1948இல் வெளியான ‘குத்தூசித் தொகுப்பி’ற்கு பெரியார் அளித்த முன்னுரையில் கூறுகிறார். “விடுதலை தினசரிப் பத்திரிகையில் பல நாட்களாக ‘குத்தூசி’ என்ற புனை பெயரில் தினம் சுமார் 11/2 கலத்துக்குக் குறையாமல் பல விஷயங்களைப் பற்றி நகைச்சுவை தோன்றப் பிரசுரிக்கப்பட்டு வருவதைத் திராவிட மக்கள் படித்து மகிழ்ந்து வருவதோடல்லாமல், பல துறைகளில் உணர்ச்சி பெற்று, திடுக்கிடும் படியான, ஆத்திரப்படும்படியான பல அதிசயக் கருத்துக்களை மனத்தில் தானாகவே பதிந்து விடும்படியான கருத்துக்களைப் புதிதாகக் கொண்டும் தெளிவு பெற்று வருவதை நான் மனதார உணர்ந்திருக்கிறேன்.

நானே பல சந்தர்ப்பங்களில் எவ்வளவு பலமான கருத்துகளில், ஊறிப்போன பழக்க வழக்கங்களில், பிடிவாதமாக புனிதமானது என்று ஏற்பட்ட தீர்மானங்களில், வெகு சாதாரணமாகத் தன்மையில் வெறுப்பும், பரிகாசமும், “இவை மகாக்கொடுமை, முட்டாள் தனம், இழிவு” என்று கருதும்படியான உணர்ச்சி ஏற்படும்படியாக ‘குத்தூசி’ வாசகங்கள் காணப்படுகின்றன என்று ஆச்சரியப்பட்டதுண்டு; குலுங்கக் குலுங்கச் சிரித்துப் பாராட்டியதுண்டு என்று சொல்லுகிறேன் என்றால், அவை மற்ற சாதாரண மக்களுக்கு எவ்வளவு உணர்ச்சியை ஊட்டி இருக்கக்கூடும் என்பதைப் பற்றி அதிகம் எழுத வேண்டியதில்லை.
நான் வெளியில் சுற்றுப் பிரயாணம் செல்லும்போது பல இடங்களில் பலப்பல பேர்கள் நான்தான் ‘குத்தூசி’ என்கிற புனை பெயர் கொண்டவன் என்று கருதி என்னைப் பாராட்டிப் புகழ்ந்ததைக் கண்டும், கேட்டும் நான் உண்மையில் வெட்கமும், பொறாமையுங் கொண்ட சந்தர்ப்பங்கள் உண்டு.

‘குத்தூசி’ காணப்படாத ‘விடுதலை’யைக் கண்டு மக்கள் ஏமாற்றமடைந்ததையும் பார்த்து வருகிறேன். ‘குத்தூசி’யைப் பற்றிய என் உண்மையான கருத்தைச் சொல்ல வேண்டுமானால் ஒரு வாக்கியத்தில் முடிக்க வேண்டுமானால், எந்தக் காரணங்கொண்டாவது ‘குத்தூசி’, ‘விடுதலை’யில் வெளிவருவது நின்று விடுமானால் ‘விடுதலை’ப் பத்திரிகையைப் படிக்கும் மக்களுக்கு ‘விடுதலை’ அலட்சியப்படுத்தப்பட்டுவிடுமே என்று பயப்படுகிறேன் என்பதைத் தெரிவிப்பதன் மூலமே அதன் பெருமையைப் பற்றிய என் கருத்தை உணர்ந்து கொள்ளலாம்.”

இவ்வாறு தந்தை பெரியாரால் பாராட்டப்பட்ட குத்தூசி குருசாமி நினைவு நாள் இந்த மாதம் அக்டோபர் 11ஆம் தேதி அவரது நினைவாக அவரைப் பற்றி குருவிக்கரம்பை வேலு எழுதிய ‘குத்தூசி குருசாமி’ நூலிருந்து சில பகுதிகள் இங்கு வெளியிடப்பட்டுள்ளது. ‘தி ஹிந்து’ பத்திரிகைக்கு மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு என்று பெயர் சூட்டியவர் குத்தூசி குருசாமி ஆவார். அவ்வாறு பெயர் சூட்டப்படும் போது எழுதப்பட்ட கட்டுரை.

மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு!

