சங்க இலக்கியங்களில் இசை பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன. அக்குறிப்புகளெல்லாம் சங்க காலத்தில் இசைக் கலை செழுப்புற்றிருந்த நிலையை வெளிப்படுத்துகின்றன. தோலிசைக் கருவிகளும் நரம்பிசைக் கருவிகளும் சங்க காலத்தில் இருந்தவை பற்றிய குறிப்புகள் பழந்தமிழ் நூல்களில் பரவலாகக் காணப்படுகின்றன. யாழ் போன்ற நரம்பிசைக் கருவிகள், குழல் போன்ற துளையிசைக் கருவிகள், முரசம், மத்தளம், மதங்கம், பறை போன்ற தோலிசைக் கருவிகள் எனப் பல இசைக் கருவிகள் புழக்கத்திலிருந்துள்ளன. சங்க காலத்தில் இந்த இசைக் கருவிகள் வாசிப்பவர் ‘இயவர்’ என்று அழைக்கப்பட்டுள்ளனர்.

‘இயம்’ என்ற சொல் ‘இசைக் கருவி’ என்னும் பொருளைத் தருகின்றது. அச்சொல் பல்லியம், வாச்சியம், வாத்தியம் எனும் சொற்களின் சுருக்கமாகச் சுட்டப்படுகின்றது.  (தமிழிசைப் பேரகராதி, ப. 68). இதனால்தான் சங்க காலத்தில் இயங்களை இசைப்பவர் ‘இயவர்’ என்று  சுட்டப்பட்டனர்.

குழல் ஊதும் ஒருவர் ‘இயவர்’ என்று சுட்டுகின்றது ஒரு நற்றிணைப்பாடல்.  மணம்புரிந்த சில நாட்களுக்குள் ஆடவன் மேற்கொண்ட பிரிவு தமது மனைவியின் உள்ளத்தில் பெரும் வருத்தத்தைத் தோற்றுவித்ததை உடனிருக்கும் பாகனிடம் அந்த ஆடவன் சொல்லுவதாக அமைந்த இளங்கீரனார் பாடலுள்ள

“உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின்

இம்மென் பெருங் களத்து இயவர் ஊதும்

ஆம்பல்அம் குழலின் ஏங்கி

கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே”

(நற். 113: 9-12).

எனும் பாடலடிகள் வருகின்றன.

உதியவன் சினந்து ஒலிக்கும் போர்க்களத்தில் இயவர் ஊதும் ஆம்பலங் குழலின் இசை போலத் தலைவி வாய்விட்டழுது துன்புற்றாள் (நாராயணசாமி ஐயர் உரை, ப. 194) என்பது அப்பாடலடியின் பொருளாகும்.

ஐங்குறுநூற்றுப் பாடலொன்றும் குழல் ஊதும் இயவர் பற்றிய குறிப்பைத் தருகின்றது. அப்பாடலடிகள்

“கட்டளை யன்ன மணிநிறத் தும்பி

இட்டிய குயின்ற துறைவயின் செலீஇயர்

தட்டைத் தண்ணுமைப் பின்னர் இயவர்

தீங்குழல் ஆம்பலின் இனிய இமிரும்”     (ஐங். 215: 1-4)

என்பதாகும். கட்டளைக் கல்போல கரிய நிறத்தைக் கொண்ட தும்பி தட்டை, தண்ணும்மைகளின் பின்னர் இயவரின் இனிய குழலினது ஆம்பல் பண்ணைப் போல  இமிரும் (ஒலிக்கும்) என்பது அதன் பொருளாகும்.

statue 600

தட்டை என்பது மூங்கிலைக் குறிக்கின்றது (தமிழ்ப் பேரகராதி, ப. 1723)  இதனால் ‘மூங்கிலைக் கணுக்கண் உள்ளாக நறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசை உண்டாக ஒன்றிலே தட்டுவதோர் கருவி’ என்கிறார் ஒளவை துரைசாமிப்பிள்ளை (ஐங்குறுநூறு, ப. 500). இப்பாடலில் சுட்டப்படும் ‘தட்டை என்பது’ மூங்கிலால் செய்யப்படும் ஒரு இசைக் கருவி என்பது அவரின் கருத்தாகும். தட்டை என்பதற்குக் ‘கரடிகைப் பறை’ என்றொரு பொருளும் உண்டு (மலைபடு.9). ஐங்குறுநூற்றுப் பாடலில் சுட்டப்படும் தட்டை என்பது ‘கரடிகைப் பறை’யே ஆகும். இங்கு துரைசாமிப்பிள்ளை சுட்டும் பொருள் பாடலடிக்குப் பொருத்தமாக அமையவில்லை. தட்டைக்கு அடுத்து ‘தண்ணுமை’ சுட்டப்படுவதும் கவனிக்கத்தக்கது. ‘தண்ணும்மை என்பது ‘இருமுகப் பறை’ என்பதாகும் (மம்மது, ப. 260).

