பேரா.ஏ.கே.காளிமுத்து தமிழகத்து வரலாற்றாசிரியர்களில் நான்காம் தலைமுறையினர். வரலாற்றைக் கற்பதிலும், கற்பிப்பதிலும் தாம் சார்ந்த குலப் பெருமைகளைப் பீற்றிக்கொள்வதற்கு வகுப்பறைகளைப் பயன்படுத்திக்கொள்வோரின் மத்தியில் அவற்றை நேர்மையான ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தியவர். 1997-1998ஆம் கல்வியாண்டில் வரலாற்றுமையம், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அத்தக்கூலி நிலையில் guest lecturer ஆக நான் பணியாற்றியபோது அவர் அங்கு வகுப்புகள் நடத்திக்கொண்டிருந்தார். கல்லூரிப் பணியினின்றும் ஓய்வு பெற்று அப்போதே அவருக்கு வயது அறுபதினைத் தாண்டியிருந்தது. அப்போது நான் முனைவர் பட்ட ஆய்வேட்டினை சமர்ப்பித்திருந்தேன். வயதில் மிகவும் இளையவனான எனை சகத்தோழராக நடத்தினார். அவர் காலனிய வரலாற்றில் புடம் போட்டவர்; நான் இடைக்காலத்து இந்தியாவின் வேளாண்குடிகள் பற்றி சிறப்புப்பாடமாகப் பயின்றவன். ஆனால், சீனியர் என்ற அலட்டல் இல்லாமல் என்னுடன் பாடங்களை விவாதிப்பார். மேலதிகப் புரிதலுக்காக Burton Stein, Noboru Karashima, Dharma Kumar, Kathleen Gough, David Ludden, Irfan Habib, Marc Bloch போன்றோரின் நூல்களை என்னுடன் விவாதிப்பார். அன்னல்பள்ளி சிந்தனையில் ஆர்வம் உள்ளவர். தாம் ஓர் இடதுசாரி இயக்கத்தின் உறுப்பினர் என்று ஒருபோதும் காட்டியது இல்லை. அவர் வார்த்தை சார்ந்த கொள்கைகளை நம்ப வில்லை; கொள்கைகள் வெளிப்படுத்தும் வார்த்தை களை நம்பினார். பேரா.ஆ.சிவசுப்ரமணியன் போன்று சான்றுவழி ஆய்வுப்போக்குகளை உருவாக்குகிறவர்; கோட்பாடுகளுக்காகச் சான்றுகளைத் தேடுபவர் அன்று.

அவருடைய ‘தமிழகத்தில் காலனியமும் வேளாண் குடிகளும்: ஒரு சமூகப் பொருளியல் பார்வை’ (1801-1947) என்ற நூல் அதற்குத் தக்க சான்று.

ஒரு நூற்றைம்பது ஆண்டு காலத்திய தமிழகத்தின் வேளாண்குடிகளில் ஏற்பட்ட சமூகப்பொருளியல் மாற்றங்களைத் தக்க சான்றுகளுடன் நிறுவியுள்ளார்.

27-06-2014 அன்று அவர் காலமானார். அந்நூலின் சிலகூறுகளை இங்கு எடுத்துக் காட்டுவதே அவருக்குச் செய்யும் இரங்கலாகும்.

ஆய்வுக்களம்

kallimuthuமண்ணிற்கும், மனிதருக்கும் இடையிலான உறவினைப் பின்னணியாக வைத்தே தம் ஆய்வினைச் செய்துள்ளார். உள்ளூர் நிலப்பரப்பியலின் தன்மை local environment / topography / ecology சமூக, பொருளியல் தன்மைகளை மாற்றும் என்பதனை நிறுவியுள்ளார். நதிகளும், வாய்க்கால்களும், அதனால் மலர்ந்த பாசன வசதிகளும் கொண்ட வண்டல் படிந்த ஒருங்கிணைந்த தஞ்சாவூர் வட்டாரம், கரடு-முரடான, பள்ளமும்-மேடும் கொண்ட கவலை பூட்டி நீர்ப்பாசனம் செய்யும் கொங்குவட்டாரம் போன்றவற்றையும், வாய்க்கால் பாசனமும், ஏரிப்பாசனமும் கலந்த செங்கற்பட்டு வட்டாரம், இதே போன்று பாசனவசதி கொண்ட திருநெல்வேலிப்பகுதி, மணல்மேடுகளும், திட்டும்-திடலும், செம்மண் பரப்புகளையும் கொண்ட அரியலூர் வட்டாரம் போன்றவற்றைத் தம் ஆய்வில் களமாகக் கொண்டுள்ளார். இவ்வொவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு மாதிரியான சமூக மாற்றங்கள் நிகழ்ந்தன; பொருளியல் மாற்றங்களும் நிகழ்ந்தன.

