jeyalakshmi 450

மனிதர்கள் தான் கண்டதைக் கேள்விப்பட்டதை அனுபவித்ததைப் பல்வேறு வகைகளில் பதிவு செய்து வந்தனர். தொல்மக்களின் இத்தகைய தொடக்க நிலையைக் குகைகளில் உள்ள ஓவியங்கள், கல்வெட்டுகள் அதன் தொடர்ச்சியாக நடுகற்கள் மேலும் வளர்ச்சிப் படிநிலைகளின் ஊடாகக் கோயில்கள் என மக்கள் கூடும் இடங்களில் பதிவு செய்தனர்.  இவ்வாறாகவே ஒவ்வொரு நாட்டிலும் வாழ்நெறிகள் ஆவணப்படுத்தப்பட்டு வந்துள்ளன.  இது வரலாறு. காலம் செல்லச்செல்ல மொழிகளின் வளர்ச்சி மேல்நிலைக்கு ஏற்றம் பெற்றன.

தமிழ்மொழியில் இன்று கிடைக்கின்ற தரவுகளின் அடிப்படையில் முதல் நூலாகத் தொல் காப்பியம் என்ற இலக்கண நூல் விளங்குகிறது.  இதைப் போன்றே கிடைத்த பழமையான, செவ்வியல் இலக்கியமான சங்க நூல்கள் திகழ்கின்றன. செவ்வியல் பனுவல்களான இவற்றில் பல்வேறு பட்ட பார்வைகளில் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. தொல்காப்பியத்திலும் சரி சங்க இலக்கியத்திலும் சரி ஆய்வு செய்வதற்கான களம் பல்கிப் பெருகிக் கிடக் கின்றன. இவை செழுமை வாய்ந்த கட்டமைப்பும் பொருள் நெறிகளும் தன்னகத்தே கொண்டதாக இருக்கின்றன.

சங்க இலக்கியத்தைப் பலர் ஆய்வு செய்து உள்ளனர். இன்றும் ஆய்வு செய்து வருகின்றனர். சங்க இலக்கியத்தில் உள்ள பாடல்களை அகப்பாடல்கள் என்றும் புறப்பாடல்கள் என்றும் வகைப்படுத்துவர். சங்க இலக்கிய அகமரபு குறித்து ஆய்வு செய்த ஆய்வாளர் லோ. ஜெயலட்சுமி அவர்கள் சென்னையில் உள்ள அண்ணா ஆதர்ஷ் மகளிர்க் கல்லூரியின்,  தமிழ் மொழித்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் எழுதி வெளிவந்த நூல்தான் "சங்கச் செவ்வியல் பனுவல்களில் அகமரபு” என்ற நூலாகும். இலக்கியப் பிரதியை விவரணைகளின் ஊடாக ஆவணப்படுத்தும் போக்கினை மிகச் சிலரே செய்து வருகின்றனர்.

அவர்களுள் கவனத்திற்குரியவர் பேராசிரியர் வீ.அரசு அவர்கள்.  அவர் தன்னுடைய ஆய்வு மாணவர்களை நுண்ணிய பார்வையில் ஆய்வு செய்ய வழி அமைத்துக் கொடுத்துத் தானும் அது சார்ந்து இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. அவருடைய மாணவரே இந்நூலை எழுதியுள்ளார். அந்த வகையில் ஆய்வாளர் அகமரபு குறித்து ஆய்வு செய்துள்ளார்.  ஓலைச்சுவடி பட்டயப்படிப்பில் இவர் Ôஅர்த்தநாரீசுவரர் பேரில் பள்ளேசல் நாடகம்’ என்ற ஓலைச்சுவடி நூலை அச்சேற்றியுள்ளார். பல்வேறு இடங்களில் நடைபெற்ற தேசிய, பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்டு பல ஆய்வுக் கட்டுரை களை வழங்கியுள்ளார். கலைஞர் பதிப்பகத்தின் மூலமாகக் 'கவிஞர் ஆசு’ அவர்களின் படைப்புகளை விமர்சன நூலாக 2016 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டுள்ளார்.