முன் காலத்தில் தேவர்கள் மகாவிஷ்ணுவை வேண்டுவார்கள். சில சமயம் நாரதரிடம் சொல்லிக்கூட சிபாரிசு செய்யச் சொல்லுவார்கள்! அவரும் அலுத்துக் கொள்ளாமல் உதவுவார்! மகாவிஷ்ணுவும் (இக்காலத்துப் பெரிய மனுஷாள் காருக்கு பெட்ரோல் ஆகிறதே என்று கவலைப்படுவது போலல்லாமல்) தனது கருட வாகனத்தில் ஏறிக்கொண்டு ஜாம், ஜாம் என்று வருவார்! கருடன் சக்கரத்துக்கு காற்றடிக்க வேண்டிய வேலையா, மெஷினுக்கு கிரீஸ்போட வேண்டிய தொல்லையோ இல்லை. ஏதோ பூச்சியோ, புழுவோ, நண்டோ, நத்தையோ பார்த்துக் கொள்வார் கருடாழ்வார்! வேலையை முடித்துவிட்டு மகாவிஷ்ணு திரும்பி வந்து கருடனை “ஸ்டார்ட்” பண்ணிப் புறப்படுவார்!

அந்தக் காலத்தில் தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் பெரும்பாலும் ஒரே குறைதான் இருக்கும். “அசுரர்கள் எங்கள் யாகங்களை அழிக்கிறார்கள்!” என்பார்கள். “பூ! இவ்வளவுதானா? அதற்காகவா இவ்வளவு தூரம் வர வேண்டும்? அரையணா கார்டு போட்டால் ஓடி வரமாட்டேனா? உங்களுக்கு வந்த தீங்கு எனக்கு வந்தது போல் அல்லவா?” என்பார் மகாவிஷ்ணு!
இது கலியுகமல்லவா? குறைகள் பல்வேறு வகையாயிருக்கின்றன. சைக்கிள் ட்யூப்பில் காற்றுப் போய் விட்டாலுஞ் சரி, சர்க்கார் உத்யோகத்தில் ‘பிரமோஷன்’ கிடைக்காவிட்டாலுஞ் சரி எதற்கும் மனிதன் கடவுளை அழைக்கின்றான்!

“அட கடவுளே” என்கிறான்.

“ஏனப்பா கூப்பிட்டாய்?” என்கிறார். உடனே விஷயத்தைச் சொல்லுகிறான்! இப்படி பக்தர்கள் அடிக்கடி தொல்லைப் படுத்துவதைச் சகிக்கமாட்டாமல் இன்றைக்குச் சரியாக 73 ஆண்டுகட்கு முன்னர் மகாவிஷ்ணு ஒரு முடிவு செய்தார். “அடிக்கடி நான் வைகுந்தத்திலிருந்து வருவதானால் என் கருடன் ஸ்ட்ரைக்” செய்கிறேன் என்கிறது! கம்யூனிஸ்டுகள் வைகுந்தத்திலும் வந்து கலகம் செய்கிறார்கள். ஆகையால் நான் சங்கு சக்கரத்துடன் மவுண்ட் ரோடில் ‘ஹிந்து’ பத்திரிகையாக அவதாரம் செய்துவிட்டேன். (சங்குச் சின்னம் இப்பத்திரிகைக்கு இருந்தது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்க) இனிமேல் என்னிடம் கூற வேண்டியவைகளை அங்கேயே கூறிவிட்டால் போதும்!” என்று கூறினார்.

அதன்படியே அன்றுமுதல் துஷ்டநிக்கிரஹ சிஷ்டபரிபாலன வேலைகள் முறையாக நடந்து கொண்டேயிருக்கின்றன!
இப்படியிருக்கையில் ஒருநாள் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலைப்பற்றி ஒரு பூதேவர் (அதாவது தர்ப்பைப் புலையர் தர்ப்பைப்புல் + ஐயர்).

“திருவிழா நடக்கிறது ஆனால் வேதபாராயணம் நிறுத்தப்பட்டிருக்கிறது. கோவில் நிர்வாகிகள் செயல் கண்டிக்கத்தக்கது” என்று, மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவுக்கு “ரிப்போர்ட்” செய்தார். மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவான ‘ஹிந்து’வுக்கு எவ்வளவு தொல்லை பாருங்கள்! ஹைகோர்ட் நீதிபதி நியமனம் முதல் வேதபாராயணம் வரையில் கவனிக்க வேண்டியுள்ளது. ஒருக்கால் கோட்சே சாதியார் வேத பாராயணம் செய்வதை வெறுக்கிறார்களோ என்று கருத வேண்டியிருக்கிறது.