புலப்பெயர்ச்சி

சமூக மாற்றங்களுக்கு மக்களின் புலப்பெயர்ச்சிகள் காரணமாயின. நிலவுடைமையில் உருவான மாற்றங் களும் காரணிகளாக அமைந்தன. East Indian Company ஆட்சியின் கொள்கைகளும், பிரிட்டிஷ் ஆட்சியின் கொள்கைகளும் இவற்றிற்குக் காரணிகளாயின. இதனைச் சான்றுகள் வழியே ஏ.கே.காளிமுத்து தம் நூலில் விளக்குகிறார். மேற்சொல்லப்பட்ட அரசுகள் வருவாய்ப் பெருக்கத்திற்கு நிலவுடைமையில் மாற்றங் களைக் கொணர்ந்தபோது உள்நாட்டிலும், நாடு தாண்டியும் மக்களின் புலப்பெயர்ச்சிகள் நிகழ்ந்தன. இதனைத் தமிழக வரலாற்றின் இடைக்காலத்தில் நிகழ்ந்த புலப்பெயர்ச்சிகளின் தொடர்ச்சியாகக் காணலாம். இது வேளாண் பெருக்கத்திற்கு உதவியது. குறிப்பாக நீர்ப்பாசன வேளாண்மையில், வேளாண் குடிகள் வறண்ட பகுதிகளுக்குப் பெயர்ந்து வேளாண் பரப்பினை விரித்தனர். இது, செங்கற்பட்டு, கொங்குப் பகுதிகளில் நடந்தன. அவர்களோடு அவர்களின் பண்பாட்டுக் கூறுகளும் இடம் பெயர்ந்தன. தக்கத் தருணத்தில் வேளாண்மை சாராத மக்கள் திரளினரும் பாசன வேளாண்மைக்குத் திரும்பினர். சோழர் காலத்தில் கைக்கோலர்கள் இப்படி வேளாண்மைக்கும், நெசவிற்கும் திரும்பினர்.

மேற்சொன்னது போன்று விஜயநகர ஆட்சியில் வேங்கடத்திற்கு அப்பாலிருந்து வரவழைக்கப்பட்ட வேளாண்-போர்க்குலத்தவரை விஜயநஜர அரசு, அதுவரைக்கும் வேளாண்மைக்கு வராத வறண்ட பகுதிகளில் அமர்த்தியது. அக்குலத்தவர் கோயம்புத்தூர், வருஷநாடு, திண்டுக்கல், திருநெல்வேலி போன்ற பகுதிகளில் அமர்த்தப்பட்டனர். அவர்களோடு சேர்த்து கடினப்பாறைகளை உடைத்து கிணறு தோண்டும் போயர் என்ற குட்டையான இனத்தினரும் அழைத்து வரப்பட்டனர். கிணற்றிலிருந்து கவலை பூட்டி நீர் இறைப்பதற்கானத் தோல்பையினைத் தைக்கும் கன்னடம், தெலுகு பேசும் சக்கிலியரும் புலம் பெயர்ந்து வந்தனர். இதுபோன்ற வட்டாரங்களில்தான் பின்நாட்களில் பாளையக்காரர்கள் உருவாயினர். இவர்கள் முன்பிருந்த ஆட்சிமுறையினை மாற்றி யமைத்தனர். இவர்களுடன் பழைய வட்டாரத் தலைவர்களும் இணைந்து அரசியல் கூட்டணியினை உருவாக்கினர். இவ்வட்டாரங்களில்தான் பிற்காலத்தில் பருத்தி போன்ற பணப்பயிர்களின் விளைச்சல் பிரிட்டி ஷாருக்காக விளைவிக்கப்பட்டது. இப்பாளையக் காரர்கள் முன்பிருந்த ஊர்முறை, நாடுமுறையினை ஒழித்து ஒவ்வோர் கிராமத்திலும் ஆயகார் முறையினை உருவாக்கினர். இங்குதான் சாதியினை நுண்ணிலைப் படுத்தி நாட்டாமைகளும், ஆண்டைகளும் உருவாயினர். இவர்கள் முன்பே இருந்த நிலவுடைமையாளர்கள். இந்நாட்டாண்மைகளோடு கைகட்டி, வாய்பொத்தி சேவகம் செய்யும் ஓர் அலுவல்முறை உருவாக்கப் பட்டது. அதில் கர்ணம், காவல்காரர், கொல்லர், பூசாரி, தச்சர் போன்றோர் இயங்கினர். இவர்கள் ஊரினையும், ஊர்க்கோயிலையும் சுற்றி சுற்றி வரும் உளவாளிகளாவர். இவர்களுடன் தேவதாசி முறையும் ஊதாரித்தனமாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டது. இவர்கள் அனைவரும் நெய் யுருண்டைச் சோற்றுடன் கோயிலுக்குள் கூடிக் கும்மி யடித்தனர். கோயிலுக்குள், இக்கும்மாளத்தில் எந்த சாதிபேதமும் இல்லை. ஆனால், வெளியில் மக்களுக்கு சாதிவெறியினை பொய்யூற்றி வளர்த்தனர். அங்கு, ஏற்கனவே ஒரு மேட்டிமைச் சமூகம் உருவாகியிருந்தது. தின்பதற்கும், தினவிற்கும் தீனி கிடைத்தது. இச்சூழலில் தான், கர்நாடக இசை, ஆட்டம், பாட்டம், கூத்து, கும்மாளம் என்று நாயக்கர் மகால்கள் நிரம்பி வழிந்தன. எல்லா சாதிப்பெண்களையும் ருசித்துவிடத் துடித்தனர்.