சங்கச் செவ்வியல் பனுவல்களில் அகமரபு என்னும் இந்நூல் சங்க அக இலக்கிய ஆய்வுகளில் கவனத்திற்குரிய ஒன்றாகத் திகழ்கிறது.  நூலாசிரியர் பின்வருமாறு கூறுகின்றார். சங்கப் பிரதியை இதுவரை நாம் வாசித்த மரபிலிருந்து மாறுபட்ட தளத்தில் இந்நூல் அமைகிறது. பனுவல்களை நேரடி யான பயிற்சியின் ஊடாக அதனுடைய முழுமை யானக் கருத்தினை அறிய முடியும் என்பதை இந்நூல் விவரித்துப்  பேசுகிறது. சென்னை பல்கலைக்கழகம், தமிழ் இலக்கியத்துறையில் Ôசங்க இலக்கியத்தில் அகவெளிப்பாடு’  2012 என்ற தலைப்பில் அளிக்கப் பட்ட ஆய்வேட்டில் மேலும் சில தரவுகள் இணைக்கப் பட்டுச் சங்கச் செவ்வியல் பனுவல்களில் அகமரபு என்ற பெயரில் இந்நூல் அமைகிறது ’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நூலிற்குப் பேராசிரியர் வீ.அரசு அவர்கள் ஆய்வின் தன்மை, ஆவணப்படுத்திய விதம் பற்றி விவரித்து அவருக்கே உரித்தான முறையில் எழுதியுள்ள அணிந்துரை வாசகருக்கு அடித்தளமாக அமைகிறது. மறு வாசிப்பின் முக்கியத்துவம் மற்றும் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுவதாகவும் இந்த அணிந்துரை அமைந்துள்ளது. இலக்கணப் பிரதியில் தரும் விளக்கங்களை முதன்மைப்படுத்தாது ஆண்-பெண் உறவுகள் எனும் அடிப்படையில் பண்பை முதன்மைப் படுத்திப் பேசுகிறது என்கிறார்.  இந்நூலை வாசிக்கும் ஒவ்வொரு உயிரியும் தனது அக  உணர்வுகளைப் பற்றிப் பேசுவதாக உணர முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆய்வாளர் இந்நூலின் பாடுபொருள் என்ற தலைப்பில் ஆய்வு எதைப்பற்றியது, எப்படி அமைக்கப்பட்டுள்ளது, நூலின் மையக் கருத்து என்னவென்று முக்கியமான கருத்துக்களைக் கூறும் வகையில் எழுதியுள்ளார். நான்கு பகுதிகளாக  இந்த ஆய்வு நூல் அமைகிறது. இதனை விரிவாக எழுதி யுள்ளார். அகமரபு குறித்த நுண்ணிய ஆய்வாக  இந்நூல் அமைகிறது. ஆய்வாளர் தெளிவும் தேடுதலும் கொண்டவராக இருந்துள்ளார் என்பதை இந்நூல் நமக்குப் புலப்படுத்துகிறது.

தொல்காப்பிய இலக்கண மரபை மீறிய பதிவுகள் சங்கச் செவ்வியல் பனுவல்களில் இருக்கின்றன என்று கூறியுள்ளார். இது ஏற்கத் தக்கதாக உள்ளது. கால மாற்றத்தின் காரணமாக உயர்குடி மக்களுக்கு மட்டுமே உரிய மாலையான கண்ணி, பின்னாட்களில் ஆயர்,  உழவன், உமணர்,  குறவர், பாணன், மறவர் போன்றோர் கண்ணியைச்  சூடிக் கொண்டனர் என்ற பதிவு சொல்லப்பட்டுள்ளது.

