raghulP450நிலப்படங்களும் நிலப்பட வரைவியலும் இல்லாத அக்காலத்தில் பயணிகள் பாதை கண்டறிவதும் அதன் வழி செல்வதுமான பல்வேறு இடையூறுகளுக்கிடையே அவர்கள் சென்று வந்து, அந்த அறிவை தமக்குப் பின்பு வருவோர் பயன்பெறுமாறு பயண இலக்கியம் படைத்தனர். இந்திய பயண இலக்கியத்தின் தந்தை என அறியப்படுபவர் இராகுல்ஜி எனும் இராகுல் சாங்கிருத்தியாயன். இராகுல்ஜி 1893 ஆம் ஆண்டு கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் ஆஜம்கட் மாவட்டம் , பண்டகா என்ற கிராமத்தில் பிறந்தார். தன் வாழ்வில் இந்தியோடு, பாலி, சமஸ்கிருதம், அரபி, உருது, பாரசீகம், கன்னடம், சிங்களம், ப்ரெஞ்சு, ரஷ்யன் போன்ற 33 மொழிகளையும் தாமாகவே கற்று பன்மொழிப் புலவராய் விளங்கினார். இவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றதோடு மட்டுமன்றி  நேபாளம்,

திபெத்,  இலங்கை, ஈரான், சீனம், முன்னாள் சோவியத் உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் சென்றிருக் கிறார். திபெத்திற்கு இவர் புத்த துறவியாகச் சென்று அங்கிருந்து பல மதிப்புள்ள புத்தகங்களையும் ஓவியங் களையும் இந்தியாவிற்குக் கொணர்ந்தார். இவை முன்னர் இந்தியாவின் நாளந்தா நூலகத்தில் இருந்தவை ஆகும். 1963 ஏப்ரல் 14 அன்று தனது 70வது வயதில் மறைந்த ராகுல்ஜி எனும் ராகுல் சாங்கிருத்தியாயன் இன்றளவும் அவரது எண்ணற்ற எழுத்துக்களுக்காக இன்றுவரை போற்றப்படுகிறார்.

இராகுல்ஜி பல்வேறு துறைகளில் 146 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய நூல்களில் அனைவரும் அறிந்தது வால்கா முதல் கங்கை வரை, பொதுவுடமை தான் என்ன?, சிந்து முதல் கங்கை வரை போன்ற புகழ்பெற்ற நூல்கள். இவற்றோடு சமீபத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸால் மறுபதிப்புக் கண்டிருக்கும் சில நூல்களும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டவை : இந்து தத்துவ இயல், இஸ்லாமிய தத்துவ இயல், ஐரோப்பிய தத்துவ இயல், விஞ்ஞான லோகாயத வாதம் மற்றும் ஊர்சுற்றிப் புராணம். இவை யாவையும் தமிழில் மொழி பெயர்த்திருப்பவர் திரு.ஏ.ஜி. எத்திராஜுலு.

தன் வாழ்நாளில் பெரும்பகுதியைப் பயணங்களில் கழித்ததைப் பெருமையாகக் கருதிய இராகுல்ஜி, புதிதாகப் பயணம் செய்பவர்களுக்காக மிகச் சிறந்த வழி காட்டும் நூலாகப் படைத்ததே ஊர்சுற்றிப் புராணம். தன் பயண அனுபவங்களால் எதிர்கொண்ட சவால்களையும், ஆச்சரியங்களையும், கண்டடைந்த சாதனை களையும் மிகுந்த ரசனையோடு  இந்நூலில் எழுதி யிருக்கிறார் இராகுல்ஜி. தலைசிறந்த பயணிகளான மெகஸ்தனீஸ், பாகியாண், யுவான் சுவாங் போன் றோரின் பயண அனுபவங்களும் சிறந்த பயண இலக்கியங்கள் எவ்வாறு படைக்கப்பட்டன என்பன போன்ற தகவல்களும் நூல் முழுவதும் விரவியுள்ளன.

