பரம்பரை மருத்துவம் இந்தியாவில் தொன்றுதொட்டு இருந்து வந்தபோதிலும், வேதங்களின் வாயிலாக, கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன்பே சுரம், வயிற்றுப்போக்கு, சீதபேதி, மஞ்சள் காமாலை, காசநோய், புற்று, கண், தோல் நோய்களைப் போல கொள்ளை நோய்களான காலராவையும் அறிந்திருந்தனர். மேலும், நோயைத் தவிர, பேய், விரோதம் ஆகியவற்றினாலும் நோய் ஏற்படுவதாகக் கருதி, தாயத்து, மந்திரம் மற்றும் பல்வேறு சடங்குகளைச் செய்து நோயிலிருந்து விடுவித்துக்கொள்ள முயன்றனர்.

sushrutaஇந்திய மருத்துவ வரலாறு

ஆரியர்கள் இந்தியாவிற்குள் (கி.மு. 1500) நுழைந்த 3,000 ஆண்டுகளுக்கு முன்பே ஆயுர்வேத மருத்துவம் தோன்றி இருக்க வேண்டும். வேதங்களில் நான்காவதான அதர்வண வேதமே இம்மருத்துவத்தின் உயிர்மூச்சு. இம்மருத்துவத்தின் வளர்ச்சி உயர்ந்த நிலைக்குச் சென்ற காலம், சரகசம்ஹிதா, சுசுருத சம்ஹிதா எழுதப்பட்ட காலம் கி.மு. 300 ஆகும். இதை எழுதிய சரகர், காஷ்மீரத்தையும், சுசுருதர், காசியையும் சேர்ந்தவர்கள். இதுவே இன்றுவரை ஆயுர்வேதத்திற்கான அடிப்படை வேதமாகும். அஷ்டாங்க ஹிருதயா, மாதவா நிதானா நூல்களும் இம்முறை மருத்துவம் படிப்பவர்கள் படிக்கக்கூடிய நூல்களில் முக்கியமானவையாகும்.

ஒட்டறுவையை முதன் முதலில் செய்தவர் சுசுருதர். இவரது சுசுருத சம்ஹிதா என்ற அறுவை சிகிச்சைக்கான நூலில், அறுவை சிகிச்சைக்கான 121 வகையான கருவிகள் விளக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, கத்தி, கத்தரி, சாமணம், ஊசி, தொரட்டி போன்ற வளைந்த கருவிகள் குறித்து இதில் விளக்கப்பட்டுள்ளன. இவை இன்றைய நவீன அறுவை மருத்துவத்தில் பயன்படுத்தப் படுவதுபோல் உள்ளன. இக்கருவிகளினால் ஒட்டறுவை சிகிச்சையும் (Plastic Surgery  செய்யப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, மூக்கு அக்காலத்தில் ஒரு தண்டனையாக வெட்டப்பட்டது. (சூர்ப்பனகை ஞாபகம் வருகிறதா?) அதைச் சரி செய்யும் விதமாகக் கன்னத்திலிருந்து அல்லது நடு நெற்றியிலிருந்து தசையினைத் தோலுடன் மூக்கில் பொருத்தி ஒட்டறுவை நிகழ்த்தப்பட்டது. தற்பொழுது இம்முறையே சில மாற்றங்களுடன் நவீன மருத்துவத்திலும் நடைபெறுகிறது.

சுசுருதாவிற்குப் பிறகு, இந்த ஒட்டறுவை வடநாட்டில் செங்கல் சுடுபவர்களும், மட்பாண்டம் (Potters)  செய்பவர்களும், நெற்றியிலிருந்து தசையை மூக்கில் பொருத்தும் அறுவை சிகிச்சையை அறிந்திருந்தார்கள். இவர்கள் இந்த அறுவை சிகிச்சையை 15ஆம் நூற்றாண்டிலிருந்து, மகாராஷ்ட்ராவில் செய்து வந்துள்ளனர். இப்படி அறுவை சிகிச்சை புரிபவர்கள், கங்கரா (Kangra)  என அழைக்கப்படுவார்கள். இவர்களில் கடைசியாக அறுவை சிகிச்சையை 20ஆம் நூற்றாண்டில் செய்தவர், தினனாதா (Dinanata)  என்கிற பானை செய்யும் இனத்தைச் சார்ந்தவர்.