“நம் இனத்தான் கொடுஞ் செயலுக்கு பிராயச்சித்தம். நாம் இனி பிராமணத் தன்மையை விட்டொழிக்க வேண்டியதுதான். அதன் ஆரம்பச் செயலாக இனி வேதபாராயணத்தை நிறுத்தி விடுவோம்,” என்று சில பிராமணோத்தமர்கள் முடிவு செய்திருக்கிறார்களோ என்னவோ? வைதீக பூதேவர்களின் இந்த முடிவைப் பாராட்டுகிறேன். நீங்களும் அவர்களைப் பாராட்டுங்கள். நாணயமான நல்ல தொழில்களைத் தேடி இவர்களுக்குக் கொடுங்கள்! எந்த வேலையையும் சுறுசுறுப்பாகச் செய்வார்கள்! நல்ல மனுசர்கள்!”.
(1948 குத்தூசி).

காந்தியின் அபின்பிரசாரம்

மக்களின் அறிவுப்பூர்வமான முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்களையோ, அவரது கருத்துக்களையோ, எடுத்துக்காட்டி கண்டிப்பதில், குருசாமிக்கு உரிய தனிப் பாணி ஒன்று உண்டு. குருசாமியின் அன்புக்கும், மரியாதைக்கும் உரியவர்களாய் இருந்தாலும், அன்பையும், மரியாதையையும் ஒதுக்கி வைத்து விட்டு, கொள்கைகளை விமர்சிப்பதில் இறங்கிவிடுவார். காந்தியாரின் மதப்பிரசாரத்தையும், மற்ற கொள்கைகளையும் அவருக்கே உரிய பாணியில் கேலியும், கிண்டலுமாகக் கண்டித்து எழுதுகிறார்.

“மதம் மக்களுக்கு அபின்” என்பது மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் சொன்னதல்ல; மனித உலகத்தில் வாழ்ந்து மனிதர்களுடைய கஷ்ட நஷ்டங்களை யுணர்ந்து மனிதர்களுடைய நலனை உத்தேசித்து, மனித அனுபவம் பெற்ற ஒரு மனிதனால் சொல்லப்பட்டதாகும். மனித சரித்திரத்தையறிந்து, மனிதனுடைய மனோபாவத்தை உணர்ந்து மனிதனுக்கு இதுவரையில் மதத்தினால் ஏற்பட்ட லாப, நஷ்டங்களைச் சீர்தூக்கிப் பார்த்து, பெரிய எண்ணிக்கையிலிருந்து சிறிய எண்ணிக்கையைக் கழித்து மிச்சமிருப்பது மனித சமூகத்தின் கஷ்டம் என்பதைக் கண்டுபிடித்துக் கணிக்கப்பட்ட கணக்குத்தான் இப்பழமொழியின் கருத்தாகும். “திரேதா யுகத்திலோ, துவாபார யுகத்திலோ” அல்லது ஏதாவது மனிதக் கணக்கிற்கு அகப்படாத யுகத்திலோ எழுதப்பட்டதல்ல. மனிதர்கள் நடமாடும் “யுகத்தில்” மனிதர் கண்ணுக்குத் தோன்றிய உண்மைகளையறிந்து சொல்லப்பட்டதாகும். ஆம், மார்க்ஸால் சொல்லப்பட்டது.