நிலவரித்திட்டம்

கம்பெனியரசு நிரந்தரமான நிலவருவாயினைப் பெறுவதற்கே நிரந்தர நிலவுரிமை / நிலவரிமுறையினை அறிமுகப்படுத்தியது. தென்மாவட்டங்களில் பாளையக் காரர்கள், வடமாவட்டங்களில் கிராமியத் தலைவர்கள், நதியோர மாவட்டங்களில் மிராசிகள் என்று மூவகை யான உற்பத்தி அலகுகள் அமைந்திருந்தன. புதிய, நிரந்தர நிலவரித் திட்டத்தினை பாளையக்காரர்களை ஒடுக்கியவுடன் அரசு அறிமுகப்படுத்தியது. 1802ல் இத்திட்டத்தால் இருமுறைகள் அறிமுகப்படுத்தப் பட்டன. அவை: ஜமீந்தார் முறை, மிட்டாதார்முறை. ஒடுக்கப்பட்ட முன்னாள் பாளையக்காரர்களே ஜமீன் தார்களாவர். இவர்களின் காவல் அதிகாரம் பறிக்கப் பட்டது. பாளையம், ஜமீன் என்று புதுப்பெயர் பெற்றது. வணங்கமறுத்த பாளையக்காரர்களின் பாளையங்கள், நாணல் போன்றும், புல்லினைப்போன்றும், புழுவினைப் போன்றும் வாகாக நெளிந்து கொடுத்த, கொழுத்த பாளையங்களுடன் இணைக்கப்பட்டன. விளையாத நிலங்கள் கூடுதல் விளைச்சலுக்கு கிடைத்தன. ஆனால் இவர்கள் வரிவசூலில் கம்பெனிக்கு மூன்றில் இரண்டு பங்கு தரவேண்டும். இவர்கள், தங்கள் கீழுள்ள குடிகளிடம் வசூலிக்கும் வரி முறையாக நிர்ணயம் செய்யப்படவில்லை. இங்குதான், வரி வசூலிக்க சாதி, சம்பிரதாயம், பணபலம், ஆள்பலம் போன்றவை இடம்பிடித்தன. மிட்டாதார் முறை திண்டுக்கல், சேலம் போன்ற பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இவர் களுக்கு அரசு, நிலங்களை பருத்தி விளைச்சலுக்கு ஏலம் விட்டது. மிட்டாதார்கள் புதிய நிலவுடைமையாளர் களானார்கள். இப்படி, அரசு தங்கள் பருத்தித் தேவைக்காகப் புதிய நிலவுடைமையினை உருவாக்கியது.

நிரந்தர நிலவரித்திட்டத்தினை அமல்படுத்து கையில் நில அளவையில் சிக்கல் எழுந்தது. கொடை மாவட்டங்களில் இம்முறையினை அமல்படுத்துதற்கு திப்புசுல்தான் காலத்து ஆவணங்கள் பெரிதும் பயன் பட்டன. ஆனால், பிற இடங்களில் மணியக்காரரும், பட்டாமணியரும், தவறான அளவீடுகளைக் கொடுத்து சிக்கலுண்டாக்கினர். குறிப்பாகக் கிராமக் குத்தகைத் திட்டம் மணியக்காரருக்குச் சாதகமானத் திட்டம் என்று கண்டிக்கப்பட்டது. நிரந்தர நிலவரித்திட்டம் புதிய நிலவுடைமையாளர்களை உருவாக்கியது. இவர்கள் ஏற்கனவே இருந்த நிலவுடைமையாளர்களின் பங்காளி களே ஆவர்.

இங்கிலாந்தில் உருவான தொழிற்புரட்சியும், 1813ல் இருந்து முதலாளிகளும், வணிகர்களும் இந்தியாவில் தடையின்றி வணிகம் செய்யலாம் என்ற சட்ட ஒழுங்குமுறையும் இந்தியாவிலும், தமிழகத்திலும் மாற்றத்தினை உருவாக்கின.

இங்கிலாந்து, ஐரோப்பாவில் பிற நாடுகளுடன் போரிடும் செலவினை ஈடுகட்டுதற்கு பிரிட்டிஷ் இந்தியா, பிரிட்டன் என்ற தாய் நாட்டிற்கு ஆண்டு தோறும் பணம் அனுப்பும் ஏற்பாட்டினைச் செய்தது. இதற்கான வரிவசூல் இங்குள்ள வேளாண்குடிகளின் தலையிலேயே விடிந்தது. இந்த வரிவசூல் பணமாகச் செய்யப்பட்டது. இதனால் குறுநில விவசாயிகள் கூடிய வரையில் விளைபொருளினை விரைவாக விற்றனர். இது அவர்களுக்கு நட்டம். பண்ணையார்கள் சேமித்து வைத்து நாள்கடத்தி விலைக்கு விற்றனர். 1830-40களில் பெருவிவசாயிகள் தரும் விலை மோசமானதாக இருந்தது என்று மிசினரிகளும், அதிகாரிகளும் குறிப்புகள் எழுதினர். நிலவரி 45% முதல் 50% வரைக்கும் மேலாக இருந்தது. இவர்கள் வரிவசூலின்போது பாசனவசதி, நீர் வளம், மழையளவு போன்றவற்றை கணக்கில் கொள்ள வில்லை. வரியின் கொடுமையில் இடைக்காலத்தில் வேளாண்குடிகள் ஊரைவிட்டு ஓடியதுபோல் ஓடினர்.