மூக்கு அறுவை சிகிச்சையைக் கேள்வியுற்ற பிரிட்டிஷார், 1794ஆம் ஆண்டு இலண்டனில் ஜென்டில்மேன்’ஸ் மேகசின் (Gentleman’s Magazine)  என்ற இதழில் படத்துடன் அறுவை சிகிச்சை செய்யும் முறையைத் தெளிவாக விளக்கி எழுதியுள்ளனர்.

ஆயுர்வேத மருத்துவம், தட்சசீலத்திலும், நாலந்தாவிலும் நடைமுறைப் பயிற்சிகளுடன் குருகுல கல்வி முறையில் பாடங்கள் ஒரு குருவிற்கு இத்தனை மாணவர்கள் என்ற நியதியுடன் நடத்தப்பட்டன.

படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மருத்துவத் தொழிலைத் தொடங்குவதற்கு முன் அரசனுடைய அனுமதியைப் பெற வேண்டியது அவசியம் என சுசுருத சம்ஹிதாவில் கூறப்படுகிறது (சுசுருதா, அத்தியாயம் 10).

இதன்காரணமாகப் போலி மருத்துவம் மறைமுகமாகத் தடை செய்யப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. இதேபோல மருத்துவர்கள் கவனமாகத் தம் தொழிலைச் செய்ய வேண்டும் என்பதற்காக யாராவது தவறாக அறுவை மருத்துவம் செய்து அல்லது கவனக் குறைவாகச் சரியாக மருந்து கொடுக்காது இருப்பின் அவர்கள் தலையைத் துண்டிக்க வேண்டுமென்று கௌடில்ய அர்த்த சாஸ்திரம் (கி.மு. 400) கூறுகிறது.

சுசுருத சம்ஹிதாவில் 1120க்கும் மேற்பட்ட நோய்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. இதற்கான மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டபின், அந்நோயாளி மேற்கொள்ள வேண்டிய உணவு, சுகாதாரம் மற்றும் துப்புரவு போன்றவற்றுடன், நோயை வகைப்படுத்தும் விதங்களும் மிகவும் விரிவாகக் காணப்படுகின்றன.

சரகர், சுசுருதர் போன்றோர் உடலைக் கூறு போட்டே உடலின் அமைப்புகளை, உடல் இயக்கங்களை அறிந்தே நூலை எழுதியுள்ளார்கள். அதன்பின்னர் இடைப்பட்ட காலங்களில் இந்திய மருத்துவம் பிணத்தைக் கூறுபோடுவது மத அடிப்படையில் பாவம் என்பதாலும், பிணத்தை இந்துமத வழக்கத்தின்படி எரியூட்ட வேண்டும் என்பதாலும் உடல்கூறை மருத்துவ மாணவன் அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

அக்காலத்தில் அசோகர் மரத்தை மட்டும் நடவில்லை; மருத்துவமனையையும் தொடங்கினார். கிறிஸ்துவுக்கு முந்தைய மூன்றாம் நூற்றாண்டிலேயே தகுந்த சிகிச்சை இல்லாததனால் மரித்தோர் எண்ணிக்கை அதிகரித்ததால் வைத்திய சாலைகளின் தேவையை மன்னர் அசோகர் உணர்ந்ததாக அறியப்படுகிறது. அசோகர் பாட்னாவில் நான்கு வாயில் பகுதிகளில் அன்றே புறநகர் மருத்துவமனைகளை நிர்மாணித்துள்ளார் என்றும், அவை மொழி பேதமின்றி ஆதரவற்றோர், உடல் ஊனமுற்றோர், நோய்வாய்ப்பட்டோர் அனைவரும் தங்கிச் சிகிச்சை பெறும் இடங்களாக அமைந்திருந்தன என்றும் பாஹியான் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் காலகட்டத்தில் (கி.மு.250 முதல் கி.பி.750 வரை) புத்த மதம் சார்ந்த அரசர்கள் ஒவ்வொரு நகரத்திலும் மருத்துவமனையையும், மருத்துவப் பள்ளியையும் நிறுவினர். இக்காலத்தில் மருத்துவம் தழைத்தது. ஆனால் கொல்லாமை என்னும் இம்மதக் கோட்பாட்டினால் அறுவை மருத்துவம் வீழ்ச்சியடைந்தது. அதன்பின்னர், இந்து மத பிராமணக் கோட்பாடுகள் நுழைந்த நிலையில் மருத்துவ வளர்ச்சியும் வீழ்ச்சியடைந்தது. பிராமணர்கள் இரத்தத்தையும், நோயுற்றவர்களையும் தொட வெறுப்புற்றவர்களாக இருந்தனர். ஆகவே மருத்துவத்தைத் தங்கள் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டதனால், அறுவை மருத்துவம் சுதேசி வைத்தியர்களிடம் சென்றது.