இந்த அபினைச் சாப்பிட்டு அதில் அளவு கடந்த ‘பக்தி’ செலுத்தி ஒருவன் கழுத்தை மற்றவன் வெட்டியும், ஒருவனை மற்றவன் தூக்கிலிட்டும், ஒருவன் இராஜ்யத்தை மற்றவன் அபகரித்தும் வந்த செய்கைகளெல்லாம் அய்ரோப்பா சரித்திரம் படித்த நமக்கும் நமது பெரியார் திரு காந்திக்கும் தெரிந்ததுதான். ‘மதஅபின்’ சாப்பிட்டவர்களால் கொல்லப்பட்ட பெண்டு பிள்ளைகள் எவ்வளவு! கொளுத்தப்பட்ட நாடு நகரங்கள் எவ்வளவு! கொலை செய்யப்பட்ட அறிவாளிகள் எத்தனை! “இரத்த வெறி கொண்ட மேரி” மகாராணியார் இங்கிலாந்தை அரசாண்ட காலத்திலும், “முரட்டு மதக்காரனான” ஒளரங்கசீப் இந்தியாவை அரசாண்ட காலத்திலும் இந்த “மத அபின்” செய்த அபாரமான செயல்களெல்லாவற்றையும் திரு.காந்தியார்கள் மறந்துவிட்டாலும், சரித்திரம் படிக்கும் பிள்ளைகளால் மறக்க முடியவில்லையே! “கத்தோலியர்களும்” “பிராட்டஸ் டண்டுகளுக்கும்” அய்ரோப்பாவில் நடந்த சண்டைகளுக்கும் அதன் பயனாய் இரு கட்சியிலும் கோடிக்கணக்கான மக்கள் மாண்டு மடிந்ததற்கும் எது காரணம்? இந்த “அபின்” அல்லவா காரணம்? இதுவும் திரு. காந்திக்குத் தெரியாததல்ல.

இப்போது உலகிலிருக்கும் மதங்களெல்லாம் மக்களின் நித்திய வாழ்விற்குப் பலனளிக்காவிட்டாலும், கெடுதியாவது செய்யாமலிருக்கின்றனவா வென்பதை யோசித்துப் பார்ப்பதற்கு திரு.காந்திக்கு நேரமில்லை, இஷ்டமில்லை, இஷ்டமிருந்தாலும் வெளியில் சொல்ல மனம் வரவில்லை. உலகிலுள்ள மதங்களெல்லாம் “கடவுள்” உணர்ச்சியை ஸ்தாபிக்கவும், “மோட்சம் என்று சொல்லப்படுவதை அடையவும்தான் பின்பற்றப்படுகின்றனவேயழிய, மனித சமூகத்திற்கு வேண்டிய நன்மையை இவ்வுலகிலேயே செய்து கொண்டு, இந்த உலகவாழ்க்கையில் சவுகரியமாகவும், சந்தோஷமாகவும் இருப்பதற்கு உபயோகப்படவில்லையென்பதும் திரு.காந்திக்குத் தெரியாததல்ல.

ஆனால் நாளுக்குநாள் திரு.காந்தியின் மதப்பிரசாரமும் கடவுள் பிரசாரமும் பெருகிக்கொண்டே வருகிறதேயழிய குறைந்தபாடில்லை. எதற்கெடுத்தாலும் ‘கடவுள் செயலாக’ என்றும், “கடவுள் காப்பாற்றுவார்” என்றும் சொல்ல வந்து விட்டார். பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுவதுபோல், ஒருபுறம் ‘ஹிந்து’, மதம் ‘இஸ்லாம்’ மதம் இவைகளைத் தூக்கிவிட்டுக்கொண்டு, மற்றொரு புறம் “இந்து முஸ்லீம், ஒற்றுமை” வேண்டுமென்கிறார். தாம் சர்க்காரோடு போடுகின்ற அரசியல் போருக்கு வரும் பாமர மக்களுக்கு “இம்மத அபினையும்’’, “கடவுள் அபினையும்’’ கொடுத்து மயக்குகிறார்.

செத்தவர் எலும்பைக் கங்கையில் போடச் செய்வதும், தினம் காலை 4 மணிக்கு “ரகுபதி ராகவ ராஜாராம்’’ என்ற பாட்டைப் பாடுவதும், குங்குமப் பொட்டு “ஆசீர்வாதம்’’ பெற்று உப்புக்காய்ச்சப் புறப்படுவதும், மனிதனுடைய உலக வாழ்க்கைக்கு ஒன்றும் பல தர முடியாதென்பதை, திரு.காந்தி உணர்ந்திருந்தாலும், அதை ‘அபினாகக் கொடுத்துப் பாமர மக்களை வசப்படுத்துகிறார். கடவுள் மத விடுதலைப்பெற்ற பிறகுதான் மக்கள் அரசியல் விடுதலைக்கு லாயக்குடையவர்களாவார்கள் என்பது திரு.காந்திக்கு உலக சரித்திரப் பூர்வமாகத் தெரிந்திருந்தும், தம்முடைய அரசியல் “ஆப்பரேஷனுக்கு” இவ்விரண்டையும், “க்ளோரோபாமாக” உபயோகப்படுத்துகிறார்.