வேளாண் கிளர்ச்சி

1802லேயே பரமகால் மாவட்ட வேளாண்குடிகள் வரிக்கொடுமைக் காரணமாக அரசிற்கு மனு கொடுத்தனர். அரசு அதற்கான பதிலைச் சொல்லாததால் இவர்கள் கிளர்ச்சியில் இறங்கினர். அரசு ராணுவத் தினைக் கொண்டு கிளர்ச்சியினை ஒடுக்கியது. தென்னாற்காட்டில் ஒரு சிறுவிவசாயி வரிகட்டாததால் அடித்துக் கொல்லப்பட்டார். கிராமக் குத்தகை என்ற பெயரில் பெரும் நிலவுடைமையாளர்கள், விவசாயி களைச் சுரண்டி ஏமாற்றியதை எதிர்த்தனர். பணமாக வரிவசூல் வேண்டாம் என்று 1815 ல் திருநெல்வேலியில் வேளாண்குடிகள் எதிர்த்தனர். வல்லநாட்டிலும், சேரன்மாதேவியிலும் அமானி முறையினை அமல்படுத்த வேண்டினர். அரசு ஒடுக்கியதால் விவசாயிகள் திருவாங் கூருக்கு ஓடினர். 1816ல் தஞ்சாவூர் மாவட்டத்தில் 150 கிராமங்கள் வரியினை பணமாக செலுத்தாமல் கிளர்ச்சி செய்தன. இதனை அரசு கண்டுகொள்ள வில்லை. 1827ல் சீர்காழியில் வரியினைக் குறைக்கச் சொல்லிக் கிளர்ந்தனர். 1837ல் மயிலாடுதுறை தாலுகாவில் விவசாயிகள் பயிரினை அறுவடை செய்யாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அரசு அலுவலர்களுக்கும், விவசாயிகளுக்கும் கைகலப்பு வந்தது. 1842ல் தென்னாற்காடு மாவட்டத்தின் ஆட்சியர் விவசாயிகள் வீட்டைச் சுற்றிப் பயிரிடும் காய்கறிச் செடிகளுக்கும் வரியிட்டார். இதனால் ஆட்சியர் மேல் அழுகிய முட்டைகளையும், கற்களையும் வீசி கலகம் செய்தனர்.

நன்செய் வட்டாரங்களும் புன்செய் வட்டாரங்களும்

தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, செங்கற்பட்டு போன்ற நதிபாயும் வட்டாரங்களில் சமூக அடுக்குகள் பலமாக இருந்தன. அங்கு அடிமைகள், கூலி விவசாயிகள், வேளாண்குடிகள், நடுத்தர விவசாயிகள், கொழுத்த நிலக்கிழார்கள், பெருநிலக்கிழார்கள் என்ற சமூக கட்டமைப்பு இயங்கியது. இவர்கள்தான், இங்கு உற்பத்தி அலகுகளை உருவாக்கினர். நிலங்களைச் சமதளப்படுத்தி வாய்க்கால் வழியே நதியினின்றும் நீரினை வாய்க்கால்களுக்கு கொணரவேண்டும். இடை வெளியிலுள்ள முட்புதர்களையும் அகற்ற வேண்டும். நாற்று நடுதல், களையெடுத்தல், அறுவடைசெய்தல், உழவு மாடுகளை பராமரித்தல், வண்டிகளைச் செப்பனிடுதல் போன்ற பலவேலைகள் உண்டு. இவ் வேலைகளுக்கு பெருமளவில் உழைப்புத் தேவைப்படும். இதுதான் நதிதீரங்களின் மக்கள் பெருக்கத்திற்குக் காரணம். இங்கு நெல்மட்டுமே முதன்மையானப் பயிர். மாறாக, நீர்வளமற்றப் பகுதிகளில் கம்பு, சோளம், தினை போன்றவற்றைப் பயிர்செய்தனர். இதனை, சிறுநில விவசாயிகள் தாமே உழைத்து விளைவித்தனர். இங்கு சமூக அடுக்குகள் குறைவு. ஆனால், வறண்ட நிலப்பகுதிகளிலும் பெருநிலமுடையோர் வாராம் தாரமுறை மூலம் தம் ஆதிக்கத்தினைச் செய்தனர். 1835ல் சேலம் மாவட்டத்தில் 50% நிலக்கிழாரும், கோயம்புத்துரில் 65% நிலக்கிழாரும் வாரம்தார் முறையில் பயிர்செய்தனர். வாரம்தார் முறையில் நிலக்கிழார் -> உழுகுடிகள் -> புறகுடிகள் -> என்று சமூகப்படிநிலை இருந்தது. இவரில் புறகுடிகள் ஒப்பந்த அடிப்படையில் ஓரிரு ஆண்டுகள் இந்நிலங்களில் பயிர்த்தொழில் செய்ய அணுமதிக்கப்பட்டனர்.

நிலத்தாரும் வாரம்தாரும்

நிலமுடையோர் பயிருக்கு ஏற்ப நிலத்தினைச் சீர்செய்தல், பாசனவசதி செய்தல், களையெடுத்தல் போன்ற செலவினை ஏற்பர். இவர்களிடமிருந்து அந்நிலத்தினை குத்தகைக்குப் பெற்ற வாரம்தார் விதைத்தல், நடுதல், அறுவடை போன்ற வேலைகளைச் செய்வர். விளைச்சலை சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பிரிப்பர். விதை, கால்நடை, உழுகருவிகள் போன்றவற்றை வாரம்தார் ஏற்க வேண்டும். இம்முறை தமிழகம் முழுக்க பின்பற்றப்பட்டது. ஆனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் வாரம்தார்களே அனைத்து செலவுகளையும் ஏற்க வேண்டும். இப்படி இடைநிலை விவசாயிகள் பெரிதும் அவதியுற்றனர். இவ்வளவு உழைப்பையும் செய்து தஞ்சாவூர் மாவட்டத்தில் வாரம்தார் 22% முதல் 32% மட்டுமே விளைச்சலில் பங்கு பெற்றனர்.

