Drcubaa 350“எபோலா நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஆப்பிரிக்க மக்களுக்கு உதவி செய்யும் ஒரு புரட்சி கர மருத்துவராக இங்கு என் கடமையை நிறை வேற்றிக் கொண்டிருக்கிறேன். நாங்கள் இங்கு நேற்று வந்து சேர்ந்தோம்.

மானுடகுலம் அனைத்தும் ஆப்பிரிக்காவிடம் பட்டிருக்கும் கடனைத் தீர்ப் பதற்காகக் களத்தின் முன்பகுதிக்குச் செல்வோம். இந்தக் கொள்ளைநோய் உலகெங்கும் பரவாமல் தடுப்பதற்கான ஒரே வழி, அதை இங்கேயே தடுத்து நிறுத்துவதுதான். இந்த மாபெரும் கண்டத்தில் எபோலாவால் இனியும் ஒரு சாவு ஏற்படக்கூடாது என்பதற்காக நாங்கள் உதவி செய்துகொண்டிருக்கிறோம்.” 

இவை, மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியா விலிருந்து கியூப மருத்துவர் ரொனால்ட் ஹெர்னாண் டேஸ் டோரெஸ் 2014 அக்டோபரில் தமது முக நூலில் எழுதிய வரிகள்.

உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள், எபோலா நோய் பரவும் அபாயத்தை நினைத்துத் தமது எல்லைகளில் பெரும் பாதுகாப்பு அரண்களை அமைத்தல், வெளிநாடுகளிலிருந்து - குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து - வருபவர்கள் மீதான கட்டுப்பாட்டையும் கண்காணிப்பையும் கடுமை யானவையாக்குதல் என்பன போன்ற நடவடிக்கை களை மேற்கொண்டிருக்க, சோசலிச கியூபாவோ இந்த நோயை எதிர்த்துப் போராடுவதற்கு 255 மருத்துவர்களையும் செவிலியர்களையும் மேற்கு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பியுள்ளது. அந்தப் புரட்சி கரத் தீவு செல்வவளம் மிக்கதல்ல; அறுபதாண்டு களுக்கு மேலாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ, புவி-சார் அரசியல் அச்சுறுத்தல்களுக்கும் பொருளாதார முற்றுகைக்கும் உட்பட்டுள்ள நாடு அது. அதனிடம் இருப்பதெல்லாம் தீரம், பண்பு, கல்வி, சர்வதேசிய உணர்வு ஆகியன மட்டுமே.

ஆப்பிரிக்க மக்களின் விடுதலைக்காக வேறு எந்த நாட்டைக் காட்டிலும் பெரும் தியாகங் களைச் செய்தது கியூபாதான். ‘செ’ நேரடியாகப் பங்கேற்ற காங்கோ புரட்சி தோல்வியடைந்தாலும் அங்கோலா, மொஸாம்பிக், கினியா, தென்னாப் பிரிக்கா ஆகியவற்றின் விடுதலைப் போராட்டங் களில் ஆயிரக்கணக்கான கியூபப் படைவீரர்கள் பங்கேற்றனர். இன ஒதுக்கல் கொள்கையைக் கடைப் பிடித்து வந்த ஆட்சியை ஒத்துக்கட்டிய தென்னாப் பிரிக்காவின் ‘ஆப்பிரிக்க தேசிய காங்கிரசி’ன் ஆயுதமேந்திய போராட்டம், நமீபியாவிலும் அங்கோலாவிலுமிருந்த கியூபப் படைவீரர்களின் துணையில்லாமல் வெற்றி பெற்றிருக்கவே முடியாது.

இப்போது எபோலாவை எதிர்த்துப் போராட ஆப்பிரிக்காவுக்குச் சென்றுள்ள கியூப மருத்துவர்களும் செவிலியர்களும்கூட படைவீரர்களுக்கு ஒப்பான போராளிகளே. 2014 அக்டோபர் மாதம் மூன்றாம் வாரத்தில் லைபீரியாவுக்கும் கினியாவுக்கும் அனுப்பப்பட்ட அவர்கள், அந்த நோய் கண்டவர் களுக்குச் சிகிச்சையளிக்கச் செல்லும் ஸ்பானிய, அமெரிக்க மருத்துவர்களும் பாதிரியார்களும் அனுபவிக்கும் சலுகைகள் எதனையும் பெறு வதில்லை என்று மனதார உறுதியளித்துவிட்டுத் தான் அங்கு சென்றிருக்கிறார்கள். ஸ்பானிய, அமெரிக்க மருத்துவர்களும் பாதிரியார்களும் நோய்வாய்ப்பட்டால், உடனடியாக அவர்கள் அங்கிருந்து அவரவர் நாட்டுக்குக் கொண்டு வரப் பட்டு, மிக நவீன மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவம் தரப்படுகின்றது.