 சங்கத் தமிழ் மக்களிடம் இயற்கை சார்ந்த பதிவுகள் மிகுந்துள்ளன. குறிப்பாக மலர், மரம் என்பதனைத் தன் வாழ்வியலோடு பொருத்திப் பார்த்துள்ளனர். பிறப்பு முதல் இறப்பு வரை இவை உடன் வருவதாக உள்ளது. நறுமணமுடைய  மலர்கள் புணர்விற்குரிய வெளிப்பாடாகவும் ஞாழல், புன்னை,  வேங்கை ஆகிய மரங்கள்  புணர்விற்குரிய குறியீட்டு இடமாகவும் சங்கப் பனுவல்களில் வந்துள்ளமை குறித்து  இந்நூலில் தரப்பட்டுள்ளன. அகமரபு குறித்த முழுமையான பார்வை கொண்ட ஆய்வு நூலாக இந்நூல் விளங்குகிறது.

பெண்டிரின் தலைமுடிக்குச் சொல்லப்படும் ஐம்பால் குறித்து விளக்கி, பின் நிகண்டுகளில் தரப் பட்ட விளக்கமானது பிற்காலத்திய நூலான கலித் தொகை, பரிபாடல் மற்றும் திருமுருகாற்றுப்படை ஆகிய பனுவல்களில்  மட்டுமே காணப்படுகின்றன  என்ற தெளிவை நூலாசிரியர் உரைத்துச் சென்றுள்ளார்.  சங்கப் பிரதியை முழுமையாகப் படித்து விவரணை களைத் தொகுத்தவிதம் நன்று. காம உணர்வுகளை வெளிப்படையாகக் கலித்தொகை, பரிபாடலில் மட்டுமே பதிவாகியிருப்பதாகச் சொல்லப்பட்டு உள்ளது.  தவிர ஏனைய சங்கச் செவ்வியல் பனுவல் களில் மனநல உணர்வும் சுட்டப்பட்டுள்ளது. இந்நூல் ஏழு தலைப்பு கொண்டதாக அமைக்கப் பட்டுள்ளது. முதல் நான்கு பகுதிகள் ஆய்வுப் பகுதியாக  இருக்கின்றது.  அடுத்து பின்னிணைப்பு,  சுட்டி என்பன தொடர்ந்து இடம் பெற்றுள்ளன.

அகமரபு என்னும் பகுதியில் அகம் குறித்த வரையறை, இலக்கணம் உரையாசிரியர்களின் கூற்றுகளை நூல்களின் துணைகொண்டு ஆய்வாளர் பதிவு செய்துள்ளார்.  தான் கூறும் கருத்துக்குச் சான்றாக அருகருகே நூற்பா, பாடல் எண்  போன்ற வற்றைக் கொடுத்திருப்பது ஆய்வாளர் கொண்டுள்ள ஆய்வு நெறியைக் காட்டுவதாக இருக்கிறது.  திணை, இல்லம், திண்ணை என்பதற்கும் விளக்கம் தரப் பட்டுள்ளது. சங்கப் பாடல் குறித்த வரையறை,  நூல் தொகுப்பு முறை, பாடல் வைக்கும் முறை என்பதும் கூறப்பட்டுள்ளன. திணைக்குப் பாடல் பாடிய புலவர்கள் மற்றும் தொகுப்பிலுள்ள முரண்பாடுகள்,  கூற்றுநிலை முரண்பாடுகள், பொருள்நிலை அமைப்பு என்று ஆய்வு விரிவாகச் செல்கிறது. அனைத்துக் கருத்துகளும் சான்றுகள் அடிப்படையில் கூறியுள்ள தன்மை சிறப்பாக உள்ளது.