வாசகர்களின் மனதில் ஊர்சுற்றும் எண்ணத்தை வலுப்படுத்தவே இந்நூலை எழுதியதாகவும் ஊர் சுற்றிகளுக்குத் தேவையான  வழிகாட்டுதல்களை முடிந்தவரைத் தந்திருப்பதாகவும் இராகுல்ஜி கூறுகிறார். பதினாறு தலைப்புகளில் ஊர்சுற்றிப் புராணம் பயணப்படுகிறது. நாமும் சேர்ந்து ஊர்சுற்றலாமா?

  1. ஊர்சுற்றும் அவா : உலகத்திலுள்ள தலைசிறந்த பொருள் “ஊர்சுற்றுவது” தான் என்கிறார் இராகுல்ஜி. ஊர்சுற்றுவதை விட தனி மனிதனுக்கும், சமுதாயத் திற்கும் நன்மை தரும் செயல் வேறொன்றுமில்லை எனவும் உறுதியாகக் கூறுகிறார். இயற்கையான புராதன மனிதன் வானத்துப் பறவைகளைப் போல் ஊர் சுற்றியாகத் தான் இருந்திருக்கிறான். சார்லஸ் டார்வின் ஒரு சிறந்த ஊர்சுற்றியாக இல்லாதிருந்தால் உயிர்களின் பரிணாமவளர்ச்சி பற்றிய மகத்தானக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்க முடியுமா? என வினவுகிரார். மேற்கத்திய நாடுகளில் விஞ்ஞான யுகத்தைத் துவக்கிய வெடிமருந்து, பீரங்கி, கண்ணாடி, அச்சகம், திசைகாட்டி, மூக்குக் கண்ணாடி போன்ற பொருட்களைக் கொண்டு சேர்த்த வர்கள் மங்கோலிய ஊர்சுற்றிகளே! என்கிறார் இராகுல்ஜி. புத்தர், இயேசு, ஆதிசங்கரர் போன்ற மதத் தலைவர்கள் அநேகர் ஊர்சுற்றிகளே!. குடில், ஆசிரமம் என்று என்று கட்டிக் கொண்டு ஓரிடத்திலேயே தங்கிவிடும் மேதாவிகளை “செக்குமாடுகள்” என்று சாடுகிறார். அஞ்சாமை உள்ளவன் தான் ஊர்சுற்றி விரதம் கொள்ளமுடியும். கவலையில்லா வாழ்வை நாடிவரும் எதிர்கால ஊர்சுற்றிகளே, உங்களை வரவேற்க உலகம் தன் இருகைகளையும் விரித்து நிற்கிறது. வாருங்கள் என வரவேற்கிறார் இராகுல்ஜி.
  2. தடைகளைத் தகர்த்தெறி : உலகத்தைப் புரிந்து கொண்ட எந்த வாலிபனோ யுவதியோ தடைகளைத் தகர்தெறிந்து வெளிவந்தால் மட்டுமே சிறந்த ஊர் சுற்றியாக மாறமுடியும். வெளிஉலகத் தடைகளை விட உள்ளத்தடைகளே அதிகம். பிறந்த மண், தாய், தந்தை, மனைவி, சுற்றம், நண்பர்கள் என அன்புத் தளைகளும் பொறுப்புகளும் இருந்தாலும் அவற்றையெல்லாம் கடந்தது “ஊர்சுற்றிப் பாதை” என உணர வேண்டும் என்கிறார் இராகுல்ஜி. பறவைகள் தம் குஞ்களுக்கு இறக்கைகள் முளைக்கும் வரையில் மட்டுமே அவற்றின் பொறுப்பை வகிக்கின்றன. அதன் பிறகு பறவைக் குஞ்சுகள் பரந்த உலகில் சுதந்திரமாகப் பறக்கத் தொடங்கிவிடுகின்றன. ஆனால் படித்த பெற்றோர்கள் தமது வயது வந்த பிள்ளைகளும் தங்கள் அருகிலேயே வாழ்நாள் கைதிகளாக விழுந்து கிடக்கவே விரும்பு கிறார்கள். மனைவியை விட்டுவிட்டு ஊர்சுற்றப் போய்விடுவதால் நாட்டுக்கு நன்மைதான் பயக்குமே தவிர, கேடு வந்துவிடாது!!! என்கிறார். பயணம் பற்றிய பல அச்சங்கள் நம்மிடையே இருக்கின்றன. அந்த மன பலவீனத்தைத் துறந்துவிட்டால் உலகத்தையே வெற்றி கொள்ளலாம். சல்லிக்காசில்லாமல் இந்த உலகத்தையே சுற்றிவரலாம். அதற்கு வெளியேறும் தைரியம் தான் வேண்டும் என்கிறார்.
