நார்வேஜிய நாடகம் மற்றும் திரைப்பட இயக்குநர் இக்மர் பெர்க்மென். அவர் தனது தயாரிப்புகளில் கிறித்தவ மதப் பழமைவாதிகள் இம்மண்ணில் விதைத்த கருத்துகள் எவ்வாறு ஹிட்லர் உருவாகக் காரணமாயிருந்தன என்பதை விளக்கியவர். ஹிட்லரின் தற்காலத் தோற்றம்தான் ஜார்ஜ் புஷ் என்பதை சின்னக் குழந்தைகள்கூட எளிதாகச் சொல்லி விடும். இந்தியரின் பக்திமார்க்கமும் இதிகாசங்களும்கூட அப்படியோர் விளைச்சலை நமக்கு வழங்கவே செய்துள்ளன. ஜார்ஜ் புஷ்ஷை ராமனாக நீங்கள் உருவகித்தால் மன்மோகன் சிங், ராம பக்தன் அனுமன்தானே. ஆரிய ராமாயணத்துக்கும் நவீன புராணத்துக்கும் அரசியல் நிலைப்பாடு, செயல்பாடு யாவும் ஒரே கோட்பாட்டிலானவைதான்.

ஹிட்லர் தன்னுடைய விஞ்ஞானிகளை அழைத்து, தன் ஆரிய மனிதனை உன்னதப்படுத்தும் பொருட்டு, ஆப்பிரிக்க நீக்ரோக்கள் குரங்குகளோடு மிக நெருக்கமானவர்கள் என்று நிரூபிக்கும்படி ஆணையிட்டான். ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்ஞானிகளோ முற்றிலும் எதிர்மறையான கருத்துக்கே வந்தனர். அதனால் தாங்கள் ஆய்வு முடிவுகளை ஹிட்லர் மறைந்த பிறகே வெளியிட்டனர். அந்த முடிவு இதுதான்: வெளித் தோற்றத்தை வைத்துப் பார்த்தாலே, நீக்ரோ இனத்தவர் மலர்ந்த உதடுகளும் ரோமங்களற்ற உடலமைப்பும் கொண்டவர்கள். ஆனால் ஆரியர்களோ ஜடா முடியும் தாடியும் மீசையும் ரோமங்களடர்ந்த உடலுமாக குரங்குகளோடு நெருங்கிய உறவினர் என்பது வெட்டவெளிச்சமாகிறது. ஆகவே குரங்கினத்தோடு நெருக்கமானவர்கள் ஆரியர்களாகத்தான் இருக்க முடியும் என்பது அவர்கள் கண்டடைந்த முடிவு. ஆனால் புராணங்கள் பொய்களையே உண்மை யாக்குகின்றன. இராமாயணம் கற்பித்தபடி இந்து சமயக் கருத்துகளுக்கும் கலாச்சாரத்திற்கும் புறம்பானவற்றைப் பின்தங்கியவையாகக் கணித்து, அவற்றுக்குரியவர்களைக் குரங்கினத்தைச் சேர்ந்தவர்களாகவே பார்க்க வைக்கிறது. ஆனால் இந்த ஆரியப் பார்வை எல்லோரையும் அவ்வாறு ஒதுக்கித் தள்ளிவிடச் சக்தியற்றது. பிகாசோ, கெகாய்ன் போன்ற நுண் கலைஞர்கள் ஆப்பிரிக்க வடிவங்களுக்கு ஒரு புதிய அங்கீகாரம் கொடுத்து அர்த்தப்படுத்தியவர்கள்.

இதிகாசங்களும் புராணங்களும் மூடத்தனங்களின் பெட்டகமாகவே அமைய வேண்டும் என்பது அவசியமில்லை. ஒத்திசைவாகவோ முரணாகவோ புதிய போக்குகளுக்கு அவை திறப்பாகவும் இருக்கக்கூடும்.

நான் 2000இல் நடந்த 9/11க்கு அடுத்த வாரத்தில் நியூயார்க் நகரில் வாழ்ந்துவரும் சில பிராமணர்களைச் சந்தித்தபோது, பின்லாடனை ராமராகவும் (அவரது கூட்டாளிகளை வீரக் குரங்குப் படைகளாகவும்) ஜார்ஜ் புஷ்ஷை ராவணனாகவும் பாவிப்பதே சரி என்று கூறினேன். ஆனால் அவர்களுக்கு அது ஏற்புடையதாக இல்லை. காலங்காலமாக அவர்களிடம் படிந்துபோன பெயர்ப் புனிதங்கள் அவர்களைக் குழப்பி விட்டுள்ளன. பாவம், அவர்களுக்கு நிஜமான இராமாயணம் இப்போது ஈராக்கில் நடப்பது போலத்தான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்பது தெரியாது. நம் நாட்டிலும் ஒன்றல்ல, பலப்பல இராமாயணங்கள் உண்டு. அண்மையில் 'நீனா பலேஃ சீதாயணா என்னும் கார்ட்டூன் வடிவத்திலான படத்தை இயக்கியுள்ளார். (http://www.ninapaley/.com/sitayana/epic.php) கதையை நம்முன் விரித்து வைக்கிறது.