காலனிய காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரயத்வாரிமுறையில் கூட்டுடமை உடைக்கப்பட்டு தனியுடைமை உருவாக்கப்பட்டது. இதனால் உற்பத்தி அலகுகளில் சேர்ந்து உழைக்கவேண்டிய விவசாயக் கூலிகள் தனியுடைமையாளர்களுக்கு அடிமைகளாய்ப் போய்ச்சேரவேண்டிய நிலை உருவானது. ஆனால், வாரம்தார் என்ற குத்தகைதார்கள் விளைச்சல் இல்லாத காலங்களில் நூல்நூற்றல், நெசவு போன்ற பிற கைத் தொழில் வேலைகளில் ஈடுபட்டனர். இந்தத் தொழில் தெரிந்த இடைத்தட்டு தம் வாழ்நிலையினை இப்படிச் சரிசெய்து கொண்டது. இவ்வாரம்தார்கள் பெரும் பாலும் சாதியச்சூழலில் இடைச்சாதியினர் ஆவர். இவர்களுக்கு இந்நிலைமையில் உள்ளவர்கள் பிரிட்டிஷ் ஆவணங்களில் பண்ணையாட்கள் என்று சுட்டப்படு கின்றனர். தஞ்சாவூர், திருச்ச்சிராப்பள்ளி, செங்கற்பட்டு போன்ற மாவட்டங்களில் உள்ள மிராசி கிராமங்களில் இவர்கள் நிலை மோசமாக இருந்தது.

மிராசி கிராமங்கள் தொண்டைமண்டலத்தில்தான் முதலில் தோன்றியிருக்கவேண்டும் என்றும், பிற வட்டாரங்களில் இருந்து அங்கு குடியேறிய வேளாண் குடிகளுக்கு பணிசெய்ய இவர்களும் அணுப்பப்பட்டு இருக்கவேண்டும் என்றும் Francis Whyte Ellis சொல்வதாக இந்நூலாசிரியர் பதிவு செய்கிறார். இம்மிராசி குடும்பங்கள் கூட்டுடைமைகளைக் கொண்டிருந்தன. இதனால், இவர்களை அண்டியிருந்த பண்ணையாட்களை கூட்டுடைமையாளர்கள் விற்க முடியாது. 1820க்குப் பிறகு பின் தனியுடைமைச் சட்டம் வந்த பிறகு பண்ணையாட்களை விற்க முடிந்தது. இவர்களின் சமூகநிலை, விற்கப்பட்டாலும் இல்லை யென்றாலும் ஒன்றுதான். ஏனெனில் விற்போரும், வாங்குவோரும் பங்காளிகளே. இப்படி பண்ணை யாட்களை வைத்து வேலை வாங்கிய நிலவுடைமைச் சமூகத்தில் இருந்து வந்தோரே துபாஷிகள். இவர்கள் அக்காலத்திய அதிகாரிகளுடன் கூட்டணியமைத்து ஆளுநருக்கு லஞ்சம் கொடுத்து தாங்கள் விரும்பிய அதிகாரிகளைப் பணியமர்த்தினர். ஆங்கிலோ-இந்தியக் கூட்டுக் களவாணித்தனம் இப்படி வெளிப்பட்டது. இப்படி பணம் கொடுத்து வந்த அதிகாரிகள் நேரே களத்திற்குச் செல்லாமல் தம் கீழ் பணியாற்றிய தாசில்தார், கர்ணம், முன்சீப் மூலம் பண்ணையாள் பற்றிய செய்திகளைச் சேகரித்தனர். இந்த இரண்டாம் நிலை அலுவலர்கள் பண்ணையாட்களை வைத்து வேலை வாங்கிய நிலவுடைமைச் சமூகத்திலிருந்து வந்தவராவர். இதனால், இவர்கள் பண்ணையடிமை பற்றிய அறிக்கைகளை அரசுக்கு சரியாகத் தரவில்லை. இதனால், இங்கு அடிமை முறையினை ஒழிக்க முடியாமல் போனது. இப்படி ஆங்கில அதிகாரிகளும், தமிழக அதிகாரிகளும் ஒன்றுகூடி உழட்டினர்.

அக்காலத்தில் அடிமைகள் பற்றி மிசினரிகள் தரும் செய்திகளும் ஆங்கில அதிகாரிகள் தரும் செய்திகளும் முன்பின் முரணாக இருந்தன.

காலனிய ஆட்சியின் ஆரம்பக்கட்டத்தில் பாரம் பரியமான நிலவுடைமையாளர்கள் செல்வாக்கு ஓங்கியிருந்தது. இவர்கள் பெரும்பாலும் நதியோரங் களில் இருப்பவர். பிறகு போர்க்குலத்தவரான கள்ளர், நாயக்கர், ரெட்டி போன்றோர் நிலவுடைமையாளர் ஆயினர். இவர்கள் வறண்ட பகுதிகளை ஆண்டு பயிர் செய்தனர். தஞ்சாவூர் பகுதியில் ஹைதர்அலியின் போருக்குப் பின்பு புதிய நிலவுடைமையாளர்கள் சாதியக் கட்டமைப்புகளை உருவாக்கி எழுந்தனர். மேற்சொன்ன புதிதாகத்தோன்றிய அனைத்து நிலவுடைமையாளர் களின் பண்ணைகளிலும் பண்ணையாட்களே உழைக்க வேண்டியிருந்தது.