புலவர்கள் திணை, துறை குறித்துப் பாடி யுள்ளனர். அவர்களுள் குறிப்பிட்டவர்கள் மட்டுமே திணை, துறை சார்ந்து எழுதுபவர்கள். அத்தகுப் பாடல்களுள் சில நூலில் சொல்லப்பட்டுள்ளன. பெயர் குறிப்பு இடம்பெற்ற ஒரே காரணத்தினால் பல அகவுணர்வுடையப் பாடல்கள் புறத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இப்படிக் கூறுவது நியாய மானதே.  புறத்தில் அகக்கருத்துக்கள், அகத்தில் புறக் கருத்துக்கள் என்ற நிலையிலும் பாடல்களைத்

தந்து வாசிப்பனுபவத்தைக் கூட்டுவதாக இந்நூல் இருக்கின்றது. ஒவ்வொரு பகுதியின் இறுதியில் மேற்கண்டவாறு இப்பகுதியில் என்ன கருத்தாடல் செய்தோம் என்பதைத் தொகுத்துச் சுருக்கமாகக் கொடுத்துள்ளார் ஆசிரியர்.

அகமரபு மலர்கள் என்னும் இரண்டாவது பகுதியில் மலர்கள் மனிதர்களிடத்தில் எந்தளவு ஆதிக்கம் செலுத்தின என்பது விளக்கப்பட்டுள்ளது. Òசங்கப் பனுவல்களில் மலர்கள் தொடர்பான பதிவுகள் மிகுந்த அளவில் இடம்பெற்றிருப்பதைக் காணலாம். அதற்கானக் காரணத்தை ஆய்வு செய்தால், மலர்கள் அகப்பதிவுகளில் குறியீட்டு பொருளாகவும் புறப்பதிவுகளில் அடையாளக் குறியீடாகவும் கையாண்டிருப்பதை அறிய முடிகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.  இதனுள் மலர் விளக்கங்கள்  மலர்களின் பருவங்கள் மற்றும் 134 வகை  மலர்களின் பெயர்கள் அகர வரிசையில் தரப்பட்டுள்ளன. நாற்றம் என்னும் சொல்லே சங்கப் பனுவல்களில் மிகுதி யாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அவை  நறிய, நறு, நறும், நறை, நாறி, நாறும்  என்பனவாகும். இத்தகைய மலர்களை மக்கள் அறிந்திருந்தனர். இவர்கள் பயன்படுத்திய மலர்கள் குறித்தும் விரிவாக ஆய்வாளர் பதிவு செய்துள்ளார். 

சங்கப் பனுவல்களில் மலரைக் குறிப்பதற்கு அலர், அலரி, பூ, மலர்,  வீ எனப் பலவகையான சொற்கள் கையாளப்பட்டுள்ளன. இச்சொற்கள் அனைத்தும் மலர்களின் தன்மையைப் பொறுத்தே சுட்டப்படுவனவாகும். மலர்கள் நிலம் மற்றும்

நீரில் மலரும்  தன்மையுடையன. நிலத்தில் மலரும் மலர்கள் கொடிப்பூ, கோட்டுப்பூ, செடிப்பூ,  புதற்பூ,  புற்பூ  என வகைப்படுத்தப்பட்டுள்ளன.  இதில் அலர் அலரி பூ ஆகிய சொற்கள் கொடி மற்றும் கோட்டு மலர்களைக் குறிக்கும். மலர் என்ற சொல் மலர்தல்  என்ற நிலையை சுட்டுகிறது. நீரில் மலரும் மலர் களான நெய்தல், குவளை, தாமரை ஆகியவை மலர் என்றே பதிவுகள் உள்ளன.

மரத்தில் மலரும் கோட்டுமலர் வீ என்றும் முற்றும் மலர்ந்து கீழே விழ்கின்ற மலரின் நிலையை என்றே வீஎன்றே  குறிக்கப்படுகிறது. அலர், அலரி,  பூ,  மலர்,  வீ ஆகிய சொற்கள் மொட்டு நிலையி லிருந்து இதழ்கள் விரிந்து கீழே விழுகின்ற தன்மையினைக் காணலாம். (பக்கம்- 65)

கண்ணி என்ற மாலையை ஆடவர்களும்  கோதை என்ற மாலையை மகளிர்களும் அணிந்தனர்  என்ற செய்தி தரப்பட்டுள்ளன. ஆடவர் அணியும் மாலைகளாவன - தார், கண்ணி, தெரியல், படையல் என்பது சொல்லப்பட்டுள்ளது. இருவரும் அணிந்ததாகத்  தாமம், தொடலை, பிணையல், மாலை என்பன இருந்துள்ளன என்பதைத் தக்க சான்றுகளோடு ஆய்வு செய்து விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