ஆனால், கியூப மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் நோய் கண்டாலோ, அவர்கள் எந்த ஆப்பிரிக்க மருத்துவ முகாமில், மருத்துவமனையில் பணியாற்றுகின்றார்களோ, அங்குதான் அவர்கள் சிகிச்சை பெற வேண்டும். ஏற்கெனவே ஒரு கியூப மருத்துவர் - கினிய நாட்டுக்குச் சென்ற யுவான் குயெர் ராரோட்ரிகஸ் - மூளையைப் பாதிக்கும் மலேரியா நோய்க்கு இரையாகிவிட்டார்.

2010-இல் ஹெய்தி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத் தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தல் என்னும் பெயரால் அமெரிக்கா தனது படைவீரர் களை அனுப்பியது போல, இப்போதும் எபோலா நோயால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் படைவீரர்களை அனுப்பி வரும் வெட்கக்கேடான நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. இதற்கு மாறாக, ஹெய்தியில் - குறிப்பாக அதன் கிராமப் பகுதிகளில் - 1998-ஆம் ஆண்டு முதல் இன்றுவரை மிகப் பெருமளவுக்கு இலவச மாக மருத்துவ உதவி செய்துவரும் நாடு கியூபா மட்டுமே.

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டின் கீழுள்ள காஷ்மீர் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் நில நடுக்கம் ஏற்பட்டபோது, பாகிஸ்தானின் அமெரிக்க சார்பு நிலைப்பாட்டைப் பொருட்படுத்தாமல், மனித நேய அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி செய்ய கியூப மருத்துவர்கள் வந்தது நம்மில் பலருக்கு நினைவிருக்கலாம்.

உலக சுகாதார நிறுவனத்தின் ( World Health Organistation ) கணக்குப்படி, 2014 அக்டோபர் 31-ஆம் நாள்வரை எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 13567; இவர்களில் 4951 பேர் இறந்தனர். பல நாடுகளில் இந்த நோய் காணப் பட்டாலும், அது மிகவும் வறிய மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, சியெராலியோன், கினியா ஆகியவற்றில்தான் மிக வேகமாகப் பரவி வருகின்றது. இந்த நாடுகளைத் தொல்லைப்படுத்துவது எபோலா மட்டுமல்ல, டெங்கு, லஸ்ஸா ஆகிய நோய்களும் தான்.

ஆப்பிரிக்காவில் தோன்றிய டெங்கு நோயின் கொடூரம் பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியிலேயே தெரியவந்தது. அதற்கான தடுப்பு மருந்தைக் கண்டறிவதற்கான முதல் முயற்சிகள் 1920களிலேயே மேற்கொள்ளப்பட்டன. 1950களில் அந்த நோய் உலகளாவிய பிரச்சினையாக உருவாகியது.

கொசுக்களால் உண்டாக்கப்படுகின்ற டெங்கு வால் ஒவ்வோராண்டும் உலகம் முழுவதிலும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஐம்பது மில்லியனிலிருந்து நூறு மில்லியன் வரை உள்ளது என்றும், இவர்களில் 25000 பேர் இறக்கின்றனர் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால், இன்று வரை இந்த நோயை அழிப்பதற் கான ஒருங்கிணைந்த முயற்சிகள் ஏதும் உலகில் மேற்கொள்ளப்படவில்லை.

இதுவரை கண்டு பிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து, மனித உடல்களில் நன்கு செயல்படுமா என்று பரிசோதனைக்கூடத்தில் சோதித்துப் பார்க்கப்படும் நிலையிலேயே உள்ளது. நற்பேறாக,. தமிழகத்தில் சித்த மருத்துவம் நில வேம்பு என்னும் அற்புதமான மூலிகையைப் பயன் படுத்தி டெங்குவிலிருந்து நூற்றுக்கணக்கானோரைக் காப்பாற்றியுள்ளது. லஸ்ஸா நோய் எலிகளிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்றுகிறது. மேற்கு ஆப்பிரிக்காவில் இந்த நோய் இருப்பது 1969-இல் கண்டுபிடிக்கப் பட்டது. இந்தப் பகுதியில்தான் அது பரவலாகக் காணப்படுகின்றது. இப்படிப்பட்ட நோய் இருப்பது தெரியவந்து நாற்பதாண்டுகளுக்கு மேலாகியும், அதற்கு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து பரிசோதனைக் கூடங்களில் எலிகளுக்குப் பயன்படுத்திப் பார்க்கும் கட்டத்திலேயே இருக்கின்றது.

அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப் பட்டதால் விடுதலையான முன்னாள் அடிமைகள் வாழ்வதற்காக அமெரிக்க அமைப்பொன்றால் ((American Colonisation Society) 1822-இல் செயற்கை யாக உருவாக்கப்பட்ட நாடுதான் லைபீரியா. 1846-இல் பெயரளவுக்கு சுதந்திரம் அடைந்த அந்த நாடு இன்றுவரை அமெரிக்க மூலதனத்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருக்கிறது. விடுதலை செய்யப்பட்ட அடிமைகளுக்காக, பத்தொன் பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் உருவாக்கிய காலனி நாடு ஸியெர்ரா லியோன். 1960 வரை அது பிரிட்டனின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில் பிரெஞ்சுக் காலனியாக உருவாக்கப்பட்ட கினியா, 1958 வரை பிரான்ஸின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தது.

cuba doctors 600

லைபீரிய மக்களில் ஐந்து விழுக்காட்டி னருக்கு மட்டுமே மேம்பட்ட சுகாதார வசதிகள் உள்ளன. ஸியெர்ராலியோன் மக்களில் ஏறத்தாழ இருபத்தி ஆறு விழுக்காட்டினருக்கு மட்டுமே தண்ணீர் வசதி கிடைக்கிறது. லைபீரியத் தலை நகரான மொன்ரோவியாவிலுள்ள வெஸ்ட்பாயின்ட் என்னும் குடிசைப் பகுதியைப்போல, அத்தனை விகாரமான, அசுத்தமான குடிசைப் பகுதி உலகில் வேறு எங்கும் இல்லை. அட்லாண்டிக் கடற்கரை யோரமும் அங்குள்ள முக்கிய ஆற்றங்கரையும் தான் அந்தக் குடிசைப் பகுதி மக்களுக்கான கழிப்பறைகள்.

ஆக, எல்லாக் கொள்ளை நோய்களுக்கும் - அவற்றின் உயிரியல் பரிமாணங்கள் ஒருபுறமிருக்க - சமூக, அரசியல் மூல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுக்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப் படாமல் இருப்பதற்கான காரணத்தை 2014 அக்டோபரில் ஆற்றிய உரையொன்றில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் மருத்துவர் மார்கரெட் சான் கூறியுள்ளார்: “எபோலா நோய் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது.

தடுப்பு மருந்தும் நோயைக் குணப் படுத்தும் முறையும் இல்லாமல் மருத்துவப் பணிகளில் உள்ளவர்கள் வெறுங்கையோடு இருப்பது ஏன்? வரலாற்று ரீதியாகவும் பூகோள ரீதியாகவும் இந்த நோய் வறிய ஆப்பிரிக்க நாடுகளுக்குள் மட்டுமே இருந்ததுதான் காரணம். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான (Research & Development)  ஊக்குவிப்பு முற்றிலுமாக இல்லை. இலாபத்தைக் குறிக்கோளாகக் கொண்ட தொழில், விலை கொடுத்து வாங்க முடியாத சந்தைகளுக் கான பொருள்களில் முதலீடு செய்வதில்லை.”

அதனால்தான் ஆயிரக்கணக்கான மருத்துவர் களும் மருத்துவப் பணியாளர்களும் தேவைப்படும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில், ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படைவீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவினதும் பிற ஏகாதிபத்திய நாடு களினதும் அக்கறை மேற்கு ஆப்பிரிக்க மக்கள் மீதல்ல; மாறாக லைபீரியாவிலுள்ள லேடெக்ஸ், சியெர்ராலியோனிலுள்ள வைரங்கள், இரத்தினக் கற்கள், கினியாவிலுள்ள பாக்ஸைட் ஆகியவை தாம்.

காலனிய, நவகாலனியச் சுரண்டல், அந்த நாடு களை வறுமைக்குள்ளாக்கி அங்குள்ள மருத்துவக் கட்டுமானம் அனைத்தையும் அழித்தொழித்தது தான் எபோலா போன்ற கொள்ளை நோய்கள் அந்த நாட்டு மக்களை வாட்டுவதற்குக் காரணம். “அழிவு என்பது அடிப்படையில் மனிதன் தொடர் பான விசயம். நிலநடுக்கத்தின் மூலம் நகரங்களை அழிப்பவன் மனிதன்தான்” என்று கூறினார் ழான் பவுல் சார்த்தர்.

இந்தப் பூவுலகில் மனிதர்கள் இல்லாவிட்டால், நிலநடுக்கங்கள் பௌதீக இயற் கையின் அர்த்தமற்ற இயக்கங்களிலொன்றாகவே இருக்கும். ஆனால் நகரங்களைக் கட்டும் மனிதனின் திட்டத்திற்கு அவை ஊறு விளைவிக்கையில்தான் அந்த நிலநடுக்கங்கள் பேரழிவாக அமைகின்றன என்பதுதான் சார்த்தரின் கருத்து, ‘மனிதன்’ என்னும் சொல்லால் அவர் இங்குக் குறிப்பிடுவது முதலாளிய அமைப்பையே.

