முப்பத்துநான்கு போர்க்கப்பல்கள், 2 ஜெட் விமானங்கள், 40 கார்கள், அதிபரின் தகவல் தொடர்பு சாதனங்கள், தேவைப்பட்டால் அணுகுண்டைப் பயன்படுத்துவதற்கான ரிமோட் (பொத்தான்). பயணத்தின் போது பயன்படுத்த "லிமோசின்' கார் (இது சாதாரண காரல்ல). வெள்ளை மாளிகையின் முக்கிய அதிகாரிகள், பாதுகாப்பு வீரர்கள், அதிபரின் பாதுகாப்பை ஒழங்குபடுத்த புலனாய்வுத் துறையினர் என மொத்தம் 3000 பேர்கள் இதில் 250 தொழில் முதலீட்டாளர்களும் அடக்கம். இப்படி அமெரிக்க திமிரோடு அதிபர் ஒபாமா இந்தியா வந்தார்.

அமெரிக்க அதிபரை வரவேற்க நாடாளுமன்ற உறுப்பினருக்கு வகுப்பு வேறு எடுக்கப்பட்டது. காரணம், இதுக்கு முன்பு வந்த அமெரிக்க அதிபரை நேரில் சென்று கைகுலுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டபோது, வரிசையாக செல்லாமல் பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆடு மாடுகளைத் திறந்து விட்டால் முட்டி மோதி தறிகெட்டு ஓடுவது போல நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாற்காலி மீதெல்லாம் ஏறி குதித்து சென்று அதிபருடன் கைகுலுக்கினார்களாம். இந்த நிகழ்வு உலக அரங்கில் இந்தியாவுக்கு கொஞ்சம் கௌரவ குறைச்சலாகி விட்டதாம். இந்த முறை இதுபோன்ற ஏதும் நடந்து விடக் கூடாது என்பதற்காக இவர்களுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளை பிரதமர் அலுவலகம் வழங்கியது.

பிரதமர் அலுவலகம் வழங்கிய வழிகாட்டும் நெறிமுறைகளை பாவம் பிரதமரே கடைபிடிக்காமல் போனதுதான் சோகமான நிகழ்வு. அரசுமுறை பயணமாக இந்தியா வந்தவரை விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றிருக்கிறார்.

மேலும் தனியாக சந்திப்பு, தனியாக விருந்து என மரபு மீறி செயல்பட்டிருக்கிறார் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதற்கு பிரதமர் ஒபாமா அமெரிக்காவின் அதிபர் மட்டுமல்ல, என்னுடைய நண்பர் என்று விளக்கமளித்துள்ளார்.

தான் அமெரிக்காவின் உண்மையான விசுவாசி என்பதை வெளிப்படுத்தக் கிடைக்கும் சந்தர்ப்பத்தையெல்லாம் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது, மன்மோகனுக்கு கொஞ்சம் வருத்தம்தான். என்ன செய்வது வெறும் வேசமாக இருந்தால் கலைத்து விடலாம். இது உண்மை முகமாயிற்றே!

ஒபாமாவின் வருகையை நாம் எதிர்க்கக் கூடாது. அவர் கருப்பினத்தைச் சேர்ந்தவர். இங்குள்ள சாதிய சனாதான ஒடுக்குமுறை போல அமெரிக்காவில் வெள்ளையர், கருப்பர் என்ற நிறவேற்றுமையும் இதனடிப்படையிலான ஒடுக்குமுறைக்குள்ளான கருப்பரை நாம் எதிர்ப்பது சரியல்ல என்று வைகோவும், இவரைத் தொடர்ந்து திமுகவும், இன்னும் பலரும் பேசத் தொடங்கி விட்டனர். ஒரு கருப்பர் அமெரிக்காவின் அதிபராக உயர்ந்திருப்பதும், இந்நிலையில் அவர் இந்தியா வருகைக் குறித்தும் நாம் பெருமைப்பட வேண்டும் என, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை முழக்கத்தை இந்திய ஆட்சியாளர்கள் வேறு பேசுவது நமக்கு வியப்பாக இருக்கிறது.