மலரின் பருவங்கள் ஏழு நிலையாகக்  கூறப் படுகிறது.  அவை நனை, அரும்பு , முகை, போது, மலர், வீ என்பனவாகும். நனை மலரின் தோன்றல் பருவத்தைக் குறிக்கும். நனைப் பருவத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிநிலை அரும்பாகும். மலரின் அடிப்படை வடிவம் தோன்றும் பருவம் அரும்பு அரும்பின் அடிப்பக்கம் சற்றுப் பருத்தநிலை முகை எனப்படும். குவிமுகை கொழுமுகை கூர்முகை என அடைமொழியால் குறிக்கப்படுகிறது. (பக்-66) பருவங்களின் விளக்கம் மற்றும்  ஒவ்வொரு பருவத்திற்கும் பாடல்களைச் சான்றாக தந்திருப்பது மேலும்  ஆய்வை செழுமைப்படுத்துகிறது.

தழையுடை குறித்து மிக விரிவாக இப்பகுதியில் ஆய்வாளர் கூறியுள்ளார். சங்க இலக்கியங்களை இலக்கண வாய்பாட்டை  அடிப்படையாகக் கொண்டு  ஆராயாமல் உணர்விற்கு முக்கியத்துவம் கொடுத்து வாசித்தால் அதனுடைய  முழுமையான பொருளை உணர முடியும் என்கிறார்.  (பக்கம் - 84) மலர்களை ஆடவர்கள் பெண்களுக்குப்  பரிசாகக் கொடுத்தனர் என்பது தெரிந்ததுதான்.  கையுறைப் பொருட்களாக இவற்றைக்  கொடுத்தனர். இன்றைக்கு இது பரிசுப் பொருளாகப் புடவை, சுடிதார்,  விலையுயர்ந்த  அணிகலன்கள் மற்றும் பயன்படுத்தும் பொருட்கள் எனத் தருவது என இதன் நீட்சியைக் காண முடிகின்றது. இது மகிழ்ச்சியாகவும் உள்ளது.  புணர்ச்சியைக் குறிக்க ஆடவர்கள் மலர்களைப்  பயன்படுத்தினர். இவர்கள்  வாசனை அற்ற பூக்களை மடல் ஏறும்போது சூடினர்.  சங்க இலக்கியத்தில் பிரிவை உணர்த்தும்  பாடல்கள் மிகுதியாக உள்ளன. அவைகளைத் தகுந்த இடத்தில் ஆசிரியர்  இந்நூலில் சொல்லியுள்ளார். போர்க்காலத்தில் மலர்கள்,  பூந்தொடை விழா,  வேந்தர்கள் சூடும் மலர்கள் என அனைத்தையும் முழுமையாக இப்பகுதி விளக்குகிறது.

மூன்றாவது பகுதியான கூந்தல் என்னும் பகுதியில் சங்கத் தமிழர்களின் கூந்தல்  குறித்துப் பதிவு செய்துள்ள தகவல்களை ஆய்வாளர் உரைத் துள்ளார். அதனை  விளக்கிய விதம் நன்று. இதுவும் பாடலின் சூழல் பொருளென்று முறையாகத் தரப் பட்டுள்ளன. நிகண்டுகளில் தலைமயிர் குறித்து வந்துள்ள தகவலும் கொடுக்கப்பட்டுள்ளன.  ஆடவர்களின் தலைமயிரை 16 என்றும் அதனைப் பொதுவாக ஏழு என்பதாக அமைத்து ஆய்வாளர் விளக்கியுள்ளார். அதேபோன்று பெண்களின் தலைமயிர் பெயரைக் குறிக்கும் சொற்கள் 18 என்றும் அதை முறையாகத் தொகுத்தால் எட்டு என்றும் குறிப்பிட்டு ஒவ்வொன்றையும் பாடலோடு விளக்கி யுள்ளார் ஆசிரியர்.