அமெரிக்க நாட்டுக் கலாச்சாரத்தின் முக்கிய சாராம்சமான (wild west) மாட்டு இடையரின் வீர சாகசங்கள் அமெரிக்க இந்தியரைப் பார்த்தே வடிவமைக்கப்பட்டது. இதன் நீட்சியாகவே சமீப காலத்தில் ராபின் ஹூட், ராம்போ போன்ற ஹாலிவுட் படங்கள் மத்திய தர வர்க்க மக்களிடம் செல்வாக்கு பெற்றன. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் சந்தன வீரப்பனை ராபின் ஹூட்டாகப் பார்க்க மறுக்கும் போக்கு முன்நிறுத்தப்படுகிறது. ராபர்ட் ஸ்டீவன்ஸ் எழுதிய கறுப்பு அம்பு (The Black Arrow) ஆங்கிலம் கற்றவர்களின் இதயத்தை தொட்ட ஒரு கதை. ஆனால் இவர்களே, அன்றைய ஜான் அமெண்டால் (John Amend All ) குழுவே இன்றைய பாஸ்க் தீவிரவாதிகள் (the Basque Separatist - ETA)ஆகவும், ஐரிஷ் விடுதலைப் படையாகவும் (IRA). ஈழ விடுதலைப் புலிகளாகவும் (LTTE), நாகலாந்து விடுதலைப் போராளிகளாகவும் (NPLA) செழித்து வளர்ந்துள்ளார்கள் என்பதை ஏனோ ஏற்க மறுக்கிறார்கள்.

திராவிட வரலாறு

திராவிட கலாச்சாரம், மொழியடையாளங்கள் பற்றிய ஆராய்ச்சி கால்டுவெல்லுக்கு முன்பிருந்தே தொடங்கி மேல்மட்ட ஆரியக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறவர்கள் பலரது எண்ணத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. சிந்துவெளி நாகரிகமானது திராவிடக் கலாச்சாரம், மொழியடையாளங்களை ஒட்டியே இருப்பதாக யுரிக்னோரோசோவ் (Yari V Knorozov). ஆஸ்கோ பர்போலா (Asko Parpola). ஐராவதம் மகாதேவன் போன்றவர்கள் கண்டு பிடித்துள்ளனர். சென்ற ஆண்டு ''தமிழ்” என்ற சொல்லே உலகத்தில் கூகுள் (google) என்னும் இணையதளத்தில் அதிகமாகத் தேடப்பட்டுள்ளது என்பது ஒரு கவனத்துக்குரிய செய்தி.

அண்மையில் நான் சீனாவுக்குச் சென்றிருந்தபோது கொரிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள வேர்ச் சொற்களின் ஒற்றுமையை நானும் என் கொரிய நண்பரும் மிகுந்த வியப்போடு பகிர்ந்து கொண்டோம். தமிழ், கொரியன், ஜப்பானிய மொழிகள் வெவ்வேறு எழுத்து முறைகளைக் கொண் டிருந்தாலும் அவை ஒரு குடும்பத்தைச் சார்ந்தவையாகத்தான் தென்படுகின்றன. இம்மொழிகளைச் சார்ந்த மக்கள் தங்கள் மொழிகளைப் பற்றி மேலும் பல ஆய்வுகளைச் செய்வதன் மூலமே மானுடக் கலாச்சாரம் மற்றும் மொழியின் பரிணாம வளர்ச்சி பற்றி விரிவாக விளங்கிக்கொள்ள முடியும்.

ஆஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன் போன்றோரின் வாசிப்பு முயற்சியாக சிந்துவெளி நாகரிகம் சம்பந்தமான சில திராவிட மொழி வேர்ச் சொற்களைப் பற்றி இங்கு சற்று கவனம் குவிப்பது பொருத்த முடையதாயிருக்கும். மீனைப் போல் மினுக்குவதையெல்லாம் ஒரு சேரக் குறிப்பதாகவே 'மீன்’ என்னும் குறியீடு கையாளப்பட்டுள்ளது. விண்மீன் (Star) வடமீன் (North Star) ஆகியன அதனடிமாக பெறப்படும் சொற்களே. வடத்தால், அதாவது வடக்கயிற்றால் மற்ற மீன்கள் இந்த மீனோடு கட்டப்பட்டிருப்பதால் அதற்கு "வடமீன்’ என்று பெயர் என்பதாக அது விரிகிறது. அதேசமயம் அது வடக்குத் திசையையும் குறிப்பதாகிறது.