இவர்கள் கீழ்சாதியைச் சேர்ந்தவர்கள். இவர்களிடமிருந்து வங்க கிராமங்களில் Kabiraj-களுக்குச் சென்றது. தமிழகத்தில் நாவிதர்கள் மருத்துவத்தையும், அறுவை சிகிச்சையையும் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு, தங்களை மருத்துவர் குலம் என அழைத்துக் கொண்டனர்.

பழங்காலத்தில் நாவிதர்களே அறுத்துவம் செய்துள்ளனர். கார்மேக கவிஞர் எழுதிய கொங்குமண்டலச் சதகத்தில், “காந்தபுரத்து அரசன் பெண் கருவுற்றபொழுது தலை திரும்பி சுகப்பிரசவம் நிகழாத போது, நறையூர் நாட்டினளான கொங்கு நாவிதச்சி அடிவயிற்றைக் கீறி வழிகண்டு, சிசுவை எடுத்து, கீறிய வாயை மூடித் தன்னிடத்துள்ள மருந்தைத் தடவினாள்,’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ancient doctors in indiaஇதுபோலவே இங்கிலாந்திலும், ஏன் உலகிலேயே அறுவை மருத்துவம் நாவிதர்களாலே ஆரம்ப காலங்களில் மேற்கொள்ளப்பட்டு, நாவிதர் - அறுவை மருத்துவர் சங்கம் (Barbers’ - Surgeons Association) என அழைக்கப்பட்டது. அதன் பிறகே 16ஆம் நூற்றாண்டில் (1745) தனியாக அறுவை மருத்துவ சங்கம் (Royal College of Surgeons Association)  பரிணமித்தது.

இந்தியாவிலும் இங்கிலாந்திலும் இந்த ஒற்றுமை எப்படி நிகழ்ந்தது என்பது ஒரு சமூகப் பிரச்சினையாகவே தோன்றுகிறது.

ஆரம்ப காலத்தில் குருகுல முறைப்படி காடுகளின் நடுவில் தங்கியிருந்து விஞ்ஞானம், கல்வி ஆகியவை கற்பிக்கப்பட்டன. இவையே பிறகு, தட்சசீலம், காசி, நாலந்தா போன்ற இடங்களில் பல்கலைக்கழகங்களாக உருவெடுத்தன.

தட்சசீலம், ராவல்பிண்டியிலிருந்து 20 மைல் தொலைவில் உள்ளது. இங்கு பல்கலைக்கழகம் கி.மு.6இல் ஆரம்பிக்கப்பட்டு, உள்நாட்டு, வெளிநாட்டு மாணவர்களை ஈர்த்தது.

இதுபோல நாலந்தா பல்கலைக்கழகம் கி.பி. 5 முதல் 12ஆம் நூற்றாண்டு வரை நடைபெற்றது.  சீன யாத்திரிகர் யுவான் சுவாங், ஹர்ஷர் ஆட்சியில் இங்கு வந்து தங்கி, ஐந்து ஆண்டுகள் மாணவராகப் பயிற்சியிலிருந்தார். இங்கு மொத்தமாக 10 ஆயிரம் மாணவர்களும், 1,500 ஆசிரியர்களும் தங்கி இருந்தனர்.

புத்தமதம் தழுவிய அரசர்கள் முடிசூடிய பிறகு, இம்மருத்துவ முன்னேற்றம் சற்றே பின்னடைவு கண்டது. இக்காலத்தில் மருந்தும் உணவாகவே கொடுக்கப்பட்டு, துப்புரவும், சுகாதாரமும் பேணப் பட்டன.

சீன யாத்திரிகர் பாஹியான் தன் குறிப்பில் தனவந்தர்களும், குடிமக்களும் இந்தக் கண்டத்தின் நகரங்களில் பல மருத்துவ மனைகளைத் திறந்து, வறியவர்களுக்கும், முடமானவர்களுக்கும் இலவச மருத்துவம் அளித்து, உணவு போன்ற மற்றைய உதவிகளையும் அளித்ததாகக் கூறியுள்ளார். மேலும் மருத்துவர்கள் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடைந்தாலும் நோயாளிகள் தங்களுக்கு ஏற்ற நாட்களிலே அங்கிருந்து சென்றனர் எனவும் பாஹியான் குறிப்பிட்டுள்ளார்.