மிகப்பெரிய ஆப்பரேஷன்களுக்குத்தான் இதை டாக்டர்கள் உபயோகப்படுத்துகிறார்கள். நமது நாடு அதிகநாள் “க்ளோரோபாரத்தால்” கஷ்டப்படுகிறது. மூச்சுமில்லை, பேச்சுமில்லை. இந்திய உடம்பு ‘ஜில்’லிட்டுப் போய்விட்டது. இரத்த ஓட்டம் நின்று விட்டது. இதர உலகங்களிலிருக்கும் டாக்டர்களெல்லாம் இந்திய உடம்பைப் பரிசோதித்து “நீண்டகால போதை அபாயகரமான நிலைமைதான். ஆனாலும் பயமில்லை சீக்கிரம் இந்த நிமிஷமே போதை நீங்க மருந்து கொடுக்க வேண்டும். இன்றேல், போனதுதான்” என்கிறார்கள். ஆனால் திரு.காந்தியோ, மேலும், மேலும் அபினை உள்ளுக்குச் செலுத்திக் கொண்டேயிருப்பதோடு, “க்ளோரோபாரத்தையும்” முகத்தில் வைத்துக் கட்டிக்கொண்டிருக்கிறார்!

நாம் விரும்புவதெல்லாம் ஒன்றுதான். அதாவது, திரு.காந்தியவர்கள் தமது அஹிம்ஸா தர்மத்தைக் கையிலெடுத்துக்கொண்டு தக்ளியாகிய செங்கோலுடன் தேவகோட்டைக்கு உடனே வர வேண்டுமென்பதே. அங்கு வந்த தமது சொந்தக் கண்களை உபயோகித்து (திரு.ராஜகோபாலாச்சாரி யென்னும் கண்ணாடி வழியாய் இல்லாமல்) கள்ளர்கள் கத்தியால் பறையர்கள் உடம்பில் பட்டிருக்கும் வெட்டுகளைப் பார்க்கட்டும். அங்கிருக்கின்ற ஆதி திராவிடப் பெண்கள் மேல் துணி (ரவிக்கை) அணியாமலிருக்கும் கொடுங்காட்சியையும் பார்க்கட்டும். பள்ளர், பறையர் வீடுகள் எரிக்கப்பட்டும், கொள்ளை அடிக்கப்பட்டும், அவர்கள் நிலங்களிலுள்ள பயிர்கள் அழிக்கப்பட்டும் கிடப்பதைப் பார்க்கட்டும். ஆண்களும், பெண்களும் மனித உரிமையைக் கேட்டதற்காகப் பட்ட அடியையும் அதன் வீக்கத்தையும், ராட்டினம் சுற்றும் மெல்லிய கைகளால் தொட்டுப் பார்க்கட்டும்.

கள்ளர்கள் செய்த கொடுமை தாங்காமல் ஆணும், பெண்ணும், குஞ்சும், குழந்தையும் விம்மி யழுவதை அவருடைய ஜீவகாருண்யக் கண்கள் காணட்டும். அவர்கள் கண்களிலிருந்து வழியும் தண்ணீரைப்பிடித்துக் கடல் தண்ணீருக்குப் பதிலாய் அடுப்பிலேற்றிக் காய்ச்சிப் பார்க்கட்டும், கடல் நீரைக் காய்ச்சின உப்பையெடுத்த கையானது தண்ணீரைக் காய்ச்சி உப்பெடுக்க முயலட்டும். இவர்கள் பொருட்டுச் சட்டசபையில் கேட்ட கேள்வியை அலட்சியம் செய்து, பாஷியம் அய்யங்கார் பட்ட இரண்டோர் அடிக்காகச் சட்டசபையை ஒத்திவைத்த மெம்பர்களின் திருமுகங்களை ஒரு முறை பார்த்துவிட்டுப் போகட்டும். சோற்றுக் கில்லாமல் வாடும் ஏழை மக்கள் பட்ட அடியும் வெட்டும் கண்ணில்படாமல், தின்று கொழுத்த பார்ப்பான்ட்ட இரண்டடிக்காக வாய்கிழியப் பேசிய சட்டசபை மெம்பர்களின் மூஞ்சியை ஒரு தடவையாவது பார்க்கட்டும்.