மின்னலடிக்கும்போது இந்த விண்மீன்கள் கட்டப்பட்டிருக்கும் ஆலமர விழுதுகள் போன்ற தோற்றம் உருவகமாவதைக் கொண்டு 'மின்-ஆல்’ அல்லது 'மின்னல்’ எனும் பெயர் உருவாகிறது. விழுதுகள் தொங்கி யிருப்பதால் "அதனால்’ என்றும் வேர்ச்சொல் உருவாகிறது. சிந்துவெளி எழுத்து வடிவங்களில் 'அதனால்’ என்பதை 'நால்’ (நாலு அல்லது நான்கு) கயிறுகளைக் கொண்ட எழுத்து வடிவமாக உருவாக்கியுள்ளனர். கிரகங்களை - பற்றிக் கொள்ளக்கூடிய விண் மீன்களாகப் பார்ப்பதனடியாக 'கோள்’ என்னும் வேர்ச் சொல் கிடைக்கிறது. மின்னலடிக்கும்போது இந்த விண்மீன்கள் பிணைக்கப்பட்டிருக்கும் ஆலமரத்து விழுதுகளைப் பார்க்க முடியும் என்பது ஓர் உருவெளிக் காட்சி.அதுவே "மின்-ஆல்’ அல்லது "மின்னல்’ என்று உருப் பெறுகிறது.

விழுதுகள் தொங்கியிருப்பதால் “அதனால்” என்னும் வேர்ச்சொல் பெறப்படுகிறது. சிந்துவெளி எழுத்து வடிவங்களில் அதனால் என்பதை நால்(நாலு அல்லது நான்கு) கயிறுகளாலான எழுத்து வடிவமாகக் கொண்டு உருவாக்கு கின்றனர். கிரகங்களைப் பற்றிக் கொள்ளக் கூடிய விண்மீன்களாகப் பார்த்தால் “கோள்” என்னும் வேர்ச்சொல் உருவாகும். இது மக்கள் பிறந்த நேர விண்மீனைப் பொறுத்து, கிரகங்கள் நண்டைப்போல் பற்றிக் கொண்டு அவர்களை ஆட்டுவிக்கும் என்ற நம்பிக்கையின் பேரில் அமைந்துள்ளது. சிந்து சமவெளி எழுத்து வடிவங்களைப்பற்றி மேலும் பல விவரங்களுக்கு http://www./harappa.com/script/diction.php ஐப் பார்க்கலாம்.

இன்றைய விஞ்ஞானம்

பஞ்சாப் கலாச்சாரத்தைச் சார்ந்த இந்த நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானியான அப்துல் சலாம் இயற்பியலில் மற்ற விஞ்ஞானிகளுடன் சேர்ந்து மூன்று ஆற்றல்களை ஒருங்கிணைத்து (Grand Unification Theory) "அகண்ட ஒருங்கிணைப்புக் கோட்பாடு” என்னும் அறிவியல் தத்துவத்தைக் கண்டறிந்தார். அவர் பிற்படுத்தப்பட்ட ஆசிய நாட்டு விஞ்ஞானி என்பதால் தாமதமாகவும் வேண்டா வெறுப்போடும் 1979இல் நோபல் பரிசு அளிக்கப்பட்டார். இவர் கூட்டாகக் கண்ட இயற்பியல் தத்துவம் மின்னாற்றல் (electrical force), வல்லணுப் பிளவாற்றல்(strong nuclear force) மெல்லணுப் பிளவாற்றல் (weak nuclear force) ஆகியவற்றின் இணைப்பால் பெறப்பட்டது. ஆனால் இந்த ஒருங்கிணைப்பில் புவிஈர்ப்பு இன்னும் சேர்க்க முடியாமலே, அல்லது சேர்க்கப்படாமலே இருக்கிறது. ஐன்ஸ்டீனுடைய பொதுச்சார்புக் கொள்கையானது (general relativity theory) புவி ஈர்ப்பை இடம், பொருள்களில் எங்கும் பரவியிருக்கும் ஒரு நிலைப்பாட்டுக்கு எடுத்துச் சென்றதால் இதை மற்ற ஆற்றல்களுடன் இணைப்பது அவ்வளவு எளிதாயில்லை.

சிந்து சமவெளி நாகரிகக் காலத்தில் சிந்திக்கப்பட்ட விண்மீன்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் அந்த (சிந்தனைக்)கயிறு (வடம்) இன்னமும் புரிதலுக்காகக் காத்திருக்கிறது.

Pin It