ஒபாமா இன்று அடிமையினத்தின் அடையாளம் (பிரதிநிதி) இல்லை. மாறாக கருப்பினத்தில் பிறந்த வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அடையாளம். உலகைச் சுரண்டிக் கொழுக்கும் அமெரிக்க முதலாளிகளின் பிரதிநிதி அவ்வளவுதான். ஒரு கருப்பினத்தவர் அமெரிக்காவின் அதிபராக உயரத்தில் அமர்ந்திருப்பது, இன இழிவை சுமந்துக் கொண்டிருந்த அமெரிக்கப் பூர்வ குடிகளுக்கு ஆன்மப் பலத்தை அந்த சுழல் கொடுத்திருக்கும் என்பது நாம் மறுக்க முடியாது. அதேநேரம் ஒபாமாவின் வெற்றி கருப்பர்களின் விடுதலைக்குத் தீர்வல்ல. ஒபாமா அதிபர் கட்டிலில் அமர்ந்தவுடன் நிற வேற்றுமை ஒழிந்து விடவில்லை. அப்படி ஒழிந்தும் விடாது.

சரிந்துக் கொண்டிருக்கின்ற அல்லது அழுகி இற்று வீழ்ந்துக் கொண்டிருக்கின்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஆதிக்கத தன்மையில் மீண்டும் நிறுவ அமெரிக்க முதலாளிகளுக்கு முதலாளித்துவ அறிவாற்றலும், செயல் திறமும் வாய்ந்த ஒரு தலைமை தேவைப்பட்டது. அமெரிக்காவின் இறுதி மரண வாக்கு மூலத்தை கேட்க வெள்ளையர்களுக்கு விருப்பமில்லை. ஆகவே ஒரு கருப்பரைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள்போலும். அமெரிக்காவின் அசிங்கமான வரலாற்று அவலங்களை கொஞ்சக் காலம் திரையிட்டு மறைப்பதற்கும், நான் நிறவெறி பார்க்காத சனநாயக வாதி என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளவும் "கருப்பு மூலதனம்' வெள்ளை முதலாளிகளுக்கு கிடைத்திருக்கிறது. இப்போது ஒபாமாவின் நிறமும், குணமும் வெள்ளைச் சுரண்டல்தான். இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலனை வாஞ்சோடுப் பாதுகாக்கக் கடமைப்பட்டிருக்கிறது.

ஒபாமாவின் இந்திய வருகையை வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ராபர்ட் சிப்ஸ் “ஒபாமாவின் இந்தியப் பயணத்தில் தீவிரவாத எதிர்ப்பிற்கே முதலிடம்'' என்று அறிவிக்கை செய்துள்ளார். அதுபோலவே, நவம்பர் 6 மும்பை வந்த அதிபர், 2008 இல் தாக்குதல் நடந்த "தாஜ் ஓட்டலில்' தங்கியது. தாக்குதலில் பலியான 166 பேர்களுக்கு நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கெடுத்தது, பயங்கரவாதிகளுக்கு எதிராகப் பேசியது குறிப்பிடத்தக்க நிகழ்வு.

ஒபாமா இந்திய வருகைக்கான உண்மையான காரணங்கள் பல இருக்க வெள்ளை மாளிகையின் அறிவிப்பின் சூழ்ச்சியை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவிற்குள் அமெரிக்காவின் தடையற்ற உள் நுழைவிற்கு மும்பை தாக்குதல் ஒரு காரணம். இந்தியாவில் நடந்த மும்பைத் தாக்குதலை அமெரிக்காவின் தலைநகரான வாசிங்டன்னில் நடந்த தாக்குதல் போலவே அமெரிக்கா அக்கறை எடுத்துக் கொண்டு செயல்பட்டது. இந்தியாவை விட கூடுதலாகவே பாக்கிஸ்தானை அமெரிக்கா கண்டித்தது. போதாக்குறைக்கு அமெரிக்க உளவுத் துறை 15 நாட்கள் மும்பையிலேயே தங்கி தாக்குதலுக்கான ஆதாரங்களைத் திரட்டிச் சென்றனர். இதுகுறித்து இந்தியாவிற்கு எந்த தகவலும் வெளிப்படுத்தவில்லை.