‘கரடிகைப் பறை’, ‘இருமுகப் பறை’ என்னும் கருவிகளின் பின்னர் இயவர் குழல் ஊதினார் போல தும்பி ஒலித்தது’ என்ற பொருளமையவே இந்த ஐங்குறு நூற்றுப் பாடல் பாடப்பட்டுள்ளது. இங்கும் குழல் ஊதும் வாச்சியக்காரர் ‘இயவர்’ என்று சுட்டப்பட்டு ள்ளார்.

அரசவையில் அரசர் உடனிருந்து இசைக் கருவி வாசிக்கும் ஒருவரை ‘இயவர்’ என்று சுட்டுகிறது இன்னொரு ஐங்குறுநூற்றுப் பாடல்.

“புன்புறம் பேடை சேவல் இன்புற

மன்னர் இயவரின் இரங்கும் கானம்”      (ஐங். 425: 1-2)

இதன் பொருள் ‘பொலிவில்லாத புறச்சிறகினைக் கொண்ட பேடை, தன் அன்பிற்குரிய சேவல் மகிழுமாறு மன்னர்களின் வாச்சியக்காரர் எழுப்பும் இசையலிபோல இன்னொலி யெழுப்பும் காடு’ (ஐங்குறுநூறு, ப. 924)  என்பதாகும்.

அரசர் அருகிலிருக்கும் இசைக் கலைஞர்கள் யாழ், குழல் முதலிய இசைக் கருவிகளை வாசித்து மன்னரை மகிழ்வித்துள்ளனர். அந்த இசைக் கலைஞர் ‘மன்னர் இயவர்’ எனப்பட்டுள்ளனர்.

மதுரைக்காஞ்சியில் பாலை நில இயல்பு குறித்து கூறும் ஓரிடத்தில் இயவர் பற்றிய குறிப்பொன்று வருகின்றது. அப்பாடலடிகள்

“அருங்கடி மாமலை தழீஇ ஒருசார்

இருவெதிர்ப் பைந்தூறு கூரெரி நைப்ப

நிழத்த யானை மேய்புலம் படரக்

கலித்த இயவர் இயந்தொட் டன்ன

கண்விடு புடையூஉத் தட்டை கவினழிந்து

அருவி யான்ற அணியில் மாமலை”

(மதுரை. 301 - 306)

என்பதாகும் ‘மலைப்பக்கத்திலிருந்த மூங்கிற் புதர் தீப்பற்றி எரிந்தன. அப்பொழுது மகிழ்ச்சியால் இயவர் (வாச்சியக்காரர்) தம் வாச்சியத்தை வாசிப்பதுபோல மூங்கிலின் கணுக்கள் திறந்து உடைந்து அழகு கெடும்’ (உ.வே.சா. ப. 370) என்பது அதன் பொருளாகும்.

பதிற்றுப்பத்து மூன்று பாடல்களில் இயவர் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. பகை மன்னன் ஒருவனை வென்று, அந்த வெற்றியின் நினைவாகப் பகை மன்னனின் காவல் மரத்தை வெட்டியெடுத்து வந்து அதில் வெற்றி முரசு செய்துகொள்கிறான் இமய

வரம்பன் நெடுஞ்சேரலாதன். அந்த முரசத்திற்கு, வீரவளை அணிந்த போர்வீரர்கள் வெற்றிக் கூத்தினை ஆடியவாறே பலிக்குரிய பொருட்களைத் தூவி வணங்கிய பின்னர்க் குறுந்தொடி கொண்டு அந்த முரசினை அடித்து ஆடியுள்ளனர் (பதிற்றுப்பத்து, ப.31). இங்கு  வெற்றியின் நினைவாக முரசத்தைக் கொட்டி ஆடும் வீரர் ‘வயவர்’ என்று சுட்டப்பட்டுள்ளனர். இதை,

“கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன்பனை

ஆடுநர் பெயர்ந்து வந்து அரும்பலி தூஉய்

கடிப்புக் கண் உறூஉம் தொடித்தோள் இயவர்”

(பதி. 17: 6-7)