வணிகச் சீமான்கள்

தமிழக வரலாற்றில் நிலவுடைமையும், வணிகமும் இணைந்தே தொழிற்பட்டன. செம்மொழிப்புலவர் களில் பலர் கிழார் பட்டம் கொண்டவர்; பலர் வணிகராய் இருந்தனர். இவர்களின் பாக்களில் சில வடமொழிகளின் சொற்களும், வடக்கத்தியப் பண்பாட்டுக் கூறுகளும் இருப்பதால் இவர்களை இருமொழி, பன்மொழிப் புலமையோர் எனலாம். இவர்கள் அரசர்க்கும், மக்களுக்கும் இடையில் புழங்கினர் என்பதனையும் அறிவோம். இதே போன்று, காலனிய ஆட்சியில் துபாஷிகள் என்ற இருமொழி வல்லுநர்கள் நிலவுடைமை சார்ந்த வேளாண் குடும்பங்களில் இருந்தே வந்தனர். இவர்கள் மக்களிடையே அரசுக்கான ஏஜண்டுகளாய் இருந்தனர். நான்கு, ஐந்து மொழிகளில் வணிகத்திற்குத் தேவையான அறிவினைப் பெற்றிருந்தனர். தெலுகு பேரிச்செட்டி, தெலுகு பிராமணர்கள், யாதவர்கள் துபாஷிகளாய் இருந்தனர். இவர்கள் அரசியல் அந்தஸ்தினை ஆங்கிலேயருடன் இணைந்தும், பெருளியல் அந்தஸ்தினை நிலவுடைமையாளராக ஆகியும், சமூக அந்தஸ்தினை கோயில்கள் கட்டியும் அடைந்தனர். இவ்வாறு நிலவுடைமையாளர்கள் வணிகராக மாறி, பிறகு கோயில் நிர்வாகிகளாயும் மாறினர். கம்பெனி அரசும் இவர்களோடு சேர்ந்து கும்மி அடித்தது. சனாதனிகளுடன் அனுசரணையாக இருக்க விரும்பியது. இதனை மிசினரிகள் விரும்பவில்லை. இதனால், அதிகாரிகளும், மிசினரிகளும் மோதினர். இதில் இங்கிலாந்து அரசு தலையிட நேர்ந்தது. பத்திரிக்கை சுதந்திரத் தடையினால் எளிய மொழி நடையில் சமயப் பிரச்சாரத்தினைத் தெருமுனைகளில் நடத்தினர். இவர்கள் இந்து சமயத்தினைக் கடுமையாக விமர்சித்ததால், வணிகமேட்டிமை சமூகத்தினர் பதில் கொடுக்க Madras Literary Associationஐ நிறுவினர். Karnatic Chronicle, Madras Chronicle போன்ற பத்திரிக்கைகளைத் தொடங்கினர். மிசினரிகள் மதம் மாறிய கிறித்தவர்களை அரவணைத்ததால் சனாதனிகள் மதம் மாறியவர்களையும், பறையர் சமூகத்தினரையும் விமர்சித்தனர்.

1837ல் Scottish Christian missionaryன்Saint Anderson என்பவர் தாம் நிறுவிய பள்ளியில் பறையர் குழந்தைகளைச் சேர்த்ததற்காக சனாதனிகள் தங்கள் குழந்தைகளைப் பள்ளியினை விட்டு விலக்கிக் கொண்டனர். அப்போதைய துபாஷி பச்சையப்ப முதலியார் இந்துக்களுக்கு ஒரு பள்ளியினைத் துவக்கினார். மதம் மாறிய கிறித்தவ, இஸ்லாமிய வாரிசுகளுக்கு பரம்பரைச் சொத்தில் பங்குண்டு என்ற சட்ட வரையறை ஒன்றினை அரசு கொண்டுவந்தது. இதனை சீனிவாச பிள்ளை, கஜுலு நரசு செட்டி போன்ற வணிகப்பிரமுகர்கள் இந்துக்களைத் திரட்டி கிளர்ச்சி செய்தனர். அக்காலத்திய சமூக, சமய நடவடிக்கைகளை இவ்வகை மேட்டிமையாளரே செயற்படுத்தினர்.

1800-1850 ஆண்டுகளில் சமூக அடுக்கு பின் வருமாறு இருந்தது. பாரம்பரிய நிலப்பிரபுக்கள் (பிராமணர், வெள்ளாளர்) அடுத்த நிலையில் நிலவருவாய்த் திட்டத்தில் பயன்பெற்ற இடைச் சாதியினர், நிலவுடைமையும்-வணிகமும் மேற்கொண்ட சாதியினர் (இவர்களில் பெரும்பாலோர் தெலுகு, கன்னட மொழி பேசுவோர்) ஏஜண்டாகவும், இடைத் தரகராகவும் செயற்பட்ட துபாஷிகள், மதம் மாறியவர். சுருக்கமாக, பரம்பரை நிலவுடைமையாளர், புதிய நிலவுடைமையாளர், துபாஷிகள், உழுகுடிகள், பண்ணையாட்கள், மதம்மாறிய கிறித்தவர், கூலிகள்.

1850க்குப் பிறகு காலனிய இந்தியா வேரொரு களத்திற்குச் சென்றது. அய்ரோப்பாவில் தொடர்ந்து நடந்த போரில் பெருஞ்செல்வத்தினை இழந்த காலனி அரசு அதனை மீட்க முடிவெடுத்து இந்தியாவை தொழில்மயமாக்க முயன்றது. இதற்கான முதற் கட்டமைப்பு போக்குவரத்துப்பாதைகள். இந்தியாவின் நவீனமயமாக்கலுக்கு முதல் குரல் கொடுத்தவர் இங்கிலாந்தில் இருந்த cotton supply association. தொடர்ந்து இந்தியாவில் மூலதனமும், தொழில் நுட்பமும், இயந்திரப் பொருள்களும் இந்தியாவிற்கு வந்திறங்கின. குறைந்த விலையில் மூலப்பொருள்களும், குறைவான கூலிக்கு இங்கு ஆள்கள் கிடைத்ததுமே இதற்குக் காரணமாகும். 1858ல் விக்டோரியா பிரகடனம் இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு வழிவிட்டது. இந்தியாவை, நவீனமயமாக்கக்கூடாது என்று பிறிதொரு பிரிவினர் விரும்பினர். பணப்பயிர் விளைச்சலுக்கான பாசன வசதிகளையும், போக்குவரத்து வசதிகளையும் அரசு உருவாக்க முன்வந்தது. சென்னை மகாணத்தின் ஆளுநர் நேப்பியர் திருநெல்வேலிப் பகுதியில் நூற்பாலைகள் தொடங்கலாம் என்றார். ஆங்கிலேயர்கள் பணப்பயிர்களான பருத்தி, காப்பி, தேயிலை, ஏலம் போன்றவற்றில் முதலீடு செய்தனர். தென்கிழக்காசிய நாடுகள் முழுக்க இப்படி முதலீடு செய்தனர்.