மும்பை தாக்குதலில் இந்திய  அமெரிக்காவின் கண்ணாமூச்சி விளையாட்டுகள் நிறையவே இருக்கின்றன என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. மும்பைத் தாக்குதல் வழக்கில் அவிழாத முடிச்சுகள் ஏராளம். இந்நிலையில் மும்பை தாக்குதலை மேலும் மேலும் மையப்படுத்த வேண்டிய தேவை இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஏன் ஏற்பட்டது. அதிபரின் முதல் பயணமே மும்பை. அதுவும் தாக்குதல் நடந்த தாஜ் ஓட்டலில்தான் தங்க ஏற்பாடு. அதிலுள்ள 800 அறைகளுமே இவர்களுக்காக ஒதுக்கப்பட்டு விட்டது. ஒபாமாவின் முதல் நிகழ்ச்சியே தாக்குதலில் பலியானவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி. மற்றும் தாக்குதல் போது வீரச் செயல் புரிந்தவர்களின் குடும்பங்களுக்குப் பாராட்டு. நினைவேந்தல் உரையில் பயங்கரவாதிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கி வேண்டும் என்றும், பயங்கர வாத எதிர்ப்பில் இந்தியாவுடன் இணைந்தே இருக்கும் என்று பேசியுள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மரியாதை நிமித்தமோ, சடங்குத்தனமானதாகவோ கருத முடியாது. இது சூழ்ச்சித் திரன் கொண்ட நடவடிக்கை. மும்பை பயங்கரவாதம் வரப் போகும் அமெரிக்கப் பயங்கரவாதத்தின் முன் அறிவிப்பாக ஏன் இருக்கக் கூடாது என்ற கேள்வி வலிமையாக உள்ளது.

குறிப்பாக இன்னொன்றையும் நாம் இங்கே புரிந்துக் கொள்ள வேண்டும். ஏகாதிபத்தியங்கள் எதிர்மைப் படுத்துகின்ற தீவிரவாதம், பிரிவினை வாதம், பயங்கரவாதத்திற்குப் பின்னால் ஏகாதிபத்திய முதலாளிகளின் வர்க்க நலனும், ஏகாதிபத்திய பயங்கரவாதமும் பதுங்கியிருக்கிறது. பயங்கரவாதத்திற்கு பின்னால் இருக்கும் பயங்கரவாதம்தான் பயங்கரமானது.

ஒபாமாவின் இந்திய நாடாளுமன்ற உரையிலும் மும்பைத் தாக்குதல் முக்கிய இடம் பெற்றது. மேலும் பாகிஸ்தானைக் கண்டித்து, ஆப்கானிஸ்தானில் இந்திய செயல்பாட்டிற்கு பாராட்டுத் தெரிவித்தது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பு வகிக்க ஆதரவு தெரிவித்தது போன்ற பேச்சுகள் இந்திய ஆளும் வகுப்பை உச்சிக் குளிரச் செய்தது. இந்தியப் பார்ப்பன ஆதிக்கச் சக்திகளுக்கு தெம்பூட்டின. இந்திய ஊடகங்களும் அடிதாங்கிப் பாராட்டின.

இந்திய ஆதிக்கச் சக்திகள் கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை. தேர்ந்த தெளிவோடு வரவேற்கின்றன. இந்தியப் பார்ப்பனியத்திற்கு அமெரிக்காவே சிறந்த நேச சக்தி. பார்ப்பனியமும், ஏகாதிபத்தியமும் ஒன்றையொன்று தெளிவாகப் புரிந்து கொண்டன. இந்தப் புரிதலின் வெளிப்பாடுதான் இந்திய  அமெரிக்காவின் உறவு இயற்கையானது என்று இந்தியப் பார்ப்பனியம் புகழாரம் செய்தது. அதேபோல ஒபாமாவும் இந்திய அமெரிக்க நட்பு முக்கியத்துவம் வாய்ந்ததென்று பேசியிருக்கிறார்.