யுவான் சுவாங் (கி.பி. 629 - 645) கூற்றுப்படி, நகரத்திலும் கிராமங்களிலும் உள்ள நெடுஞ்சாலைகளில் புண்ணியசாலைகள் (Hospices) என்ற பெயரில் இருந்த மருத்துவமனைகளில் யாத்ரிகர் களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் மருத்துவர் மேற்பார்வையில் நீருடன் உணவும், மருத்துவமும் அளிக்கப்பட்டன.

இதன் பிறகு கி.பி. 700 - 1300களில் தாந்தரீகக் கோட்பாடுகள் தலை விரித்தாடின. அதன் பின்னர் உலோகங்களைச் சுத்திகரித்து மூலிகைகளுடன் சேர்த்து, மருந்துகள் தயாரிக்கப்பட்டன. இது தமிழக மருத்துவமான சித்த மருத்துவத்தின் ஒரு சிறப்பு அம்சமாகும்.

இதே காலத்தில், மலபார் கடற்கரைப் பிரதேசத்தில் மருத்துவ அறிவை இந்தியர்களும், அரேபியர்களும் கொடுத்து, வாங்கிக் கொண்டதால் இந்தியர்களின் மருத்துவ உத்திகள் மொழி பெயர்க்கப்பட்டு, அரேபிய நூல்களில் பதிவாயின.

தென் இந்தியாவில் மருந்தகமும், மருத்துவமனையும் பல்லவர், சோழ அரசர்களால் (கி.பி. 574 - 1200களுக்கு) இடைப்பட்ட காலத்தில் நிறுவப்பட்டன.

கல்வெட்டுக்களில் மருத்துவர்களுக்குத் தரப்பட்ட தானம், விதிக்கப்பட்ட வரிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. மருத்துவப் பேறு என்பது வரியில்லாத கிராமத்தை மருத்துவனுக்குக் கொடுத்ததைக் குறிக்கும். இதுபோலவே நோய் தீர்க்கும் மருத்துவர்களுக்கு ஊதியத்திற்குப் பதில், “வைத்திய போகம்” என்ற பெயரில் நிலம் மானியமாக வழங்கப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள கல்வெட்டுக்களின்படி, மருந்தகங்கள் பல்லவர் (கி.பி. 574 - 879) மற்றும் சோழர் (கி.பி. 900 - 1200) காலத்தில் இருந்தமையையும், அதில் பணிபுரிந்த மருத்துவர்களுக்கு மானியம் வழங்கப்பட்டதையும் அறிய முடிகின்றன. சோழர்கள் மருந்தகங்கள் ஆதுலர் சாலை அல்லது வைத்திய சாலை என அழைக்கப்பட்டன (ஆதுலர் - மருந்து - சாலை - இலவச நிறுவனம்). இவர்களுக்கு வரியில்லா நிலம் பாரம்பரியமாகத் தானமாகக் கொடுக்கப்பட்டு இலவசமாக அவ்வூரில் பணிபுரிந்து வந்தனர்.

இது குறித்த கல்வெட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடல் வெங்கடேஸ்வரா கோவில் உட்பிரகாரத்தில் வீர ராஜேந்திர சோழனால் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுகளின்படி 12 மருத்துவப் படுக்கை, ஒரு மருத்துவர், ‘சல்லிய கிரிகை பண்ணுவான்’ என்ற ஒரு அறுவை உதவி மருத்துவர், மூலிகை பெற்றுவர இரண்டு நபர்கள், இரண்டு பணியாளர்கள், நோயாளிகளுக்கு உதவியாக ஒரு நாவிதர், தண்ணீர் கொண்டுவருபவர் ஆகியோர் பணிபுரிந்தனர். இவர்களுடன், மருந்து வைக்கும் இடத்தில் ஓராண்டுக்கான 20 வகையான மருந்துகள் எப்போதும் நோயாளிக்கு வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

கி.பி. 1120 திருவாவடுதுறையுடையான் கோமதீஸ்வரர் கோவில் உள்ள திருவாவடுதுறையில் மாணவர்களுக்கு வாகபட்டரின் அஷ்டாங்க ஹிருதையாவும் மற்றும் சரக சம்ஹிதாவும் பாடமாக நடத்தப்பட்டன.