தடந்தாள் தாழைக் குடம்பை நோனாத்

தண்தலை கமழும் வண்டுபடு நாற்றத்து

இருள்புரை கூந்தல் பொங்குதுகள் ஆடி

உருள்பொலி போல எம்முனை வருந்தல்

அணித்தகை அல்லது பிணித்தல் தோற்றப்

பெருந்தேள் செல்வத்து இவளினும் எல்லா

எற்பெரி தளித்தனை நீயே பொற்புடை

விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான்

வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன்

கூந்தல் முரற்சியின் கொடிதே

மறப்பன் மாதேநின் விறல்தகை மையே

- நற் : 270

என்ற நற்றிணைப் பாடல், நன்னன் என்பவன் தன் பகையரசரைப் போரில் கொன்றான். பகையரசனுக்கு உரிமையுடைய மகளிரைப் பற்றி வந்து அவர் களுடைய கூந்தலை மழித்தான்.  மழித்த கூந்தலைக் கயிறாகத் திரித்து,  திரித்த கூந்தல் கயிற்றால் அப்பகையரசனின் மதயானைகளைப் பிணித்துக் கொண்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. இத்தகைய கொடிய செயலை நன்னன் செய்ததாகப் பரணர் பாடியுள்ளார். இதில் வேறொரு ஆண்மகனுக்கு உரிமையுடைய பெண்டிரின் கூந்தலை மழித்தல் என்பது இழிவானச் செயல் என்று பரணர் குறிப்பிட்டுள்ளார். தோல்வியுற்ற பகையரசனின் உரிமையுடைய பெண்டிரின் கூந்தலை மழித்தல் எனும் செயலானது போரில் தோற்றவனை மேலும் அவமானப்படுத்தும் செயலாகக் கருதப்பட்டது. இதுதவிர கூந்தலைத் தொடுதல் என்பது அப் பெண்டிரைத் தொடுவதற்கு நிகரானதாகக் கருதப் பட்டது. ஆதலால்தான் பிற ஆண்மகன் பெண்டிரின் கூந்தலைத் தொடுதல் அல்லது மழித்தல் இழிவான செயலாகப் பேசப்படுகிறது. (பக். 152-153) இவ்வாறு சங்கப் பிரதியின் உள்ளார்ந்த தகவல்களைத் தருவதாக இந்நூல் உரிய கவனம் பெறுகின்றது. 

சங்கப்பிரதியில் முடி என்ற பதிவு 27 இடங்களில் வருகின்றது என்று கூறியுள்ளார். இதன்மூலமாக ஆய்வாளர் சங்கப் பனுவல்களை முழுமையாகப் படித்து ஆய்வில் எடுத்துரைத்துள்ளதை அறிய முடிகின்றது.  கூந்தல்  உவமைகள், ஒப்பனை, தகரம், அகில் என்ற தலைப்பின் வழியும் பாடலினூடாக வாசகருக்குச் சங்கத் தமிழரின் மரபு விளக்கப்பட்டு உள்ளது.

ஐம்பால் குறித்தும் பனுவல், காப்பியம், உரையாசிரியர் தரும் விளக்கம் என இப்பகுதி விரிந்து செல்கின்றது.  ஐம்பால்  என்னும் சொல்லுக்கு உரை வழியாக ஒன்பது சொற்கள் கிடைக்கின்றன என்ற தகவல் தரப்படுகிறது. அவை அளகம், குழல், குரல், கொண்டை, சுருள், துஞ்சை,  துஞ்சுதல், பனிச்சை, முடி என்பதாகும். பெண்களின்  கூந்தலில் ஆண் ஈடுபாடு கொண்டிருந்தான்.

