இந்தியா 1947-இல் விடுதலை பெற்று, 1950-இல் ஒரு ஜனநாயகக் குடியரசாக மலர்ந்தது. எல்லா அம்சங் களிலும், புதிய இந்தியாவை இந்தியமயப்படுத்த வருங்காலத் தலைமுறையினரின் கல்வியில் கல்வி யாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்,

முதன்மையாகக் கல்வியை இந்தியமயமாக்க வேண்டும் என்று அன்றைய இந்தியப் பெரியார்கள் விரும்பினார்கள். மகாத்மா காந்தி, டாக்டர் அப்துல் கலாம் ஆசாத், டாக்டர் ராதாகிருஷ்ணன் முதலிய அக்காலப் பேராளுமைகள் இந்தியக் கல்வியை இந்தியமயப்படுத்தப் பல வழிகளைக் காட்டி யுள்ளார்கள். எல்லா வளர்ச்சிகளுக்கும் மூலமாக இந்திய அறிவியலும், அறவியல், அழகியலும் அமைய வேண்டும் என அவர்கள் விரும்பினார்கள். பல அம்சங்களில் இந்த நோக்கங்கள் பெருமளவு நிறைவேறி வருகின்றன. தாய்மொழி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. தாய்மண்ணின் வரலாறும், புவியியலும் கவனம் பெறுகின்றன.

ஆனாலும் ஆங்கில இலக்கியத்தைப் பொறுத்த வரையில், இன்றும் கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் ஆங்கிலேயரின் படைப்புகள், குறிப்பாக இங்கிலாந்து மக்களையும், மரபுகளையும், பண்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்ட ஆங்கிலேய அறிஞர்களின் கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், நாவல்கள்  முதலியன பெருமளவு மேற்கத்திய நாடுகளில் இருந்தே பெறப் பட்டு நம் நூல்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது வருத்தம் தருகின்ற ஒரு செயல். இந்திய ஆங்கிலக் கல்வியில் இது ஒரு பின்னோக்குச் செயல்.

என்ன காரணமோ தெரியவில்லை, தமிழ் நாட்டுக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பணி செய்யும் பேராசிரியர்களுக்குத் தாய்மொழி மீது அக்கறை மிகக் குறைவாகவே உள்ளது. ஆங்கிலத்தை உயர்ந்த மொழியாகவும் தமிழைத்  தாழ்ந்த மொழி யாகவும் கருதும் போக்கு அவர்களிடம் மிகுதியாகக் காணப்படுகிறது.

ஆங்கிலப் பேராசிரியர்கள் தாய்மொழியிலும் தேர்ச்சி உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் யாரும் கல்லூரிக்கு வெளியே வீட்டிலும் வீதியிலும் பெருமளவுக்கு ஆங்கிலத்தில் பேசுவ தில்லை. தாய்மொழியில்தான் பேசுகிறார்கள். அவர்கள் தாய்மொழியை நேசித்தால், தாய்மொழி யிலிருந்து ஆங்கிலத்துக்குப் பல படைப்புகளை எளிதில் மொழி மாற்றம் செய்து, உலக இலக்கிய அரங்குக்குத் தர முடியும். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எத்தனை ஆங்கிலப் பேராசிரியர்கள் இந்த முக்கியமானப் பணியைச் செய்கிறார்கள்?  செய்யவில்லை என்பதே பதில். ஏன் செய்யவில்லை? காரணம் அவர்கள் தாய்மொழியை ஒரு தாழ்ந்த மொழியாகவும் ஆங்கிலத்தை உயர்ந்த மொழியாகவும் கருதுகிறார்கள். இந்தக் குறையைப் போக்கத் தாய் மொழி இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, நூல்கள் உருவாக்கி, அவற்றை ஆங்கிலப் பேராசிரியர்கள் வகுப்பறைகளில் மாணவர்களுக்கு நடத்தும்படிச் செய்வதே.

இரண்டு நூற்றாண்டுகளாக இங்கு நவீனத் தமிழ் இலக்கியம் பெருமைக்குரிய அளவில் வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறது. நாடகங்கள், கதைகள், கட்டுரைகள், நாவல்கள், கவிதைகள், மொழி பெயர்ப்புகள் எனத் தமிழில் ஏராளம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் பல உலகத் தரம் உள்ளவைகளாகவே தோன்றுகின்றன. ஆனால் பள்ளி களிலும் கல்லூரிகளிலும் மாணவர் பயிலும்  ஆங்கில இலக்கியப் பாடத்தில் இவை பாடங்களாக இடம் பெற்றுள்ளனவா? பதில் மனதுக்கு நிறைவு தரவில்லையே!.

இன்றும்

Baa baa black sheep

Have you any wool

Yes sir, yes sir

Three bags full.

என்றுதானே அன்னியத்தனமாகத் தொடக்கக் கல்வியிலேயே பிரிட்டிஷ் வியாபாரச் சூழலை நம் குழந்தைகளின் மூளையில் நுழைக்கிறோம். இதை மாற்றி

Love to do good.

Calm yourself against anger.

என்று ஆத்திசூடியை அருமையான ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தரலாமே.