எனவரும் பதிற்றுப்பத்துப் பாடலடிகள் காட்டுகின்றன. போர் வீரருக்குள்ளும் வயவர் (இசைக் கலைஞர்) ஒருவர் இருந்துள்ளார். இக்காலத்திலும் காவல், இராணுவப் பிரிவுகளில் இசைக் குழுவொன்று இருப்பது இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

பகை நாட்டுப் போருக்குப் படையெடுத்துச் செல்லும்முன், நீராட்டப்பெற்ற முரசினைச் செந்தினைக் குருதியோடு கலந்து தூவி வழிபட்டு, பின்னர் குறுந்தடி கொண்டு ‘இயவர்’ கையால் முழக்குவர் என்கிறது இன்னொரு பதிற்றுப்பத்துப் பாடல் (மேலது, ப. 39).  அப்பாடலடிகள்

“உருவச் செந்தினை குருதியோடு தூஉய்

மண்ணுறு முரசம் கண்பெயர்த்து இயவர்

கடிப்புடை வலத்தர் தொடித்தோள் ஓச்ச” (பதி. 19: 6-8)

என வருகின்றன. இங்கும் முரசினை முழக்கும் வீரர் வயவர் எனப்பட்டுள்ளார். பகை மன்னனின் நாடு பல்யானைச் செல்கெழு குட்டுவன் படையெடுத்துச் செல்வதற்கு முன்னர் வளம்பெற்று இருந்தது, பின்னர் அவனின் படையெடுப்பால் எப்படி அந்நாட்டின்

வளம் அழிவுற்றது என்று கூறும் பதிற்றுப்பத்துப் பாடலொன்றில் கள்ளுண்ணும் வழக்கம் கொண்ட ‘வயவர்’ பற்றிய குறிப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சுருண்ட மயிரையுடைய தலையினையும், பூவாற் செய்த கண்ணியையும், கள்ளாகிய உணவை உண்பவரும் சுருதியோடு இனிது கூடுகின்ற வாச்சியங்களையுடைய இயவர் தங்கும் நீர்த்துறைக்குப் பக்கத்தில் மருதமரத்தில் உள்ள பறவைகளை ஓட்டும் பொருட்டு மகளிர் செய்யும் ஓசையைக் கேட்டு வயல்களின் அருகில் உள்ள மயில்கள் பாட்டென மருண்டு ஆடும் (பதிற்றுப்பத்து, ப. 79). இப்படியான வளம்நிறைந்த பகை மன்னரின் நாடு நீ சினந்து நோக்கினால் சிதைந்துவிடும் என்பதாகச் சேரமன்னனின் சிறப்பைக் கூறும் வகையில் அப்பாடல் நீண்டு செல்லும்.    

“சுரியல்அம் சென்னிப் பூஞ்செய் கண்ணி

அரியல் ஆர்கையர் இனிதுகூடு இயவர்

துறைநணி மருதம் ஏறி தெறுமார்

எல்வளை மகளிர் தெள்விளி இசைப்பின்

பழனக் காவில் மசு மயில் ஆலும்” (பதி. 27: 4-8)

இந்தப் பாடல்வழி, வயவர்களின் தோற்ற அமைப்பு, வயவர் கள்ளுண்ணும் வழக்கம் குறித்த செய்திகள் அறியவருகின்றன. வாச்சியக்காரராகிய கூத்தர், பாணர்களே இயவர் என்று அழைக்கப் பட்டுள்ளனர் (ஆலிஸ், ப. 79).

தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை எனும் சேரமன்னனின் பகை நாட்டு படை வீரர்களின் இயல்பு குறித்துக் கூறும் பதிற்றுப்பத்து பாடலொன்றில்(78) படைக் குழுவினர்க்குள் ‘வயவர்’ குழுவொன்று இருந்தது பற்றிய குறிப்பு வருகின்றது. வீரர்களுள் வாத்தியங்களை யுடைய வயவர்கள் இருந்துள்ளனர் என்பதை அப்பாடல்வழி அறியவருகின்றது.

‘இயம்’ எனும் சொல் இசைக் கருவியைக் குறிக்கின்றது. இதனால், சங்க காலத்தில் இசைக் கருவி வாசிப்பவர் ‘இயவர்’ எனப்பட்டனர். சங்க காலத்தில் குழல் வாசிப்பவரும், போர்ப் பறை முழக்கும் வீரரும்  ‘இயவர்’ என்றே அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைக்குக் காவல் துறை, இராணுவப் படைப் பிரிவுகளில் உள்ள இசைக் கலைஞர் குழுவினரைப் போன்று சங்க காலப் படைப் பிரிவினருக்குள்ளும் ஒரு இசைக் குழுவினர் இருந்துள்ளனர். அந்தக் குழுவில் உள்ள இசைக் கலைஞரும் ‘இயவர்’ என்றே அழைக்கப்பட்டுள்ளனர்.