மேலும் முகமதியர்கள், இந்தியாவை வென்று நுழைந்தபோது (கி.பி.12 - கி.பி.15)அவர்களுடன் ஹக்கீம்களும் வந்தார்கள். இவர்களுடைய மருத்துவ நூல்கள் பெரும்பாலும், ஹிப்பாகரடீஸ், கேலன் போன்ற கிரேக்க மருத்துவ அறிஞர்களின் நூல்களிலிருந்தும், பழைமையான சமஸ்கிருத நூல்களிலிருந்தும் மொழிபெயர்க்கப் பட்டவையாகும். இவர்கள் அரசர்களுக்கும், மேல்தட்டு மக்களுக்கும் மருத்துவம் புரிந்தனர். இதே காலகட்டத்தில் கீழ்த்தட்டு மக்களுக்கும் கிராம மக்களுக்கும் சுதேசி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

இந்தியாவில் மேலை மருத்துவம் கோவாவில் நுழைந்தது

இந்தியாவில் அலோபதி மருத்துவமனையை ஆரம்பித்தவர்கள் போர¢ச்சுக்கீசியர்களே. அராபியர்கள், போர்ச்சுக்கீசியர்கள் மற்றும் டச்சு வணிகர்கள் இந்தியக் கடற்கரையை ஒட்டிய ஊர்களுக்கு ஆங்கிலேயர்களுக்கு முன்னரே வந்துவிட்டனர். வாஸ்கோடகாமா, கோழிக்கோட்டிற்கு (கள்ளிக்கோட்டைக்கு) 1498ஆம் ஆண்டு வந்தாலும், கேப்டன் அல்பான்சோ டி அல்டிகுவர்குயூ (1509-1515) கோவாவைப் பிடித்து, கிழக்குப் போர்ச்சுக்கீசியர் அரசிற்குத் தலைநகராக்கினான். இவருடைய முதன்மையான எண்ணம், மலபாரில் நடைபெறும் வணிகத்தை மேற்பார்வையிடுவதாகும். 1490ஆம் ஆண்டு கடைசியில் போர்ச்சுக்கீசிய சிப்பாய்களுக்குச் சிறிய அளவில் மருத்துவம் அளிக்க ஒரு மையம் இங்கு அமைக்கப்பட்டது. இதுவே பிறகு, அல்டிகுவர்குயூவினால் கூடுதல் மருத்துவ வசதிகளுடன் “ராயல் மருத்துவமனை’’ என்ற பெயரில் கோவாவில் 1510இல் திறக்கப்பட்டது. இதுவே ஐரோப்பியர்களின் முதல் அலோபதி மருத்துவமனை ஆகும்.

இதைத் தொடர்ந்து, தன் முப்பது ஆண்டு ஆய்வின் மூலம் கார்சியா டி ஓர்டா (Garcia Da Orta)  என்னும் போர்ச்சுக்கீசிய மருத்துவர், இந்திய மூலிகை மருத்துவம் குறித்த நூலை 1563ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார். அதன் பெயர், Coloquios Dos Simples E Drugas - (Discussions on Indian plants and drugs)  என்பதாகும்.

இந்த மருத்துவமனை, இந்தியர்களுக்கு மட்டும் பயிற்சியளிக்காது, பொதுவாகப் பயிற்சி அளித்து, பின்னர் இவர்கள் மற்றைய போர்ச்சுக்கீசிய காலனிகளுக்கும் மருத்துவம் அளிக்க அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோவா மருத்துவமனைச் சிறப்பு