புல்லினத்து ஆயர்மகன் சூடி வந்தது ஓர்

முல்லை ஒரு காழும் கண்ணியும், மெல்லியால்

கூந்தலுள் பெய்த முடித்தேன் மன், தோழி யாய்

வெண்ணெய் உரைஇ விரித்தகதுப்போடே

அன்னையும் அத்தனும் இல்லரா, யாய்  நாண,

அன்னை முன் வீழ்ந்தன்று, அப்பூ

அதனை வினவலும் செய்யாள், சினவலும் செய்யாள்,

நெருப்புக் கை தொட்டவர் போல  விதிர்த்திட்டு

நீங்கிப் புறங்கடைப் போயினாள், யானும் என்

சாந்து உளர்கூழை முடியா, நிலம் தாழ்ந்த

பூங்கரை  நீலம் தழீஇ,  தளர்பு ஒல்கி  (கலி: 115)

இப்பாடலில் கூந்தல், கதுப்பு ஆகிய சொற்கள் பயின்று வருவதைக் காணலாம். ஆயமகன் கொடுத்த   பூவினைத் தன் கூந்தலுக்குள் முடிந்ததாக கூறுகிறாள். இதனை அடுத்து விரிந்த கூந்தலைக் கதுப்பாக முடிந்து கொண்ட நிலையினையும், அன்னை வெண்ணெய் தேய்ப்பதற்கு முடிந்த கதுப்பினைப் பிரிக்கிறாள். அப்போது பூ அவள் முன்பாக வீழ்ந்ததைச் சுட்டுகிறது. அன்னை விரித்த கூந்தலை, மீண்டும் அப்பெண் முடிந்துகொண்டாள் எனக் கூறும் பொழுது கூழை என்ற சொல் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் காணலாம். இதன் மூலமும் கூந்தலைக் குறிக்கும் வேறுசொற்களாக மட்டும் இச்சொற்கள் கையாளப்படவில்லை. கூந்தல் முடிச்சு வகைகளைக் குறிப்பதற்குக் கதுப்பு, கூழை ஆகிய சொற்கள் பதிவாகியிருப்பதை அறியலாம். இப் பதிவின் ஊடாக ஓதி, கதுப்பு, குரல், கூழை, முச்சி ஆகியவற்றை ஐம்பால் முடிச்சு வகையாகக் கருதலாம் என்கிறார். (பக்கம்: 138) இவ்வாறு ஆய்வாளர் ஐம்பால் வகைகளைக் குறித்து நுணுகி ஆய்ந்து உள்ள போக்கினை இப்பாடலடிகளும் அதற்குண்டான உரைகளும் மிக தெளிவாக எடுத் துரைத்ததை நாம் அறிந்து கொள்கிறோம்.

கூந்தலில் காதலன் தூங்கினான் என்ற தகவலும் பலப் பாடல்களின் வழி சொல்லப்பட்டுள்ளன.  கணவனை இழந்த மகளிர் கூந்தலை அறுத்துக் கொண்ட செயலும் நூலில் கூறப்பட்டுள்ளன. இறுதியில் குறிப்புகள் எனும் பகுதியில் கூந்தல்  இடம் பெற்றுள்ள பாடல் எண்கள் தரப்பட்டுள்ளன.

உடல் சார்ந்த நிலை என்னும் நான்காவது பகுதியில் மக்கள் இனக்கவர்ச்சியால் இருவரும் விரும்பிய நிலை விளக்கப்பட்டுள்ளன.  தங்களது இனப்பெருக்கத்தைப் பெருக்கிக்கொள்ளும் மக்களின் இனக்கவர்ச்சி விழைவைப் பல்வேறு வகையிலும் ஆசிரியர் இப்பகுதியில்  குறிப்பிட்டுள்ளார்.  நுதல் வாசனை கொண்டது என்றும் அதற்குச் சான்றாகப் பாடலும் தரப்பட்டுள்ளது. மெய்ப்பாடு, நுதல் பசலை ஏற்படும் சூழல் கண் காமத்தின் பிறப்பிடமாக விளங்கிய சூழல் போன்றன நேர்மையோடும் பேசப்பட்டுள்ளன.