இங்கிலாந்தில் பருத்தியின் தேவை அதிகரித்ததால் மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் போன்ற இடங்களில் உள்ள கரிசல்மண் பகுதிகளில் பருத்தி பயிரிடுதல் கூடுதலாயிற்று. இதனால், இதுவரைக்கும் நீர்ப்பாசனத்திற்கு வராத நிலங்களையும் விளைச்சலுக்குக் கொண்டுவந்தனர்.

கம்பெனி அரசு 1850 வரைக்கும் சுதேசி அரசு களுடன் போரிட்டு காலம் கடத்தியதால் நிதித் தட்டுப் பாடும், நீர்ப்பாசனத்துறையும் கெட்டது. உலகம் தொழில்மயமானவுடன், இந்தியாவின் கச்சாப்பொருள்களின் தேவை அதிகரித்தது. இதனால், பாசன வசதியினைப் பெருக்கினர். இது புதிதாக ஆலைகள் தொடங்குவோருக்கும், நிலவுடைமையாளர்களுக்கும் பெரிதும் உதவின. ஆர்தர் காட்டன் எடுத்த முயற்சியில் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, தென்னாற்காடு மாவட்டங்கள் பயன் பெற்றன. இதனால், அரசின் வருவாய் பெருகியது.

வேளாண்மைக்கு வராத நிலங்களை மிராசிகளிடமிருந்து மீட்டு பைகார்கள் எனப்படும் புதிய நிலவுடைமையாளர்களுக்கு அரசு பிரித்துக் கொடுத்தது. இதனை மிராசிகள் கடுமையாக எதிர்த்தனர். தஞ்சாவூர், செங்கல்பட்டு போன்ற இடங்களில் இதுபோன்ற நிலங்கள் இருந்தன. இவற்றை அரசு, தனதுடைமை யாக்கி புதிய நிலவுடைமையாளர்களுக்கு கொடுத்ததன் மூலம் தன் வருமானத்தினைப் பெருக்கிக் கொண்டது. 1863ல் அரசு தரிசு நிலங்கள் மீட்பு என்ற திட்டத்தினைப் பயன்படுத்தி இதனைச் செயற்படுத்தியது. இது செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி சாதியினரை பண்ணையார்கள் ஆக்கியது. 1885க்குள் 45% வன்னியர்கள் சிறுவிவசாயிகள் ஆயினர். திருவண்ணா மலைப் பகுதியில் ரெட்டிகள், கிறித்தவராக மாறி யவர்கள் நிலம் பெற்று சிறுவிவசாயிகள் ஆயினர். தஞ்சாவூர் மாவட்டத்தில் நிலவுடைமையாளர்கள், வணிகராகவும் உருவெடுத்தனர். இதற்காக நெல் அரவை மில்லுகளை நிறுவி பெருமளவில் அரிசியினை காலனிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர். வடாற்காடு, தென்னாற்காடு மாவட்டங்களில் இருந்து அரிசி சென்னைத் துறைமுகம் வழியே ஏற்றுமதியானது.

வறண்ட பகுதிகளில் ரயத்துகள் பருத்தியினை விளைவித்தனர். 1860ல் இதன் விளைச்சல் அதிகமானது. கரிசல்மண் நிறைந்த மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களிலும் கோயம்புத்தூரிலும் இதன் விளைச்சல் அதிகமானது.

1870களுக்குப் பின் உருவான பஞ்சத்தாலும், பொருளாதர மந்தத்தாலும் விவசாய கூலிகள், வாரம்தார்கள், சிறுநிலவுடைமையாளர்கள் போன்றோர் பெரும் பாதிப்பிற்கு உள்ளாயினர். இதனால், பலன் பெற்றவர் பெருநிலவுடைமையாளர்கள், தானிய வணிகர்கள், வட்டி முதலாளிகள் போன்றோர். இவர்கள் விளைபொருள்களைப் பதுக்கிக் கூடுதலான விலைக்கு விற்றனர். வறண்ட நிலப்பகுதிகளில் பணப்பயிர் விளைச்சலால் தரகு, வட்டித்தொழில் செய்வோர் பயன்பெற்றனர். பணப்பயிர் விளைச்சலால் வணிகச் சாதிகள் உருப்பெற்றனர். பலிஜா நாயுடுகள், தேவாங்கர்கள், பேரிச்செட்டிகள் போன்றோரும், நாடார்கள், நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் போன்றோரும் வட்டித்தொழிலில் ஈடுபட்டனர். செட்டிகளும், பிராமணரும் வட்டித்தொழிலோடு வணிகத்திலும் ஈடுபட்டனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சாதிகளுக்கு பெரும் மதிப்பு இருப்பதாக எண்ணி ஒவ்வோர் இனத்தினரும் தம் தம் மேட்டிமையினைக் காட்டத் துடித்தனர். இருவகையில் இதனை செயற் படுத்தினர்: (1) சாதிகளுக்குள் தம் மேட்டிமையினைக் காட்டுவது (2) சாதியினை விடுத்து வருணப்பிரிவில் தம் மேட்டிமையினைக் காட்டுவது. வெள்ளாளருடன் இணைத்து, பள்ளர்கள் தம்மைத் தேவேந்திரகுல வேளாளர் என்று அழைத்துக் கொண்டனர். மதுரையில் பணிக்கர்கள் தம்மை இல்லத்துப் பிள்ளைமார் என்று அழைத்துக் கொண்டனர். கோயில் பணிசெய்வோர் தம்மை இசை வேளாளர் என்று சொல்லிக்கொண்டனர். இது சாதிக்குள் இருந்து தம் உயர் நிலையினைக் காட்டுதல். வடக்கில் வன்னியரும், தெற்கில் நாடாரும் வருணமுறையினை ஏற்று தம்மை சத்திரியர் என்று சொல்லிக்கொண்டனர். இதில் வெள்ளாளர்கள் நல்ல பிள்ளைகளாக சாதியினையும் ஏற்று, வருணத்தினையும் ஏற்று சத்-சூத்திரர் என்ற நாமத்தினைச் சூடிக் கொண்டனர்.