ஊரில் குடியிருக்க முடியாமல் ஆதிதிராவிட மக்கள் நெருப்பிலிட்ட புழுவாய்த் துடிப்பது தென்னாட்டுத் தேசீயப் பத்திரிகாசிரியர்கள் பேனா முனையில் படாமல் பாஷ்யமய்யங்கார் பட்ட அடிக்கு மாத்திரம் பக்கம் பக்கமாய் எழுதிய பாதகர்களை ஒருமுறை பார்த்துவிட்டுப் போகட்டும். இதையெல்லாம் எடுத்துச் சொல்லும் எங்களை “தேசத்துரோகி” என்று அவரது அத்யந்த சிஷ்யகூட்டங்களே திட்டிக் கொண்டிருப்பதையும் அவரது காதுகள் ஒருமுறை கேட்கட்டும். மார்பால் ஊர்ந்துபோக வேண்டுமென்று சொன்ன ‘டயருக்’காகக் கண்ணீர் விட்ட அக்கண்களிரண்டும், தேவகோட்டை “டயர்”களைப் பார்த்துவிட்டுப் போகட்டும். எந்த ‘டயர்’களை ஒழிப்பதற்காக நாங்கள் பாடுபடுகிறோம் என்பதையும் ஒருமுறை நேரில் கேட்டு விட்டுப் போகட்டும். ஆகவே, இதுதான் திரு.காந்தி செய்ய வேண்டுமென்று விரும்புகிறோம்.

இத்தனை நாள்தான் உப்புக்காய்ச்சும் வேலையாயிருந்தார். இனியாவது நம்மை, ஏழைமக்களை, தாழ்த்தப்பட்ட 6 கோடியை, அழுத்தப்பட்ட அடிமைகளைக் கண்விழித்துப்பார்ப்பாரா? பார்க்க நேரம் உண்டாகுமா? இஷ்டம் வருமா? திரு.காந்திக்கு இதெல்லாம் தெரியாததா? சுசீந்திரம், கன்னியாகுமரி முதலிய கோவில்களில் அவரையே உள்ளே விடவில்லையென்பதை மறந்திருக்க முடியாதே! ஆனால் நாம் என்ன செய்வது? தூங்குகிறவரை எழுப்பலாம். விழித்திருப்பவரை எழுப்பமுடியுமா?
(16&3&31 புதுவை முரசு).

சத்தியமூர்த்தி அய்யரின் நாடகம்

சுயமரியாதை இயக்கத்தை, தேசிய இயக்கத்தின் பெயரால், காங்கிரசுக்கூட்ட மேடைகளில், மிகவும் கடுமையாகத் தாக்கியவர்களில் சத்தியமூர்த்தி அய்யரும் ஒருவர், கோட்சே சாதியாரான அவர் சுயமரியாதை இயக்கத்தின் மேல் கோபம் கொண்டதில் உண்மை இருக்கிறது. ஆனால் அய்யரைப் பின்பற்றி நமது ‘சூத்திர’ காங்கிரசார்களும் இயக்கத்தைத் தாக்கினர். அதற்கு அவ்வப்போது கடுமையாக சூடு கொடுத்து வந்தார் குருசாமி.

“அழுகிய முட்டை அரை அணாவுக்கு ஆறு.”என்ற தலைப்பில் ஒரு சமயம் குடிஅரசில் எழுதினார். “முட்டையால் அடிப்பதால் மனிதன் செத்துவிடமாட்டான். அதற்காக இயக்கத்தவர்கள் எவரையும் முட்டையால் அடித்துப் பார்க்க வேண்டாம். நல்ல முட்டைகளை வீணாக்கக்கூடாது. அப்படியானால் அழுகிய முட்டையால் அடிக்கலாம் என்று எண்ணி அடித்து விடாதீர்கள். நான் சொன்னால் நீங்கள் கேட்கவா செய்வீர்கள்? நீங்கள் செயல் வீரர்களாச்சோ? எப்படி இருந்தபோதிலும் சத்தியமூர்த்தியை அடித்து விடாதீர்கள். இயக்க வளர்ச்சியைக் கண்டு பயத்தில் ஏதோ உளறுகிறார்”.
என்று எழுதினார், அடுத்த இரண்டு நாட்களிலேயே புதுக்கோட்டையில் சத்தியமூர்த்தி பேசியபோது இயக்கத்தவர்கள் அழுகிய முட்டையால் அடித்தே விட்டார்கள் அய்யரை. செய்தி அறிந்த இளங்குத்தூசி “அண்ணா முதுகு எப்படி இருக்கிறது” என்று மீண்டும் கிண்டலாக எழுதினார்.

