன்வைத்து, இந்த விவாதத்தை இப்போதைக்கு ஒரு முடிவுக்குக் கொண்டு வருவோம். காலனி ஆட்சியாளர்களை எதிர்த்து உருவான நமது நாடுகளின் தேசியவாதிகள் ஐரோப்பிய முன் மாதிரியிலான, ஒற்றை வடிவிலான மதத்தையும் தேசியத்தையும் ஏன் சுவீகரித்துக் கொண்டார்கள்? மிகப் பழமையான, மிகச் செழுமையான தமது சொந்த மதங்களின் ஆற்றல்களை மீட்டெடுக்க அவர்கள் ஏன் முயற்சி செய்யவில்லை? தமது சொந்த நாடுகளின், சொந்தக் கலாச்சாரத்தின் அனுபவங்களிலிருந்து ஒரு கோட்பாட்டை அவர்களால் ஏன் உருவாக்க முடியாமல் போனது? பாவனை, வருவித்தல், கைமாற்றிப் பெறுதல், கலப்பு வடிவம் போன்ற பம்மாத்தான நிலைப்பாடுகளை அவர்கள் ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? நாட்டு விடுதலைக்குப் பின்னரும் மேலைநாட்டவரின் தொங்கு சதைகளாக இவர்கள் தொடர்ந்து தொழிற்பட்டு வருவது ஏன்? காலனி ஆட்சியின் தொடர்ச்சிதான் இப்போதைய ஆட்சிகளே தவிர, புதிதாக, சொந்தமாக இந்த ஆட்சியாளர்களிடம் எதுவும் மிச்சமில்லை என்பதைத்தானே இது குறிக்கிறது! இந்துத்துவம் என்பது உள்ளூர்ச் சரக்கல்ல, அது ஒரு வெளிநாட்டுச் சரக்கு என்பது புரிகிறதா?

Pin It