1750 முதல் 1800 வரை தமிழகத்தின் இயக்கம் என்பது அதிகாரத் தளத்திலேயே இயக்கப்பட்டுள்ளது. நிலம் வைத்திருப்போர், போர்க்கருவிகள், குதிரைகள் வைத்திருப்போர், வணிகப்பொருள்களும் வண்டியும் வைத்திருப்போர், கோயில் நிறுவனங்களை அண்டி வாழ்வோர், கோட்டைக் கொத்தளங்களில் நின்று வாழ்வோர் இவர்களே சமூகத்தினை இயக்கியோர் ஆவர். மிசினரிகள்கூட மேல்நிலையிலேயே இயங்கி யுள்ளனர். பிஷப் ஹீபருக்கும், வேதநாயக சாஸ்திரிக்கும் அரண்மனை சகவாசம் உண்டு. முதல் சுற்றில் இவர்கள் உயர் சாதியினருடனேயே குலாவினர். எளியோரை மாற்றமுடியவில்லையே என்ற எரிச்சலைத்தான் அபே துபே கொட்டித்தீர்த்தார்.

முதல் சுற்றில் கம்பெனியாரை தமிழக மக்கள் மூர்க்கமாக எதிர்த்தனர். கம்பெனியின் திட்டம் இவர்களுக்குப் பிடிபடவில்லை. ஐரோப்பியரை ஒரு சாதியினராகவே நினைத்தனர். எவர் அதிகாரம் செய்தாலும் அவர்பின் ஓடியே பழக்கப்பட்ட தமிழக மக்கள் 1800-1850 காலக்கட்டங்களில் கம்பெனியார் பின் சென்றனர். அவர்களுடன் இணக்கமாகிக் கொண்டனர். பாளையங்கள் ஒழிந்தன. ஆனால், விவசாயிகள் மீதான கொடுமைகள் ஒழியவில்லை. அப்பொறுப்பினைக் கம்பெனி எடுத்துக்கொண்டது. 1857 வரை கம்பெனியார் பெரும் குளறுபடிகளைச் செய்தனர். ஆய்வாளர்கள் அவர்களை ஆட்சியாளர்கள் என்று கணிப்பதனை மீள் பார்வையிட வேண்டும். அவர்களைத் திட்டமிட்டக் கொள்ளையர்கள் என்றே சொல்லலாம். அவர்களோடு இணங்கிப்போனவர் பலன் பெற்றனர்; விலகி நின்றவர் துயருற்றனர். அவர்கள் எதனைச் செய்தாலும் அதில் உள்நோக்கமும், சுயநலமும் இருந்தது. பல நூற்றாண்டுகள் இந்தியாவினை ஆளப்போகிறோம்

என்ற எண்ணத்திலேயே சில சீர்திருத்தங்களையும், தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்தினர். இந்தியாவினை ஆண்டதால், பிரிட்டனில் எழுந்த வேலையில்லாத் திண்டாட்டத்தினை எளிதில் சமாளித்தனர். மக்களின் அன்றாடத் தேவையினை பூர்த்தி செய்யும் வேலையும் முடிந்தது. இந்தியா அவர்களுக்கு சந்தையாகவும் அமைந்தது; மூலப்பொருள்களை வழங்கும் கேந்திரமாகவும் அமைந்தது. இந்தியாவை மையக்கேந்திரமாக வைத்து ஆப்கான், பர்மா போன்ற நிலப்பிரதேசங்களைக் கைப்பற்றுதல் எளிதாக அமைந்தது. இப்படியரு தோதான ஆடுகளமாக இந்தியா ஆங்கிலேயருக்கு 1800 முதல் 1947 வரை வாய்த்தது. மக்கள் கணக்கெடுப்பு என்ற பெயரில் தொடங்கிய சாதி-சமயப்பெயர்களைச் சொல்லி இந்தியரைத் தொடக்கத்தில் பிரித்தனர்; ஆனால் அதுவே தேசியப் போராட்டத்தில் இந்தியரை ஒருங்கிணைத்தது.

14/07/2014 அன்று ஏ.வி.சி.கல்லூரி (தன்னாட்சி), மன்னம்பந்தல், நாகபட்டினம் மவட்டம், வரலாற்றுத் துறையில் reading forum என்ற அமைப்பின் சார்பில் நிகழ்ந்த இக்கல்வியாண்டிற்கான சிறப்புக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் எழுத்துருவம்.

Pin It