1591ஆம் ஆண்டுக்குப் பிறகு, இம்மருத்துவமனை ஜெசுவர் கிறித்தவப் பிரிவினர் மேலாண்மைக்கு உட்பட்டு, ராயல் மருத்துவ மனையில் 1703இல் Cipriamo Valadarews  என்பவரால் சில மருத்துவப் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. பிறகு உலகில் சிறந்த ஒரு மருத்துவ மனையாகத் திகழ்ந்தது. பைராட் டி லாவில் (Pyrard De Lauel)  என்ற யாத்திரிகர் சரியான ஆவணமின்றி கொச்சியில் ஊர் சுற்றிக் கொண்டிருந்த போது, உடல்நலமில்லாத நிலையில் பிடிபட்டு, இம்மருத்துவ மனையில் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டார். இவர் உலகம் சுற்றியவர். குறிப்பாக, ரோம் ஹோலிகோஸ்ட் மருத்துவமனை, மால்டா போர்வீரர்களுக்கான மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளைப் பற்றியும் அறிந்தவர். இவர் கோவா மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்தபோது, அது குறித்து தன் கருத்தைக் கூறும் நிலையில், மருத்துவமனையைப் பார்ப்பதற்கு, மருத்துவமனைபோல் இன்றி அரண்மனை போல் காட்சி அளித்தது என்றும், முகப்பில் Hospital Die Roy Nortru Seignoro  என்று எழுதப்பட்டிருந்தது என்றும், படுக்கைகள் பட்டு உறையிடப்பட்டு, பருத்தியினால் ஆனதாகவும், தலையணைகள் வெள்ளைத் துணியினால் உறையிடப்பட்டு இருந்தன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர், உதவியாளர், நாவிதர் மற்றும் இரத்தம் அகற்றுபவர் ஆகியோர் ஒரு நாளைக்கு இரண்டு முறை நோயாளிகளைப் பார்வையிட வருகிறார்கள், நோயாளிகள் மொத்தம் 1500 பேர் உள்ளனர். இவர்கள் போர்ச்சுக்கீசிய போர் வீரர்களாகவோ அல்லது கிறித்தவ ஐரோப்பியர்களாகவோ இருந்தனர் என்றும், அம்மருத்துவமனையின் சிறப்பைப்பற்றி தம் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இம்மருத்துவமனை, கோவாவில் தோன்றக் காரணம், 16ஆவது நூற்றாண்டின் கடைசி பத்து ஆண்டுகளில் துப்புரவு இன்மையால் கொள்ளை நோய் கடுமையாக ஏற்பட்டது. இதன் காரணமாக மக்கள் தொகை 4 லட்சமாக இருந்த இடத்தில் 1670இல் அது 40 ஆயிரமாகக் குறைந்தது. 1540இல் வைசிராய் D. Carcio Norouha  சீதபேதியில் இறந்தார். பிறகு இதுபோல 10 வைசிராய்களும் கவர்னர்களும் கோவாவில் இறந்தனர். 1602 - 1682 வரை 25 ஆயிரம் சிப்பாய்கள் இறந்தனர். இந் நிலைமையில்தான் வைசிராய் 1687இல் வெளிநாடுகளுக்கான மாநில செயலருக்கு வேண்டுகோள் விடுத்ததன் காரணமாக, 1703இல் மருத்துவக் கல்வி போதிக்கப்பட்டு, பிறகு 1842இல் Panjim-இல் கோவா மருத்துவப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. பிறகு இதுவே 1888இல் கடற்படையினருக்கும், காலனி அரசுக்கும் என மாற்றியமைக்கப்பட்டது. இப்பள்ளியில் 1818ஆம் ஆண்டில் பயிற்சி பெற்ற 67 மருத்துவர்களில் 43 மருத்துவர்கள் போர்ச்சுக்கீசியர் காலனி உள்ள நாடுகளுக்குப் பணிக்குச் சென்றனர்.

போர்ச்சுக்கீசியர், கோவாவைப் போலவே மதராசிலும் ஒரு மருத்துவமனையை நடத்தியுள்ளனர். போர்ச்சுக்கீசியர் தங்களுடைய வாணிபத்தைப் பெருக்க இயலாத நிலையில், வாணிபம் செய்ய வந்த டச்சுக்காரர்களும் சென்னைக்கு வடக்கே தங்களின் முக்கிய இடமான பழவந்தாங்கலில் ஒரு மருத்துவமனையை நடத்தினர்.

போர்ச்சுக்கீசியர்கள் 1498ஆம் ஆண்டிலேயே இந்தியாவிற்கு வந்திருந்தார்கள். டச்சுக்காரர்களும் பிரெஞ்சுக்காரர்களும் 17ஆம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் வணிகம் செய்ய முனைந்தனர்.

ஆங்கிலேயர்கள் தங்கள் கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் 1600களில் தன்னந்தனியாக, வாணிபம் செய்ய மொகலாயப் பேரரசிடம் அனுமதி பெற்றதால், மற்ற ஐரோப்பியர்களைப் புறந்தள்ளி, நிமிர்ந்து நின்றனர்.

ஒளரங்கசீப்பிற்குப் பிறகு, மொகலாயப் பேரரசு, வீழ்ச்சியுற்ற கால கட்டத்தில், 17ஆவது நூற்றாண்டு கடைசியில் ஆங்கிலேயர்கள் வங்கத்தில் நிலை கொண்டனர்.