  3. கல்வியும் வயதும் : ஊர்சுற்றுதல் என்பது ஒரு மரியாதைக்குரிய பதவியாகும். அதை அடைய சில வழிமுறைகள் தேவைப்படுகின்றன. உலகத்திடமிருந்து பெறுவதைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகமாக உலகிற்குத் தருபவனே ஒரு முதல்தர ஊர்சுற்றியாக ஆக முடியும் என்கிறார் இராகுல்ஜி. தனது ஒன்பதாவது வயதிலேயே தன் சித்தப்பாவின் கைப்பிடித்து காசியில் கங்கை நதிக்குச் சென்றதை அவமானமாகக் கருதி, இரண்டு நாட்கள் கழித்து காசியின் தெருக்களைத் தனியாகச் சுற்றித் திரிந்தது அவருள் உறங்கிக் கிடந்த ஊர்சுற்றும் எண்ணமே என்கிறார். பதினாலாவது வயதில் தனது முதலாவது நீண்ட பயணத்தைத் தொடங்கியதாகவும், பதினாறு வயதில் தான் தனது முறையான ஊர்சுற்றும் விரதத்தைத் தொடங்கியதாகவும் கூறுகிறார். மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் ரக ஊர் சுற்றியாக முன் தயாரிப்பின்றி எப்போது வேண்டுமானாலும் வீட்டை விட்டு வெளியேறிவிடலாம். ஆனால் முதல், இரண்டாம் தர ஊர்சுற்றியாக வேண்டுமெனில் முழுத் தயாரிப்புடன் மட்டுமே ஊர்சுற்றப் புறப்பட வேண்டும். வீட்டை விட்டு வெளியேறக் குறைந்த வயது 16 -18 வருடங்கள்; அதிகபட்சம் 23 - 24 வருடங்கள். குறைந்தபட்ச கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு மற்றும் இலக்கியம், பூகோளம், வரலாறு, கணிதம் ஆகியவற்றில் சாதாரண அறிவாவது இருக்கவேண்டும் என்று கூறுகிறார் இராகுல்ஜி. அத்தோடு தற்கால இந்தியப் பயணிகளின் பயண வரலாறுகளைப் படித்திருக்க வேண்டும். பின்னர் அயல்நாட்டுப் பயணிகளின் பயண வரலாறுகளை கற்க வேண்டும். சில வேற்று மொழிகளைக் கற்றிருப்பது கூடுதல் சிறப்பு. அத்தோடு உடலை உறுதியாக வைத்திருக்க வேண்டும். ஆரோக்கியமான உடலினால் உடலுழைப்பைப் பழகிக் கொள்வது ஊர்சுற்றிக்கு மிகவும் பயனளிப்பதாகும்.
  4. தன்னிறைவு : ஊர் சுற்றும் எண்ணம் ஒரு நாட்டிற்கோ, இனத்திற்கோ, வர்க்கத்திற்கோ சொந்த மானதல்ல. ஊர் சுற்றும் அறம் எந்த விதமான ஜாதி, மத, நிற வேற்றுமைகளையும் பாராட்டாது. உலகத்தில் எவரையுமே, தன்னைவிட உயர்ந்தவர்களாகவும் தாழ்ந்தவர்களாகவும் எண்ணாத மனோநிலையை ஊர்சுற்றி பெற்றிருக்க வேண்டும் என்கிறார் இராகுல்ஜி. கல்வியும், பண்பாடும், தன்மானமும் ஒரு ஊர்சுற்றிக்கு இருக்க வேண்டிய முக்கியமான குணங்களாகும். அத்தோடு இன்னும் சில சிறப்புத் தகுதிகள் (விவசாயம், இயந்திரம் சரிபார்த்தல், தச்சு வேலை, ஆடை வெளுத்தல், வடிவமைப்புக் கலைகள், புகைப்படக் கலை...) இருந்தால் ஊர்சுற்றி தன்னிறைவு அடைய மிகவும் உதவிகரமாக இருக்கும். முதலுதவி சிகிச்சைத் தெரிந்திருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஊர்சுற்றிக்கு நடனமும், சங்கீதமும், வாத்திய இசையும் தெரிந்திருப்பின் எந்த நாட்டினருடனும் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொள்ளமுடியும்.