இரு நாட்டின் ஆளும் வர்க்கங்களின் நலன்கள் தெளிவாகவே வரையறுக்கப்பட்டு விட்டன. நாம் கூட இவ்விரு நாடுகளின் நட்பை இயற்கையானது என்றே வர்ணிக்கலாம். "இந்து அறிவு ஜீவிகளை'ப் போல் இந்தியாவை அமெரிக்கா ஏமாற்றுகிறது. இந்திய ஆட்சியாளர்களுக்கு எதுவும் தெரியவில்லை. இந்தியாவை அமெரிக்க மிரட்டிப் பணிய வைக்கிறது என்ற கதையளப்புகளின் வழி இந்தியத்தைத் தாங்கிப் பிடிக்க வேண்டியத் தேவை நமக்கில்லை. இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதுதானே இந்திய அறிவு ஜீவிகள் "இந்தியக் காம்ரேட்களின்' கனவு. பின் ஏன் அமெரிக்க இந்திய நட்பை எதிர்க்க வேண்டும். வல்லரசு வல்லரசோடுக் கூட்டுச் சேர்வது இயற்கைதான். இதில் நல்ல வல்லரசு, கெட்ட வல்லரசு என்று ஏதாவது இருக்கிறதா?

இந்தியாவை "ஸ்த்திர' தன்மையானதாக மாற்ற வேண்டும் என்று எண்ணுகிற எல்லாப் பார்ப்பனிய சக்திகளும், அமெரிக்க நட்பை விரும்புகிறது. இந்தியக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா தேவை, அமெரிக்காவுக்கும் இந்தியக் கட்டமை பாதுகாக்க வேண்டியத் தேவையிருக்கிறது. இந்த தெளிவோடுதான் அமெரிக்க முதலாளிகளும் இந்திய முதலாளிகளும் உறவாடிக் கொண்டிருக்கின்றனர். இதன் வெளிப்பாடுதான் ஒபாமாவுக்கு வந்த இந்தியப் பற்றும் மன் மோகனின் மரபு மீறிய வரவேற்பும்.

166 பேர் படுகொலைக்கு அஞஅசலி செலுத்தும் ஒபாமா போபால் விச வாயுவால் கொல்லப்பட்ட 22 ஆயிரம் பேருக்கும் கதிர் வீச்சால் பாதிக்கப்பட்ட 5 இலட்சம் பேருக்கும் ஏன்? அஞ்சலி செலுத்தவில்லை. கண்ணீர் வடிக்கவில்லை. மும்பை பயங்கர வாதிகளை கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றவர் போபால் குற்றவாளிகளைப் பற்றி ஏன் வாயைத் திறக்கவில்லை. போபால் பயங்கரத்தை விட வேறு பயங்கரவாதம் இந்தியாவில் நடந்துள்ளதா? இது இந்திய ஆட்சியாளர்களுக்கு தெரியாதா?

உலகில் எங்கும் மீறப்படும் மனித உரிமைகளை கண்டிக்கும் உரிமை இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும்தான் உள்ளது என்கிறார் ஒபாமா. என்னக் கொடுமை? இந்தியா ஈழத்தில் செய்த மனித உரிமை மீறலை விடவும், போர் குற்றங்களை விடவும், அமெரிக்கா ஈராக்கிலே செய்த மனித உரிமை மீறலை விடவும், போர்க் குற்றங்களை விடவும் 21 ஆம் நூற்றாண்டில் உலகில் வேறு எங்காவது மனித உரிமை மீறல்கள் நடந்ததுண்டா? ஆனாலும் இவர்கள் மனித உரிமை மீறலைப் பற்றி பேசுகிறார்கள். பேச முடிகிறது. ஏகாதிபத்தியத்தின் வெற்றியும், பார்ப்பனியத்தின் வெற்றியும் எதிரியை அடையாளப்படுத்துவதில்தான் இருக்கிறது. அதிலும் இவர்களின் எதிரியை பொது எதிரியாக மாற்றுவதில்தான் இவர்களின் வெற்றி இருக்கிறது.

அந்த வகையில் ஒரு நாட்டின் அதிபரையே குற்றவாளியாக்கி படுகொலை செய்ய முடிந்தது அமெரிக்க ஏகாதிபத்தியத்தால். ஒரு தேசிய இனத்தின் தலைவரை, விடுதலைப் போராளியை எதிரியாக்கி ஒரு இனப் படுகொலையையே நடத்த முடிகிறது இந்தியாவால். ஆனாலும் நாங்கள் பயங்கரவாதத்தை எதிர்ப்போம், மனித உரிமையைக் காப்போம் என்கின்றனர்.