தன் காதலியின் எயிற்றில் இருந்து வரும் நீர் இனிமையாக இருப்பதாகத் தலைவன் பேசியதாகச் சங்கப் பனுவல்களில் நாம் அறிகின்றோம்.   இதனைப் பல்வேறு இலக்கியங்களும் பேசியுள்ளன.  குறிப்பாகச் சங்க இலக்கியம் இதனைப் பலவாறு கூறியுள்ளது.  எயிற்றிலிருந்து வரும் நீரின் தன்மை நுங்கின் இனிமை போன்றது என்றும் பாக்கின் இளங்காயின் இனிமை உடையதாகச்  சொல்லப்பட்டுள்ளது.  இவ்வாறு பல்வேறு பொருள் சார்ந்த கருத்துக்களை இப்பகுதியில் நாம் அறிய முடிகிறது.  புணர்தலும் பிரிதலும் ஊடலும் இருவர் செய்த அக வெளிப் பாடுகள் என மிக விரிவாக அகமரபை இந்நூல்  பேசுகின்றது. காதலன் தன் காதலியின் தோள் மற்றும் மார்பில் தொய்யில் எழுதினான் என்பதைப் பலப் பாடல்களின் வழி அறிகின்றோம். தொய்யிலை கரும்பு,  கொடி, பூ, இலை, தளிர் என்ற வடிவத்தில் அவன் எழுதினான்.

இப்பகுதியில் வரும் பாடல்கள் பொருளோடு மேலும் விரிவாக விளக்குவதாக உள்ளன.  அல்குலில் தழையாடை உடுத்திய விதம், திதலை தோன்றிய சூழல், இடம் மேனியில் பசலை தோன்றியவிதம் எனப் பலச் செய்திகள் விளக்கப்பட்டுள்ளன. இப் பகுதியில் வந்துள்ள செய்திகளுக்குத் தேவையானக் குறிப்பு மற்றும் விளக்கங்களைப் பின்பகுதி விளக்கு கின்றன. 

ஆய்விற்குப் பயன்பட்ட முதன்மை ஆதாரங்கள், துணைமை ஆதாரங்கள், கட்டுரைகள், ஆய்வுக் கோவை, இதழ்கள், அகராதிகள், பொருட் களஞ்சியம்  மற்றும் நிகண்டுகள் குறித்த நூல்கள் பற்றிய விவரங்களைத் துணைநூற்பட்டியல் என்ற பகுதியில் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார். பின்னிணைப்புகளில் 134 மலர்கள் குறித்தும் அதற்கு விளக்கம் தரும் பாடல்களின் எண்கள் போன்றன தரப்பட்டுள்ளன. மலர்களுக்கான ஆங்கிலப் பெயர்களையும் தாவரக் கலைச்சொற்களையும் ஆய்வாளர் கொடுத்து ஆவணப்படுத்தியுள்ளார். சுட்டி என்பது  நூலின் இறுதியில் தரப் பட்டுள்ளது. இதுவும் அகரவரிசையில் அமைக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக ஆய்வு நூல் என்றால் படிப்பதற்கு அயர்ச்சியைக் கொடுப்பதாக இருக்கும். ஆனால் இந்நூல் சுவாரசியம் தருவதாக இருக்கின்றது. இத்தகைய ஆய்வு நூலைத் தமிழுக்குக் கொடுத்த ஆய்வாளருக்கும் பதிப்பித்த நெய்தல் பதிப்பகத் தார்க்கும் வாழ்த்துக்கள்.  இப்படியான ஆய்வுகளைத் தொடர்ந்து ஆய்வாளர் எழுத வாய்ப்பு கிடைக் கட்டும் என்று  வாழ்த்துவோம்.

சங்கச் செவ்வியல்

பனுவல்களில் அகமரபு

லோ.ஜெயலட்சுமி

வெளியீடு: நெய்தல் பதிப்பகம்

ரூ. 270/-