ஆங்கிலேயர் வணிகம் செய்ய அடித்தளம்

இந்தியாவிற்கு வந்த முதல் ஆங்கிலேயத் தூதுவர் சர் தாமஸ் ரோ (Sir Thomas Roe).  இவரே மொகலாயப் பேரரசர் ஜஹாங்கீரைச் சந்தித்து, 1615 வணிகத்திற்காக இசைவைப் பெற்றவர். பெரும்பாலான ஆங்கிலேய வணிகர்கள், சூரத், கோவா வழியாகவே, இந்தியாவிற்கு வந்து இறங்கினார்கள். இவர்கள் குறைந்த அளவே மருத்துவம் செய்ய அறிந்திருந்தனர். என்றாலும், இம்மருத்துவம்கூட அன்றைய சுதேசி மருத்துவர்களான ஆயுர்வேத, யூனானி மருத்துவர்களின் புருவங்களை உயர்த்தி, வியப்புடன் பார்க்கும் அளவுக்கு இருந்தது. எடுத்துக் காட்டாகச் சக்கரவர்த்தி ஷாஜஹானின் அன்புக்குரிய மகள் ஜகந்நரா (Jehanare)  தீக்காயங்களால் 1644 ஏப்ரல் 6ஆம் தேதி பாதிக்கப்பட்டு, ஆயுர்வேத மற்றும் யூனானி மருத்துவர்களால் பல வாரங்கள் சிகிச்சை பெற்றும் குணப்படுத்தப்படாத நிலையில், கல்கத்தாவில் நங்கூரம் பாய்ச்சி நிற்கும் கிழக்கிந்தியக் கம்பெனி கப்பலில் டாக்டர் காபிரியல் பிரொடன் இருப்பதை அறிந்த ஷாஜஹான், அவரை அங்கிருந்து டெல்லிக்கு வரவழைத்து மருத்துவம் அளித்ததன் காரணமாக, மன்னரின் மகள் குணமடைந்தாள். அப்போது ஷாஜஹான், மருத்துவம் பார்த்ததற்கான கட்டணம் எவ்வளவு என்று வினவியபோது, அதற்கு அந்த மருத்துவர், தனக்குப் பணம் எதுவும் தேவையில்லை என்றும், அதற்குப் பதிலாக வங்காளத்தில் தாராளமாக வாணிபம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஷாஜஹான், ஆங்கிலேயர் மட்டும் வங்கத்தில் வணிகம் புரிய இசைவளித்தார்.

british and indian kingஅதன் பின்னர் மருத்துவர் பிரொடன், வங்காளத்தில் வைசிராயாக இருந்த ஷாஜஹானின் இரண்டாவது மகன் சுஜாவிற்கும் வெற்றிகரமாக சிகிச்சை புரிந்தார். இந்த இரண்டு வெற்றிகரமான மருத்துவ சிகிச்சைகள்தான் ஆங்கிலேயர் வங்கத்தில் சிறப்புடன் காலூன்ற உதவின என்றால் அது மிகையில்லை.

இதற்குப்பிறகு, 1690இல் ஜாப் சர்நாக் (Job Charnok) என்பவர் தரிசாகத் தன்னிடம் இருந்த நிலத்தில் ஒரு புதிய நகரை உருவாக்கினார். இதுவே பிறகு, கல்கத்தா எனப் பெயர் பெற்றது. இந்த இடத்தில் கொள்ளை நோய்களான காலரா, பெரிய அம்மை நோய்கள் பரவியதால் 1707இல் ஒரு மருத்துவமனையை உருவாக்க வேண்டிய கட்டாயத்திற்கு பிரிட்டிஷார் உள்ளானார்கள் (History of Medicine in Kerala, p.3).

ஆங்கிலேயர் வங்கத்தில் கால் பதிக்க (1725-1774), இராபர்ட் கிளைவ் பிளாசி யுத்தத்தில் (1757) கல்கத்தா நவாபை வென்று, அவரை அதிகாரமற்றவராக்கி, பிறகு கிழக்கு இந்தியக் கம்பெனி என்ற பெயரில் வங்கத்தில் நிலைத்த பிறகு, தங்கள் ஆட்சியை மற்ற மாநிலங்களுக்கும் பரவச் செய்தார்.

ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் 18ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் சண்டை நடைபெற்றது. கிளைவ் - நவாப் இடையே வங்காளத்தில் நடைபெற்ற சண்டைக்குப் பத்து ஆண்டுகளுக்குப் பிறகே (1766) அவர்கள் இராணுவத்திற்காகத் தனிப்பட்ட மருத்துவர்களை நியமித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆங்கிலேயர் மற்றைய ஐரோப்பிய கம்பெனிகளுடன் சண்டையிட்டு, வென்று இந்தியாவில் வணிகம் செய்யும் ஏகபோக கம்பெனி என்ற நிலைக்குத் தங்களை உயர்த்திக் கொண்டனர். இக்காலத்தில், அரசாங்க நடவடிக்கைகளுடன் மருத்துவ சேவையையும் தொடங்கி இராணுவத்தையும் நிலைநாட்டினர்.

இதன்படி கிழக்கிந்தியக் கம்பெனி தங்கள் தொழிற்சாலை மற்றும் இராணுவ வீரர்களுக்கு முதன்முதலில் மருத்துவம் புரியும் பணியில் 1614இல் இலண்டனில் புகழ்பெற்ற அனுபவம் வாய்ந்த மருத்துவர் டாக்டர் ஜான் வுடால் (John Woodall) சர்ஜன் ஜெனரலாக அமர்த்தப்பட்டார்.

பிரெஞ்சு ஊர் சுற்றி மூலம் இந்திய மருத்துவம் கேலி செய்யப்படுகிறது

1652இல் பிரெஞ்சு மாண்டி பில்லியரில் படித்துப் பட்டம் பெற்ற மருத்துவர் பர்னியர் (Bernier), கான்ஸ்டாண்டிநோபில் வழியாகச் சிரியா, பாலஸ்தீனம், எகிப்து ஆகியவற்றைச் சுற்றிப் பார்த்தபின், 1658ஆம் ஆண்டு மொகலாய சக்ரவர்த்தியான ஷாஜஹானின் மூத்த மகன் தாரா ஜிகோ (Dara Shikoh)-விற்குத் தனிப்பட்ட மருத்துவராகப் பணிபுரிந்தார். அப்போது தாராவின் மனைவிக்குக் காலில் ஏற்பட்ட சிகப்பு நிற தோல் புண்ணைக் (Erysipelas) குணமடையச் செய்தார். இந்தியாவில் இம்மருத்துவர் 12 ஆண்டுகள் இருந்துள்ளார். இவரால் மனிதனின் இரத்த ஓட்டத்தை அறிந்த வில்லியம் ஹார்வியின் கண்டுபிடிப்பு மற்றும் பிரான்ஸ் ஜீன் பீகூட் (Jean Peoquet)  உடல்கூறு நூல் ஆகியவை மொழிபெயர்க்கப்பட்டு அவை இந்திய மருத்துவர்களால் அறியப்பட்டன.

இந்திய மருத்துவர்களைப் பற்றிக் கூறும்போது இம்மருத்துவர், “இந்திய மருத்துவர்கள் உடற்கூறு பற்றி அறியாதவர்கள்,’’ என்று கூறி அதற்குக் காரணம், மனித உடலையோ அல்லது மிருக உடலையோ இவர்கள் கூறுபோட்டு அறிந்ததில்லை என்று கூறுவதோடு, இந்துக்கள் ஏதோ எண்ணிப் பார்த்ததுபோல, மனித உடலில் 5000 சிரை இரத்த நாளங்கள் உள்ளன என்று கூறுகிறார்கள் என்று எள்ளி நகையாடியுள்ளார்.

மேலும் இவர்கள், இறந்த உடலை ஆற்றின் அருகில் எரித்து, அதை ஆற்றில் கலக்குவதையும் மற்றும் இறந்த சடலத்தை ஆற்றில் தூக்கி எறிவதையும் கண்டித்து, அதற்கான காரணங்களாகச் சொல்லப்படும் சில மூடப் பழக்க வழக்கங்களையும் மறுத்து எழுதியுள்ளார். மேலும் உடற்கூறு பற்றி அறியாதிருப்பதற்கான காரணத்தைக் கூறு கையில், பிணத்தைத் தொடுவது கூடாது என்ற மூட நம்பிக்கையினால்தான் மருத்துவர்கள் உடல்கூறு பற்றி அறியாது இருக்கின்றனர் என்றும் குறைபட்டுக் கொள்கிறார்.

இவர் மொகலாய அரசருக்கும், ஹார்வியின் கண்டுபிடிப்பான இரத்த சுழற்சியை விளக்க பிரெஞ்சு ஜீன் பீ கூட்டின் உடல்கூறு விளக்கத்தைக் கூறி விளக்கியது சரித்திரச் சான்றாகும்.

கலைமாமணி முனைவர் மருத்துவர் சு.நரேந்திரன்