விடுதலை பெற்ற இந்தியாவில் படிப்படியாக எல்லாத் துறைகளும் இந்தியமயமாக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தியம் என்னும் அடித்தளத்தின் மீது உலக அறிவியலும், அறவியலும், அழகியலும் கட்டி எழுப்பப்பட்டிருக்க வேண்டும். முழுக்க இந்திய மயமாதல் இன்று எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்று சிலர் சந்தேகப்படலாம். அதற்கு அடித்தளமிட, நம் பாடத்திட்டங்கள் தொடக்க நிலையிலிருந்தே பெருமளவு இந்தியமயப்படுத்தப்பட வேண்டும்.

விடுதலைக்கு முன் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் அவர்களுடைய நாட்டையும், மொழியையும், பண்பாட்டையும், நம் மீது திணிக்க வேண்டிய அவசியம் இருந்தது. இந்தத் திணிப்பு களின் வழியாக நம் இளைஞர்கள் உள்ளங்களை ஆங்கிலேயருக்கு வசப்படுத்தி, இந்திய சமூகத்தை அடிமைப்படுத்த  அவர்கள் முயன்றார்கள்.

ஆனால் நாடு சுதந்திரம் பெற்றபின், நம்மைப் பொறுத்தவரையில் உலகத்தின் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் ஒன்றுதான் இங்கிலாந்து. நம்முடைய இலக்கியமும், மொழியும், பண்பாடும்தான் நமக்கு முக்கியம். தமிழ்மொழி சார்ந்தும், பண்பாடு சார்ந்தும் அவற்றைப் படிப்பதன் மூலம்தான் மாணவர்களுக்குப் பாடத்தில் ருசி ஏற்படும். அதன் வழியே ஆங்கிலத்திலும் அவர்களுக்கு ஆர்வம் ஏற்படும். இந்த நிலையில் பெரிய அளவுக்கு நம்மோடு உறவு ஏதும் இல்லாத மேற்கத்தியப் பண்பாட்டை நம் மூளையில் திணிக்கும் ஆங்கில இலக்கியங்கள் இன்று நம்மை ஆக்கிரமிப்பது நல்லதல்ல. அது நம் மனதில் பழைய அடிமைப் புத்தியையே நிலைநிறுத்தும்.

எனவே பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் கற்பிக்கப்படும் ஆங்கிலப் பாடத்திட்டத்தில் அந்த அந்த மாநிலத் தாய்மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட பாடங்களோடு, பிற இந்திய மொழிகளிலும் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட பாடங்களும் சிறிய அளவில் சேர்க்கப்படலாம். மூன்றாவது நிலையில்தான் உலக நல்லிலக்கியங்கள். அதுவும் ஆங்கிலம் மட்டுமல்லாமல், ஜெர்மன், பிரஞ்சு, ரஷ்யன், சீனம், ஜப்பான் இலக்கியங்களும்  நம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படலாம். நமக்கு சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள். பாரதி, பாவேந்தர் முக்கியம். அடுத்த இந்திய நிலையில் தாகூர் முக்கியம், வள்ளத்தோளும், தகழியும், கேசவ தேவும் முக்கியம்.

இந்த முறையில் உருவாக்கப்படும் பாடத் திட்டமே மாணவர்களுக்கு உகந்தது. கவர்ச்சிகர மானது. அவரவரும் அவர்களுடைய பண்பாட்டைப் புரிந்து கொள்ளவும், சுவீகரித்துக் கொள்ளவும் இந்த முறையே வழி வகுக்கும். அதுமட்டுமல்ல, வட்டார மொழிகளில் எழுதும் எழுத்தாளர்களை அந்த மொழி மாணவர்கள் ஆங்கில மொழி வழியாகக் கற்றுக் கொள்ளவும், அதன் வழி தங்கள் பண்பாட்டுப் பெருமைகளை உணரவும் வழி செய்யும்.

இப்படிப்பட்ட நூல்கள் மாணவர்களின் மனதில் ருசி ஏற்படுத்தும். இன்று  ஆங்கில நூல்கள் தருகின்ற அன்னியத் தன்மையை, அதன் மூலம் மாணவர்களுக்கு வருகின்ற கசப்பை இந்த முறையில் பெருமளவுக்குக்  குறைத்து விடலாம். தாய்மொழியையும், தாய் மொழியில் எழுதும் எழுத்தாளர்களையும் ஆங்கிலம் வழியாகக் கற்பவர்கள், அவரவர் அவர்கள் தாய் மொழியில் விசாலம் பெறுவார்கள். தாய்மொழி மீது மதிப்பும் மரியாதையும் பெருமிதமும் கொள் வார்கள். வளர்வார்கள்.

[நெல்லை ம.சு.பல்கலைக்கழக ஆங்கிலத்துறை 2019, பிப்ரவரி 7,8 ஆகிய இரு நாட்கள் நடத்திய மொழிபெயர்ப்பு வட்டார இலக்கியங்கள் என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் முதல்நாள் ஆற்றிய வழி காட்டும் உரையின் சுருக்கம்.]