தமிழ் எழுத்தில் சீர்திருத்தம்

1935 ஜனவரியிலிருந்து ‘குடி அரசு’ இதழில் இத்திட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தை விளக்கி ஜனவரி 13ம் நாள் ‘குடி அரசு’ இதழில் ‘தமிழ் எழுத்திலும் புரட்சியா?’ என்ற தலைப்பில் குருசாமி இவ்விதம் எழுதினார்.
“இந்த சு.ம.காரர்கள் மதம், கடவுள், ஜாதி, பழக்க, வழக்கம் முதலியவைகளில் தலைகீழ்ப் புரட்சி செய்வது போதாதென்று தமிழ் எழுத்தின், தலையிலும் கை வைத்துவிட்டார்கள். ‘தமிழ் அன்னையைக் காப்பாற்றுங்கள்’ என்று யாரோ சிலர் பேசிக் கொண்டிருப்பதுபோல் என் காதில் விழுகிறது. இது ஒருக்கால் என் காதின் கோளாறாக இருந்தாலும் இருக்கலாமோ என்னமோ? போகப்போகத் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் எழுத்தில் பல சீர்திருத்தங்கள் செய்ய வேண்டுமென்று வெகு ஆண்டுகளாக நினைத்துக் கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன். இதை முன்னிட்டே சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சிக்கு அடுத்த துறையூரில் (1932) நடந்த தமிழர் மாநாட்டில் ஒரு தீர்மானம் கொண்டுபோனேன். அப்போது அங்கு வந்திருந்த தமிழ்ப் புலவர்கள் என் தீர்மானத்தை நிராகரித்து விட்டார்கள். பிறகு சென்ற ஆண்டு சென்னையில் நடந்த தமிழன்பர் மாநாட்டிலும் அத்தீர்மானத்தைத் கொண்டுபோனேன். துறையூரில் கூடியவர்களை விட சென்னை மாநாட்டில் கூடியவர்கள் சற்று அறிவாளிகளாகையால், மேற்படி தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதுமின்றி, எழுத்துகளைச் சீர்திருத்துவது பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக 11 பேர்கள் கொண்ட கமிட்டியை நியமித்தார்கள்.

ஆயினும், கமிட்டியைக் கூட்ட எவரும் இதுவரையில் எந்தவித முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த நிலைமையில் ‘குடி அரசு’ ஆசிரியர் மேற்கொண்ட பணியை எடுத்துக் கொண்டதற்காக முற்போக்கான தமிழர்களாய் இருப்பவர்கள் அவர்களைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறார்கள். இந்த முறைகள் பழக்கத்தில் வந்துவிட்டால் டைப் ரைட்டிங், அச்சுக் கோத்தல், முதலியவைகளுக்கு எவ்வளவு சுலபமாய் இருக்கும் என்பதை எடுத்துக் கூறத் தேவையில்லை.

“இதை எல்லாப் பத்திரிகை ஆசிரியர்களும் கையாண்டால் நல்லது. ஆனால், சு.ம.காரர்கள் சொல்வதால் நாம் ஏட்டிக்குப் போட்டிதான் செய்யவேண்டும் என்ற மனப்பான்மை கொண்ட தமிழப் பத்திரிகை ஆசிரியர்களும் சிலர் இருக்கின்றார்களாதலால் நம்முடைய முயற்சி முழு வெற்றியடையச் சில ஆண்டுகள் பிடித்தாலும் பிடிக்கலாம். ‘இன்னும் கொஞ்சம் கெட்டுப் போகிறேன் பந்தயம் கட்டு’ என்பவர்களைப் பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால் தமிழ்மொழி வளர்ச்சியில் உண்மையிலேயே கவலை கொண்டவர்கள அனைவரும் இந்த மாற்றங்களைப் பரப்புவதற்கு முயற்சித்தால் இரண்டொரு மாதங்களிலேயே இதைச் சர்வசாதாரணமான பழக்கமாக ஏற்படுத்தி விடலாம்.”
இவ்விதழிலிருந்தே எழுத்துச் சீர்திருத்தத்துடன்

‘குடி அரசு’ வெளிவரலாயிற்று.

Pin It