ஒபாமாவின் பயங்கரவாத வாய்ச் சவுடாலுக்குப் பின்னால் ஒழிந்திருக்கும் நோக்கம் 1. அணுசக்தி இழப்பீடு மசோதாவில் தொடரும் இல்லை முடிவுக்கு கொண்டு வருவது, 2. உயர் கல்வியில் அமெரிக்காவின் நேரடி முதலீட்டை அனுமதிப்பது, 3. சில்லறை வணிகத்தில் அமெரிக்காவின் வால்மார்ட்டை அனுமதிப்பது, 4. அமெரிக்காவிடமிருந்து வாங்க விரும்பும் இராணுவத் தளவாடங்கள் தொடர்பான ஒப்பந்தங்களை ஒழுங்குப்படுத்துவது, 5. 60 ஆயிரம் அமெரிக்கர்களுக்கு வேலை உத்தரவாதம் அளிக்கும் வகையில் பல்வேறு தொழில் ஒப்பந்தங்களைப் போடுவது என அமெரிக்காவின் பொருளியல் நலனை முன்னிறுத்தித்தான் இப்பயணம் இதில் பெரும்பாலான ஒப்பந்தங்கள் ஏற்கனவே முடிவானவைகள்தான்.

குறிப்பாக அணுசக்தி ஒப்பந்தம், உயர் கல்வியில் நேரடி முதலீட்டை அனுமதிப்பது, சில்லரை வணிகத்தில் பெரு வணிகத்தை அனுமதிப்பது போன்ற நடவடிக்கைகள் அடிப்படை மக்களின் வாழ்வாதாரத்தை உடனடியாகப் பாதிக்கக் கூடியதாகும். போபால் விச வாயு நிகழ்த்திய மனிதப் பேரழிவைக் கண்டும் அணு ஒப்பந்தம் போட துணிகிறார்கள் என்றால் இவர்களுக்கு மக்கள் மீது என்ன அக்கறை இருக்க முடியும். இடதுசாரிகள் கூட அணுசக்தி ஒப்பந்தத்தின் ஷரத்துக்களையும், இழப்பீடு மசோதாவில் உள்ள குறைபாடுகளையும்தான் குற்றம் சாட்டுகிறார்களே தவிர, அணு உலையே இந்தியாவுக்குத் தேவையில்லை என்று சொல்ல யாரும் முன்வருவதில்லை. ஏனென்றால் அணு உலை இருந்தால்தான் இந்தியா வல்லரசாக முடியும் என்ற எண்ணம் இவர்களுக்கு உண்டு.

சில்லறை வணிகத்தில் உயர் கல்வியில், உலக முதலாளிகளின் நுழைவு என்பது தேசிய இனங்களின் தேசியப் பொருளாதாரத்தையும், தேசிய கல்வி முறைகளையும் ஒரே நொடியில் சூறையாடும் செயல். உலகமயமாக்களின் ஒவ்வொரு நகர்வும் உழைக்கும் மக்களுக்கும், தேசிய இனங்களுக்கும் எதிரானது.

அந்த வகையில்தான் அமெரிக்காவை நாம் எதிர்க்க வேண்டியுள்ளது. அமெரிக்க எதிர்ப்பு என்பது இந்திய எதிர்ப்போடு இணைந்ததுதான். அமெரிக்க வல்லரசு இந்தியா நல்லரசல்ல. இரண்டுமே வல்லரசுகள்தான். அமெரிக்கா வளர்ந்த வல்லரசு, இந்தியா வளரும் துணை வல்லரசு அவ்வளவுதான்.

நம்மை பொறுத்தவரை அமெரிக்கா இந்தியாவைச் சுரண்ட வருகிறது என்பதையும் தேசிய இனங்களைச் சூறையாட வருகிறது; உழைக்கும் மக்களை கொன்றொழிக்க வருகிறது; இதை மூடி மறைக்க பயங்கரவாத, தீவிரவாத, பிரிவினைவாத எதிர்ப்பு முகமூடியை அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்தே மாட்டிக் கொள்கிறது. நம்முடைய எதிரிகள் அமெரிக்க இந்தியப் பயங்கரவாதிகள்தான்.

Pin It