  5. பழங்குடிகளிடையே... : உலகில் நாகரீகம் வளர்ச்சியடையாத இனமக்களைப் பார்ப்பது ஊர் சுற்றிக்கு மிகவும் பிடித்தமானது. அங்கு வறுமையில் வாழும் பின்தங்கிய மக்களின்பால் உலகத்தோர் கவனத்தை ஈர்க்கிறான். காடுவாழ் மக்களின் பழக்க வழக்கங்களை வெறுப்பில்லாமல் நாமும் பழகிக் கொள்வது அவர்களிடத்தில் மேலும் நெருக்கத்தை அதிகரிக்கும். அவர்களிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் அது உதவியாக இருக்கும். நம்மிடமிருக்கும் மருந்தோ, நாகரீகப் பொருட்களோ அவர்களுக்குத் தேவைப்படும். அவற்றை ஊர்சுற்றி வைத்துக் கொள்வது நலம் பயக்கும். பழங்குடியினருடன் சுற்றித் திரிவது ஒரு தனி இன்பம் பயக்கும் அனுபவ மாகும்.
  6. பெண் ஊர்சுற்றிகள் : பெண்களை அடிமை களாக நடத்தாத நாடுகளிலுள்ள பெண்கள் இன்றும் வீரதீரப் பயணங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அமெரிக்க, ஐரோப்பியப் பெண்கள் ஆண்களைப் போலவே சகஜமாக ஊர் சுற்றுகிறார்கள். பெண் சுதந்திரத்திற்கு அருகதையுடையவளல்ல என்று கூப்பாடு போடும் இந்து சாஸ்திரங்களால் இந்தியாவில் பெண் ஊர் சுற்றிகள் குறைவாகவே இருக்கின்றனர். தற்போது உலகம் பெரும் மாற்றமடைந்து வருகிறது. அதனால் யுவதிகளும் ஊர்சுற்றத் தயாராகி வருகின்றனர்.
  7. மரண தத்துவம் : ஊர்சுற்றியின் அகராதியில் ‘பயம்’ என்ற சொல்லுக்கே இடமில்லை என்கிறார் இராகுல்ஜி. ஓரங்குலம் வரை நீளமுடைய, எலும்பில்லா பிராணி “பிலனாரியன்” உணவு கிடைக்காத போது, தனது உடலையே உணவாக்கிக் கொண்டு, சிறியதாக மாறத்தொடங்கும். பல மாதங்கள் உணவில்லாமல் கிடந்த பிறகு, பிறக்கும் போது இருந்த அளவிற்குச் சிறியதாகி விடுமாம். அது சாவிடம் தோற்று விடுவ தில்லை. மீண்டும் குழந்தைப் பருவத்திற்கே திரும்பி விடும் அதிசயமும் நிகழ்கிறது. பத்தொன்பது தலைமுறை வரைகூட முதுமையிலிருந்தும், சாவிலிருந்தும் தப்பி வாழமுடியுமாம். மனிதன் அப்படி நீண்ட காலம் வாழமுடியாது. வீணாகவே சாவைப் பயங்கரமானதாக நினைக்கிறோம். வாழ்க்கையில் விரும்பத்தகாத விஷயம் இருக்கிறதென்றால் அது சாவல்ல; சாவு பற்றிய பமம் தான் அது. ஒரு உண்மையான ஊர்சுற்றிக்குச் சாவு பற்றிய பயம் ஒருபோதும் இருப்பதில்லை. புகழுடலை விரும்பாமல், வாழும் காலத்திலேயே உலகத்திற்குத் தன்னாலானதை அளித்துவிட்டு, சூனியத்தில் மறைந்து விடுவது கவர்ச்சியற்றதாகத் தோன்றலாம். தன்னலமற்ற, ஆத்மதிருப்தி அளிக்கும் இந்த வாழ்வு எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. உண்மையான ஊர்சுற்றியின் வாழ்வும் இவ்வகையானதே.
  8. எழுதுகோலும் தூரிகையும் : வெளியுலகத் தொடர்பு சற்றும் இல்லாவிட்டால், மனித உள்ளத்தில் கற்பனைகளோ, சிந்தனைகளோ எழமுடியாது. ரவீந்திர நாத்தின் எழுத்துகளுக்கு ஊர் சுற்றுதல் மெருகூட்டி யுள்ளது என்பதை உலகு தழுவிய நிறுவனமாக்க ஊர் சுற்றுதலே அவரைத் தூண்டியது. அழகான காவியங் களையும் மகா காவியங்களையும் எழுத ஊர்சுற்றுதலை மிக அதிகமாக ஊக்குவிக்கலாம். இளம் ஊர்சுற்றியும் தனது பயண அனுபவக் காட்சிகளால் தூண்டபெற்று அழகிய கவிதை மழை பொழிய முடியும். உயர்தர