மன்னரை மகிழ்விக்கும் பொருட்டு அவருக்கு அருகிலிருந்து இசை மீட்டும் இசைக் குழுவினர் சங்க காலத்தில் இருந்துள்ளனர். இவர்கள் ‘மன்னர் இயவர்’ என்று அழைக்கப்பட்டுள்ளனர்.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியில் ‘இயவன்’ என்னும் சொல்லிற்குத் ‘தோற்கருவியாளன்’ என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு மதுரைக்காஞ்சியில் வரும் ‘கலித்த வியவ ரியந்தொட் டன்ன (304) எனும் பாடலடி சான்று காட்டப்பட்டுள்ளது. இந்தப் பாடலடிக்குப் பழந்தமிழ் உரையாசிரியரான நச்சினார்க்கினியர் ‘மகிழ்ந்த வாச்சியக்காரர் தம் வாச்சியத்தை வாசித்தாலொத்த’ என்றுதான் உரைப் பொருள் தருகிறார் (பத்துப்பாட்டு, ப. 370). இயவர் என்பதற்குத் ‘தோற்கருவியாளர்’ என்ற ஒற்றைப் பொருள் அமைய அவர் உரைப் பொருள் சுட்டவில்லை. தமிழ்ப் பேரகராதி ஒற்றைப் பொருளமைய ‘தோற்கருவி யாளன்’ என்று சுட்டுகிறது; இது முற்றிலும் பொருந்தாத ஒரு பொருளாகும்.

இயவன் என்பதற்கு இன்னொரு பொருள் ‘கீழ்மகன்’ என்று அகராதியில் காட்டப்பட்டுள்ளது

(ப. 302). தோற்கருவி வாசிப்பவர் எல்லாம் ‘கீழ்மகன்’ என்னும் பொருளைத் தரும் நோக்கத்திலேயே இந்த அகராதிப் பொருள் அமைக்கப்பட்டுள்ளமை கவனிக்கத் தக்கது. சங்க காலத்தில் இசைக் கருவிகள் வாசிப்பவர் அனைவரும் வேறுபாடுகளின்றி ‘இயவர்’ என்றே அழைக்கப்பட்டுள்ளனர் என்பது வரலாற்றுத் தரவுகள்வழி அறியவரும் செய்தியாகும்.

துணைநின்ற நூல்கள்

1. பரிமணம், அ.மா., பாலசுப்பிரமணியன், கு.வெ. (ப.ஆ.); தட்சிணாமூர்த்தி, அ. (உ.ஆ.). 2007 (3ஆம் அச்சு). ஐங்குறுநூறு மூலமும் உரையும், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.

2. பதிப்பாசியர் குழு. 1982 (மறுஅச்சு). Tamil Lexicon, சென்னை: சென்னைப் பல்கலைக்கழகம்.

3. துரைசாமிப் பிள்ளை, ஒளவை சு. (பதிப்பும் உரையும்). 1978 (2ஆம் பதிப்பு). ஐங்குறுநூறு மூலமும் விளக்கவுரையும், அண்ணாமலை நகர்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

4. நாராயணசாமி ஐயர், அ. (பதிப்பும் உரையும்). 1915. எட்டுத்தொகையு ளன்றாகிய நற்றிணை, சென்னபட்டணம்: சைவவித்தியானுபாலனயந்திர சாலை.

5.சாமிநாதையர், உ.வே. (ப.ஆ.). 1971 (7ஆம் பதிப்பு). புறநானூறு மூலமும் பழைய உரையும், சென்னை: டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம்.

6.சாமிநாதையர், உ. வே. (ப.ஆ.) 1986 (நிழற்படப் பதிப்பு). பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம்.

7. மம்மது, நா. (தொ.ஆ.). 2010. தமிழிசைப் பேரகராதி (சொற்களஞ்சியம்), மதுரை: இன்னிசை அறக்கட்டளை.

8. பரிமணம், அ.மா., பாலசுப்பிரமணியன், கு.வெ. (ப.ஆ.); ஆலிஸ், அ. (உ.ஆ.). 2007 (3ஆம் அச்சு). பதிற்றுப்பத்து மூலமும் உரையும், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.

Pin It