ஏகாதிபத்திய நாடுகளுக்கு மாறாக, கியூபாவோ செ குவேரா வகுத்த சர்வதேசியப் புரட்சிகர நெறியைக் கடைப்பிடிக்கின்றது. “உலகின் எந்தப் பகுதியில் அநீதி காணப்பட்டாலும் அதைப் பற்றிய ஆழமான உணர்வைக் கொண்டிருப்ப வராகப் புரட்சியாளர்கள் இருக்க வேண்டும்” என்று செ, தமது குழந்தைகளுக்கு எழுதிய கடிதமொன்றில் கூறினார்.

‘புரட்சிகர மருத்துவம்’ என்னும் தலைப்பில் அவர் ஆற்றிய உரையில், “ஒன்றை மிகச் சிறப்பாகச் சொல்வது என்பது அதைச் செய்வதுதான்” என்றும், மருத்துவர்களை, அவர்கள் ஒருமைப்பாட்டையும் சமத்துவத்தையும் நடைமுறைப்படுத்துகிறார்களா என்பதைக் கொண்டே மதிப்பிட முடியும் என்றும் கூறினார். மருத்துவ சேவை பற்றிய ஆய்வுகளைச் செய்து வந்த ராபர்ட் உபெல் (Robert Ubell) என்னும் அமெரிக்க அறிஞர், ‘நியூ இங்கிலாந்து ஜேர்னல் ஆஃப் மெடிஸின்’ என்னும் ஆய்வேட்டில் 1983-இல் எழுதிய கட்டுரையொன்றில், கியூபாவில் சிறப்பு மருத்துவ சேவைகள், மருத்துவ ஆராய்ச்சித் திறமைகள், நோய்கள் வராமல் தடுப்பதற்கான ஏற்பாடுகள் ஆகியன மிகத் துரிதமாக வளர்ச்சி யடைந்து கொண்டிருந்ததைக் குறிப்பிட்டு, வளரும் நாடுகளுக்குப் பொறாமை ஏற்படுத்துவது பாஸ்டன், மாஸாசூஸெட்ஸ் போன்ற அமெரிக்க நகரங்களல்ல, ஹவானாதான் என்றும், அதுதான் மருத்துவ உலகின் மையமாகிவிட்டது என்றும் குறிப்பிட்டார்.

அண்மைக்காலமாக கியூபாவும் வெனிசூலாவும் இணைந்து இலவச மருத்துவ சேவைகளை வழங்கு வதற்கும், மக்களுக்கு சேவை செய்யும் மருத்துவர் களை உருவாக்குவதற்குமான பணிகளில் ஈடுபட்டு உள்ளன. இரு நாடுகளின் மொத்த மக்கள்தொகை 39 மில்லியன். அந்த இரு நாடுகளும் சேர்ந்து 73,000 மருத்துவ மாணவர்களுக்கு இலவச மருத்துவக் கல்வி வழங்குகின்றன. அமெரிக்காவின் மக்கள் தொகை 307 மில்லியன். அது உருவாக்கும் எதிர் கால மருத்துவர்களின் எண்ணிக்கை எழுபதாயிரம் தான்.

2004-ஆம் ஆண்டிலிருந்து கியூபா, 15000 மருத்துவர்களை வெனிசூலாவில் வைத்திருக் கின்றது. அவர்கள், ஆயிரக்கணக்கான இளைஞர் களை மருத்துவர்களாக மாற்றிக்கொண்டிருக் கிறார்கள். அதுமட்டுமல்ல, இரண்டு நாடுகளுமே, தொழிலாளிவர்க்க இளைஞர்களுக்கு மருத்துவப் பயிற்சி கொடுத்து, நகர்ப்புறத்தின் வறிய பகுதி களிலும் கிராமப்புறங்களிலும் மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கச் செய்கின்றனர். பொலிவியா அரசாங்கமும் இதற்கு ஒத்துழைப்புத் தருவதுடன், கியூபா-வெனிசூலா கூட்டு மருத்துவ முயற்சியின் பலன்களையும் அனுபவிக்கின்றது.

இலத்தின் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் நாட்டு மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை செய் வதற்கு கியூபாவின் மருத்துவர்களும் மருத்துவத் துறையினரும் உதவி வருவது, ‘செ’ தொடங்கி வைத்த மகத்தான மருத்துவப் புரட்சிதான்.

தரவுகள்

1. Chris Elbert, The Light Brigade : Cuban Doctors fight Ebola, MRZine, 28.10.14


2. W.T.Whitney Jr, Cuba and Venezuela shape new generation of “Revolutionary Doctors”, People’s World, July 28, 2011, http;//peoplesworld.org/cuba andvenezuelashape- new-generation-ofrevolutionary-doctors/ (accessed on 17.11.2014)


3. Niles Williamson, Capitalism and the Ebola Crisis, WSWS, 1 November 2014

Pin It