ஊர் சுற்றி நல்ல எழுத்தாளனாகவுமிருப்பது அவசியம். பயண வர்ணனையும் ஒரு சிறந்த இலக்கியமாக இருக்க முடியுமென்பதைப் பல எழுத்தாளர்களின் பயண நூல்களிலிருந்து அறியலாம். ஊர்சுற்றி எழுதும்போது கட்டுப்பாட்டை மிகவும் கடைப்பிடிக்க வேண்டும். ஊர்சுற்றிகள் சூரியனைப் போல் உதித்து, அஞ்ஞான இருளை, மூடநம்பிக்கைகளை வளர்க்கும் கதைகளை சின்னாபின்னப்படுத்திவிட வேண்டும் என ஆவேசப் படுகிறார் இராகுல்ஜி. இமயமலையைச் சித்திரமாகத் தீட்டிய சோவியத் ஓவியர் நிக்கோலஸ் ரோய்ரிக்,  ஒரு நல்ல ஊர்சுற்றி தூரிகையாலும் சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு நல்ல உதாரணம்.

  1. பயன் கருதாப் பயணம் : குறிக்கோள் ஏதுமில்லாமல் வெறும் மனதிருப்திக்காக ஊர்சுற்றுவது கூடத் தவறில்லை என்கிறார் இராகுல்ஜி. பழங்காலத்திய ஊர்சுற்றிகளில் பலரும் ஒரு நூலோ, புத்தகமோ எழுதிப் போகவில்லை. எத்தனையோ பேரை இவ்வுலகம் அறியவுமில்லை. உலகமெல்லாம் சுற்றிக்கொண்டே ஊர் பேர் தெரியாமல் மறைந்துவிட்ட எத்தனையோ பேரின் மண்டை ஓடுகளைத் தான் பார்த்து வியந்ததாகக் கூறுகிறார் இராகுல்ஜி. எந்தக் குறிக்கோளுமில்லாமல் உலகைச் சுற்றி வருவதும் பயனற்ற செயலல்ல. இப்படிப் பட்ட ஊர்சுற்றிகள் இதற்கு முன்னும் இருந்தனர்; இன்றும் இருக்கின்றனர். 1932ல் லண்டனில் ஷெரீஃப் எனும் ஊர்சுற்றியைச் சந்தித்ததாகவும், முதலாம் உலகப் போர் நடக்கும் சமயத்தில் அவர் எப்படியோ லண்டனுக்குள் நுழைந்து விட்டதாகவும், பிச்சை எடுத்துக் கொண்டே வாழ்வை ஓட்டுவதாகவும், இரவு நேரங்களில் பொதுப் பூங்காக்களை மூடிவிடுவதால் பகலில் அங்கு தூங்கி விட்டு இரவு முழுவதும் விழித்திருந்து தெருக்களைச் சுற்றிவர பழகிவிட்டதாகவும் இராகுல்ஜி குறிப்பிடுகிறார்.

இதே போல் குறிக்கோளற்ற ஊர்சுற்றி ஒருவன் ஒரு கிராமத்திற்கு வரும்போது, கிராமத்தினர் எல்லோரும் அவனைப் பார்த்து ஏதோ கிசுகிசுக் கின்றனர். அவனை நன்கு வரவேற்று, சமைத்து

சாப்பிடும் போது ஊரே அவனைச் சுற்றிக் கொண்டு, பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் இளம் மனைவியைப் பிரிந்து சென்றவன் அவன் தான் என்று கருதி அவளுடன் சேர்த்து வைத்து விடுகிறார்கள். அவன் எவ்வளவோ மறுத்தும் அவர்கள் கேட்காததால் வேறு வழியில்லாமல் அவனும் வாழ்ந்து ஒரு குழந்தைக்கு தகப்பனும் ஆகிவிடுகிறான். அதன் பிறகு உண்மையான ஆசாமி வருகிறான். இப்போது ஊர்சுற்றியின் நிலைமை என்னாகும்? என்ற கேள்வியுடன் முடிக்கிறார் இராகுல்ஜி.

  1. நினைவுகள் : ஊர்சுற்றி பற்றற்றவனாக இருப்பான்; ஆனால் அதே சமயத்தில் அவன் உள்ளத்தில் மானிட சமுதாயத்தின்பால் அபாரமான அன்பு நிறைந் திருக்கும். அதுவே அவனுடைய உள்ளத்தில் கணக்கற்ற நினைவுகளைச் சேர்த்துவிடும். தற்காலிகமாக அமையும் ஒரு சில நட்புகள் ஊர்சுற்றியின் நினைவுகளில் நீங்கா இடத்தைப் பெற்றுவிடுகின்றனர். ஊர்சுற்றி எப்போதுமே வேதனை தரும் நினைவை உண்டாக்கிக் கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்துகிறார் இராகுல்ஜி. உதவி செய்தவர்களையும் மகிழ்ச்சியும் நிம்மதியும் அளித்தவர் களைத் தன் உள்ளத்தில் நினைவாகத் தேக்கி வைத்துக் கொள்கிறான் ஒரு நல்ல ஊர்சுற்றி. இந்நினைவுகளை யெல்லாம் நாட்குறிப்பில் எழுத்து வடிவமாக்கினால் நல்லது.

மனிதன் தோன்றிய புராதன காலத்திலிருந்தே ஊர் சுற்றுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிக அனுபவமும், திறமையும் உள்ள சிந்தனையாளர்கள்

ஊர் சுற்றுதலைப் பற்றி எழுதாமல் இருந்துவிடக் கூடா தென்பதற்காகவே இந்நூல் எழுதுவதற்கு முக்கியக் காரணம் என்கிறார் இராகுல்ஜி. இதுவரை மக்கள் ஊர்சுற்றுதலைச் சாதனமாகவும், கடவுளைத் தரிசிப் பதையும், மோட்சம் பெறுவதையும் லட்சியமாகவும் கொண்டிருந்தனர். ஆனால் ஊர்சுற்றுதல் வெறும் சாதனம் மட்டுமல்ல; இலட்சியமும் கூட! எழுத்தாள னுக்கும் கலைஞனுக்கும் ஊர்சுற்றுதல் ஒரு வெற்றிப் பயணமாகும். ஊர்சுற்றுதல் என்பது சாதாரண விஷயம் அல்ல. அது உண்மையைத் தேடுவதிலும், கலைகளைப் படைப்பதிலும், நட்புறவை வலுப்படுத்துவதிலும் மாபெரும் சாதனமாகும் என்கிறார் இராகுல்ஜி.

ஊர் சுற்றிப் புராணம்

ராகுல் சாங்கிருத்யாயன்

தமிழில் : ஏ.ஜி.எத்திராஜுலு

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்.,

அம்பத்தூர், சென்னை - 600 098

தொடர்புக்கு : 044 - 26251968

விலை: ` 130/-